செவ்வாய், மே 26, 2009

தளிர் நுனிகளின் ரகசியங்கள்...

*

நண்பர்கள் அற்ற
ஒரு பகலின்
பள்ளத்தாக்கில்..

பாத ரேகைகள்
நசுக்கும்
சிறு பூக்களின்
வாசம்
நுகர்ந்தபடி...

மனசின்
காடு..
சூழ்ந்த
பசுங் கொடிகளை

நினைவின்
சடையாகப் பின்னி

வழித்தடம்..
எழுதிக்கொண்டே..

பனித்துளி
தேடும்போது...

ஈர வேர்களின்...
தளிர் நுனிகளை..
ரகசியமாய்..
இழுத்துக்கொண்டாய்..

உன்னை
கடந்து போய்விட..

என்னை
தவிர்த்தல் பொருட்டு..

****

வெயில் கோடுகள்..

*

அறை
ஜன்னல் கண்ணாடியை
பூசி மெழுகும்
வெயில்..

கம்பி சட்டகத்தை
வரைந்து வைக்கிறது
கோடுகளாய்..

வந்தமர்ந்த ஈயின்
அசைவற்ற
நிழலை..

துரத்தி வந்த
சுவர் பல்லி..

தற்செயலாய்..
நக்க நேர்ந்தது..
வெயிலை..

****

முதுகு கொத்தும் கற்பனை காகங்கள்..

*

சொற்களின்
கூட்டுப் பண்ணையில்

சதுப்பு நில
வாக்கியங்களில்..

அர்த்த எருமைகள்
மேய்கின்றன..

அதன் மீதேறி..
முதுகு கொத்தும்

கற்பனை காகங்கள்..

காயும்
இளவெயில் மின்னும்
கண்களை உருட்டி..

அண்ணாந்து
வானம் பார்க்கின்றன..

சூட்சும நூல்கள்
எங்கிருந்து நீள்கின்றன..

என்பதாக..
கவ்விப் பிடிக்க..

*****

ஒரு எழுத்து..

*

நீர் பட்டு
உப்பிய
காகிதத்தின் பரப்பில்..

ஒரு
எழுத்து மட்டும்
புடைத்திருக்க..

மற்றவை
சும்மா கிடந்தன..!

****

மீனின் புழுக்கள்..

*

மீன் செத்து
மிதக்கும்
நீர்த்தொட்டியில்..

சுதந்திரமாய்
நெளிகின்றன..

உணவுக்கான
புழுக்கள்..!

*****

வெள்ளி, மே 22, 2009

சாவிகள்..

*

வருவதாக
சொல்லி கிளம்பினான்..
நினைவின்
தொலைவிலிருந்து..

வந்து
சேரும்வரை..

காத்திருப்பின்
கதவுகள் தோறும்..
முளைக்கின்றன...

பல நூறு
சாவித் துளைகள்..

மனசின்
அலமாரி முழுக்கத்
தேடி களைத்தும்..

அகப்படவில்லை..
ஒரு சாவி கூட..

வந்தும் விட்டான்..
சொன்னதை விட
விரைவாக..

கை குலுக்கி..
புன்னகைத்தபோது..

கண்டு கொள்ள முடிந்தது
கை நிறைய
அவன்
வைத்திருந்த சாவிகளை..

****

மழைக்கான 'ரீ..ரீ..' - ஒலிக் குறிப்புகள்

*

மழைத்தும்பி ஒன்றின்..
கண்ணாடிச் சிறகு
ரீங்கரிப்பில்...

குழந்தைகள்
அண்ணாந்து பார்க்கின்றன..
கடந்து போகும்
மேகங்களை..

பிஞ்சு கைகளில்..
பிடித்து சுழற்றும்
சிறு துண்டின்
பிசிரிலிருந்தும்
கிளம்புகிறது..

' ரீ..ரீ..' -
ஒலிக் குறிப்புகள்..

தோளுயர
நாணல் கூட்டத்துக்குள்...
ஊடுருவி..

துரத்தும்
சத்தத்தில்...

தும்பிகளின்
ராகம் ஒத்த..

துண்டுகளின்..
இசைக் கம்பிகளை..
முத்தமிட...

காற்றுருகி...
நழுவுகிறது..

ஒற்றை
மழைத் துளி..

****

வார்த்தைகள் யாசிக்கின்றன..

*

கொடியில் காயும்
ஈரத் துணிகளை..
உருவி போவதை போல்

உதறி பார்க்கிறேன்..
எழுதி முடித்த
கவிதைத் தாளை..

பொய்யான
தூறலோடு..
பழிப்பு காட்டி நகரும்
மேகத் துண்டுகள்..

சூரியனை உறிஞ்சும்
ஆவலோடு..
உதடு குவிக்கிறது..

ஆரஞ்சு நிறக்
குழைவில்..
பிசிறடிக்கும் ஓரங்களோடு

கலைக்கும் காற்றை..
ஒத்தடமிடும்..
முயற்சியில்..

வார்த்தைகள்
ஒவ்வொன்றும்..

வானவில்லை
யாசிக்கின்றன...

****

பாலைவன மணல்...சில..!

*

மனசின் ..
நெடிய
பாலைவனத்தின்
முடிவில்
தொடங்கி விடுகிறது..
அடர் காடு..

உள்ளே..
கை விரித்து
அழைக்கிறது..
கடும் இருட்டு..

எரியும்
நினைவின் ஒளியில்
துணை வரக்கூடும்
நிழல் போல்
உன் புன்னகை..

நின்று
உதறும்
பாதங்களில்...
மெல்ல உதிர்கிறது..
பாலைவன மணல் துகள்
சில..

****

கல்..!

*

வாசிக்க
நேர்ந்த
ஒரு கவிதையின்
ஆழத்தில்..

விட்டெறிந்த கல்..

உன்
மௌனம்.

****

எஸ்.எம்.எஸ்

*

புரிதலற்ற
இரவின்
துணை கொண்டு..

நிமிடங்கள்
ஓடிக் கொண்டிருந்தன..

நீயொரு
புன்னகையை..

எஸ்.எம்.எஸ்
அனுப்பும் வரை..!

****

'அக்கக்கா...' குருவிகளின் குரல்..

*

ஊர்
ரயில்வே ஸ்டேஷனை விட்டு..
நகரும் நொடியில்..

நெஞ்சடைத்து விம்மி..
கண் பூக்கும்
நீரில் அலுங்கி..

நெளியும்
பிம்பமென
உறவுகள்..

பின்னகரும்
ஊரோடு..

தொடர்ந்து வரும்..
மின் கம்பிகளின்
மீதிருந்து..

'அக்கக்கா.. குருவியின் '
குரலில்..

பால்யம் தொட்டே..
கசிகிறது..

அசைந்தபடி..
நகரும்..
ரயில் இரவு..!

****

கண்ணீராய் நான் கரைந்தாலென்ன?

*

என்
அறை கட்டிலில்
வீழ்ந்து கிடக்கிறேன்..

ஜன்னல் திட்டில்
வந்தமர்ந்த
குருவி

இட்டு வைத்த
இரண்டொரு
நெல்மணிகளை
கொத்திக் கொண்டு..

கழுத்தொடித்து
என்னை பார்த்த..
வட்ட விழிக்குள்..

கண்ணீராய்..
நான்
கரைந்தாலென்ன..?

ஏன்
தயங்குகிறாய்
என் குருவியே..!

உன்
குஞ்சுகளுக்கு
கூடு கட்ட..
நீ தேடும்..

வைக்கோல் துணுக்காய்..
காத்திருக்கிறேன்..

போய் வா...

*****

கரையும் நகரம்..

*

பாதை முழுதும்
அடைசலாய்..

ஆதி மிருகத்தின்
வடிவொத்த
கறுத்த லாரிகள்..

முன் விளக்கில்
நகர்ந்து கொண்டேயிருக்கும்
வழியில்லை என்பதாக..

கண்களில்
தூவிக் கடக்கும்
இரவின்
பொடித் துகளை..
உமிழ்ந்தபடி..

*

செவ்வக
பெட்டியொத்த..
நெடிதுயர்ந்த
குளியறையில்..

அழுக்குப் போக..
குளிக்க.. குளிக்க..

பகலின்
வெப்பம் சேர்ந்த நீரில்..

கரைந்து கொண்டேயிருக்கும்..
கொஞ்சங்கொஞ்சமாய்
நகரம்..

****

யுகத்தின் பாடலொன்று..

*

மனிதம் மீட்ட
முடுக்கப்படும்
தந்திக் கம்பிகள்..

அறுபட்டு
தொங்குகின்றன
இசையைத் தொலைத்து..

யுகத்தின்
பாடலொன்று..

இரவின் நாவில்
முனகி..

ஒரு
எச்சிலைப் போல்
ஊறுகிறது..

****

பூனையின் பச்சைநிற கண்கள்..

*

நெடுஞ்சாலை
இருட்டில்..

தரை நசுங்கி
நைந்த..

ஒரு
பூனையின்
கண்கள்..

வேகமாய்
கடந்து சென்ற லாரியின்..
முன் விளக்கு
வெளிச்சத்தை..

உள்வாங்கி
ஒளிர்கிறது
வெளிர் பச்சையாய்..

பனி படரும்
இரவு நெடுக..

****

நீச்சல் விளிம்புகள்..

*

கவலை நீர்
தேங்கிய..

முகக் குட்டையில்..

குழப்பமாய்
நீந்துகின்றன..

கண்களிரண்டும்..

****

நிழற்படம்..

*

வெயிலின்
நிழற்படத்தை

மரம்
வரைகிறது

தன்
காலடியில்..!

****

யோசி..

*

கணக்கு வழக்கில்லா
உன்
கனவுகளுக்கு..

கணக்கு எதற்கு?
வழக்கு எதற்கு?

உன்
தாடையை
சொறிந்தபடி யோசிக்கும் முன்..

யோசி..

சொறிவது
உன்
அறிவுக்கு அவசியமா..?

****

தளும்பும் மன அலை..

*

நங்கூரக் கொக்கியில்
சிக்க வைத்துச்
சுண்டுகிறாய்..

உன்
பார்வையின்
கூர்மையை..

தளும்பும்
மன அலையில்..

மௌனமாய்
குளிர்கிறது
இதயம்..!

****

சதை மடிந்த இமைகள்..!

*

நரை மீசைக்
கிழவனொருவன்..

சதை மடிந்த
இமைக்கு
பின்னிருந்து..

ரசிக்கிறான்..

கடந்து போகும்
பேரழகை..!

****

ஞாபக அலகுகள்..

*

நட்புக்காக ஏங்கி
மனம்
விரிக்கும் கிளைகளில்..

சிறகு கோதுகின்றன
ஞாபக அலகுகள்..

இலைகளூடே
தென்படும்
வான் துணுக்கில்..

மேகமொன்று
கடந்து போகிறது..

நேற்றிரவு அழுத
என்
கண்ணீர் துளிகளை..

கனமாய் சுமந்தபடி..

*****

பூரித்து மலரும் பூக்கள்..

*

விரும்பி
கோர்த்துக்கொண்ட
விரல்களுக்குள்..

வெட்கத்தோடு
ரேகைகள் நெளிந்தாலும்..

பூரித்து மலர்கின்றன
வியர்வை பூக்கள்..!

****

செவ்வாய், மே 19, 2009

அறுபடும் காற்றலைகள்..

*

அறைக் கூரை..
மின்விசிறி இழையோரம்..
அறுபடும்.. காற்றலைகள்..

கிழிபடும்
என்
இரவின்
துணுக்குகளை..

அலைக்கழிக்கும்..
என்
அறையெங்கும்..

மனம் பொறுக்கும்..
ஆசைகளை..

இமை கவிழ்த்து..
மூடிக் கொள்ளும்..
மௌனம்..!

****

தெருவின் ராஜப்பாட்டை..

*

காரணமறியா
ஊளைகளோடு..
விரைந்தோடும்
தெரு நாய்களின்..

வால் முனையில்
விரித்தபடி..
பிசிராடித் திகைக்கிறது..
கண் புகா
கனவுகள் சிலவும்..

மெர்க்குரி
விளக்கொளியில்..
சுருண்டோடும்
நிழல் பந்தை..

விரட்டிப் போகும்
தெரு நாய்கள்..

இரவின் ஆட்சியை..
முடி சூடி..
ஈறு பிளந்து..
முழ நீள நாக்கு தொங்க..

முகர்ந்து திரிகிறது..
அதிகார
ராஜப்பாட்டையை..

தேடும் பாவனையில்..
குப்பைகளை கிளறியபடி..

****

பேரோலத்தின் வெளியில்..

*

விழியடர்ந்த இருளில்..
நட்சத்திரங்கள் உதிர்கின்றன..

பார்வையின் நிலா முற்ற வெளிச்சத்தில்..
கதைத்தபடி நகர்கிறது..
என்
பாட்டனின் கடந்த காலம்..

உயிர் துப்பி வளர்ந்த
உடலின் கணப்பை..
தீ மூட்டித் தூண்டுகின்றன
உணர்வின்
சுள்ளிகள்..!

புகைந்து கருகும் வாடையோடு..
சுருண்டெழுந்து
காற்றில் கலக்கிறது..
நாளைப் பற்றிய இரவின் ஈரம்..

நிழல் சாயம் பூசிக்கொள்ளும்
மனச் சுவர்களில்..
காரைப் பெயர்ந்து உதிர்கிறது
துரோகங்களின் வரைப்படம்..

பேரோலத்தின்... வெளியில்..
மௌனத்தை
குழிப்பறித்து வைத்திருக்கிறது
எப்போதும் வாழ்க்கை..!

*****

எங்கள் சவுக்கு..!

*

நெருப்பை
எப்படி
நெருப்பிட்டு
எரிப்பாய்..?

உன்
கையிலிறுக்கி..
நீ
சொடுக்கும்
சவுக்கில்...

பின்னியிருப்பது..
எம்
தமிழர் தோல்..!

அது
ஓயும் தருணத்தில்..
கை மாற
காத்திருக்கிறோம்..

உன்
முதுகை
திறந்து வை..

****

பூக்கும் மலர்களை சூடும் முன்..

*

காதல் - காமம்
இரண்டையும்..
சதையோடு அறுத்து..

களத்தில்..
பதியனிட்டீர்..

ரத்த மழைக்கு
பின்னொரு நாளில்..
அது..
முளைவிடும் தருணத்தில்..

அதில்..
பூக்கும் மலர்களை..

எம்
குழந்தைகள்..
சூடும் முன்..

நுகர்ந்து கொள்வர்..

உம்
உயிரின் வாசனையை..

****

உன் குளம்புகள் தேயும்போது..

*

முத்தமிடுகிறோம்
மரணத்தை..
அது..
நாங்கள்
பெற்றெடுத்த குழந்தை..!

நீ
பவனி வரும்
எமனல்ல..

சுமந்து செல்லும்
எருமை..

லாடம் அடித்து
நடக்கும்
உன் குளம்புகள்..தேயும்போது..

இரு கூராய்..
வெட்டுப் படுவாய்

அது வரை
சகதி..
உனக்கு
சுகமாய் தான்
இருக்கும்..

ஒரு
பெரு மழைக்காக
காத்திருக்கிறோம்..

கந்தக வாசனை..
நுகர்ந்தபடி..!

*****

தீக்குச்சி இறந்ததாக எப்படிச் சொல்வாய்..?

*

ஒரு
தீக்குச்சி
இறந்ததாக..
எப்படிச் சொல்வாய்.?

அது
பிரசவித்தது
நெருப்பையல்லவா..?

தாயின்
வயிறு வெடித்து..
வெளிவருகின்றன..
தேள்குட்டிகள்..

அதன்
கொடுக்கை
என்ன செய்வாய்..?

இன்னும்
அடர்த்தியாய் வளர..
உன் மீசைக்கு..
நீ
தேன் தடவிக் கொள்ளலாம்..

எங்கள்..
ரத்த மகரந்தத்தில்..
வெடிக்கும்
விஷ ஊற்றைப் பருக..

உன்
உதடுகளை
தயார் படுத்தி கொள்..

****

கானகத்தின் ஒற்றை குரல்..

*

வாசம் வீசும்
பச்சை கொடிச் சிடுக்கில்..
வழிந்திறங்குகிறது
மெல்லிய
பனித்துளி..

சூரிய கிரண விரல்கள்
எழுதுகின்றன
சருகுகளின் முதுகில்
நிழலை..

பழுத்த
இலையொன்றின்
கூர் நுனியில்..

பசுமையாய்
மிச்சமிருக்கிறது
கானகத்தின் ஒரு துணுக்கு..!

சன்னமான
முனகலோடு..
நகரும் ஓடையின்
முகமெங்கும்..

நெளிவுக் குழியிட்டசையும்
கரையோர சிறுமரத்தின்..
மஞ்சள் பூக்கள்..

இதழ் உதிர்த்து
காணிக்கையாகின்றன..

மனிதப் பாதமறியா..
வெளியெங்கும்..

மின்மினிப் பூச்சிகள்
அயர்ந்து உறங்குகின்றன..
நிலவு வரும் வரை..!

****

மெட்ரோ கவிதைகள் - 11

*
பிதுங்கித் தொங்கும்
புத்தக மூட்டைகளுக்கு
நடுவே..

ரெட்டை ஜடை
ரிப்பனோடு..

அலங்க.. மலங்க..
பார்க்கும்
குழந்தைகளை..
சுமந்தபடி..

வலியோடு
முனகிக் கொண்டு..

வெயில் நசுக்கி
நகர்கிறது
துருப்பிடித்த
ரிக்-ஷா ஒன்று..!

****

பேய்களை பூசும் திருநீரு...

*

பேய்களின் கூச்சலை
காய்ந்த
பனையோலைத் தட்டியில்
முடைந்தபடி
நீளும் இரவு..

சாமத்தின் மத்தியில்
கனவிலிருந்து
அலறி எழும்
குழந்தையின் கண்களில்
திரளும்
ஒரு
பயத் திரவம்..

மாடத்திலிருந்து
திருநீரு அள்ளி..

சிறு நெற்றியில்
நீர் குழைத்து
பூசுவாள் அம்மா..

சாம்பல் நிற
பேய்களின்
ஈரம்.. காய.. காய..

கடவுள் வெளுப்பான்
மெல்ல.. மெல்ல..

மீள் தூக்கத்தில்..
இரண்டும் உதிர..

பாயெங்கும்.. பரவும்..
பேயும் கடவுளும்..!

****

நினைவு பயணம்..

*

ஒரு
கிலோமீட்டர் தூரத்தைக்
கடக்கும்
சிறு
எறும்பைப் போல

உன்
நினைவை நோக்கி
பயணிக்கிறோம்..

நானும்
என் கவிதையும்..

****

கன்னம் தாங்கி காத்திருக்கிறாய்..

*

நெருக்கி நெய்த
சர்க்கரைப் பந்தலில்..

கண்ணாடிக் குழம்பில்
வார்த்த..
கன்னம் தாங்கி..
காத்திருக்கிறாய்..

இமைத் தாளின்
வளை நெடுக..
நாணல் பீலி..

உன்
உள்ளங்கையில்
நேற்றிரவு வரைந்த
மருதாணி இலைகளெல்லாம்
காலையில்
சிவந்து விட்டன..

நீ
விரும்பி
ஒட்டிக்கொள்ளும்
ஸ்டிக்கர் பொட்டில்..

எப்போதும்
நெளிகிறது
துளியூண்டு பாம்பொன்று..!

எச்சிலொழுக..
புன்னகை மெல்லும்
குழந்தையின்
விழி பிம்பத்தில்..

வெட்கப்படுகிறது
உன் உருவம்..!

****

கரும்பச்சை உவமைத் துளி..

*

ஆழக் கிணற்றின்
வட்டக் கரையூடே..

காரைச் சிப்பிகள்
சொருகிய
பள்ளச் செதில்களின்..

கரும்பச்சை
பாசித் துணுக்கு தோறும்..
ஊறிக் கிடக்கும்
உவமைத் துளிகள்..!

மனசால்
வழித்தெடுத்து..

மௌன இதழ்களில்
பூசத் துடிக்கும்
கவிதைகளை..

காற்றைப் போல
உச்சரிக்கிறாய்
காதுகளற்ற
சூனிய வெளியில்..!

****

மொக்குடைந்த பூக்களின் நறுமணம்..

*

இலை நரம்பின்
தண்டு கிளையோடு..
முயங்கி நகர்ந்த
வெயில் துணுக்கை..

சிலந்தியின்
எச்சில்..
வலை வீசி
பிடித்திழுத்து..

காற்று
கிள்ளி அடித்த..
மழை மிச்ச
துளியொன்று..

ஊர்ந்தகன்ற
எறும்பின்
தலை மோதி..
தெறித்த பொழுதில்..

மொக்குடைந்த
பூக்களின்
நறுமணம்..

காடு நிரம்பியது..!

****

விசையற்ற ஈர்ப்பு..

*

விசையற்ற
ஈர்ப்பில்..

புவியின் பூதங்கள்..

நாவை மடித்து
துப்புகின்றன..

கவிதைகளை..!

****

பால் வீதி

*

இரவு முழுக்க
ஊறித் திளைத்த
உவமைத் துளிகளை

நக்கி ருசிக்க..
கால் பாவி
மெல்ல
அருகே வருகிறது..
கவிதைப் பூனை..!

வால் சுழற்றி
கிறங்கிய இன்பத்தில்
மீசை பறக்க..
காது விடைத்து...

வெறிக்கும்
செங்குத்து
விழிக் கோட்டுக்குள்..

அசைந்தபடி
மிதக்கிறது
மற்றுமோர்
பால் வீதி..

****

படிமங்களின் சதுரக் கட்டிகள்..

*

வானிலிருந்து
மின்னலை
உருவிய..

என்
கனவின் கைகளில்..

உருகி வழிகிறது
இரவின் திரவம்..

இறுகிய
படிமங்களின்
சதுரக் கட்டிகளை..

உருட்டியசைக்கும்
நினைவின்
உள்ளங்கையில்..

ஈரமாய் கசிகிறது
காலம்.

****

கடல் குதிரைகள்

*

துடுப்பசைத்து
கடல் கிழித்தோடும்
கட்டுமரத்தின்
ஒட்டு நுனியில்..

ஊன்றி நிற்கின்றன
இரவின் கால்கள்..!

அலைகரங்களின்
நுரை நகங்களில்..
கொக்குகள்
போட்டுச் சென்ற
வெண்மை கோடுகளை

நக்கிப் பார்க்கின்றன
சிறு மீன்கள்..!

வெயில்
உருகியோடும்
நீர்வெளியில்..

கடல் குதிரையொன்றின்
மீதேறி..
பயணிக்கிறது..
மீளாத கவிதை..!

****

ஸ்பரிச நாணல்

*

என்
மனக்கரையில்
குழிப் பறிக்கின்றன
உன்
புன்னகை நண்டுகள்..

கனவலை நுரைக்கும்
நீர்க் குமிழ்
ஒன்றில்..

வர்ணமாய்
தெறிக்கின்றன
உன் பெயரின்
ஒவ்வொரு எழுத்தும்..

என்
ஸ்பரிச நாணலின்
செம்பழுப்பு நிறமொத்த
வெம்மையை..

பார்வையால் தீண்டிய
உன்
சில்லிப்பில்..

உறைந்தது
காதலின்
கணம்..!

****

குயிலற்ற கூடு

*

கருகிச் செத்த
பனைமர
அடித்தண்டருகே..

காக்கைக் கூட்டின்
சிடுக்கில்..

அடைகாக்க
காகமற்ற..

குயிலின்
முட்டையொன்று..

உயிர் தளும்ப..
காத்திருக்கிறது..

அகப்படும்
கைகளுக்காக..!

****

இரவின் கார்பன் துகள்கள்..

*

நட்சத்திரங்களை
வாசிக்கச் சொல்லி
ஒரு
பின்னிரவு
எனையெழுப்பி
பாடம் நடத்தினாய்..

அறையின்
மங்கிய விளக்கொளியில்..
நிழலொத்த
ஜன்னல் திரையசைந்து..

அளந்த
நம்
உடலின் கோடுகளை..

விரல் பற்றி..
சுட்டிக் காட்டினாய்..

புரியா லிபியின்
கனவு அடுக்குகளை
பக்கம் பக்கமாய்..
புரட்டியபடி
சிரித்துக்கொண்டிருந்தோம்..

வானில்
அப்பிக் கிடந்த..
இரவின்
கார்பன் துகளெல்லாம்..
பொடித்து உதிரும் வரை..

****

வெள்ளி, மே 15, 2009

மெட்ரோ கவிதைகள் - 10

*
கட்டம் போட்ட
சட்டையணிந்து..

'காம்பினேஷன்' தப்பிய
பேண்ட்டுக்குள் செருகி..

பொருந்தாத
பெல்ட் இறுக்கி..

நிர்ப்பந்த உந்துதலில்
உணவுப் பொட்டலம்
சுமந்து..

ஆபீசுக்கு
போகிறான்
காசு சம்பாதிக்க..!

******

வியாழன், மே 14, 2009

ரசித்தபடி...

*

விரலிடுக்கில்
உட்கார்ந்து கொண்டு..

கவிதையெழுதும்
பேனா..

ரசித்தபடி..
உச்சந்தலையை
அசைத்து அசைத்து..

வியக்கிறது
உவமையை..!

****

என் மாமிசம்..

*

நக்கி பார்க்கிறாய்..
என்
ரோஷத்தை..

நெரிபடும்..
பற்களின் குழிகளில்..
சிக்கிக் கிடக்கிறது

என்
மாமிசம்..

*****

முற்றுப்புள்ளி..

*

ஒவ்வொரு
உரையாடலின்
முடிவிலும்..

உன்
இதழ் முனையின்..
கடைக் குழியில்..

ஊறிக் கிடக்கிறது..
ஒரு
முற்றுப்புள்ளி..

****

பழுத்த தென்றல்..!

*

வீறிட்டலறும்
குழந்தையின்..

குரலதிர்வில்..

அறைக்குள்
புகுந்த..

தென்றலொன்று..

பழுத்து
உதிர்கிறது..

தொட்டிலுக்குள்..!

****

அரூப எறும்புகள்..!

*

நான்
எழுத முயலாத..
ஏதோ
ஒரு கவிதையின்
வார்த்தைகளை..

பிரிந்தலையும்
எழுத்துக்கள்..

என்
அறையெங்கும்..
ஊர்கின்றன..
அரூப
எறும்பாக..!

காலொடிந்த ஒன்று..
என்
பெருவிரலின்
நகக் கண்ணை..
நக்கி நக்கி..

பிடுங்கியெறிய..
துடிக்கிறது..
என்னை
நான்
வாசிக்கும் புத்தகத்திலிருந்து..

பொறுமையிழந்து..
மொன்னை
பல்லால்..
கடித்தும் தின்கிறது..
கொஞ்சங் கொஞ்சமாக..

அது..
தின்று
செரித்தது போக..

மிச்சமிருக்கிறோம்..

நானும்
கை விரல்களும்..
கொஞ்சம் காகிதமும்..
ஒரு
பேனாவும்..

செய்வதறியாது..!

******