ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014

அழைக்கும் குரலில் கூடொன்றை முடையும் பறவை..

*
ஒடை மரத்துக்குள் புதைந்த நிலவை 
மீட்கத் தெரியாத இரவின் விரல்களைச் 
சுற்றிக் கொண்டுபடபடக்கிறது காற்று 

பல கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்து 
அழைக்கும் உன் குரலில்  
கூடொன்றை முடைகிறது துயரப் பறவை 

நானற்ற வானின் நட்சத்திரக் குவியல்களை 
அபகரித்துகொள்ளும் சொல்லின் செதில்  
உப்புக்கரிக்கிறது நினைவில் 

****

நட்சத்திரங்கள் மீது எனக்கு புகார்கள் இல்லை..

*
என்னை நீ பேசவிடாமல் செய்துவிட்டாய்
மறுக்கவோ மீறவோ மனமற்று நிற்கிறேன்

உன்னை ஆள்வதில் நான் கொள்ளும் கர்வத்தை
உனக்குப் பரிசளிக்க விரும்பியே காத்திருக்கிறேன்

என் சொற்கள் நேற்று இரவின் நிலாப் பொழுதில்
தொலைந்து விட்டன
நட்சத்திரங்கள் மீது எனக்கு புகார்கள் இல்லை

தயங்கியபடி நகர்ந்த மேகங்களுக்கு பின்னே
உன் குரலின் மந்தகாசம் மிதந்ததை
குறுஞ்செய்தியாக்கி அனுப்பியிருந்தாய்

வரிசையாக முத்தமிட்டபடி வந்துகொண்டிருந்த
மஞ்சள் நிற புன்னகைகள் மூலமாக
நீ என்னை பேசவிடாமல் செய்துவிட்டாய்

குறுகுறுவென அதிரும் இந்த செல்போனை
எனது உடலின் ரகசிய இடம் தேடி
ஒளித்து வைத்துக்கொள்ளவே விரும்புகிறேன்

பெருகும் காதலோடு நீயென்னை சீண்டும் கணத்தை
தொடர்ந்து தந்தபடி மேலும் மேலும்
அந்த அதிர்வு
என்னைப் பேசவிடாமல் செய்யட்டும்

*****

பக்குவம் பிசகிவிடும்போது சரடாகி மின்னும் மௌனம்..

*
எப்போதும் போலவே அப்போதும் இருக்கலாம்

இனி பறிப்பதற்கு பூக்கள் மிச்சமில்லை
என்றபோதும்
செடி இருக்கவே செய்கிறது

ஓர் அனுமதியின் இறுதியில் உருவாகும் எதிர்பார்ப்பு
அனுசரணை மட்டுமே என்றாலும்
ஒத்துவராத பட்சத்தில்
வெளியேறிவிட வாசல்கள் உண்டு

காயங்கள் மீது பூசப்படும் அன்பை
சொற்கள் கொண்டு குழைக்கும் லாகவத்தில்
பக்குவம் பிசகிவிடும்போது
துளிர்க்கும் கண்ணீரைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்

எப்போதும் போலவே அப்போதும் இருக்கலாம்

ஒரு முத்தம் தொடங்கும் நொடியில்
மௌனம் சரடாகி மின்னும் போது
அவ்வளவு கலக்கம் கொள்ளத் தேவையில்லை

இறுக அணைத்துக்கொள்ள தோன்றும் சூழலை
தேர்வு செய்யவோ கையாளவோ முடியாமல் போவதின்
இறுக்கத்தை
விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை

மிக அருகிலிருந்து பார்க்க நேர்ந்த ஒரு மரணத்துக்குப் பிறகு
ப்ரியமானவளை புணரத்தூண்டும்
ஹார்மோன்களை
நொந்துக்கொள்ள வேண்டியதில்லை

எப்போதும் போலவே
அப்போதும் இருக்கலாம்

ஒன்றுக்கும் மற்றொன்றுக்குமான வித்தியாசங்களின்
இடைவெளிக்குள்
சஞ்சரித்து தவிக்கும் மௌனத்தை எதிர்கொள்ளும்
அசௌகரியம்
என்பது

எப்போதும் போலவே அப்போதும் இருக்கலாம்

****

மையப் பிழை

*
மரணத்தின் 

மையப் பிழையில் சுழல்கிறது 
வாழ்வெனும்
சிறு காற்று

***

கடைசி கை குலுக்கல்..

*
எப்போதும் 

ஒரு கடைசி கை குலுக்கலில் 
மிஞ்சி விடுகிறது 
சொல்ல மறந்த ஏதோ ஒன்று

***

ஜன்னல் திரையின் மலர் நுனி

*
இரவின் மீது இறங்கிக் கொண்டிருக்கிறது பனி
பனியை நனைத்துக் கொண்டிருக்கிறது 

துருப்பிடித்த தெருவிளக்கின் 
மஞ்சள்நிற ஒளி

ஊளையிடும் நாயொன்றின் வால் அசைவை
அகலக்  கண்களால் 
மொழிபெயர்க்கிறது  
வேற்ற தேசத்து ஆந்தை  

இயங்கும்  உடல்களை  பெயர்  பொருத்தி 
உச்சரிக்கின்றன  சுவர் பல்லிகள்
கடிகாரத்தின்  டிக் ஒலி 
தீண்டுகிறது  ஜன்னல் திரையின் மலர் நுனியை 

இரவின் மீது பனி இறங்கிக்கொண்டிருக்கிறது 

****

வேறோர் ஆமாம்..

*
ஓர் ' ஆமாம் ' - க்கும்
இன்னோர் ' ஆமாம் ' - க்கும்
இடையில் வேறோர் ஆமாம் இருந்திருக்கிறது.

அதை ஒத்துக்கொள்வது அத்தனை சுலபமாயில்லை
ஆனால்
அது இங்கு இப்போது இருக்கிறது

வெளிப்படுவதில்
நிறைய ஆமாமும்
அதனுள் கொஞ்சம் இல்லையும் இருப்பது குறித்து
எந்த ' ஆமாம் ' க்கும் பிரக்ஞையில்லை

இல்லை என்பதின் ஆமாமில்
ஆமாம் என்பது இல்லை

****

ஓடும் நதியிலிருந்து..

*
கூழாங்கல் போல் நழுவும் வாழ்வின் 

கரையில் நின்று
ஓடும் நதியிலிருந்து ஒரு கை நீரள்ளிக் 

குடித்தப் பின் 
நானும் நதியானேன்

***

மேற்கொண்டு..

*
' ஒரு சொல்லில் என்ன இருக்கிறது..? ' - என்றான்

' ஒரு சொல்லில் ஒரு சொல் மட்டுமே இல்லை..' - என்றேன்

கோபமாய் கிளம்பிவிட்டான் 

மேற்கொண்டு சொல்லவிருந்த அத்தனை சொற்களையும் 
தன்னோடு கொண்டு..

***

காரணங்களின் மிச்சம்

*
செத்துப் போவதற்கான
அத்தனைக் காரணங்களையும்
சுய அலசல் செய்து முடித்தாயிற்று

ஆனாலும் 


மிச்சமிருக்கிறது

செத்துப் போதல் 

*****

துளி நீரென..

*
அயர்ச்சியின் முதுகுத்தண்டில்
ஒரு துளி நீரென

இறங்குகிறது

உன்
வரவு

***

நசுங்கும் மகரந்தங்களின் குரல்வளை

*
மரண வளைவை செதுக்கிட
சொற் சரிவில்
இறங்குகிறாய்

நசுங்கும் பூக்களின் மகரந்தங்களில்
குரல்வளை அறுந்துத்
தொங்குகிறது
அர்த்தத்தின் வனம்

****

தவிக்கும் கதைகளின் உரையாடல்கள்

*
காதுள்ள சுவர்கள் அழுகின்றன
தன்னோடு இருத்திக் கொள்ள முடியாமல்
தவிக்கும் கதைகளின் உரையாடல்கள்
அவைகளைத் தூங்கவிடுவதில்லை

மிகவும்
ஆதுரத்துடன் நிரடும்
தனிமை விரல்களின் ரேகைகளில்
தட்டுப்பட்டுவிடுகிறது
கொஞ்சம் ஈரம்

****

பாசாங்கு செயும் புன்னகையின் விளிம்பில்

*
பட்டென்று உடையும் கண்ணாடியை
என் புறம் திருப்புகிறாய்

அழுவதாக பாசாங்கு செய்யும்
புன்னகையின் விளிம்பில்
உச்சரிக்கத் தவிக்கும்
ஒற்றை
சொல்லும்

பட்டென்று உடைகிறது

***

சுவர்கள்

*
சிரித்து அடங்கிய பிறகும்
எதிரொலிக்கிறது சுவர்

சிரித்த வாக்கியமும்
அடங்கிய மௌனமும்
வேடிக்கைப் பார்க்கிறது

அவ்வொலியை

****

அசை போட்டு நகரும் பகல்

*
அவமானத்தின் படல் தள்ளி
மெல்ல நுழைகிற
ஆட்டின் வால் அசைக்கிறது கணத்தை

தாடை நெரிய
அசை போட்டு நகர்த்தும் பகல் மீது

கீச் என்று எழுதிப் போகிறது

பொறுமையிழந்த
ஒரு குருவி

****

வலிப் பூச்சிகள்

*
வாதையின் காட்டிலிருந்து அடர்ந்த இருள் மரங்களின்
அதிகபட்ச உயரத்தைக் கடந்து பறக்கும் 

வலுவற்று
மெல்லிய சிறகு உதிர வீழ்கின்றன
வலிப் பூச்சிகள்

ஈரச் சதுப்பு நொதியும் நனவிலித் துளையில்
ஊற்றுக்கண் திறக்கிறது
உப்புத்துளி

****

அலை ஏறி மிதக்கும் குமிழ்..

*
எட்டிப் பிடித்தலில் நழுவிடும்
அர்த்தங்களை
நீந்த அனுமதிக்கும்
கண்களைக் கொண்டிருக்கிறாய்கரை வந்து மோதும் அலை ஏறி 
மிதக்கும் 
குமிழ் மீது உடைகிறது 
சொல்லின் ஒலி 

****

இருப்பின் மீது மெழுகும் சிரிப்பு..

*
மறுப்பேதும் சொல்வதற்கில்லை என்கிறாய்
ஆடும் மெழுகுவர்த்திச் சுடரை
கை குவித்து அடக்குகிறாய்

என் இருப்பின் மீது
மெழுகும் வெளிச்சத்தில்
சிரிக்கிறாய்

வந்து நிற்கும் ரெஸ்டாரன்ட் சிப்பந்தியிடம்
மேலும் இரண்டு புன்னகைகளை
ஆர்டர் செய்

****

அத்தனை நெருக்கத்தில் வேண்டாம்

*
தொலைதூர பஸ் பயணத்தில்
நீ அருகில் இருக்க வேண்டியதில்லை

மென் அலை வீசும் குளக்கரைப் படியில்
கால் நனைக்க நீ துணை நிற்க வேண்டாம்

தோள் உரச உன் கைக்குள் கை நுழைத்து
தடுமாறி தடுமாறி சிரித்து 

வரப்பில் நடக்க
அத்தனை நெருக்கத்தில் வேண்டாம்

வான் பார்த்து மல்லாந்து கிடக்கும்
என் வெட்டவெளி அருகண்மையிலும் வேண்டாம்

தட்டும் கதவு சத்தம் கேட்டு 

நிதானமாய் திறக்கும்போது
வாசலில் நீ நின்றுக்கொண்டிருந்தால் போதும்

****

குழம்பும் நிலவைத் தழுவும் கேவல்..

*
இரவு பூசிய தனிமைக் 

கிணற்றடி
உள்ளங்கையில் தாங்கிய முகம்
 

குலுங்கும் முதுகு
குழம்பும் நிலவைத் தழுவும் 
முகில்

ஒரு கேவலின் எத்தனிப்பில்
யார் முதலில் அழுதால் என்ன

சட்டென்று
கீழிறக்கியது அவள் முதுகு நோக்கி
தன் முதல் துளியை

****

வார்ப்பின் ருசி

*
முதல் பசியைத் தூண்டும் சொல்லில்
வார்ப்பின் ருசியை 

சுடச்சுட பரிமாறும் அர்த்தக் கொதிப்பில்

குமிழ் விட்டு ஊதிப் 

பெருகுகிறது 
மௌனக் காற்று

****

துயர் பயணத்தில்..

*
பழகிப்போன பாதையின் 

துயர் பயணத்தில்
இசை மட்டுமே துணையாகிறது

***

உன் அகாலங்களின் வெளிச்சத்தில்..

*
உன்னோடு பேசிய ஒவ்வொரு இரவும்
விளக்கொளியின் கீழ் பரவும் நிழல் பூசிக் கிடந்தது

உனக்கென எழுதிய அனைத்து வரிகளிலும்
இரவு மழையின் ஈரம் துளிர்த்திருந்தது

சொற்கள் பூத்த சிலிர்ப்பில் உனக்கான புன்னகையின்
இசையை அர்த்த இழையென கேட்க முடிந்தது

நான் ஒதுங்கும் கூரையாக மாறியது
உன்னை எழுதும் கடிதப் பத்தி அனைத்தும்

உன் அகாலங்களின் வெளிச்சத்தில்
யாருமற்ற நெடுஞ்சாலை இரவின் தனித்த இருப்பில்
சிறு தூறல் ஆனோம் இருவரும்

என்னோடு என்றென்றும் பயணிப்பாய்
என் இனிய நண்பனே

****

( 2013 -ல் ஒரு நவம்பர மாதத் தனிமை இரவில் நண்பன் எம். ரிஷான் ஷெரிப்புடன் பகிர்ந்து கொண்ட மழைப்பொழுதின் ஈரம் )

ரகசியமற்ற கண்கள்..

*
கை விரித்து அழைக்கும் சிற்பத்தின்
புன்னகை முனை நொறுங்கி
இருந்தாலும்

ரகசியமற்ற அதன் கண்கள்
வெளிச்சமில்லா மங்கிய இருளில்
தீர்க்கமாய் பார்க்கிறது


தனக்கென
ஒரு நேர்க்கோட்டை

****

ஆளுக்கொரு தேநீர் கோப்பை

*
முடிவுகள் எளிதாக எடுக்கப்படுவதும்
கை குலுக்கல் சுலபமாக முடிந்து போவதும்

ஆளுக்கொரு தேநீர் கோப்பை
பரிமாறப்படுவதற்கு முன்

இளஞ்சூடு வார்த்தைகள் நடுங்க
காத்திருக்கத்தான் வேண்டும் என்பதாக

இந்த அமைதி

***

வேறு ஒரு மழைப்பொழுது

*
பிழையோடு வாழ்தலின் காயம்
தனிமைச் சுவர் ஊறி வளரும் கரையான்
உதிரும் செம்மண் ஈரத்தின்
மழைப் பொழுது
பற்றிக் கொண்டு உறிஞ்சுகிறது
ரகசியத்தை

****

பள்ளத்தாக்கு மடியெங்கும்

*
மிகவும் அயர்ச்சியாக இருக்கிறது
இது ஒரு மலையுச்சி

அதனால் என்ன
எட்டிப்பார்க்கும் கணத்தில்
கண்ணில் படுகிறது

பள்ளத்தாக்கு மடியெங்கும்
பசுமை

****

விரல் நுனி ரேகை உரசும் வரி

*
அழுது வீங்கிய கண்ணில்
சூல் கொள்கிறது பறவை

உயிர் திறக்கும் முட்டையிலிருந்து
சிறகு உரிக்க
விரல் நுனி ரேகை உரசும் வரியில்
பிசுபிசுக்கிறது
மேலும் ஒரு வரி

****

திரும்பி வரும்போது..

*
சொல் அறுந்து விழும் 

பாதையில் காத்திருக்காதே

திரும்பி வரும்போது பொறுக்கிக்கொள்வோம் 

அது 
மேலும் கொஞ்சம் வளர்ந்திருக்கும் 
பழைய நிழல் தாங்கி

**** 

இரவை திறந்து வை..

*
இத்தனை அமைதி கூடாது 

விடியல் தான் வேண்டும் 
என்பதில்லை 

கொஞ்சமாக இரவை 
திறந்து வை 
சொற்பக் காற்றாவது வரட்டுமே

***

ஏற்கனவே செத்துப்போன ஒரு பழைய காயம்..

*
என்னை ஒருத்தி காயப்படுத்தினா.
அந்தக் காயத்தை என்ன பண்ணுறதுன்னு புரியாம உட்கார்ந்திக்கிட்டு இருந்தேன்.


அப்போ அந்தக் காயம் என்கிட்ட வந்து இரண்டு சிறகுகள் கேட்டுச்சு.

கொஞ்சம் யோசிச்சேன்.

ஏற்கனவே செத்துப்போன ஒரு பழைய காயத்தோட சிறகுகளை எடுத்து இந்த புது காயத்துக்கு கொடுத்தேன். 


அது என்னை விட்டுப் பறந்து போயிடும்ன்னு நினைச்சேன்.

ஆனா -

அது அந்தப் பழைய சிறகுகளைப் பொருத்திக்கிட்டு என் தனிமை வெளி மீதே பறக்கத் தொடங்கிருச்சு. அதனோட நிழல் இந்த வெளியெங்கும் அலைந்தபடியே இருந்துச்சு.

இப்போ நல்லா இருட்டின பிறகும் அந்த நிழல் என் மீது பட்டுக்கிட்டே இருக்கு.

****

எங்காவது..

*
இப்படியாகத்தான் தொடங்குகிறது 

எந்த பசியும்

எங்காவது 

கையேந்தி நிற்கும் பொருட்டு

***

தனிமையின் வெளிச்சம்

*
மௌனத்தின் 

மீது 
ஊரும் எறும்பின் நிறம் 
தனிமையின் வெளிச்சத்தை 
மயங்கச் செய்கிறது

***

மௌன வெயில்

*
ஆயுள் வேரின் நுனியில் குவிகிறது 

வாழ்வெனும் அபத்தம்

மௌன வெயில் வந்து குடிக்கும் வரை 

வரம்

அத்தனிமை 

***

சிறகசையும் இசை..

*
மூதாதையரின் எலும்பைப் பற்றுகிறேன்
அதிலிருந்த

இசையொன்று 
சிறகசைத்து பறக்கிறது

***

அசயும் செதில்கள்..

*
ஆழ்ந்துவிடுதலின் அவசரத்தில் 

சுவாசிக்க அசையும் 
செதில்களைக் கொண்டிருக்கிறது 
நிதானம்

***

வெப்பக்காற்று வீசும் நிழல்..

*
ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் 

இளைப்பாற 
வெப்பக்காற்று வீசும் நிழலோடு 
இருக்கும் அர்த்தங்கள் 

***

இசையென..

*
இசையென மீட்ட முனைந்த நொடி
பட்டென்று அறுகிறாய்
நீயாகி

***

திசையற்ற சொல்

*
ஒரு தயக்கம் 

தன்னிலிருந்து இழை பிரிந்து 
நுனி படர
திசையற்ற சொல்லில் ஆடுகிறது


*** 

நினைக்கும்போது

*
விரையும் உரையாடலை 

பின்தொடர்ந்து
முற்றும் போட நினைக்கும்போது 
திணறச் செய்கிறது
முற்றுப்புள்ளி 

***

குதிரைகள்

*
ஒரு மௌனத்துக்குள் பூட்டப்பட்ட 

கோபம் நிதானம் 
இரட்டைக் குதிரைகள் 

இரண்டிற்கும் 
தாளம் பிசகா ஒரே குளம்பொலி 

****


 

பாதங்களுக்கு கீழ்..

*
கணக் கச்சிதமாக உதித்திருக்கும் சொல்லை 

ஏறிட்டு பார்க்கும் நொடியிழையில் 
பாதங்களுக்கு கீழ் உறுத்தத் 
தொடங்கிவிடுகிற
அதன் அர்த்தங்கள்

**** 

அர்த்தப் பறவையின் நிழல்

*
ஆழ்ந்த பொருள் தேடுவதாக 

பாவிக்கும் 
அர்த்தப் பறவையின் 
நிழல் 

காயப்பட்ட சிறகுகளோடு 
ஒடுங்கி படுத்துக்கிடக்கிறது 
சொல்

***

சிறு பறவையின் இறகு

*
தனிமைப் பெருங்குரல் மீதிறங்கும் 

சிறு பறவையின் இறகு 
உன் வாஞ்சை

***

வந்து போவோரின் இறுதி இசை

*
மனநோய் வளாகத்தின் நுழைவாயிலென 

திறந்து கிடக்கிறது 
இந்நகரம்

வந்து போவோரின்  
இறுதி இசை  

எழுதுகிறது காற்றை  

****

மௌனத்தின் காடு..

*
உள்ளங்கையில் முகம் பொத்தி 

அழும் சத்தத்தில் 
காடு வளர்கிறது

அடைகாக்கும் 

மௌனம் நடுங்குகிறது

****

கரையோர மௌனத்தின் வெயில்

*
நதியலை மீது மிதக்கும் 

இலைச் சருகின் கன்னத்தில் வெயில்

கரையோர கூழாங்கல் மௌனத்தில் 

நீளும் மர நிழல்

****

ஓர் அபத்த கணத்தில்..

*
யாரோடும் யாரும் இல்லாமல் போகும் 

ஓர் அபத்த கணத்தில் 
மைக்ரோ புதிரென இருந்துவிடக்கூடும் 
யாரோ பற்றிய 
ஏதோ ஒன்றாவது

****

மௌனக் கோப்பையில்..

*
அழையா விருந்தாளியின் 

மௌனக் கோப்பையில் 
நிரம்புகிறது 
கூட்டத்தின் தனிமை

****

நடுவே..

*
ஒரு மௌனத்துக்கும் 

இன்னொரு மௌனத்துக்கும்
நடுவே 
வளர்வதாக இருக்கிறது 
சொல்லின் சிறகு 

**** 

இறங்கும் வளையங்களின் கரை..

*
பைத்திய கணத்தின் மையத்தில் விழுந்த கல்

குழிந்து மனத்துக்குள் 
இறங்கும்போதே 
வளையங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது 
கரை என்று நம்பிவிடும் 
ஒரு சொல் நோக்கி

**** 

நினைவு காக்கைகளின் அணில்..

*
பசித்த கனவுகளின் மிச்சத்தைக் கொத்துகின்றன 

நினைவு காக்கைகள்
மருள மருள 

வேடிக்கைப் பார்க்கிறது
மன அணில்

***

முனை பிரித்து..

*
நீங்களோ நானோ அல்லாத விளையாட்டின்
விரும்பாத அங்கமொன்றின் மரண விளிம்பு என
மடித்துத் தரப்படுகிற சத்தியத்தின் முனை
பிரித்து நீட்டுகிறது
கடந்து வந்துவிட்டதாக நம்பும்
ஒரு காலத்தை

****

துரு வாடை வாசல்

*
நீள அகலங்கள் கடந்து

இறங்கும்
பாதாளத்தின் முடிவில் 
துரு வாடை அடர்ந்த இதயத்தின் வாசல் 
இறுகிக் கிடக்கிறது

**** 

பெயரற்ற புன்னகை..

*
பலங்கொண்டு தள்ளிவிட நினைக்கும் 

மனத்தின் சரிவில் 
பெயரற்ற புன்னகை பூக்கின்றது 
ரகசிய மலரென

***

பிறழ்ந்த ரேகை..

*
முத்தச் சில்லு பட்டு தெறிக்கும்
இதழ் ரேகையில்
தடம் பிறழ்ந்து சுழலும்
மௌன கிரகம்

*****

நட்சத்திரங்களும்..

*
இரவை
பாடையில் வைத்து
சூரியன் தூக்கியபோது
பின்னாலேயே
நட்சத்திரங்களும் போய்விட்டன

****