வெள்ளி, பிப்ரவரி 28, 2014

மாய மானின் உடல்மொழி

*
ஒரு நிராதரவின் வாசல்
எப்போதும் திறந்தே கிடக்கிறது
வருவோரும் போவோரும் விருந்தினர்கள் என்கிறாய்

நின்று கொண்டிருக்கும் வரிசையைக் கைவிடச் சொல்லி
நிர்ப்பந்திக்கிறாய்
சத்தியங்களை குறிப்புகளாய் எழுதித் தூது அனுப்புகிறாய்

அச்சுறுத்தும் அமைதியைப் பரிசளிக்கிறாய்
பதில்களேதுமற்ற மௌனத்தை உச்சரித்துப் போகிறாய்

ஒரு மாய மானின் உடல் மொழியை
கற்றுக் கொள் என்று மின்னஞ்சல் அனுப்புகிறாய்

எனது வனத்தின் அத்தனை விருட்சங்களும்
இலை இலையாக சதா உதிர்த்துக் கொண்டே இருக்கிறது
என்னை

சருகாகும் வரை காத்திருப்பதாக
என் மீது வெயில் பூசுகிறாய்
உடையும் என் தருணத்தை கையிலெடுத்து
உன் காற்று வெளியில் பொடித்துத் தூவுகிறாய்

நிறமற்ற வண்ணத்துப் பூச்சியின்
சிறகில் படிந்துவிடுகிறேன்

மாய மானின் மருண்ட விழியாகி என்னை வெறிக்கிறாய்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட்  -13 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5874

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக