சனி, ஜனவரி 16, 2016

ஒரே ஒரு முறை மட்டும்..

*
முதன் முதலாக
நீயுன் இரவை ரகசியமாய் திறந்தது ஏன்


முதன் முதலாக
வெட்டுப்பட்ட விரலில் இருந்து கசியும்
ரத்தத்தை ருசித்தது ஏன்


முதன் முதலாக
உனது ப்ரியத்துக்குரிய உதட்டில் முத்தமிட
துணிந்தது ஏன்


முதன் முதலாக
ஒரு கெட்டவார்த்தையை உச்சரித்துப் பழக
முயன்றது ஏன்


முதன் முதலாக
வெளிச்சம் குறைந்த கதவடைக்கப்பட்ட அறைக்குள்
கிடந்து கதறி கதறி அழுதது ஏன்


முதன் முதலாக
பாடையொன்றை தோளில் ஏற்றி வைத்தபோது
தெருவில் சிதறும் மலர்களுக்காக வருத்தப்பட்டது ஏன்


முதன் முதலாக
நேசத்திற்கினிய தோழி தொடர்ந்து அழைத்தும்
அழைப்பை ஏற்காமல்
செல்போனை தண்ணீருக்குள் விட்டெறிந்தது ஏன்


முதன் முதலாக
ஓர் அந்நிய உடல் மீது உருக்கொண்ட வேட்கையை
என்ன பெயரிட்டு அழைக்கலாம் என யோசித்தது ஏன்


முதன் முதலாக
விருப்பப்பட்டு வாங்கிய நாய்க்குட்டியை
நெரிசல் மிகுந்த சாலையோரம் கைவிட்டது ஏன்


முதன் முதலாக
கைக்கு வந்து சேர்ந்த ஒரு நீண்ட காதல் கடிதத்தை
ஒரு முறை மட்டும் வாசித்து முடித்து நெருப்பிட்டு
எரித்தது ஏன்


முதன் முதலாக
காமத்தை அனுபவிக்க நேர்ந்த இரவில்
வேட்டை மிருகத்தின் தீப்பிழம்பு கண்களை
நினைத்துக் கொண்டது ஏன்


முதன் முதலாக
ஒரு துரோகத்தின் நிழலிலிருந்து மீளத் தெரியாமல்
முகத்தை மடியில் புதைத்துக்கொண்டு
தற்கொலைப் பற்றி யோசித்தது ஏன்


முதன்முதலாக துளிர்த்த
இன்னொரு காதலுக்குள் அவ்வளவு சிலிர்த்தது ஏன்
அந்த முத்தம் அத்தனை இனித்தது ஏன்
ததும்பிய காமத்துக்குள் இருள் குழையக் குழைய மிதந்து ஏன்

 
முதன் முதலாக
உனது ரகசியத்தை நேசிக்க கிடைத்த வாய்ப்பை
பெய்து முடித்த மழையின் கடைசி சொட்டுக்குள்
ஒளித்து வைத்தது ஏன்

**** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக