வியாழன், பிப்ரவரி 27, 2014

எரிந்து கொண்டே இருக்கும் இரவு..

*
யாரையும் அனுமதிக்கத் தோன்றவில்லை
உன் வெளியேற்றத்துக்குப் பின்

இந்த மேஜையின் தனிமையில்
எரிந்து கொண்டேயிருக்கும் இரவை
அதில் ஊற்ற ஊற்ற நிரம்பாத மதுவை

என்
போதை விரல்கள் தொடர்ந்து மீட்டுவதை
சிணுங்க ரசித்துக் கொண்டேயிருக்கிறது
நம் கண்ணாடிக் கோப்பை

உதடுகள் அழுந்தத்
துடைத்து வைக்கும் நாப்கின்னில்
ரேகை நெளிய மயங்குகிறது சொற்கள்

உச்சரிக்க விரும்பாத மௌனத்தை
மிதக்க விடுகிறேன் தரையில்

நடன அசைவை ஒத்த அதன் இணக்கத்தில்
நிழலென நீள்கிறது வாசல் வரை
எனது இருப்பு

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூன்  - 25 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5717

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக