சனி, மார்ச் 29, 2014

உத்திகளை வசப்படுத்தும் தந்திர எல்லைகள்..

*
அப்படி என்ன நடந்துவிட்டது

பிரியத்தின் குறுவாள் முனையில் பொய் சொட்டுகிறது
தவறென ஒத்துக்கொண்ட மன்னிப்பு பாதங்களில் தாரை வார்க்கப்படுகிறது

கை குலுக்கும் துயரங்களின் ரேகை நதியில் படகாகி மிதக்கிறது
துடுப்புகளற்ற மௌனம்

காரணங்களோடு வீசும் துருவப் புயல்களாகி வார்த்தைகள் குளிர்ந்து
அர்த்தங்கள் உறைகிறது

உத்திகளை வசப்படுத்தும் தந்திர எல்லைகளில்
நட்டு வைத்த சமாதானக் கொடியொன்று அரைக்கம்பத்தில் பறக்கிறது

துரோகம் சுமக்கும் அமில ஊற்றை மிடறு மிச்சமின்றி குடிக்கும்படி
உத்தரவொன்று கதவில் ஒட்டப்படுகிறது.

மிரள மிரள இந்த உலகின் குரூரத்தை வெறித்துக் கொண்டிருக்கும்
இருளின் அகாலத்தில்
கைப்பேசியில் வரும் உனதழைப்பை  எப்படி ஏற்பேன்

அப்படி என்ன நடந்துவிட்டது
என்றொரு குறுஞ்செய்தி ஒளிர்கிறது உனது பெயர் ஏந்தி

அப்படி என்ன நடந்துவிட்டது

பிரியத்தின் குறுவாள் முனையில் குத்துப்பட்டு
பொய் சொட்டுகிறது

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மார்ச் - 25 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6205

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக