புதன், ஏப்ரல் 30, 2014

கனவின் முதுகில் மகரந்தம் தூவும் பட்டாம்பூச்சி..

*
என் நிலத்தில் நடும் துயரத்தில் பறக்காத
தனிமை நீ

மணிக்கட்டு நரம்பூடே ரத்தத்தில் நகரும் நினைவும்
மௌனத்தைச் சொல்ல விடாமல் தவிக்கச் செய்யும் நாக்குழைவுமாய்
உன் பிரியத்தைக் கோர்த்து வைத்திருக்கும் கோப்புகளைத் திறந்து வை
அதன் அடுக்குகளில்
பறவையின் சிறகாகப் படிந்திருக்கும் நம்
முத்தங்களைப் பிரித்தெடு

கொஞ்சநேரம் நம் வனத்தின் இருளில் பறக்க விரும்புகிறேன்
எனக்கு உதவி செய்

நீயென் இராப் புதிரின் ஊற்றுக்கண்
உன்னைப் பருகத் துடிக்கும் உதடுகள் வேறொரு செடியில் பூத்திருப்பதாக
கனவின் முதுகில் மகரந்தம் தூவுகிறது பட்டாம்பூச்சி

வர்ணங்களோடு நடுங்கும் என் விரல்களைப் பற்றிக்கொண்டு உயர்ந்தெழு
சுகந்தம் வீசும் உதடுகள் தேடு
ததும்பும் முத்தத்தின் மீதிறங்கி என்னை மிதக்க விடு

தக்கையாகிப் பிறழும் அசைவின் கணத்தில் உன் கரை ஒதுங்கும்
நொடிக் கொண்டு
அந் நிலத்தில் புதைத்து வை
வனமெங்கும் பரவும் துயரத்தில் நீ பற

*****

நன்றி : ' யாவரும். காம் ' இணைய இதழ் [ டிசம்பர் - 21 - 2013 ]

http://www.yaavarum.com/archives/1758

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக