வெள்ளி, டிசம்பர் 23, 2011

மேலும் கொஞ்சம் சிறகுகள் வளர..

*
ஒரு பேரமைதி சூழ் கொள்ளும்
பூக்களின் உலகில்
மகரந்தம் தோய்ந்த நுண்ணிய கால்களோடு
மேலும் கொஞ்சம் சிறகுகள் வளரக்
காத்திருக்கிறது
மௌன மனம்

கையகலக் கனவிலிருந்து
வனம் விரிகிறது பச்சை நிற வாசம் பிழிந்து
வைகறை வானின் மஞ்சள் குழைந்து

மூங்கில் துளையூடே ஊடும் மென்காற்றில்
இசைக் குறிப்புகள் தொட்டுத் தொட்டு எழுப்புகின்றது
மலரிதழின் மெல்லிய நரம்பை
அதிலூறும் தேனை

சமன் குலையும் முதல் தெறிப்பை
ஏந்திக் கொள்கிறது சின்னஞ்சிறு பனித்துளி

*****

மௌனத்துக்குரிய விளிம்புகள்..

*
ஒரு மௌனத்துக்கும்
இன்னொரு மௌனத்துக்குமான
இடைவெளியில்

இந்த மேஜையின் உன் விளிம்புக்கும்
என் விளிம்புக்குமாக
நொடிக்கொரு முறைத்
தாவிக் கொண்டிருக்கிறது
பார்வை

****   

கொஞ்சம் வெயில் மட்டும்..

*
காலில் பொடிப்படும் சருகுகள்
நேற்று மரத்தில் இருந்தன

மின் கம்பியில் சிக்கிக் குதிக்கும் காற்றாடி
பறப்பதற்குரிய நொடிகளை எண்ணுகிறது

சொட்டு சொட்டாய்த் திரளும் இரவு
தெருக் குழாயின் காலடியில்
சொற்பமாய்த் தேங்குகிறது
எதன் மீதும் புகார்கள் இல்லை
எதன் மீதும் நிராகரிப்பு இல்லை

அப்படியே ஏற்றுக் கொள்ளும்படி
திறந்து வைத்திருக்கும் வாசலில் நுழைய
வழங்கப்படும் அனுமதிச் சீட்டில்
முகவரி இல்லை
பெயர்கள் இல்லை

கொஞ்சம் வெயில் மட்டும் காய்ந்து கொண்டிருக்கிறது

*****
  

மிச்சங்கள்..

*
மொட்டை மாடிச்
சதுரக் கற்களில்
பூனையொன்றின் பாதச் சுவடுகள்

மற்றும்

கிளிப் பச்சை நிறத்தில்
கிளி இறகின்
மிச்சங்கள்

*****

வியாழன், டிசம்பர் 22, 2011

தலைகீழ் தொங்கும் வௌவால்களின் மெல்லிய இலைகள்..

*
மாற்றி விடும்படி நெருக்குகிறது இரவு
பரிச்சயமற்ற பனிப் பொழிவை
புறங்கையில் உணர நேர்ந்த
பால்கனி கைப்பிடியில்
புள்ளிகளைப் பூக்கின்றது ஈரம்

இழுத்து விட்ட சிகரெட் பெருமூச்சில்
வெளியேறுகிறது புகையிலைத் தோட்டம்

மங்கிய நட்சத்திர வெளிச்சம்
ஆசுவாசம் ஏற்படுத்தவில்லை
கரிய நிழலாகிப் போன மரத்தின் நிச்சலனம்
எதை உறுதி செய்கிறது

தலைகீழ் தொங்கும் வௌவால்களின்
சுருங்கிய இறக்கைக்குள்
அடங்க மறுக்கின்றன மெல்லிய இலைகள்

விட்டுக் கொடுத்தல் என்பது ஒரு துயரம்

அத்துயரத்தைச் சொல்லும் சொற்களை
மாற்றி விடும்படி நெருக்குகிறது இவ்விரவு

ஓர் எளிமையான நிராகரிப்பின் மூலமாக
அந்தச் சொற்களை எழுத்திலும் ஊன்றி
அழுத்தும்போதே முளைக்கிறது

இரவுக்குப் பிறகான
ஒரு 
வெம்மைப் பகல்


*****

வினோத ஒலிக்குறிப்புகளை ரத்து செய்யும் ஓர் உரையாடல்..

*
உரையாடலின் போது
ஊடாடிய வினோத ஒலிக்குறிப்புகள்
மணித்துளிக்குள் தேங்காமல்
பயணிக்கிறது பெருவெளியில்

உரையாடலுக்குப் பிறகு
உனது சொற்களின் சிறகிலிருந்து
பிரிகிறது சாம்பல் நிற இறகுகள்

வினோத ஒலிக்குறிப்புகளை ரத்து செய்யும்
ஓர் உரையாடலை அடுத்த முறை
நிகழ்த்திக் காட்டுவதாக
காற்றில் சிலிர்க்கிறது
உதிர்ந்த சாம்பல் 


*****

அழைப்பின் எல்லையற்ற எதிர்முனை

*
வெட்கம் குழைத்துப் பூசியிருக்கிறாள்
கன்னத்தில்

நேற்று கொடுத்த முத்தத்தின்
நிறம்
நிலவை இழைத்துப் பூசியிருந்தது

விரல்கள் காற்றில் எழுதிய
ரகசிய எண்களை இணைத்தபோது
அழைப்பின் எல்லையற்ற
எதிர்முனையில்
கனவின் வாசல் திறக்கிறது


*****

குளிர் திரளும் மஞ்சள் நிறம்..

*

வாசல் கதவின் நாதாங்கியில்
குளிரைத் திரட்டுகிறது
துளியென
பனி

தெரு விளக்கின்
மஞ்சள் நிறம்
அதில்
தொங்குகிறது இரவு நெடுக


*****

பூனையொன்று..

*
மௌனச் சாரல் பொழியும்
கூரையில்

பூனையொன்று அழைத்துக்
கொண்டேயிருக்கிறது

இவ்விரவை 

*****

வழி..

*
சார்த்தியக் கதவைத்
தட்டிக் கொண்டிருக்கும் காற்றை
ஜன்னல் வழியே
வரச் சொல்லுங்கள்

மேஜையில்
காகிதங்களை அடுக்கி
வைத்திருக்கிறேன்


*****


காற்றில் சிறகைத் தொட்டபோது..

*
மரணத்தைப் பரிசளித்த
உங்கள் இரவில்

வீட்டின் கிணற்றுப் பக்கம்
இருக்கும்
வாதாம் மரத்தின் கிளையில்
ஓர் ஆந்தையாக உட்கார்ந்திருந்தேன்

என் உடலை கட்டிப் பிடித்து
அழுது தீராதக் கண்ணீரின்
ஈரப் பரவல்
காற்றில் என்  சிறகைத் தொட்டபோதும்
சற்று நேரம் வெறித்தபடி
காத்திருந்தேன்

என்னைக் கவனித்த நொடியில்
நீங்கள் 
'சூ....' என்று விரட்டிய கணத்தை
அலகில் கொத்தித் தூக்கிப் பறந்தேன்

*****

நீட்சியில் எதிர்ப்படும் கதவு..

*
நடுநிசியின் ஒருவழிப் பாதை
என் கனவிலிருந்து
நீள்கிறது

விருப்பமில்லா நினைவுகள்
பெயரற்றுக் கடக்கின்றன
தேவையற்ற தொடர்புகளின் காரணிகள்
வேறொரு நிறம் பூசிக் குறுக்கிடுகின்றது

முகமற்ற தன்னில்
கிளைத்து விரிகின்றன
சொல்ல மனமற்ற காட்சிகள்

இந்தப் பயணத்தின் நீட்சியாக எதிர்ப்படும் கதவை
வெகுநேரமாகத் தட்டுகிறேன்
சட்டென்று திறந்துக் கொண்ட கதவின் மறு வெளியில்
நீள்கிறது மற்றுமொரு பாதை

நடந்து நடந்து நடந்து கடைசியாக
நான் எழுந்தது உனது
கட்டிலில்

நீல நிறத்தில் ஒளிரும் உன் அறையில்
சிறகு முளைத்து இடைவிடாமல்
பறந்து கொண்டிருக்கிறது தூக்கத்தில் நழுவும்
உனது சொற்கள்

*****       

பிரத்யேக நிறம் சூழ்ந்த நடைபாதை..

*
மரணத்தின் குறிப்பேட்டில்
கையெழுத்து வாங்கும் தாதி
அவசரமாகத்
தவிர்த்து விடுகிறாள்
கேள்விகளையும்
அதற்குரிய பார்வைகளையும்

திறந்து அவளை உள்வாங்கிக் கொள்ளும்
கண்ணாடிக் கதவுக்கு அப்பால்
நிதானமாய் நீள்கிறது
பிரத்யேக நிறம் சூழ்ந்த ஒரு நடைபாதை

நம் கைகளோடு தங்கிவிடுவது
ஒரு பேனா மட்டுமே

******

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் [ டிசம்பர் - 26 - 2011 ] 


http://www.navinavirutcham.blogspot.com/2011/12/blog-post_26.html

குற்றத்துக்கான புள்ளி..

*
திருந்தி விடுவது பற்றி விவாதித்துக் கொண்டிருந்த பகலில்
சூழ்ச்சிக்கான முதல் புள்ளியைக் கையில் வைத்திருந்தேன்

நாளது வரை நடந்த சம்பவக் குறிப்புகள்
எட்டு மடிப்புக் காகிதக் கோடுகளின்
அழுக்கேறி கிழிந்திருக்கிறது

ஒவ்வொரு எழுத்தின் வன்மத்தையும் அலசித்
தழுதழுத்த நாக்கின் நுனி சிவந்திருந்தது

சுலபம் என்கின்றன மனச் சுவர்கள்
பாதுகாப்பின் உச்சியில் நீரோடும் மின்சாரக் கம்பிகள்
தருணங்களின் கணத் துளிகளை ஆவியாக்குகின்றது

திருந்தி விடுவது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் பகல்
எங்கோ ஓர் இருட்டின் தனிமையில்
சத்தமில்லாமல் திறந்து விடுகிறது குற்றத்துக்கான
இறுதிப் புள்ளியை

******

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் [ டிசம்பர் - 25 - 2011 ] 


http://www.navinavirutcham.blogspot.com/2011/12/blog-post_25.html

முகமில்லா துயரின் உருவம்

*
பேனாவிலிருந்து கையில் கசிந்து விட்ட
மையைத் துடைத்துக் கொள்ள
காகிதம் தேடுகிறேன்

உனது மேஜையில் கையருகே
பாதி படித்த நிலையில் வைத்திருந்த
கவிதைத் தொகுப்பொன்றின்
பக்கத்தை சட்டென்று கிழித்து
கொடுத்து விட்டாய்

அவசரமாய் துடைத்த பின் உரைத்தது

உள்ளங்கை முழுக்க
கவிதையொன்று வார்த்தைகளாகி
உருக் குலைந்ததும்
முகமில்லா ஒரு துயரின் உருவம்
ஆள்காட்டி விரலில்
துருத்திக் கொண்டு உட்கார்ந்திருப்பதும்

******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ டிசம்பர் - 22 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17864&Itemid=139

கோட்டுச் சித்திரமாய் அசையும் மழைத் தும்பி..

*
வெளியேறும் பதட்டத்தோடு 
ஜன்னல் கண்ணாடியில் மோதிய வேகத்தில்
கிர்ரென்று சிறகுகள் துடிக்க
மயங்கிக் கிடக்கிறது மழைத் தும்பி

பால்கனிவழித் தெரியும் வானில்
வெளுத்த வெயிலில் 
கோட்டுச் சித்திரங்களாய் அசையும் தும்பிகள்
மழையைப் பாடுகின்றன

என் அறைக்குள் ஒற்றையாய் நுழைந்துவிட்ட தும்பி
மழைப்பாட்டை முதலில் எனது
ட்யூப் லைட்டின் நீளக் குழல் முழுதும்
எழுதிக் கொண்டிருந்தது

பிறகு நிலைக் கண்ணாடியில் 
வழியச் செய்தது மழையின் நிழலை

மழைப்பாட்டின் ரீங்காரம்
அறையிலிருந்து மெல்ல நழுவி
மொட்டைமாடியெங்கும்  இசைத்தது
அகப்படும் அனைத்தையும்
நனைத்துக் கொண்டு

ஜன்னல் கதவிடுக்கினூடே
மழைச்சாரல் பட்டுத் தெறிக்கக்
காத்திருக்கிறது
இன்னும் அரை மயக்கத்தில்
என் மழைத் தும்பி

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ டிசம்பர் - 14 - 2011 ] 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17788&Itemid=139

எங்கும் தேங்கி நிற்கும் உனது மணித்துளிகள்..

*
ஒரு அனுமதி என்னைக் கொஞ்சம்
அசௌகரியப்படுத்துகிறது
அது உன் அறைவாசலில் எப்போதுமே நிரந்தரமாய்
ஸ்டூல் ஒன்றைப் போட்டு வைத்திருக்கிறது

வருவதும் போவதுமான உத்தரவுகளை
அச்சிட்டுக் காகிதத்தில் வைத்திருக்கிறாய் 

உனக்கான மணித்துளிகள்
உனது இருப்பிடத்தில் தொடங்கி அலுவலகம் வரை
மழைக்குப் பின்னான நீர்த் துளிகளைப் போல்
எங்கும் தேங்கி நிற்கிறது
முறை செய்யப்பட்ட பாதுகாவலோடு

சின்னஞ்சிறிய உதவி ஒன்றைக் 
கோரவும்
ஒரு பால்ய நினைவைப் பகிரவும்
காத்திருக்க நேரும்
ஒரு அனுமதி என்னைக் கொஞ்சம் அசௌகரியப்படுத்துகிறது

******

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் [ டிசம்பர் - 13 - 2011 ] 


http://www.navinavirutcham.blogspot.com/2011/12/blog-post_13.html

ஞாயிறு, டிசம்பர் 11, 2011

இலையின் கணம்

*
சின்னஞ்சிறு கைக்குள்
அடங்கிவிடும் ரப்பர் பந்து
தரை டைல்ஸின் பச்சை இலை மீது
மெத்தென்று அழுந்துகிறது

ஒரு
கணம்
இலை நெகிழ்கிறது

அவளோடு மட்டுமே
நடக்கிறதா
அவ்விளையாட்டு

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ டிசம்பர் - 12 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5098

எழுதிப் பார்ப்பதற்கான அவகாசம்..

*
அசைவதைப் போல் இருக்கிறது இரவு
அசைவற்றதாக கனக்கிறது அதன் இருள்

எதையும் ஒரு முறை
எழுதிப் பார்ப்பதற்கான அவகாசத்தை
அனுமதி மறுக்கிறது நிமிடங்களை
நகர்த்தும் நொடிமுள்

தொண்டைக்குள் சிக்கும் வார்த்தைகள்
உறுத்தத் தொடங்குகிறது
அர்த்தங்களை

நீயோடு தைத்து வைத்திருக்கும்
தனிமையின் முனை மடங்காமல்
நானின் விரல் நெருடும் லகு
அசைவதைப் போல் இருக்கிறது நம் இரவு
அசைவற்றதாகக் கனக்கிறது இந்த இருள்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ டிசம்பர் - 12 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5098

காகிதங்கள் மீதமரும் உடைந்த சதுரங்கள்

*
வராண்டாவில்
திசைக்கொன்றாக
உடைந்து கிடக்கிறது வெயில்

அதன் சதுரங்களை சீராக அடுக்கி
மேஜையில்
காகிதங்கள் பறக்காமலிருக்க வைத்தபடி
கைகளைத் தட்டி நிதானமாய்
பிடறித் துள்ள நடந்து போகிறாள் தான்யா

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ டிசம்பர் - 12 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5098

முன்னெப்போதையும் விட..

*
வேண்டாம் என்று சொல்ல முடிவதில்லை
இறங்கிக் கொண்டிருக்கும் ட்ரிப்ஸில்
சொட்டுகளின் வேகம் மிதமாய் நரம்புக்குள்
சொருகி மீட்கிறது இருப்பை

பிம்பங்கள் ஒன்றின் மேல் ஒன்றாகி
கலங்கி நெளிகிறது வர்ணக் கசிவாக மட்டும்

உயிராகி வெளியேறி உள் நுழைந்தபடி சதா
போக்குக் காட்டுகிறது வாழ்வு

இடது புறங்கையின் நாள வீக்கத்தில்
புடைத்துக் கொண்டு நிற்கிறது
ஒரு ஏககால நினைவு

சுருக்கென்று குத்தும் அவ்வலியை
மென்மையாய்க் கட்டைவிரல் கொண்டு அழுத்தி
நீவுகிறாள் உதடுகள் துடிக்க

நினைவுக் கரைந்து 
முன்னெப்போதையும் விட இதமாக
இளமஞ்சள் ஒளிப் படரத் தளும்புகிறது
கண் விளிம்பில்..

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ டிசம்பர் - 12 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5098

மௌனங்களை இழை பிரித்துத் தொங்கும் நிறம்..

*
எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கு இருப்பதாக
சொல்லிக் கொண்டான்
மிகச் சிறிய துரோகத்திலும் கூட
அந்த நேர்த்தியை நுட்பமாய்
செய்து பழகினான்

மௌனங்களை இழை இழையாய்ப் பிரித்து
அறையெங்கும் தொங்க விட்டிருந்தான்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம்
அதன் நிறங்களின் நிழல்
சுவர்களில் எப்போதும் வழிந்து கொண்டேயிருக்கும்
அதன் நீள அகலங்கள் கணக்கிடப்பட்டிருந்தன

அவனுடைய தனிமையை
எப்போதும் பகிர்ந்து கொண்ட மின்விசிறியில்
முந்தின இரவு குளிருக்கென பயன்பட்ட
போர்வையை முடிச்சிட்டுத் தூக்கில் தொங்கிய
அவனது உடலுக்கும்
தரைக்குமான இடைவெளியை
கச்சிதமாக முடிவு செய்திருந்தான்

காவல்துறை எழுதிய மரணக் குறிப்பில்
அது பதிவாகவில்லை
துப்புத் துலக்கித் தேடப்பட்ட ஏதோ ஒன்று
அத்தனை ஒழுங்குகளையும் கலைத்துவிடும் காரணத்தையும்
அவன் விட்டுச் சென்றிருந்தான்

******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ டிசம்பர் - 11 - 2011 ]
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17749&Itemid=139 
நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் [ நவம்பர் - 26 - 2011 ]
http://www.navinavirutcham.blogspot.com/2011/11/blog-post_26.html