செவ்வாய், டிசம்பர் 28, 2010

ஒரு மழை நாளுக்குரிய பருவ மேகங்கள்..

*
நேற்றைய பயணமாகிப் போனாய்
நீ
கோடிழுத்துப் போன
என் பாதையில்

ஒவ்வொரு
சின்னஞ்சிறிய கற்களும்
பூக்களை சுமக்கும் செடிகளை
அண்டுகின்றன
பெருவிரல் நகம் தெறித்து

திரும்பும் எண்ணமற்று நீளும்
காட்சிகளை ஓவியமாகத் தீட்டி
வைத்திருக்கிறாய்
உன் தனிமை கேன்வாஸில் அதன்
முனைகளில் சட்டம் ஏற்றி

நம் உட்சுவர்களின் பூச்சை
உப்பச் செய்யும் ஒரு மழை நாளுக்குரிய
பருவ மேகங்களை
இவ்வழியெங்கும் கவிழச் செய்கிறேன்

இரவின் குடுவையிலிருந்து
அது சொட்டத் தொடங்குகிறது
பனித் துளியென
உன் ஜன்னல் தேடி

****



நீங்குதல் குறித்து..

*
நீங்குதல் குறித்து
எழுதிக் கொண்டிருக்கும் இரவொன்றின்
அசையும் நிழலை
பேனாவில்
ஊற்றிக் கொண்டிருந்தது
உன் பார்வை

வெறுப்போடு கவிழ்த்த பிறகும்
புகைப்பட சட்டக விளிம்பின் வழியே
கசிந்த உன் பிம்பம்
இம்மேஜை முழுதும் பரவி
கண்ணாடி மீது மெழுகுகிறது
உன்னை

நீங்குதல் குறித்து
பிறகெப்போதும் எழுத முடிவதில்லை
சென்ற கணம் வரை..

****

வட்டத்துள் மௌனிக்கும் எண்கள்..

*
ஆள் இல்லா
கதவுடைய
வீட்டின் எண்கள்

தன்
வட்டத்துள் மௌனமாய்
சேகரிக்கின்றன

வந்து திரும்புவோரின்
எண்ணிக்கையை

****

எழுதப்படாத மின்மினிப் பூச்சிகள்..

*
வழித் தவறிய
கவிதைக் காட்டின்
அடர்ந்த இருளில்
பேனாவைக் கடத்திப் போகின்றன
மின்மினிப் பூச்சிகள்

சிறிது வெளிச்சம் போர்த்திய
மங்கிய வளைவொன்றில்
எதிர்ப்பட்ட
உயரமான மரமொன்றின்
கிளைகள் தோறும்
பூத்துத் தொங்குகிறது

இதுவரை எழுதப்படாத
கவிதைகள்
யாவும்

****

பகல்களை அபகரிக்கும் சிகப்புக் கோப்புகள்..

*
பிரியம் தளும்பும்
பகல்களை அபகரித்துக் கொள்கிறது
மேஜை மீது அடுக்கப்படும்
சிகப்புக்
கோப்புகள்

பிரித்துப் படிப்பதற்குரிய
தருணங்களைக் காது மடக்கி
கையெழுத்திடும்போது

கனத்து விடுகிறது
ஒரு
மௌனம்
அதி
நிரந்திரமாய்

****


மதிற்ச் சுவர் விளிம்பு..

*
கூர்க் கம்பிகள்
செருகிய
மதிற்ச் சுவர் விளிம்பிலிருந்து
குத்துப்பட்டு வழிகிறது
கரிய நிழலென
மஞ்சள் வெயில்

***

யாதொரு..

*
துயர் பெருகும்
மன வெளியில் கால் ஓய
தேடுகிறேன்
ஓர்
கனவை

பின்
செதில் செதிலாக
மூச்சுத் திணறி
வெளியேறுகிறது

யாதொரு
நிபந்தனையோ
கோரிக்கையோ ஒப்புவிக்கும்
இடமற்று

****

கண நேரம்..

*
நீங்கள்
அப்படி ஒப்புக் கொள்ளும்போதே
கொஞ்சம்
மரணிக்கிறீர்கள்

ஆட்படும் கண நேர
தலையசைப்பில்
நீர்த்துப்
போகிறது

இருப்பதாக நம்பப்படும்
வைராக்கியம்

****

புலரும் கானல்

*
கலங்கும் கண்களில்
புலரும்
கானலில்
நீந்தும் மீன்கள்
பொய்..

****

பார்வை மட்டுமல்ல..

*
பற்றி எரிவது
பார்வை
மட்டுமல்ல
சகலமும்..

****

இறுமாப்பில்..

*
நீ
கன்னங் குழிய
சிரிக்கும்
இறுமாப்பில்

சுக்கலாய் உடைகிறது
தருணம்

****

ஒத்திகை

*
என்
மரணத்தை
ஒத்திகைப் பார்க்கிறது

உன்
மௌனம்

****

ஆரஞ்சு நிறக் காலடி நிழல்..

*
பனி மெழுகிய
ஆரஞ்சு நிறத்தை உமிழும்
தெருவிளக்கின்
கீழ்

காத்து
நிற்க நேரும்
காலடி நிழலில்

உதிர்ந்துக் கிடக்கின்றன
நிமிடங்கள்

****

கொஞ்சமாய்..

*
இரவோடு அயர்தலை
கனவின் விளிம்பில் நின்று
கொஞ்சமாய்
பிய்த்துக் கொள்கிறாய்

ஒரு
துள்ளலோடு
புரண்டுக் கொள்கிறது

தூக்கம்..

****

நிழல் நெளிதல்..

*
அழைத்துச் செல்கிறாய்
முடிவற்று
நீளும்
மணல்வெளியில்

நிழல்
நெளிதலில்
ஒளிந்துக் கொள்கின்றன
இதற்குப் பிறகும்

கால் தடங்கள்..

****

நீர் விளிம்பில்..

*
நம்
சொற்கள் பொங்கிட

கொஞ்சங் கொஞ்சமாய்
திரள்கிறது

நீர் விளிம்பில்
மஞ்சளாய்
நிலவு

****

கரையில்..

*
ஆழ்கடலில் மிதக்கிறது
என்
அலை..

கரையில்..

சொற்ப நுரைகளுடன்
விளையாடிக் கொண்டிருக்கிறாய்

நீ..

***

மெத்தென்று உதைப்படும் பூமி

*
இதழ் குழிய சிரிக்கிறாய்
அரிசிப் பல் முளைக்கும் முன்
மொழியைக் குழைக்கிறாய்
பால் எச்சிலில்

தத்தக்கா பித்தக்காவென்று
உதைப்படும் கால்களால்
மெத்தென்றாகிறது
கொஞ்சம் பூமி

பெயர் சொல்லியழைத்ததும்
சட்டென்று திரும்பிப்
புன்னகைக்கிறாய்

பெயர் சொன்னதால் மட்டும் தானா...!

****

பட்டென்று உடையும் கண்ணாடி வெளி..

*
பால் குடிக்காமல்
விளையாட்டுக் காட்டும்
குழந்தையை மடியில்
இறுத்தி..

'ஏய்..!' - என்று அதட்டுகிறாய்

அதிர்ச்சியில் உறையும்
அதன் கண்களில்
பட்டென்று உடையும்
அவளின் கண்ணாடி வெளியை

எப்படி
உனக்கு
புரிய வைக்க..

****

மேலும்..

*
'போய் வரவா ?'
'போய் வா '

மனசில்லாமல்
மேலும் நிற்கிறாய்

கடந்து போய்க் கொண்டேயிருக்கிறது

நம்
தருணங்கள்

****

நட்சத்திர இருளில்..

*
மல்லாந்து படுத்தபடி
நட்சத்திர
இருளில்
வானெங்கும்
நகத்தைக் கடித்துக் கடித்து
விடியலில்
இரவைத் துப்புகிறாய்

****

மெட்ரோ கவிதைகள் - 89

*
எவ்வளவு தீனி
எவ்வளவு தீனி

பயணிகளை மேயும்
ஷேர் ஆட்டோக்கள்

உறுமலோடு
உறுமலோடு

உறுமிக் கொண்டே எவ்வளவு
தீனி

நெருங்கி நெருங்கி நெருக்கியே
அருகில்
நுகரும்
மஞ்சள் மிருகங்கள்..

****

உள்ளங்கையிலிருந்து..

*
தொடர்ந்து
அடுக்கப்படும் சந்தேகங்களைப்
பிதுக்கி
வழிகின்றன

அடித்து அனுப்பப்படும்
உள்ளங்கையிலிருந்து
ஏராள
சத்தியங்கள்

****

அவசரமாய் பெய்த பின்னிரவு..

*
நதிக்கரை
மண் குழைவில்
குழிந்த உன் கால் தடத்தில்

தேங்குகிறது
அவசரமாய் பெய்த மழைச் சாரல்

பின்னிரவில்
அதில்
மிதக்க விடுகிறேன் நம்
நட்சத்திரங்களை

****

கரைந்து ததும்பும் கோப்பை இரவு..

*
திறக்கப்படாத
கதவுகளின் மறுப்பக்கத்தில்
கரைந்து ததும்பும்
இரவை

ஒரு கோப்பை வழிய
ஏந்திக் கொண்டு உலா வரும்
மௌனத்தின்
நிழல் ஒன்று
நீண்டு கிடக்கிறது

நடைபாதை வராண்டாவெங்கும்
வாசற்படியைத்
தொட்டபடி..

*****

துயரம் உடையும் கூர்ப் பிசிர்..

*
இந்த உடலின் உயரத்திலிருந்து
வீழ நேர்கிறது
ஒரு துயரம்

அது
உடையும் தருணத்தின்
கூர்ப் பிசிர்களில் கசிந்தோடுகிறது
கருணையென்றோ
கண்ணீரென்றோ

ஓர்
அபத்தம்..

****

திங்கள், டிசம்பர் 27, 2010

அழுத்தம் புரியாத அளவுகள்..

*
ஒரு
விடைபெறுதலை
இதைவிட லாவகமாய்
நாசூக்காய்
சொல்லிவிட முடியாது தான்

உன் கைக் குலுக்கலின் அழுத்தம் புரியாமல்
அளவுகளை மீறும்
இதயத் துடிப்பில்

இக்கணத்தைத் துருத்திக் கொண்டு
நொண்டுகிறது
நிமிட முள்

****

வாசற் கல்..

*
நாலு துண்டுகளாக
இரண்டுக்கு இரண்டடி
தெரு வாசற் கல் மீது

நான்காய்
உடைந்திருந்தது

கோலமும்

****

குமிழ் பிழை..

*
இழைப் பிரியும்
பெருமூச்சின்
சிறு பிழையில்

இதயக் குழாய் விம்மியொரு
குமிழ் அடைத்து

அடிக்கோடிடுகிறது உயிர்..

****

மௌனத் துணையாக சுழலும் மின்விசிறி இழை..

*
ஊசி முனையென
பெய்யும் இப்பனி இரவில்
உன்
நினைவில் மருக மருக..
விம்முகிறது இதயம்

சுரக்காமல்
மார்க் கட்டிக் கொள்கிறது
காமம்

ஜன்னல் வழி
மென்காற்றுப் பட்டு
மௌனத் துணையாக
சுழல்கிற
மின்விசிறி இழைப் போல்
அசைகிறது

உன் மீதான காதல்..

****

காலடியில் நொறுங்கிக் கிடக்கும் சொற்களின் அர்த்தம்..

*
வரும் வரை
காத்திருப்பதொன்றும் சிரமமாயில்லை

போகும்போதும்
சொல்ல மறுத்துவிட்ட
சொற்களின் அர்த்தம்
காலடியில் நொறுங்கிக் கிடக்கிறது

பார்வையற்றவனின்
இரவைப் போல்
தவித்தபடி துடிக்கின்றன

உன்
மொழி தெரியாத
என் விரல்கள்..

****

இரவிலிருந்து பகல்கள் தொடர்ந்து..

*
தேவதையின் கண்கள்
களைத்து விட்டது

பூப்பதற்குரிய நம்பிக்கையை
நிராகரிக்கச் செய்கிறது
இரவிலிருந்து இந்தப் பகல்கள் தொடர்ந்து
கூம்பியபடி சினந்து நிற்கும்
இரு மொட்டுக்கள்..

கன்னம் கிள்ளுதல் சாத்தியமில்லை
என்பதாக
உதடுகள் சுழித்துக் கொள்கிறது
புன்னகைக் கோடுகள்

****

அப்படியொன்றும் பிழையாகிவிடாது..

*
எழுது விரலின்
நகக் கண் மேற்பார்வையில் தான்

உன்னைப் பற்றிய
முதல் கவிதை
மொட்டவிழ்ந்தது

அப்படியொன்றும்
பிழையாகிவிடாது
என்னும்

சின்னஞ்சிறிய சமாதானத்துடன்

****

இன்னும்..

*
விடாமல் பேசித் தவிக்கும்
இந்த
மொட்டை மாடி
இருளில்

உலர்ந்தும்
கொடியிலிருந்து
இன்னும் எடுக்கப்படாமல்
படப்படக்கிறது

மனக்கொடி சலனங்கள்..

****

கனவுசார் நதி..

*
நேற்றைய நிழல் போல்
தொடர்வாய் நாளை என
இந்த இரவைப்
புறக்கணிக்கிறது
கண்கள்

தூக்கம் சார்ந்த கனவின்
நதியில்

சிறிய அலையின் மடிப்பில்
மிதக்கிறேன் உன்னால்..

****

பொம்மையின் பிரதி..

*
பாப்பாவுக்கு விளையாட்டுக் காட்ட
வரைந்த
கட்டைவிரல் பொம்மையின்
பிரதி ஒன்றை

அறிமுகக்
கைக் குலுக்கலில்

உன்னோடு எடுத்துப் போகிறாய்

****

முடிவில்லாத இரவின் மேஜை..

*
கை மறதி என்ற
ஒன்று இல்லையென
வாதிடுகிறாய்
மொபைலில்

தெரிந்தே நீ
விட்டுச் சென்றதாக
எடுத்துக் கொள்ளத்
தூண்டுகிறது
என்
மேஜையில்
உன் டைரி

முடிவில்லாத இந்த
இரவு
முணுமுணுத்தபடி கரைகிறது
ஜன்னல் திண்டில் இளமஞ்சள் வெயில்
நுழைந்த நொடியில்

****

மற்றுமொரு உடல்..

*
ஒரு ஜோடி தோல் செருப்பு
என்
பயணத்தை சுமந்தபடி

தன்
பாதைகளோடு புதிர்களை
விட்டு வருகிறது

பாதங்களோடு உறவாடுவதில்
அதற்கு விருப்பமில்லை

இந்தப் பாதம்
மற்றும் ஒரு தோல் என்பதோடு
இந்த உடலுறவு அதற்குப்
பிடிப்பதில்லை

அது
எப்போதாவது
நினைத்துக் கொள்ளலாம்

தான்
வேறொரு உடல் மீது
போர்த்தப்பட்டிருப்பதும்
இப்போது
இன்னொரு உடலின் கீழ்
நசுங்குவது குறித்தும்

எப்போதுமே தன் பாதையோடு
புதிர்களை முணுமுணுத்து வருகிற
என் பயணமாகிப் போன

தோல் செருப்பு

வாசலோடு
துண்டித்துக் கொள்கிறது
என்னை

****

உதிரும் சந்தர்ப்பங்களுக்கான நுனி கருகுதல்..

*
ஒவ்வொரு சந்திப்புக்குப் பிறகும்
ஒன்றிரண்டு
நம்பிக்கைத் தளிர்களின் நிறம்
பழுக்கத் தொடங்குவதோடு

அவை..

உதிரும் சந்தர்ப்பங்களுக்கான
நுனி கருகுதலை
ஆதார நரம்புவரை பரப்பிய பின்..

கழன்று கொள்கிறது..

யாதொரு
பிரயத்தனமும் அவசியப்படாமல்..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ டிசம்பர் - 16 - 2010 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11963&Itemid=139

சமவெளியெங்கும் சுவர்கள்..

*
கடவுளின்
வியர்வைத் துளி தான் சாத்தான்
என்ற
விவாத இரவுக்கு பின்

என் நாவில்
அவன் உப்பு கரிக்கிறான்

மனதில் முட்களாய் முளைக்கிறான்
கனவின் படுதாவை உதறிப் பிய்க்கிறான்

என்
சமவெளியெங்கும்
சுவர்கள் எழுப்பி
அதில் தன் எச்சில் கொண்டு
வர்ணம் பூசுகிறான்..

சாத்தான் இடையறாது உழைக்கிறான்

அவன் உடலில்
பெருகும் வியர்வைத்துளியில்
கடவுள் மின்னும்போது..

வானம் இடிய சிரிக்கிறான்..

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ டிசம்பர் - 14 - 2010 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11923&Itemid=139


மௌனப் படிவம் நீட்டும் உன் நேற்றைய நிழல்..

*
எங்கோ ஒரு முறை
சாத்தியமான துரோகச் சாயலை
வர்ணம் தீட்டுகிறது இவ்விரவு..

புன்னகைகளின்
குழிக்குள்ளிருந்து வழியும் கனவுகளை
மொழிபெயர்த்துக் கற்றுக்கொள்ள
மௌனப்படிவம் நீட்டுகிறது
உன் நேற்றைய நிழல் ஒன்று..

அடுக்கி தைத்து வைத்திருக்கும்
ஞாபகங்களைப்
பிரித்துப் பதறும்
விரல்களுக்குப் புரிவதில்லை
இந்த அலமாரியின் தடுப்புகளுக்குப் பின்னே
காத்திருக்கும் தவிப்பின் வரிகள் எதுவும்..

இவைகளைக் கடந்தோ
அல்லது
கடத்தியோ நிரப்பப் போகும்
படிவத்தின் இறுதியில்
கையெழுத்து இட
உன் பெயரைத் தான் சிபாரிசு செய்கிறது

எங்கோ ஒரு முறை
சாத்தியமான துரோகச் சாயலை
வர்ணம் தீட்டும் இவ்விரவு..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ டிசம்பர் - 12 - 2010 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11909&Itemid=139

தலைக் கவிழ்ந்து...நடை தொய்ந்து..

*
நான் இங்கு இல்லை என்கிற
மறுப்புத் தகவலோடு

தலைக் கவிழ்ந்து
நடை தொய்ந்து
கிளம்பிப் போன நண்பனின்
மரணச் செய்தி..

அதிகாலை
தொலைபேசி வழியே வந்த போது..

இரவெல்லாம் அழுதிருந்தன
ஜன்னல் கண்ணாடிகள்..

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ டிசம்பர் - 1 - 2010 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11763&Itemid=139

வெளிச்ச வட்டங்கள்..

*
பறவையின்
மஞ்சள் அலகு கொத்திய
வெளிச்ச வட்டங்களை
காற்று துடைத்துக் கிடத்துகிறது
இன்னொரு நிழலில்

பிறகு
ஒற்றைக் கூவலில்
உதிர்ந்து விழுகிறது பழுத்த இலை

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ டிசம்பர் - 27 - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3805

வதைகளின் குரல்கள்..

*
ஒவ்வொரு வீட்டின் தனியறையிலும்
இரவின் வெப்பம் தணியாத
நிழல்
கொஞ்சம் மிச்சமிருக்கிறது

சொற்ப வசவு வார்த்தைகளின்
காயாத ஈரம்
ரகசியமாய்
எங்கோ ஒரு மூலையில் தேங்கிவிடுகிறது

மயிர்க் குப்பைகளை இழுத்தபடி
அலைமோதும் காற்றுக்கும்
தேவைப்படுகிறது
தனியறையில்
ஒரு
தனிமை இடம்

வதைகளின் குரல்கள்
படுக்கையில் கலைந்து கிடக்கும் போர்வையின்
மடிந்த நிழல்களில்
சுருங்கி உலர்ந்துக் கொண்டிருக்கிறது
பின்வரும் பகலின்
கண்ணீர்த் துளிகளை எண்ணி

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ டிசம்பர் - 20 - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3783

நகரத்தின்..

*
வெயில் மிருகம்
பசியோடு
நக்கிப் போகிறது

நகரத்தின்
கைப்பிடி நிழலை..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ டிசம்பர் - 13 - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3756

கடந்து போகும் சூரியன்

*
ஒரு நிறுத்தத்தில்
மரங்களுக்குக் கீழே
வெகு நேரம் காத்திருக்கிறாள்..

மேலே கடந்து போகும் சூரியன்
இலைகளின் நிழல்களை
வரைந்து போகிறது
அவள் புடவையில்..

சற்று நேரத்தில் வந்த பேருந்தில்
ஏறிப் போகிறாள்
இலைகளோடு..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ டிசம்பர் - 13 - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3756

வரவேற்பறை ஸோபாவில் புதைந்து போகுதல்..

*
காத்திருக்கச் சொல்லி
எழுந்து போகிறாய்
திரும்பி வர மறந்துவிடுவது
உன் வழக்கம்

ஆபீஸ் வரவேற்பறை ஸோபாவில் புதைந்தபடி
உன் சமீபத்திய
கவிதைத் தொகுப்பைப் பிரித்து
முதல் கவிதையை வாசிக்கத் தொடங்குகிறேன்

காத்திருக்கும்படிச் சொல்லி
எழுந்து போகிறது
உன்
கவிதையும்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ டிசம்பர் - 6 - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3738

பிரியத்தின் அவநம்பிக்கை

*
என் மீது இறங்கும்
உன் பிரியத்தின் அவநம்பிக்கையை
உனக்கே பரிசளித்துவிட
முடிவெடுக்கும்போது

அதைப்
பிரித்துக் காட்டும்படி கெஞ்சுகிறாய்
குறைந்தபட்சம்
ஒரு
அவமானமாவது மிஞ்சும்
என்றபடி..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ டிசம்பர் - 6 - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3738

கண் திறக்கும் தருணம்..

*
மௌனக்கோட்டில்
புள்ளிகள் கொத்துகிறான்
ஒருவன்

சொற்களின் கூர் பட்டுத்
தெறிக்கின்றன பிசிறுகள்

கண் திறக்கும் தருணத்தில்
உடைந்து விழுகிறது
மௌனம்

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( டிசம்பர் - 27 - 2010 )

தேனீர் விடுதியின் காலி இருக்கைகள்..

*
இந்த தேனீர் விடுதியின்
காலி இருக்கைகள்
என்னோடு பேசிக் கொண்டிருந்தன
நீ
வரும் வரை

மேஜை மீது வட்டங்களாக
வரைந்துக் கொண்டிருந்த நீர்த் துளி
மின் விசிறிக் காற்றில்
விளிம்பு அதிரத் துடித்துக் கொண்டிருந்தது

புன்னகைக் குழைவோடு
தொடங்கிய நம் உரையாடல்
அந்தரத்தில் அறுபட்டு
நீ
வெளியேறிய வேகம்
கண்டு
இன்னும் நடுங்கிக் கொண்டிருக்கிறது
எதிர் நாற்காலி

****

நன்றி : 'திண்ணை' இணைய இதழ் ( டிசம்பர் - 19 - 2010 )

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31012191&format=html

ஒரு பாக்டீரியாவின் கனவு..

*
மழை ஓய்ந்து
பல நாட்கள் தேங்கிய
குட்டைக்குள்
ஒரு
பாக்டீரியாவின்
வயிற்றுக்குள்
குடி புகுந்தேன்

மந்திரி வருகைக்காக
அடிக்கப்பட்ட
கொசு மருந்தின்
வெண்புகையில்

சுழலத் தொடங்கியது
வாழ்வு பற்றிய
ஒரு
பெருங்கனவு..

****

நன்றி : 'திண்ணை' இணைய இதழ் ( டிசம்பர் - 12 - 2010 )

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31012121&format=html

64 துண்டுகள்..

*
அவள் டீ குடித்துக் கொண்டிருக்கிறாள்
கையில் ஊசலாடும்
அகன்ற அட்டைப் பையில்
ஸ்கேன் பிலிம்கள்
ஒன்றையொன்று நெருக்கிக் காத்திருக்கிறது

லாரி மோதிய சைக்கிளிலிருந்து
தூக்கியெறியப்பட்ட
கணவனின் மூளையை
64 துண்டுகளாக படம்பிடித்து

அவள் தலையெழுத்தை
பிரிண்ட் அவுட் எடுத்து
தந்திருக்கிறார்கள்

நெடுநேரக் காத்திருப்பின்
அயர்ச்சியில்
அவள் டீ குடித்துக் கொண்டிருக்கிறாள்

இன்னும்
சற்று நேரத்தில்
டாக்டர் வந்து விடுவார்

****

நன்றி : 'திண்ணை' இணைய இதழ் ( டிசம்பர் - 5 - 2010 )

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31012051&format=html

திங்கள், டிசம்பர் 13, 2010

இடுப்புயர கரடி பொம்மைகள்..

*

பிறந்த நாள் பரிசாக
குழந்தைகளுக்கு வந்த
இடுப்புயர கரடி பொம்மைகள்
'அழுக்காகி விடும்..!' - என்ற அதட்டலோடு

விளையாட்டு மறுக்கப்பட்டு
பாலிதீன் கவர் சுற்றி
உயரமான ஷோ- கேஸில்
தஞ்சமாகிறது

கால ஓட்டத்தில்
உருமாறும் விளையாட்டுகளோடு
வளர்ந்துவிடும் பிள்ளைகள்

இடம்பற்றாக் குறையுடன்
பைக்கொள்ளா புத்தகங்களோடு
அண்ணாந்து பார்த்துக் கேட்கின்றனர்

'ஏன்ம்மா...குப்பை மாதிரி
இன்னும் பொம்மையெல்லாம்
அடைச்சி வச்சிருக்க..?
காலி பண்ணிக் குடு
நாங்க புக்ஸ் அடுக்கனும்..'

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ டிசம்பர் - 28 - 2010 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=12087&Itemid=139

செவ்வாய், நவம்பர் 30, 2010

சொற்ப வெப்பத் தீண்டல்..

*
தனித்து எரியும்
ஒற்றை பல்பைச் சுற்றி
அடத்தோடு
மொய்த்துக் கொண்டிருக்கிறது
மழைத் தும்பி

இரவின் வழித் தப்பி
பணியின் ஈரத்தில் ஏமாந்து
சொற்ப வெப்பத் தீண்டலில்
தொடர்ந்து ரீங்கரித்து
கண்ணாடிச் சருகு இறகின் அழைப்போடு

எங்கிருந்தோ வால் துடிக்க
நாவை சுழற்றுகிறது பல்லியின் நிழல்

****

ஞாயிறு, நவம்பர் 28, 2010

அனைத்தையும்..

*
காற்றில் குரல் கிழிக்கிறாள்
விரலால் யுகம் எழுதுகிறாள்

அளக்காமல் வைக்கும்
ஒவ்வொரு அடியிலும்
குலுங்குகிறது நிலம்

கொலுசொலியில்
அதிர்கிறது காண்டீபம்

மழலைச் சிரிப்பில்
அனைத்தையும் கலைத்துவிடுகிறாள்
அது ஒரு நொடி..

****

காட்சி நினைவுத் திரள்..

*
பாரபட்சங்கள் இல்லாத கனவுகளின் நிறம்
சாம்பல் தோய்ந்து நெளிகிறது

கண் கூசும் ஒளிப் பாய்ச்சலில்
உலர்வதான பாவனையில்
ஈரம் காய்ந்து அசைவுகளை மூடிக் கொள்ளும்
இமைகளின் திரட்சி
ஒரு காட்சியை நினைவுத் திரளில்
அடுக்கித் தொகுக்கிறது

பின்வரும் நாட்களின் தேவைக் கருதி

விழிப்பில் நசுங்கும் எண்ணங்களின் விலா எலும்பில்
உறுத்தலோடு விரல் நிமிண்டும் நிமிடங்கள்
பிறந்தும் இறந்துமாக
எழுந்து அமரும் படுக்கையில் கிடத்தப்படுகிறது

கனவின் துர்மரணத்தை நொந்தபடி..

****

வெள்ளி, நவம்பர் 26, 2010

வெயில் ஒழுகும் ஓசை..

*
கிளைகளில் பூசிய
வெயில் ஒழுகும்
மதிய இடைவெளியில்

பூட்டிய பிறகான
யாருமற்ற பூங்காவில்

ஓசையற்று
உதிர்கிறது
பழுப்பு நிற இலைகள்

காய்ந்த சருகுகளூடே
ஓடித் திரியும் அணில்கள்
ஒரு கணம் நின்று
பின்
மரத்திலேறுகின்றன..

****

தூது..

*
நம் விருந்தினர்களுக்காக
பால்கனியில்
தூது சொல்ல வரும்
காகத்தின் அலகில்

மரணத்தின் மாம்ச வாடை
மிச்சமாகிறது

பசிப் போக்கிய
எலியின் குடல் சரிவைப் போல்

****

தெருப் புழுதிகள்..

*
தயங்கியபடி
கழற்றப்படும் செருப்பு

தெருப் புழுதிகளை உதறும் மனமற்று
தன்னை விடுத்து
உள்ளே நுழையும் மனிதனின்

பணிவையோ
குழைவையோ

வேடிக்கைப் பார்க்கிறது
யாதொரு சலனமற்று..

****

ஏதோ ஒன்று..

*
பிரிக்கப்படாத
காகித உறைக்குள்

ஒரு
மனக்கசப்போ
ஒரு
வாக்குவாதமோ
ஒரு
குறை சுட்டிக் காட்டப்படுதலோ
ஓர்
அச்சமோ
ஒரு
துன்புறுத்தலோ
ஒரு
கவனப் பிசகான
உறவு முறிப்போ

ஏதோ ஒன்று
தயக்கத்தோடு காத்திருக்கிறது

****

நிலம் நோக்கி..

*
ஏக்கத்தோடு
வயிறு சரிய உட்காரும்
பூனையின் கண்கள்

தாழ்ந்து நிலம் நோக்கி
விடும் பெருமூச்சில்

குட்டி குட்டித் தலைகள்
உருள்கின்றன
அங்குமிங்கும்

****

அசையும் இரவு

*
பின்னிரவின்
மின்விசிறிக் காற்றில்
சுவரைக் கீறி அசையும்
மாதக் காலண்டர்

பொறுமையாக
ஆடிக் கொண்டிருக்கிறது
விடியலில்
நிற்கப் போகும் இரவுக்காக

****

சிருஷ்டி

*
கொடி சுற்றிக் கொள்ளும் சொற்கள்
நினப் பெருக்கோடு
குடம் உடைந்து
மூச்சுத் திணறுகின்றன
எப்படியாவது
இந்த உலகைக் கண்டுவிட

****

இதழ் பூட்டு..

*
தளிர் இலையின்
சிவந்த கூர்நுனியில்
இதழ்
பூட்டுகிறாய்

நரம்புகள் மொத்தமும்
திறந்துக் கொள்ள

புன்னகையொன்று
சாவியாகிறது

****

வார்த்தைகளின் கிளை..

*
ஆழமற்று நீந்தும் நினைவில்
ஒரு மென் சுழி உருவாகி
அழைக்கிறது

மனதின் கரையோரம்
ஓங்கி வளர்ந்த வார்த்தைகளின்
கிளையில்

பழுத்துத் தொங்கும்
ஒற்றை
இலையை

****

நிழலை மட்டும் விட்டுப் போகிறாய்..

*
சின்னஞ்சிறு புள்ளியில்
புன்னகை ஒன்று
குவிந்து கிடந்தது

மெல்ல நடந்து
அருகே வருகிறாய்
குனிந்து
எடுத்துக் கொள்கிறாய்

உன்
நிழலை மட்டும்
விட்டுப் போகிறாய்

பசியோடு விழுங்கத்
தொடங்குகிறது
இரவு

தெரு விளக்குகள்
மினுக்கி மினுக்கி பூக்கின்றன
ஆரஞ்சு நிற வர்ணம் குழைந்து
பாதையெங்கும் கசிகிறது

இனி நீ வரப்போவதில்லை
என்றபடி
அவிழ்ந்து கீழிறங்குகிறது
ஒரு
கனத்த மழைத் துளி

****

நத்தையின் நிழல்..

*
கைவிடப் படும்
ஒரு தருணத்தின் ஓரப் பிசிறுகள்
கொஞ்சம் கூர்மையாகிறது

அது ஒரு
பூ வேலைப்பாடு அல்ல
பிடித்தமான கைக்குட்டையில்
வரைந்து வைத்துக் கொள்ள

வலி..

வானம் கிழிந்து மின்னல் அறுந்து
பூமி மீது பற்றி எரியும்
மரக் கிளையில்
ஊர்ந்து கடக்கும் நத்தையின் நிழல்
அந்தக் கூர்மை

****

வாக்குறுதியின் நிழல்

*
அது
ஒரு வெளியேற்றம்

ஓயாத பேச்சிலிருந்து
மௌனத்துக்கு

வாக்குறுதியின் நிழலிருந்து
பொய்யின் வெளிச்சத்துக்கு

மரணத்தின் மழையிலிருந்து
வாழ்தலின் கூரைக்கு

****

தீண்டல்..

*
நீங்குதல் குறித்து
வாதிக்கின்றன நாவுகள்

தீயின் தீண்டலில்
சாம்பலாகிறது
உரையாடல்

ஒழுகியோடும்
நினப் பிசுபிசுப்பில்

பெயர் கருகி சாகிறது
மாமிசம்

****

இன்னும் கொஞ்சம் காதல்..

*
அப்படிச் சொல்ல வேண்டாம்
நான் அதை
நம்பப் போவதில்லை

தழலென எரிந்து
மிச்சமாகும்
சாம்பலில் உயிர்த்தெழ

கைவசமிருக்கிறது
இன்னும் கொஞ்சம் காதல்

எனவே..

அப்படிச் சொல்ல வேண்டாம்
நான் மட்டுமல்ல
நீங்களும்
அதை நம்பப் போவதில்லை

****

வானெங்கும் மலர்கள் உதிரத் தொடங்கிய கணம்..

*
ஒரு
கனவை வடிக்கட்டுவதற்கு
இந்த இரவின்
மறு நுனியை இழுத்துப் பிடிக்க
உன் ஒருத்தியை மட்டுமே
அழைத்திருந்தேன்

நீயுன்
பால்கனி தொட்டியில் பூப்பதற்கு
குளிர் மேவும் இருளில்
குவிந்து காத்துக் கிடக்கிறாய்

பிறகு..

என் வானெங்கும்
மலர்கள் உதிரத் தொடங்கிய
கணம் முதல்
இந்தத் தனிமைப்
படுக்கையறை முழுதும்

மெல்லப் பரவுகிறது
உன்
முத்த வாசம்..

****

திங்கள், நவம்பர் 22, 2010

பாதையோர நீள் இருக்கை..

*
சார்புகளற்று நீளும்
இந்தச் சாலையில்

வெகுதூரப் பயணக் களைப்போடு
இளைப்பாறத் தோன்றும்
ஒரு புள்ளியில்

ஓய்வெடுக்க விரும்பும்
பாதையோர
நீள் இருக்கையை
விவாத மேடையாக்கும்
பொருட்டு

இடம் பிடித்து
காத்திருக்கிறீர்கள்..

****

பட்டறை

*
என் எழுது விரலின்
நகத்தை
உங்கள் பட்டறையில் சானைப் பிடித்த
வார்த்தை இடுக்கிக் கொண்டு
பிய்த்து எடுத்தீர்கள்

இனி கவிதைகளைத்
தொட்டுத் திருப்புவது சாத்தியமில்லை

இந்த
சித்திரவதையை
எப்போது வரைந்தீர்கள்

****

பருகுவதற்குரிய வெற்றிடங்கள்

*
ஒரு காலி தண்ணீர் பாட்டில்
காத்திருக்கிறது
மீண்டும் நிரப்பப்படுவதற்கு

பெருகும் நிராசைகளை
குமிழ் விட்டு
ததும்பும் ஏக்கங்களோடு

பகல்களை குளிரூட்டவும்
சில்லிடும் தனிமை இரவுகளை
வெப்பமேற்றவும்

பருகுவதற்குரிய
வெற்றிடங்களை
நிரப்புவதற்கு
காத்திருக்கிறது

எப்போதுமே
ஒரு
காலி மது பாட்டிலும்

****

வாக்குறுதியின் அபத்தம்

*
அத்தனை நிச்சயமாக
உனக்கு சொல்ல முடிந்ததில்லை
இந்த வாக்குறுதியின்
அபத்தம் பற்றி

உனக்கொரு மெயில்
அனுப்பவே திட்டமிட்டிருந்தேன்
நீ
எப்போதோ கைவிட்டு விட்ட
உன் பழைய
மின்னஞ்சல் முகவரிக்கு

****

ஆலங்கட்டி..

*
தொலைதூர
செல்போன் அழைப்பின்
வழியே

பிசுபிசுக்கும்
உன் கண்ணீர் குரலாய்
ஆலங்கட்டிக் கொள்கிறது

இந்த உரையாடல்..

****

பொத்தல்..

*
நீயுன் சகவாசத்தை
விட்டொழிக்க வேண்டும்

நான் டீ குடிக்கப்
பழகிவிட்ட பகல் பொழுதுகளை
உன் சிகரெட் கொண்டு
பொசுக்குகிறாய்

ஆடைக் கட்டிக் கொள்ளும்
நம் உரையாடல்களில்
கருகும் வாசனையுடன்
விழும் பொத்தல்களை
நான்
விரும்பவில்லை

****

மெல்ல..மெல்ல..

*
ஒரு
தற்கொலைக்கு முன்பு
எழுதப்படும் குறிப்பு

மெல்ல மெல்ல
தன்னைத் தானே
எழுதிக் கொள்கிறது

தன் இறுதி வடிவத்தின்
கடைசிப் புள்ளியை
தேர்ந்தெடுக்கும் பக்குவத்தை
அது
தொடும்போது

எல்லாம் முடிந்து விடுகிறது

****

அப்படியே விடு..

*
காதறுந்த பை நிறைய
பொய்க் கொண்டு
வருகிறாய்

பிடி நழுவ
சிதற விடுகிறாய்
என் அறையெங்கும்

பொறுக்காதே அப்படியே விடு..

கதவை
அதிராமல் சார்த்தி விட்டுப் போ..!

****

சக்கையாகும் பசுங் கானகம்..

*
மத யானையின்
துதிக் கை ஒன்று
துலாவுகிறது மரணத்தை..

அகப்பட்டதும்
விசிறியடிக்கிறது

சக்கையாகிப் பெருகும்
பசுங் கானகத்தை
அங்குசத்தில் ஏன் செருகினாய்
பாகா..!

****

இன்னுமோர் உரையாடல்..

*
நம்
உரையாடல்
தொலைந்துப் போய்விட்டதாக
வந்து நிற்கிறாய்

இன்னுமோர்
உரையாடலுக்கு
இங்கே அவகாசம் இல்லை

தொலைந்ததைக் கண்டு பிடிக்க
நீயும் தொலைந்து போ..!

****

வட்டமென வியர்த்திருக்கிறது உன் மழை..

*
நீ
கன்னஞ்சுழிய ஏறிப் போன
பேருந்தின்
ஜன்னல் கண்ணாடியெங்கும்
பொட்டுப் பொட்டாய்
வியர்த்திருக்கிறது
மழைக்கும்

உன் வெட்கத்தை
வட்டமென ஒளிர்கிறது
எல்லோரும் கடக்கக் காத்திருக்கும்
இந்த சிக்னல்

***

மழைக் கப்பல்..

*
மழைச் சகதிக்குள் விரையும்
சிறுமியின்
கப்பலை நிறுத்திவிட

மூழ்குகிறது

பாதத்தில் பழசாகிவிட்ட
செருப்பொன்று

****

உன்னைச் சார்ந்திருத்தல்..

*
காத்திருந்த வரையில்
எதுவும்
தோன்றவில்லை

உன்னைச் சார்ந்திருத்தல்
எனக்கு
ஒரு குடையல்ல

உன் பொழிதலில்
எல்லாம் நிகழ்கிறது

யாதொரு சமரசமும்
முளைவிடும் பொருட்டு
காத்திருப்பதில்லை உனக்காக

காத்திருந்த வரையில்
எதுவும்
தோன்றவில்லை


****

இரவின் ரகசிய கூடுகள்..

*
ஜன்னல் கம்பிகளை
இந்த நிலா வெளிச்சம்
ஏன்
கோடுகளாக்குகிறது..

முருங்கை மரத்தின்
இலை நிழல்களும் சேர்ந்து
கும்மாளமடிக்கிறது

காற்று உலுக்கும் தன்
சிறு மஞ்சள் மலர்களைப் பற்றி
என் ஜன்னல் திண்டில்
அவை தூவும் புகார்களை

விடியலில் வரும் வாடிக்கை அணில்கள்
கவர்ந்து போகின்றன
தம் ரகசிய கூடுகளுக்கு

கிளையில் அமர்ந்து
இந்த ஜன்னல் வழியே
என்
அறை சுவற்றின்
கடிகார நொடி முள்ளின் நகர்தலை
பின் ஜாமம் வரை வேடிக்கைப் பார்த்து விட்டு

பறந்து விடுகிறது
ஓர் ஆந்தை

என்
ஜன்னல் கம்பிகளை
இந்த நிலா வெளிச்சம்
ஏன்
கோடுகளாக்குகிறது..!?

****

அவர்கள்..

*
அதன் பிறகு அவர்கள் வரவேயில்லை

ஒரு மௌனத்தை உடைத்து
நிழலை வெயிலில் ஊற்றிய பிறகு

ஒரு கோரிக்கையை
கிழித்துக் குப்பையில் எறிந்தபிறகு

ஒரு புன்னகையின்
அகால மரணத்துக்குரிய
ஈமக் காரியங்களுக்கு பிறகு

கனவின் கூச்சல்களை
மொழிபெயர்த்து வாசித்துக் காட்டிய
மனப் பிறழ்வுக்கு பிறகு

ஒவ்வொன்றின் உதிர்விலும்
தடயமற்று போவதிலும்
இருந்த அவர்கள்

அதன் பிறகு
வரவேயில்லை..

****

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் [ நவம்பர் - 28 - 2010 ]

http://navinavirutcham.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B

தவறவிட்ட தருணங்களின் மறு வருகை..

*
உன் தனிப்பார்வைக்கு
அனுப்பப்படும்
துயரங்கள் மொத்தமும்
என்னுடையவை அல்ல

நீ கேட்டுப் பழகிய சாயலை
அவை ஒத்திருக்கின்றன

அது
தற்செயல் அல்ல

கனவு கலைந்து எழும்
ஒரு தனிமை இரவின்
நிழலைப் போல்
உன் இருப்போடு இணைந்தவை

நீ தவறவிட்ட
தருணங்களின் மறு வருகை

உன் சூழ்ச்சிகளின் ரகசியங்களை
ஒரு
வாக்குமூலம் போல
உன்னிடம் ஒப்பித்துக் காட்ட
உனக்காக
அவை காத்திருக்கின்றன

மொத்தத்தையும்
ஒரே மூச்சில்
ஒரே இரவில் படித்துவிட வேண்டும்
என்றெந்த நிபந்தனையும்
இல்லை

பிரியப்பட்டால்
அவைகளை நீ பிரிக்காமல்
உன்
மேஜையின்
ஓர் ஓரத்தில் அப்படியே
விட்டும் விடலாம்

****

அது என்ற ஒன்று..

*
ஒவ்வொரு துரிதக் கணத்திலும்
நீங்கள் ஒன்றைத் தவறவிடுவீர்கள்
அது
உங்களின் ஒரு பகுதி என்பதை
நம்ப மறுப்பீர்கள்

அதை
ஏற்றுக் கொள்வதில் இருக்கும்
அசௌகரியத்தை
வாதிட்டு வென்று விடுவீர்கள்

பாதுகாப்பைக் கோரும்
ஒரு அபலையின் நடுங்கும் விரல்களைப் போல்
அது
உங்கள் அறைக்குள் ஓர் இடம் தேடி
அலைவதை
கவனிக்க மறந்து விடுவீர்கள்

உங்கள் துயரத்தின் பாடலை
அது ரகசியமாய் சேமித்து வைத்திருக்கும்

உங்கள் தோல்வியின் குறிப்புகளை
அது உங்கள் முதுகுக்குப் பின்புறமிருந்து
எழுதிக் கொண்டிருக்கும்

உங்கள் மௌனங்களுக்குள் நீங்கள் கேட்டிராத
முனகல்களை
இழைப் பிரித்துக் கோர்த்து வைத்திருக்கும்

அது ஒரு
சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும்
உங்களை நோக்கி ஒரு பிரகடனத்துக்காக
உங்கள் மீதான ஒரு புகாருக்காக
நீங்கள் தான் உங்களின் அவமானம்
என்பதை உரைப்பதற்காக

அது
காத்துக் கொண்டிருக்கும்

ஒவ்வொரு துரிதக் கணத்திலும்
நீங்கள் தவற விடும்
அந்த ஒன்று
உங்களின் ஒரு பகுதி என்பதை
இப்போதும்
நம்ப மறுப்பீர்கள்..!

*****

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் [ நவம்பர் - 21 - 2010 ]

http://navinavirutcham.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B

என்னொருவனைத் தவிர..

*
எருதின் பலத்து வீசும்
பெருமூச்சில்
சிதறிப் பறக்கிறது
மனப்புழுதி

மரணக் கடிதம்
கூரியரில் வந்தபோது
வழியனுப்பி வைக்க பரபரப்பாகிறது
சுற்றமும் நட்பும்

என்னொருவனைத் தவிர
எல்லோராலும் வாசிக்கப்பட்ட நான்
ஹாலில் கிடத்தப்படுகிறேன்

பலத்து வெளியேறிய
ஒரு
பெருமூச்சு மட்டுமே
நினைவிலிருக்கிறது

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ நவம்பர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3721

சிரிப்பதைப் பற்றிப் பேசத் தொடங்கும் மனிதன்

*
சிரிப்பதைப் பற்றி பேசத் தொடங்கும் மனிதனோடு
அதன் அடுக்குகள் சரிகின்றன

பளபளக்கும் விளிம்புகளோடு
பிளந்த உதடுகளின் பின்னிருந்து
மேலும் கரைப்படுகிறது காவி நிறப் பொய்கள்

வெளிர் மஞ்சள் பூஞ்சையோடு
வரிசைக் கட்டி நிற்கும் பற்கள்
சிரிப்புக்குரிய சந்தர்ப்பங்களைத்
தன்
இடுக்குகளில் மர்மமாய்
செருகி வைத்திருப்பதாக
குறிப்புகளை
நாக்கில் ஏற்றுகின்றன

சிரிப்பதைப் பற்றி பேசத் தொடங்கும்
மனிதன்

ஒரு அசந்தர்ப்பத்தை
ஒரு அவமானத்தை
ஒரு கையாலாகாத்தனத்தை
ஒரு மோசமான சூழ்நிலையில் தலைத் தூக்கும்
அசௌகரியத்தை
ஒரு இன்னலை

அல்லது

புரிந்துகொள்ள முடியாத
ஒரு மௌனத்தை
ஒரு மாபெரும் இறைஞ்சுதலை
கேள்விக்குள்ளாக்குவதிலிருந்து தொடங்குகிறான்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ நவம்பர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3703

துரோகத்தின் மணல்

*
நுண்ணிய கூர் முனையிலிருந்து
உடைந்து விழுகிறது
துரோகத்தின் மணல்

மனம் நகரும் பாதையெங்கும்
பெருகுகிறது

ஆழப் புதையச் செய்கிறது
எழுதி வைத்த
நினைவின் குறிப்புகளை

வானமற்ற வெளியின்
பரந்த மைதானத்தில்
தனித்து நின்று
கூக்குரலிட்டு அழ நேரும் தருணத்தை
திரளென வழியச் செய்கிறது
மௌனத்தின் கன்னத்தில்

துரோகத்தின் மணல்
பாவங்களை உருட்டும் விரல்களுக்கிடையே
உறுத்துகிறது
பிரார்த்தனையொன்றை முணுமுணுக்கும்
உதடுகளின் நிமிடங்களில்

நயம்படச் சொல்லும் பொய்களில்
குளிர்ந்து கிடக்கும் நெருப்புத் துண்டைப் போல்
நுண்ணிய கூர் முனையிலிருந்து
உடைந்து விழ
அமைதியாகக் காத்திருக்கிறது
ஒரு
துரோகத்தின் மணல்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ நவம்பர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3654

சின்னஞ்சிறிய ஊற்றுக் கண்

*
உன் வார்த்தைகளின் ரசவாதம்
என்னை
உன் கனவுகளின் சதுப்பில்
கொஞ்சங்கொஞ்சமாக
ஊற்றிக் கொண்டிருக்கிறது

நீயுன் வலுவற்ற வார்த்தைகளை
என்னை நோக்கி நீட்டி
பற்றிக் கொள்ளும்படி செய்கிறாய்

ஒரு வார்த்தைக்கும் மறு வார்த்தைக்கும்
இடையில் நீ வெட்டி வைக்கும் பள்ளத்தைக்
கடந்து வர ஒரு பயணம் தேவையாகிறது

அது
உன் பாதங்களின் வழியே என்னை செலுத்தி
என் திசைகளை என்னிடமிருந்து
பிடுங்கி தொலைவில் எறிகிறது

உன் கவிதையின்
சின்னஞ்சிறிய ஊற்றுக் கண்ணுக்குள்
நுழையும் முன்பு தெரிவதில்லை
கடலொன்று பேரமைதியோடு
உள்ளே மிதப்பது

நீ
என்னை உன் மனவெளியெங்கும்
முதுகில் சுமந்து
நடந்து நடந்து
பட்டென்று உதிர்த்து விட்டுப் போகிறாய்

அது
தகிக்கும் வார்த்தைகளின் பாலைவனமாக
வரிகளை
நிழல் நிழலாக வரைந்து வைத்திருக்கிறது

அனைத்தும் நீயாக
நான் மட்டும் இன்றும் தனித்து நிற்கிறேன்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ நவம்பர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3627

நிறமிழக்கும் பொழுதில் எல்லா இரவுகளும்..

*
மனம்
மெல்ல நகர்கிறது
அவமானத்தின் முள் துடித்து

ஒரு எளிய நம்பிக்கை
நிறமிழக்கும் பொழுதில்
எல்லா இரவுகளும்
தம் புறவாசலில்
சிறுநீர் ஓடையை அனுமதிக்கின்றன

கொஞ்சமேனும் பற்றிக் கொள்ளும்
யாதொரு பிடிப்பிலும்
கல்லெறியும் சாதுர்ய புன்னகை
நறுவிசாய் உடைத்துப் போகிறது
ஒட்டுமொத்த சொற்களையும்

தன் முறைக்கென நிற்கும்
நீண்ட வரிசையில்
கை நழுவிப் போகிறது
இதுவரை
சொல்லப்பட்டிருந்த
எல்லாக் கட்டுமானங்களும்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ நவம்பர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3604

புன்னகை இழந்து..நாட்கள் அனலாடும் தருணம்..

*
ஒரு முறையாவது சொல்லிப் போ
தீயில் எரியும் என் கனவின் கதவில்
உன் இலக்கம் எத்தனை..

வானம் கிழிந்து
நிலவு வழிந்தத் தடத்தில் உன் காலடிச் சுவடு எது..

புன்னகை இழந்து..நாட்கள் அனலாடும் தருணம்
சிறகு உதிரப் பறத்தல்
வாய்ப்பதில்லை

எழுதுகிற குறிப்பின் நிழலில் மறைகிறது
கால் புள்ளி - அரைப் புள்ளி -
மற்றுமொரு முற்றுப்புள்ளி

நீயற்றுப் போகும் இடைவெளியில்
எல்லாம் எரிகிறது..

சொல்லிப் போ
உன் இலக்கம் எத்தனை..!

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( நவம்பர் - 25 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11644&Itemid=139

விஷம் துளிர்க்கும் காம்பு..

*
இருள் கிழிய
சிவந்த டிராகனின் முதுகுச் செதில்
நெளிகிறது
முதுகில்

பச்சைப் பாம்பு விழுங்க விம்மும்
கனியின் விஷம் துளிர்க்கும்
காம்பில்

முடிவுற்று நீளும்
முதல் பாவம்
காமத் தோட்டத்து
கறுத்தப் புதர்களில் சுருள்கிறது

முனையெது நுனியெது..

குழம்பும் களிப்பை
சக்கையாக்கி செரிக்கிறது
கண்கொத்தி இரவு..

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( நவம்பர் - 19 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11489&Itemid=139

இலையொன்று உதிர்ந்து பூமி தொடும் அவகாசம்..

*
அசலான ஒரு நம்பிக்கைக்குள்
மிகு ஆறுதலாக
ஒரு
ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

பிரிவின் துயரை
நகம் கடித்துத் துப்பிவிட
முடிகிறது உன்னால்

இலையொன்று உதிர்ந்து
பூமி தொடும் அவகாசத்தில்
முடிவுகள் எடுக்கிறாய்

மென்மை விரிசலில்
உடையக் காத்திருப்பது கண்ணாடியல்ல
இது நெடுக
இரவுகளில்
நாம் பரிமாறிக்கொண்ட முத்தங்கள்

கோபத்தில் துடிக்கும் உன் உதடுகளில்
எனக்காக
நீ வாசித்துக் காட்டிய
கவிதைகளின் ஈரம்
கொஞ்சமாவது மிச்சமிருக்கும்

ஆனால்
அடம் பிடிக்கிறாய்

என்
அசலான நம்பிக்கைக்குள்
மிகு ஆறுதலாக
ஒரு
ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

ஒரு வருடமாவது
சேர்ந்து வாழ வேண்டுமென..

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( நவம்பர் - 17 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11432&Itemid=139

வியாழன், நவம்பர் 18, 2010

கண் திறக்கும் தருணம்

*
மௌனக்கோட்டில்
புள்ளிகள் கொத்துகிறான்
ஒருவன்

சொற்களின் கூர் பட்டுத்
தெறிக்கின்றன பிசிறுகள்

கண் திறக்கும் தருணத்தில்
உடைந்து விழுகிறது
கவிதை

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( நவம்பர் - 16 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11409&Itemid=139

நீலப் பூக்களின் மகரந்தத் துகள்..

*

அகப்பட்டுக் கொள்ளும்
தடயங்களோடு தான்
உனது எல்லைகளைக் கடக்கிறேன்

நீலம் சொரியும் பூக்களின்
மகரந்தத் துகள்களின்
மஞ்சள் பூசி
வெட்கம் சிவக்கவே
உனது வேர்களில் ஈரமாகிறேன்

என்னைப் பறிக்க நீளும்
விரல் நகங்களின் வெண்ணிறக் கோடுகளில்
நுணுக்கமாக எழுதி வை
என்
பிரியத்தை..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( நவம்பர் - 15 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11369&Itemid=139

நட்சத்திரங்கள்..

*
சோடியம் வேப்பர் விளக்கிலிருந்து
மஞ்சள் ஒளிரும்
ட்ராபிக் நேர இரவுச் சாலை..

முன் செல்லும்
பைக் பில்லியனில் உட்கார்ந்திருக்கும்
அம்மாவின் மடியிலிருந்து
குட்டி பாப்பா..

தன்
ஒரு கை மட்டும் வான் நோக்கி நீட்டி
ஐந்து விரல்களை
அகல விரித்து விரித்து மூடி..

நட்சத்திரங்களுக்குக் காட்டுகிறாள்

தன்
ஒற்றை நட்சத்திரம்
இதுவென..!

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( நவம்பர் - 14 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11349&Itemid=139

பார்வையாளர் இல்லாத மேடையின் திரைச்சீலை..

*
சொல்லிப் பிரியும் சொல்லில்
திரித்துக் கட்டப்படுகிறது
நைந்த பிரியத்தின் இழைகள்

தனித்த சாலையின்
நினைவுச் சில்லிடல்
இரவின் குளிரை அனுப்பிவைக்கிறது
வாசல் வரை

அகாலத்தின் மௌனத்தில்
மனம் முணுமுணுக்கும்
மொழியில்
பார்வையாளர் இல்லாத மேடையின்
திரைச்சீலையாக
மடிந்து மடிந்து கீழிறங்குகிறது
சொல்லிப் பிரிந்த
சொல்லின் பிரியம்

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( நவம்பர் - 7 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11275&Itemid=139

மெட்ரோ..

*
கானல் நீரை
அரைத்துக் கருகி கசிகிறது
டயரின் வாசம் குப்பென்று

அவசரமாய் போட்ட பிரேக்கை மீறி
ஒருவன்
மண்டை உடைந்தும்
இன்னொருவன்
வயிறு சிதைந்தும் உயிரிழந்தான்..

பீக்-அவர் டிராபிக் ஸ்தம்பித்த
சில நிமிடங்கள்

விபத்துக்குள்ளான வாகனங்கள் ஓரங்கட்டப்பட்டது
பிணங்கள் அப்புறப்படுத்தப்பட்டன

தார்ச் சாலையோடு உருகிய
இரண்டு ரத்தங்களை
தாகத்தோடு உறிஞ்சும்
வெயிலுக்கு போட்டியாக..

மேலும் டயர்கள்
மேலும் பல டயர்கள்

பச்சை விளக்கும் ஹாரன் ஒலியும்
கூடவே
மேலும் பல டயர்கள்..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( நவம்பர் - 2 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11227&Itemid=139

எதிர்ப்படும் கையகல நீர்மை..

*
வார்த்தைகளின் பிரதேசத்தில்
கால் ஓய நடந்த பின்னும்
சிக்கவில்லை
ஓர் எழுத்தும்

எதிர்ப்பட்ட
வாக்கியக் குட்டையின்
கையகல நீர்மைக்குள்

நெடுநாளாய் எவர் வரவுமற்று
குழப்பத்துடன்
நீந்திக் கொண்டிருக்கிறது

ஒரு
மௌன மீன் குஞ்சு..!

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( நவம்பர் - 28 - 2010 )

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31011283&format=html

வினோத மலரொன்றின் இதழ் நுனி..

*
வினோத மலரொன்றின்
இதழ் நுனிப் பற்றி ஊசலாடுகிறான்

மணற் புயல் போல்
பூவினுள்ளிருந்து பலமாய் வீசுகிறது
மகரந்தத் துகள்

மஞ்சள் அடர்ந்து
முகத்தில் படர
மூர்ச்சையாகி மண்ணில் குழைகிறான்

இன்னொரு வசந்தத்தில்
செடியின்
மற்றுமோர் தளிர் கிளையில்
பெயரற்ற வினோத மலராய்ப் பூக்கிறான்

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( நவம்பர் - 21 - 2010 )

http://www.thinnai.com/?module=displaystory&story_id=310112114&format=html

பள்ளங்களில் தேங்கும் உரையாடல்..

*
நிர்ப்பந்தித்து உருள்கிறது
வார்த்தைகளுக்கான சரிவில்
மொழியின் திரள்

சிறுப் பள்ளங்களில் கொஞ்சமேனும்
தேங்குகிறது
நம் உரையாடல்

ஒரு சில சொட்டுகளில்
வடிந்தும் விடுகிறது
நேற்றைய இரவு

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( நவம்பர் - 14 - 2010 )

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31011145&format=html

மீட்சியற்ற வனத்தின் கானல்

*
எங்கிருந்தாவது என்னைத் தொடங்கு
என்பதாகத் தான் எனது பிரார்த்தனை
உன்னை நோக்கி நீள்கிறது

நீ உனது கருணையற்ற பார்வையால்
எனது இரவின் அகாலத்தைக் கொளுத்திப் போடுகிறாய்

என் கனவுகள் பசித்திருப்பதை ரட்சிக்கிறாய்
மீட்சியற்ற வனத்தின் கானல் குட்டையில்
சிவந்து மூழ்கும் மௌனங்களென நெளிகிறாய்

ஒவ்வொன்றாக அடுக்கி பின்
குலையும் சந்திப்புகளை
ஒரு விசிறியைப் போல் விரித்து
கையில் கொடுத்துச் செல்கிறாய்

எங்கிருந்தாவது என்னைத் தொடங்கு
என்பதாகத் தான் எனது பிரார்த்தனை
தனித்து உட்கார்ந்திருக்கிறது
உன்
ஆலயத்தின் நீளமான படிக்கட்டுகளில்

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( நவம்பர் - 7 - 2010 )

http://www.thinnai.com/?module=displaystory&story_id=310110719&format=html

மடங்கி நீளும் சொற்ப நிழல்..

*
மற்றுமொரு காயத்தை
நேற்று கொண்டு வந்து சேர்ப்பித்தாய்

இன்றிரவின் உரையாடல் முழுக்க
அதன் துர்வாடை.

அதனால் என்ன..

பிரிவது என்ற தீர்மானங்களுக்கு முன்
இந்த மேஜையில்
எத்தனை மெழுகுவர்த்திகள் எரிந்தாலும்
கவலையற்றுப் போகிறோம்

இந்தக் குறைந்த வெளிச்சத்தில்
மடங்கி நீளும்
சொற்ப நிழலுக்குள்
முன்பொரு முறை பரிமாறிக்கொண்ட
முத்த வெப்பத்தின்
அண்மை..
உடலுக்குள் மட்டுமல்லாமல்

நினைவின்
பிரதேசமெங்கும்
கொடிச் சுற்றிப் பின்னுகிறது
வலியை அடையாளமிட்டு..

அதனால் என்ன..

மற்றுமொரு காயத்தை
நாளையும் கொண்டு வருவாய்..

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( நவம்பர்- 1 - 2011 ) http://www.thinnai.com/?module=displaystory&story_id=310110117&format=html

சனி, அக்டோபர் 30, 2010

பிணைப்பில்லாக் கயிறு..

*
விடைபெறும்போது
ஒரேயொரு சத்தியத்தை
நீ என்
உள்ளங்கையில் அழுத்தியிருக்கலாம்

அது
இந்த விடுதி தனி அறை ஜன்னல்
ஊடே
மர நிழல் போல் சுவரெங்கும்
கிளைத்து
என்
கால் கட்டைவிரலைக் கவ்வியிருக்கும்

பிறகு
என் கனவின் மணல்வெளியில்
பிணைப்பில்லாக் கயிற்றில்
தலைகீழாய்த் தொங்கியிருப்பேன்

வயிறு புடைத்து இன்புறும்
ஒரு
வௌவாலென..

****

கனத்த திரைச்சீலை

*
பார்வையாளர் மத்தியில்
மௌனம் காக்கும்
உண்மையைத் தேடுவதற்குள்

பொய்யின் நாடகம் முடிந்து

அவசரமாய்
மூடிக்கொள்கிறது
கனத்த
திரைச்சீலை

கலைந்து போகும்
கூட்டத்தில்
தன்
சொற்ப தடயங்களோடு
வெளியேறுகிறது
அது

****

நதிக் குமிழ்..

*
தனிமை நதியில்
மூழ்கும் முன்
குமிழ்கள் உப்பியபடி
சேகரமாகின்றன
இருத்தலின் வெப்பம் உள்ளடங்கி

மீளவியலா நினைவுச் சுழியில்
சிக்கிப் பதறவோ
இழுபட்டு
மௌன உச்சியிலிருந்து சரியவோ
நிர்ப்பந்திக்கிறது

நதியின் குளுமை..

****

சொற்ப வாசகர்களுக்கு பிறகு..

*
அமைதி காக்கும்படி
வலியுறுத்துகின்றன
நூலகங்கள்

லட்சம் புத்தகங்கள்
கோடி கதாப்பாத்திரங்கள்
சொற்ப வாசகர்கள்

நூலக நேரம் முடிந்து
கதவுகள்
அடைப்பட்ட பின்

உள்ளிருந்து
ஒரு
படுகளம் போல்

மயானமாகின்றன வராண்டாக்கள்..

****

பகல் வெப்பம்

*
நா வறட்சியில்
அனல் நெளியும் வரிகளோடு
கனக்கும் மௌனம் சுமந்து
கடக்க முடிவதில்லை
கவிதைச் சாலை
****

கையில் குடை வைத்திருக்கிறாள்..

*
ஆயிரம் முறை கெஞ்சியாகிவிட்டது
இன்னும் விடவில்லை
இந்த மழை

கையில் குடை வைத்திருக்கிறாள்
ஆனாலும்
விரிக்காமல் ஏன் காத்திருக்கிறாள்

திரும்பிப் பார்த்துச் சிரிக்கிறாள்

அதிகமாய் குளிர்கிறது
இந்த மாலை நேரம்..

****

இடறல்..

*
பிரியத்தைச்
சொல்லும்போது
பற்றிக்கொண்ட விரல்கள்

உணர்ந்து கொண்டன

உள்ளங்கையில் தட்டுப்பட்ட
துர்க்கனவின்
ரேகைகளை

****

உன் கடிதத்தின் இறுதிப் புள்ளி..

*
வேறெப்போதோ கண் சிமிட்டிய
நட்சத்திரத்தை
உன்
கடிதத்தின் இறுதிப் புள்ளியிலும்

அதன்
அடர்ந்த இருளை
உன்
புன்னகையிலும்
அடையாளம் காட்டுகிறது

என்
மேஜையில்
அமைதியாக எரியும்
இந்த மெழுகுவர்த்தி

****

ஒரு மழையும் இரண்டு காபி கோப்பைகளும்..

*
சற்று முன்
கவிதைக்குள்
பெய்த
என்
மழையொன்று

காகிதத்திலிருந்து
வழிந்திறங்கி மேஜையில் தேங்குகிறது

காபி கோப்பைகளோடு
அருகில் வந்தமர்ந்து
மனைவி கேட்கிறாள்

அழுதீங்களா என்ன..!

****

ஒற்றை ஒப்பந்தம்..

*
இனி
இழப்பதற்கு
எதுவுமில்லை என்னும்போது

ஒற்றை
ஒப்பந்தத்தில்
முடிவாக மறுத்து விடுகிறது
மரணம்

****

உதிரும் பாதைகள்

*
நெடுஞ்சாலை
ஓரிடத்தில் முடியும்போது

ஒற்றையடிப் பாதைகளின்
வரைபடம்
ஒன்றை
பரிசளிக்கிறாய்

இதுவரை
பறிக்கப்படாத மலர்கள்
ஒவ்வொன்றாய்
உதிர்கிறது
ரகசிய கிளையிலிருந்து

****

இரும்புக் கதவுகள்

*
ஓர்
அமைதி வேண்டி
எழுதப்பட்ட குரல்

இறுக மூடிய
இரும்புக் கதவில்
மோதி
உடைகிறது

சிறிய
செங்கல் துணுக்கைப் போல்

****

கனத்த கோப்புகளின் உள்ளறை

*
முகமற்றவனின்
விண்ணப்பம் ஒன்று
தெருக்களில் படியும் நிழல்களை
ஆர்வத்துடன் பற்றிக் கொள்கிறது

அது
விளக்குகளை விமர்சிக்கிறது

வெறிச்சோடிய சாலைகளைப்
பழிக்கிறது

தனிமை நடையின் தயக்கங்களை
பிளாட்பார்மிலிருந்து
சாக்கடைக்குத் தள்ளி விடுகிறது

இறுதியில்

முகமற்றவனின் விண்ணப்பங்கள்
அனைத்தும்
கனத்த கோப்புகளின்
உள்ளறைக்குள்

தூசி மண்டும் அடுக்கில்

மெல்ல
பழுப்பு நிறமேறத்
தொடங்குகிறது

****

பாய்மரங்களின் திசை

*
உனது
ஆழ்கடல் பொங்கிவிடும்போது

ஒற்றைத் துடுப்பை

எனது கை
இறுகப்பற்றிக் கொள்கிறது

****

தளும்பி உடையும் நொடிகள்

*
தண்ணீர் நிரம்பிய
கண்ணாடிக் குவளை விளிம்பில்
ஓர் ஈ
உட்கார்வதும் எழுவதுமாய்
விளையாடுகிறது
ஓயாத நொடிகளை
உடைத்தபடி

காத்திருக்கும் துளிகள்
ஒவ்வொன்றும்
மேஜையின் மீது
தளும்புகிறது
உன் வரவை எதிர்கொள்ள

****

இடம் பொருள்..

*
சுழல் நாற்காலியின்
உருளைச் சக்கரங்கள்
ஓர் இடத்திலிருந்து
இன்னொரு இடத்திற்கு
நகர மறுக்கிறது

நூல் கோர்த்துக் கொள்ளும்
வேலைப்பளு இழைப் பிரிந்து
சிக்குகிறது
எந்தவொரு
நகர்தலை முன்னிட்டும்

****

யாரையும் யாவற்றையும் கடந்து போகுதல்..

*
ஒரு
திட்டமிட்ட சந்திப்புக்காக
புறப்படும் போது

நுண்ணிய துக்கத்தோடு தான்
கிளம்ப நேர்கிறது

சந்திப்புக்குப் பின்
கை குலுக்கி பிரியும்போதும்
ஒரு துக்கத்தோடு தான்
விலக முடிகிறது

யாரையும்
யாவற்றையும் கடந்து போகுதல்
படியப் போர்த்தும் துக்க நிழலாகிறது

துக்கத்திலிருந்து கடந்து போவது என்பது
நிகழவே வாய்ப்பில்லாத
ஒரு சந்திப்பைப் போல்
தருணங்களைப் பிணைத்துக் கொண்டு
அந்தரத்தில் தொங்குகிறது

யாருக்கும்
இடையூரில்லாமல்

****

பசித்த வாடை..

*
எனது
விருப்பங்களின்
தசைநாரைப் பிளந்து

மௌனக் கொக்கியில்
தொங்கவிட்ட பின்

எழுந்து
பறக்கின்றன
பசித்த வாடையோடு

ஆயிரம் நினைவுகள்..!

****

பூக்க விரும்பும் பூக்களுக்காக..

*
நீ நினைப்பது போல்
முடிந்துவிடுவதில்லை
என் கோரிக்கை

அது ஒரு
பிரார்த்தனைக்கான ஏற்பாடு

உன்னை நோக்கி
மெல்லிய கோடு என
பென்சில் கொண்டு
கிழிக்க வேண்டிய பாதையில்

பூக்க விரும்பும் பூக்களுக்காக

மழையை நோக்கி
எழுப்பப்படும்
ஓர்
அறைக்கூவல்

****

ஒரு நிழல்..

*
நிழல் பரவுகிறது

உன்
துரோகத்தை ஊடுருவி
உன்
மௌனத்தை சிவப்பேற்றி
உன்
வார்த்தைகளைத் தோலுரித்து
உன்
உரையாடலை சீர்குலைத்து
உன்
கோரிக்கைகளைப் போட்டுடைத்து

ஒரு
நிழல் பரவுகிறது
உன்
வெயிலை அழுந்த மிதித்து..

****

வரும் மழைக்காலத்தில் அவை துருப்பிடிக்கும்..

*
மனதுக்குள்ளிருந்தே
தொடங்கி விடுகிறது
உன்னுடனான
தனிமைப் பயணம்

பேருந்து நிலையத்தின்
டிக்கட் கவுண்ட்டர் வரை
திணறலடித்த பரபரப்பை
அங்கிருந்த கம்பிக் கிராதிகள்
குறிப்பெடுத்துக் கொண்டன

வரும் மழைக்காலத்தில்
அவை
துருப்பிடிக்கவும் தொடங்கும்

நீ
என் கைகளைப் பிரியப்பட்டுக்
கோர்த்துக் கொண்டபோது
உன்
ஜன்னல்வழி புகுந்து
வெயிலில் பளபளத்த
நகப்பூச்சின் சிவப்பில்
உணர முடிந்தது என் வெட்கத்தை

இடது கை பெருவிரல் நகம் கொண்டு
முன் சீட்டின் பின்புற பெயிண்ட்டை
கிழித்து எழுதிய நம் பெயரை
சுமந்து

நகரெங்கும் திரிந்து கொண்டிருக்கிறது

நீயும் நானுமில்லாத
அந்தப் பேருந்து..!

****

வெள்ளி, அக்டோபர் 29, 2010

இடைப்பட்ட தொலைவுகள்..

*
தனிமை அறைக்குள் நிகழ்ந்த
என் திடீர் பிரவேசத்தில்
பதறியோடி
அகன்ற மொசைக் தரையில்
பாதங்கள் வழுக்கி பக்கச் சுவரில் மோதி
கிறங்கிய நிலையில்
அப்படியே நின்றது
ஒரு
அணில் குட்டி

நானும் அசைவற்று நிற்கிறேன்

எனக்கும் அணில் குட்டிக்கும்
இடைப்பட்ட தொலைவை
அளந்தபடி
மெல்ல நகர்கிறது

ஐந்து பேர் கொண்ட
ஒரு
எறும்பு ஊர்வலம்..!

****

மௌனத்தைப் பருகியபடி..

*
காகித நீர்க் கோப்பைகளில்
ஊற்றிக் கொள்ள நேர்ந்த
மௌனத்தைப்
பருகியபடி

உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு
தொடர்கிறோம்

ஒரு
அபத்த உரையாடலை

****

சுக்கான்

*
என்
சொற்களைச் செலுத்திக்
கொண்டிருக்கிறான் மாலுமி

சுக்கானை
அழுத்திப்பிடி என்கிறேன்

திருதிருவென்று முழிக்கிறது
கவிதை..

****

இரவுப் பூனை..

*
ஓட்டுக் கூரையின் மீது
பூனைகள் இரண்டு
இரவைக் கிழித்துக் கொண்டிருந்தது

ஒன்று
குழந்தையை போல் அழுகிறது

மற்றொன்று
பூனையை போல்

****

மௌன நுனி..

*
சொட்டு சொட்டாய்
துயரம் வழிந்திறங்குகிறது
மழைத் தாழ்வாரத் தனிமையில்

சாளரத் தென்றல்
அசைத்துப் போகும்
மௌன நுனியைப் பற்றிக் கொள்ளும்
விரல் ரேகைகளில்
எதையோ
எழுத எத்தனிக்கிறது

இழப்பின் வலி

****

கிட்டத்தட்ட பழைய உதடுகள்..

*
ஏறக்குறைய
எல்லாக் கவிதைகளும் எழுதப்பட்டுவிட்டது
என்கிறது புதியதாய் வாங்கிய பேனா

கிட்டத்தட்ட
எழுதப்பட்ட கவிதைகளெல்லாம்
வாசித்தாகிவிட்டது
என்கிறது பழைய உதடுகள்

ஒரு
சமரச உடன்படிக்கையில்
கையெழுத்திட சம்மதிக்கிறது
ஆரவாரமில்லாத
ஒற்றை மௌனம்..!

****

எரிந்து கீழிறங்கும் நட்சத்திரங்கள்..

*
திசைகளோடு வளைகிறது மனம்
பயணத்தின் கூர்மைப் பட்டு
துளையும் இரவில்

சிறு பிளவோடு கசிகிறது
நிலவு

எரிந்து கீழிறங்கும்
நட்சத்திரங்கள்
பூசிச் செல்கின்றன

உரையாடலின் காயத்தில்
புரியாத வார்த்தைகளை..

****

எந்த வரியில் எழுதினாலும்..

*
பரிமாறிக்கொண்ட பிரியத்தை
கையெழுத்திட்டு தரச் சொல்லி
உள்ளங்கை நீட்டினாள்
ரேகை வரிகள் முழுதும்
வியர்த்திருந்தது

எந்த வரியில் எழுதினாலும்
அன்பு ஊறிவிடும்

காத்திருந்தேன்

****

திசையெங்கும் ஓடும் மௌனப் பரிவர்த்தனை..

*
நீங்கள் ரகசியமாகப்
பதியனிடும் தாவரங்களின் இலைகளில்
மர்மங்களெனத் திரண்டு
உருள்கின்றன

உரசியபடி நுகரும்
மௌனப் பரிவர்த்தனைகள்

பச்சை நரம்புகளோடு பின்னுதல்
ஒரு கோட்பாடெனவும்

அதிலொரு பிரார்த்தனை நதி
ஊடுருவி திசையெங்கும் ஓடுதல்
ஒரு கட்டளை எனவும்

உரையாடல்களைக் கட்டமைக்கிறது
காலத்தின் பலி பீடம்

****

யாரும் சொல்லிக் கேட்டிராத கதை..

*
இதுவரை யாரும் சொல்லிக் கேட்டறியாத
கதையொன்றை சொல்லும்படி
கெஞ்சினாள் சிறுமி

சொல்லப்படாத கதையைத் தேடி
மனக்காட்டுக்குள்
கிளை பிரியும் இருண்ட புதிர்பாதைகள் தோறும்
அலைந்து சலித்து உட்கார்ந்தேன்
ஒரு கதையின் மீது..

நினைவிலிச் சாளரங்கள்
தூறல் வீசும் எண்ணற்ற காட்சிகளை
பொத்தலிட்டு மடியில் கிடத்தியது

பட்டென்று காற்றில் திறந்த கதவின் ஊடே
பாய்ந்த வெளிச்சத்தில்
என் அறையிலிருந்தேன்

சுவர் முழுக்கப் பரவியிருந்த
வெயிலோடு உடைந்து கிடந்த
என் நிழல்
இதுவரை யாரும் சொல்லிக் கேட்டிராத
என்னைக் காட்டியது

காத்திருந்தேன் சிறுமிக்காக
அதன் பிறகு அவள் வரவேயில்லை

வந்தாலும்..

இதுவரை
யாரும் சொல்லிக் கேட்டிராத
அந்தக் கதையை சொல்லும்படி
கேட்கவுமில்லை..

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( அக்டோபர் - 24 - 2010 )

http://www.thinnai.com/?module=displaystory&story_id=310102417&format=html

பேசுவதற்கு ஏதுமற்ற நீண்ட வழி..

*
பேசுவதற்கு ஏதுமற்ற
நீண்ட வழி

இத்தனைப் பேர்
உடன் வந்தும்
ஏதுமற்ற வழியாகிப் போனது
உன்னைச்
சுமந்து செல்லும்
இந்த இறுதிப் பயணம்

பூக்கள் நசுங்கி வழிகின்றது
பின்தொடரும்
வாகன டயர்களில்

மௌனம் தேங்கும் முகங்கள் தோறும்
பொடிப்பொடியாய் வியர்க்கிறது
உன் மரணம்

****

மெட்ரோ கவிதைகள் - 88

*
நாளொன்றுக்கு
பதினெட்டு சிக்னல்கள்

கிடைக்கும்
மிகு சொற்ப நொடிகளில்
ஹெல்மட்டின் கருநீல நிற வைஸரில் மோதும்
டிஜிட்டல் கோடுகளுக்கிடையில்

அவசரமாகவேனும்
எழுதிவிட முடிவதில்

சம்பவங்களைத் தருணங்களை
ஒளிர்கிறது

சிவப்பும்
பச்சையுமான
விளக்குகள்

****

சில்லிடும் குற்ற நிமிடங்கள்

*
பொய்யர் உலகின்
குளிர்காற்றில்

சில்லிடும் குற்ற நிமிடங்கள்

பெருவாழ்வின்
எலும்பைக் குடைந்து

நடுக்குகின்றது
யாவற்றையும்

****

காலிக் கோப்பைகள்

*
வாளி நிரம்பி வழிகிறது

இரவை
ஊற்றித் தர இடமில்லாமல்

காலிக் கோப்பைகள்
கிணற்றுத் திண்டில்
கவிழ்ந்தபடி
புகார் சொல்லுகின்றன

வாளி நிரம்பி வழிவதாக

****

தொலைத் தூரங்கள்

*
ஒவ்வொரு
சந்திப்பின் முடிவிலும்
கைக் குலுக்கி விடைபெறுவாய்

அதிலடங்கும்
தொலைத் தூரங்களை

என்
மரணத்தின்
இறுதித் தருணத்தில்
நினைவுகூற விரும்புகிறேன்..

****

வியாழன், அக்டோபர் 28, 2010

கரை..

*
ஒரு
பிளஷ் அவுட்டில்
தன்
கழிவுகளை இழுத்துக் கொண்டு
கரைந்தோடக் கூடாதா

தவறாகக் கரை ஒதுங்கிவிட்ட

ஓர்
அபத்த
கவிதை..!

***

தவம் கலையும் ஒரு நாளின் வெம்மைப் பகலில்..

*
பிரம்மாண்டத் தொழிற்சாலையின்
அபாயச் சங்கின் மீது
கண்ணாடி இழைச் சிறகுகள் படபடக்க
சென்றமர்கிறது
ஒரு
மழைத் தும்பி

வெகு நாட்களாக
அந்தத் தும்பியும் பறக்கவில்லை
சங்கும் ஒலிக்கவில்லை

அதன்
தவம் கலையும் ஒரு நாளின்
வெம்மைப் பகலில்

இந்நகரத்தின் மீது
இரத்த மழைப் பொழியும்
என்றான்

என்
பிரியத்துக்குரிய
தோழன்..!

****

அப்படி நிகழ்ந்துவிடுதல் என்பதைத் தவிர..

*
அப்படி நிகழ்ந்துவிடுதல்
என்பதைத் தவிர
அதில் வேறு ஒரு அர்த்தம் இருப்பதில்லை

நண்பர்களுடனான
விவாதங்களில்
தர்க்கத்தின் கடைசி வரியிலிருந்து
முன்னேறும் கணத்தில்
காலிடறி
குப்புறக் கவிழ்க்கிறது
ஒரு தத்துவம்

தோழிகளின் கண்ணீர் துடைக்க
நீளும் விரல்
உதடுகளில் பட்டுவிடும்போது
வார்த்தைகளோடு புறப்பட்டுவிடுகிறது
ஒரு அபத்த முத்தம்

சிகப்பு ஆரஞ்சு பச்சை
என்று நிறங்களின் லயிப்பில்
சாலைக் கடக்கும்
கவனப் பிசகில்
ஒரு சேர ஒலிக்கின்றன
வித வித ஹாரன்களும்
வசவு வார்த்தைகளும்

துயரங்களும்
பிரியங்களும்
இருளில் அசையும் மரங்களின்
நிழல்களை போல்
கொண்டாடி புணர்கின்றன

அதில் வேறு ஒரு அர்த்தம் இருப்பதில்லை
அப்படி நிகழ்ந்துவிடுதல்
என்பதைத் தவிர

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3560

துண்டிக்கப்படும் உரையாடலின் உறைக்குள்..

*
சரி கிளம்புகிறேன் என்கிறாய்
பேசிக் கொண்டிருக்கும்போதே

நேற்றிரவின் அகாலத்தில்
உச்சம் தொட முடியாத கலவி
நிழல் போல் முகத்தைக் கடந்திருக்கலாம்

அல்லது

ஐந்து மார்க் வித்தியாசத்தில்
முதல் ரேங்க் தவறவிட்ட
எட்டு வயது மகனை
காலையில் கிளம்பும்போது
கன்னத்தில் அறைய நேர்ந்த கணத்தில்
அவன் கண்களில் உறைந்த
பயத்தின் பார்வை
நாக்கில் காரமேற்றி இருக்கலாம்

அல்லது

பால்யத்தில்
முதல் காதலி தந்த
கடைசி முத்தத்தின் ஈரம் உலராமல்
பாதுகாத்த டைரியை
முதல் நாள் மாலை
மனைவி படிக்க நேர்ந்திருக்கலாம்

அல்லது

சமரசங்கள் அற்ற
நிர்ப்பந்தங்கள் நிறைந்த
சூழ்ச்சிகள் மலிந்த
நகர வாழ்வின் அவலங்களை வழங்கும்
விசித்திரக் காட்சிகளின்
தணிக்கை செய்யவியலா விதிகளின் நிலுவைகள்
அலுப்பூட்டியிருக்கலாம்

அல்லது

துண்டிக்கப்படும் உரையாடலின் உறைக்குள்
ரத்தம் தோய்ந்த வார்த்தைகள்
கூர்மையுடன் காத்திருந்திருக்கலாம்

சரி கிளம்புகிறேன் என்கிறாய்
பேசிக் கொண்டிருக்கும்போதே..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3535

யாருமற்ற சபையின் மௌனங்கள்..

*
தோல்விகளின் வரலாற்றை
நாம் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்

சமரசங்களின் மீது
நம்பிக்கையிழந்த அடையாளங்கள்
அதன் மேஜையில்..
நகக் கீறலின் வடுவைப் போல்
தங்கி விடுகிறது..

யாருமற்ற சபையின்
வனையப்பட்ட மௌனங்கள்..
சொற்ப சொற்களுடன் போரிடுகின்றன

யாவற்றையும்
குறிப்பெடுத்துக் கொள்ளும்படி..!

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( அக்டோபர் - 29 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11181&Itemid=139

நாவின் நுனியில் உடைந்து தொங்கும் நிமிடங்கள்..

*
கைப்பிடி அளவே உள்ள
சாதுர்ய பதில்களில்
முரண்படும் நிமிடங்கள்
உடைந்து தொங்குகிறது
நாவின் நுனியில்..

சந்தேகக் குளம்புகள் அதிர
செந்நிறத்தில் கிளம்பும் ஓசைகள்
கண்களில் பரவி
மனக்காட்சிகள் யாவும்
உறைகிறது..

உறவுக்குரிய ஒப்பந்தச் சமுத்திரத்தின்
கரைகளில்..
உருளும் நுரைக் குமிழ் அள்ளிப்
பருகச் செய்கிறது..
உன் மீதான
நம்பிக்கையின் தீராத தாகம்..!

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( அக்டோபர் - 10 - 2010 )

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31010106&format=html

பழகும் நாட்களின் பரிவர்த்தனை..

*
அவன் பிரியத்தின் மடிப்பு
கலையவில்லை

அதைக் கச்சிதமாக உடுத்திக்கொள்ள
அவளுக்கொரு தனிமை தேவைப்படுகிறது..

பழகும் நாட்களின் பரிவர்த்தனையில்
சின்னஞ்சிறு இழப்புகளைப்
பெற்றுக் கொள்வதில் வருத்தமில்லை..

அதைத்
திருப்பித் தரும் பொருட்டு
உருவாகும் சந்தர்ப்பங்களை..
ஒன்றின் மேல் ஒன்றாக
அடுக்கி வைக்கிறது
ஒவ்வொரு சந்திப்பும்..!

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( அக்டோபர் - 24 - 2010 )

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31010245&format=html

தங்க மீனின் கடல் நிமிடம்..

*
உதடு குவித்து ஆக்சிஜன் விழுங்கும்
அழகில்..
நீரெங்கும் குமிழிட்டுப் பரவுகிறது
பொன் நிறம்..

வால் சுழற்றும் மென் அசைவில்
பாலே நடனமிடுகிறது
பிளாஸ்டிக் பாசிச் செடி..

இரை உருண்டைக்கு ஏங்கி
மேலெழுந்து வாய் பிளப்பதை
வளர்ப்பவன் பழகிக் கொள்கிறான்

இந்தக் நீளக் கண்ணாடித் தொட்டி
கடலென கற்பிக்கப்படுதல்
தங்க மீனின் உலகத்தை
நகலெடுக்கும் வித்தைப் புரிந்த சூட்சுமம்

ஒரு
கோபக் காலையில்..
வீசியெறியப்பட்ட செல்போன் விரிசலில்
கடல் தொட்டியின் நிமிடம் உடைந்தது..

உதடு குவித்து
ஆக்சிஜன் விழுங்கமுடியா
நீரெங்கும்
குமிழிட்டுப் பரவுகிறது
தங்க நிறத்தில் மீனின் மரணம்..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3464

மெட்ரோ கவிதைகள் - 87

*
அண்ணாந்து வாய் பார்க்கும்
குரங்குக் குட்டி
தாளமடிப்பவனின்
சேஷ்டைகளை
பசியோடு பட்டியலிடுகிறது

தலையில் தட்டை ஏந்தி
சலாம் வைத்து
கூட்டத்தை வலம் வந்து
சிதறும் காசுப் பொறுக்கி இளிக்கிறது..
நகரம் புரியாமல்

***

கனவுகள் வரைகின்றவனின் விரலொன்று..

*
ரகசியக் கனவுகள் வரைகின்றவனின்
விரலொன்று
அடர்ந்த இருளின் சதுப்புக்குள்
புதைந்து கிடக்கிறது

அதில் அசையும் பிம்பங்கள்
ஒளிர்கின்றன
வர்ணங்களற்ற தூக்கத்தில்

உதிரும் சிறகுகளின் இழைகளை
ஒரு சேரப் பிழிந்துத்
தொட்டுத் தர வழியற்று

புதைந்து கிடக்கிறது
விரலொன்று..

****

முற்றத்து மழை ஈர மணல்..

*
சின்னஞ்சிறு தாளச் சிதறலில்
முற்றத்து மழை
ஈர மணல்துகளை
வாரி இறைக்கிறது

எழுதிக் கொண்டிருக்கும்
கவிதை முழுதும்

அதிலொன்று
முற்றுப் புள்ளியாய் விழுந்து உப்புகிறது..!

***

கூர்மையான வார்த்தையின் இரவு..

*
மௌனத்தை விட வலிமையான
ஒரு திரையை
நீயேன்
நமக்கிடையில்
இழுத்துக் கட்டுகிறாய்

அதைக் கிழித்தெறிய
கூர்மையான
வார்த்தையொன்றை
இரவெல்லாம் சானைப் பிடிக்கிறேன்

கண்ணீர்ப் பட்டு
துருவேறுகிறது
அதன் அர்த்தம்

****

சாத்தானின் நாக்கு..

*
கடவுளின் சடை நுனியில்
சாத்தானின் முகம் வளர்கிறது

கூப்பும் கைகளுக்குள்
நடுங்கி உதிர்கிறது மந்திரம்

பிரார்த்திக்கும் உதடுகளுக்குள்
விஷம் சுழற்றுகிறது
சாத்தானின் நாக்கு

எளிய நம்பிக்கைகளின்
கர்ப்பகிரகத்துக்குள்
தீண்டப்படாத சர்ப்பம் போல்
சயனித்து கிடக்கிறது பொய்..

****

எலும்புகளால் முடையப்பட்ட உடல்..

*
மாத்திரைக்குள்ளிருந்து
உடைந்து
வெளியே விழுகிறது
நிறமிழந்த கிருமி

எலும்புகளால் முடையப்பட்ட
உடலுக்குள்
நீண்ட பயணமாகி நீந்துகிறது
உயிர்

ஒரு
வெண் தேவதை
தன் ஸ்டெதாஸ் கரங்கள் கொண்டு
சோதித்துச் சபிக்கிறாள்

சென்றடையும் தூரத்தை
விரல்
விட்டு எண்ணத் தொடங்கும்படி
கட்டளையிடுகிறாள்

மரணத்தின் வாசல் வெகு அருகில்
என்கிறாள்

அவள் எழுதித் தரும்
மாத்திரைக்குள்ளிருந்து
உடைந்து
உள்ளேயே விழுகிறது
நிறமிழந்த கிருமி

****

இலை நிழல்கள்..

*
படிகளில் உடைந்து உருளும்
சின்னச் சின்ன
இலை நிழல்களை
கையில் ஏந்திப்
பரவுகிறது வெயில்..!

****

சனி, செப்டம்பர் 25, 2010

கொஞ்சமாக..

*
நீண்டு
வெறிச்சோடிய
ஆஸ்பத்திரி மொசைக் வராண்டாவில்

பாலிதீன் உறையொன்று
வேகமாய் விரட்டி
இறுதி மூலையில்
தன்னுள் அடைத்துக் கொள்கிறது

கொஞ்சமாக
கொஞ்சம் காற்றை..!

****

விசித்திரத் தோட்டத்தின் புல்வெளி..

*
விசித்திரத் தோட்டத்தின்
புல்வெளியில்
என்
சிரிப்பொலிக்கு
ஒரு சிறகு முளைக்கிறது

அது
தன் கீச்சிடும் சப்தத்தோடு
கிளைக்குக் கிளைத் தாவி
இலை நரம்புகளின்
நதியோட்டத்தில்
சுழியிடுகிறது தனிமையின் இசையை

விசித்திரத் தோட்டத்தின்
எண்ணற்ற மலர்களில் கண்ணீர்த் ததும்புகிறது
அதை
உறிஞ்சு மயக்கங் கொள்ள

என்
சிரிப்பொலியின் சிறகு
ஒவ்வொன்றாய் உதிர்கிறது
மௌனம் போர்த்திய
புல்வெளியில்

****

சொல்லிக் கொண்டிருக்கும்போதே..

*
நமக்கிடையில்
வலுவிழந்து நழுவுகிறது
ஒவ்வொரு எழுத்தும்

சொல்லிக் கொண்டிருக்கும்போதே
வெளியேறுகிறது
உன்
உரையாடல்

சுவர் முழுக்க
கிளைப் பரப்பித் திரித்தேறுகிறது
நீ
என் தனிமையோடு விட்டுச் செல்லும்
உன்
அர்த்தங்கள் மொத்தமும்...

****

ஆட்டம் முடிவதேயில்லை..

*
செலுத்தப்படாத திசையிலிருந்து
திரும்புகிறது
மௌனப் பந்து

ஆட்டம்
முடிவதேயில்லை

விதிகளின் மாற்றம் கோரி
மல்லுக்கட்டுவதற்காக
நீளும் பட்டியல்

செலுத்தப்படாத திசையிலிருந்து
திரும்புகிறது
மீண்டும்

****

முற்றத்து மணலில் உடையும் நிலவு..

*
முதல் முறையாக
நிலவு உடைகிறது
முற்றத்து மணலில்..

அதை
குதிங்கால் அழுந்த
தெருவுக்குத் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தாள்
அம்மா

வேலையிலிருந்து
களைப்போடு வீடு திரும்பும் அய்யா
சாப்பிட்டு முடித்து
பாய் போட்டு அங்கு கொஞ்சம்
கண் அயர்வார்
என்கிறாள்

அதனால் என்ன..!

மீண்டுமொரு மழை வந்தால்
உடைந்த நிலவு
ஒட்டிக்கொள்ளும்
அதே மணலில்..

****

வாசிப்பு

*
வாசித்து முடித்த பிறகும்
வாசித்துக்
காட்டுகிறது
பக்கங்களைப் புரட்டியபடி
ஜன்னல் காற்று..!

****

மெட்ரோ கவிதைகள் - 86

*
' ஏன்யா சாவுற காலத்துல
எங்க உயிரை வந்து வாங்குறீங்க..
எனக்கு என்ன எட்டு கையா இருக்கு?
லைன்ல வாய்யா பெருசு.. ' -

ஒவ்வொரு மாதமும்
ஒரு
அரசு வங்கியில்
பென்ஷனுக்காக முண்டும்
முதியவர்கள்
போர்க்கால பதட்டத்தோடு
எதிர்கொள்கிறார்கள்
தங்கள் சொற்ப தொகையை..

Customer is our first person - என்றபடி
வரிசையின் கடைசியில்
தொங்கிக் கொண்டிருக்கிறார்
நிரந்தரமாய்
ஒருவர்

****

மெட்ரோ கவிதைகள் - 85

*
முதலில்
டிபன் கடை என்றார்கள்
பிறகு
ஹோட்டல் என்றார்கள்
பிறகு
ரெஸ்டாரன்ட் என்றார்கள்
பிறகு
Cuisine என்றார்கள்
பிறகு
கேட்டரிங் என்றார்கள்
பிறகு
பஃபே என்றார்கள்
இப்போது
பாஸ்ட் புட் என்கிறார்கள்
மீண்டும்
டிபன் கடை என்பார்கள்

முதலில் இருந்து
நடுவிலும்
பிறகு மீண்டும்

இனியும் கூட...

எல்லா இடத்திலும்..

