திங்கள், மார்ச் 30, 2009

மீன்கள்..!

*

மதில் மேல்..
ஏறியப்
பூனை..

வேடிக்கைப் பார்ப்பது..

உன்
மீன் தொட்டி
மீன்களை அல்ல..

தோட்டத்தில்..
உட்கார்ந்து..

புத்தகம் வாசிக்கும்..
உன்
கண்களை..

*****

இதழ் கரையில்..

*

உன்
இதழ்களின்
கரையில்..உறங்கும்..
கவிதையைத்
தட்டி எழுப்ப முயற்சிக்கிறேன்..

நீயோ..
அதை..
ஒரு புன்னகையின் மூலம்..
நிறைவேற்றுகிறாய்..!

******

கண்ணாடி ரசவாதம்..!

*

கண்ணாடியில்
முகம் பார்த்த
கணத்தில்..
ரசம் வழிந்தது..

காலப் பெருவெள்ளத்தின்..
இருள் சூழ்
நிழலொன்று..

கண்ணுக்குக் கீழே
தொங்கியது..
கரு வளையமாய்..

மன வெளியின்
நிலப் பரப்பை
அளக்கத் துடித்த
பார்வையை..

மோதிக் குடித்தது
கண்ணாடிக் குழம்பு..

சட்டகத்துள்
சிறைப்பட்ட
முகத்தின்
சுருக்கங்களில்..

வழிந்தபடியே..
இருக்கிறது..

பூசிப் பெயர்ந்த
கண்ணாடி..
ரசமொன்று.

*****

நெளிந்தோடும் காதல்கள்..

*

காலையில்
அவசரமாய்
அவள்
கிண்டித் தந்த
'நூடுல்சில்'
காதல் இருந்தது..

பஸ் பயண
நெரிசலில்..

கொடுத்தனுப்பிய
காசுக்கு..
கை மாறிய..
டிக்கட்டில்..

எவளோ
ஒருத்தியின்
உள்ளங்கை..வியர்வை
மிச்சம்..இருந்தது..

வாடிக்கையாளரைத்..
தேடிப் போன..
கண்ணாடிக் கட்டிடத்துள்..

வரவேற்பில்
யந்திரமாய் பதிலளித்த..
பெண்ணின்
கண்களில்..
வாசிக்க முடிந்ததொரு..
கனத்த மௌனத்தை..

பூங்காவில்..
நண்பன்.. அறிமுகப்படுத்திய..
அவன் காதலியின்..
கைக் குலுக்கலில்..
உணர முடிந்ததொரு
நம்பிக்கையை..

வீடு
திரும்பும் வழியில்..

பூக்களை
முழமிட்டுத் தந்த
பூக்கார அக்காவின்..
சிரிப்பில்..

வாசிக்க
முடிந்ததொரு காதலை..

வீட்டுக்குள்..நுழைந்ததும்..
ஓடி வந்து..
என் கழுத்து 'டையை'
நளினமாய்க் கழற்றிய..

அவள் விரல்களில்..
நெளிந்தோடியது..
கொஞ்சம் காமம்..!

*******



அசைவுகளின் கரை..

*

அமைதியுற்று..
தளும்பும்
குளத்தின்..
நீர்
பரப்பில்..

அசையும்
பழுத்த..
அரசிலை மீது..

முன்னும் பின்னுமாய்..
நகரும்
எரும்பொன்றின்..

இதய அதிர்வு..

எதிர்க் கரையில்..
குதிக்கும்..
சிறுவனின்..
நீரலையை..
வேகமாய் இழுக்கிறது..
இக்கரை நோக்கி..!

******

நிழல் கடக்கும் ரயில் பூச்சிகள்..!

*

மதில் தாண்டிய
உன் பார்வையில்..
பூனையின் நடை..

ஒரு
கீற்றுக் கிழியும்
லாவகத்தில்..
உன்
மறுப்பின் லயம்..!

இலைகளூடே..
பரவும் காற்று
சேமிக்கிறது..
உன்
புன்னகையின்..
இசைக் குறிப்பை..

நீயும்
நானும்
விட்டுச் சென்ற..
பாதச் சுவடுகளின்..
மனற்குழி நிழலை..

நின்று
தயங்கிக் கடக்கிறது..
ரயில் பூச்சியொன்று..!

*******
நன்றி : உயிரோசை / உயிர்மை.காம் - (13.4.09)

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1225

புன்னகைத் துளி..!

*

ரயிலற்ற..
தண்டவாளங்களுக்கிடையே..

மீந்துக் கிடக்கும்
குப்பைகள் நடுவே..
இருக்கக் கூடும்..

ஒரு
கசங்கிய
காதல் கடிதமும்..
கொஞ்சம்..
கண்ணீர்த் துளியும்..

பாதங்களில்..
தவறுதலாய்..
நசுங்கிய..
ரோஜா இதழ்களில்..

மௌனமாய்..
செத்திருக்கலாம்..
ஒரு முத்தம்..

நிமிர்ந்து பார்க்க
ஆசைப்படும்..
வானத்துக்குக் குறுக்கே

கட்டி வைத்திருக்கிறார்கள்..
மின் கம்பிகளை..

' பத்தாயிரம் வோல்டேஜ் '
என்கிறது
அறிவிப்புப் பலகை..

நீ
விபரம் தெரிந்தே..
உன்
புன்னகையை..
அதில்
காயப் போட்டுச்
சென்றிருக்கிறாய்...

ஈரமாய்..
சொட்டிக் கொண்டிருக்கிறது..
கண்ணீர்த் துளி..!


**********



முதல் வாசகன்..!

*

ஜன்னல் திட்டின்
தண்ணீர் பாட்டிலை
ஊடுருவும்
வெயிலொன்று
அலையலையாய்..

என்...
கவிதைத் தாளின்..
படிமங்களாய்..

தலைப்பில்
உட்கார்ந்து..

உதடு குவித்து..

எழுதும்
பேனாவின்..
முனையிலேயே..
உறிஞ்சுகிறது..
வார்த்தைகளை..!

*******

ஒரு சாலை விபத்தில்..!

*

எங்கோ
ஒரு சாலை விபத்தில்..
யாரோ
இறந்துப் போனதாய்..

கூட்டத்தின்..
நெரிசல்..
இடைவெளியில்...
ஓடியப் பார்வையில்..

ரத்தச் சிதறலோடு
வானம் பார்த்து..
மல்லாந்திருந்த முகத்தில்..

பால்ய
நண்பனின் அடையாளங்கள்..!


*******

மற்றுமொரு திங்கட்கிழமை...!

*

முடிந்த இரவின்..
முகத்தில் தொடங்கி..

முகத்தில் அறையும்
வெயில் பகல் தொடர்ந்து..

எத்தனை
முகங்கள்..
இந்த வழி நெடுக..?

ஒவ்வொரு விழியிலும்
ஒவ்வொருத் தேடல்..

எல்லாப் புன்னகையிலும்..
எங்கோ
கொஞ்சம் வெப்பம்..

நிஜங்களை..
போர்த்தி உறங்கும்
நிழல்கள்..

முடுக்கி விட்ட
வேலைகளின்..
யந்திர
ஓட்டங்களுக்கு நடுவே..

இப்படி..
கணப் பொழுதாவது

கம்ப்யூட்டர்
வழியே..வந்து...

என்
பாலைவனத்தில்..
மழையாய்..
பெய்கிறாய்..
நீ...!

******

காதல் - சில காட்சிகள்...

*

விழியும் விழியும்
போட்டத் தையலில்..
காதல்
சிக்கிக் கொண்டது..

*

என்
கண்ணீரில் மூழ்காதக்
காகிதக் கப்பலில்..
மிதக்கின்றன
உன் கவிதைகள்..

*

அதென்ன..?
சந்தனத்தில்..
ஒரு சொட்டு..
' தீ '
விழுந்தது போல்
அத்தனை அழகாய்..
ஒரு
மூக்குத்தி..
உன் முகத்தில்..!

*

வெட்கத்தில்..
மண் கீறும்..
கால் விரலுக்குக் கீழ்..
காதலின் ஈரம்..

*

என்
கனவுகளுக்கு
வர்ணம்
தீட்டும்பொழுதெல்லாம்..
உன்
இதழ்களின்
சிவப்பில் தான்
தடுக்கி விழுகிறேன்..

*

இந்த
கடற்கரை மணலில்..
உன்
விரல்கள்..
எதைத் தேடுகின்றன..?
நேற்று..
எழுதிய
என் பெயரையா..!

*

குளத்தில்..
மிதந்தபடி..முனுமுனுக்கும்
நிலவைப் பற்றி..
கவலை இல்லை..

உன்
கூந்தலில்..
உட்கார்ந்தபடி..
ஒட்டுக் கேட்கும்..
இந்த ரோஜாவைத் தான்
என்ன செய்ய..?

*************

தொடர்ந்து கடிதங்கள் எழுது..

*

நாம் கனவுகள் நெய்த இரவுகள்..
ஈரம் காயாமல்..
எங்கோ மிதந்தபடி
இதயத்தின் ஆழத்தில் இன்னும்..

பேசிப் பகிர்ந்த
வார்த்தைகள் எல்லாம்..
வாழ்வின்
விரல்களுக்கிடையில் சிக்கி..

ஆளுக்கொரு திசையில்..
கசங்கி விட்டோம்..

எழுதிக் குவிக்கும்..
கடிதங்களில்..
நாம் தேடித் தவிக்கும்..
அடையாளங்கள்..

கால வெள்ளத்தின் கரைகளில்..
நொறுங்கிய சருகின் குப்பையாக..

இன்றும்
நாம் தொலைந்துக் கொண்டே..

பகிர்தலுக்கான..
பாதைகள் தோறும்..
உதிர்ந்த பார்வைகள்
சிறு மணலென..

பாத ரேகைகளில்
உருள்கின்றன..

பரவாயில்லை..

தொடர்ந்து கடிதங்கள் எழுது..!

*******

விபத்து..!

*

இதழ்களின்
வளைவில்..
'பிரேக்' இன்றி
விரைந்த..
முத்தமொன்று..
தவறிப் போய்..
கன்னக்குழியில் விழுந்து
செத்தது..!

******

சனி, மார்ச் 28, 2009

எறும்பு ஊறும் திண்ணை...

*

அவருக்காகக் காத்திருந்த..
திண்ணையில்..

சாக்பீசால்
கிறுக்கியத் தாயக் கட்டங்கள்..
நிரந்தர பல்லாங்குழிக்குள்..
புதைந்து கிடந்தன..

அவருக்காகக் காத்திருந்த
திண்ணையில்..

அவ்வீட்டுப் பெண்டுகளின்..
சிரிப்பொலி
படிந்துவிட்ட..
சிமென்ட் சொரசொரப்பில்..
மெல்ல ஊரும் எறும்பை..

பட்டை வெயிலொன்று
துரத்திச் சென்றது..

அவருக்காகக் காத்திருந்த
திண்ணைப் பக்கம்..

ஆட்டுரலொன்றில்...
கட்டப்பட்டிருந்த..
ஆடு..
இலைகளை மென்றுக் கொண்டிருந்தது..

அவருக்காகக் காத்திருந்த
திண்ணைக் கெதிரே..

கோழிகளின்
கால் பிறான்டலில்..
இரைத் தேடினக் குஞ்சுகள்..

அவருக்காகக் காத்திருந்த
திண்ணைக்கு வடக்குப் பக்கம்..

ஒற்றை
ஒடை மரத்துக்கடியில்..
யாருமற்ற கயிற்றுக் கட்டிலில்..
கால் நீட்டிப் படுத்துக் கிடந்தது..
சொற்ப நிழல் ஒன்றும்..!

இப்போது..
இலைகள் தீர்ந்த..
ஆடு..
என் நேரத்தையும்..
சேர்த்தே..மெல்லுகிறது..

அவருக்காகக் காத்திருந்த
திண்ணையில்..

குடித்து..
எட்ட வைத்த..
மோர் டம்ளரின்..
விளிம்புக்குள்ளிருந்து..

கொத்துமல்லி....
இலையொன்றும்..
எட்டிப் பார்த்துக்
கொண்டேயிருக்கிறது...
வாசலை..

அவருக்காக...
திண்ணையில் காத்திருக்கிறேன்..!


******

விடுபடும் வழியற்று

*

முதுமைப் பொழுதின்..
பிசிர் கணங்களை..
விரல்கள் நெருடிப் பார்க்கின்றன.

தடித்துவிட்ட
ரேகைகளுக்கிடையே..
தடுமாறும்
சில ஞாபகங்கள்..

ஓய்ந்துப் போன
வேட்டைத் துப்பாக்கியின்
ஈயச் சுக்கானாய்..
நினைவுகள்
துருவேறி விட்டன..

சுருங்கிவிட்ட..
இமைகளுக்குக் கீழே..
இன்னும் பதுங்கிக் கிடக்கிறது..
இறந்த கால நிழல் ஒன்று..

குரூரத்தின்..
பல்லிடுக்கில்..
விடுபடும் வழியற்று..
சிறு மாமிசத் துண்டாய்..
பால்யம்..

நகரும்..
வெய்யிலில்..காய்கிறது..
என் ஈரம்..

உடையற்ற..
தன் இடுப்பை அசைத்து
பழிப்புக் காட்டும் சிறுவனைப் போல்..
முன் நெற்றியில்
ஆடிக்கொண்டே இருக்கிறது நரை..!


*******

வார்த்தைப் பரண்கள்..

*

நட்பின் குரலை
தொலைப்பேசியில் அனுப்பினாய்..
பத்திரமாய்
உள்வாங்கியது மனம்.

சேமித்த
நினைவுகள் எல்லாம்..

கணக்கின்றி..
மூட்டைக் கட்டி
வைத்த
மனப் பரணில்..

தூசிப் படராமல்..
வார்த்தைகள் கொண்டு..
போர்த்தி வைத்திருக்கிறேன்..

நீ..
அடுத்த வாரம்
வருவதாக சொன்னாயே..!

அன்று..
அவைகளை..
உதறிப் பார்ப்போம்..

துணைக்கு நீயுமிருந்தால்..
தும்மலாவது மிச்சமாகும்..


*****

துயில் கொண்ட இரவு..

*

புத்தகங்கள் குவிந்திருக்கும்
அறையில்..
துயில் கொள்ள
இடம் கேட்டு..
வாசலில் நின்றது ஒரு கவிதை..

வார்த்தைகள் ஒதுக்கி..
வழியமைத்தேன்..

இரவு நெடுக..
குறட்டையொலி வழியத்
தூங்கியது..

விடிந்த பின்னும் எழாதோ..?

என்
தலையில் முளைக்கும்
மௌனங்களை
அள்ளி முடிய..
மறுக்கின்றன விரல்கள்..!

இருட்டோ..
ஒரு பந்தைப் போல
உருளுகிறது..
அங்குமிங்கும்..

அறைமுழுதும்..
ஓடிப்பிடித்து விளையாடும்
இருளையும்.. குறட்டையையும்..

கவிதையின்
கால்மாட்டில்
உட்கார்ந்து..
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்..!


*******

ஒரு முழு இரவு..

*

தச்சன்
இழைத்த
மிச்ச
மரச் சுருள் போல்
நின் கூந்தல்..

குருவிகள்
ஏங்கும் அழகுடன்..

நீ
நடக்கும்போதெல்லாம்..
குதிக்கிறது..

ஒரு
முழு இரவு..
உன்னை
மடியில் கிடத்தி..

அந்த
சுருள் முடியை
என்
விரல்களில் சுற்றி..
கவிதைகளைக் கட்டி
இழுக்க வேண்டும்..

நீ
'ஆ' வென
அலறும் போது..

உன்னைக் கவ்வுவதற்கு
காத்திருக்கு..
என் உதடுகள்..

******

வளையலின் இசை..!

*

அவசரமாய்
இட்ட.. பின்னலில்..
முறுக்கி முடிச்சிட்ட..
பச்சை ரிப்பனை..

'அவன்.. பட்டாம்பூச்சியென்பான்...'

எழுதி முடித்த
கவிதைக்கு
வைக்கும்..
முற்றுப்புள்ளிப் போல்
இருக்க வேண்டுமாம்..

'பொட்டு.'

'இன்னும் கொஞ்சம்..
வளையுமென்றால்..
உன்
புன்னகையில்
ஊஞ்சலாடலாம்..' -

என்றான்..ஒரு முறை.

முதன் முதல்
பஸ்சில் இனைந்து..
பயணித்தப் போது..
கண்ணாடி வளையல்..
பரிசளித்தான்..

'என் வெட்கத்திற்கு
அது.. இசைக் கூட்டுமாம்..'

இதோ..
வேகமாக..
வாசல் கடந்து..
அம்மாவுக்கு..
'டாட்டா'
சொல்லி..
தெருவில்..கால் பதிய..

சட்டென்று கடந்தது
அவன்.. சைக்கிள்..!

தெரு வளைவில்..
காத்திருப்பான்..

'இன்றைக்கு
என்ன சொல்லுவான்..?'

*****

பேச்சு நின்றதில்லை..

*

நீ
பேசிக் கொண்டேயிருக்கிறாய்
காலங்காலமாய்..

சூரியன்
விழப் போகும்
மேற்கு வெளியில்..
குத்தி நிற்கும்.. உன் பார்வை.

பிடரியில்
அலையும் விரல்..
நிதானமாய் மீண்டு..
மீசை நீவும்..

பேச்சு நின்றதில்லை.

நான்
பார்த்துக் கொண்டே நிற்பேன்.

உன்
உதடுகளிலிருந்து
தப்பும் வார்த்தைகள்..
என்
காதருகே..
மொய்க்கும் தினமும்..

போதும் -

அந்தரத்தில்..
மிதந்தது..

தரையிறங்கி..
என்
வெப்பத்தை..
எனக்கு அறிமுகப்படுத்து..


******

பூங்காவில் செடி வெட்டுபவனின் கத்தரி..

*

'நேரமாகிவிட்டது..
எழுந்து போங்கள்..' - என்று சொன்ன..
பூங்காவின் குரலை..
மென்றுக் கொண்டிருந்த
மனதுக்கு..

கவிதை யெழுத
யத்தனித்த
என்
இரவு முழுதும்..

கத்தரிச் சத்தம்
கேட்டுக் கொண்டேயிருந்தது..

காலையில்..

குப்புறக் கிடந்த
என் முதுகில்..
சூரியன்
கை வைத்தபோது..

என் அறை முழுதும்..
கவிதைகள்..
துண்டுத் துண்டாய்
சிதறிக் கிடந்தன..!


******

மெல்லியக் காற்றின் நிழல்..!

*

சாம்பல் நிற நிழல் ஒன்று
படுக்கையறையில்..

ஆரஞ்சு குண்டு பல்புக்குக் கீழே
வட்டமாய் ஒரு அடர் நிழல்..

என்
மார்பு.. மீது..மல்லாந்திருக்கும்...
அவனின்..புறங்கை சுண்டுவிரலுக்கு அடியில்
ஒரு கரு நிழல்..

அசையும் ஜன்னல் திரைச் சீலையில்
நெடுங்குழலாய் ஒதுங்கும் ஒரு நிழல்..

தோட்டத்து
நெல்லி மரத்து இலை பரவும்
சுவர் நிழல்..

சுழலும் மின்விசிறி வேகத்தில்..
சிதறும் மெல்லிய காற்றின்
நிழல்..

முகத்தில் துளிர்த்திருந்த
முத்த ஈரம்..
காய்கிறது மெல்ல..
நிழலின் உத்தரவால்..

முகம் திருப்பிப் படுத்திருந்த
அவன் காது மடலில்..
நெளிந்து மடியும் நிழல்களில்..

பதுங்கிக் கிடக்கக்கூடும்...

முன்னிரவில்..
நாங்களிருவரும்..
சேர்ந்து வாசித்தக் கவிதை ஒன்று..!


******

என் தனிமைக் கதவு..

*

காற்றின்
நுண்ணிய ஈரத் துளியெங்கும்
கலந்திருக்கக் கூடும்
சரித்திரம் மறைத்த
மனித ஓலம்..

போர்க்களத்தின்
ரத்தத் துளிகள்
உறிஞ்சும் மண்
இன்று
கலயமாகிறது..

குடிக்கும் நீர்
தொண்டைக்குழியில்..
புதைகிறது.

முனகும் இரவுகளின்
நாவில்..
இருட்டு..
ஒரு எச்சிலைப் போல்
ஊறுகிறது.

என்
தனிமைக் கதவின் மீது
ஒட்டப்படுகிறது..
உன்
மரணம் குறித்த அறிவிப்பு..

மனக் கிணற்றின்
ஆழத்தில் அமிழ்கிறது..
விடுபடுதலுக்கான
'சாவி' ஒன்று..!

*******

இந்திர விழா..!

*

அவரவர் அமையப் பெற்றிருக்கிறார்கள்..
அவர்களுக்கான்
சிறு சிறு காதல்களும்
சிற்பல ஊடல்களும்..

நம்பும்படியான
சொற்களுடன்
திரிகிறார்கள்..
கேட்கும்.. காதுகளற்று..

இதயத்தின்
உச்சியிலிருந்து..
குதித்து விடுவதாக..
பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது..
காதல்..!

ஒரு முனையில்
உற்பத்தியாகும் புன்னகை...
இதழின்..
மறு கோடியில்..
உருகி வழிகிறது..

உரசும் ஸ்பரிசத்தின்
வெப்பத்தில்..
முத்தங்கள்
கொதிக்கின்றன..

அனலை
அணைக்கும் வழியற்று..
இமை கவிழும்
கண்களுக்குள்..

ரகசியமாய் அரங்கேறுகிறது..
ஒருஇந்திர விழா..!


******

நவீனப் புரவி....

*

பிசா கார்னர் வாசலில்
கால் வலிக்கக் காத்திருந்தாள் கன்னி.
நவீன 'பல்சர்' புரவியில்...
விரைந்து வந்தான் ராஜகுமாரன்.

அவள்-
பொய்யாய் சிணுங்கி முகம் திருப்பிக் கொள்ள..
கத்தரித்து 'கலரிங்' செய்த கூந்தல் காற்றில் அசைந்தது.

'ஸாரி' என்றபடி...
தன் கூலிங் கிளாசை அவளுக்குப் போட்டுவிட்டான்.

டைட் ஜீன்சும்... ரெட் டாப்சும் எடுப்பாக..
மாடர்ன் அப்சரஸ்ஸின் மில்க் ரோஸ் இதழ்களில்
புன்னகை ஒன்று சுழித்துக் குழைந்தது.

சில்வர் நிற செல்போன் பிரித்து
நம்பர் அழுத்தி..
'அம்மா...!
க்ரூப் ஸ்டடி இருக்கு.. லஞ்ச்சுக்கு வரமாட்டேன் ' - என்றாள்.

விரைந்தது 'பல்சர்...'

நிமிடங்களைப் பருகி இன்பத்தில் மிதக்கிறது
'காலம்.'

சிலசமயம்...
நெடுஞ்சாலை நவீனப் புரவியில்...


******

பெருங்கூட்டத்தின் நடுவே...

*

அடையாளமாகக் கொண்டைப் போட்டிருக்கிறாள்..
கண்டுப் பிடிப்பது எளிது என்று..!

அதனால் கவனிக்கத் தோன்றிற்று
அத்தனைத் தலைகளையும்.

சலிப்புற்று கிளம்ப யத்தனித்த நொடியில்..
முன் வந்து நின்றாள்.. சிரித்தபடி..

நானும்
அடையாளம் சொல்லியிருந்தேன்..
என் 'கருப்பு' சட்டையை..!

******

காதல் கரையான்கள்..

*

பக்கச் சுவற்றில்
மண் திரித்தேறும் கரையான்கள்..

நேற்றைய இரவு..
தின்று
செரித்திருக்கக் கூடும்

சுவற்றில்..
கிறுக்கி வைத்த
சில
காதல் கவிதைகளை..!


******

வெள்ளி, மார்ச் 20, 2009

மௌனத்தையும் கொண்டு போய்விட்டான்..

*

வந்து சென்ற நிமிடம் முதல்..
துடியாய்த் துடிக்கிறது - முள்

'காலத்தை' விரித்துத் தானே
தரையில் உட்கார்ந்திருந்தோம்..!

அவன் வந்து சென்ற நிமிடம் முதல்..
துடியாய்த் துடிக்கிறது - ஒலி

வந்துவிடுவதாகச் சொல்லித் தான் போனான்..
மௌனத்தையும் கொண்டு போய்விட்டான்.

சென்றுவிட்ட நிமிடம் முதல்..
துடியாய்த் துடிக்கிறது - காலம்

வந்துவிடுவான் எப்படியும்..
வந்ததும்
மௌனத்தைப் பிடுங்கி
பூட்டி வைக்க வேண்டும்.

********

சந்திப்பின் கணம்..!

*
கண்களின் தவிப்பை
கால்கள் மொழிப்பெயர்க்கின்றன..

இன்னும் விரைவாய்...
இன்னும் விரைவாய்...

நேரம் ஓடிக்கொண்டிருக்கும் சாலைகள்
எல்லைகளற்று நீள்கின்றன...

மனிதனின் மாயக்கரங்கள்
பாதைகளைப் பின்னலிட்டு... பின்னலிட்டு...
இலக்கின்றி தூரங்களில் தொலைகின்றன.

இன்னும் விரைவாய்...
இன்னும் விரைவாய்...

சந்திப்பின் கணம்
எங்கோ நிற்கக் கூடும்... கால் வலிக்க...

சிறகு முளைக்க மறந்த....
மனத்திற்கு..

தவிப்பின் அடர்த்தியை..
வாசிக்கத் தெரியாமல்...
நேசத்தின் நிழலில்...
மெதுவாய் நடக்கிறது...

இன்னும் மெதுவாய்..
இன்னும் மெதுவாய்....

*******

சனி, மார்ச் 14, 2009

கோடை தாகம்..!

*

கட்டிடங்களுக்கிடையே..
பரவும் வெயிலை..
துண்டு துண்டாக..
வெட்டுகிறது..
நிழல்..

சிக்னல் வாகனங்கள்..
கக்கும்..
பெட்ரோல் புகையை
பருகி..
வெப்பமாய்..உருகுகிறது..
வெயில்..

இந்தப்
பெருநகரத்து..
இடிபாடுகளுக்கு ஊடே..

தன் தாகம்..தீர்த்துக்கொள்ள..
திக்கற்று அலையும்..வெயில்..
தேங்கும்..சொற்ப..
சாக்கடை..நீரை..
பரிதாபமாக..உறிஞ்சுகிறது..!

******

எல்லை கடந்ததும்..

*
முடிவற்று நீளும்
பாதைகள்.. தோறும்..
வெயில் காய்கிறது..
நடந்து போவோரின்.. கதைகளோடு..

சாலையோர..
கிலோமீட்டர் கல்லுக்கு கீழே..
ஒதுங்கும்.. நிழலில்..
வாழ்வின்.. எச்சம்..
வக்கற்று இளைப்பாறுகிறது..

காலங்காலமாய்
அசையும் ' வாய்களில்..'
கடைவாய்ப் பல்லில்..
சிக்கிக் கொள்ளும்
சில கதைகள்.

அள்ளி முடிந்த கொண்டையிலும்..
முண்டாத் தட்டிய புஜங்களிலும்..
' வம்பும்..சண்டையும்..'
வண்டி மாட்டின்..
வால் முனையாய் வளர்ந்திருக்கும்..

ஊர்
எல்லையில்..
சுடுகாட்டைக் கடந்ததும்..

முடிவற்று... நீளும்...
பாதைகள்..தோறும்..
வெயில் காய்கிறது..
நடந்து போவோரின்.. கதைகளோடு..!

*******

என்ன செய்ய..?

*
கதவடைத்துக் கொண்ட
கனவுகளுக்குள்..
காதலி தனியே..நிற்கிறாள்..

அது..
வண்ணங்கள் இல்லாத
பெருங்காடு..

நிலவை
விழுங்கும்..
ராட்சச நிழல்களோடு..
என்ன செய்வாள்..?

மீண்டும்
கனவுக்குள்..நுழைந்து விட
போராடும்..
என் இரவு.....

*******

சனி, மார்ச் 07, 2009

யுகங்களின் அலைகள்..!

*

ஆதாம்..கடித்த..
ஆப்பிளுக்குள்..

புதைந்துக் கிடந்த..
'விதைகளை' -

இன்று வரை..
மென்றுக் கொண்டிருக்கிறோம்
'காதல்' என்ற பெயரில்..!

ஏவாளின்...
கூந்தலுக்குள்...
காதல் இரவின்..
ஊற்றொன்று..
காலங்காலமாக...
சுழித்தோடுகிறது.. இலக்கின்றி..!

மொழியற்ற
இதழ்களின்..
மௌனத்தில்...
முத்தங்களை...
மொழிப்பெயர்த்துக் கொண்டது காதல்..!

புலரும்..அந்தியில்..
யுகங்களின்..அலைகளில்..
உருளும்..
காதல் மணல்கள்..!

********

வெட்க குறுநகை..!

*

காமம் எழுதும் விழிகளின்...ஆழத்தில்..
மோகம் பின்னும்.. விரகத்தின்..மௌனத்தில்..
அசைந்து அசைந்து..
நழுவும் பொழுதுகள்..

குழையும் இதழில்..பரவும்..தீயில்..
மூழ்கிய..முத்தமொன்று..
நீந்தும் பெருங்கடல்..
வெட்க குறுநகை..!

ஒற்றைத் தீவாய்.. பெண்ணுடல்..

விரையும் பாய்மரம்..
அலையும் திசையில்..
பேய்மழை..

வீசும் காற்றில்..
மோதிச் சிதறிய..
பார்வை வருடலில்..
நெளியும் மின்னல்.

தத்தம் கரைகளை..நித்தம்..அளந்தே..
கட்டித்தழுவி..
தொலையும்.. அலைகள்..!

*********

சில காதல் தருணங்கள்...

*

நான்
உன்னை...
முத்தமிட மறுத்த..
நிமிடங்களை..
என்ன செய்யப் போகிறாய்..?

கை விரல்கள்..
கோர்த்துக்கொண்டு..
தலை சாய்த்து..
நீ புன்னகைத்த..நொடியில்..
செத்து விட..நினைத்தேன்..

கால்..புதைய
நடந்த..
காலத்தின் நிழலில்..
இளைப்பாறும் நாட்கள்..
நமக்காக..ஏங்கும்.

நீ
எழுதும் கடிதங்களால்..
மூச்சு வாங்கும்
என்
இரவுகளை..
ரகசியப் பேழையில்
அடுக்கி வைத்திருக்கிறேன்.

அதுவரை...

நான்
உன்னை..
முத்தமிட மறுத்த..
நிமிடங்களை.. நீ -
என்ன செய்யப் போகிறாய்..?

***********

முற்றுப்புள்ளி

*

ஜன்னலோர
பஸ் பயணத்தில்..
கழுத்து செயினை
பல்லில் கடித்தபடி..
தினம் பயணிக்கிறாய்..

ஒற்றை
ஜடைப் பின்னலில்..
'இரவை' அள்ளி முடிந்திருக்கிறாய்..!

லேசாய்
முனை உடைந்த..
தெற்றுப் பல்லில்
சிறு புன்னகையை..
பூசி வைத்திருக்கிறாய்..

கீழ் இதழின்..
வளைவோரத்தில்..
ஒரு
மச்சப் புள்ளி.

சொல்..
உன்
பெயர்..
'கவிதை' தானே..?

*********


நிலவின் முகத்தில்..

*

என்
கோடைக் கால
விடுமுறைகள்..

கிராமத்து..வீட்டின்..
முற்றத்து..
தாழ்வாரத்தில்..

உன்
நினைவுகளுடன்..
இளைப்பாறுகின்றன..

புங்கை மர
நிழல்கள்..
மாலைப் பொழுதுகளை..
என் மீது..
வாரி இறைக்கின்றன..

நீயோ
வெகுத் தொலைவில்..
உன்
பகல்களை...
விரட்டிக் கொண்டிருக்கிறாய்..

இரவு
மட்டுமே..
என் வெப்பத்தை..
நிலவின் முகத்தில்..
எழுதி விடுகிறது..

நான்..
உனக்காக..
நீ இல்லாத..
இந்த இரவில்..
வேறு என்ன செய்து விட முடியும்..?

**********

தனிமைப் பொழுதுகள்

*

இதோ
இப்பொது வந்து விடுவான்..

இதழ் நிறைய
புன்னகை ஏந்தி...
முத்தங்களை..
கண்களில் தாங்கி..

என்
தனிமைப் பொழுதுகளின்..
அதிசயக்காரன்..

நிழலாய்
பதுங்கியிருந்து..
என் ஜன்னலின் வழியே..
நுழைந்து..
என் இரவுகளை..
நிரப்புபவன்..

பேசும்
நிமிடங்களை..
மணியாய் கோர்த்து...
என் கழுத்தில் சூடி..
போய்விடுவான்..

அதை
விரல்களினூடே..
நெருடி..நெருடி..
அவனுக்காகக் காத்திருப்பேன்..

இதோ
இப்போது வந்து விடுவான்.

***********


எழுதாத இரவுகள்

*

ஒரு
சின்ன சொல்லுக்குள்
உடைந்துக் கிடக்கிறது..
உன்னிடம்
சொல்லத் தயங்கும் காதல்.

உதட்டு ரேகைகளில்
வறண்டுத் தவிக்கின்றன..
ஒவ்வொரு எழுத்தும்..

நீயோ
ஏதேதோ பேசிக்கொண்டிருக்க..
என் கண்கள்
மட்டுமே..
அதைக் கவனிக்கின்றன..

காற்றில்..
அபிநயம் பிடிக்கும்
உன்
கை விரல்களுக்கு..
மகுடம் சூட்ட..
என்
கவிதை இரவுகள் காத்திருக்கின்றன.

இப்படி..
சொல்லத் தயங்கிய
தருணங்கள்..எல்லாம்..
என்
அறையின் தனிமையில்..
மௌனமாய் உட்கார்ந்து..
என்னை முறைக்கின்றன..

எழுதாத இரவுகள்..
இன்னும் காத்திருக்கின்றன..

**********

கைப் பிடித்து நடந்த நாட்கள்.!

*

பால்யக் கால
காடுகளை
மனம் இன்னும்
சுமந்து திரிகிறது..

வரப்பில்..
நீ
என் கைப் பிடித்து..
நெருக்கமாய் நடந்த
வெப்பத்தை..
இன்றும்
என் நினைவில்..
பத்திரமாய்
பொதிந்து வைத்திருக்கிறேன்.

கால் நீட்டி
உட்க்கார்ந்திருக்கும்
அந்த
புளியமரத்தின்..
தடித்த வேர்களில்...
நாம்..
பேசி சிரித்த கதைகள்...
செதில்களாய் மிச்சமிருக்கின்றது.

உனக்குத் தெரியாது
தோழி..!

தூக்கனாங் குருவிக்
கூட்டுக்குள்...
ஒளிந்துக் கிடக்கிறது..
உனக்காக..
நான்
தனிமையில்..எழுதிய
மொத்தக் கவிதைகளும்.

**********

ஓரப் பார்வையில்..

*

உன்
இதழோரம்..
நெளியும்..புன்னகையில்..
பிறக்கிறது
ஒரு கவிதைக்கான்
முதல் வரி.

நீ..
உள்ளங்கைக்குள்..
அழுத்தி வைத்திருக்கும்
கைக்குட்டைப் பூவுக்கும்
ஒரு வாசனை.. சேர்ந்திருக்கும்.

ஓரப் பார்வையில்..
தையல் போடும்
காட்சிகளை..
மனசுக்குள்..
நூல் பிரிக்கும்
வித்தையை..
யாரிடம் கற்றாய்..?

************

புதன், மார்ச் 04, 2009

நீள் பாதை..ஒரு கொடும் இரவு..

*

அசைவற்ற நிலவின் வழிக்காட்டுதலில்
அடர் இரவு..அசைந்துக் கொண்டிருக்கிறது..

வீசும் குளிரை
ரகசியமாய் உறிஞ்சி..
ஊளையிடுகின்றன தெரு நாய்கள்.

லேசாய் நடுங்கும் விரல்களுக்குள்
சிகரெட் பதறுகிறது.

முன்னெப்போதும் அனுபவித்திராத
பயமொன்று..இதயத்தை முறுக்குகிறது.

கால்கள் என்பது கால்கள் அல்ல..
மூளைத் தானே..?

வேகமாக நடப்பதா? ஓடுவதா?
முடிவெடுக்கும் சக்தியற்று..
நீள்கிறது பாதை..

பிரசவத்தின் போது..
'உன் மனைவி இறந்து விட்டாள்..' - என்று
செல்போனில்.. குறுஞ்செய்தி.. அனுப்பிய
மடையனை.. என்ன செய்ய..?

இப்போது -
நான்...
வேகமாக நடபபதா? ஓடுவதா?

இரவு
அசைந்துக் கொண்டே இருக்கிறது.

*************

திசைகளின்..ஈரம்..

*
பிரிவு
வேர்களின்
ஈரம் காயாமல்..

உலர்த்தும் திக்கற்று..
திரிகிறேன்..
மனதின்
வனத்துக்குள்.

*********

நிழல்கள்..

*
வெயில் காயும்
தெருவில்
நிழல்கள்
காத்திருக்கின்றன..

நீ
வந்துவிடும்
தொலைவுகளை..
அளந்தபடி..!

************

கொலுசுக்குள்..

*
நீ
கழற்றி
வைத்த
கொலுசு முத்துக்குள்..

வண்ணம் சேகரித்தபடி..
வளரக் கூடும்
ஒரு பட்டாம்பூச்சி.

********

பார்வை அரங்கேற்றம்

*
உன்
புன்னகை
புதையுண்ட
பார்வை லயத்தில்..

ஒலி சேர்க்கை ஒன்று
காற்றில்..
அரங்கேறுகிறது.

**********

செவ்வாய், மார்ச் 03, 2009

மழையின் நர்த்தனம்


*
மௌனம் சுமந்து வருகிறது மழை..
மோதிய தருணத்தில்..
கூடிய வேகத்தில்
சிரித்து நெளிகிறது.

குடை விரித்து..நீர் தடுத்து..
பாதம் அளந்து..நடக்கும் சாலையில்..
சுவடு அழித்து..நகைக்கிறது.

தரையில் விழாத வண்ணம்..
'வானத்தை' மடியில் ஏந்தி..அழகு காட்டுகிறது.

டீ கடையில்..
விரல்கள் ஏந்திய
சிகரெட் நுனியில்..
நெருப்பின் இதயம் எரிய..

காற்றில் கலக்கும் புகையும்..
அடுப்பில் கொதிக்கும்..பாலின் தாளத்தில்..
வளைந்து..நெளிந்து..சிரிக்கிறது.

முச்சாலை வளைவில்..
நாயொன்று..
மழையின் தாளத்தோடு..காதுகள் துள்ள..
கவனக் குறைவாய்த் திரும்பியதில்..

வேகமாய்..விரைந்த..
காரொன்றில் மோதிச் சிதறி..
ரத்தமாய் பரவித் துடிக்க..

சற்றுத் தயங்கி..நின்ற கார்..
மீண்டும் விரைந்து..புள்ளியானது.

சாலையில்..
ரத்தம்..மழையோடு ஆடியது..
மழையின்..நர்த்தனம்..
இன்னும் வலுத்தது..!
**********

திங்கள், மார்ச் 02, 2009

கரையொதுங்கும் நூற்றாண்டுகள்..!


*

என்னைக் கடக்கும் நொடிகளில்..
எப்போதும்
ஒரு
பனிப் பொழிவை நிகழ்த்தத்
தயங்கியதில்லை
உன் பார்வை.

ஏதேதோ
சொல்லத் துடிக்கும்
உதடுகளில்..
கரையொதுங்கும்
உன்
புன்னகையை..என்ன செய்ய?

அத்தனை இறுக்கமாய்..
கை ரேகை நெளிவுகளுக்குள்..
ஒளித்து வைத்திருக்கிறாய்
காதலின் நூற்றாண்டுகளை.

*********

ஈர நிழல்


*

நினைவின்
சகதிச் சுழிவில்
கால் சிக்கும்
நிழல்கள்..

உன்
குறுநகைக் கண்டு
ஈரமாகிறது.

********

முனைகள்


*
பழகும்
வித்தைகளின் சூட்சுமம்
கற்றுத் தர
பொறுமையற்று..
விமர்சனப் பேனாவின்
முனை ஓடியாமல்..

'வார்த்தைகளை'
பத்திரமாய்..
மூடிக் கொள்கிறார்கள்.

*********

ஞாயிறு, மார்ச் 01, 2009

ஒற்றைத் துளி..!


*
காலத்தின்
கன்னத்தில்..
ஒரு
கண்ணீர்த் துளி..
'தாஜ்மஹால்.'

எத்தனைக் கவிஞர்களின்
விரல்களில்.. அதன் ஈரம்..!

**********