திங்கள், ஜூன் 22, 2009

பனி இரவின் வோட்காவும்..உன் பாதச் சுவடுகளும்..

*

உன்னை
வெறுத்துவிடும் தீர்மானத்தில்..
ஆப்பிள் சுவை மிகு..
வோட்காவை..

அதிகம் குடித்த..
நேற்றைய பனி இரவு..

என்
கனவின் படுதாவை..
நீள அகலமாய்க் கிழித்து..

என்னைச் சுருட்டி..

மின்னல்பட்டுக் கருகிய
ஆதி மரப்பொந்து
ஒன்றில்..

அடைத்து வைத்தது..

கண்கள்..உப்பி..
விடியலின் அகாலத்தில்..

வாசற்கதவின்..
கண்ணாடிச் சதுரத்தில்..
கண்ணீர் வடித்த
பனித்துளிகளை..

துடைக்கும்..நோக்கில்..

தள்ளாடி..
கதவைத் திறந்தேன்..

சிமென்ட் படியின்..
பனிப் பரப்பில்..

வெகுநேரம்..நீ நின்று திரும்பிய..
பாதச் சுவடுகள்..
சில்லிப்பாய்..
மிச்சமிருந்தது..

*****

எதிர் திசை...

*

வாசிப்பு வரிகளின்
பயணத்தின் பொருட்டு
மந்தமாய்..
உருள்கின்றன பாதைகள்..

தூக்கம்..
என் கண்களிலிருந்து
குதித்து..
எதிர் திசையில் ஓடுகிறது..

புத்தகத்தை..
நெருடும்..
என்
விரல்களைப்
பற்றிக் கொண்டு..

கதாப்பாத்திரங்கள்..
என்னிடம்..
வழி கேட்கின்றன..!

****

துணையற்ற படித்துறை..

*

பிரியத்தின்
கசடுகளை
வடிகட்டுகிறாய்..
தருணங்களை சலித்து..

நதியின் நீரோட்டத்தை..
மனக் குடுவையில்
ஊற்றுகிறேன்..

துணையற்ற
படித்துறையில்..
பகிர்தலுக்கான இடம்..
வெறுமையோடிக் கிடக்கிறது..

திசைகள்...
பொங்கி நுரைக்கின்றன..

இரவோ..
சிறு சிறு குமிழாய்..
உடைகிறது..

****

மெட்ரோ கவிதைகள் - 18

*
சடசடத்தூற்றிய..
பெருமழையில்..

ஒதுக்கி நிறுத்திய..

இரு சக்கர
வாகனங்களின்..

என்ஜினிலிருந்து..

ஆவியாக..கிளம்பின..

கடந்து வந்த..
தொலைவுகளின்..
வெப்பம்..!

*****

மெட்ரோ கவிதைகள் - 17

*
கடற்கரையிலிருந்து
விடைபெறும்
தருணத்தில்..

யாசித்த
மூதாட்டியின்
உள்ளங்கையில் விழுந்தது..
முதல் மழைத் துளி..

இட்ட..
ஒற்றை நாணயம்..
முழுமையாக நனைந்த
நிமிடத்தில்..

நான்
மேற்கு நோக்கியும்..

அவள்..
தெற்கு நோக்கியும்..

மெல்ல நகரத்
தொடங்கினோம்..

அதற்குள்..
கூட்டம்..
சாலைக் கரைக்கு..
ஓடி விட்டது..

****

மெட்ரோ கவிதைகள் - 16

*
காற்றின் திசையை
காட்டிக் கொடுக்கின்றன
வால் நீண்ட
காற்றாடிகள்..

வட்டமமைத்து
உட்கார்ந்து கொண்ட
வசதியான
மணல் வெளியில்..

பீங்கான் தட்டுகள்
சுமந்து வந்த
சுண்டல்களை பகிர்ந்தபடி

யாவற்றையும் மென்றோம்..
நண்பர்களோடு..

மையம் தகர்ந்த
விளிம்புகள் என்றிருந்த..
இறுமாப்பை..

தலைக் குப்புற
வட்டத்துக்குள் செருகியபடி
காலத்தைக் குத்தியது..
காற்றாடி..

சம்பந்தமில்லாதவன்
கையில்
நூல் இருந்ததாக..
எப்படி சொல்லுவது..?

*****

மெட்ரோ கவிதைகள் - 16

*
மாலைநேரக் கலந்துரையாடலில்
காந்தியின் நீண்டு மெலிந்த
நிழலொன்றும்..
என் மடியில்..

என்னவென்று
புரிய மறுக்கும் விதமாக..
எதையோ
தேடியலைந்தபடி..
ஊர்ந்தோடுகின்றன...எறும்புகள்..

தொங்கிக் கொண்டிருக்கும்..
எங்கள் கால்களின்
பிரமாண்டங்களை
அவை
பொருட்படுத்தவில்லை..

நண்பரொருவர்..
அனைவருக்கும் வழங்கிய..
திணை மாவின்
உருண்டையிலிருந்து
உதிர்ந்த துகள்களுக்காக..

அவைகளும்
பிற எறும்புகளுக்கு..
சொல்லியிருக்கக் கூடும்..

' காந்தி சிலைக்கு பின்னால..
வந்து சேரு..'

கலந்துரையாடலில்..
தொடர்ந்து..

கருத்துக்கள்..

வடிவத்தினின்றும்.. உதிர்கின்றன..!

*****

குருவிகளை.. இன்னும் காணவில்லை..

*

மழை ஈரம் உறிஞ்சி..
காயத் தொடங்கியிருக்கும்..
மொட்டை மாடியின்..
இளஞ் சிவப்பு
சதுரக் கற்களை..

தத்தி தத்திக்
கடந்தபடி..

நெல் தேடும்
குருவிகளை
இன்றும் காணவில்லை...

இட்ட முட்டைகளினின்று
குஞ்சுகள் பொரித்திருக்கலாம்..

சலித்து சேகரித்த..
வைக்கோல் பிசிறுகள் கொண்டு..
கூடுகள் வனைந்தபோதும்..

என்னை அழைக்கவில்லை..

ஒரு வேளை..
நாளை வரக்கூடும்..

குஞ்சுகளுக்கு
என்ன பெயர் சூட்ட..?
என்ற கேள்வியுடன்..!

****

மெட்ரோ கவிதைகள் - 15

*
கருத்த
பட்ட மரமொன்றின்
முறிந்து மீந்த
துண்டுக் கிளையில்..

வளையங்களாய்..
சுருண்டுத்
தொங்குகிறது..

டி.வி. சேனலுக்கான..
கேபிள் வயர்..

****

மெட்ரோ கவிதைகள் - 14

*
மடித்துக் கட்டிய வேட்டியும்..
தோல்வார் செருப்பும்..
இறுக்கிப் பிடித்திருக்கும்
கருங் குடையும்..
சுருட்டிவிட்ட சட்டை முன்டாவும்..
நரை முறுக்கு மீசையும்..
புகையும் பீடியும்..

சாம்பல் நிழல் படிந்த..
கண்களும்..

பட்ஜெட்டை யோசித்தபடியே..
வேடிக்கைப் பார்க்கின்றன..

கட்டிக் கொண்டிருக்கும்..
வீட்டுக்கான..

சிமென்ட் கலவையை..!

*****

மெட்ரோ கவிதைகள் - 13

*
அளவாய் பிளந்த..
மெல்லிய மூங்கில் கீற்றின்..
நேர் பத்தை..
வளைவு பத்தை..

நறுக்கிய
வண்ணக் காகிதம் சுற்றிய
சிறு சுங்கு..

சுண்டியிழுக்கும் அழகோடு..
காற்றைக் கிழித்து..
மேலேறும்..
கச்சிதமான காற்றாடி..

வெயில் காய்த்து
உருக்கும்..
பிடரி வியர்வையில்..
உப்புப் பூத்த..
சட்டை காலரைச் சுருட்டி..

நேரம் கழித்து..
அம்மாவிடம்..
வாங்கவிருக்கும்..
அடிதனை மறந்து..

ஓட்டைப் பல்வரிசையில்..
புன்னகை வழிய..

துள்ளிக் குதிக்கிறான்..
நகரத்து சிறுவனொருவன்..!

****

உதிர் காலம்..

*

அழுத்தி உருட்டிய
இடக்கை
பெருவிரலில்..

பறிபோனது..
பரம்பரை சொத்து மட்டுமல்ல..

பின்னிப் பின்னி
நெய்த கனவுகளும்..

உடன்
நிறைவேறாமல் போன..
காலங்களும்..!

*****

அம்மாவின் பழைய புடவைகள்..

*

உயர்ரக..
பட்டுப்புடவையின்
பொன்னிற..
சரிகை நெய்யலில்..

இலைகளும்..கனிகளும்..
சிரித்தபடி..
பெண்ணுடலில்..
ஏறி சுற்றிக்கொள்கின்றன..

தவில் - நாகஸ்வர..
ஒலிகளின் அதிர்வை..
கேட்டறியாமல்...

பீரோவில்..
அம்மாவின்..
பழைய புடவைகளுக்கு..
அடியில்..

பத்திரமாய்
மடித்து வைக்கப்பட்டிருக்கலாம்..
அடகு கடையின்..
நகை-வட்டி சீட்டொன்று..!

*****

ஈரக் கதுப்பு..!

*

என்
கனவுக் கரையான்கள்..

நினைவுச் சுவரின்
ஈரக் கதுப்பில்..

உன்னை
அரித்தபடி..
கூடொன்று சமைக்கின்றன..!

****

மெட்ரோ கவிதைகள் - 12

*
நிழல் படுதாவை
சுழற்றிப் போர்த்துக் கொள்கிறது..
கோடை வெயில்..

யாதொரு
பிரக்ஞையுமற்று..
ஓசோன் கம்பளத்தைக்
கிழிக்கின்றன..

மெட்ரோ வாகனங்களின்..
கார்பன் புகைகள்..

****

கால்பந்தும்.. சமையலுக்கான குடுவையும்..

*

பாட்டன்களின்
மண்டையோடுகளை
மண்ணுக்குள்ளிருந்து
வெளியேற்றுகிறது..
புதை காடு..

ஆண்..
குழந்தைகளின்
கால்பந்தாக
உதைபடுகிறது..

நூற்றாண்டுகளின்
வாழ்வு ரேகை தேயுமளவு..

பெண் குழந்தைகள்..

தண்ணீர் நிரப்பும்
குடுவையாகவும்..

சொப்பு சமையலுக்கான
ரசமாக்கவும்..

கையிலேந்தி
நடக்கின்றனர்..
மற்றுமோர்
புதை மேட்டை நோக்கி..

பற்களை இழந்த..
பாட்டன்கள்..

பரிதாபமாய் பார்க்கின்றனர்..
வக்கற்று..

****

விமர்சனக் குறுவாளின் முனையில் சொற்கள் மிச்சமிருப்பதில்லை..

*

கொல்லைப்புறத்தில்
முளைத்துக் கிடக்கும்
சொற்களை..
அறுத்துக் கொண்டிருக்கிறேன்..

கூரான
குறுவாளை..
லாவகமாய்ப் பிடித்திருக்கிறேன்..
பிடியோடு கூடிய
விமர்சனமென..

அசைபோடும்
தாடையினூடே
பிதுங்கும்..
வெண்ணிற நுரையெச்சில்
வழிசலோடு..

விடைத்த மூக்கருகே..
மொய்த்தபடி

இரவெல்லாம்..
ரீங்கரிக்கும்..
இலக்கிய ஈக்கள்..

விடியலில்..
கன்றின்...
'மா ' வெனும் அழைப்பின்
வைக்கோல் செரிமானத்தில்..

சொற்கள் மிச்சமிருப்பதில்லை..

*****

இலக்கியப் பட்டறையின் கனப்பு..

*

என்னைக்
கொன்று விடப் போவதாக
கவிதையெழுதியிருந்தான்..
நண்பன்..

அவனுக்காக
காத்திருந்த
கால் நூற்றாண்டு
இடைவெளியில்..

' நான் ' - பலகூறுகளாய்
பிரிந்து..பெருகி..
பலராகி விட்டேன்..

ஒரு
கூட்டத்தையே..
கொல்வதற்கான
ஆயுதம்..

அவன்..
இலக்கியப் பட்டறையின்..
நெருப்பில்..

கனன்று கொண்டிருக்கலாம்..
இன்றும்..!

*****

காகித மலர்கள்..

*

ஞாபகத்தில்
இருத்திக் கொள்ள முடியாத
வார்த்தைகளை..

குட்டிக் காகித மலர்களாக..

உன்
தோட்டத்து
பூச்செடி யொன்றில்..
ரகசியமாய்
ஒட்டி வைத்திருக்கிறேன்..

நேரம்
கிடைக்கும்போது..

அவைகளை
சூடிக் கொண்டு வா...

*****

நினைவு - 1 ( பிரமிள் )

*

சென்னை நகரின்..
தகிக்கும்
சாலையினின்று
பிரிந்தலையும்
சந்துகளில்..

தேடியலையும்
பிரமிளின் சுவடுகள்..

அர்த்த
ஆகிருதியின்
கைக் குலுக்களுக்குள்
அகப்பட்டுவிட்டன..

நிழல் வெளியின்
மையம் தகர்த்த..
வெயில் விளிம்பில்..
நின்றபடி..

கூவியழைக்கிறது..

வருடக்கணக்கில்
காற்றில்
அலையும்
பிரமிளின் இறகொன்று..

*****

( கவிஞர் பிரமிள் நினைவாய்.. )

நினைவு - 2 ( சுந்தரராமசாமி )

*

தாடிக்குள்
ஒளிந்தவைகளை..

விரல் நுனியில்
அலைந்து அலைந்து
விடுவித்தாய்..

சிடுக்குகளென
உன்
கவிதைகளாய்..!

*****

(எழுத்தாளர் / கவிஞர் சுந்தரராமசாமியின் நினைவாய்.. )

பனைமரச் சிலாம்பு..

*

கவனப் பிசகாய்..

வலக்கை பெருவிரலில்
ஏறிவிட்ட..
பனைமரச் சிலாம்பை..

நீக்கும் பொருட்டு
என்னருகே..
நீ குனிந்தபோது..

உன்
மூச்சுக்காற்றை..
சுவாசித்து காதல்..

*****

தழலாய் எரிந்தும்.. தணிந்தும்..

*


வறுமை..
எல்லையில்..

தழலாய் எரிந்தும்..
தணிந்தும்..

பொசுங்கும் பசியை..

வேகும்
மன வட்டிலில்..
கண்ணீர் ஊற்றி..
கொதித்திட..

பணிக்கும்
மாயக்கரம் எது..?

*****

மிதக்கிறாள்.. பொன் திரவமாய்..

*

சாராயக் குடுவைக்குள்
மிதக்கிறாள்..
பொன் திரவமாய்..

அவளைப் பருகிடும்
ஆவேசத்துக்கு..

காரமாய்..
நாக்கில் தொட்டுக்கொள்ள..

கவிதையைத் தேடுகிறது..

குடிப்பதற்கான
காரணமொன்று..!

*****

கையகலக் குழிகள்..

*

அம்மாவின்
அதட்டலுக்கு..

அலுத்தபடி..சிணுங்கி..
அவசரமாய்..

முருங்கை மரத்துக்கடியில்..
கையகலக் குழிப் பறித்து..

'பால் பல்லை ' - புதைத்த
சிறுமியின்.. கனவில்..

மரமெங்கும்.. பூத்தது
தங்க காசு..!

****

பறத்தல் குறித்த சிறகுகள்..

*

செல்போனில்
பேசி முடித்த பின்னும்..

சின்ன சின்ன
சிறகுகள் முளைத்து..

தோட்டத்தில்..

வெகுநேரம்
பறந்து கொண்டிருந்தன..

அவன்
வார்த்தைகள்..!

****

சூட்சம நுழைவாயில்..

*

வெளியின்
வெறுமையை..
பார்வையால் அளக்கும்
ஒனானின்..
கவனமெல்லாம்..

வியூகம் அமைக்கும்
சிறுவர்களின்..
காலசைவின் மீது குத்துகிறது..

திசையின்
உச்சியிலிருந்து
இறங்கும்..

நைலான் சுறுக்கின்
சூட்சுமம் புரியாமல்..

தலையுயர்த்தி..

தன்
மரண வாயிலுள்
நுழைகிறது..

ராமன் காலந்தொட்டு..!

*****

'இடை' வெளி முட்கள்..

*

இரவெல்லாம்..
தனிமையில்..
அழுது களைத்த..

உன்
முகத்தில்..

படர நேர்ந்த
பசலையோடு விடிந்தபின்..

என்னைப் பார்த்த கணத்தில்
பூத்த..
உதட்டுக் காம்புக்கும்..

என்
பயணத்துக்குமான..

இடைவெளியில்...
முளைத்த முட்களெல்லாம்..

புதர்காடாய்..
உன்
உடலெங்கும் அடர்ந்திருக்கும்..!

*****

ஈரக் கைக்குட்டை..

*

கொடியில்
உலரும்
ஈரக் கைக்குட்டையில்..

வெயிலால்..

பருக
முடியாமல் போகலாம்..

உன்
கண்ணீர்த் துளிகளை..

*****

கரும்பாசித் துணுக்குகளின் மிச்சம்..

*

பாழ் கிணற்றின்..
சுற்றுச் சுவர் கரையெங்கும்..
கரும்பாசித் துணுக்குகளை..

நீவிக் கடக்கின்றன..
என் பாத நிழல்கள்..

கணக்கிலடங்கா
காட்டுப் பூச்சிகள்..
தின்று செரித்த
என்
உடலின் மிச்சத்தை..

கண்டெடுத்த
அவசரத்தில்..
எரிக்கின்றனர்..

மீண்டும்
நான் பரவிவிடும்..
அச்சத்தின் பொருட்டு..!

*****

சதுப்புக்காடு..!

*

என்
அறை..

' வார்த்தைகள் ' ஊறும்
சதுப்புக்காடாய் மிதக்கிறது..

அதன்
கரைகளடர்ந்த..
ஆச்சரிய நாணல்களின்..
வளைவுதோறும்
தொங்குகின்றன.. கேள்விக்குறிகள்..

பறிக்க நீளும்
கனவின் விரல்களிலிருந்து..

அனிச்சையாய்..
உதிர்கின்றன..
உவமை நகங்கள்..!

****

கதை கேட்ட இரவுகள்..

*

அம்மாச்சியிடம்
கதை கேட்ட..
இரவுகளில்..

எங்கள் ஊர்
தெருக்களில்..

நிலவு காயப்போடும்
இருள் கம்பளியை..

விடியும் வரை..
சுருட்டிக் கொண்டிருப்பார்கள்..

சுடலை மாடனும்..
அய்யனாரும்..!

*****

பால்ய நீரோட்டம்..

*

நண்பனின்
கைகளைப் பற்றிக்
கொண்ட
அழுத்தத்தில்..

பால்ய
நீரோட்டமொன்று..

ஆயுள் ரேகையில்..
வழிந்திறங்கியது..!


*****

நன்றி : ( உயிரோசை /உயிர்மை.காம் ) நவம்பர் - 2009

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2271

நெய்தல்..

*

சந்திப்புக்கான
நாட்குறிப்பு..

நைந்து விடுகிறது..

காலம் நெய்கிற
நூலின்..

வலிமையற்ற
பின்னலில்..


****

நன்றி : ( உயிரோசை /உயிர்மை.காம் ) நவம்பர் - 2009

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2271

முதல் கவிதை..

*

கணக்கு வகுப்பின்
கடைசி பெஞ்சில்..

தமிழில்
ஏதோ
கிறுக்கிக் கொண்டிருந்ததை..
கண்டு பிடித்த..

ராமலிங்க வாத்தியார்..

கை நீட்டச் சொல்லி
அடித்த..
பிரம்பின் முனையிலிருந்து..
புறப்பட்டது..

என்
முதல் கவிதை..

****

விரல்கள்

*

மலர் வளையம்
பின்னும் விரல்களை..
பற்றிக் கொண்டு..
நடந்து வருகிறது
மரணம்..!

****

ஒற்றையடிப் பாதைகளும்..சில கோடுகளும்..

*

எனக்கும்
என் பகைவனுக்குமான
ஒற்றையடிப் பாதையில்...

நினைவுகளை
கோடு கிழித்து..
வைத்திருக்கிறது
வாழ்க்கை..

வாசிக்க நேரும்
உதடுகளை..

மனக் குளவியின்
விஷக் கொடுக்குகள்
கொட்டுகின்றன..

*****

வியாழன், ஜூன் 11, 2009

மௌனத்தை வலை பின்னும் சிலந்தி..

*
எந்த நொடியிலும்..
உடைந்து விடக் கூடியதாக..
உப்பத் தொடங்கியது..
நம்
இருவருக்கும் இடையே
ஒரு மௌனம்..

அதை..
அளந்து பார்க்கும்
துணிச்சலோடு..
வலை பின்ன
முனைந்தது
மெல்ல ஒரு சிலந்தி..

அறுத்துவிட
யத்தனித்த..
மென் காற்றொன்று..
திசை தொலைந்த குழந்தையென..

நம்
இருவரின்..
முதுகை சுற்றி சுற்றி..
காதில்..
துப்பியது..
மேலும் ஒரு மௌனத்தை..

ரீங்கரிக்க மறந்ததாக..
விர்ரீட்டு கடந்த
வண்டும் கூட..

கடற் காற்றின்..
அருவக் குமிழை..
திருகித் தொலைந்தது..

பரிணாமம்
எழுதத் தொடங்கிய..
நம் மௌனத்தை..

பால் வீதியின்..
இருளுக்குள்ளிருந்து..
மௌனமாய்
வாசித்துக் கொண்டிருக்கிறது..
பிரபஞ்ச கண்களிரண்டு..!

******

முகமூடிகளுக்கான கச்சாப்பொருள்..!

*
முகமூடிகளை..
தன்
கைப்பைக்குள்..
ஒளித்து வைக்கின்றன..
எல்லாருக்குமான வார்த்தைகள்..

நிறப் பூச்சுகளை..
கவிதை கன்னத்தில்..
அழுந்த
பதிந்து விட்டு..

எங்கோ
வேடிக்கைப் பார்க்கும் பாவனையில்..
புன்னகைக்கின்றன..

எழுத பிரிக்கும்..
காகிதத்தின்
வெண்மை பிடிக்காமல்..
கருமை யாசிக்கின்றன..

சொல்லிவிட்டதாக
அடம் பிடிக்கின்றன..
முற்றுப்புள்ளிகளை..
அடுத்தடுத்ததாக..
அடுக்கியபடி..

தொழிற்சாலையின்
கதவடைப்பை..
அறிவிப்பு செய்கின்றன..

இனியும்..
தன்னிடத்தில்..
முகமூடிகள்..
மிச்சமில்லை யென்றபடி..

சிந்தனை உருக்காலையின்..
நினைவுக் குழம்புகளோ..
வழிந்தபடி இருக்கின்றன..

பலநூறு..
முக்மூடிகளுக்கான..
கச்சாப் பொருளாக..

பின்வரும்..
இரவு தோறும்..!

*****

மிகையூட்டப்பட்ட.. அறிவுரை..

*
கீழிறங்குவதற்கான
படிகளில்..
தொற்றிக் கொள்கிறது..
நாளைக்குரிய
ஒரு அறிய வாய்ப்பு..

மிகையூட்டப்பட்ட..
அறிவுரைகளின்..
முதுகை..
தொடும் முயற்சியில்..

எப்போதும்
களைத்துப் போகிறது..
இன்று..

கடந்து சென்றுவிட்ட
நிழல்களை..
துரத்துகின்றன்..
இமைக்கும் கணங்கள்..

கீழிறங்குவதற்கான
படிகளில்..
தொற்றிக் கொள்கின்றன..

என்றைக்குமான
வாழ்வின் குறிப்புகள்..

*****

ஆடுகளம்..!

*
வார்த்தைகளோடு
ஆடிய சடுகுடுவில்..

கால் இடறி விழுந்த
கணத்தில்..

மூச்சுத் திணறலோடு..
வெளியேற நேர்ந்தது..

கவிதைக் களத்திலிருந்து..

*****

நிறங்களின் நிழல்..!

*
மிதியடியின்
நூல் நெய்தலில்..
பிசிரடித்துக் கிடக்கின்றன..

நிறங்களின் நிழல்..

பாத அழுக்குகளின்
முனகலை..

சுமந்தபடி..
காத்திருக்கின்றன..

அடுத்த சலவைக்காக..!

*****

விரல்களை பற்றிக் கொண்டு...

*
மலர் வளையம்
பின்னும் விரல்களை..

பற்றிக் கொண்டு..

நடந்து வருகிறது
மரணம்..!

*****

பாதையின் நீட்சி..!

*
காதறுந்த
செருப்புக்கு கேட்கவில்லை..
பாதங்களின் புலம்பல்..

சுருட்டிய காகிதத்துக்குள்
அடைக்கலமான..

அதன் மூக்கு..

வெளி நீண்டு
நுகர்ந்தபடி வந்தது..
பாதையின் நீட்சியை..

*****

நுண்மை..!

*
தவித்தடங்கும்..
வேட்கையின்
நுண்ணிய புள்ளிக்குள்..

உடைந்து
உருளுகிறது..
கண்ணாடி சில்லு போல்..

உன் காமம்..!

****

பிரதி..

*
விரலிடுக்கில்..
நடுங்கும் பேனாவின்..
நாவில்..

கஸிந்தூறுகிறது..
நேற்றைய பிரதிகளின்..
கசடுகள்..

யாதொரு கவலையுமற்று..!

*****

புலம்பெயர் சமிக்ஞை..

*
நெடிதோங்கி
முகில் தீண்ட
கையுயர்த்திய..
மூங்கில் மூக்கில்..

மரங்கொத்தி அலகு துளைத்த..

இசையிலையின்
மென் நரம்பில்..

சொல்லவொன்னா..
குறிப்பொன்றின்
கடைசி வரிகளை
கிறுக்கி முடித்த
கணப் பொழுதை..

திருடிப் பறந்த
குயிலொன்றின்
உதிர் சிறகு..

சவுக்கு புதர்
மண்டிய
மணற்வெளியில்..

எழுதிப் போகிறது
என்
தனிமையின்
குரலை..

கடலலை நோக்கி..

******

உடைபட்ட மண் சில்லுகள்..

*
மரணங்களை..
வாசித்தபடி..
எரிகின்றன அடுக்கிய விறகுகள்..

உடைபட்ட
மண் சில்லுகளில்
தேங்கியிருக்கும்..
தண்ணீரில்..

கரைந்து விட்டதோர்
உறவின் கசடு..

சாம்பலின் மிச்சங்களை..
அள்ளி புறப்படுகிறது..
எதிர் பாராமல்
வீசுகின்ற காற்றொன்று..

காரணமேதுமின்றி..
நட்டு வைத்திருக்கும்
ஒற்றை கொம்பின்..
மீது..

பரிதாபமாய்..
உட்கார்ந்து..
காத்திருக்கின்றன..
காகங்கள்..

முன்னோர்.. படையலென..
இலையில்..
இடப்படுகிறது..

சொச்சமாய்.. உணவு..!

*****


காற்றில் அசையும் நூலிழை..

*
மௌனத்திரையின்..
ஒவ்வொரு
நூலிழையும்
காற்றில் அசைந்தபடியே..
இருக்கிறது..

என்
இரவு நெடுக..

வானத்து
நட்சத்திரங்களை..
என்
தோட்டத்துக்கு
அழைத்தபடியே
இருக்கிறது..

நெல்லி மரத்தின்
சிறு பூக்கள்..

சில் வண்டுகளின்
இடையறா
ஒலி வனப்பில்..
இருளின் வடிவம்..
சிறு துளியாய்..
திரள்கிறது..

புல்லின் நுனியில்..

மிதந்தூறி..
ஜன்னல் வழி
உட்புகுந்த
தென்றல்..
மௌனத்திரை கடந்து..

மேஜையில்..
எழுதாத
வெறும் தாளை..
புரட்டிப் படித்தபடி..

என் பிடரி..
மீதேறி..

என்னை..
விரைவாக.. போகும்படி
விரட்டியது..

திசையறியா பறவையின்
சிறகுகளை
யாசிக்கும் விதமாக..

நான் கனவு கொண்டிருந்தேன்..

ஒவ்வொரு
நூலிழையும்
காற்றில் அசைந்தபடியே
இருக்கிறது..

என்
இரவு நெடுக..!

******

வலியின் குளம்போசைகள்..

*
மனசின்
ஒற்றையடிப் பாதையில்
கேட்டுக் கொண்டேயிருக்கும்..

வலியின்
குளம்போசைகள்..
ஒவ்வொரு
இரவும்..

நெரிபடும் பற்களின்
தாடையசைவுகளை..

கனவின்
கரும்பலகையில்
கிறுக்கி வைக்கின்றன..

தழும்புகள்..

கூர்
மழுங்கிய
சொற் வாளின்..
உலோக மோதலை..

நெஞ்சில் விழாமல்
தாங்கிப் பிடிக்கிறது..

மௌன
கேடயமொன்று..!

******