பசிக்காக
கையேந்தும் மனிதன்
நிற்கிறான்

****

மெட்ரோ கவிதைகள் - 84

*
பால் பாக்கெட் வாங்க
நடை தளர்ந்து
கடை நோக்கி நகரும்
வயதான
ஒரு மனிதன்

தொலைதூர அலுவலுக்காக
அதிகாலை பஸ் பிடிக்க
வேகமாக விரையும்
ஒரு இளம்பெண்

பெயர் மறந்து
முகவரி மறந்து
அனைத்தும் மறந்து
பிளாட்பார்மில் தூங்கிக் கொண்டிருக்கும்
ஒரு குடும்பம்

முன்னறிவிப்பின்றி
திடீரென்று பெய்து விடும்
ஒரு பெருமழையில்

நகரத்தின் அனைத்தும்
இயல்பு தப்புகிறது
அவசரமாய்

****

மெட்ரோ கவிதைகள் - 83

*
உச்சி வெயில் உருகும்
தார்ச்சாலையில்
புதைந்து கிடக்கிறது
ஒரு
சிறுமியின்
சிகப்பு நிற ஹேர்-கிளிப்

வெட்டுப்பட்ட
நெடுஞ்சாலை மரமொன்றின்
கிளையில் சிக்கி
படபடத்தபடி காத்திருக்கிறது
காற்றாடி
யாரோ ஒரு சிறுவனுக்காக

புத்தக மூட்டையோடு
அவசரமாய் சிக்னல் கடக்கும்
சிறுவர்களை
அச்சமூட்டுகிறது
மூன்று வட்ட வர்ணங்களும்
வித விதமான ஹாரன்களும்..

****

மெட்ரோ கவிதைகள் - 82

*
நகரத்தின் கொடும்பகலும்
கீழ்மை நிழலும் கவிய
வாசல் வரை
செருப்போடு வருகிறது
எல்லாமும்

****

மெட்ரோ கவிதைகள் - 81

*
மெட்ரோ ரயிலின் தள்ளாட்டத்தில்
பதற்றமுற்று வழியும்
அந்தப் பார்வையில்
வறுமை யாசிக்கிறது
பசிக்குரிய
மூலப்பொருளை

மாதக் கடைசியை
எதிர்கொள்ளும் திராணியற்ற
நடுத்தரங்கள்
முகத்தைத் திருப்பிக் கொள்கிறது
அவசரமாய்..!

****

சூட்சம விதிகள்

*
திரும்ப பெற்றுக் கொள்வதில்
ஒரு
சாமர்த்தியம் இருப்பதாக

சூட்சம விதிகளை
எழுதிச் செல்கிறது

துயரத்தை
மறுபரிசீலனை செய்து பார்க்கிற
சூழ்ச்சி நயமொன்று..!

****

ஒரு குழந்தையின்..

*
தண்டவாளத்து அருகே
பிருஷ்டம் நைந்து
குப்புற கிடக்கிறது
ஒரு
குழந்தையின்
துணி பொம்மை..!

****

ஸீஸரின் மார்பு...ஆண்டனியின் வாள்..

*
இரவு கண் செருக..
படித்துக் கொண்டிருந்த
புத்தகப் பக்கத்தை பாதியில்
மடித்து வைத்ததில்

52-ம் பக்கத்திலிருந்த
ஆண்டனியின் வாள்
51-ம் பக்கத்தில் இருக்கும்
ஸீஸரின்
மார்பைத் துளைக்கிறது

கிளியோபாட்ராவின் இதயம்
அதன் பின்னும்
சிதையவில்லை..!

****

உள்ளங்கை நிலா..

*
நதி நீரள்ளி
உள்ளங்கையில் நிலவை
ஏந்தியது போல்

மிகவும்
கள்ளத்தனமாய்
முத்தமிட்டுவிட்டான்

பனைமர நிழலுக்கடியில்
அவசரமாய்
மழைக்கென ஒதுங்கியபோது..

****

பால்யத்துக்குரிய வண்ணங்கள்..

*
முற்றத்தில் ஒழுகி
நீர்மையாகிறது
சிறுமியின்
பால்யத்துக்குரிய
வண்ணங்கள் மொத்தமும்

புதிதாக ரிப்பனும்
மணிக் கொலுசும்
வாங்கி வைத்திருக்கிறாள் பாட்டி..

ரெட்டை ஜடை..
ஒற்றையாய் நீண்டு வளர
தயாராகிவிட்டது
இந்த மார்கழியில்..

****

இறந்த காலம்..

*
துடித்தடங்கும் வேட்டையின்
ரத்த ஈரத்தில்
கூர் பற்கள் கிழிக்கின்றன
இறந்தவனின்
காலத்தை

பிடரி சில்லிப்பில்
தருணங்கள் உதிர்கின்றது
மனவெளியின் முட்புதர் நெடுக..

****

துரித நடையில்..

*
இரவு அவிழ்ந்து கொண்டிருக்கிறது
கொஞ்சங்கொஞ்சமாக

துரித நடையில்
உடன் வர தடுமாறுகிறது
அடிமை நிழல்..

இருபதடிக்கு ஒன்று என்ற கணக்கில்
கண்ணடித்து அணைகிறது
மஞ்சள் ஒளி உமிழும்
தெரு விளக்கு..

துரித நடையில்
உடன் வர தடுமாறுகிறது
நிழல் அடிமை..

****

கரு நிழலென மிஞ்சியது..

*
பட்-பட்டென்று
அறுந்து தெரித்தன்
சட்டைப் பட்டன்கள்..

மனைவியின் கன்னத்தில்
சிவப்பாய் கன்றிய
ஐந்து விரல்கள்..

கரு நிழலென
வாசலில் மிஞ்சியது
பைக் புகையும்
பெட்ரோல் வாசனையும்..

****

குவளை நீர்..!

*
ஒரு செந்நிறம்
ஒரு பச்சை
ஒரு வெண்மை

நிறம் நிறமாய் தரப்படும்
மாத்திரைகள்

உயிர் காக்கும் என
கையெழுத்திட்டு தருகிறார்
டாக்டர்

அவைகளைப் போட்டுக் கொள்ள
கையில்
குவளை நீரை
எடுத்துக் கொள்ளும்போது

எங்கோ
ஒரு நதி சிரிக்கிறது..!

****

அல்லது... பயணிக்கிறோம்...

*
கூரையில்லாத
கடம்பூர் ரயில்வே ஸ்டேஷன்

எதிர்புறம்
நின்று கிளம்பிய ரயிலின்
ஜன்னல் காட்டும்
ஸ்தம்பித்த முகங்கள்..

ரயில் நகர்ந்த பிறகான
யாருமற்ற பிளாட்பாரத்தில்..

மெல்ல நடந்தபடி
எதைத் தேடுகிறது
மஞ்சள் நிற அலகு கொண்ட மைனா?

ஸ்டேஷன் காம்பவுண்டுக்கு மறுபுறம் இருக்கும்
சிறு பொட்டல் வெளியில்..

இரண்டடிக்கு ஒரு முறை நின்று
குனிந்து குனிந்து
எதையோ
எடுக்கிறாள்
ஒரு பெண்..!

எதற்கோ
எதையோ
எப்பவும் தேடித் தேடி..

நடக்கிறோம்
குனிகிறோம்
நிமிர்கிறோம்

அல்லது பயணிக்கிறோம்..

எளிதில்
அகப்படாத தருணங்களின் மர்மங்களோடு..!

****

உடையும் இலைச் சருகு..

*
நிழல் ஒதுக்கி
வெயிலில்
உருண்டோடும்

இலைச் சருகைப் போல்

மொடமொடவென்று
எப்படியாவது உடைந்துவிடும் தானே

உனதிந்த
மௌனம்..?!

****

காத்திருப்பில்..

*
பழங்களிலிருந்து
வெளியேறும்
விதைகளின்
மௌனம்

உரமாகிறது

சிறு
மழைத் தூறலுக்கான
காத்திருப்பில்..!

****

இதழ் இதழாகப் பிரிவதில்..

*
பூக்கள் தவிர்த்து வேறு வழியில்லை
பதிலொன்றை
புன்னகை நீட்டும்போது..

இதழ்
இதழாகப் பிரிவதில்
நீர்த்துப் போதல்
சமன்படுகிறது

நிலுவையில் நின்றுவிடுவது
தீர்மானம் மட்டுமே..

****

துயரத்தின் ஆழ்கடல்..

*
துயரத்தின்
ஆழ்கடலில்
மௌனச் சிப்பிக்குள்
சொட்டுகளாய்த் திரள்கிறது

கண்ணாடிக் குடுவைக்குள்
நீந்தும்

தனித்த மீனின்
கண்ணீர்த் துளி..!

****

பிரியத்தின் மீது..

*
அவமானச்
சுருக்குகளை
சடைத் திரித்து நீவுகிறது

பிரியத்தின் மீது
அனுமதி மறுக்கும்..

வன்மம் !

****

எளிய ஓவியத்தைப் போல்..

*
" எங்கே காட்டு.. பார்ப்போம் " - என்கிறாய்
சிரித்துக் கொண்டே..

ஒரு
எளிய ஓவியத்தைப் போல்
வரைந்து காட்ட

அப்படியொன்றும் சுலபமில்லை
என்
மௌனம்..

****

காதல் தூறல் விழாத..

*
உள்ளங்கைக்
குடையின் கீழ்
காதல் தூறல் விழாத பார்வையின் நிழல்
படுத்துக் கிடக்கிறது..

புன்னகைக் கதவைத் தட்டும்படி
அழைக்கிறது
இதழோரம் உருவாகும்
சிறு
வளைவு..!

****

இரவின் வாசல்..

*
மதிய வெயிலைத்
தெருவில் பூட்டி வைத்து

திண்ணையில் காத்திருக்கிறது

இரவின்
வாசலைத் திறந்து விட

ஒரு
நிழல் சாவி..!

****

மௌனத் தாழ்வாரச் சாரல்..

*
என் மொழிச் சிறகில்
வழிகிற ஈரம்

நெடுநேரம் யாருமற்று
உட்கார்ந்திருந்த
மௌனத் தாழ்வாரச் சாரல்..

புரட்டித் தள்ளும் காட்சிப் படிமங்களைத்
தொட்டு விலகும்
ஒரு
பழைய நிழல்..

எங்கிருந்தோ புறப்படும்
மின்னலின் தயக்க வெளிச்சம்..

எந்தவொரு உரையாடலிலும்
தலை நீட்டி விடாத
ஒரு
அபத்தம்..

இவை
யாவும் பின்னுகிற வலைத்துளையில்
வடிகட்டப்படாமல்..

மிச்சமாகும் சக்கையென
என்
பிம்பம்..!

****

கூவி ஓய்ந்தவனின் குரல்கள்..

*
மிகவும் கலைத்திருப்பதாக
சொல்கிறான்

மௌனச் சபையில்
வார்த்தைகளற்று இறைஞ்சுகிறான்

வாழ்வின் பாலை வெளியெங்கும்
கூவி ஓய்ந்தவனின் குரல்களில்
மையங்கொண்டு
சுழல்கின்றன

இருப்பதாக நம்பும்
அர்த்தங்கள்..!

****

பசியின் வர்ண நிழல்..

*
என்னைப் போக்கு காட்டி
என் திசைகளை நீக்கி ஈர்க்கிறது
பசியின் வர்ணம்

சிறகிலிருந்து கழன்று கொண்ட
பெயர் தெரியா பறவையொன்றின்
இறகைப் போல
அசைந்து அசைந்து மிதந்து அமர்ந்த
உள்ளங்கையில்

பசியின் வர்ண நிழல்
ஒரு துயரமென
மிச்சமிருக்கிறது..

****

மில்லி மீட்டர் அளவில்...ஏதோ ஒரு நொடியில்..

*
எல்லாம் இருக்கிறது

கொஞ்சம் பரவசம்
கொஞ்சம் துயரம்
கொஞ்சம் மௌனம்
கொஞ்சம் உரையாடல்

மில்லி மீட்டர் அளவில் மரணம்..
பூக்களின் பரப்பளவில் புன்னகை
கை குலுக்கி ஒரு நம்பிக்கை

எல்லாம் இருக்கிறது
ஆனாலும்

ஏதுமற்றதாக
ஏதோ ஒரு நொடியில்
எல்லாம் தீர்ந்து

உதிர்கிறது உடல்..!

****

வியாழன், செப்டம்பர் 23, 2010

இரவெங்கும்..சிதறிய பருக்கைகள்..

*
இருள் வாய்க்குள்
அவசரமாய்
சூரியனை ஊட்டிய பிறகு

சிதறிய பருக்கைகள் என

இரவெங்கும்
மினுக்குகின்றன
மிச்ச சூரியன்கள்..!

****

இருள் மஞ்சனை..

*
மன்மதனிடம்
சொல்லி வைத்திருக்கிறேன்

மலர் அம்புகளை
கூர் தீட்டிக் கொள்..

யௌவன நிலவு
மார்புகள் புடைத்து

இருள் மஞ்சனையில்
சயனம் கலைந்து
மிதக்கிறது

****

வைகறையில் அவிழ்ந்தபோது..

*
உன்னை
நினைத்துக் கொண்டே
இரவை நுனித் திருகி
முடிச்சிட்டு வைத்த கர்சீப்

வைகறையில் அவிழ்ந்தபோது

அதிலிருந்து
இரண்டொரு நட்சத்திரங்கள்
உதிர்ந்தன..!

****

ரகசியமாய் வளையும் பரிசல்..

*
ஆற்றுச் சுழிவைக்
கடக்கத் திரும்பும்

ஒரு
லாவக பரிசலைப் போல்
ரகசியமாய் வளைகிறது

எனக்கென
உன்
புன்னகை..!

****

தனிமையின் குடைக்குள்..

*
என்
தனிமையின் குடைக்குள்

உன்
புன்னகை
கிளைத்து விரிந்து

என்
கை நோக்கி
இறங்குகிறது

ஸ்டீல் கம்பிகளென..!

****

இரண்டு நூல் பிசிறுகள்..

*
உன்
வரவேற்பறையில்

நீ
போட்டு வைத்திருக்கும்
சிகப்பு நிற சோபாவின்
கைப்பிடியில்

இரண்டு நூல் பிசிறுகள்

நான்
கிளம்பும்போது

என்னைக் கைப்பிடித்து
இழுக்கிறது..!

****

பயணக் களைப்புக்கு பிறகு துவளும் பாதங்கள்..

*
ஒரு
மரணத்தை ஒத்திருக்கிறது
அந்தப் புன்னகை..

நீண்ட
பயணக் களைப்புக்கு பிறகு
துவளும் பாதங்களை

இரவல் பெற்றுக் கொள்கிறது

சட்டென்று நேர்ந்து விடும்
மீளாத் துயரம்..

துயரத்தில் ஏற்படும் சந்திப்பில்
நேரும் புன்னகை
ஒரு
மரணத்தை ஒத்திருக்கிறது..

****

எப்படியிருந்த போதிலும்...

*
நிர்வாணத்திலிருந்து தான்
தொடங்க வேண்டும்
என்பதில்லை..

உடுத்திக் கொள்வதாக
உருவாகும்

பாசாங்கிலிருந்தும்..

****

நீர்மை..

*
கொதித்தடங்கிய
தண்ணீருக்குள்

பாத்திரம்
தன்
அடிப்பாகத்தில்
தாங்கிப் பிடித்திருக்கிறது

இரண்டொரு
வெப்பக் குமிழ்கள்..!

****

தயக்கங்களின் நிழல்..

*
பிரிவின்போது
மூடிக்கொள்ளும் கதவில்

தயக்கங்களின் நிழல்..

சாவி தொலைந்த ஒரு பூட்டைப் போல்
நிரந்தரமாய்
தொங்குகிறது..!

****

ஈரம் உலர்ந்த கன்னத்து முத்தம்..

*
ஒரு
பிரார்த்தனையை போல்
எழுந்ததிலிருந்து
படுக்கையில்
முணுமுணுத்துக் கொண்டிருக்கிறேன்

அவனில்லாத
இந்த அறையின் நீல நிறம்
உயிரை உருவி மின்விளக்கில் எரிகிறது

மேஜையில்
அடுக்கி வைத்திருக்கும் காகிதங்கள்
அத்தனையும்
வெண்ணிற முனைகளோடு
மௌனித்து அசைக்கின்றன சமாதானங்களை

இரண்டு இரவுகளுக்கு முன்
ஈரம் உலர்ந்த கன்னத்து முத்தம்
நழுவி நழுவி உதடுகளுக்கு வந்ததும்
ஸ்தம்பிக்கிறது
காதல் மந்திரத்தின் அர்த்தங்கள் புரியாமல்

இருந்தும்

ஜன்னல் வழி தோட்டத்து
நெல்லி மரத்திலமர்ந்து
அந்தக் குருவி
இத்தனை முறை தன் சிறகுகளைக்
கோதி கோதி
அடுக்கிக் கோர்ப்பது
என் முணுமுணுப்பைத் தானே..!

****

வார்த்தைகளின் கரையில்..

*
சொற்ப சஞ்சலங்களோடு
மௌன நதியைக் கடக்கும்போது

வார்த்தைகளின் கரையில்
குளித்துக் கொண்டிருக்கிறாய்

அலையெழும்பி மீளும் குமிழ் மீது
தத்தளிக்கிறது
இதுவரை
சொல்லாத அர்த்தங்கள் ஒவ்வொன்றும்

வீழ்வதும் அமிழ்வதுமான
வெளிச்சங்களை
நதியின் கரும்பள்ளத்துக்குள்
சுழற்றி அனுப்புகிறாய்

இருள் சூழும்
அந்த
உரையாடலின் வெளிகளை
உப்பியபடி நிரப்புகிறது

தீர்மானிக்க இயலுகிற
ஒற்றைக் குமிழ்..!

****

பைண்டிங்

*
கடந்து வந்த உறவுகளை
பைண்டிங் செய்யும் தீர்மானத்தோடு

உட்கார்ந்து அடுக்கி
துயரத் துளையிட்டு
சந்தர்ப்ப நூல் கோர்த்தபோது

நினைவின் ஊசி முனை மழுங்கி
தைக்க மறுத்தது..!

****

தேடல் என்ற பெயரில்..

*
கவிதைப்
பொறுக்குபவன்

மனக் குப்பைகள்
கிளறி கிளறி

எடை கூட்டுகிறான்..

***

செதில்களில்..

*
மரணித்தலின் செதில்களில்
செருகிக் கிடக்கிறது
ஒவ்வொரு
துரோகமும்

வகை பிரித்தடுக்கும்
விரல்களில்
அனுபவ பிசுபிசுப்பு..

****

மௌனத்தின் பழுப்பு நிறம்..

*
நகரத்தின் புதிர் நிறைந்த
பகலை
வெயில் நிரப்புகிறது
நிழலை இழுத்து வந்து..

மரங்கள் உதிர்க்கின்றன
மௌனத்தின் பழுப்பு நிறத்தை
அதைக் கடப்பவரின் நிழல் மீது..

இரவுக்கு முன்
ஒளிர்ந்து விடும் தெருவிளக்கு
காத்திருக்கிறது
தன்னை மொய்ப்பதற்கு ஈசல் கூட்டத்தை
எதிர்நோக்கி..

முளைக்கும் இறக்கைகள் மீது பிரியம் கொண்டு
சில நிமிடப் பறத்தலுக்கு
விளக்கின் நிழலுக்கு சிறகுகளைக்
காணிக்கையாக்குகின்றன

நகரத்தின் புதிர் நிறைந்த பகல்களைப் பற்றி
கவலைப்படாத ஈசல் கூட்டம்..

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் [ செப்டம்பர் -26 - 2010 ]

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31009261&format=html

அசையும் கை நிழல்..

*
மறுப்பேதும் சொல்லிக் கொண்டிருப்பதில்லை
அசைக்கும் கை நிழலுக்கு ஏற்ப
புரியாமல் பார்க்கிறது
குழந்தை..

யாரோடும் கொள்ளும் சிநேகத்தில்
துளை விழுந்த துணியை ஊடுருவும்
லேசர் பார்வைகள் ஏதுமில்லை
ஆனால் அதையும் கடந்த ஏதோ ஒன்று..
கூர்மை..

சின்னஞ்சிறிய எதிர்பார்ப்புகளில்
நிரம்பி வழிகிறது புன்னகை குழையும்
இதழோர எச்சில்..

புரியா மொழி பேசி..
புதிர் உலகுக்குள் நம்மை இழுக்கும்
வித்தை அறிந்த பிஞ்சு விரல்கள்
சமயத்தில் இறுகப்பற்றிக் கொள்கின்றன..
நம் நம்பிக்கைகளையோ
அல்லது
பலவீனமான சந்தேகங்களையோ..

அவைகளை
நொறுக்கும் வித்தை
புரோகிராம் செய்யப்பட்டு
அனுப்பிவைக்கப்பட்ட பிஞ்சு விரல்கள்..!

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் [ செப்டம்பர் - 5 - 2010 ]

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31009052&format=html

பிரிவுக்குரிய விண்ணப்பங்கள்..

*
பெயர் தெரியா மரங்களிலிருந்து
உதிரும் இலைகள் பழுத்திருக்கின்றன..

ஒரு பிரிவுக்குரிய விண்ணப்பத்தோடு
எவ்வளவு நேரம் தான் காத்திருப்பது..?

இந்த சேலையில் பூத்திருக்கும்
மிட்டாய் ரோஸ் நிற பூக்கள்
அவனுக்கு கொஞ்சமும் பிடிக்காது

காதில் ஏன் இத்தனை பெரிய வளையம் மாட்டியிருக்கிறாய்
என்று ஒரு முறை பிடித்து இழுத்திருக்கிறான்
சிறு ரத்தப் புள்ளியோடு காது துளை
தன் வலியை நிறுத்திக்கொண்டது

ஹாஸ்டல் படுக்கையறைச்
சுவற்றிலிருந்த கடிகாரத்தை
கழற்றி வைத்துவிட்டேன்

அவன் மீசையை நினைவுப் படுத்தும்
நிமிட முட்களும்
உடல் முழுக்க நொடி முள்ளாய்
ஊர்ந்து கடக்கும் இரவும்
எனக்கு பிடிக்கவில்லை

இந்த சிகப்புக் கட்டிடங்கள் நிறைந்த
சட்ட நுணுக்கங்கள் நிறைந்த
சாதுரியங்கள் நிறைந்த
மரங்கள் நிறைந்த
நிழல் நிறைந்த பைக் பார்க்கிங்கில்
அவனுக்காக காத்திருக்கிறேன்

அவன் வந்ததும்
என் டென்ஷனைக் கட்டுப்படுத்த
நகம் கடிக்கத் தீர்மானித்திருக்கிறேன்
நகம் கடித்தல் அவனுக்கு அறவே பிடிக்காது

ஒரு பிரிவுக்குரிய விண்ணப்பத்தோடு
எவ்வளவு நேரம் தான் காத்திருப்பது..?

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3419

நவீன டிராக்டர்கள் உழும் பொருளாதார நிலம்..

*
ஒரு முறையாவது சொல்லியிருக்கலாம்
கை மறதியாக உன் மேஜை மீது வைத்துவிட்ட
கோரிக்கையின் நகலை
என்ன செய்ய உத்தேசித்திருந்தாய் என்பதை

மன்றாடியோ
மண்டியிட்டோ அல்ல
கைகட்டிப் பெற்றுக் கொண்ட கூலி
வெண்ணிற கவரில் அடைத்துத் தந்தாய்

மணம் கமழும்
புத்தம்புதிய பணக் காகிதங்களின்
வர்ணங்களில்
நவீன டிராக்டர்கள் உழுகின்றன
பொருளாதாரத்தின் நிலத்தை

ரிசர்வ் வங்கி கவர்னரின் வாக்குறுதியோடு
வீடு திரும்பும் வழியில்

செல்போன் சிணுக்கி
அதிர்வலையோடு மீண்டுமழைக்கிறாய்
உன்
பிரத்தியேகக் குளிரூட்டப்பட்ட கேபினுள்

போனஸாக நீயடுக்கிய
எக்ஸ்ட்ரா வேலைகளின் சுமையோடு
லிப்டிலிருந்து வெளிப்பட்ட கணத்தில்
உணர முடிந்தது

வாய் பிளந்து ஒரு மிருகம்
என்னை வெளியே துப்புவதையும்
உறுமும் டிராக்டர் என
உன்
கண்ணாடிக் கட்டிடமும்..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3380

சொல்லப் பிடிக்காத புதிரைப் பகிர்ந்துக் கொள்ளும் காலக் கண்ணாடி..

*
எங்கிருந்து தொடங்குவது
என்பதைப் பற்றி
யாருக்கும் சொல்லப் பிடிக்கவில்லை

அல்லது
சொல்லும்படியான எச்சரிக்கையுடன்
திடீரென்று அந்தக் காலை விடிவதுமில்லை

நம்பும்விதமாக
அதை அடைவதைப் பற்றியோ
அடைந்து விட்டதைப் பற்றியதொரு பிரக்ஞையோ
பிறரால் மட்டுமே அறிவிக்கப்படுகிறது

பின்னோக்கி நகர்வதைப் போலொரு பிரமை
கடந்து செல்லுபவர்களால் விநியோகமாகிறது

இந்தப் புதிரைப் பகிர்ந்து கொள்ளும்
காலக் கண்ணாடியில்..
முதல் சுறுக்கம் சிநேகக் கோடென இழுத்துச் சென்று
அறிமுகம் செய்து வைக்கிறது
கிருதாவில் கொத்தாக நிறம் மாறிவிடும்
வயோதிகத்தில்..

அந்தக் காலையை
எங்கிருந்து தொடங்குவது
என்பதைப் பற்றி
யாருக்கும் சொல்லப் பிடிக்கவில்லை

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3360

செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010

சதுரத்துக்குள் நெருக்கியடுக்கப்பட்ட வட்டங்கள்..

*
வேறொரு
சதுரத்துக்குள்
நெருக்கியடுக்கப்பட்ட வட்டங்களெனத் தான்
வரைந்து வைத்திருக்கிறேன்

நமக்குள்
நிகழ்ந்த கடைசி உரையாடலுக்குப் பின்..

அந்த இரவில்
உடைந்த
முக்கோணங்களை..

****

தயக்கங்கள்..

*
ஒப்பந்தங்கள்
கையெழுத்தாகிவிட்டன
பிறகென்ன..

ஒரு
குளிர்பானத்தோடு
கை குலுக்கிப் பிரிவதில்..

தயக்கங்கள் இருப்பதாக
மீண்டும்
ஏன்
தொடங்குகிறாய்

ஒரு
அபத்தத்தை..

****

எங்கிருந்து தொடங்குவது என்பதை..

*
சரி
ஒரு முடிவுக்கு வந்துவிடலாம்

ஆனால்..

மீண்டும்
எங்கிருந்து தொடங்குவது
என்பதை
மீண்டுமொருமுறை கேட்காதே

நொறுங்கி கிடக்கிறது
நம் உரையாடல்..

****

அரிதாரம்..

*
உன்
அமைதியின் அரிதாரம்
கலைத்துவிட மறுக்கிறது

நடந்து முடிந்த
நாடகத்தின்
அபத்த காட்சியொன்றை..!

****

கடக்க முடியா சுவர்..

*
கடக்க முடியா சுவரென
பெருங் கனவொன்று
குறுக்கே நின்றது..

அதை
இடித்துத் தகர்க்க
உன்னிடம்
ஒரு கடப்பாரைக் கேட்டேன்

நீ
இதுவரை
பார்த்து பார்த்து
வார்த்து வைத்திருந்த
உன் சேமிப்புக் கிடங்கிலிருந்து..

ஒரு
வசவு வார்த்தையை
உருவித் தந்தாய்...

எல்லாம் உடைந்தது..!

****

உனக்கான வரைப்படம்..

*
இந்த உலகின்
இந்த நகரின்
இந்த வாழ்வின்

யாதொரு பயங்கரங்களோ
கட்டவிழும் துயரங்களோ

எல்லாவற்றையும்
கொஞ்சம் ஏற்றுக் கொள்கிறாய்
கொஞ்சம் நிராகரித்துவிடுகிறாய்

உன் மெல்லிய
தொடர் மூச்சு சப்தத்தில்
இசைவோடு சுழல்வது
இந்த
அறையின்
மின்விசிறி மட்டுமே..!

தூங்கு..

தூங்கும்போது தானே..
உனக்கான
வரைப்படத்தை நீ வரைவதாக
இந்த
விஞ்ஞானம் சொல்லுகிறது..

எனவே தூங்கு..

கை நிறைய கவிதைகளோடு
நான் காத்திருக்கிறேன்..!

****

காத்திருக்கின்றன பொம்மைகள்..

*
தூக்கத்தில்
நீ
உதிர்க்கும் புன்னகைக்குள்
நுழைந்து கொள்ள

காத்திருக்கின்றன பொம்மைகள்..

சீக்கிரம்
வளர்ந்து விடு மகளே..

****

மெட்ரோ கவிதைகள் - 80

*
ஜன்னலோரம்
காற்றைக் கிழித்து எதிரில் கடக்கும்
மெட்ரோ ரயிலின்
ஹாரன் சப்தத்தில்..

நீ
அனுப்பிய
காதல் மெஸேஜ்
உடைந்து கிடக்கிறது

இந்த
கம்பார்ட்மென்ட்டில்..!

****

துயர் இரவின் புறவழிக் கதவு..

*
எங்கிருந்தெல்லாமோ
வந்து கொண்டிருக்கிறார்கள் தூதுவர்கள்..
என்
வறண்ட பகல்களின்
கதவுகளைத் திறந்தபடி..

இறுக்கிக் குலுக்கும் கரங்கள் வழியே
அழுந்தச் செய்கிறார்கள் துயரங்களை..

பின்
ஆறுதல்களைப் பரிசளித்துவிட்டு

வர்ணக் காகிதங்களென
வயதை வெட்டித் தருகிறார்கள்..

இனி
புதுப்பொலிவோடு இருக்கும்படி
பரிந்துரைக்கும் தூதுவர்கள்

என்
இரவின் புறவழிக் கதவைத் துளைத்து
வெளியேறுகிறார்கள்..

பிறகு
நட்சத்திரங்கள்
ஒவ்வொன்றாக அணைகின்றன..

****

அப்படியொன்று நடந்துவிட்டதற்கான..

*
துயரச் சாலைகளைக்
கடக்கும்போதெல்லாம்

இடறுகிறது..

அப்படியொன்று
நடந்துவிட்டதற்கான

சந்தர்ப்ப
கல்..!

****

இனி..

*
கூர்மை வார்த்தைகளின்
காது துளை வழியே
கோர்த்துவிடுகிறாய்
காதல் பார்வையை..

இனி..

இதயம்
கிழிவது பற்றி
கவலையில்லை..

****

குழந்தைகளின் கலர் க்ரேயான்கள்..

*
வீடுகளுக்கு இடையே
எழும்பிவிட்ட
மதில்களின் இருபுறமும்..

குழந்தைகளின்
கலர் க்ரேயான்கள்
வரைகின்றன..

பசுமைக்குரிய இலைகளும்
நெருப்புக்குரிய சூரியனும்
வெண்மைக்குரிய சமாதானமும்..!

****

நகர மறுக்கும் துயரங்களின் பாரம்..

*
சிதிலமுற்ற தேரென
நகர மறுக்கும்
துயரங்களின் பாரம்..

நினைவுச் சக்கரங்களின்
கனங்கொண்டு
மனதில் அழுந்த புதைந்து

உருண்டு வந்த
காலங்களின் சந்தர்ப்பங்களோடு
வெட்பத் தீ வீசும் செதில்களில் மட்குகிறது..

****

சொல்லாத சந்தர்ப்பங்கள் ததும்பும்..ரகசியப் பேழை..

*
மனங்கொத்தும்
பறவையொன்றின் அலகில் வியர்க்கிறது..

ரகசியப் பேழைகளில்
ததும்பும்
சொல்லாத சந்தர்ப்பங்களுக்குரிய

சொற்களின்
நறுமணம்..!

****