புதன், ஏப்ரல் 30, 2014

தூரிகைகளுக்கு வாகான ஒரு சொல்லின் நிறம்

*
என் உணர்ச்சிவயப்படுதலின்
நிறங்களை என்ன செய்வதென்று
தெரியவில்லை

உலகின்
ஆகச் சிறந்த ஓவியனொருவனை
தேடிச் சென்றேன்
அவன் என் நிறங்களைத் தொட்டு
ஓவியமொன்றைத் தீட்டினான்

எனதான
எந்தவொரு உணர்ச்சியின் சாயலையும்
நானதில் காணவில்லை
ஓவியத்தில்
இட்டிருந்த அவனுடைய கையெழுத்து
உணர்ச்சிவயப்பட்ட புதிய நிறமொன்றை
அவ்வோவியம் முழுதும்
தளும்பச் செய்திருந்தது

மேலுமொரு நிறமென்பது
மேலுமொரு துக்கமாகப் பெருகுகிறது
என்னுடைய நிறக் குடுவையில்

இன்னும் இன்னுமென்று
பயணிக்கிறேன்

கடக்கும் சந்தையிலிருக்கும் அனைத்துத் தூரிகைகளும்
ஒளிந்துக் கொள்கின்றன
தமக்கு வாகான ஒரு சொல்லின் பின்னே

இத்தனை விடையற்ற கேள்விகளும்
அத்தனை வாக்கியங்களுக்குள்ளும்
தேங்கி ஊறுகிறது
நிறங்களற்ற நிறங்களின் சிறு துளிகளாய்

வீடு திரும்புதலில்
என் அறையெங்கும் பரவும் இந்நிறங்களை
சட்டென்று
தான்யாவின்
பிஞ்சு விரல்கள் அள்ளுகின்றன
எந்தவொரு தீர்மானமுமின்றி
யாதொரு கோட்பாடுமின்றி

சுவரெங்கும்
அறை அறையாகத் தீட்டுகிறாள்
நிறங்களை

கிளைவிடும்
வர்ணஜாலத்தில் மூர்க்கம் தளர்கிறது
ஒவ்வொரு வளைதலிலும்
ஒவ்வொரு வட்டச் சதுரங்களிலும்
ஒவ்வொரு சாய்க் கோடுகளிலும்
ஒவ்வொரு நெளிவிலும்

உணர்ச்சிவயப்படுதலின் நிறங்களை
என்ன செய்வதென்று
உலகின்
ஆகச் சிறந்த ஓவியனின் தூரிகையை விட
பிஞ்சு விரல்களுக்குத் தெரிந்திருக்கிறது

*****



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக