திங்கள், ஏப்ரல் 21, 2014

ஓடும் நதியிலிருந்து ஒரு கை நீர்..

*
என்னை நோக்கி மரணம் வந்து கொண்டிருக்கிறது
நீயென் கைகளை இறுகப் பற்றிக்கொள்

இந்த உலகை விட்டு நீங்கும்போது
உன் கைகளில் என்னைக் கொஞ்சம்
மிச்சம் வைத்துவிட்டுப் போக விரும்புகிறேன்

உன்னிடமிருந்து தான் அந்த விடைபெறல்
நிகழ வேண்டும்

இதுவரை நாம் பேசித் தீர்த்த இரவுகள்
மொத்தத்தையும் நீயுன் பார்வையில்
தைத்து வைத்திருப்பதை கண்ணுற்று விலகுதல்
ப்ரியமென்கிறேன்
துணை செய்

ஓடும் நதியிலிருந்து ஒரு கை நீர் அள்ளி
வார்ப்பதைப் போல்
என்னைத் தூக்கிக் கொடு
நான் விரும்பும் என் மரணத்திடம்

அப்போது
உன் கைகளில் சொட்டும் நதியில்
கொஞ்சம் மிச்சம் வைத்துவிட்டுப் போகிறேன்

****

நன்றி : ( மலைகள்.காம் ) [ ஜூன் - 17 - 2013 ]

http://malaigal.com/?cat=8&paged=9

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக