புதன், ஏப்ரல் 30, 2014

மூன்றாம் இலையின் நடன அசைவு..

*
ஏதேன் தோட்டத்தில் பழுத்த இலைகள்
மூன்று சிரிக்கின்றன

முதலாம் இலை ஆதி வெளிச்சத்தை குடித்து வளர்ந்து
தன் பழுத்த நரம்புகளில் ஊறும் பொன் கதிர்க் கால்களின்
நக ஈரத்தை மினுக்குகிறது

இரண்டாம் இலை சாத்தானின் சர்ப்ப நாப்பிளவில்
துளிர்க்கும் எச்சில் பட்டு
பச்சைமை நழுவுகிறது தோட்டத்து புல்வெளியெங்கும்
எல்லைமரம் வரை நீளும் பொருட்டு

மூன்றாம் இலையின் நடன அசைவில் பெருகும்
இசைக் குறிப்புகள் சூழ் குழைக்கிறது அந்தி நிறம் பூசிய
ஆதாமின் தனிமையைப்
பழுக்கச் செய்து விலாவை உறுத்தி

கடவுளின் நீள் வெண்ணிற அங்கியில் மிதக்கும்
முகிலொன்று அவிழ்ந்திறங்குகிறது
ஏதேன் தோட்டத்தின்
பழுத்த மூன்று இலைகளின் மீதும் நிறமற்று

*****

நன்றி  : ' தீராநதி ' இலக்கிய மாத இதழ் [ நவம்பர் 2013 ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக