வெள்ளி, ஏப்ரல் 27, 2012

சம்பந்தமில்லாத ஓர் உரையாடல்..

*
அது கொஞ்சம் சுலபமாகத் தான் இருக்கிறது

நன்றி மறக்கும் செயலை
மறக்காமல் நிறைவேற்றுவது

சினத்தின் நிறம் மங்கா சூட்சுமத்தை
ரகசியமாய் அடைத்து வைப்பது

வாதத்துக்கென அமைக்கப்பட்ட மேஜையின் மீது
சம்பந்தமில்லாத ஓர் உரையாடலை கிறுக்கிப் பழகுவது

நெடுநாளையச் சந்திப்புக்குப் பிறகு
பார்வைத் தாழ்த்தி பதில் சொல்வது

பால்யத்தின் ஞாபகங்களைக் கூசாமல்
பொய்ப் பூசி மெருகேற்றுவது

முதல் காதலின் கடைசிப் பொய்யை
ஆரம்பத்திலிருந்து நிஜமாக்க முயல்வது

நாட்குறிப்பின் நம்பகத் தன்மையை
தூசுத் தட்டி நிரூபிப்பது என்பது

கொஞ்சம் சுலபமாகத் தான் இருக்கிறது

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஏப்ரல் - 24 - 2012 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=19509&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக