வெள்ளி, ஏப்ரல் 27, 2012

பரிமாறலில் தவறி விழும் சொற்களின் வெளிச்சம்..

*
கைவிடப்பட்ட வெளியின் திசை
இலக்கின்றி விரியும் வெட்பத் தகிப்பை
இரவின் தனிமை நிழலோடுத் திருகிக் குவிக்கிறது

பரிமாறலில் தவறி விழுந்த சொற்களின் வெளிச்சம்
அணைந்து விடாத அர்த்தங்களை
மனதின் ரகசிய அறைகளில் பத்திரப்படுத்துகிறது

மூர்க்கமழிந்த ஓர் ஓசை காற்றைப் பற்றிக்கொண்டு
நினைவுத் துளை வழியே சுழன்று
காதருகே விழுகிறது முற்றிலும் வலுவிழந்து

நீயென்ற ஒற்றைப் பதத்தில்
சுழியிட்டு இழுக்கும் எனது அந்தகாரத்தை
மௌனத்துள் புதைத்தலோ மிதக்க விடுதலோ சுலபமில்லை

கைவிடப்பட்ட ஒரு வாதத்தை ஆவணப்படுத்த முயல்கிறேன்
உறுதி செய்யப்படாத ஏனைய வாக்கியங்கள்
தொடர்ந்து பிரார்த்திக்கின்றன
அபத்தமாய் விழுந்துவிடக்கூடாத ஒரு முற்றுப்புள்ளிக்காக

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 23 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5520

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக