திங்கள், மார்ச் 31, 2014

நினைவுச் சாரலின் கணக்கில்லா முகங்கள்..

*
இந்த அந்தியின் தாழ்வாரத் தனிமையை
கைத்தட்டி அழைக்கிறது ஒரு திடீர் மழை

திண்ணைப் பூச்செடிகளின் முகமெங்கும்
புள்ளிப் புள்ளியாய் ஈரத்துளிகள்

வீசும் காற்று மழையைக் கரம் பற்றி
முற்றத்து நிலமெங்கும்
ஆடிக்களிக்கிறது ஓர் ஊழிக் கூத்தை

கிணற்றடி உலோக வாளி நிரம்பி
நடந்தேறுகிறது ஜலதரங்கம்

கூரையிலிருந்து நூல் நூலாகக் கீழிறங்கும்
மழை நீர்க்கொடியில் வேர்ப் பற்றி அரும்புகிறது
தன்னிச்சையாய் ஒரு புன்னகைப் பூ

மழை பெய்யும் தருணமெல்லாம்
மனத்துக்குள் நினைவுச் சாரலில்
நனைந்தபடியே இருக்கின்றன கணக்கில்லா முகங்கள்

என் தன்னந்தனிமையை ஈரப்படுத்த
பாசத்தோடு விரல் நீட்டி பிடித்துக்கொள் என்கிறாள்
எப்போதும் இந்த மழைத் தோழி

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ செப்டம்பர் - 12 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6377

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக