சனி, பிப்ரவரி 28, 2009

சுவாசம்..


*
சட்டென்று பறித்த
பூவின் காம்பில் துளிர்க்கும்..
சிறு கண்ணீர்த் துளியைத் தொட்டு..

ஒரு இரங்கற்பா
எழுதத் துடிக்கும்
கவிஞன்..

காற்றைப் போல்
எங்கும் சுவாசிக்கிறான்.

********

என் எழுதாத இரவு..


*

முழுமை பெறாத
வாக்கியத்துக்குள்..
வெளிப்படாமல் காத்திருக்கும்
ஒரு
அர்த்தத்தைப் போல்..

என்
இரவும் காத்திருக்கக் கூடும்..

நான்
இன்னும் எழுதாத..
ஒரு கவிதைக்காக..

*********

ரீங்காரம்..


*

இதயம்
துடிக்கும் லயத்தில்
ஸ்ருதி சேரத் தவிக்கும்..
உன் நினைவுக் குறிப்புகள்.

மனதின்
'புன்னகை ரீங்காரம்..'
மௌனமாய் முனகும்
இதழின் வளைவில்..

பிறந்து விடுகிறது
ஒரு
அழகான இசை..!

********

அறையும்..நானும்..


*

என்
தனிமைப் புழுக்கத்தை
வைத்த கண் வாங்காமல்..
வேடிக்கைப் பார்க்கிறது
என்..
அறை சுவற்றின் 'பல்லி.'

அதன்
அசைவற்ற மௌனம்..
மேலும்
என் நிலை கெடுத்த
கணத்தில்..

ஜன்னல் வழியாக
நுழைந்த காற்று..
என்...
வியர்வைக் குடித்து மறைந்தது.

சுவர் பல்லி..
எங்கோ
ஓடி ஒளிந்துக் கொண்டது.!

*********

கரைத் தொடும் அலைகள்..


*
பிஞ்சு விரல் கொண்டு
என் சுட்டு விரல் பற்றி..
கடற்கரை மணலில்
தத்தித் தத்தி..
நடந்த
மகளின் பாதங்கள்.

இன்று..
அக்னி வலத்தில்..
மணல் உதிர்க்கும்
பாதங்கள்.

அதன்
மெல்லிய ரேகைகளில்..
ஒட்டிக்கொண்டிருக்கக் கூடும்..
கொஞ்சமாய்
அந்தக் கடற்கரை..!

***********

முற்றுப்புள்ளி..


*

உன்

இதழ்களில்

புன்னகை எழுதி..

முற்றுப்புள்ளியாக

ஒரு மச்சத்தையும்.. வைத்த அழகில்..

திருப்தியாய் முடிந்தது..

ஒரு கவிதை.


*******

பசலை..


*

வெறுமையை
பிரசவிக்கும் உன் இரவுகள்..
என்னைப் பார்க்காத
'ஒரு நாளின்'
விளைவே.

உன் கனவுகள்
விலை போகும்..
சந்தையானது
என் கண்கள்.

பேரம் முடிவுறாத நிலையில்..
அடுத்த கனவு
தயார் செய்ய
கிளம்பிவிடுகிறாய் நீ.

எழுதி எழுதிக்
கிழித்துப் போட்ட..
கடிதக் குப்பையில்..
'காதல்'
கலைந்து கிடக்கிறது...
பெருக்கித் தள்ள மனமற்று...!

************

பாதைகளின் தியானம்..

*

கண்கள் மூடித் தியானிக்க முடிவதில்லை
இடி மின்னலோடு அமைதி குலைகிறது.

இரவைக் கறந்த... பகலின் முதுகில்
எங்கோ படிந்து விட்டது.. நிலவின் நிழல்.

மனதின்.. நுனி வேர் பிடித்தபடி
ஆழத்தில் இறங்கும் எண்ணங்கள்.. பதறுகின்றன.

எங்கோ புறப்பட்டு.. எங்கோ பயணிக்கும் பாதங்கள்
பாதைகளோடு.. முரண்பட்டு.. முணுமுணுக்கின்றன.

சுவடுகள் மட்டுமே.. ரகசியம் தாங்கி
யாருக்கோ.. காத்திருக்கக் கூடும்..
நூற்றாண்டுகள் கடந்தும்..!

************

சாதுர்ய கணம்..!



*

குவியும் பார்வையின்

கீழ் நிழலில்..

துளி ஈரப் புன்னகை முனை.


மனசின் வேர்க்காலில்...

சிக்கும்

வார்த்தையின் மௌனம்..

பொருள் தேடியலையும்

மூச்சுக் காற்றில்..!


ஒற்றை எழுத்தில்

வளையும் உதடுகளில்..

காதல் படிமம்.


************

கூந்தல் மல்லிகை..!


*

உனக்காக

நான் சொன்ன

ஒவ்வொரு பொய்யும்

அழகானவை.


நீயுன்

வேலை முடிந்து

வீடு திரும்பும் வழியில்..

தெருப்புழுதியில்

கழற்றி வீசும்

கூந்தல் மல்லிகைப் போல்..

எட்டு மணி நேரத்தில்

வாடி விடுகிறது...


உனக்காக

நான் சொன்ன

ஒவ்வொரு பொய்யும்..!


***********

வெள்ளி, பிப்ரவரி 27, 2009

அறையெங்கும்...


*
பின் குறிப்பில்
சொல்ல மறந்தவை
தனிக் குறிப்பாக
எழுதிப் பழகிய
இடைவெளியில்..

முகமற்ற நேசங்கள்
கணக்கில்லாமல்
குவிந்த இரவில்..

என்
அறையெங்கும்
மௌனமாய் அமர்ந்து..
என்னை
முறைக்கின்றன
என் கவிதைகள்.

*********

வியாழன், பிப்ரவரி 26, 2009

அறுவடை..


*

என்..
நிலத்தில்
விதைத்த 'விநாடிகள்..'
ஒவ்வொன்றாய் முளைத்து..
உருக்கொண்ட
'நிமிடங்களாய்..'
அறுவடைக்குக் காத்திருக்கும்
'பயிரென்றால்..'
அந்நிலத்தை...
'மனம் '
என்றே.. கொள்ளலாமோ..?
**********

செவ்வாய், பிப்ரவரி 24, 2009

மிதவை..



*

நிலா இல்லாத வானம்..

விளக்கு இல்லாத படுக்கையறை..

நிழல் போல சூழும்..

உன்னருகே.. என் ஞாபகம்.

சொல்..!

மூட மறுக்கும் இமைகளுக்குள்ளே..

நான் எப்படி வரட்டும்.?

பூக்கள் சுமந்தா..?

நட்சத்திரம் பறித்தா..?

***********

இடமில்லா இடம்..


*

ஒரு நீண்ட

கலந்துரையாடலுக்குப் பிறகு...

ஒரு

அழகான மௌனம் என்பது..

நமக்கிடையே...

மேலும் ஒரு அழகு தான்..!

***********

உன்..


*

நீ

மெதுவாக

கண்... துஞ்ச..

தென்றல் தழுவும்

அழகாய்...

உன்

இமை இரண்டை.



**********

காற்றின் சிறகு..


*

ஸ்கூட்டியில்...
துப்பட்டாப் பறக்க..
நீ - விரைந்த நொடியில்..

உன்னைக் கடந்த
பட்டாம்பூச்சியின்..
சிறகசைவில் உருவான
கவிதை ஒன்றின்..
முற்றுப்புள்ளியாக..

உறைந்து போயிருக்கலாம்
உன் புன்னகை.

**********


ஏதோ...!

*

நீயெனக்கு எழுதிய

கடைசிக் கடிதத்தில்..

ஒரு முத்தம் இருந்தது.

கொஞ்சம் கண்ணீர்த்துளி இருந்தது.

ரயில் நிலையத்தில்..

என்னை விட்டு ...

பிரிந்தபோது...

ஏதோ சொல்லத் துடித்த

உன் உதட்டில் என்ன இருந்தது..?

***********


அகழ்வு...



*

நித்திரைத் துளிர்க்க மறந்த..

விழிப் பூக்களில்..

வெளிச்சத்தின்

கரு ஒன்றை..

தன் ஆழத்தில்

புதைத்து வைத்திருக்குமோ

இந்த இரவு..?

***********

ச்..!




*

ஒற்றைச் சொல்லில்

தவமிருந்த

முத்தத்திற்கு புரியாது...

இதழ்களின் பொறுமை.



**********

வெள்ளி, பிப்ரவரி 20, 2009

வெளி..


*

நொடிகளை விழுங்கி..

மயங்கும்.. நிமிடங்களைப் பருகி..

இன்பத்தில்.. மிதக்கிறது..

' காலம்.'


********


மடி..


*
நீ
கிளம்பிப் போன பிறகும்..
உன்
வாசனை மட்டும்
பிடிவாதமாய்
என் பக்கத்தில்..

எழுந்து போகும்
மனமற்று..
அப்படியே..
படுத்துவிட்டேன்
அதன் மடியில்.

***********

குழையும் குமிழ்..


*

துயர நரம்புகள் அறுபட்ட

ரத்த நாளங்களில்..

சிவப்பாய்க் குமிழ் விடுகிறது..

ஒரு அவஸ்தை நினைவு..

அதில்..

எப்போதும்

நீ -சிரித்துத் தொலைக்கிறாய்.


**********

உனக்கான..


*

மாடி சுவற்றின்

ஏதாவதொரு இடுக்கில்..

திடீரென்று

முளைத்து விடும்

சிறுச் செடியை போல...

முளைத்து விடுகிறது..

உனக்கான கவிதை ஒன்றும்..!


**********

லயம்..


*

இசை மீட்டும்

உன் விரல்களுக்கு..

முத்தம் ஒன்று

தருவதற்கு..

உன் பெயரை உச்சரித்த

நொடியில்..

இசை.. நின்று விட்டது.

*********

நீட்சி..


*

ஏதோ ஒரு சாயலில்..

மீண்டும் உருக்கொள்ளும்

கனவுகளில்..

புதுப்பித்துக் கொள்கிறேன்..

எப்போதோ நீ சொன்ன

வார்த்தைகளை...

பகிர்ந்துக் கொள்ளும் தொலைவில்

நீ - இல்லாதபோதும்.

***********

நிழல் வெப்பம்..


*

கண்ணீரின் துளி...

அதன் நிழலின் ஆழத்தில்...

புதையுண்ட வாழ்வின் ஈரம்..

துடைப்பதற்கு நீளும்

விரல்களுக்குப் புரிவதில்லை...

அதில்..

எழுதாத 'வரிகள்' சில மிதக்கின்றன.


**********





சிக்காத முத்தங்கள்..!

*

என் டைரியின்

மௌனப் பக்கங்களில்..

உன் புன்னகையும்...

ஈரமற்ற உன் முத்தங்களும்..

ஏராளம்..!

விரல்களுக்கு சிக்காத

அந்த.. அர்த்த வரிகள்..

என்

கண்களுக்கு மட்டும் சொந்தம்..!


*********

நித்திரை

*

குளிர் காய

நிலவு மட்டும் போதுமா?

நட்சத்திரங்களை

அனுப்பி வைக்கிறேன்...

உன் கனவுகளும்

கொஞ்சம் -

வெளிச்சமாய் இருக்கட்டும்..!

*********





வியாழன், பிப்ரவரி 19, 2009

பட்டாம்பூச்சி...


*

ஆறுதலாய்

ஒரு புன்னகை வீசு...


என் மனசுக்குள்

சிறகடிக்கும் பட்டாம்பூச்சி...

கொஞ்சம்

மூச்சு... வாங்கிக் கொள்ளட்டும்.


**********

தவிப்பு..


*

நான்

நடந்து நடந்து தொலைத்த

பாதைகளும்...

இன்னும்.. தொலைக்காத

பாதைகளும்...

என்னைத் தேடித் தவிக்காமல்..

எங்கோ ஒளிந்துக் கிடக்கக்கூடும்

இந்த நகரமெங்கும்..!


**********


நீ..!

*
கோர்த்துக்கொண்ட
விரல்களுக்குள்ளேயே...
அழுத்தி அழுத்தி..
ரகசியமாய் சொன்ன..
அந்தத் தகவல்..

தொடு வானத்தைக்
கண்ட வியப்பில்...
உன் இதழ்கள் சிந்திய
அந்த மென் புன்னகை..

பிரிய மனமில்லாமல்
நீ திரும்பிப் பார்த்த..
அந்த ஒரு பார்வை..

என் கவிதை இரவுக்கான
நட்சத்திரங்களை..
இப்படித் தான்
நீ - தூவிப் போகிறாய்..
ஒவ்வொரு நாளும்.!

**********

சனி, பிப்ரவரி 14, 2009

ஒரு சனிக்கிழமை காலை...

*

ஐந்து நாட்களின் 'அசதி..'
என் படுக்கை அறையின்..
மேற்கூரையில்...
மின்விசிறியாய் சுழல்கிறது..

கணவர் ஊரில் இல்லை..
குழந்தைகள் இன்னும் எழவில்லை..
கட்டிலின் மிச்சப் பகுதி..
பாலைவனம் போல் நீள்கிறது..

கொண்டை அவிழ்ந்த..
கூந்தலின் எரிச்சல்..
பிடரியில் வியர்க்கிறது..

ஜன்னலின் ஊடே...
கண்ணாடிக் குழாயாக..
ஒழுகும் வெய்யிலில்..
மேஜையில் நனையும்...
என் கைக்கடிகாரம்..

சுவர் ஆணியில்..
சிறைப்பட்டுத் தொங்கும் என்...
கல்யாணப் புகைப்படத்தில்...
வலைப் பின்னும் சிலந்தி...

சோம்பல் முறிக்கும்.. மனசுக்கு இதமாக...
பீங்கான் கோப்பை யொன்றில்..
என் பால்யத்தைத் தூவி..
சூடாகத் தளும்பும் 'காப்பி' கொண்டு ..
வருவாயா அம்மா...?

****************




வியாழன், பிப்ரவரி 12, 2009

தவம்.!

*
ஆலயத்தின்
மௌனத் தனிமையில்..

யாரோ..
ஏற்றி விட்டுப் போன..
ஒற்றை மெழுகுவர்த்தியில்..

அமைதியாக..
எரிந்துக் கொண்டிருக்கிறது..
ரகசியமாய்..
ஒரு ' பிரார்த்தனை '.

*********

எழுதிச் செல்லும் இருள்..


*
கவனமற்று..
கடந்து சென்ற இரவுகளில்...
இருண்ட வானின்..
ஏதோ ஒரு மூலையில்..
எரிந்து விழுந்திருக்கலாம்..
எழுதாத ' கவிதை ' ஒன்று.

*********

இசைக் குறிப்புகள்..


*
உன் கொலுசுக்குள்
ஒளிந்திருக்கும் இசையை..
நீ..
நடந்து.. நடந்து..
அரங்கேற்றம் செய்கிறாய்.
அதை..
அவசரமாய்..
குறிப்பெடுக்கின்றன..
பல ஜோடி கண்கள்.!

************

நிவேதனம்..!


*
கை கூப்பி...
விரல் கோர்த்து..
இமை கவிழ்த்து.. கண் மூடி..
உதடுகள் துடிக்க..
செய்த பிரார்த்தனையில்..

தேவதையின் சிறகுகளில்..
என் கண்ணீரின் ஈரம்..!

***********

முடிவற்ற மௌனங்கள்..


*
உன் நியாயமான கோபங்களை...
அமைதியாக.. கேட்கப் பழகி விட்ட
என் செவிக் கிடங்கில்..
உணர்வுகள் திரவமாய்..
திரளத்.. திரள..

அதைத் தொட்டு எழுத..
எத்தனிக்கும் பேனா முனையில்..
உருக்கொள்ளாமல்..
மௌனமாய் அழுகிறது..
' கவிதை ' ஒன்று..!

*************

பயம்..


*
சாத்திய கதவிடுக்கு வழியே..
கரையும் காற்றின் முதுகில்...
உருகி வழிகிறது .. ஒளியும் நிழலும்..

அதைப் பருகி...
உயிர் வாழ்கிறது... 'பயம் '.

**************

தருணங்கள்.!

*

அடகு கடை வாசலில்...
செருப்புக்குக் கீழே ஒதுங்கும்...
கரு நிழலில்... மனம் அழுகிறது.
தேற்ற... வழித் தெரியாமல்...
கால் விரல்கள்... நடுங்குகின்றன..

***********

புதிர்...


*
கனவு வேர்களில்
தூக்க இரவின் ஈர மிச்சங்கள் ...

நினைவின் நெடுஞ்சாலை வெய்யிலில்
உலரும் ஞாபக நிழல்கள்...

காலத்தின்..தீராதப் பக்கங்களில்
இன்னும் எழுதாத மனிதர்களின்..
புதிரான வாழ்க்கை..!

**********

செவ்வாய், பிப்ரவரி 10, 2009

மௌனமாகி..



*
கண்களின் மொழிப்பெயர்ப்பில்
தவறாகிப் போன ஒரு கனவை..
காதலென்று நம்பினேன் நான்.
கவிதையென்று சிரிக்கிறாய் நீ.!

ஒவ்வொரு உச்சரிப்பிலும்
அர்த்தமிழக்கும் என் வார்த்தைகளை
உளறல் என்று சாடுகிறாய்.

அடைகாத்து அடைகாத்து..
என் பொறுமைகள் எல்லாம்..
குஞ்சு பொறித்து.. இறக்கை முளைத்து..
பறந்தும் போய் விட்டன.
மிச்சமிருப்பது நான் மட்டுமே.!

மழை பொழியும் இரவுகளில்
நிலவுக்கு குடைப் பிடிக்க..
ஏங்கும் என் இதயத்துக்குள் -
நீ... ஒரு சாரல் போலாவது
எட்டிப் பார்க்கக் கூடாதா?

இப்படி...
சதா மௌனமாய்..
உனக்குள் மூழ்கி.. நீ எதைத் தேடுகிறாயோ..
அதை..
நானல்லவா வைத்திருக்கிறேன்.!

கேட்டால் தராமலா போய்விடுவேன்..?

பிடிமானம் நழுவிய ஒரு கணத்தில்..
உன் புன்னகையின் வளைவில்..
சிக்கிக் கொண்டது என் இதயம்.
நீயோ..! கைக்குட்டையால்
அதைத் துடைக்கப் பார்க்கிறாய்.!

உன்
மீசை முடி ஒவ்வொன்றும்..
சிரமப்பட்டு சிரமப்பட்டு வரைந்ததாகவே..
வெளிப்படுகிறது எப்போதும் உன் புன்னகை.!

அதை
எனக்குப் பரிசாகத் தர..
உனக்கேன் இத்தனைத் தயக்கம்.?

*************




வெள்ளி, பிப்ரவரி 06, 2009

வழிகள்..

*
காலத்தின் குரலில் ஈனசுரம்.,
வலிமையற்று வெளிவரும் வார்த்தைகள்.
அர்த்தம் மழுங்கிய கத்திமுனை..
தொண்டை அழுத்துகிறது.

நீ, என் எதிரில் நிற்கும் நிஜத்தை-
என் நிழல் ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

நான் என்றோ எழுதிய..
என் பழைய டைரி ஒன்றில் -
நீ புதையுண்டு கிடப்பதாய்..
திடமாக நம்புகிறோம்.. நானும் - என் பேனாவும்.

என் கண்களின் ஒளியில்..
உன் உருவம்..
கருப்பு - வெள்ளையாக கலங்குவதை..
என் மனம் கேலி செய்கிறது.

நீ -
என், நேற்றைய இரவின்.. கனவைப் போல..
வெளுத்து வெண்மையாகி..
மறைந்துவிடவே விரும்புகிறேன்.

நான் -
அடுத்து வைக்க எத்தனிக்கும்...
பாதச்சுவட்டிற்கு குறுக்காக..
நீயேன் இன்னும் நிற்கிறாய்?


*********

பிச்சை !


*
ஒளிப் பிழம்பைத் தொட்டு ருசிக்க..
என் கனவின் நாவில் ஒரு ப
சி..!

காற்றை உருவிப் போர்த்திக் கொள்ள..
என் புலனில் ஒரு நடுக்கம்..!

பனித்துளிக்குள்... நான் தேடும் பிரபஞ்சம்..
எனக்குள்ளும் எங்கோ -
ஒரு திரவமாகத் திரள்கிறது..!

ஏகாந்தத்தின் வாசலில் என் மனம்..
பிச்சைக்காகக் காத்திருக்க..
கடந்து செல்லும் எந்த ஒரு 'எழுத்தும்..'
அர்த்தத்தோடு -
என் 'தட்டில்' விழத் தயாராயில்லை..!

வீம்போடு -
எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்..
மௌனத்தின் துணையோடு..!

*************

வியாழன், பிப்ரவரி 05, 2009

மையம்..!


*
தனிமைச் சிறகை உதறியபடி..
வெப்பம் சேகரித்த ஞாபகங்கள்..
பறத்தலை மறந்து..
உதிரத் தொடங்கின.!

துக்க 'த்வனியில் '
உடைந்த நட்பு..
சொற்களின் அலறல் கேட்டு..
இருட்டில் சிரித்தது..!

நேசிப்பை மையமிட்ட
எங்கள் பருவத்தில்
புரியவில்லை
பொய் முகங்கள்..!

*********

இரை


*
அமைதியற்று உறங்க மறுத்த இரவு..
அதை அள்ளிக் குடித்து விட... அடம்பிடித்த கண்கள்..

விபத்தில் சிதைந்த 'வார்த்தைகள்..'
கிழிபட்ட கடிதங்களாய்,
அறை முழுக்கக் கிடக்கின்றன.

ஆத்திரம் பொங்க நடை பயிலும்.. பாதங்களில்..
நசுங்கும்....அர்த்தங்கள்.


மற்றுமொரு சந்திப்புக்கான 'வாய்ப்பை..'
இந்த இரவு..
பசியோடு தின்றபடியே இருக்கிறது.

மனக் கழுகின் கூர் நாசியில்..இரையின் மோப்பம்.


*********

மின்னல்



*
காற்றை வருடும்... இறகின் இழையில்..
உலராமல்... ஈரமாகி மின்னும்..
கவிதைக்கான.. கணம்.

*********

நீயற்ற நொடி..!

*
ஒளியும்... நிழலும்..
மௌனமான.. நிமிஷத்தில்..
நர்த்தனமாட..
கிளம்பிய காற்றில்...

பறந்து தொலைந்தது... உன் ஞாபகம்.!


*********

கடவுள் கணம்


*
வெளிச்ச இழைகள் சிந்திக் கிடந்த
முற்றத்து தாழ்வாரத்தில்
நிழல் இலைகள்...

காற்றின் அலை செருகிய
மணல் நெளிகள்..

நிலவின் கிரண ஒழுகலில்
வீட்டுக் கூரையில் பிசுபிசுத்த நிறம்.

முருங்கைப் பூக்களில்
தேன் குடிக்க மறந்த வண்டுகளின்
சயன ரீங்காரம்...

நூற்றாண்டுகளின் பின்னிரவில் தொலைத்த
சலங்கைகளை...
சளைக்காமல் தேடுகின்றன பேய்கள்.

கவிதைக்கான வார்த்தைகள் முளைக்கும்
பேனா நுனியில்..
கடவுள் ஜனிக்கிறான் ஒரு முற்றுப்புள்ளியாக.

*************




செவ்வாய், பிப்ரவரி 03, 2009

சென்னையில் ஒரு மழைக்காலம்...


*
அவர்கள் வந்ததும்
மௌனங்களைப் பரிமாறிக்கொண்டு..
புன்னகையால் அறிமுகமானோம்.
மெல்ல நெரிசலில் நழுவி..
'டீ' கடையில் ஒதுங்கினோம்.

மழையினூடே... நகரம் நனைந்திருந்தது.
விரித்த குடையைப் பிடித்தபடி..
சில 'கவிதைகள்' கடந்து போயின.

'மழைக்கும் கவிதைக்கும் இடையில் குடை' -

'மனம்'- மென்ற... 'அபத்த' கவிதையை..
உள்ளே இழுத்த - சிகரெட் புகை..
பொசுக்கிவிட்டு... நுரையீரலை அடைத்தது.

வந்தவர்கள் -
கைக்குட்டையால் தலை துவட்டியபடியே...
' சீ..! சனியன் பிடிச்ச மழை ' - என்றார்கள்.

சிகரெட் நெருப்பு - விரல் சுட்டது.

சொல்லிக் கொள்ளாமல்..தெரு இறங்கினேன்...
மழை இன்னும் வலுத்தது.

**************