புதன், மார்ச் 13, 2013

பிரியத்தின் சருகு..

*
சற்று முன் வரை நீடித்திருந்தது
நீ உச்சரித்த உன் சொற்களின் நறுமணம்

இந்தப் புல்வெளியைத் தேர்வு செய்தது நான் தான்
காத்திருப்பதற்கான நாற்காலிகள் இங்கு இல்லை

ஒவ்வொரு இலையாக உதிர்த்துக் கொண்டிருக்கும்
மரங்களுக்கு கடைசி வரை ஒன்று மட்டும் புரியவேயில்லை
பிரியத்தின் சருகை
இவர்கள் ஏன் பூங்காவிலேயே விட்டுப் போகிறார்கள்

பதில் சொல்லும்படியான தனிமை என்னுடையதல்ல

சொற்ப நிழலும் பரவலாய் வெயிலும்
சிதறிக் கிடக்கும் துணுக்கு நிலப் பரப்பில்
வெப்பமூறி ஆவியாகும் கண்ணீர்த் துளிகளை
என்ன செய்ய

மழை பொய்த்த எனது தாழ்வாரத்தில்
சற்று முன் வரை நீடித்திருந்தது
நீ உச்சரித்த உன் சொற்களின் ஈரம் 


*****

 நன்றி : ( உயிரோசை / உயிர்ம.காம் ) [ மே - 5 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5569

3 கருத்துகள்: