செவ்வாய், ஏப்ரல் 29, 2014

உதிரத் திணறும் வர்ணப்பூச்சும் கைநிறைந்த க்ரேயான்களும்..

*
நழுவிடும் இமைகளுக்குக் கீழே
எரிந்து பொசுங்கும் டயர் வாசனையோடு
தேய்ந்து நிற்கிற இரவு

அதிர்ச்சி பெருகும் இருள் மீது படர்ந்தபடி
ஓலமிட மறந்துபோன
குருட்டு நினைவுகளின் புதிய ஜன்னல்கள் உடைகின்றன

கை உயர்த்தி அபயக் குரல் எழுப்பும் சொல் ஒன்றின் வடிவம்
வெளிவரத்துடிக்கும் அர்த்தங்களின் அடைப்புக்குறிகளை
நெளியச் செய்கின்றது

ஏற்றப்படும் அவசரக்காலக் கொடிக்கம்பத்தின் சுற்றுப் பீடத்தில்
நெருக்கிப்பிடித்து நிற்கும் மௌனத் தலைக்குள்
ஓயாமல் சுழலத் தொடங்குகிறது சீரற்ற ஓசையோடு
நிதானம் தப்பாத ஒரு மின்விசிறி

அறைப் புழுக்கம் தவிக்கச் செய்யும் கனவின் சுவரெங்கும்
உதிரத் திணறும் வர்ணப் பூச்சில் பஸ் ஒன்று எரியும் ஓவியத்தை
முனைமழுங்கிய பென்சில் கொண்டு கிறுக்கிய
நண்பனின் மகள் ஒருத்தி
கை நிறைய க்ரேயான்களோடு கதவுத் தட்டும் கணத்தில்
அடங்கிப் போயிற்று
மின்விசிறியின் கர்ரக் சத்தம்

*****

நன்றி : ' யாவரும். காம் ' இணைய இதழ் [ நவம்பர் - 20 -2013 ]

http://www.yaavarum.com/archives/1622

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக