சனி, மார்ச் 29, 2014

எண்களற்ற கடிகாரச் சதுரம்..


உத்தரவாதங்களை மறுத்தபடி நகர்கிறது பொழுது
சொற்களின் ஓரப் பிசிறுகள் தொடுவதற்கு ஏற்றதாக இல்லை

ஜன்னல் சூரியனைத் தடுத்தபடி காற்றோடு பேசிக் கொண்டிருக்கிறது
பூக்கள் நிறைந்த கொடிகளற்ற திரைச்சீலை

எண்களற்ற கடிகாரச் சதுரத்துக்குள் எண்களின் நினைவுகளை
அசைப் போட்டபடி துடிக்கிறது நொடி முள்

எழுதி வைத்துவிட்ட அர்த்தங்கள் திருப்தியற்று பெயர்களை
யாசித்தபடி அடம்பிடிக்கின்றன தாமே மாறிவிடுவதாக
அச்சுறுத்தும் தொனியில்

நுணுக்கங்களை அணுகுவதற்கு அதனினும் நுண்ணிய
காரணிகள் அவசியமாகிறது

அக்காரணக் கருவிகளை செய்துப் பழக ஒத்துழைக்க மறுக்கும்
எழுத்துக்கள்
ஆய்த வட்டங்களுக்குள் ஒளிந்துக் கொண்டு பயன்படுத்தத் திணறும்
சூத்திரங்களை பிரகடனப்படுத்துகிறது

உத்தரவாதங்களை மறுத்தபடி நகரும் சொற்களின் பொழுதுகள்
தொடுவதற்கு ஏற்றதாக இல்லை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மார்ச் - 11 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6195

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக