செவ்வாய், மார்ச் 30, 2010

மனிதக் காட்சி சாலையின்..பிரம்மாண்ட கதவுகளைக் கொண்டுள்ள இரவுகள்..

*
மனிதக்காட்சி சாலையின்
பிரம்மாண்ட கதவுகளைத்
திறந்துவிடுகிறது சூரியன்..

சோம்பல் முறித்து விழிக்கின்றன - அவை..
அதிகாரப் பற்களை சுத்தம் செய்து
சொற்களைக் கூர் தீட்டுகின்றன..

அவை -
நாகரீகங்களை உடுத்தியபடி
கலாச்சாரங்களை ஜெபிக்கின்றன..
பண்பாட்டைப் பிரார்த்திக்கின்றன..

சொல்லப்பட வேண்டிய பொய்களைக்
கட்டளையிடுகின்றன..
உழைப்பைச் சுரண்டுவதற்கான
நகங்களைச் சரிபார்த்துக் கொள்கின்றன..

அவை -
பதப்படுத்தப்பட்ட
கூலிகளின் வியர்வைத் திரவங்களைத் தொட்டு
தம் காலணிகளைப் பளபளக்கச் செய்கின்றன..

லாபங்களை ஈட்டுவதற்கான
சிறிய முதலீடுகளை
பர்ஸ்களில் திணித்துக் கொள்கின்றன..

அவை -
வஞ்சம்..
சூழ்ச்சி..
தந்திரம் - துரோகம் - ராஜதந்திரம்..
என
பன்முக அனுபவ முதிர்ச்சிகளோடு..

தெருவில் -
பஸ்ஸில் -
ரயிலில் -
அரசு அலுவலகங்களில் -
கண்ணாடிக் கட்டிடங்களில் -
தியட்டர்களில் -
கடற்கரைகளில் -
புத்தகச் சந்தைகளில் -

இரண்டறக் கலந்து விடுகின்றன..
மீண்டும்
இரவின் பிரம்மாண்ட கதவுகள்
அடைபடும் வரை
ஆட்டம் போடுகின்றன..!

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை .காம் ) மார்ச் -2010

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2611

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக