திங்கள், மார்ச் 31, 2014

கன்னம் அழுந்தத் தொலையும் வனத்தின் கதவுகள்..

*
மெழுகுவர்த்தியை ஊதி அனைத்துவிட்டாய்
மெல்லிய வெண்புகை நூலாய் வளைந்து பிரிகிறது

தீயின் மிச்ச வாசத்தில் கிறங்கிச் செருகும் பார்வையோடு
அழைக்கும் கண்கள் தாழ்வதை
சுவரிலிருந்து குத்துகிறது கடிகார முள்

வெற்றுடல் மீது பரவும் மூச்சுக்காற்றில்
ஊதி அணைத்த வெப்பமொன்று மிதப்பதைப் பற்றி
முணகுகிறாய்

சயன நொடியின் நிறம் பிறழ்வதை தீண்டும் விரல் லயிக்கிறது
இடும் முத்தச் சதுப்பில் புதைகிறது நாணலின் கால்கள்

பொங்கித் தாழும் மார்பில் அமிழ்கிறாய்
கன்னம் அழுந்தத் தொலையும் வனத்தின் கதவுகள்
வாசத்தோடு திறந்துக் கொள்கிறது

நுழையும்போது எதிர்க்கொள்ளும் இருட்டில்
தடவி நகரும் சுவற்றில் தட்டுப்படுகிறது வெண்புகை நூலின் நுனி

ஓசையின்றி சார்த்திக்கொள்ளும் கதவின் ஒலியோடு
தொடங்குகிறது துளிகளின் சாரல்

பெருகும் வெண்ணூல் நதியின் பிரவாகத்தில்
எடைக் குறைந்து தவழ்கிறது
உலர்ந்து தக்கையாகிவிட்ட ஒரு முத்தச் சருகு

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ செப்டம்பர் - 9 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6347

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக