புதன், ஏப்ரல் 30, 2014

வட்டமென..


*
இக்கட்டுச் சூழல் எழுப்பும்
சதுரத்தின்
நான்கு மூலையிலிருந்தும்

நெருக்குகிறாய்

வட்டமென குறுகுகிறேன்
நடுவில்

***

ஓர் இலை போல்..

*
அந்தந்த நிமிடத்தின் உயிர்வாழ்தலில்
ஓர் இலை போல் மிதக்கிறேன்
உன்
உடல் நதியில்

****

தூரிகைகளுக்கு வாகான ஒரு சொல்லின் நிறம்

*
என் உணர்ச்சிவயப்படுதலின்
நிறங்களை என்ன செய்வதென்று
தெரியவில்லை

உலகின்
ஆகச் சிறந்த ஓவியனொருவனை
தேடிச் சென்றேன்
அவன் என் நிறங்களைத் தொட்டு
ஓவியமொன்றைத் தீட்டினான்

எனதான
எந்தவொரு உணர்ச்சியின் சாயலையும்
நானதில் காணவில்லை
ஓவியத்தில்
இட்டிருந்த அவனுடைய கையெழுத்து
உணர்ச்சிவயப்பட்ட புதிய நிறமொன்றை
அவ்வோவியம் முழுதும்
தளும்பச் செய்திருந்தது

மேலுமொரு நிறமென்பது
மேலுமொரு துக்கமாகப் பெருகுகிறது
என்னுடைய நிறக் குடுவையில்

இன்னும் இன்னுமென்று
பயணிக்கிறேன்

கடக்கும் சந்தையிலிருக்கும் அனைத்துத் தூரிகைகளும்
ஒளிந்துக் கொள்கின்றன
தமக்கு வாகான ஒரு சொல்லின் பின்னே

இத்தனை விடையற்ற கேள்விகளும்
அத்தனை வாக்கியங்களுக்குள்ளும்
தேங்கி ஊறுகிறது
நிறங்களற்ற நிறங்களின் சிறு துளிகளாய்

வீடு திரும்புதலில்
என் அறையெங்கும் பரவும் இந்நிறங்களை
சட்டென்று
தான்யாவின்
பிஞ்சு விரல்கள் அள்ளுகின்றன
எந்தவொரு தீர்மானமுமின்றி
யாதொரு கோட்பாடுமின்றி

சுவரெங்கும்
அறை அறையாகத் தீட்டுகிறாள்
நிறங்களை

கிளைவிடும்
வர்ணஜாலத்தில் மூர்க்கம் தளர்கிறது
ஒவ்வொரு வளைதலிலும்
ஒவ்வொரு வட்டச் சதுரங்களிலும்
ஒவ்வொரு சாய்க் கோடுகளிலும்
ஒவ்வொரு நெளிவிலும்

உணர்ச்சிவயப்படுதலின் நிறங்களை
என்ன செய்வதென்று
உலகின்
ஆகச் சிறந்த ஓவியனின் தூரிகையை விட
பிஞ்சு விரல்களுக்குத் தெரிந்திருக்கிறது

*****



மழையாக ஒரு தீவில் பெய்தல்..

*
யாரும் இணக்கமாயில்லை
வலுவிழக்காத புயலாகி தலைக்குள் சுழலும் காற்றில்
அத்தனைக் குப்பைகளையும் ஒருசேர
தரிசிக்கச் செய்கிறது சூழல்

அத்துனை துயரங்களின் பள்ளங்களும்
நிரம்பி வழிகின்றது
நிலத்தை அழுத்தி ஊன்றி நிற்கும் கால்களைப் பெயர்க்கிறது
சூறை

உறவிலிருந்து விடுபட அழைக்கும் மேகம்
வேறொரு தேசத்துக்கு
முற்றிலும் துண்டுப்பட்ட தீவுக்கு இழுத்துப் போகக் கூடும்

வேண்டப்படாத
மழையென எங்காவது இறக்கிவிட்டே தீரும்

பெயரற்ற அநித்தியப் பிரதேசத்தில் நாறி
பருக உயிர் அற்று
தேங்கிக் கிடக்க முடியாது காற்றே

பாதங்களின் கீழ் முளைத்துவிட்ட ரகசிய வேரை
ரத்தம் சொட்ட பற்றிக் கொண்டிருக்கிறது என் நிலம்

****

ஒயின் கோப்பைகள் உயரும் மந்தச் சிரிப்பு..

*
குற்றுயிர் நீங்கலாக உற்று நோக்குவதில்
ரத்தம் கலங்க நெருடுகிறாய் விலாவை

இந்தத் தோட்டத்தில் இருந்து தான் ஆகமம் பிறந்தது

ஒரு சொல்
சொட்டச் சொட்ட வழிவதில் தீர்ந்துவிடலாம்
பிறவித் தாகம்

தாழும் பார்வையில் மௌனம் கசியவில்லை
உச்சரிக்க முடிகிற வலியை நினைவுகூர
பற்கள் நெரிக்கிறாய்

விரித்து ஏந்தும் கைகளில் நெளிகின்றன ஆதி பாம்புகள்
அது ரேகை வழி
நேசமாய் புசிக்க நீட்டும் கனியில் பாட்டன் விதை

பின்சரிவில் பள்ளத்தாக்கு நீளச்செய்யும் வனப்பாதை
எல்லைகள் உருக்குலைந்து
போர்க்களக் குளம்பொலிகள் சீறும் பெருமூச்சில்
பரம்பரைத் தவிப்பு

உற்று நோக்கும் குற்றுயிர் நீங்கலாக
இத்தோட்டத்திலிருந்து பறித்த கனிகள்
உடன்படிக்கை மேஜையில் உணவாகக் காத்திருக்கிறது

ஒயின் கோப்பைகள் உயரும் மந்தச் சிரிப்பில்
ஒளிச் சிதறப் பாடும்படி இட்ட கட்டளையில்
பட்டென்று முளைக்கிறது உயிர் அறுந்த நரம்பின் பாடலொன்று

ஒரு சொல்
சொட்டச் சொட்ட வழிவதில்
தீர்வதாயில்லை பிறவித் தாகம்

****

கோட்டோவியத்திலிருந்து வெளியேறும் பட்டாம்பூச்சி..

*
அசையும் ஜன்னல் திரைச்சீலையின் இளநீல நிறத்தில்
சிக்கிக்கொண்ட ஒரு வெண் பூச்சித்திரம்
தான் பருகிய வெயிலை என் மீது ஊற்ற

நான் உட்கார்ந்திருக்கிறேன்

மலர்ந்து மொக்குடைதலின் வாசத்தை
நேற்று நீ எனக்குப் பரிசளித்தாய்

பூக்கள் சிந்தும் ஈரச்சாலை முழுதும் மின்னும்
தெருவிளக்கின் மஞ்சள் வர்ணத்தை உன்
பாத கொலுசு மீட்டிக் கொண்டிருந்தது

தொலைவிலிருந்து நம்மை யார் பார்த்திருந்தாலும்
நாமொரு கோட்டோவியமாகத் தான் தெரிந்திருப்போம்

நீ அழுந்த தந்த ஒரு சிறிய முத்தத்தால்
என் இரவின் பால்வீதியில் மேலும் இரண்டொரு கிரகங்கள்
சுற்றத் தொடங்கின உன்னை நோக்கி

நம் ரகசிய கதவின் தாழை நீக்கும் நொடியில்
சட்டென என்னிலிருந்து சிறகசைத்து வெளியேறுகிறது
உன் பட்டாம்பூச்சியொன்று

இந்த அறை ஜன்னலின் வெண்பூச்சித்திரம் என் மீது
ஊற்றும் வெயிலைப் பருகியபடி
நான் வெறுமனே உட்கார்ந்திருக்கிறேன்

நீயந்த பட்டாம்பூச்சியாய் திரும்பி வர

*****

நன்றி  : ' தீராநதி ' இலக்கிய மாத இதழ் [ நவம்பர் - 2013 ]

மூன்றாம் இலையின் நடன அசைவு..

*
ஏதேன் தோட்டத்தில் பழுத்த இலைகள்
மூன்று சிரிக்கின்றன

முதலாம் இலை ஆதி வெளிச்சத்தை குடித்து வளர்ந்து
தன் பழுத்த நரம்புகளில் ஊறும் பொன் கதிர்க் கால்களின்
நக ஈரத்தை மினுக்குகிறது

இரண்டாம் இலை சாத்தானின் சர்ப்ப நாப்பிளவில்
துளிர்க்கும் எச்சில் பட்டு
பச்சைமை நழுவுகிறது தோட்டத்து புல்வெளியெங்கும்
எல்லைமரம் வரை நீளும் பொருட்டு

மூன்றாம் இலையின் நடன அசைவில் பெருகும்
இசைக் குறிப்புகள் சூழ் குழைக்கிறது அந்தி நிறம் பூசிய
ஆதாமின் தனிமையைப்
பழுக்கச் செய்து விலாவை உறுத்தி

கடவுளின் நீள் வெண்ணிற அங்கியில் மிதக்கும்
முகிலொன்று அவிழ்ந்திறங்குகிறது
ஏதேன் தோட்டத்தின்
பழுத்த மூன்று இலைகளின் மீதும் நிறமற்று

*****

நன்றி  : ' தீராநதி ' இலக்கிய மாத இதழ் [ நவம்பர் 2013 ]

கீழ்ப்படிதலின் உடன்படிக்கை..

*
விவாதக் கணங்களில்
சட்டென்று எழுந்துவிடுகிறாய்

பிடித்தங்களின் எதிர் துருவத்தில்
நிற்கும் சந்தர்ப்பங்கள்
நிராகரிப்பைப் பழக்குகின்றன

ஓர் உடன்படிக்கை என்பது
சமரசத்துக்கான மேஜையை புறக்கணிப்பதோடு
ஒரு கீழ்ப்படிதலையே வேண்டுகிறது

அத்தனை சுலபமாய்
ஒரு புன்னகையோ கை குலுக்கலோ
சாத்தியமில்லாத நிலத்தில்
நெடுஞ்சாலை நோக்கியே நிற்கின்றன பாதங்கள்

*****

தொண்டைச் சுழியில் இறங்கும் பியானோவின் ' கீ ' நோட்கள்..

*
உருகி வழியச் செய்கிறாய்
பியானோவின் இசை நதியை இழுத்துச் சென்று
தொண்டைச் சுழியில் இறங்கும்
' கீ ' நோட்களில்

மொசார்ட்டின் 18 கே 456 -ன்
கருப்பு வெள்ளைத் துண்டுகளில்
உன் துள்ளும் விரல்களோடு
கவ்விக்கொள்ளத் 

தூண்டுகிறது 

அலைந்து அலைந்து 

நீந்தும்
அந்தர விழிகளையும்

****

சதுரத்தில் தாழும் தலைகள்..

*
வணங்கப்படும் கொலை ஆயுதங்கள்
நீர் வழியும் புனிதங்கொண்டு
கழுவ முயல்கிறது
நூற்றாண்டுக்கால ரத்த வாடையை

துருப்பிடித்து இறங்கிய ஆணிகளோ
தசைக் கிழிந்து சிதறிய எலும்புகளோ

கழு மரமாய் சிலுவைகளாய்
செங்குத்தில் செருகிய குறியீட்டின்
மரத்துண்டுகளென
நிற்கின்றன
கருங்கல் சதுரத்தில் தாழும் தலைகளையும்
குவியும் முட்டிகளையும்
ரத்தத் தாகத்தோடு பார்த்தபடி

வரிசைப் பாவிகளின்
செருப்புகளில் எழுதும் சாக்பீஸ் நம்பர்களில்
கணக்கு கூடுகிறது

*****

அது - அதை..

*
பெய்து அடங்கும்வரை
என்னைப் பழக்கி வைத்திருக்கிறாய்

ஈரம் மின்ன கூர் பல் காட்டி
முறை வைத்துக் கூப்பிடுகிறது
இந்த இரவின் உச்சரிப்பை நிராகரிக்கும்
உலர்ந்த குரலோடு - அது

தனிமை சுவர் துளைத்துப் படரும் பாசிக் கரைசலில்
கண்ணீர் பெய்து அடங்கும்படி
பழக்கியிருக்கிறாய் - அதை

அது நீயாகும்போது
அதை நானாகிறேன்

முறைவைத்தே கூப்பிடுகிறாய்

****

மின்னல் மோதும் சப்த உரசல்..

*
சூழ் உறையும் பனி பெய்தலை
சிதறச் செய்

அலறல் நொறுங்கும்
இருள் பிளந்து வெளிச்சம் கிழி

துயர் மண்டும் பார்வைத் துணுக்கை
தூக்கிலிடு

மின்னல் மோதும் சப்த உரசலை
சக்கையாக்கு

அன்பு சுரக்கும் இதய தசை மையமாக்கி உடை 

சுக்கலாக்கு

பேருவகை தீரா மோகம் மாறா காமம்
மேலும் பெருங்காதல்
உடைத்தெறி

****

நெடுக உதிரும் இறகு..

*
வரும் வழியெங்கும்
திரும்பவியலா தொலைவின் சிறகில்
பெயரற்ற பறவையின் வானம்
உதிர்க்கிறது நெடுக
தன் இறகை

மேலும்
திரும்புதல் குறித்தோ
வழியில் தேங்குதல் குறித்தோ

இல்லாத யோசனையில்

புகைகிறது
ஒரு
காத்திருப்பு

****

மிச்சமில்லை யெனும்படி..

*
அத்தனை இணக்கமாய்
ஒரு பரிதவிப்பு

அத்தனை மௌனத்துடன்
ஒரு சொல்லாடல்

அத்தனை இடைவெளியோடு
ஒரு கையசைப்பு

அத்தனை காதலாய்
ஒரு பெருந்துயரம்

பிரிவின் விரல் பற்றி
மிச்சமில்லை யெனும்படி
ஒரு
முத்தம்

****

பட்டாம்பூச்சியின் மகரந்த நுண் புள்ளி..

*
மஞ்சள் வெயில் கூசும்
பின்னங் கழுத்தில்

இமை மூடி அழுந்தும்
பட்டாம்பூச்சிக் கால்களின்

மகரந்த முத்த
நுண்
புள்ளி வெளிச்சம்

****

வழிந்து பெருகும் கண்ணீரின் அறை..

*
தனிமையில் இருக்கத் தூண்டுகிறாய்
நகம் கடிக்கும் தருணங்களை
அனுபவி என்கிறாய்

சப்தமேயில்லாமல் அறைக்குள்
நுழைந்து
அணைத்துக் கொள்கிறாய்

வழிந்து பெருகும் கண்ணீரை
உதடுகளால் ஒற்றிஎடுத்துக் கொள்கிறாய்

மடியில் கிடத்தியபடி
அது முத்தம் அல்ல என்கிறாய்

***

உன் பெயர் ஊறிய வெயில்..

*
இந்த
உள்ளங்கையில் எழுதிப் போகும்
நிழல் கிடக்கட்டும்

உன் பெயர் ஊறிய
வெயிலை
எங்குத் தேக்கி வைத்திருக்கிறாய்

****

இரவுப் பூனை

*
என்ன முடிவெடுப்பது
என்ற தவிப்பில்
நின்று கொண்டிருக்கிறேன்

ஓட்டுக் கூரையில் நிதானித்து
என்னையே வெறிக்கிறது
இரவுப் பூனை

மதில் மேல் நான்

****

பெருகும் டிக் ஒலியில் முளைக்கும் முட்கள்

*
இருந்த இருப்புக்கு அறை இருள்கிறது
சுவர்க் கடிகாரத்தின் நொடிமுள் துடிப்பு
எப்படி துல்லியமாயிற்று

பெருகும் டிக் ஒலியில்
நனவிலி மனநிலத்தில்
முளைக்கின்றன முட்கள்

எண்ணில்லா கடிகாரம்
மணிக்கட்டு நரம்பொன்றைத் துண்டிக்கிறது
நிதானமாய்

தட்டும் கதவொலியில்
டிக் என்றுத் தொங்கியபடி
இறக்கிறது
சாவித்துவாரம்

****

சொற்ப வெயில் குடிப்பதாக..

*
படிக்கட்டு சரிவில் இறங்கும் 

நிழல் நுனி

தரையில் கால் பாவாத
அல்லாடலோடு
சொற்ப வெயில் குடிப்பதாக
சுவர் ஏறி படர்கிறது


தொங்கும் உன் போட்டோவைத்
தொடும்வரை

***

இரவு உமி


*
அறுவடையான கனவின் தூரில்
பறந்த
இரவு உமி
உதிர்ந்து கிடக்கிறது

***

அசையும் கூழாங்கல் ஏந்தி நழுவும் புன்னகை

*
இமைக் கவிழ்ந்த படகின் கீழ்
கோடிழுத்தபடி இருள்கிற நீரின் அலை

கரைத் தீண்டும் குமிழ்கள் பட்டு
அசையும் கூழாங்கல் ஏந்தும்
கடை இதழ் மௌனக்குழி

சொல் அறுகின்ற புன்னகை அடர்ந்து
நழுவிடும்
ஜென்

****

மழைச் சிறகின் வர்ணங்கள்

*
பட்டாம்பூச்சிகள் பறக்கும் தெருவில்
பெய்யும் மழையோடு
தார்க் குழியில் தேங்குகிறது
சிறகின்
வர்ணங்கள்

****

கவனிக்கும்படி என்ன இருக்கிறது

*
நிலவறையின் இருட் சுவரில்
நகங் கொண்டு கீறப்பட்ட
உன் பெயர் மீது
ரகசியமாய் 

ஈரப்பிசுபிசுப்போடு
படரத்தொடங்கியிருக்கும்
கரும்பாசியைத் தவிர

****

பாவமன்னிப்பு நெளியும் நரம்பு

*
சிலுவை செருகிய
முதுகுத்தண்டை
பிரார்த்தனைக் கொண்டு உருவிப்போடு

உன் பாவமன்னிப்புக் கூண்டிலிருந்து
புறா வெளியேறிவிட்டது

சாத்தானின் கெண்டை நரம்பென
நெளியச் சபிக்கிறேன்

*****

உரசிக்கொண்டு பற்றியெரியும் உரையாடலின் சாம்பல்..

*
அயற்சியோடு நடக்க வைத்துவிட்டாய்
தீர்மானங்கள் பலிப்பதில்லை
தனிமைப் பயணத்தில் அதுவொரு சுமை
திரும்பிப் பார்க்கத் தூண்டுவதாய் இல்லை உன் குரல்

நிறைய வாசித்தாயிற்று
நிறைய களைப்புறச் செய்துவிட்டன உன் வரிகள்
பிதற்றலும் கதறலுமாய் அலறும் பைத்தியக் கணங்களோடு
நிழல் வலை வீசுகிறாய்
சிறு விரலசைவில் அவை அறுகின்றன

என்னை எட்டிப்பிடிக்க துரத்தும் உன் காலடியோசை
வேறொரு கிரகத்திலிருந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது

எதை நம்புகிறாய்
உனது பிரத்யேக ஒற்றை விண் கல்லையா

கோடி நட்சத்திரங்களை வாரி இறைக்காமல்
கனக்கும் என் பையோடு
மேலும் நடந்தபடியே இருக்கிறேன் தீர்வதாயில்லை இந்த அயற்சி

காற்றில் வீசியெறிந்த
உன் சமரச வெண் துணியொன்று பற்றியெரிந்து சாம்பலாகிறது
உரசிக்கொண்ட உரையாடலின் பொறிப் பட்டு

உணர்கொம்பில் சுழல்கிறது ஊழிக்காற்றைப் பொருத்தும் மூச்சு
உறுதியான கால்கள் கொண்டிருக்கிறேன்
இறுகும் தசை சபிக்கிறது

முன்பு குடித்த தேநீரின் கசப்பை இன்றையத் தொண்டைக்குழி
திரளச் செய்கிறது
வெட்டியெடுக்காத பெருமலையை

அடுத்தடுத்து அமையவேண்டாம் மேலும் மேலும் ஓர் அண்மை
நடக்க நடக்க ஓயாத அயற்சி
தன் பகலை
சட்டென்று அணைத்துவிட்டது

பெருகும் திசையற்ற இந்த இருள் பிடித்திருக்கிறது

உன் சொற்கூச்சலை வேடிக்கைப் பார்க்கச் சொல்லி
இரண்டு காதுகளையும் அறுத்து வைக்கிறேன்
வான்கோவின் கத்திக்கொண்டு

நெருங்கும்போது அதை எடுத்துக்கொள்

*****

நன்றி : ' யாவரும். காம் ' இணைய இதழ் [ டிசம்பர் - 21 - 2013 ]

http://www.yaavarum.com/archives/1758

கனவின் முதுகில் மகரந்தம் தூவும் பட்டாம்பூச்சி..

*
என் நிலத்தில் நடும் துயரத்தில் பறக்காத
தனிமை நீ

மணிக்கட்டு நரம்பூடே ரத்தத்தில் நகரும் நினைவும்
மௌனத்தைச் சொல்ல விடாமல் தவிக்கச் செய்யும் நாக்குழைவுமாய்
உன் பிரியத்தைக் கோர்த்து வைத்திருக்கும் கோப்புகளைத் திறந்து வை
அதன் அடுக்குகளில்
பறவையின் சிறகாகப் படிந்திருக்கும் நம்
முத்தங்களைப் பிரித்தெடு

கொஞ்சநேரம் நம் வனத்தின் இருளில் பறக்க விரும்புகிறேன்
எனக்கு உதவி செய்

நீயென் இராப் புதிரின் ஊற்றுக்கண்
உன்னைப் பருகத் துடிக்கும் உதடுகள் வேறொரு செடியில் பூத்திருப்பதாக
கனவின் முதுகில் மகரந்தம் தூவுகிறது பட்டாம்பூச்சி

வர்ணங்களோடு நடுங்கும் என் விரல்களைப் பற்றிக்கொண்டு உயர்ந்தெழு
சுகந்தம் வீசும் உதடுகள் தேடு
ததும்பும் முத்தத்தின் மீதிறங்கி என்னை மிதக்க விடு

தக்கையாகிப் பிறழும் அசைவின் கணத்தில் உன் கரை ஒதுங்கும்
நொடிக் கொண்டு
அந் நிலத்தில் புதைத்து வை
வனமெங்கும் பரவும் துயரத்தில் நீ பற

*****

நன்றி : ' யாவரும். காம் ' இணைய இதழ் [ டிசம்பர் - 21 - 2013 ]

http://www.yaavarum.com/archives/1758

அடுக்குக் குலையும் நொடியிழை பிம்பம்..

*
காயங்கள் ஆறுவதற்கான கயிறு
தனிமைப் பிசிர் கொண்டு முறுக்குகின்றது குரல்கட்டை

சொற்கள் நொறுங்கும் உடைவை
கையேந்தித் தவறும்
கேவல் ஒலி

கண் பிதுக்கும் இறுதிக்காட்சி நொடியிழை பிடித்து
உறையத் தொடங்குகிறது அடுக்குக் குலையும் பிம்பமாக

வெளிவரும் நாக்கின் நீளத்தை
நுனியில் தொங்கும் கடைசி உச்சரிப்பை
கால் உதறலோடு உருளும் ஸ்டூலின் கால்கள்
மல்லாந்து திகைக்கின்றன

****

நன்றி : ' யாவரும். காம் ' இணைய இதழ் [ டிசம்பர் - 21 - 2013 ]

http://www.yaavarum.com/archives/1758

நிறமற்று உதிரும் உடல்களின் இறகு

*
நம்
இருவருக்கிடையில் ஒரு குறுகிய மௌனமிருந்தது
அதுவரை பேசிய உரையாடல்கள் அங்கு மிதக்கின்றன

அவற்றிலிருந்து வெளியேறும் பறவைகள் கூடு திரும்புவதில்லை என்றுமே
நிறமற்ற அதன் சிறகிலிருந்து உதிர்ந்த இரண்டொரு இறகுகளோடு
நாம் திரும்ப வேண்டியிருந்தது
தத்தம் உடல்களுக்கு

சாய்ந்த பொழுதின் துயரைப் பூசி
கூடுடைய பறவையின் திசையெங்கும் பரவத் தொடங்குகிறது
பொன்னந்தி நிறத்தில் உரையாடலின் இசை

ஊற்றுக்கண் பிளக்கும் ரகசியத்தின் முதல் துளியில்
உப்பெனப் பூக்கிறது பறத்தலின் மௌனச் சொல்

****

நன்றி : ' யாவரும். காம் ' இணைய இதழ் [ டிசம்பர் - 21 - 2013 ]

http://www.yaavarum.com/archives/1758

கண்ணெட்டும் தொலைவிலிருக்கும் அடிவாரங்கள்..

*
நானுன் கைகளைச் சற்றுநேரம் பற்றிக் கொள்ள
என்னை அனுமதிப்பாயா

குளிர்ப் படரும் மௌனத்திலிருந்து
பணயமாகிப் போன தன்மானத்திலிருந்து
தோல்வியின் பட்டியலிலிருந்து
நஞ்சுக்கொடிச் சுற்றும் தலைக்குனிவிலிருந்து
கால்கள் வெறுக்கும் விரும்பா பாதையிலிருந்து

மீண்டும் தட்ட யோசிக்கும் கதவிலிருந்து
அழைத்தும் வராத தொலைப்பேசி பதிலிலிருந்து
அதன் அமைதி அடர்ந்த இருளிலிருந்து
கண்ணெட்டும் தொலைவிலிருக்கும் வெற்றியின்
அடிவாரத்திலிருந்து

என்னைப் பிய்த்தெறிய

உன் கைகளைச் சற்றுநேரம் பற்றிக்கொள்ள
கொஞ்சம் அனுமதிப்பாயா

****
 நன்றி : கல்கி தீபாவளி மலர் [  2013 ]

ஈரம் படரும் இருள் தடம்..

*
பிரார்த்தனையின் ஓசை முனகலாக ஒலிப்பதில்
சுற்றுச் சுவருக்கு மறுப்பேதுமில்லை

மேற்கூரையில் திரளும் பிசுபிசுப்பு
கடவுள் செவியில் படரும் ஈரம் என நம்புக

நடுங்கும் கூப்பிய விரல்களின் சத்தியங்கள் குளிர்வதை
அலையோடும் இமைக்குள் தவித்து உருளும் கண்களில்
பிறழும் காட்சியின் வர்ணங்கள் நனைவதை
மூத்தோர் விந்து உமட்டும் நாபி உள்முடிச்சில்
தாயின் மூச்சுக்காற்று திணறுவதையும்
சரணாகதி செய்ய

முனகலாகும் ஓசையில்

பிரார்த்தனையின் சுற்றுச் சுவரெங்கும்
இருண்ட கண்டத்தில் முளைத்த பிஞ்சு விரல்களின் தடங்கள்

*****

நன்றி : ' யாவரும். காம் ' இணைய இதழ் [ டிசம்பர் - 21 - 2013 ]

http://www.yaavarum.com/archives/1758


ஆதி டி.என்.ஏ -க்களின் பழைய உச்சரிப்பு

*
ஓர் அலைபேசியின் வழியே மிதந்து வரும் உன் குரலை
கைப்பற்றுகிறது என் புலனுணர்வு

நிற்காத பேரிரைச்சலின் கூர்ந்த கவனிப்புக்கு ஊடே
மொழியின் தளும்புதலில் நுரைக்கும் சொற்கள் செறிவுறும் அர்த்தச் சுவையின்
உப்புத்தன்மை பூசிய பதிலிகளோடு திருப்பி அனுப்பும் அலை
உன்னைத் தொடும் முன்பு
சாட்டிலைட் இழுத்துவிடும் பெருமூச்சாகிறது ஒலி அளவு

ஒரு சொல்லை இன்னொரு சொல் முந்துவதும் பின்னடைவதுமான
விளையாட்டாகி நகரும் வாக்கியங்களைக் கடக்கும் விண்கற்களில்
கல்வெட்டாகிப் புதைந்த ஆதிச் சொற்கள்
தன் சாயலொன்றை ஏற்றி அனுப்பிடும் சூக்குமங்களாக

அதிநவீனமாகிவிட்ட அலைஒலி ஈர்ப்புக் கருவியின் ஆன்ட்டனாக்கள்
உனக்கும் எனக்குமான உரையாடலை பின்நவீனப்படுத்தி நம்மிடம் கடத்துவதை
நம் பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்கான சாட்சியமாவதில்லை
எந்தவொரு உற்றுநோக்குதலோ
மூன்றாம் நபர் பஞ்சாயத்தோ

நேசிக்கிறேன் வெறுக்கிறேன் துயர் அழுத்தும் தனிமையில் புதைகிறேன்
இவைகளோடு அசையும் அறை ஜன்னலின் திரைச்சீலையில்
கொடிப்பிடித்து வளரும் மலர்கள் அறிந்திருக்கும்
யாவும்
ஒரு சொல்லின் மீதான வெயில் படரும் விளைவு மட்டுமல்ல
தலைமுறைகளை சுமந்து உழலும் ஆதி டி.என்.ஏ -க்களின்
பழைய உச்சரிப்பு
இந்த நிழலென்ற பைத்தியக் கணம்

*****

நன்றி : ' யாவரும். காம் ' இணைய இதழ் [ நவம்பர் - 20 - 2013 ]

http://www.yaavarum.com/archives/1622

செவ்வாய், ஏப்ரல் 29, 2014

உன் வசமிருக்கும் நிழல் துண்டை வெட்டி எடு..

*
ஒரு பிடிவாதத்தைக் கைவிடுவது என்பது முடியாத காரியம்
ஒரு மௌனத்தை விலை பேசுவதென்பது கடினமான காரியம்
ஒரு துயரத்தை பணயம் வைப்பது என்பது பந்தயம்
நீயாகிய இருப்பை இல்லாமல் செய்வது என்பது தற்கொலை

பேச்சுவார்த்தை நோக்கி விடுக்கும் அழைப்பை மறுதலித்து
ஒற்றை சூட்சுமத்தின் இலைத்துடிப்பு

அந்தரங்கத்தின் நிழல் பகுதியாகி முளைக்கும் விஷச் செடியில் பூக்கும்
கணங்களின் நறுமணத்தை சுவாசிக்கும் கரிசனம்
எனக்கு வாய்த்திருக்கிறது

வெயிலடித்துக் கொண்டிருக்கும் நம் சந்தையின் நடைபாதையில்
விலைபோகும் மௌனங்களின் துயரத்தை பேரம் பேச
உன் வசமிருக்கும் நிழல் துண்டை வெட்டி நடு
பணயமோ பிடிவாதமோ
கைவிடுதல் என்பது முடியாத காரியம்

தற்கொலைப் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசிக்கொள்வோம்
துணைக்கு இரண்டொரு ஆட்கள் சேரட்டும்

உபயோகமற்றுப் போன பழைய உரையாடல்களை
பரணிலிருந்து இறக்கி வைக்க யாரையாவது அனுப்பிவை
அது இப்போதைய உபரித் தேவை

நீயாகிய இருப்பை இல்லாமல் செய்வதென்பது முட்டாள்த்தனம்
பேரத்தைக் கவனி

*****

நன்றி : ' யாவரும். காம் ' இணைய இதழ் [ நவம்பர் - 20 - 2013 ]

http://www.yaavarum.com/archives/1622

துருப்பிடித்த நிறத்தில் வானின் பகல் ஒளி

*
சிறகுகள் நனைய அதன்
ஒடுங்கிய அடுக்குகளில் கருந்துளியாகி உருளும் மழைநீரோடு
பால்கனி கைப்பிடிக்கம்பியில்
துருப்பிடித்த நிறத்தில் நடுங்கி உட்கார்ந்திருந்த
காலை நேரக் காகத்தின் அலகில் மழைப் போர்த்திய
வானின் பகல் ஒளி

அசைவற்று நின்றுவிட்ட என் மங்கிய நிழலின்
விளிம்புத் தொட்டக் கணத்தில்

சிறகு உதறிப் பறந்தத் துடிப்பில்

நீர்ப்புள்ளிகள் பாதவிரல் மோதி உயரே தூக்குகிறது
மழைக்குள் தாவும்படி

*****

நன்றி : ' யாவரும். காம் ' இணைய இதழ் [ நவம்பர் - 20 - 2013 ]

http://www.yaavarum.com/archives/1622

உதிரத் திணறும் வர்ணப்பூச்சும் கைநிறைந்த க்ரேயான்களும்..

*
நழுவிடும் இமைகளுக்குக் கீழே
எரிந்து பொசுங்கும் டயர் வாசனையோடு
தேய்ந்து நிற்கிற இரவு

அதிர்ச்சி பெருகும் இருள் மீது படர்ந்தபடி
ஓலமிட மறந்துபோன
குருட்டு நினைவுகளின் புதிய ஜன்னல்கள் உடைகின்றன

கை உயர்த்தி அபயக் குரல் எழுப்பும் சொல் ஒன்றின் வடிவம்
வெளிவரத்துடிக்கும் அர்த்தங்களின் அடைப்புக்குறிகளை
நெளியச் செய்கின்றது

ஏற்றப்படும் அவசரக்காலக் கொடிக்கம்பத்தின் சுற்றுப் பீடத்தில்
நெருக்கிப்பிடித்து நிற்கும் மௌனத் தலைக்குள்
ஓயாமல் சுழலத் தொடங்குகிறது சீரற்ற ஓசையோடு
நிதானம் தப்பாத ஒரு மின்விசிறி

அறைப் புழுக்கம் தவிக்கச் செய்யும் கனவின் சுவரெங்கும்
உதிரத் திணறும் வர்ணப் பூச்சில் பஸ் ஒன்று எரியும் ஓவியத்தை
முனைமழுங்கிய பென்சில் கொண்டு கிறுக்கிய
நண்பனின் மகள் ஒருத்தி
கை நிறைய க்ரேயான்களோடு கதவுத் தட்டும் கணத்தில்
அடங்கிப் போயிற்று
மின்விசிறியின் கர்ரக் சத்தம்

*****

நன்றி : ' யாவரும். காம் ' இணைய இதழ் [ நவம்பர் - 20 -2013 ]

http://www.yaavarum.com/archives/1622

திங்கள், ஏப்ரல் 21, 2014

ஓர் எளிய அன்பின் பொருட்டு

*
இனி உன் முறை வரும் வரை
காத்திருக்கச் சொல்வாய்
நிர்ப்பந்தங்கள் கிடையாது
வரையறை கிடையாது

அது ஒரு விதியின்படி தொடங்குகிற புள்ளி
ஒரு சொல்லின் செதிலுக்கும்
மறு சொல்லின் செதிலுக்கும் இடையிட்ட வெளியில்
நீ சுவாசிக்க கட்டளையிடும் அர்த்தங்கள்
எனது முகாந்திரங்களை இழக்கச் செய்பவை

ஓர் எளிய அன்பின் பொருட்டு
விடிய மறுக்கும் இந்த இரவின் நீண்டக் கிளையில்
பூக்கும் யோசனையை கைவிட்டு காத்திருக்கிறேன்

மயக்கங்கொள்ளும் ஒரு சின்னஞ்சிறிய மொட்டைப் போல
மேலும் காத்திருக்கச் சொல்வாய்
உன் முறை வரும் வரை

****

நன்றி : ' வெயில்நதி ' சிற்றிதழ் [ ஜூலை - ஆகஸ்டு - 2012 ] 

ஓடும் நதியிலிருந்து ஒரு கை நீர்..

*
என்னை நோக்கி மரணம் வந்து கொண்டிருக்கிறது
நீயென் கைகளை இறுகப் பற்றிக்கொள்

இந்த உலகை விட்டு நீங்கும்போது
உன் கைகளில் என்னைக் கொஞ்சம்
மிச்சம் வைத்துவிட்டுப் போக விரும்புகிறேன்

உன்னிடமிருந்து தான் அந்த விடைபெறல்
நிகழ வேண்டும்

இதுவரை நாம் பேசித் தீர்த்த இரவுகள்
மொத்தத்தையும் நீயுன் பார்வையில்
தைத்து வைத்திருப்பதை கண்ணுற்று விலகுதல்
ப்ரியமென்கிறேன்
துணை செய்

ஓடும் நதியிலிருந்து ஒரு கை நீர் அள்ளி
வார்ப்பதைப் போல்
என்னைத் தூக்கிக் கொடு
நான் விரும்பும் என் மரணத்திடம்

அப்போது
உன் கைகளில் சொட்டும் நதியில்
கொஞ்சம் மிச்சம் வைத்துவிட்டுப் போகிறேன்

****

நன்றி : ( மலைகள்.காம் ) [ ஜூன் - 17 - 2013 ]

http://malaigal.com/?cat=8&paged=9

நீண்ட பாதையின் முடிவில் உயரும் சுவர்கள்

*
முற்றுப் புள்ளியிலிருந்து மீளும் பேனா
எழுதி முடித்த வாக்கியத்தை நோக்கி
வீசுகிறது தனது பெருமூச்சை

தத்துவமொன்றின் சாடலாக
கட்டுடைந்து சிதறும் கோட்பாட்டுக் கனவாக
சிக்கலுற்ற வேர் நெடுக வழியும் நீர்த்துளியாக

பற்றுதலுக்கு தயங்கும் மௌனத் தவிப்பெனவும்
உள்ளூரக் கிளர்த்தும் பன்முகச் சிலிர்ப்பெனவும்
நீண்ட பாதையின் முடிவில் உயரும் சுவரெனவும்

புள்ளியிலிருந்து பெயர்ந்து
மறுபுள்ளி நோக்கித் தொடங்கும் பயணத்தின்
ரகசியங்களோடு திணறும் மொழியின் தருணங்கள்
கண்ணாடிப் பேழையாகி வீங்குகிறது
பெருமூச்சின் உயிர்ப்பை மையமிட்டு

****

நன்றி : ( மலைகள்.காம் ) [ ஜூன் - 17 - 2013 ]

http://malaigal.com/?cat=8&paged=9

வழித்துணைப் பூவின் சிவந்த இருள்..

*
மையிருட்டு பூசிக் கிடந்த
இரவில்
பாதையைக் காணோம்

சட்டெனப் பூத்த
சிகப்பு பூவொன்று நெருங்கியது

சிகரெட் நுனியின் கங்கு சிவக்க
எங்க போகணும்
என்ற குரல் வழித்துனையாயிற்று

இருட்டு என்பது மிகக் குறைந்த ஒளி
என்றானே பாரதி

****

நன்றி : ( மலைகள்.காம் ) [ ஜூன் - 17 - 2013 ]

http://malaigal.com/?cat=8&paged=9

திங்கள், ஏப்ரல் 14, 2014

புதிய கட்டளைகளின் பட்டியல்..

*
ஒரு வரையறை வைத்துக்கொள்ள முடியவில்லை
உனது எல்லை எதுவென்ற வரைபடத்தை
எனது அறைச் சுவரில் ஒட்டி வைக்கிறாய்

நினைவுப் படுத்திக்கொள்ளவோ அல்லது
ஞாபகத்தில் இருத்திக்கொள்ளவோ
புதிய கட்டளைகளின் பட்டியலொன்றை
வாசலில் நின்றபடி சத்தமிட்டு வாசித்துச் செல்கிறாய்

படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு
நானும்
பின்னிக் கொண்டிருந்த வலையை நிறுத்திவிட்டு
சிலந்தியும்
வாய்மூடி கேட்டுக் கொண்டிருக்கிறோம்

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜூன் - 10 - 2012 )

http://puthu.thinnai.com/?p=12129

உட்சுவரின் மௌன நிழல்..

*
இரவின் துளி ஈரம்
பரவும் இவ்வறையெங்கும்

கணுக்கால் தொட்டு நீளும் யாமத்தின்
முதல் கீற்றை ஒற்றியெடுக்கும்  உதடுகள்
உச்சரிக்க மறுக்கின்றன

முந்தையப் பகலை அதன் கானலை

நினைவில் மிதக்கும் முகங்களின்
நெளியுணர்ச்சிகள்  குமிழ் விட்டு வெடிக்கிறது
மொழியற்ற மொழியொன்றின் ஆழத்தில்

கூரையின் உட்சுவர் சுமக்கிறது
கரிய நிழலின் மௌனத்தை

****


நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( மே - 27 - 2012 )

http://puthu.thinnai.com/?p=11647
 

நழுவும் உலகின் பிம்பம்

*
வெகு நேரமாய் தலையசைத்துக் கொண்டிருந்த
பூவில் எறும்பொன்று நடுங்குகிறது வீசும் காற்று புரியாமல்
கைவிரித்துத் தாங்கிப் படர்ந்த பச்சைக் காம்பில்
சிலிர்ப்போடுகிறது உச்சி நிழல்

பிறகு
தூறலோடு தொடங்கிய சிறு மழை
உருட்டுகிறது துளிகளை

அதில் நழுவும் உலகின் பிம்பம்
எறும்பின் உடலை வளைத்து
கீழிறக்குகிறது
மணலில் நெளியும் புழுவைக் கடந்து
வெயில் காயும் மேட்டின் துளைக்குள் நுழைய

பேச்சற்று சொற்ப வெளிச்சக் கீற்றோடு
மௌனமாய் அசைகிறது வனம்

****


நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜனவரி - 22 - 2012 )

http://puthu.thinnai.com/?p=8006

நீர்மைப் பொழுதின் குரல் பூக்கள்

*
வெகு நாட்கள் கழித்து
செல்போனில் அழைத்திருந்தாய்
காயும் வெயிலில்
என் மாடிச் செடிகளுக்கு
தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தேன்

உன்
குரலின் நீர்மையில்
நான் ப்ரியமுடன் வளர்க்கும்
கனகாம்பரப் பூக்கள் முகம் வாடிவிட்டன

வெயிலில் செடிகளுக்கு
தண்ணீர் ஊற்றக் கூடாதாம்

உனக்கேன் தெரிந்திருக்கவில்லை
குரலின் நீர்மையோடு 

வெயில் பொழுதில்

அழைக்கக் கூடாதென்று

****


நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ டிசம்பர் - 23 - 2013 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/25820-2013-12-24-09-42-31
 

வர்ணங்கள் தூவும் முத்தச் சிறகுகள்..

*
இழுத்து அணைத்துக்கொள்ளும்
என் குளிர்ந்த கரங்களை
உனது உள்ளங்கைக்குள் கோர்த்தபடி
வெப்பம் பகிர்கிறாய்

உயர்த்தி நோக்கும் பார்வையோடு
காதலை ஊடுருவி
ஒரு குவளைக் காபியை உதடு அழுந்த
நிதானமாகக் குடிக்க முடிகிறது உன்னால்

முத்தம் என்பது
வெறுமனே ஒரு முத்தம் மட்டுமே அல்ல
என்பதைப் போல முத்தமிடுகிறாய்

முத்தத்தின் சிறகுகள்
உடல் முழுதும் பரவுகிறது
அதன்
எண்ணற்ற வர்ணங்களைத் தூவியபடி

உன்னை அத்தனை வாஞ்சையோடு
பருகிட விரும்பினேன்
என் உலகை இரண்டாய் பிளந்து வைக்கிறது
காபி வாசனையில் தோய்ந்த உன் சிறகு

****


நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ நவம்பர் - 5 - 2013 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/25405-2013-11-06-10-27-49 

மை தீரும் பேனா..

*
நீ
சொல்லாத ஒரு வார்த்தையின்
அடர்த்தி
எனது இரவைத் தூங்கவிடாமல்
விடிய வைக்கிறது

நீ
சொல்லத் தயங்கும் ஒரு வார்த்தையின்
வெப்பம்
எனது பகலை என்னோடு
எரிய விடுகிறது

நீ
சொல்ல முயலும் ஏதோவொரு வார்த்தை
எனக்கான
மிஸ்டு காலின் அதிர்வோடு
அடங்கிப் போகிறது

நீண்ட அயற்சிக்கு பின்
மை தீர்ந்து போன
ஒரு பேனாவின் உதறலோடு
நினைவு சிதறும் பிறிதொருநாளில்

பிரிக்கப்படாத ஒரு கடிதமாக
படிக்க விரும்பாத ஒரு துயரமாக
நீ
சொல்லியிருக்கும் வார்த்தைகள்
மொத்தமும்
இன் பாக்ஸில் தேங்குகிறது

****


நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ நவம்பர் - 4 - 2013 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/25383-2013-11-05-09-41-15 

சொற்களற்றுப் போன இசைக் குறிப்புகள்..

*
நான் உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்
நீ வேறெங்கோ பார்த்து கொண்டிருக்கிறாய்

பேசுதலுக்கும் பார்த்தலுக்குமான
இடைவெளியை
நான் வெறிக்கத் தொடங்குகிறேன்

சொற்களற்றுப் போன இசையை உணர்ந்தவளாக
'ம்..?' - என்கிறாய்
நீ பார்த்துக் கொண்டிருந்தது
என் பேச்சைத் தான் என்பதாக

அது
ஓர் இசைக்குறிப்பைப் போல்
ஒலிக்கிறது

'ம்..' - என்ற உன் ஒலிக்குறிப்பை
இசைக் குறிப்பாக எழுதிப் பார்க்கிறேன்

அது
வேறொரு 'ம்..' ஆக
இசைக்கிறது

பேசுதல் பார்த்தலின் இணைப்புள்ளிகளில்
மீட்டுதல் அரங்கேறி உதிரக்கூடும்
இன்னுமொரு
'ம்..'

****


நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ அக்டோபர் - 30 - 2013 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/25351-2013-10-31-10-53-57

தர்க்க இரவுகளின் மீது எரியும் மேஜை விளக்கு

*
என் தவறை நீ கைப்பிடித்து அழைத்துப் போ
பாதை நெடுக அது கேட்கும் அனைத்தையும் வாங்கிக் கொடு
அவற்றை எப்படி உபயோகப்படுத்துவது என்றும் கற்றுக் கொடு

நிறைய சந்தேகங்களைக் கேட்க
பழக்கி வைத்திருக்கிறேன் என் தவறுகளுக்கு
எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொல்ல முடியுமா பார்
சிந்தனைத் தளராதே


ஓர் இரவைக் கடக்கும்படியான ஏற்பாடு தானே 

உன் பயணம்

நீ உன்னோடு அழைத்துப் போகும் இந்தப் பிரத்யேகத் தவறுக்கு
என் எல்லா இரவுகளும் பிரசித்தம்
உன் புது இரவை 

அதனோடு நீ எதிர்கொள்ளப் போகும் முதல் இருளைக் 
குறிப்பாக எழுதி வைத்துக்கொள்
 

அது உனக்குத் திரும்ப கிடைக்காது

என் தவறுகளுக்கு புது உடுப்புகள் பிடித்தமில்லை
மேலும்
உன் தவறுகளின் பழைய உடுப்புகள் அதற்குப் பொருந்தாது
தயவு செய்து உன் தவறுகளின் பழையவற்றுக்குள்
அதைத் திணிக்க முயலாதே

உன் முதல் இரவில் அது கையாளும் அனைத்து தர்க்கங்களையும்
ஒன்றுவிடாமல் என்னிடம் நீ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை
அவைகளை நான் இப்போதே யூகித்துவிட்டேன்

நீயுன் தவறுகளோடு அந்தத் தர்க்கங்களைப் பகிர்ந்துகொள்ள
உனக்கது பேருதவியாக இருக்கக்கூடும்

நீ செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான்
நாளை மறுநாள் இரவுக்குள் என் தவறை என்னிடம் ஒப்படைத்துவிடு
என் தவறால் என்னைப் பிரிந்து 48 மணி நேரத்துக்கு மேல்
இருக்க முடியாது

அதற்கு என் மீது அதீத அன்பெல்லாம் கிடையாது

இந்த 48 மணிநேரத்துக்குள் என்னிடம் வந்து சேர்ந்திருக்கும்
புதிய தவறுகளின் மீது அதற்கொரு வன்மக் கனவு ஊற்றெடுத்திருக்கும்

அதை என் மீது எழுதித் தீர்க்க
எந்தவொரு முடிவையும் உன் மீது அது எடுக்கும் முன்
பத்திரமாய் என் வாசலில் கொண்டு வந்து விட்டுவிடு


ஒரு கதவு தட்டலுக்காக என் மேஜை விளக்கு எரிந்துகொண்டிருக்கும்

****


நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ செப்டம்பர் -16 - 2013 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/24948-2013-09-17-06-07-49 

எனவே..

*
வழியனுப்ப யாரும் வரவில்லை

இரவின் தனித்த சாலையில்
விளக்கு வெளிச்சங்களைக் குடித்தபடி
இருள் துணைக்கு வருகிறது

முணுமுணுக்கும்
இலைகளின் மஞ்சள் தீண்டிய நிறத்தை
தின்கிறது காற்றின் நாவு

சில்வண்டுகள்
அவசர அவசரமாய் குறிப்புகளை வாசிக்கின்றன
கண நேரம்
எனக்கது போதுமாயிருக்கிறது

பிழை திருத்தும் மனமற்று
என் நடையை
மொழிபெயர்த்து அலறுகிறது
கிளையின் நிழலில் அமர்ந்தபடி ஒரு கூகை

இத்தனித்த சாலை இரவில்

கொஞ்சம் அணுக்கமாய்
கொஞ்சம் வெப்பமாய்
கொஞ்சம் பரிதவிப்பாய் இருக்கிறது
இந்த இருளின் சலனம்

எனவே
வழியனுப்ப யாரும் வரவில்லை

****


நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜூலை -14 - 2013 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/24433-2013-07-15-11-35-11

ஓர் அபத்த நாடகத்தின் முதல் காட்சி..

*
யாரோடும் சமரசமில்லை
எந்த சந்தர்ப்பங்களுடனும் உடன்படிக்கையில்லை

உப்புப் பூத்துவிடும் நம்பிக்கைகளை
கொய்யும் விரல்களோடு சிநேகம் இல்லை

சந்தேகக் கண்ணிலிருந்து கீழிறங்கும் நிறங்களில்
தொங்கும் சம்பவங்களின் திரை மடிப்பில்
சிக்கித் தவிக்கும் மூச்சுக்காற்றில் உயிர் இல்லை

மரணத்துக்கான ஒத்திகையில்
பார்வையாளர் பகுதியிலிருந்து வீசப்படும்
ஒற்றைக் கயிற்றில் தொடங்குகிறது
ஓர் அபத்த நாடகத்தின் முதல் காட்சி

மேடையேறத் துடிக்கும் கால்கள் ஒவ்வொன்றும்
பந்தாடுகிறது உணர்ச்சித் தருணங்களை

மைதானமென விரியும் எல்லையற்ற அக்காட்சியில்
குறுக்கும் நெடுக்குமாக சதா உலவுகின்றன
நம்பிக்கைகளும்
அதன் வாலாகிப் போன துரோகங்களும்

****


நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜூன் - 17 - 2013 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/24176-2013-06-18-07-23-13
 

தீண்டப்படாத வரிசை எண்..

*
நானொரு முட்டாளாக்கப்படுவதன்
விலையை
எப்படி நிர்ணயிப்பது என்று தெரியவில்லை

உங்களின் விலைப்பட்டியல்
பரிந்துரையின்
எனக்கான வரிசை எண் எது

ஒரு குறைந்தபட்ச உழைப்பை
யாசிக்கும் பொருட்டு
உங்கள் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்

அதிபுத்திசாலிகளின் சந்தையில்
தீண்டப்படாமல் கிடக்கும்
பண்டமென கிடக்கிறது என் முட்டாள்த்தனங்கள்

அதன்மீது ஒட்டப்படாத ஒரு சிறிய விலை கோருவது
நிர்ணயிக்கப்படாத ஒரு பேரத்தை

அது கொஞ்சம் புத்திசாலித்தனமானதாக
கொஞ்சம் முட்டாள்த்தனமாக

****


நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜூன் - 7 - 2013 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/24107-2013-06-08-07-15-47 

அவ்வாறாய் அதனைக் கீழ்மையென்பாய்..

*
அதை ஒரு தந்திரமென்றான்
மறுப்பதற்கில்லை
என்ன செய்யலாம்

ஏற்புடைய
மற்றுமொரு தந்திரத்தை
எடுத்து நீட்டினேன்

மிகக் கீழ்மையான
தந்திரமென்றான்

மனப்பிறழ்வின் அகக்கிடங்கிலிருந்து
ஒன்றைக் கண்டெடுத்தேன்
ஏற்றுக்கொள்

இது குரூரமானது என்றான்
கீழ்மையே மேல் என்றான்

சிரிக்கும் சாத்தானின் பாதம் தொட்டு
குரூரத்தை முத்தமிட்டு நீட்டினேன்
தந்திரம் புனிதமடைந்தது

****


நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜூன் - 7 - 2013 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/24093-2013-06-07-06-46-57 

நொடி முள்ளிலிருந்து வழிந்திறங்கும் நிழலின் இழை..

*
வாழ்வதின் அவசியத்தை
ஒரு செய்தித்தாளைப் போல தினமும் பிரித்து வைத்துக் கொள்கிறோம்
நமக்குப் பிடித்தமான ஒரு மேஜையில்

திறந்திருக்கும் வாசல் வழியே கொஞ்சமும் தயங்காமல் வெயில் வருகிறது
கடிகாரம் தொங்கும் சுவரைத் தொட்டதும் நின்றுவிடுகிறது

நொடி முள்ளிலிருந்து நெடுக வழிந்திறங்கும் நிழலின் இழை
வெயிலுக்கு தருவதில்லை தன் உதடுகளை

துடிக்கும் மெல்லிய சப்தத்தோடு அடங்கிவிடுவதாக இருக்கிறது
அவற்றின் சன்னமான உரையாடல்

அன்றாட நிகழ்வின் அத்தனை செய்திகளையும்
பிரித்துப் படிக்க நமக்கு தான் நேரமிருப்பதில்லை

அதனால் என்ன

ஒரு சமயம் போல
வாசல்கள் திறந்தே கிடக்கின்றன

****


நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜூன் - 5 - 2013 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/24086-2013-06-06-09-00-33

வழி நெடுகத் தூவப்படும் சில்லுகள்..

*
பனிக்காலம் தொடங்கியபோது
அசைவற்று உறைந்தன சிறகுகள்
நேற்றிரவோடு
உறைபனி முடிந்தது

கனப்படுப்பருகே
பத்திரப்படுத்தி வைத்திருந்த
கடைசி உரையாடல்கள்
தத்தம் பச்சைமை இழந்து சருகாய் மாறி பழுப்பேறி
மொடமொடக்கின்றன

ஜன்னல் வழியே அவைகளை
காற்றிலனுப்புகிறேன்

சருகின் கனம் தாளாது
உறைந்த சிறகுகள் உடைகின்றன

அதன் சில்லுகளை
வழி நெடுகத் தூவியபடி
பாதை முடிவில்
உன் கதவை வந்தடைகிறேன்

சார்த்திய கதவின் மீது
சிறகில்லா பறவை
இன்னும் உறையாமல்


கைப்பிடி வளையத்தில் உட்கார்ந்திருக்கிறது

****


நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ மே - 24 - 2013 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/23976-2013-05-25-08-01-11

ஒரு வாக்கியத்திலிருந்து..

*
தீர்மானித்து விட்டதாக சொல்லியபடி உதடுகளை இறுக மூடிக்கொள்கிறாய்
வேறெந்த வார்த்தைகளும் சொல்லுவதற்கில்லை என்பதாக
எப்படி உன்னால் அப்படியொரு முடிவை எடுக்க முடிகிறது

ஓர் அறிமுகமெனவும்
ஓர் அரவணைப்பாகவும்
படிநிலை வளர்தலில் ஒத்துழைப்பென தேவைப்பட்ட இணக்கம்
எந்த நொடியை இழந்ததில் கைநழுவி உடைந்தது

ஓர் அபத்த மேஜையை சிரமமேற்கொண்டு செதுக்கி வைக்கிறாய்
கட்டுப்பாடுகள் நிறைந்த உரையாடலுக்குரிய வெளியை
அதன் மேற்பரப்பில் நிகழ்த்திவிட துடிக்கிறாய்

உனக்கு உடனே வெளியேறிவிட வேண்டும்
ஒரு வாக்கியத்திலிருந்து

வேறொரு புத்தகத்துக்குள் நுழையும் முன்
சிகரத்திலிருந்து பாதாளத்துக்கு சரிந்தாக வேண்டும்

தீர்மானித்துவிட்டதாக இறுகும் உதடுகள் உலர்ந்து போவதை
உனக்குச் சுட்டிக்காட்ட ப்ரியப்படுகிறேன்

ஆனாலும்

உன்னால் அப்படியொரு முடிவுக்கு வர முடிகிறது
அடங்குதலின் நுழைவாயிலில் நின்று உன் சிறகை மெல்லக் கோதியபடி

****


நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ மே - 23 - 2013 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/23958-2013-05-24-05-17-28 

அறை அறையாகக் கசக்கும் காரணங்கள்..

*
கொஞ்சமும் நிதானம் இழக்கவில்லை நீ
குரலில் சிறு பதற்றமுமற்று
சொல்ல முடிகிறது
ஒரு பிரிவை

தேன்கூட்டைப் போல் பொறுமையாக
கட்ட முடிந்திருக்கிறது
அறை அறையாகக் காரணங்களை

கசக்கும் பூக்களிலிருந்து
வலிக்காமல் இனிப்பெடுக்க முடிகிற
உன்னால் மட்டுமே
அதில் நஞ்சையும் அளவு பார்த்து சேர்க்க முடிகிறது

கொஞ்சமும் நிதானமிழக்கவில்லை நீ
எந்தவொரு பதற்றமுமில்லை குரலில்

ஆனால்

சொல்ல முடிந்திருக்கிறது
காலத்துக்கும் ரீங்கரிக்கப் போகும்
ஒரு பிரிவை

****


நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஏப்ரல் - 5 - 2013 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/23499-2013-04-06-06-21-45 

துண்டித்துக் கொண்ட உரையாடலின் சில வார்த்தைகள்

*
ஒரு
சிறு மன்னிப்புக்குரிய கதவு
எப்போதும் சார்த்தப்பட்டே
இருக்கிறது

அதில் பொருத்தப்பட்டிருக்கும்
அழைப்பு மணி
வேலை செய்வதில்லை

மீண்டும் மீண்டும்
முயலும் போது
அதன் மூர்க்க மௌனம்
மேலும் இறுகுகிறது

துண்டித்துக் கொண்ட
உரையாடலின் சில வார்த்தைகள்
கடைசியாக
ஓர் அறிவிப்பை போல்
அதன் மீது ஒட்டப்படுகிறது

****


நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ மார்ச் - 25 - 2013 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/23351-2013-03-26-07-55-02 

சரிவதற்குரிய சொல்லின் தயவு

*
அப்படியொரு தேவையை இதற்கு முன்
நீ கோரியதில்லை

உடைபடும் மரண ரேகையின் மீதொரு பயணம்
மிதக்கும் பெயரற்ற பறவையொன்றின் இறகில் என் பெயர்

திவலையின் சாரல் கரையில்
வர்ணம் தொலைந்து உடைதல்

உருமாற்ற கட்டுமானங்களில் அடுக்கடுக்காக
சரிவதற்குரிய சொல்லின் தயவு

தனிமையில் நொறுங்கும் மொழியின் மனதை
நெகிழ்த்தும் ஒரு பாவம்

கனத்த மௌனத்தின் நிழலுக்குள்
நடந்து கடக்க கொஞ்சம் வெளிச்சம்

என்பதாக

தேவையின் அடர் நீலத்தில் கருகிப் பிரியும்
ஒரு புகையின் வாசனையாகி வெளியேறுகிறாய்
உனக்கான அத்தனை வார்த்தையிலிருந்தும்

****


நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ பிப்ரவரி - 18 - 2013 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/23037-2013-02-19-18-16-28