சனி, ஜனவரி 16, 2016

தோளில் தொங்கும் திசைகளின் சுமை

*
தப்பித்தல் மீது எரிகிற கல்
ஆழத்தில் அமிழ்கிறது மலையாக

நல்ல சொல் தந்து அழைத்து வர ஒற்றையடி பாதை
முன்னெப்போதும் கிடையாது

பசிக்கென உட்காரும் நிழல் கொஞ்ச நேரம்
உடனிருக்கும்

அவசரமேயில்லை

இருந்தும்
கலைந்தவைகளை கட்டுவதற்கு
அகப்படுவதில்லை எந்த வழிப்போக்கனும்

துணை
உதவி
மன்றாடல் - மற்றும்
எதிர்பார்த்தல் வீண்வேலை

அகல விரித்த கைகளைத் தட்டிக்கொண்டு
தோளில் தொங்கும்
திசையின் சுமையோடு

தொலைந்து போவது பற்றினக் குறிப்புகளை
எல்லா இரவிலும் ஊளையிட
ஒரு நரியை
அவிழ்த்துவிடுவது
சும்மா காயும் நிலவுக்கு பொழுதுபோக்கு

வனம் நிரம்பும் வெளிச்சத்தின் நான்கு முனைகளையும்
இழுத்துக் கட்டும் விரல்கள் இன்னும் இருக்கின்றன

அவ்வப்போது கவிதைகள் எழுதியபடி

***

ஹம்..

*
இலை அசைவு
பார்க்க பார்க்க
காற்று உடனிருந்தது

***

அறை பூட்டப்படுவதற்கு முன் அற்பமாய் பெய்த நேற்றிரவின் மழைத்தூறல்..*
கிளம்பிக் கொண்டிருக்கிறேன்

சிந்தடிக் இழைப் பின்னலில் வேயப்பட்ட இரண்டு பைகள் கையில் இருக்கின்றன

அறை பூட்டப்படுவதற்கு முன்
சுவரில் உணவுகளற்று வரிசையில் விரையும் எறும்புகளின் கருப்பு நிறம் தொந்தரவு செய்கிறது

படிகளின் எண்ணிக்கை இறங்கும்போது குறைவாகவும்
ஏறும்போது கூடுதலாகவும் மாறிப்போகிற விந்தையை பர்ஸில் மடித்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்

அற்பமாய் பெய்த நேற்றிரவின் மழைத்தூறல் போதுமானது
ஆள் இல்லாத எதிர்வீட்டின் ஓட்டுக்கூரையில் முளைத்துவிட்ட அரச செடிக்கு

தெரு நீர்த்தேக்கத்தில் மிதந்து நெளிகிற
மின்கம்பத்தின் உடைந்த பல்பு டூம் அலட்சியப்படுத்துகிறது வான் வெளிச்சத்தை

மார்க்கெட் வீதியெங்கும் மனிதத் தலைகளும்
தலைகளின் வாயில் பேரங்களும்
பேரத்தில் படியாத வசவுகளின் ருசி கூடிய கழிவுகளும்
சாக்கடையோட்டமாகி கணுக்காலை நக்கும் நாவின் நிதானத்தில் அவசரப் பிசுபிசுப்பு

ஒரு பைக்குள் இன்னொரு பையை ரொப்பித் திரும்பியபோது
நீர்த்தேக்கத்தில் அசைந்து கொண்டிருக்கிற கருங்காகத்தின் மீது அசையும் அலையை மிதித்துக் கடக்கிறேன்

எறும்புமருந்து பாக்கெட் வாங்க மறந்தது ஞாபகத்துக்கு வருகிறது

ஏறும்போது எண்ணிக்கை கூடுதலாகிப் போகும் படிகளில் ஏறிக்கொண்டிருந்தேன் அப்போது
***

சுவை தப்பின அர்த்தக் கசப்பு

*
மௌன ஊற்றில் கசியும் குருதியை
பருகும் வாய்

நினைவின் முகட்டில் நெம்பும்
சொல்லின் கூர்மையில்

சுவை தப்பின அர்த்தக் கசப்பில்
விழுங்கும் எச்சிலால்
உயிர் கவ்வி விடுவிக்கும்
பொழுதை

இருள் பூசி அழைக்கிறது
பேய்க்கூச்சல் குரலாகி

****

நன்றி : கணையாழி [ஏப்ரல் 2015]

விலகி வருடும் விலாவின் மந்திரமாகக் கசியும் காதல் மொழி
*
இத்தனை வாஞ்சை வேண்டாம்

கழுத்தருகே வீசும் உனது வெப்பப் பெருமூச்சு
ஆலிங்கனப் பற்றுதலோடு எழுதுகிற விரல் நுனியில் வியர்வை நழுவி
முதுகெலும்பு மேடுகளில் வளைந்து விலகி வருடும் விலாவில்
எழுப்பிவிடக்கூடும் இன்னொரு ஏவாளை
 
பங்கிட்டுக்கொள்ளும் வசதியில்லா படுக்கையில்
பாம்புகளுக்கு இடமில்லை
 
வம்ச விதையில் வளரும் அபத்தமாகிடலாம்
ஆப்பிள்
 
மனனம் செய்யும் மந்திரமாகக் கசியும் உனது காதல் மொழி
காமம் பிறழ உச்சரிக்க நேரும் ஆகம வசனத்தில்
வரவழைத்துவிடுவாய் சாத்தானை
 
தொடை மீறி பெருகும் உதிரச் சுழியில் சுழன்று மேலெழும்
உனது விஸ்வரூபத்தில்
விழி செருகி நீட்டும் கரம் பற்றி உள்ளிழுக்கிறாய்
 
போட்டுடைக்க தோதாக திறந்திருக்கும் ஜன்னல் சட்டகத்தில்
சிசுவின் பீங்கான் சிற்பத்தை நிறுத்தி வைத்து
முத்தமிட அழைக்கிறாய்
 
இத்தனை வாஞ்சை வேண்டாம்
வரவழைத்துவிடுவாய் என் சாத்தானை
******
 

நன்றி :  யாவரும்.காம் இணைய இதழ் [- 31 டிசம்பர் 2014]

புல்லட் ரயில் மீது எனக்கு நம்பிக்கை இல்லை*
என்னைப் பொருத்திப் பார்க்க முனையாதே

நான்கு டயர்களில் உள்ள நட்டுகளை மரை கழற்று
இரண்டு வார்த்தைகளுக்கு மேல் நிற்க முடிவதில்லை
 
ஓடிப்போவது பற்றி பேசத்தானே கூப்பிட்டாய்
திசையைப் பற்றி விளக்கிச் சொல்
 
நட்சத்திரம் துணை வரவேண்டும்
புல்லட் ரயில் மீது நம்பிக்கை இல்லை
 
என்னைப் பொருத்திப்பார்க்க முனையாதே
கார் பாணட்டுக்குள் ஒளிந்துகொள்ளும் விருப்பம் இல்லை
 
பேசாமல்      
நடந்தே வேறு தேசம் போய்விட்டால் என்ன

மரை கழன்ற நட்டுகள் குறித்து கவலை கொள்கிறாயா
ஏன்

*****
 
நன்றி :  யாவரும்.காம் இணைய இதழ் [ - 31 டிசம்பர் 2014]

முயங்கும் தருணப் பிழையில் தாழும் இமை*
இன்னும் கூட ஓர் இரவு வாசற்படியில் நிலவின் கிரணங்கள் பூசி
அசையும் இலை நுனிக் கனவுகளோடு
படரும் ஈரம் தொடும் பாதச் சில்லிப்பைக் காற்றில் ஏற்றுகிறது

மீட்பதாக பிதற்றும் மொழியில் அசக்குகிறாய் உயிரை
கூவும் பறவை அலகில் கசியும் குரலில் காமம்
முயங்கும் தருணப் பிழையை அழைத்துப்போ அடர்வன மாயம் நோக்கி

முத்தமிடுதலில் என்னவொரு சந்தேகம்
உடல்வெளி முழுவதும் யுக உறைதலின் சில்லிட்ட புகைப் பரவல்
நித்திரை உருகும் கண் செருகலைத் தாழும் இமை நெருடி விரல் நடுவாய்

கூட ஓர் இரவு
பின்வாசற்படியில் கிரண நிலவு

நாபிச்சுழியில் நிரம்பும் கண்ணீர்த் தளும்பலில்
மிதக்கும் நட்சத்திரங்கள்
 
****