புதன், டிசம்பர் 30, 2009

கல் யானை..!

*

நூற்றாண்டுகள் கடந்த
பல்லவனின்
பெருமையை..

முனை மழுங்கிய
தந்தத்தால்...கூர் தீட்ட
வழியற்று..

ஓர் அடி
எடுத்து வைக்கும்..பொருட்டு..

நின்று கொண்டே இருக்கிறது..
கல் யானை..!

****

மழைப் பொழியும் சப்தங்களை சிதறடித்துச் சிரிப்பவன்

*

செய்வதறியாது
தலைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறது துயரம்..

நகர மறுத்து..
கடிகாரங்களின் நொடிமுள்
ஒரே இடத்தில் துடித்துத் திகைக்கிறது.

சிக்குப்பிடித்து கலைந்த அழுக்குக் கேசமும்
திட்டுத் திட்டாய் கறுப்பேரிய மெலிந்த உடலும்
வலது புருவமோரம் வெட்டுத் தழும்பும்..
சாம்பல் பூத்துவிட்ட கந்தல்..கால்சராயுமென..

முன்னிரண்டும் உடைந்து போய் மீந்த
மொச்சைப் பற்களின் மஞ்சள் நிறமுமாய்..

சிரிக்கிறான்..
சிரிக்கிறான்..
இடி இடித்து மழைப் பொழியும் சப்தங்களை
தனதாக்கி சிதறடித்துச் சிரிக்கிறான்...

செய்வதறியாது...
நகர மறுத்து..
அவனருகே..
தன் தலைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறது துயரம்..

நிமிட முட்கள் வெடித்து நொறுங்கி...
நொடிமுள்..
ஒரே இடத்தில் துடித்துத் திகைக்கிறது...
யுகங்களை விழுங்கி..!

****

நெருப்புச் சிறகுகள்..

*

இன்றிரவு..

மின்மினிப் பூச்சிகளின்..
பொட்டு நெருப்பு சிறகுகளில்..
மேலும் வெளிச்சம்
தீப்பிடித்துக் கொள்கிறது..


விண்ணிலிருந்து சாட்டிலைட்கள்
கொளுத்திப் போடுகின்றன..
கோடிக்கணக்கான
குறுஞ் செய்திகளை..!

****

காபிக் கோப்பையிலிருந்து.. ஒரு வெண்புகை..

*

தாளமிட்டு அசைகிறது
மழைத்துளி..

அழுத்தமான
மௌனத்தோடு..

நெளிந்து சுருள்கிறது..
காபிக் கோப்பையிலிருந்து..
ஒரு வெண்புகை..

நீ
சொல்லாமல் விடுபடும்..
வார்த்தைகளின்
திரள்களை..

இந்த
உணவு விடுதியின்..
கண்ணாடி ஜன்னல்கள்..
துளிர்த்திருக்கின்றன..

மழையைத் தொட்டு தொட்டு..
புள்ளிப் புள்ளியாய்..

வெளிக்கூரையிலிருந்து...
இப்போதும்..
தாளமிட்டு அசைகிறது..
மழைத்துளி..

****

மாதிரிகள் அற்ற வரைப்படங்கள்..

*

முன்னெப்போதும்
சொல்லிவிடத் தயக்கங்கள்
சுமந்த பருவம் தொட்டே..
ஈடேறி விடுகிறது
வயதுக்குரிய ரகசியம்..

ஊமைச் செதில்களில்..
அடர்ந்தும் குறுகியும்
சேகரமாகின்றன

கால நுனி
பதம் பார்க்கும்..
முன் சுவடுகள்..

மாதிரிகள் அற்ற
வரைப்படங்களோடு..
இருள் அடர்ந்த
மனதின் வனத்துக்குள்..

பயணிக்கும்படி
நிர்பந்திக்கிறது

முடிச்சிட்டுக் கொள்ளும்
புதிர் பாதை..!

****

நன்றி : ' விகடன்.காம் ' ( டிசம்பர் 30-2009 )

http://youthful.vikatan.com/youth/NYouth/elangopoem30122009.asp

துயரங்களின் சுண்டுவிரல் (அல்லது ) என் தெருவை..

*

என்
தெருவை ஒரு துயரம்
நடந்து கடக்கிறது..
அதன் சுண்டு விரல் பற்றி..
பின் தொடர்கிறது மரணம்..

ஒரு சிறுமி..
சடைப் பின்னலை சரிசெய்தபடி..
தன் அம்மாவின்
முந்தானையைத் தவறவிடுகிறாள்..

நாய்க்குட்டி யொன்று
தன் சுருண்ட வாலின் முனையை
கவ்வி விட முயன்று கொண்டே இருக்கிறது..

தள்ளாடி நகரும்..
வயோதிகன் ஒருவனின்..
குனிந்த தலை..மறைத்துவிடுகிறது
அவன் இதுவரை அசைப்போட்டு..
துப்பிவிட்ட காலத்தின் தாடையை...

என் தெருவை..
எப்போதுமே...ஏதாவது ஒரு துயரம்
கடக்க நேரும் நிமிடங்களில்..
அதன் சுண்டு விரலைப் பற்றிக் கொள்ளத்
தவறுவதில்லை..
ஒரு மரணமோ..அல்லது..
மரணத்துக்கான ஒரு அவசியமோ..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) டிசம்பர் - 30 - 2009

http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2356

மீள் - நுழைவாயில்..

*

இதுவரை
வந்தறியா ஊருக்குள்..
நுழையுமுன்..

மனதுக்குள்..
மீள் - நுழைந்தது
அப்பா சொல்லியிருந்த..
வழித்தடத்துக்குரிய
அடையாளங்கள்..

மழைச் சகதியோடு..கிளைப் பரப்பி..
எங்கெங்கோ..
நெளிந்தலையும்..
இவ்வழியாவும்..

என்
பாட்டனின்..
உள்ளங்கை..ரேகைகளாய்..
வேர் விட்டிருக்கிறது..

****

உடைவு..

*

பேனாக்களின்..
மூக்கு முனையில்...
மூச்சுவிடுகின்றது..
மனித நேயத்தின்
மார்புக் கூடு..

அதை அழுத்தி
உடைக்கிறது..

அகாலமாய்
ஒரு
மரணத் தீர்ப்பு..!

****

பாதிக் கடித்த மிளகாய்ப் பழங்கள்..

*

அணில்களின் தயக்கங்களை
நொடிதோறும்..
விடாமல்..

துடித்துக் கொண்டே இருக்கும்
அதன் வால்கள்..

அவை
பாதிக் கடித்த
மிளகாய்ப் பழங்களின்
விதைகளில்..

மெல்லிய நாவுகளின்
ஈரம் மினுமினுப்பதை..

கிளிகள் கவனிப்பதில்லை..!

****

மெட்ரோ கவிதைகள் - 40

*
நீர் நிலைகளை
சிமென்ட் பாலூற்றி..
வெப்பம்
சேகரிக்கிறது நகரம்..

மொட்டை மாடிகளில்..
குவளை நீர்
கிடைக்காதா..
என ஏங்கிப் பறக்கும் காகங்கள்..

இறந்தவர்களுக்கு
வைக்கும்..
சோற்றுருண்டைகளைக்
கடந்து பறக்கின்றன
தாகத்தோடு..!

****

மெட்ரோ கவிதைகள் - 39 ( இலை நிழல்கள் )

*
கண்களுக்கு அகப்படாத
அதிகாலைச் சூரியன்..

கட்டடங்களுக்கு இடையே
மூச்சுத் திணறுவதை..

என் வீட்டுச் சுவரில்..
பதறிப் பதறி எழுதுகின்றன
இலை நிழல்கள்..!

****

இறுதி நிலுவை..

*

கவிதைக்குரிய
கட்டமைப்புக்கான
நிலுவைகளை..

தண்டம் அகற்ற
நின்ற வரிசையில்..

இறுதியாக வந்து
ஒட்டிக்கொண்டது..

இதுவரை அறிமுகமில்லாத
ஓர் படிமம்..!

****

ஆரஞ்சு நிறக் குவளை..

*
ஜன்னல் திண்டில்
கவிழ்ந்துக் கிடக்கும்
ஆரஞ்சு நிறக் குவளை மீதேறி
கசிந்து வழியும்..

இளஞ்சிவப்பு வெயில்..

அடுப்பில் கொதிக்கும்..
பாலில் கலந்து..
துள்ளுகிறது..

****

காகிதங்கள் கிழிபடும் ஓசை...

*

இது
மழைக்காலம் அல்ல
என்றபடி..
சலசலத்துக் கொண்டிருக்கிறது..
சாக்கடை..

கப்பல்களுக்கான காகிதங்கள்
கிழிபடும் ஓசைகளை..

பத்திரப்படுத்துகின்றன..
நோட்டுப் புத்தகங்கள்..!

****

பட்டாம்பூச்சிகளும் பூக்களுக்கான சிறகுக் குறிப்புகளும்..

*

முட்கள் மட்டுமே
தரித்திருந்த
தொட்டிச் செடியில்..

ஒரு நாள் மாலை..
பட்டாம்பூச்சிகள் பூத்திருந்தன..

பூக்களுக்கெல்லாம்
சிறகு முளைத்து
பறந்து விட்டதாக...

குறிப்புகளை..
முடிச்சிட்டு வைத்திருக்கும்
ரகசியத்தை..

என்
கனவில் வந்து பகிர்ந்து கொண்டது..
ஒரு வேர் நுனி..!

****

சில்லுகள்..

*

மதில் சுவர்களின்
உச்சியில்..

பதித்து வைக்கப்பட்ட
கண்ணாடி சில்லுகளை..

மேலும்..
உடைத்து
விளையாடுகிறது..

வெயில்..!

***

உறைப் பனித்துளி..!

*

இரவுக் கீற்றை
குளிர் காற்று
இழை இழையாய்
கிழித்த சப்தத்தில்..

புல் முனையில்..உட்கார்ந்திருந்த
பனித்துளி..

பயத்தில்..உறைந்தது..!

****

நெளிவு..

*

கருத்தின்
தொண்டைக் குழியில்..

ரேகையொன்று
நெளிந்த விதத்தில்..

பொய்..
புரையோடியது..!

****

இலைக் கோடுகள்...

*

இன்னும்
உடைந்து விடாமல்
புடைத்திருக்கும்..

இலைச் சருகின்..
நரம்புக் கோடுகளில்..

எதைக் கண்டோ..
திகைத்து
நிற்கிறது..
ஒரு
கட்டெறும்பு..!

****

பால் நதியென நெளியும் மெழுகு...!

*

வெம்மை மிகுந்த
கோடை இரவொன்றின்
குளிரை..

தன் பார்வையில்..
அப்பிக் கொண்டு..
என்
அறையின் தனிமையில்..
உட்கார்ந்திருக்கிறாள்...

புத்தக அலமாரியில்..
முதுகுத் திருப்பி
நின்றுக் கொண்டிருக்கும்..
புத்தகங்களை...

மௌனமொன்று
நெருடிக் கொண்டிருப்பதை..

ஜன்னலின்
திரைச் சீலை அசைந்து அசைந்து
ஒத்துக் கொள்கிறது...

மெல்ல மயங்கும்..மின் விசிறியின்..
நீண்ட இழைகள்...

இல்லாத காற்றை...

துண்டு துண்டுகளாக நறுக்கி..
அறையின் இருள் மூலைகளில்..
தூக்கி எறிந்து..

அவளைக் குறிப்பெடுத்தபடி
சுழல்கின்றன..

ஈரம் சொட்டும் கூந்தல் நுனியை...
ரகசியமாய்
முத்தமிட்டு சுகிக்கிறது..
ரத்த நிற பட்டுக் கம்பளம்..

மேஜையில்...எரிந்து உருகி...
பால் நதியென நெளியும்..
மெழுகு...
விளிம்பைக் கடந்து..

அந்தரத்தில் உறைகிறது..
அவளைப் பார்த்த நொடியில்...

பஞ்சுப் பொதிகைத் துவாலை யொன்றை
உள்ளறையிலிருந்து...
எடுத்து வந்து நீட்டிய கணத்தை..

எழுந்து நின்று..

குழல் வாசித்து உதிர்த்தாள்..
'நன்றி' - என மென் இதழ் அசைத்து..

அலமாரிப் புத்தகங்கள்
மொத்தமும்..
அவளின்..
அடர் கரிய நிழலில்
பதுங்கிவிட்டது..

அறை முழுதும்..

இல்லாத காற்றை
இன்னும்..
துண்டு துண்டாய் நறுக்கிக் கொண்டிருக்கிறது...

விட்டுவிடும் மனமில்லா
மின்விசிறி இழைகள்...!

****

மெட்ரோ கவிதைகள் - 38

*
பிளாஸ்டிக் பைக்குள்
தவறுதலாய்
காலை நுழைத்து விட்ட
காற்று..

கடக்கும் திசை புரியாமல்..

விரையும் வாகனங்களுக்கிடையே..
முன்னும் பின்னும்..
அலை மோதுகிறது..

துணைக்கு ஆளின்றி..!

****

மழை சொட்டு..!

*

பெய்து முடித்த பின்பு..
சொட்டு சொட்டாய்..
மழையைப்
பிழிந்து கொண்டிருக்கிறது
மரம்..!

****

ஒற்றைக் காம்பு...!

*

முதலில் வீசியத் தென்றலை..
மறுதலித்து..

தனக்கான
தென்றலுக்கென..

ஒற்றைக் காம்பில்
தொங்கிக் கொண்டிருக்கிறது..

ஒரு
பழுத்த இலை..!

****

மெட்ரோ கவிதைகள் - 37

*
நெடுஞ்சாலைப் பிளந்து
நடப்பட்ட..

பூக்களற்ற
செடிகளின் இலைகளில்..

கனரக வாகனங்கள்
துப்பிச் செல்கின்றன

கார்பன் தூசுகளை...

நின்று கடக்கும்...
ஜன்னலோர பஸ்கள் மட்டும்
எப்போதாவது..

பான்பராக் எச்சிலை...!


****

இருளடர்ந்த பட்டறைக் கொல்லனின் அடர்மஞ்சள் சிரிப்பு..!

*

இரவில் வாங்கி வந்த
கேடயங்களை..
அடுக்கி வைத்திருக்கிறேன்..

என்
பாசறையில்..

வாட்களை
வார்த்து வார்த்து..
விற்றும் விட்டேன்..

எனக்கு விருப்பமற்று
நிற்க நேர்ந்த களங்களில்...

இருளடர்ந்த பட்டறை நெருப்பில்..
அடர்மஞ்சள் நிறத்தில்..
ஒளிரும்
கொல்லனின் சிரிப்பு..

உக்கிர சூரியனாய்...
உச்சியில்...நிற்கும்..

****

நாய்களின் வால்..

*

அதிகார
காம்பவுன்ட்டுக்குள்
உலவும்
நாய்களின் வால்
நிமிர்ந்தே நிற்கின்றன..!

பளபளக்கும் பூட்சுகளின்
லேஸ் முனை
சொடுக்கலில்..

ஒவ்வொரு முறையும்
அதிர்கிறது..
மொசைக் மின்னும்
காரிடார்..

தேக்கு மரத்தில்...இழைத்த
பிரவுன் நிற
கதவுகளின்
வழவழ பிரதிபலிப்பில்..

எப்போதும்...
பதிவாகிறது..
ஒரு
பரிதாப முகம்..!

ஆனால்..

அதிகார
காம்பவுன்ட்டுக்குள்
உலவும்
நாய்களின் வால்
நிமிர்ந்தே நிற்கின்றன..!

***

துணைக்கால்

*

தன்
செருப்பை உருவி..
கன்னத்தில் அறைந்தது
என் மொழி..

செய்யும்
சிறு சிறு தவறுகளுக்கு
இத்தனைத் தண்டனை

தகும் தான்...
என்பதாக..

நட்ட நடு
வாக்கியக் கோட்டில்
தலை குனிந்து
நிற்க நேரும் கணத்தில்..

காண முடிகிறது..

துணையற்ற
வெறும் கால்களை..

****

நிலவின் வெளிச்சம் உறிஞ்சும் வேட்கை..

*

உனது
ஆவேசச் சிரிப்புத் தருணங்களில்
முளைத்து விடுகின்றன
டிராகுலா பற்கள்..

ரத்தம் உறிஞ்சும்
உன் வேட்கைக்கு...ஏதுவாக..

என்
நிலவுகளின்
வெளிச்சங்களையும்
விழுங்கிவிடுகின்றன இமைகள்..

****

மௌனப் படையல்..

*

எனக்கென
பரிமாறிய உன் படையலில்

மௌனத்தைத் தொட்டுக்கொள்ள
மறந்ததை..

உன்னிடமிருந்து
விடைப்பெற்று வந்த
வெகு நேரத்துக்குப் பிறகு தான்

உணர நேர்ந்தது..

****

சனி, டிசம்பர் 26, 2009

கைப்பிடித்து அழைத்து வரும் உள்ளிருள்..

*

காமம் என்பது
கடைசிக் கதவு அல்ல

இன்னொரு வாசல்..

உள்ளிருளில்
மௌனம் சுருண்ட
குழந்தைகளின்..

வீறிடலை..

கைப் பிடித்து அழைத்து வரவும்..
அவற்றின் தலையில்
பெயர் பொருத்தி தெருவில் விடவும்..

காமம் என்பது
இன்னொரு வாசல்..!

****

நேர்க்கோட்டிலிருந்து வரிசைத் தப்பிய மூன்றாம் நட்சத்திரம்

*

இரவு நெடுக..
கண் சிமிட்டிக் கொண்டேயிருந்தது
ஒரு
சிறிய நகர்தலுக்கு..!

****

எழுதிச் சலித்த காரணங்களின் சாதுரியம்..

*

இரவு ஒரு ' நுனி ' தான்
என்று
வாதிடத் தொடங்கியது
என் பேனா முனை..

மறுத்துவிட வேண்டும்
என்கிற தீர்மானத்தோடு...
காகித ஓரங்களை..
விரல்களுக்கிடையே..
சுருட்டியபடி..
கூர் தீட்டினேன் இருளை..

அதன்
கெக்கலிப்பு சத்தம் நீண்டு ஒலித்த
அந்தக் கணங்களை
என் நகங்களுக்குள்
செருகிவிட பிரயத்தனப்பட்டேன்..

எழுதிச் சலித்த..
காரணங்களை...
தன் மூக்கு முனையிலும்
நாக்கின் அடியிலும்..
செதில் செதிலாய் அறுத்து வைத்திருக்கிறது
மிகவும் சாதுரியமாக..

அடித்துச் சொல்லுகிறது...
இரவு ஒரு 'நுனி' தான் - என்று..

இறுதியில்..
ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று..

நுனித் திருகி..
எழுதும் எத்தனிப்பில்..
எப்போதும்
இரவு...
என் மேஜை முழுதும் ஒழுகிப் பரவுவதை..
முன் வைத்து...

****

புரிதலற்ற எதிர்முனைகள்..

*

எடை கூடும்
மௌனத்தின் மையத்தை..
ஒரு எறும்பு
ஊர்ந்து கடந்து விடுகிறது..

மனவெளியில்
குழிப் பறித்து நகரும்
பாதங்கள்..
பாதைகளுக்கான
முன் குறிப்புகளை.. விட்டகல்கின்றன எப்போதும்..

இரு நபர்களுக்குரிய
புரிதலற்ற
எதிர் முனைகளை..
அளந்துவிடும்.. ஆவலோடு..
கூர்மையாகின்றன
சொற் ஆயுதங்கள்..

எடை கூடும்
மௌனக் கேடயங்களின்
மையத்தை..
ஒரு எறும்பு
ஊர்ந்து கடந்துவிடுகிறது...மீண்டும்..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) டிசம்பர் - 2009

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2289

தயங்கி விழுங்கும் எச்சிலின் வெப்பம்..

*
மதில்களைத் தாண்டுதல்
பற்றிய பாதச் சுவடுகளை
எழுதிக் கொண்டிருந்தான்..

கொய்யா மரத்தின்
கிளையொன்று
கை நீட்டியபடியே
சிநேகம் கொள்ளத் தயங்கவில்லை
அவள் தோட்டத்து நெல்லி மரத்தோடு..

தயங்கி விழுங்கும் எச்சிலின்
வெப்பத்தை
தொண்டைக்குழிக்குள்
கவனமாய் சேகரிக்கின்றது
ரகசியமாய் உச்சரிக்கப் பழகிவிட்ட
அவளின் பெயர்..

பரிமாறிக் கொண்ட
புத்தகங்களின் பொருட்டு
கை விரல்களுக்கான
தருணங்களை
அடிக்கோடிடத் தொடங்கிய மனதை

இயல்பாகக் கை குலுக்கி
விடை கொடுத்த புன்னகையில்

நொறுக்கிவிட்டு
நகர்ந்து விட்டாள்
மற்றொரு வாசிப்பு நோக்கி...

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( 18.12.2009 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1695:2009-12-18-01-36-39&catid=2:poems&Itemid=88

காரணங்கள் இல்லாத பகல் பொழுதுகள்..

*
அன்றொரு ஒத்தையடிப் பாதை இருந்தது
அதில்
கீறலாகி விட்ட சுவடுகளை
கவனமற்று
கடந்து விடுகின்றன
இன்றையப் பாதங்கள்..

நிறைவேறாத வேட்கையும்
துயரம் அமிழ
அலைந்துருகிய தனிமையும்

மெல்லியப் புல்லிதழ்களாக
பசுமைப் பூசிய நாட்களை இழந்து
பழுத்து விட்டன..

சிறு பூக்களைக் கொய்ய
காரணங்கள் இல்லாத
பகல் பொழுதுகளை

மௌனமொன்று
நிதானமாக அசைப்போடுகிறது
மனதை மேய்ந்த அவகாசத்தோடு...

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( 18.12.2009 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1686:2009-12-17-23-36-08&catid=2:poems&Itemid=88

ஒரு மேடையும்...அதன் ஒப்பனை அறையும்..

*
மரணத்துக்கானப் படுதாவை
பலங்கொண்டு
கீழே இறக்கிவிட..

காத்திருக்கிறார்கள்
மேடையைக் கடந்து
சில பார்வையாளர்கள்..

கதாப்பாத்திரங்கள்
அயர்ந்து தூங்குகின்றன
ஒப்பனை அறைகளில்..

பின்புலம் அறியா
எவனோ ஒருவன்
தெருவோரங்களில் நின்றபடி..

தொடர்ந்து
விநியோகம் செய்து கொண்டே இருக்கிறான்..
நாடகத்துக்குரிய அறிவிப்பை
சின்னக் காகிதங்களில்..

****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் ( 14.12.2009 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1637:2009-12-14-02-23-20&catid=2:poems&Itemid

இருவேறு தருணங்கள்..

*

உன்
வாழ்வின்
ஒற்றையடிப் பாதை நெடுக
இரு கரைகளிலும்
சின்ன சின்னப் பூக்களாய் பூத்திருக்கிறேன்

என்னைப் பறிக்க மறுதலித்து
நடந்து கொண்டே இருக்கிறாய்

விரல்களில்
பதற்ற நூலொன்றைத் திருகியபடி !

*

வேறொரு தருணத்தில்...
மேகத்திலிருந்து புறப்பட்டு
மழையென உன் மீது பொழிந்துவிட
முயன்றேன்

நீயோ
குடையோடு எதிர்கொண்டு
ஊடுருவி நடக்கத் தொடங்குகிறாய்

கொஞ்சமும்
பதற்றமின்றி !

****

நன்றி : ' விகடன். காம் ' ( டிசம்பர் 2009 )

http://youthful.vikatan.com/youth/NYouth/elangopoem14122009.asp

வியாழன், டிசம்பர் 17, 2009

முட்புதர் மண்டிய நெருஞ்சிக் காடு..

*

காட்சிகளை உருவாக்குபவன்
என்
பக்கத்து இருக்கையில்
உட்கார்ந்திருக்கிறான்.

பனி அடர்ந்த
ஒரு மலைச் சரிவில்..
கைகளை இறகுகள் போல விரித்து
நான் ஓடும்
ஒரு காட்சியை எடுத்து
என் மடியில் வைத்தான்..

மிகவும் குளிர்வதென்பது
என்னுடைய ஆஸ்துமா தொல்லையைத்
தூண்டும் செயலென்று சொல்லி
அதை நிராகரித்தேன்..

பசுமையை ஓவியமென..
சுற்றிலும் தூரிகையிட்டிருந்த
ஒற்றையடிப் பாதையின்
இறுதி நுனியில்..
நான்
தனியனாக உட்கார்ந்திருக்கும்
காட்சியை எடுத்து நீட்டினான்..

வெகுநேரம் ஒரே இடத்தில்
தங்கும் பொருட்டு
என் கால்கள்..
ரத்தம் சுண்டி
சொரனையிழந்துவிடுவேனென்று
மறுத்துவிட்டேன்..

முட்புதர் மண்டிய
நெருஞ்சிக் காட்டுக்குள்
உடலெங்கும் கிழித்துக்கொண்டு
சிதைந்தழுகிய ரணத்தோடு
நான் அலறும்
காட்சியொன்றை இம்முறை
என் கையில் திணித்தான்.

' ஐயோ...!
எப்படி தாங்குவேன் இவ்வலியை..?
விடுவி..
எனனை முதலில்..' - என்றேன்
பதறியபடி..

'ஆனால்...
இது தான் உனக்கானக் காட்சி
இதிலிருந்து நீயாகவே..
பிதுங்கி வெளியேறு..
உன் நிறுத்தம் வந்துவிட்டது..' -
என்றபடி..நிதானமாக
மறைந்து போனான்..

பேருந்து
தன் நிறுத்தத்தினின்று
அம்பது அடி
தள்ளி நின்றது..
கசகசவென...வியர்வை நாற்றத்தோடு..!

*****

திங்கள், டிசம்பர் 14, 2009

பொழியவிருக்கும் பெருமழையின் முதல் துளி..

*
மௌனத்தை உழுதபடி
முன்னகர்கின்றன கவலைகள்
நுகத்தடியில்
புரள்கிறது ஒரு பேரமைதி..

கருத்துத் திரளும்
நம்பிக்கை மேகங்கள்
பொழியவிருக்கும்
பெரு மழையின்
முதல் துளி போல

உன் வருகை அமைந்துவிடாதா
எனக் காத்துக் கிடக்கின்றன
கட்டுக் கட்டாய்
என்
எதிர்பார்ப்புகள் .

வெடிப்பு விட்டு
நீண்டுக் கிடக்கும் நம் வரப்புகளை
அளந்தபடியே முணுமுணுக்கிறது
இந்த அகால இரவு..

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( 11.12.2009 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1588:2009-12-11-01-59-31&catid=2:poems&Itemid=88

ஆழ்நித்திரைப் பிரேதங்கள்..

*
பலியிடுவதற்கான பீடங்களை
கட்டுமானம் செய்கிறது
குளிர் கூடிய இவ்விரவு..

ஒன்றோடொன்று
ஆலிங்கனம் செய்தபடியே
நழுவுகின்றன
ஒரு கனவும் இன்னொரு கனவும்..

விடியலுக்கானக் கீற்றை
மையிருட்டில்
வனைந்து கொண்டிருக்கிறது
ஒரு ஆழ் நித்திரை..

முகங்கள் உருகி
முகங்கள் மீள்-உருவாகின்றன
ஒவ்வொரு பொழுதும்.

பீடங்களினின்றும் எழும்
பிரேதங்கள்
வாகனங்களை நோக்கி
நகர்கின்றன

வாயகன்றுக் காத்திருக்கும்
அலுவல்களின் இரையென..

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( 6.12.2009 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1525:2009-12-06-06-01-20&catid=2:poems&Itemid=88

செவ்வாய், டிசம்பர் 01, 2009

குயில்களின் மௌனங்கள்..

*

தீண்ட முடியாத துயரத்தின்
பாடல் ஒன்றை
பாடிச் செல்லும்
தவிட்டுக் குருவிகளின் குரலை
பத்திரமாய் சேமிக்கிறது
கரையோர நாணலின் தளிர்..

கருமுகில் பஞ்சுகளினின்றும்
நூல் திரித்து..
கழுத்தில் வளையமாய்
அணிந்தபடி பறக்கின்றன
மைனாக்கள்..

குயில்களின்
மௌனங்களைப் பின்னலிட்டு..
வளர்கின்றன
ஏகாந்தத்தின் பெருவெளிகளும்..
கானகத்தின் அடர் இருளும்..

****

உதிர்தலின் பொருட்டு..

*

ஏதோ
ஒரு வகையிலானதாக
அமைந்துவிடுகிறது
உன் புன்முறுவல்..

நித்தம் இழைத்தபடியே
நழுவுதல்
சாத்தியமாகிறது...

நிர்ப்பந்தமில்லா..
பார்வைகளை..
எப்போதும் வைத்திருக்கிறாய்
உன் வசம்..

உதிர்தலின் பொருட்டே...
பூக்கப் பழகிவிட்டன
என்
எதிர்பார்ப்புகள்..

****

விரல்கள்..

*

சமையலறைக் கதவின்..
விளிம்பை
வளைத்துப் பிடித்திருக்கும்
உன்
விரல்களை மட்டும்
தான் பார்க்க முடிந்தது..

' யம்மாடி... யாரு வந்திருக்கா பாரு..!' -
என்ற
உன் அம்மாவின் குரலுக்கு..

****

மெட்ரோ கவிதைகள் - 36

*
சடென்று..குறுக்கே...
தாழப் பறந்து
சாலைக் கடக்கும்
காகத்தின் கண்கள்..

என்
வாகனத்தின்
'ஹெட் லைட் ' - வெளிச்சத்தை..

தீண்டி விலகுகிறது...
மிரட்சியோடு..!

****

குறுக்கு வெட்டு..

*

ரமணி டீச்சரின்..
கையிலிருக்கும்..
மர ஸ்கேலில்..
புதைந்து கிடக்கும்..
எண்களை...
வாசிக்கப் பழகும் கணத்தில்..
புறங்கையில்...விழுந்துவிடும்..
பட்டென்று ஒரு அடி..

அறிவியல் வகுப்பு வரை
வலிக்கும் அதன் காரணத்தை...
அறிவியல் துணை கொண்டு
விளக்கும்படி..
ராமச்சந்திரன் மாஸ்டரைக்.. கேட்டதால்..
காது நுனி திருகப்பட்டு
சிவந்ததை..

கடைசி வகுப்பான
தமிழில்...
நெருடியபடி
புத்தகத்தில் ஆழ்ந்ததைக் கவனித்த..
மலர்க்கொடி டீச்சர்..

புத்தகப் பக்கத்தை கவனித்து..
புருவம் உயர்த்தி..ஆச்சரியமாய் கேட்டார்..
' கவிதை பிடிக்குமா உனக்கு..?'
பயத்தில்...
'ஆமா..' என்பதாக தலையசைத்த நொடியில்..
தலை கோதி... நகன்றதும்..

பிரித்திருந்த புத்தகத்தில்...
பாரதியின் வரிகள்..
என்னைக் குறுக்கில் வெட்டின..

*****

நீ..

*

குழந்தையின்
கன்னக் குழிக்குள்...
திரள்கின்ற புன்னகையை..

மொத்தமாய்
உறிஞ்சு விடுகிறாய்.. நீ

முத்தமென்ற பெயரில்..!


****

போவதாகச் சொல்லிப் போவான்..

*

வருவதாகச் சொல்லியிருந்தான்..
வந்தப் பின்
போவதாகச் சொல்லிப் போவான்..

இடைப் பட்ட..
காலத்தை..
நிரப்பியபடியே இருப்போம்...

எப்போதும் உரையாடலால்..

எப்போதாவது..
மௌனத்தால்..!

****

மெட்ரோ கவிதைகள் - 35

*
நகரம் முழுவதும்..
சலித்தாயிற்று..

தென்படவேயில்லை..

ஒரு
ஒற்றையடிப்பாதைக் கூட..!


****

அசைந்துக் கொண்டே இருக்கும் நாணல் நுனி..

*

பசலைக் காட்டில் பூக்கின்றன
தலைவியின்
மௌனங்கள்..

அதைக் கொய்ய நீளும்
விரல்களில் படர்கிறது காமம்..

ஒற்றைக் காம்புத் தாங்கிய பூவிதழ்களில்..
உருள்கின்ற...முத்தங்கள்...
வேர் வரை இனிப்பதாக
குறிப்பெழுதி...தவிக்கின்றன...

நோக்கும் திசைதோறும்...
வண்டை இசைக்கும் தென்றலை
தூதுப் போக நிர்பந்திக்கின்றன..
தேன்துளிகள்...

தாழும் கண் மலரை..
நதிக் கரையில்..
அமர்ந்து...

நெளியும் அலைநிழலில்...
மிதவையிடுகிறாள்...

அந்தி வானில்...
முகிழும் இரவைத் தீண்டி
அசைந்துக் கொண்டே இருக்கிறது...

அவளுக்காக
ஒரு நாணல் நுனி...

*****

சப்தங்கள் அடைகாக்கப்படும் கூடு..

*

இரவுக் கிண்ணம் வழிகிறது
வெயிலின் குருதியோடு..

நிலவின் நதியை
பருகிவிடும் தாகத்தோடு
முன்னகர்கிறது
கருத்த மேகமொன்று..

பறவைகளின் சிறகுகளைக்
கோதுகின்றன அலகுகள்..

சப்தங்கள்
அடைகாக்கப்படும் கூட்டை
அசைத்துக்கொண்டே
இருக்கிறது..

மரக்கிளை..!

*****