வியாழன், பிப்ரவரி 27, 2014

தொலைதலுக்கும் அடைதலுக்குமான வெற்றிடம்

*
பெரிய மதில்களுக்கு பின்னே
வாசல் இரும்புக் கேட்டிலிருந்து தெரியும்
நீண்ட வராண்டாவில்
சற்று முன் யாரோ எழுந்து போன பிறகும்
ஆடிக் கொண்டிருக்கிறது ஒரு
சாய்வு நாற்காலி

துண்டு நூலோடு ஏதோவொரு குழந்தையின்
கையிலிருந்து நழுவி
காற்றில் மிதந்து உயர்கிறது
வர்ணங்கள் நிறைந்த ஒரு பலூன்

தெரு விளக்குகளின் சொற்ப மஞ்சள் ஒளி பூசிய
கான்க்ரீட் கட்டிடங்களின் இருண்ட மதில்களில்
அங்குமிங்குமாக தன் குட்டியின்
பதில் குரலொன்றுக்கு ஏங்கி அழைத்தபடியே
விரைகிறது ஒரு சாம்பல் நிறப் பூனை

கழுத்துப் பட்டையோடு
தொலைத்துவிட்ட தெருவின் திசையறியாமல்
ஓடிய தெருவிலேயே மீண்டும் மீண்டும்
ஓடிக் கொண்டிருக்கிறது வளர்ப்பு நாயொன்று

ஒவ்வொன்றும் ஒன்றிலிருந்து பிரிந்து
வேறொன்றில் தஞ்சமாகிப் போனாலும்

தொலைதலுக்கும் அடைதலுக்குமான
வெற்றிடத்தில்
தவிப்பின் வலி வரையும் சித்திரம்
வர்ணங்களற்று உறைகிறது அந்தரத்தில்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட்  - 6 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5843
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக