வெள்ளி, பிப்ரவரி 28, 2014

நகலாகி மேஜையில் நழுவும் தைல ஓவியங்கள்..

*
ரகசிய சாவிகள் கொண்டு
என்னைப் பூட்டுகிறாய்
இன்னும் திறவாத கதவுகளின்
இலக்கத்தை பரிந்துரைக்கிறாய்
வாசல்களற்ற தனிமைச் சுவரின் முன் நிறுத்துகிறாய்
நீ
என் வழி

அமிலச் சூத்திரங்களை
மனனம் செய்விக்கிறாய்
வார்த்தைகள் கலந்து மொழியொன்றை பொழிய
உன் தருணங்களை எனக்குள் மிதக்க விடுகிறாய்
மௌனத்தை அரிக்கும் அர்த்தக் குமிழ்களை
காரல் நெடியுடன் உடைக்கப் பழக்குகிறாய்
நீ
என் துளி

வளி மண்டலம் பிரித்தனுப்பும் தென்றல் இழைகளை
சிறு சதுர அறை வெளியின் குறுக்கே
இழுத்துக் கட்டுகிறாய்
ஈரம் சொட்டும் துயரங்களை
உதறி உதறி உலர்த்தப் பணிக்கிறாய்
நீ
என் பிரபஞ்சம்

தரவிறக்கம் செய்யச் செய்ய நகலாகி
மேஜையில் நழுவும் தைல ஓவியங்களின்
வர்ணங்களை சிலாகிக்கிறாய்
நவீனச் சிதைவின் குறுக்குத் தோற்றத்தை
அதன் மீது நிர்-நிர்மானம் செய்துக் கொண்டே
கொலாஜ் துண்டுகளை அடுக்கும்படி கட்டளையிடுகிறாய்

எல்லா முகங்களும் ஒரு முகத்துக்குள் சிக்கிக் கொள்வதை
புறத் தோற்றப் புள்ளியிலிருந்து
அக வழிக் கோட்டுக்குள்
உருண்டு விழும் குகைப் பாதையாக்குகிறாய்
நீ
என் அபத்தம்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட்  -27 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5897

இரு துளி நீர்..

*
தனித்த
ஜன்னல் கண்ணாடியில்

மெல்ல
கோலமிட்டு நெளியும்
இரு துளி நீர்

நீயும் நானும்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட்  -27 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5897

தெறி..

*
நிசி
சிறகு
விரி
நிழலாகி

இருள்
பொறியை
தெறி
நினைவாய்

மனப்
பிறழ்வாகி
நில்
நடுவில்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட்  -27 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5897

உற்று நோக்குகிறாய்

*
எளிதில் உள்வாங்க முடியாத பிரத்யேகப் பார்வையை
எப்போதும் உன்னால் விரிக்க முடிகிறது

சிக்கலான டிசைனில் பின்னப்பட்ட
ஒரு எம்பிராய்டரி சில்க் துணியைப் போல

கதவிடுக்கில் தவறுதலாய் நசுங்கிவிட்ட
விரல் நுனியின் கரிய ரத்தக்கட்டைப் போல

கண்ணாடித் தரையில் ஊற்றிவிட்ட
தண்ணீரைப் போலவும்

கிளைத்து பிரிகிறது நுணுக்க நுழைவாயிலின்
மௌனக் குழிக்குள்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட்  -20 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5884

இரவை மொழிபெயர்த்தல்..

*
முதல் சூரியனிலிருந்து
ஒரு விள்ளல்
ஜன்னலில் மோதி இரண்டாய் உடைந்து
தரையில் கிடக்கிறது கொஞ்ச நேரமாய்

தூக்கம் கலைந்து ஆவலோடு
எழுந்ததும் வருகிறாள்
அதனிடம் தான்யா

கையிலெடுத்துக் கொண்டு
ஏதோ சொல்கிறாள்
பிறகு
வாயில் போட்டுக் கொண்டு
திரும்பி என்னைப் பார்த்து
இளமஞ்சள் நிறத்தில் சிரிக்கிறாள்

இரண்டாம் சூரியன்
மாலை
தெருவின் கிழக்கில் விரியக் கிடக்கிறது

தினம் அதன் மீது வாகனங்கள் விரைகின்றன
ஒரு முதியவர் தன் ஊன்றுகோல் கொண்டு
தரையோடு அதனைப் புள்ளி புள்ளியாகப் புதைக்கிறார்

பின்
அரச மரத்தின் இலை நிழல்கள்
வடிவம் சிதைந்து அதன் மீது பரவுகின்றது

இரவை
அப்பகலின் இறுதித் துணுக்கு மீது நித்தம்
மொழிபெயர்க்கிறது அம்மரம்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட்  -20 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5884

மாய மானின் உடல்மொழி

*
ஒரு நிராதரவின் வாசல்
எப்போதும் திறந்தே கிடக்கிறது
வருவோரும் போவோரும் விருந்தினர்கள் என்கிறாய்

நின்று கொண்டிருக்கும் வரிசையைக் கைவிடச் சொல்லி
நிர்ப்பந்திக்கிறாய்
சத்தியங்களை குறிப்புகளாய் எழுதித் தூது அனுப்புகிறாய்

அச்சுறுத்தும் அமைதியைப் பரிசளிக்கிறாய்
பதில்களேதுமற்ற மௌனத்தை உச்சரித்துப் போகிறாய்

ஒரு மாய மானின் உடல் மொழியை
கற்றுக் கொள் என்று மின்னஞ்சல் அனுப்புகிறாய்

எனது வனத்தின் அத்தனை விருட்சங்களும்
இலை இலையாக சதா உதிர்த்துக் கொண்டே இருக்கிறது
என்னை

சருகாகும் வரை காத்திருப்பதாக
என் மீது வெயில் பூசுகிறாய்
உடையும் என் தருணத்தை கையிலெடுத்து
உன் காற்று வெளியில் பொடித்துத் தூவுகிறாய்

நிறமற்ற வண்ணத்துப் பூச்சியின்
சிறகில் படிந்துவிடுகிறேன்

மாய மானின் மருண்ட விழியாகி என்னை வெறிக்கிறாய்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட்  -13 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5874

உச்சரிக்க முடியாத கடவுளின் குரல்

*
சாத்தானின் முணுமுணுப்பு ரீங்கரிக்கும்
சில்வண்டு இரவில்
கடவுளின் செவிகளிரண்டும் கழன்று விழுகிறது
ஆப்பிள் தோட்டத்தில்

இருளும் வெளிச்சமும் உடையும்
விதைகளிலிருந்து முட்டி முளைக்கிறது
சாத்தானின் இரக்கம் ததும்பும் ஓர் இதயம்

அதன் கருணை மிகு பார்வையில்
இதழ் விரிக்கும் சொற்களிலிருந்து காற்றிலேறி ஆடுகிறது
மகரந்த மௌனங்கள்

ஒரு வரம் ஏந்தும் கைகளில்
தனது கண்ணீரை சிந்துகிறான் சாத்தான்
அதன் உப்பு நீர்மையில் உயிர் கரைய வளர்கிறது காமம்

நீல நிறம் கசியும் விஷம் தோய
அந்தகாரத்தில் அடைத்துக் கொள்கிறது
உச்சரிக்க முடியாத கடவுளின் குரல்

அர்த்தப் பிழைகளோடு நம் இருப்பிடம்
வந்து சேரும் சாத்தான்
பிழை திருத்தும் வழியொன்றை யாசிக்கிறான்
கடவுளின் சாயலில்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட்  -13 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5874

முத்து முத்தாய்..

*
மாடிக் குழாயின் கீழே
பிளாஸ்டிக் பக்கெட்டின்
அமைதியான நீர்ப்பரப்பை
துளையிடுகிறாள் கை நுழைத்து தான்யா

சட்டென்று மீட்டிழுத்த
வலக்கரத்தின் குட்டித் தங்க வளையலில்
முத்து முத்தாய்க் கோர்த்துத் தொங்குகிறது
வெயில் துளிகள்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட்  -13 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5874

கல்லின் கீழ் நழுவுதல்

*
ஒரு கல்லின் கீழ் நழுவுதல்
துளி நீருக்கு வாய்த்து விடுகிறது
அமைப்பாக

சொற்களை இழந்த நிலையில்
எதுவும் வாய்ப்பதில்லை

நழுவும்பொருட்டு கல்லாகிறது
அபத்தப் புன்னகை

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட்  -13 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5874

வியாழன், பிப்ரவரி 27, 2014

தொலைதலுக்கும் அடைதலுக்குமான வெற்றிடம்

*
பெரிய மதில்களுக்கு பின்னே
வாசல் இரும்புக் கேட்டிலிருந்து தெரியும்
நீண்ட வராண்டாவில்
சற்று முன் யாரோ எழுந்து போன பிறகும்
ஆடிக் கொண்டிருக்கிறது ஒரு
சாய்வு நாற்காலி

துண்டு நூலோடு ஏதோவொரு குழந்தையின்
கையிலிருந்து நழுவி
காற்றில் மிதந்து உயர்கிறது
வர்ணங்கள் நிறைந்த ஒரு பலூன்

தெரு விளக்குகளின் சொற்ப மஞ்சள் ஒளி பூசிய
கான்க்ரீட் கட்டிடங்களின் இருண்ட மதில்களில்
அங்குமிங்குமாக தன் குட்டியின்
பதில் குரலொன்றுக்கு ஏங்கி அழைத்தபடியே
விரைகிறது ஒரு சாம்பல் நிறப் பூனை

கழுத்துப் பட்டையோடு
தொலைத்துவிட்ட தெருவின் திசையறியாமல்
ஓடிய தெருவிலேயே மீண்டும் மீண்டும்
ஓடிக் கொண்டிருக்கிறது வளர்ப்பு நாயொன்று

ஒவ்வொன்றும் ஒன்றிலிருந்து பிரிந்து
வேறொன்றில் தஞ்சமாகிப் போனாலும்

தொலைதலுக்கும் அடைதலுக்குமான
வெற்றிடத்தில்
தவிப்பின் வலி வரையும் சித்திரம்
வர்ணங்களற்று உறைகிறது அந்தரத்தில்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட்  - 6 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5843
 
நங்கூரமிட்டு தனித்து ஆடிக் கொண்டிருக்கும் மௌனம்

*
நான் அதை
விளங்கிக் கொள்ளத்தான் வேண்டுமா

சிலந்தி வலையில் சிக்கிக் கொண்ட ஒரு
சின்னஞ்சிறு தும்பியின் மரணத்தை

பசியோடு அலையும்
புலியொன்றின் கண்களை

காலங்காலமாய் ஏங்கிக் கூவும்
குயிலின் குரலை

நீரின்றி வறண்டு வெடித்திருக்கும் குளத்தை

ஒவ்வொரு ஊரின் எல்லையில்
யாருக்கோ காத்துக் கிடக்கும் சுமைதாங்கியை

துணிச்சலை உதிரச் செய்யும் உனது சிறகை
நங்கூரமிட்டு தனித்து ஆடிக் கொண்டிருக்கும் உன் மௌனத்தை
பொழிய மனமற்று கடந்து போகும் என் மேகத்தை

நான் விளங்கிக் கொள்ளத்தான் வேண்டுமா
என் தனிமையின் மீது ரகசியமாய்
நீ தீட்ட நினைக்கும் வர்ணத்தை

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட்  - 6 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5843
 
திசைகாட்டி

*
பசியோடற்றிருக்க கற்றுத் தருகிறாய்
ஏனைய பொழுதுகளும்

ஒப்புதலோடு
ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை
மறுபரிசீலனை செய்யும்படி நிர்ப்பந்திக்கிறது

தன்னளவில் வடிவமொன்றை அங்கீகரிக்காத
தர்க்க விதியின் திசைகாட்டி

நொடிப்பொழுதும் உணவுக்குரிய வயிற்றைப்
பிசைந்து கொண்டேயிருக்கிறது
பசியின் கரங்கள்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட்  - 6 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5843 

தீக்குச்சியிலிருந்து...

*
எரிந்து முடியும் தீக்குச்சியிலிருந்து
நிதானமாய்
பி
ரி
கி

து

நெருப்பின் உயிர்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட்  - 6 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5843

யாரோ ஒருத்தியின் பெரிய கண்கள்..

*
ஒரு மழை நாள் மின்வண்டி பயணத்தில்
ஜன்னல் கம்பிகள் அழுந்த கன்னம் சாய்த்து
பயணித்த யாரோ ஒருத்தியின் பெரிய கண்கள்
ஊடு கண்ணாடித் திரையில் நுண் புள்ளி நீர்த்துளிகளையும்
வளைக்கோடாகி காற்றில் நெளியும் அதிவேக காட்சிகளின்
துல்லியமற்ற குழப்பத்தையும் வெறிக்கும் கணம்

நினைவுப் படுத்துகிறது

கைவிடப்பட்ட ஒரு தனிமையில்
துணையிருந்த அறைச் சுவரை

பைத்திய மனதில் விட்டெறிந்த நம்பிக்கை கற்கள்
உண்டு பண்ணிய சலன வளையத்தை

பேரிரைச்சல் ததும்பும் வனாந்திர நதியைத் தொட
கரையோரம் உதிரும் மஞ்சள் நிற இலையை

அழைத்தும் வராத காகத்தின் உணவுக்காக
மருண்டபடி மரத்தில் பதுங்கிக் காத்திருந்த அணிலை

இன்னும் கொஞ்சம் நீளாதா என
ஏங்க வைத்த ஒரு ஷெனாய் இசையின் துயரத்தை

நினைவுப் படுத்துகிறது
ஸ்தூலமற்ற கணத்தை வெறிக்கும்
யாரோ ஒருத்தியின் பெரிய கண்கள்

வர்ணமற்று உமிழும் வெளிச்சப் பரப்பின் அபத்த நிழலோடு
அது
என்றென்றைக்குமான ஓர் அணையா விளக்காக
தொங்கிக் கொண்டிருக்கிறது
நினைவின் கூரையில்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட்  - 6 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5843
 
விரல் படவோ..

*
நீ
உன்னை விலக்கி
என்னைப் பார்த்த கணத்தில்

விரல் படவோ
என் மனம் கொய்யவோ
காய்த்துக் கனிந்திருந்தேன்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூலை - 30 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5809

இருக்கும் வரை..

*
நீ ஏன் இன்னும் இருக்கிறாய்
என்கிறாய்

இருந்து பார்ப்பதற்குரிய அவசியங்களை
எழுதிக் கொண்டிருக்கிறேன்
என்கிறேன்

நீ
இருக்கும் வரை நீ எழுதியவை
எங்களுக்கு புரியப் போவதில்லை
என்கிறாய்

நான் ஏன் இன்னும் இருக்கிறேன்?

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூலை - 30 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5809

சீரற்ற மூச்சின் அபத்த தாளம்

*
மரணத் துளையில் கசியும் தனிமை இருளை
குறுகிய இவ்வறையெங்கும் நிரம்பச் செய்கிறது
எனது இருப்பு

சுவாசத்தின் சீரற்ற மூச்சின் அபத்த தாளத்துக்கு ஏற்ப
ஒற்றை ஜன்னல் திண்டில்
வால்துடிக்கக் கொத்துகிறது
காய்ந்த சோற்றுப் பருக்கைகளை அந்தக் குருவி

மேலும்
இன்னொரு நாளை எனக்கென்று
கொண்டு வந்து கொத்துகிறது
தினமும்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூலை - 30 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5809

பல்லில்லா சாவிகள்

*
சின்னச் சின்னக் குறிப்புகளின் கதவுகள்
தன்னைத் திறந்து என்னை
வேறொரு கதவுக்கு அனுப்பும்போது

அங்கொரு படிமப் பூட்டு
புத்தம் புதியதாய் தொங்கிக் கொண்டிருக்கிறது

காலப் பையைத் துழாவி
கொத்துக் கொத்தாய் கிடக்கும் பல்லில்லா சாவிகளை
மொழிக் கூர் தொட்டு அறுக்க அறுக்க

ஒவ்வொரு பூட்டாய் கழன்று கொள்கிறது
ஓசைகளேதுமின்றி

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூலை - 30 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5809

சொல்லாதவைகள்..

*
அத்தனை வசவுகளுக்குப் பிறகும்
உன்னால் சிரிக்க முடிகிறது

ஒரு நிராகரிப்புக்கு பின்னும்
பெயர் சொல்லி அழைத்தால்
உன்னால் திரும்பிப் பார்க்க முடிகிறது

சொல்லாதவைகளின் இருப்பில்
சொன்னவைகள்
பார்வையாளர்களற்ற
ஒரு ரகசிய கொலைக்களத்தில்
நிற்கின்றன

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூலை - 23 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5786

நிறமற்று சிதறும் பகல்

*
கைத்தட்டி என்னையழைத்து
ஒரு ரகசியம் பகரும் உங்கள் அந்தியின்
நிறம் எனக்கு உவப்பானதாய் இல்லை

என்னுடைய
மெய்த் தீண்டலின் நுனித் திரி
பொட்டுத் தீயை அணையவிட்டு
காற்றிலேற்றுகிறது கருகிய புகையாக
அத்தனை நிஜங்களையும்

ஆழ நுகர்ந்து சுவாசம் நிரம்பும்
மௌனத் தவிப்பை
சொற்கள் கூட்டித் துப்புகிறேன்

நிறமற்று சிதறுகிறது
உங்களோடு சேர்ந்து எனது பகலும்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூலை - 23 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5786

மழையற்று வெறிச்சோடும் மௌன அந்தரத்தில்..

*
நீண்ட நாட்களுக்குப் பிறகு
உன்னை ஒரு முறை நினைத்துக் கொள்கிறேன்
ஞாபகத் தீவின் ஒற்றையடிப் பாதையில்
நீ விட்டுச் சென்ற கால் தடங்கள்
எண்ணற்ற பருவங்களுக்குப் பிறகும்
பத்திரமாய் இருப்பதை வியக்கிறேன்

மழையற்று வெறிச்சோடும்
எனது மௌன அந்தரத்தில்
வெண் மேகமாய் கடந்து போகிறாய்

உனது வடிவங்களின் மாற்றத்திலிருக்கும்
சூட்சுமம் பிடிபடுவதில்லை

மொட்டைமாடி கைப்பிடிச் சுவரில்
சிமென்ட் பூச்சு விலகி உறுத்தும்
இறுகிய மணல்துகளின் நிரடலாகிறாய்
வெயில் விழாத மாலை நேரங்களில்

நீண்ட நாட்களுக்குப் பிறகு
உன்னை ஒரு முறை நினைத்துக் கொள்ள நேரும்
இந்த இரவின் முகம்
இடையறாத கணந்தோறும் வெவ்வேறு தோற்றத்தில்
வரைந்து கொண்டே இருக்கிறது

கடைசியாக நீ எனக்குத் தந்து சென்ற உனது
முக பாவனையை

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூலை - 23 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5786

இளைப்பாறும் நிழல்களில் பழுக்கும் முரண் இலைகள்..

*
நீ
ஒரு சத்தியத்தை யாசித்து
எனது வாசலில் நின்று கொண்டிருக்கிறாய்

நான்
நமது விவாதங்களைக் குழைத்து
ஒரு பொய்யை வனைந்து கொண்டிருக்கிறேன்

தனித்த பயணத்தின்
வெவ்வேறு நோக்கங்களை அடிக்கோடிட்டபடி
இளைப்பாறும் நிழல்களில்
நம் முரண் இலைகள் பழுப்பதைக் கண்ணுற்றோம்

துயர நதியைக் கடக்க நேர்ந்த தருணத்தில்
மீட்சியின் உள்நீச்சல் பற்றி
உன்னிடம் முற்றிலும் வேறான
ஒரு கோட்பாடிருந்தது

சின்னஞ்சிறு கூழாங்கற்களின் மௌனமென
உருண்டு பயணித்த காலத்தின் மிச்சத்தில்
எனது வாசலில் இப்போது ஒதுங்குகிறாய்

எனக்கு உன்னை எடுத்து
உள்ளங்கையில் அழுத்திக் கொள்வதோ
கண்ணாடிப் பேழையில் அடைத்து வைப்பதோ
ஆல்பத்தில் ஒட்டி வைப்பதோ அவசியமில்லை

நான் என்றென்றைக்கும் 
வனைந்து கொண்டிருக்கும் பொய் முக்கியம்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூலை - 23 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5786

பற்றிக்கொள்ளும் தொலைவில்..

*
பற்றிக் கொள்ளும் தொலைவில் இல்லை
உனது கைகள்
புறக்கணிப்பை சுமக்கும் மௌனத்தின் மீது
எதையாவது எழுதிக் கொண்டிருக்கிறது
எனது அந்தி

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூலை - 16 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5777

மெத்தென்ற ரேகை நதி..

*
சின்னஞ்சிறு உள்ளங்கையைப் பொத்திக் கொண்டு
வேடிக்கை காட்டுகிறாள் தான்யா

மொட்டைமாடி முழுதும் அவள் நிழலைத் தொடர்ந்து
ரொம்ப நேரக் கெஞ்சலுக்கு பிறகு
மெல்ல விரித்து மலர்த்துகிறாள்
தன் தளிர் விரல்களை

அதில்
மெத்தென்ற ரேகை நதியின் நனைந்த ஈரத்தில்
கனகாம்பரப் பூக்களின் சிவந்த இரு இதழ்கள்
சிரிக்கின்றன
அவளின் குரலோடு

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூலை - 16 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5777

நிராகரிப்பின் தண்டவாளம்

*
நிராகரிப்பின் தண்டவாளம்
அழைத்துச் செல்லும்
துயர ஊரில்
ஆளே
இல்லை

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூலை - 9 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5729

மீட்சியற்ற தடம்

*
எனது குதிரை உடைந்துவிட்டது
அது உடையும் முன்பாக
அதனிலிருந்து சில்லு சில்லாய்
உதிர்ந்து கொண்டிருந்தது
நூற்றாண்டுக்கால உளிச் சத்தம்

குதிரையின் கனைப்பு ஒலியும்
சிற்பியின் முனகல் வலியும்
மண்ணில் திரள்வதில்

மீட்சியற்ற மௌனத் தடமாகி
குழிகிறது முற்றிலும் உடைந்துவிட்ட
குதிரையின் குளம்பிருள்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூலை - 9 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5729

இதுநாள் வரை..

*
ஒரு சைக்கிள்
இரண்டு ரப்பர் செருப்பு
முகம் நசுங்கிய ஒரு காலி மண்ணெண்ணெய் கேன்

ஒரு டூ வீலர்
ஒரு லஞ்ச் பாக்ஸ்
ஒரு லெதர் பேக்

அழைப்பு வராத
அழைப்பை ஏற்காத
சிதைந்த ஒரு செல்போன்

டிராபிக் நிறைந்த
ஹாரன்கள் நிறைந்த
தார் இளகி வெயில் மிதக்கும் அவசரச் சாலை

நிறைய ரத்தம்
இதுநாள் வரை உழைப்பைப் பிதுக்கிய
சிகப்பு நிறம்

இரண்டு உடல்கள்
ஒரே ஒரு
வாழ்க்கை

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூலை - 9 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5729

வரிசையின் நீர் விளிம்பு..

*
எல்லா நேரத்திலும்
எப்போதும்
ஒரு வரிசையைப் பின்பற்றுவதில்லை
எறும்புகள்

வரிசையிலிருந்து பிரிந்தலையும் சில
தரையில் சிந்திக் கிடக்கும் நீர் விளிம்புகளில் முகம் பார்க்கும் சில
கடிப்பதற்கான கால் விரல்களை சதா தேடியலையும் சில

ஒரு வழக்கமான உணவிலிருந்து
மாறுபாட்டை நோக்கித் திரியும் சொற்ப எறும்புகள்
ருசியை சுமக்கின்றன

அதைத் தன் புற்றுக்கு வெளியே பதுக்கும் ரகசியங்களறியாமல்
முன்னும் பின்னும் பதறுகின்றன
திடீரென பெய்ய நேரும் ஒரு மழை வரை

*****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூலை - 9 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5729

மேலும்..

*
சத்தம் போடாதே..!
நீ என்ன சொல்கிறாய்
மேலும் மேலும் பணிந்து போ
சத்தம் போடாதே

மேலும்
நான் கேட்கிறேன்

அதெப்படி?

சத்தமில்லாமல் தான் கேட்கிறேன்

****
நன்றி : ( மலைகள்.காம் ) [ஜூன்  - 3 - 2012 ]

http://malaigal.com/?cat=6&paged=36

தவிரவும்..

*
தவிரவும்
அது நிகழ்ந்து விட்டதாக
என்னால் நம்ப முடியவில்லை

நிற்பதற்குரிய ஸ்திரத்தை
காலடி நிலம் ஏன் நெகிழ்த்துகிறது
அர்த்தக் கூட்டங்கள் நீர்த்துவிட
எழுத்துக்கள்
மேலும் பரிதாபமாகக் காத்துக் கிடக்கின்றன

நான் ஏதேனும் சொல்லக் கூடுமென்றோ 
மறுப்புகுரிய ஒரு சின்ன சைகையோ
அசைவையோ வெளிப்படுத்துவேனென்றோ

தவிரவும்
ஒத்துக் கொள்ளும்படியாகத் தான்
அது நிகழ்ந்துவிட்டது
நம்பும்படியாகவும்  இருக்கிறது.

****
நன்றி : ( மலைகள்.காம் ) [ஜூன்  - 3 - 2012 ]

http://malaigal.com/?cat=6&paged=36

விதைத் தூவும் அர்த்தங்கள்..

*
கடந்து போவதற்குரிய வழியாகிறாய்
நிற்பதையோ
அவதானிப்பதையோ குறியீடாகப் பதிய
நிர்ப்பந்திக்கிறாய்

மௌனச் சாயலில் கோர்த்துக் கொள்ளும் ஈரத் துளிகளை
தனிமைப் படிக்கட்டுகளில் வழியச் செய்கிறேன்

நினைவின் குளிரோடும் நடுக்கத்தில்
விதைத் தூவும் அர்த்தங்களின் முனைப் பிளந்து
வெளிப்படச் செய்கிறாய்
தளிர்ப் பச்சையாய்

****
நன்றி : ( மலைகள்.காம் ) [ஜூன்  - 3 - 2012 ]

http://malaigal.com/?cat=6&paged=36

தொங்கும் முகங்கள்..

*
உத்தரவு வரவில்லை
மீண்டும் தொடர்கிறது உன் தலைகுனிவு
நகரும் நொடிகளை வலைப் பின்னிக் கொண்டிருக்கிறது
உனது அறை மூலையில் ஒரு சிலந்தி

ஏதோவொரு புள்ளியில் துளிர்த்திருக்க வேண்டும்
அதிலிருந்து துள்ளி உடைந்திருக்க வேண்டும்
இந்தத் தர்க்கம்

எங்கே எடுத்துக் காட்டு அதன் ரகசிய சாவியை

உன் மௌனச் சுவரில் கணக்கற்று கிடக்கும்
ஏதாவது ஒரு பூட்டில் அது பொருந்த வேண்டும்

துருவேறிய பழமைக் கதவின் பின்னால்
ஏன் தொங்குகிறது உனது முகம்

கலாச்சாரக் கோடுகள் கொண்டு
சட்டம் அடித்து வைத்திருக்கும் வெளியில்
வரைந்துவிட முடியும் ஒரு பின்நவீனத்துவ முகத்தை

தொட முடியாத ஒரு சொல்லை நிரூபிக்க
உதிரக் கூடும் ஒவ்வொரு படிமமாய்
உன் அகாலத்தில்

ஆனால்
உத்தரவு வரவில்லை

****
நன்றி : ( மலைகள்.காம் ) [ஜூன்  - 3 - 2012 ]

http://malaigal.com/?cat=6&paged=36

கானல் தார்..

*
நள்ளிரவில் போட்ட புது ரோட்டின்
தார்
இளகுகிறது உச்சி வெயிலில்

பிளாட்பார மரத்து இலையிலிருந்து
வெப்பக் காற்றசைவில்
விழுந்து விட்ட
கட்டெறும்பின் குச்சிக் கால்கள் வழியே
ஏறும் கானல் நீர்

அதன் மண்டைக்குள் ஊற்றுகிறது
குடம் குடமாய்
தாரை

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூன்  - 25 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5729

காலை நேர அவசரத்தில்..

*
டூ வீலரில்
சிக்னலில் நிற்கும்
காலை நேர அவசரத்தில்

ஹான்ட் பாரிலிருந்து
நிதானமாய்
வழிந்து கொண்டேயிருக்கிறது
வெயில்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூன்  - 25 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5729

பூக்களில்லாத செடி

*
மாடியிலிருக்கும்
பூக்களில்லாத  
ஒரு சின்னஞ்சிறு தொட்டிச் செடியிடம் நின்று 
ஏதோ பேசிக் கொண்டிருக்கிறாள்
தான்யா

பிறகொரு இலையை சட்டென்று
பறித்துக்கொண்டு
அறைக்குத் திரும்புகிறாள்
தன் பிரியமான பொம்மையை நோக்கி

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூன்  - 25 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5729

அர்த்தப் பட்சியின் அந்தரங்கச் சிறகு..

*
ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு
வந்தடைவதில்

அறிமுகச் சம்பிரதாயத்தின் பழந்தூசிக்
கொண்டு வந்து சேர்த்து விடுகிறது
புரட்ட விரும்பாதக் காலத்தின்
ஏதோவொரு பக்கத்தை

தும்மலோடு தொடங்கும்
புன்னகையின் முதல் புள்ளியில்
நகர்த்தவியலா கால்களோடு அல்லாடுகிறது
முதல் சொல்

அர்த்தப் பட்சியின் அந்தரங்கச் சிறகில்
நிறப்பிரிகையோடு மினுங்கும் கால இடைவெளி
மௌனத்தை வடிகட்டி
கசடுகளை உலர்த்துகிறது அந்தரத்தில்

ஒரு நேசத்தை யாசிப்பது பற்றியோ
ஒரு பரிச்சயத்தைப் பரிசளிப்பது குறித்தோ
மாற்றுக் கருத்துடைய ஒருவன்
ஓர் இடத்திலிருந்து

இன்னொரு இடத்துக்கு வந்தடைவதின் முதல் சொல்
உச்சரிக்கப்படாமலே
அனிச்சையாய் ஏற்பட்டுவிடுகிறது
ஒரு கை குலுக்கல்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூன்  - 25 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5729

அலையலையாய் விரியும் வளையம்..

*
மனத் திரையில்
மணற்குழி பறித்து விரையும் குளம்படியில்
புழுதியோடு பறந்துக் கொண்டிருக்கிறது
சொல்லின் சிறகு

வனம் புகும் பேச்சொன்று
இருண்மை படரும் மொழியின் தூரிகைக் கொண்டு
வரைந்து பார்க்கிறது உச்சரிக்க விரும்பாத
மௌனத்தை

பதறியபடி உள்ளங்கையில் நடுங்கும்
அர்த்தங்களை
அலையலையாய் விரியும் வளையங்களில் கோர்த்து விட
சேர்ந்துவிடுகிறது உரையாடலின் கரையில்

கரை விளிம்பெங்கும் மிதக்கும் மெல்லியச் சிறகுகளில்
இன்னும் ஈரம் படாத புழுதியின் நிறம்
மிச்சம் வைத்திருக்கிறது ஒரு பாலையின் வனத்தை

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூன்  - 25 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5729

எக்கணமும்..

*
சுவர் மூலை நூலாம்படையில்
மரணமொன்று
எக்கணமும் காத்திருக்கிறது
சூட்சுமமாய்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூன்  - 25 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5717

நீ வந்து கொண்டிருக்கிறாய்..

*
நான்
காத்துக் கொண்டிருக்கிறேன்
நீயுன் தாமதத்துக்கான காரணங்களோடு
வந்து கொண்டிருக்கிறாய்

நான்
மறுப்பதற்குரிய காரணங்களை
ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி
அதன் மீது உட்கார்ந்திருக்கிறேன்

நீ
வந்து கொண்டிருக்கிறாய்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூன்  - 25 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5717

எரிந்து கொண்டே இருக்கும் இரவு..

*
யாரையும் அனுமதிக்கத் தோன்றவில்லை
உன் வெளியேற்றத்துக்குப் பின்

இந்த மேஜையின் தனிமையில்
எரிந்து கொண்டேயிருக்கும் இரவை
அதில் ஊற்ற ஊற்ற நிரம்பாத மதுவை

என்
போதை விரல்கள் தொடர்ந்து மீட்டுவதை
சிணுங்க ரசித்துக் கொண்டேயிருக்கிறது
நம் கண்ணாடிக் கோப்பை

உதடுகள் அழுந்தத்
துடைத்து வைக்கும் நாப்கின்னில்
ரேகை நெளிய மயங்குகிறது சொற்கள்

உச்சரிக்க விரும்பாத மௌனத்தை
மிதக்க விடுகிறேன் தரையில்

நடன அசைவை ஒத்த அதன் இணக்கத்தில்
நிழலென நீள்கிறது வாசல் வரை
எனது இருப்பு

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூன்  - 25 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5717

குறுக்குவெட்டுத் தோற்றங்கள்

*
அடையாளங்களை இழப்பதற்குரிய
வழிமுறைகளை எப்போதும்
பேசி வந்திருக்கிறாய்

நிறைய சந்தர்ப்பங்களை
முன்னிறுத்தி விவாதித்திருக்கிறாய்

மறுப்புக்குரிய எத்தனையோ காரணங்களை
குறுக்குவெட்டுத் தோற்றத்தில்
வெட்டிச் சரித்திருக்கிறாய்

அதன் வலிமைமிகு பின்பற்றுதல்
தொட்டுத் துலங்கியபோது

நீ
முற்றிலும் இழந்திருந்தாய்
உனது அடையாளங்களை

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூன்  - 25 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5717

மரணத்தை ஒத்த நொடியின் இழைகள்

*
உதடுகளோடு உதடுகள்
கவ்வ நேர்ந்த அவ்விரவை
முத்தமென்று பெயரிட்டழைத்தாய்

ஸ்பரிஸ பரிமாறலில்
உயிர் வெட்டி உயிர் நிரப்பிய கனத் தருணத்தை
ஆலிங்கனமென்றேன்

நழுவி உடைந்த உன் புன்னகையின் நிறம்
அறையெங்கும் வழிந்தது

மரணத்தையொத்த நொடியின் இழைகள்
அறுந்துப் பின்னிய உச்ச சூழில்
பித்தேறுகிறது மகரந்தத் துகளின் மஞ்சள் புள்ளிகள்

உன்
கண்கள் வெறித்த நீல விளக்கொளியில்
சுவர் பற்றி வெகுநேரம் அசையாமல் உட்கார்ந்திருக்கிறது
வழி தப்பி வந்துவிட்ட ஒரு சாம்பல் நிறப் பட்டாம்பூச்சி

நீ
முத்தமென்று பெயரிட்டழைத்த அவ்விரவுக்கு
அதன் சிறகிருந்தது

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூன்  - 25 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5717

உன்னைக் கடந்துவிட்டதாக..

*
நீரோட்டம் பகர நாட்டமில்லை
கிளர்ந்தெழவோ கவனமற்று பிசகி விழவோ
வாகாய் விலகுவதில்லை
உன்னைக் கடந்துவிட்டதாக நம்பி
கைப்பிடித்திழுக்கும்
என் மூச்சு

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூன்  - 11 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5679

திறக்க விரும்பாத இரவு..

*
நிதானமாய் இரு என்கிறாய்
இருந்து பழகுவதற்குரிய சந்தர்ப்பங்களைத்
தர மறுக்கிறாய்

பார்வையின் பசிக்கு இரையாகும்
மௌனங்களைச் செழிப்பாக்குகிறேன்

பதற்றத்துடன் அணுக வேண்டிய சம்பவங்களை
அடுக்கடுக்காய் தைத்து ஆவணப்படுத்தி
எனக்கு அனுப்பி வைக்கிறாய்

திறக்க விரும்பாத இரவை
எனது அறைக்கு வெளியே அடைத்து வைக்கிறேன்

தொடர்ந்து
என் பெயர் சொல்லி நீ அழைக்கும்
குரலில்
திரவமாய் உருகிப் பெருகுகிறது உன்
நிதானமின்மை

ஒரு நிதானத்தைப் பழகுவதற்குரிய
சந்தர்ப்பங்கள்
எப்போதும் அங்கீகரிப்பதில்லை
அதற்கென ஒரு வாய்ப்பை

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூன்  - 11 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5679

பரிசுக்குரிய ஆயுதங்கள்

*
துரோகம்
வசவு வார்த்தைகள்
குரோதத்தின் உலோகம்
குற்ற வாள்
காமப் பசி
பார்வையின் பிழை
அர்த்தங்களின் உட்சுவர்
நிராசைகளின் கைப்பிரதி
சூட்சமத்தின் கையுறை
வஞ்சகத்தின் கால் தடம்
சதித் திட்டத்தின் கண்ணி
நம்பிக்கை நிழல் பூசிய சத்தியத்தின் வரைப்படம்

உங்கள் இருண்ட வாழ்வின்
அத்தனை ஆயுதங்களையும் பரிசளித்தீர்கள்

அவைகளை சேமித்து வைத்திருக்கும்
எனது நிலவறையில்
நானும் உட்கார்ந்திருக்கிறேன்
வெகுகாலமாய்த் துருப்பிடித்து.

***
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூன்  - 11 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5679

பின்தொடர்ந்து படியிறங்கும் நிழல்..

*
மிகவும் சாதாரணமாகத் தான்
அது அறிவிக்கப்பட்டது
முதலில் நம்பும்படியாக இல்லை

பிறகு மேற்கொள்ளப்பட்ட சிறு செயல்கள்
உறுதி செய்தன நிறைவேற்றப்படவேண்டிய தீர்மானங்களை

ஒரு வாக்குறுதிக்குள்ளிருந்து வெளியேறும் சொற்கள்
மிச்சம் வைத்துப் போகும் அர்த்தங்கள் வெண்ணிறத்தில்
காணக் கிடைக்கிறது 

அந்தியின் தனிமையை மேஜையில்
நகங்கொண்டு கீறிக் கொண்டிருந்தபோது
அறைக்குள் நுழைந்தது உன் நிழல்

தொட்டுத் திருப்பும் அவகாசத்தை
உடை நுனியில் திருகியபடி நின்றாய்
பெயரிட்டு அழைப்பதில் உண்டான அசூயையை
உதடுகள் சுழித்துக் காட்டின

இப்படியொரு தயக்கத்திற்கு உன்னை நிர்ப்பந்தித்த
செயல் என்னிடம் எதுவென்று
தீவிரமாக யோசித்தபடி இருக்கிறேன்

முத்தப் பரிமாறலோ
ஆரத் தழுவலோ
குறைந்தபட்சம் ஒரு இறுகக் கைப்பற்றலோ
மறுக்கப்பட்ட வெப்பச் சூழலை விரட்டியடிக்க
ஜன்னல் திரைச்சீலையின் ஒரு சிறிய
அசைவு கூட முனையவில்லை

உன்னைப் பின்தொடர்ந்து படியிறங்கும்
உனது நிழல்
பாதி சார்த்திய கதவைத் தொட்டபடி
ஒரே ஒரு கணம் நின்று விட்டு
மீண்டும் உன்னைத் தொடர்கிறது

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூன்  - 11 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5679

அசையும் கைவிரல்கள்..

*
துயிலும் யாமத்தில் திரள்கிறேன்
உன் இதழ் மீது கவிழத் துடிக்கும்
சாம்பல் மேகமென

பேருவகையோடு அசையும் கைவிரல்கள்
காற்றில் எழுதுகின்றன
காணும் கனவை

உன்னை அப்படியே சூறையாடுவது
காதலை மிச்சம் வைக்காமல் குடிப்பது
திரும்பிப் பார்க்கும் சந்தர்ப்பங்களை நோவது

எல்லாம்
மிதக்கிறது வெறும் வார்த்தையாக

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மே  - 21 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5617

உதிர்ந்த மஞ்சள் பூக்களின் நரம்புகள்..

*
ஒரே ஒரு முறை பொழிவதற்காக
துடித்த மழையின் சாரலை ஏந்தக் காத்திருக்கும் சாலையில்
உதிரும் மஞ்சள் நிறப் பூக்களின் காம்புகளில் கசிகிறது
என்றோ பேசித்திரிந்த பால்யத்தின் துளி ஈரம்

நீ
வரிசைப்படுத்திச் சொல்லிக் கொண்டே வந்த பட்டியலில்
துருத்தியபடி நெளிகிறது ஒரு விட்டுக் கொடுத்தலின் நிறம்
மௌனம் பழகு என்று கதறும் குயிலின் குரலில்
காகத்தின் பசியொலி தெறிப்பதாகச் சொன்னாய்

அப்படித் தான் முடைந்து வைத்திருந்தேன் எனது கூட்டை
வர்ணம் பிறழாமல் அடைகாத்த முட்டைக்குள்
கருக் கொண்ட நினைவுகளின் சிறகுகளைக் கொஞ்சமேனும்
நனைக்கும் இந்தச் சாரல்

உதிர்ந்த மஞ்சள் பூக்களின் நரம்புகள்
மீட்டுகிறது என் துயரத்தை

ஈரச்சாலையின் நெடுகப் பரவுகிறாய்
குயிலின் குரலென

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மே  - 21 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5617

எனது வருகைக்குரிய குறிப்பு

*
வெகு நேரமாய் காத்திருக்கிறேன்

எனது வருகைக்குரிய
குறிப்பை
உனக்குத் தெரியப்படுத்தும் மனமற்று

வெறுமனே காத்திருக்க மட்டுமே
போடப்பட்டிருக்கும்
இந்த நாற்காலிகளைப் பிடித்திருக்கிறது

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மே  - 14 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5598

ஒரு வார்த்தை

*
ஒரு சமாதானத்துக்காக என்னை அழைத்திருந்தாய்
அச் சமரசத்துக்குரிய எல்லா
ஏற்பாடுகளுடன் காத்திருந்தாய்

எல்லாம்
ஒரு வழியாக முடிந்து
பரஸ்பரம் கோப்பையை உயர்த்தி
'சியர்ஸ்' சொன்னபோது

ஓர் அர்த்தமற்ற வார்த்தை தெறித்துத்
துள்ளியது நம் மேஜையில்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மே  - 14 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5598

13வது குறிப்பு

*
உனது அழகைப் பற்றிய துண்டுக் குறிப்புகளை
உனக்கு மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன்

நேரில் சந்தித்தபோது சொன்னாய்
பட்டியலில் இடம்பெற்றிருந்த
13வது குறிப்பு
மிகவும் பிடித்தமானதென்று

ஓர் அடையாளத்துக்காக சுழியிடப்படும் எண்கள்
வழிப்பாட்டுக்குரிய கடவுளாக மாறுவதை
எந்த நூற்றாண்டிலும் நிறுத்த முடிவதில்லை

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மே  - 14 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5598

இறுதியாக..

*
மலைச் சரிவொன்றில்
வேகமாக இறங்குவதையோ
மலை உச்சியிலிருந்து
எடையற்று உடல் வீழ்வதையோ
இந்தக் கவிதையில் எப்படிச் சொல்வது

வாழப் பழகிவிட்டதாக நம்பும்
நகர நெருக்கடியில் என்னிடம்
மலையுமில்லை உச்சியுமில்லை

இறுதியாக
நீ பரிசளித்த
ஒரு துயரத்தைத் தவிர

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மே  - 14 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5598

நடந்து கடந்த தருணங்களின் ஒற்றையடிப் பாதை..

*
ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறாய்
நேற்றைய சத்தியங்களை
நினைவுக் கூறும் வார்த்தைகளைப் பதட்டத்துடன்
உனது விரல்கள் நெசவு செய்கிறது

திட்டமிட்டு வைத்திருந்த கனவுகளின்
அத்தனை ஜன்னல்களையும் திறந்து விடுகிறாய்
தும்மலுறச் செய்யும் காட்சிகள் மொத்தமும்
புழுங்கிச் சுழல்கிறது
வெளியேறும் ப்ரியமில்லாமல்

நடந்து கடந்தத் தருணங்களின்
ஒற்றையடிப் பாதையில்
நீயுமற்று நானுமற்று
வெகு காலமாகக் காத்திருக்கிறது
கால் தடங்கள்

வரைபடம் கொண்டு வா
இன்னுமொரு பயணம் போவோம்

****
 நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மே  - 14 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5598