வியாழன், ஜூலை 31, 2014

நெஞ்சு அதிர இறைஞ்சும் மன்றாடலின் முகடு

*
வன்மம் கொப்புளித்து வெடிக்கும் குருதி சூட்டில்
மனத்தின் மூர்க்கம் பூசிக்கொள்ளும் முகத்து தசைகள்
கோணுகின்றன

கைப்பற்றி முறுக்கிட தீரும் அவஸ்தையின் சொற்கள் கூட்டம்
வெளியேறுகிறது ஒற்றை அசௌகரியத்தை
முற்றிலும் நொறுக்கி

நெஞ்சு அதிர இறைஞ்சும் மன்றாடலின் முகட்டிலிருந்து
நழுவி வீழ்கிறது ஒப்பந்த வாக்குறுதிகள்
குற்றஞ்சாட்டி அடையாளங்காண பயணப்படும் பாதங்களை
கொடிச்சுற்றிக்கொள்ள பிரயத்தனமாகிறது
தனிமையொன்றின் அகாலம்

நீர்மைப் பொழுதுகளை மௌனக்கோப்பை தளும்ப
ஊற்றி பரிமாறுகிறேன் யாருமற்ற மேஜையின் விளிம்பில்

'சியர்ஸ்' சொல்லும் ரகசிய குரல் ஒன்று
இருள் மூடிய சூழல் பாதையின் அடர்த்தியிலிருந்து கசிகிறது
என்னை நோக்கி

எட்டிப் பிடிக்கும் ஆவலற்று வெறுமனே காயும் பகல் வெப்பம் குறித்து
கனவு காண்கிறேன்
காணுதலுக்கும் அடைதலுக்குமான கால வித்தியாசத்தில்
சுண்டிவிடப்படும் தருணங்களை
எனக்கென உயர்த்திய கோப்பைக்குள் ஊற்றுகிறேன்

அனுபவம் கிறங்கி உரைத்த வெயிலை மீண்டும்
பருகிட பரிந்துரைக்கிறீர்கள்

வன்மம் கொப்புளித்து வெடிக்கும் குருதி சூட்டை
அறை கூரைக்குள்
வரைந்து வைத்திருக்கிறேன்

நெஞ்சதிர இறைஞ்சிய மன்றாடலின் அசௌகரியத்தைப் பற்றி
விவாதிக்கும் மாலை நேரம்
அத்தனை வெதுவெதுப்பாய் இனங்கண்டு கொள்கிறது

மனத்தின் மூர்க்கத்தை
முகத்து தசைகளின் கோணல்களை
செத்துவிட்ட ஒரு ப்ரியத்தை

****

நன்றி : ' யாவரும்.காம் ' இணைய இதழ் [ ஜூலை - 19 - 2014 ]

http://www.yaavarum.com/archives/2614

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக