திங்கள், மார்ச் 31, 2014

கரை மேவும் மரத்தின் தாழ்ந்த கிளை..

*
என் மதகொன்றின் நிழல் காவி இழுத்தபடியே
விரைகிறாய் எங்கிருந்தோ புறப்பட்ட நதியென

சொற்கள் சொற்களாய் சரம் தொடுத்து உதிரும்
அர்த்த இதழ்களில் மௌனத் தடம் ஊறும் முத்தம் ஈகிறாய்

கரை மேவும் மரத்தின் தாழ்ந்த கிளைப் பற்றும் கரம் உயர்த்தி
நிறம் உலரா செதில் நிரட விரல் நீட்டுகிறாய்

நீயாகி சலசலக்கும் நீர்க்குமிழில் உடைந்தபடி அழைக்கிறாய்
குரல் நீவி அசையும் சிறகென எனைநோக்கிப் படபடக்கிறாய்

சாயும் இளமஞ்சள் வெயிலோடு நினைவாகிறேன்
மடியேகும் காற்றழுத்தி அடர்மேக மழையாகிறேன்

சுருள் நீவிப் பிரியும் சருகின் இள நரம்பில் ஊர்ந்திட
பின்தொடர்ந்து வருவேன் நீ முட்டி நிற்கும் ஒற்றைப் புல் நோக்கி

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ பிப்ரவரி - 6 - 2013 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/22878-2013-02-06-20-10-57

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக