வியாழன், டிசம்பர் 22, 2011

பிரத்யேக நிறம் சூழ்ந்த நடைபாதை..

*
மரணத்தின் குறிப்பேட்டில்
கையெழுத்து வாங்கும் தாதி
அவசரமாகத்
தவிர்த்து விடுகிறாள்
கேள்விகளையும்
அதற்குரிய பார்வைகளையும்

திறந்து அவளை உள்வாங்கிக் கொள்ளும்
கண்ணாடிக் கதவுக்கு அப்பால்
நிதானமாய் நீள்கிறது
பிரத்யேக நிறம் சூழ்ந்த ஒரு நடைபாதை

நம் கைகளோடு தங்கிவிடுவது
ஒரு பேனா மட்டுமே

******

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் [ டிசம்பர் - 26 - 2011 ] 


http://www.navinavirutcham.blogspot.com/2011/12/blog-post_26.html

குற்றத்துக்கான புள்ளி..

*
திருந்தி விடுவது பற்றி விவாதித்துக் கொண்டிருந்த பகலில்
சூழ்ச்சிக்கான முதல் புள்ளியைக் கையில் வைத்திருந்தேன்

நாளது வரை நடந்த சம்பவக் குறிப்புகள்
எட்டு மடிப்புக் காகிதக் கோடுகளின்
அழுக்கேறி கிழிந்திருக்கிறது

ஒவ்வொரு எழுத்தின் வன்மத்தையும் அலசித்
தழுதழுத்த நாக்கின் நுனி சிவந்திருந்தது

சுலபம் என்கின்றன மனச் சுவர்கள்
பாதுகாப்பின் உச்சியில் நீரோடும் மின்சாரக் கம்பிகள்
தருணங்களின் கணத் துளிகளை ஆவியாக்குகின்றது

திருந்தி விடுவது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் பகல்
எங்கோ ஓர் இருட்டின் தனிமையில்
சத்தமில்லாமல் திறந்து விடுகிறது குற்றத்துக்கான
இறுதிப் புள்ளியை

******

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் [ டிசம்பர் - 25 - 2011 ] 


http://www.navinavirutcham.blogspot.com/2011/12/blog-post_25.html

முகமில்லா துயரின் உருவம்

*
பேனாவிலிருந்து கையில் கசிந்து விட்ட
மையைத் துடைத்துக் கொள்ள
காகிதம் தேடுகிறேன்

உனது மேஜையில் கையருகே
பாதி படித்த நிலையில் வைத்திருந்த
கவிதைத் தொகுப்பொன்றின்
பக்கத்தை சட்டென்று கிழித்து
கொடுத்து விட்டாய்

அவசரமாய் துடைத்த பின் உரைத்தது

உள்ளங்கை முழுக்க
கவிதையொன்று வார்த்தைகளாகி
உருக் குலைந்ததும்
முகமில்லா ஒரு துயரின் உருவம்
ஆள்காட்டி விரலில்
துருத்திக் கொண்டு உட்கார்ந்திருப்பதும்

******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ டிசம்பர் - 22 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17864&Itemid=139

கோட்டுச் சித்திரமாய் அசையும் மழைத் தும்பி..

*
வெளியேறும் பதட்டத்தோடு 
ஜன்னல் கண்ணாடியில் மோதிய வேகத்தில்
கிர்ரென்று சிறகுகள் துடிக்க
மயங்கிக் கிடக்கிறது மழைத் தும்பி

பால்கனிவழித் தெரியும் வானில்
வெளுத்த வெயிலில் 
கோட்டுச் சித்திரங்களாய் அசையும் தும்பிகள்
மழையைப் பாடுகின்றன

என் அறைக்குள் ஒற்றையாய் நுழைந்துவிட்ட தும்பி
மழைப்பாட்டை முதலில் எனது
ட்யூப் லைட்டின் நீளக் குழல் முழுதும்
எழுதிக் கொண்டிருந்தது

பிறகு நிலைக் கண்ணாடியில் 
வழியச் செய்தது மழையின் நிழலை

மழைப்பாட்டின் ரீங்காரம்
அறையிலிருந்து மெல்ல நழுவி
மொட்டைமாடியெங்கும்  இசைத்தது
அகப்படும் அனைத்தையும்
நனைத்துக் கொண்டு

ஜன்னல் கதவிடுக்கினூடே
மழைச்சாரல் பட்டுத் தெறிக்கக்
காத்திருக்கிறது
இன்னும் அரை மயக்கத்தில்
என் மழைத் தும்பி

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ டிசம்பர் - 14 - 2011 ] 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17788&Itemid=139





எங்கும் தேங்கி நிற்கும் உனது மணித்துளிகள்..

*
ஒரு அனுமதி என்னைக் கொஞ்சம்
அசௌகரியப்படுத்துகிறது
அது உன் அறைவாசலில் எப்போதுமே நிரந்தரமாய்
ஸ்டூல் ஒன்றைப் போட்டு வைத்திருக்கிறது

வருவதும் போவதுமான உத்தரவுகளை
அச்சிட்டுக் காகிதத்தில் வைத்திருக்கிறாய் 

உனக்கான மணித்துளிகள்
உனது இருப்பிடத்தில் தொடங்கி அலுவலகம் வரை
மழைக்குப் பின்னான நீர்த் துளிகளைப் போல்
எங்கும் தேங்கி நிற்கிறது
முறை செய்யப்பட்ட பாதுகாவலோடு

சின்னஞ்சிறிய உதவி ஒன்றைக் 
கோரவும்
ஒரு பால்ய நினைவைப் பகிரவும்
காத்திருக்க நேரும்
ஒரு அனுமதி என்னைக் கொஞ்சம் அசௌகரியப்படுத்துகிறது

******

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் [ டிசம்பர் - 13 - 2011 ] 


http://www.navinavirutcham.blogspot.com/2011/12/blog-post_13.html

ஞாயிறு, டிசம்பர் 11, 2011

இலையின் கணம்

*
சின்னஞ்சிறு கைக்குள்
அடங்கிவிடும் ரப்பர் பந்து
தரை டைல்ஸின் பச்சை இலை மீது
மெத்தென்று அழுந்துகிறது

ஒரு
கணம்
இலை நெகிழ்கிறது

அவளோடு மட்டுமே
நடக்கிறதா
அவ்விளையாட்டு

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ டிசம்பர் - 12 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5098

எழுதிப் பார்ப்பதற்கான அவகாசம்..

*
அசைவதைப் போல் இருக்கிறது இரவு
அசைவற்றதாக கனக்கிறது அதன் இருள்

எதையும் ஒரு முறை
எழுதிப் பார்ப்பதற்கான அவகாசத்தை
அனுமதி மறுக்கிறது நிமிடங்களை
நகர்த்தும் நொடிமுள்

தொண்டைக்குள் சிக்கும் வார்த்தைகள்
உறுத்தத் தொடங்குகிறது
அர்த்தங்களை

நீயோடு தைத்து வைத்திருக்கும்
தனிமையின் முனை மடங்காமல்
நானின் விரல் நெருடும் லகு
அசைவதைப் போல் இருக்கிறது நம் இரவு
அசைவற்றதாகக் கனக்கிறது இந்த இருள்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ டிசம்பர் - 12 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5098

காகிதங்கள் மீதமரும் உடைந்த சதுரங்கள்

*
வராண்டாவில்
திசைக்கொன்றாக
உடைந்து கிடக்கிறது வெயில்

அதன் சதுரங்களை சீராக அடுக்கி
மேஜையில்
காகிதங்கள் பறக்காமலிருக்க வைத்தபடி
கைகளைத் தட்டி நிதானமாய்
பிடறித் துள்ள நடந்து போகிறாள் தான்யா

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ டிசம்பர் - 12 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5098

முன்னெப்போதையும் விட..

*
வேண்டாம் என்று சொல்ல முடிவதில்லை
இறங்கிக் கொண்டிருக்கும் ட்ரிப்ஸில்
சொட்டுகளின் வேகம் மிதமாய் நரம்புக்குள்
சொருகி மீட்கிறது இருப்பை

பிம்பங்கள் ஒன்றின் மேல் ஒன்றாகி
கலங்கி நெளிகிறது வர்ணக் கசிவாக மட்டும்

உயிராகி வெளியேறி உள் நுழைந்தபடி சதா
போக்குக் காட்டுகிறது வாழ்வு

இடது புறங்கையின் நாள வீக்கத்தில்
புடைத்துக் கொண்டு நிற்கிறது
ஒரு ஏககால நினைவு

சுருக்கென்று குத்தும் அவ்வலியை
மென்மையாய்க் கட்டைவிரல் கொண்டு அழுத்தி
நீவுகிறாள் உதடுகள் துடிக்க

நினைவுக் கரைந்து 
முன்னெப்போதையும் விட இதமாக
இளமஞ்சள் ஒளிப் படரத் தளும்புகிறது
கண் விளிம்பில்..

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ டிசம்பர் - 12 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5098

மௌனங்களை இழை பிரித்துத் தொங்கும் நிறம்..

*
எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கு இருப்பதாக
சொல்லிக் கொண்டான்
மிகச் சிறிய துரோகத்திலும் கூட
அந்த நேர்த்தியை நுட்பமாய்
செய்து பழகினான்

மௌனங்களை இழை இழையாய்ப் பிரித்து
அறையெங்கும் தொங்க விட்டிருந்தான்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம்
அதன் நிறங்களின் நிழல்
சுவர்களில் எப்போதும் வழிந்து கொண்டேயிருக்கும்
அதன் நீள அகலங்கள் கணக்கிடப்பட்டிருந்தன

அவனுடைய தனிமையை
எப்போதும் பகிர்ந்து கொண்ட மின்விசிறியில்
முந்தின இரவு குளிருக்கென பயன்பட்ட
போர்வையை முடிச்சிட்டுத் தூக்கில் தொங்கிய
அவனது உடலுக்கும்
தரைக்குமான இடைவெளியை
கச்சிதமாக முடிவு செய்திருந்தான்

காவல்துறை எழுதிய மரணக் குறிப்பில்
அது பதிவாகவில்லை
துப்புத் துலக்கித் தேடப்பட்ட ஏதோ ஒன்று
அத்தனை ஒழுங்குகளையும் கலைத்துவிடும் காரணத்தையும்
அவன் விட்டுச் சென்றிருந்தான்

******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ டிசம்பர் - 11 - 2011 ]
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17749&Itemid=139 
நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் [ நவம்பர் - 26 - 2011 ]
http://www.navinavirutcham.blogspot.com/2011/11/blog-post_26.html