வியாழன், ஏப்ரல் 26, 2012

இரு புள்ளிகளுக்கிடையே நீளும் சிகப்பு கோடுகள்..

*
ஒரு விபத்து நடப்பதற்கான
அத்தனைக் காரணங்களையும்
நான் கையில் வைத்திருக்கிறேன்

ஒரு சொல்லிலிருந்து இன்னொரு சொல்லுக்கு
பயணிக்க நேரும் குறுக்குப் பாதையாக

ஓர் அர்த்தத்தின் சுண்டுவிரலில்
தொங்கிக் கொண்டிருக்கும் இன்னொரு அர்த்தமாக

தலைகுனிந்தபடி பக்கப் பார்வைத் திருப்பி
நெளிய விடும் நக்கல் சிரிப்பாக

ஓர் ஆதுர முத்தத்திற்கு பிறகு மிச்சமிருக்கும் ஈரத்தில்
குமிழ் விட்டு உடைந்து போகும் காமமாக

கூச்சல் குழப்பத்தோடு சிதறும் இரவின் துணுக்கில்
ஒட்டிக் கொண்டு வெறிக்கும் மெளனமாக

நொடிக்கொரு முறை நினைவை மீட்டி மீட்டி
இசைக்க நேரும் அபத்த நரம்பாக

எந்தவொரு முன்னறிவிப்பின் அடிக்குறிப்பிலும்
இரு புள்ளிகளுக்கிடையே நீளும் சிவந்த கோடாக

ஒரு விபத்து நடப்பதற்கான
சில காரணங்களை நான் கையில் வைத்திருக்கிறேன்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 9 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5460

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக