புதன், ஜூன் 30, 2010

காரியக் கண்ணாடியில்..

*
உன்
காரியக் கண்ணாடியில்
விழுந்த விரிசலின் முதல் நொடியில்..

இற்றுப் போயிற்று
நம்
வாசல்..!

****

துணையற்ற இரவில் எரியும் கேண்டில் லைட் டேபிள்..!

*
பிரிவதற்கான
நேர் எதிர் விவாதங்களை
நொறுக்கி
பீங்கான் பிளேட்களில்
கொட்டி வைத்திருக்கிறோம்

கேண்டில் லைட் டேபிளில்
நமக்குத் துணையாக
இரண்டு காலி நாற்காலிகள்
உட்கார்ந்திருக்கின்றன

கோப்பையை
உயர்த்திப்பிடித்து ஏறிடுகிறாய்

நானும்
என் கோப்பையை
உயர்த்துகிறேன்

அவைகளில்

பிரியமில்லாத இரவுகளும்
நம்பிக்கையிழந்த பகல்களும்
பொய்க் கரைசலின் நுரைகளும்
உயிரற்ற வார்த்தைகளின் சடலங்களும்
மிதக்கின்றன

சிவந்து அடர்ந்து புளித்த நிறத்தில்
கைவிடப்பட்ட
நிமிடங்கள் மொத்தமும்
தளும்புகின்றன

இப்போது
கோப்பைகள் மோதிச் சிணுங்கும்
இரண்டொரு நொடிகளில்

வெறும் கோப்பையை மேஜைமேல்
வைத்து விட்டு
ஒரே மூச்சில் கிளம்பிவிட்டாய்

சிணுங்களில் சிதறிய சில துளிகள்
பீங்கான் பிளேட்டிலும்
மேஜை விரிப்பிலும்
மெல்லப் பரவி விரிகிறது

என்னை நோக்கி..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜூன் - 29 - 2010 ]

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3100

நினைவுகளைக் கடந்து செல்லுதல்..

*
நிறம் கூடித் தவிக்கிறது
நீ
வந்து சேராத நிமிடங்கள்..

நினைவுகளை
விரைந்து கடந்து செல்லுதல்
சாத்தியமற்றுப் போகிறது
ஒளி மங்கும்
நொடிகளுக்கும்..!

****

திங்கள், ஜூன் 28, 2010

ஊடலின் நவீன ஓவியம்..

*
ஊடலுக்குப் பிறகு
பெறுகிற முத்தத்தில் ..

கொஞ்சம்
கண்ணீரின் சுவையும்
உப்பின் வர்ணமும்
கலந்து
வரைகிறது
ஒரு நவீன ஓவியத்தை..!

****

மரணத்தின் வட்டக் கிணறு..!

*
மரணத்தின்
வட்டக் கிணற்றில்..
சலசலப்பும் இல்லை
அலைகளும் இல்லை

அமைதியாய்
மூழ்கிவிடுகிறது
ஒவ்வொரு நூற்றாண்டும்
ஒரு கல் என..!

****

காதலின் புறவழி..!

*
நள்ளிரவு உகுத்த நிலவொளியில்
காதலின் புறவழியில்

கால் கடுக்கக் காத்து நிற்கின்றன
நட்சத்திரங்கள்..

உதிர இருக்கும்
கவிதையின் சிறகுகளை
வாரிச் செல்ல..!

****

அடையாளமாய்..

*
வாசித்துக் கொண்டிருந்த
புத்தகத்தில்
ஏதோ ஒரு பக்கத்தில்..

அடையாளமாய்
செருகிப் போகிறாய்
ஒரு
புன்னகையை..

அவசரமாய்..!

****

விட்டுச் செல்லும் கால் தடங்கள்..

*
நீண்ட
மணல்வெளியில்
விட்டுச் செல்லும்
கால் தடங்களின்
சிறு குழி நிழலுக்குள்..

காலத்தை அள்ளி வீசுகிறது
காற்று..!

****

மௌனமாய் நகரும் நதி..!

*
உயர
மலைச்சரிவின்
தேனடையிலிருந்து நழுவும்
ஒரு துளித் தேனை..

கீழே..

மௌனமாய் நகரும் நதியில்..
வாய்ப் பிளந்து விழுங்குகிறது...
ஒரு
நீர்க் குமிழ்..!

****

இசைக்கப்படாத கிடார் ஒன்றின் புயல் பொழுது..!

*
கிடார் ஒன்று இருக்கிறது என்னிடம்
இசைக்கத் தெரியாது..

பெருமழையுடன் கூடி
புயற் காற்று வீசிய
மாலைப் பொழுதில்..

ஜன்னல்களும் கதவுகளும்
வீடு நனைதல் குறித்த கவலைகளோடு
அடைப்பட்டுக் கொண்டுவிட்ட
தருணமொன்றில்..

கிடாருடன்
மொட்டைமாடியில் தனித்து நின்றேன்..

பலமாய் வீசிய
ஒரு
கடுங்காற்று..

அதன் நரம்பில் மோதி
மீட்டிச் சென்ற இசைக் குறிப்பு..

ஜாஸா..!
ராக்கா..?

****

ரகசியத் தடங்களின் கூர் இரவு..!

*
வன மிருகத்தின்
மிருதுப் பாதங்கள்
ரகசியமாய் தடம் பதித்துக் கடக்கும்
என்
இரவின் அகாலத்தில்..

கூர் பற்கள் கொண்டு
உங்கள்
ஆதி மனிதனைக்
கிழித்துக் கொண்டிருக்கிறது
என்
மிருகம்..!

****

துனையற்றவை..

*
சரியாக
சொல்லப்படாத
கதையொன்றில்

கால் சோர்ந்து உட்கார்ந்துவிட்ட
கதாப்பாத்திரத்துக்கு
ஒரு கப் டீ கொண்டு வந்து கொடுத்ததோடு..

தானும்
உடன் உட்கார்ந்து கொள்கிறான்
கவிஞன்..!

****

டைரியின் புறவாசலில்..

*
சின்ன சின்னப் பொய்களை
பரிசளித்துவிடுகிறாய்

பிரியங்கள் சுற்றப்பட்டு
வாசனைத் திரவியங்கள்
தெளிக்கப்பட்டவை..

அதன்
நறுமண மயக்கக் கணத்தில்..

பாக்கெட்டில்
செருகப்பட்டுவிடுகிறது
மேலுமிரண்டு..

தெரிந்தே பெற்றுக் கொள்ளும்
நிறைய சிறு பொய்கள்
பிரிக்கப்படாமலே
கொட்டிக் கிடக்கின்றன

டைரியின் புறவாசல் பக்கம்..!

****

வளர்மதி அக்கா - அனு - மற்றும் ஒரு ரோஜாப் பூ..!

*
வெண்ணிற கைக்குட்டையில்
வளர்மதி அக்கா பின்னிக் கொடுத்த
ரோஜாப் பூவில்
வாசம் இருப்பதாக அடம் பிடிக்கிறாள் அனு

சதுரமாய் மடித்துத் தரச் சொல்லி
பிறந்த நாளுக்கு அப்பா எடுத்துக் கொடுத்த
மஞ்சள் நிற பிராக்கின்
ஒற்றைப் பாக்கெட்டில் பத்திரப்படுத்துகிறாள்

தான் கண்ட நேற்றிரவின் கனவில்
தன் ரோஜாப் பூவைத் தேடி
நிறைய வண்ணத்துப் பூச்சிகள் வந்ததாக
விடுமுறை முழுதும் சொல்லிக் கொண்டே இருக்கிறாள்

அம்மா பிசைந்து கொடுத்த
தயிர் சாதக் கிண்ணம் திடீரென உருள
என் முதுகில் கை ஊன்றித் தாவி மாடிக்கு ஓடுகிறாள்

திரும்பி வந்த சில நொடிகளில்
மழையில் நனைந்திருந்தாள்

அரை மணிநேர மழைக்குப் பிறகு
என் கைப் பிடித்துக் கட்டாயமாய்
இழுத்துச் செல்கிறாள் மாடிக்கு

கறுத்த சவுக்குக் கம்பின்
இருமுனையில் பிணைந்திருந்த
வயர்க் கொடியில்

தன்னந்தனியாய்..

நனைந்து சொட்டிக் கொட்டிருந்தது
வளர்மதி அக்காவின்
ரோஜாப் பூ..!

****

ஒரு முனை உடைந்த சிகப்புப் பென்சில்..!

*
டோரா புஜ்ஜி ஸ்டிக்கர் ஒட்டிய
பென்சில் பாக்ஸுக்குள் வைத்திருக்கிறாள்..

ஒரு முனை உடைந்த சிகப்புப் பென்சில்
நான்கு கலர் க்ரேயான்ஸ்
பாதி கடித்த ரப்பர்த் துண்டு ஒன்று
பூ பூவாய் விரிந்திருக்கும் பென்சில் துருவல்
மிக்கி மௌஸ் டாட்டூ
ரெண்டு குட்டி மயிலிறகு
மஞ்சள் நிற மலரின் இதழ்கள் சில..

கூடவே..

கிளாஸ் டீச்சரின் கையெழுத்தில்..
இந்த மாத டர்ம் பீஸ் கட்டச் சொல்லும்
ஒரு
துண்டுச் சீட்டு..!

****

ரகசியமாய்..

*
எல்லாம் எனக்குத் தெரியும்
என்கிறாள் சிறுமி..

தினம் என் தெரு வழியே
அலுவலகம் போகும்
பெயர் தெரியா தேவதைக்கு

ரகசியமாய்

நான்
காற்றில் பறக்கவிடும்
முத்தம் உட்பட..!

****

மின்னல் கொடி..

*
அடிவானிலிருந்து
கிளைத்துப் படரும் மின்னல் கொடியை
மொட்டை மாடியில் நின்றபடி
அவசரமாய்
உருவிப் போகிறாய்
காய்ந்தத் துணிகளோடு சேர்த்து..!

****

பதம் தப்பிக் கெட்டித்த நினைவின் கரடுகள்..

*
நீ
விலகுதல் குறித்த மௌனங்களை
உதடுகளின்
சிறு இடைவெளிக்குள்
விதைத்து வைத்திருக்கிறாய்

பதம் தப்பிய மனதின் புரள்தலில்
ஈரம் குழைந்துக் கெட்டித்த
நினைவின் கரடுகளை
உழுதுக் கொண்டிருக்கிறது
என்
படிமக் குளம்புகள்

மூச்சு விடைத்து இழுக்கும்
தசையசைவுகளில்
நுரைத் தள்ளுகிறது
கடந்து செல்லும் நிமிடங்களும்
எதிர் கொள்ளும் நொடிகளும்..

****

பசித்த நகரம்

*
நகரத்தின் தெருக்களில்
அலையும்
நாக்குகள்

****

ஞாயிறு, ஜூன் 27, 2010

அசைவுறும் இலை நிழல்களின் குறுஞ் செய்தி..

*
இந்தப்
புங்கை மர நிழல்
என் வெளிர் நீல நிற சேலை முழுதும்
புதிய வடிவங்களை
நொடிக்கொரு முறை
வரைகிறது
கலைக்கிறது..

நீ
அருகாமையில் வந்துவிட்டதாக
தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்கும்
குறுஞ் செய்திகளின்
இறுதியில்..

தவறாமல்
புன்னகைக்கிறது
மஞ்சள் வட்ட முகமொன்றும்..

அசைவுறும் இலை நிழல்களும்
இசைந்து துள்ளும் குறுஞ் செய்திகளும்
போதுமானதாக இருக்கிறது
நீ வரும் வரை..

வந்து சேர்ந்ததற்கான
தாமதக் காரணங்களை
அடுக்கும்போது..

உனக்குப் பரிசளிக்க..

இப்போது
என்
கை நிறைய வைத்திருக்கிறேன்
மஞ்சள் புன்னகைகள்..!

****

வேறென்ன சொல்ல..?

*
வேறென்ன சொல்ல ?
கைக் குலுக்கி
விடைப்பெற்றுக் கொள்ளும்
உன்
கண்கள் நோக்கி..!

****

அடர்ந்து பொழியும் நீர்த்திரை..

*
மௌனத் துளியின் நீர்மைக்குள்
அடைபட்டுத் துழாவுகிறது

மரணிக்கத் திணறும் ஒரு நினைவு

சேமிப்பதில் உதிரத் தொடங்கும் பருவம்
மழைச் சிதறலென நிலம் தொட
ஏந்திக் கொள்ள மறுக்கிறாய் என் ஏகாந்தத்தை

ஒவ்வொரு நொடிக்குள்ளும் வளருகிறது
சூழ் கொண்டு பெருகும் கேவல்

மனம் உடைந்து வெளிப்படும்
கரும்பாறைச் சரிவில்
கசிந்துருகும் காட்சியாகிப் போகிறேன்
அடர்ந்து பொழியும் நீர்த்திரையின்
வெண்மையோடு..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜூன் - 21 - 2010 ]

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3042

அப்படியொன்று இல்லவே இல்லை..

*
நீ தயக்கங்களோடு
புனையும் வார்த்தைகளின்
நிகழ்வை
உன் பேனாவிலிருந்து திறக்கிறாய்
மிக அமைதியாக..

தருணங்களின் நுண்ணியக் கணங்களில்
அப்படியொன்று இல்லவே இல்லை
என்பதாக சூழ் கொள்கிறது
உன் படைப்பின் திறந்த வெளி..

பதுங்கி நடைப் பழகும் மதிற் பூனையென
இருண்மையின் கொடிப் பற்றி
மனதுக்குள் இறங்குகின்றன
பசித்த படிமங்கள் சில..

ஒரு வார்த்தை
ஒரு வாக்கியம்
ஒரு பத்தி
ஒரு பக்கம்
ஒரு புத்தகம்

இவை முடிவற்று நீளுகின்ற
எழுத்துப் பாதையின் கருநிழலை அண்டி
இருளில் மூழ்கிக் காத்திருக்கின்றன
ஒவ்வொரு முறையும்
நீ காகிதத்தில் விட்டுச் செல்லும்

எழுதாத வார்த்தைகள்..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜூன் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3006

பட்டாம்பூச்சியின் வர்ணங்களோடு ஒரு காதல் காட்சி..

*
ஒரு மென்மைத் தொடுதலில்
என் துக்கம் பொடித்து உதிர்கிறது..
உன் கைகளுக்குள்
என் கைகள் தஞ்சமடையும்போது
என் கால்கள் துவளுகின்றன..

நினைவுப்படுத்திப் பார்ப்பதற்குரிய
தொலைவை..
நீ
என்னிடமிருந்து பறித்து
ஆகாயத்தில் வீசிவிடுகிறாய்..

சிறிதளவே வளையும்
உன் புன்னகை முனையில்..
என் காதலுக்கான இடத்தை
அழகாய் குறிப்புணர்த்துகிறாய்

என் துக்கங்கள் எனது பாதையில்
பதியனிடப்படவில்லை..
அவை..
எங்கோ தூரக் காட்டுக்குள் தூவப்பட்டுவிட்டது..

ஒரு கலசத்தைப் போல
நீ என்னை ஏந்துகின்றாய்..
என் கை வளையல்களுக்குள்
உன் ஆட்காட்டி விரல் நுழைத்து உயர்த்துகிறாய்..

புருவம் வளைய
என்ன..? என்பதாகச் சிரிக்கிறாய்..

நான் தலையசைத்து..
உன் தோள்களில் சாய்ந்து கொண்டபோது..
பட்டாம்பூச்சிகளின்
வர்ணச் சிறகுகள்
என் நினைவுக்கு வந்தன..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜூன் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3006

குமிழ் மொட்டெனப் பூத்த பால் வீதி..!

*
விரும்பிக் கோர்த்துக் கொண்ட
விரல்களுக்குள்
நசுங்கும் ரேகைக் கரையில்..

குமிழ் மொட்டெனப் பூத்த
வியர்வைத் துளியில்
மிதக்கிறது..

ஒரு
பால் வீதி..!

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜூன் - 13 - 2010 )

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31006131&format=html

காதலின் படிமப் பாளம்..

*
ஒரு முதல் பார்வையில்
சிக்கிவிடாமல்
கொஞ்சம் காலதாமதத்தோடு
வந்தடைகிறது என்னை

தனிமையின் அடுக்குகளை
புரட்டிக் கொண்டிருந்த
இருள் கவியும் மாலைப் பொழுதில்
வியர்வையின் மினுக்கலோடு
பூக்கிறது என்னிடம்

தட்டப்படும் கதவுக்கு வெளியே
யாருமற்ற ஏகாந்தத்தில்
ஒளிப்புள்ளியாய்
நின்று ஏங்கும் காதலுக்காய்

இறுகியப் படிமப் பாளமொன்று
உருகி வெளியேறுகிறது
என்
இதயத்தின் வெப்பத்தால்..

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஜூன் - 24 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=9750&Itemid=139

நினைவின் மேசை..

*
நினைவின் மேசையில்
அடுக்கி வைத்திருக்கும்
உன் ஞாபகக் குறிப்புகளை
அவசரமாய்
புரட்டிப் பார்த்த காற்று

ஜன்னல் தாண்டி
மரக்கிளையில் உட்கார்ந்திருக்கும்
காகத்தின் கழுத்தில்
சாம்பல் நிற மென்மயிரை
உரசிப் போகிறது..

வேறெங்கோ போய்
யாரையோ அழைக்க..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஜூன் - 18 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=9640&Itemid=139

நிறமிழக்கும் பிளாஸ்டிக் பூக்களின் இதழ்கள்..

*
வீட்டுக்குள் நுழையும் வரை
மிச்சமிருந்த மௌனம்
ஒரு கண்ணாடிக் குவளையைப் போல்
பாதமருகே விழுந்து நொறுங்கியது

ஜன்னல் திரைச்சீலை அசைத்து
எட்டிப் பார்த்த காற்று
சொல்வதற்கு ஏதுமில்லையென
திரும்பிப் போயிற்று

மேசை மீதிருந்த
அலங்காரப் பூச்சாடிக்குள்
செருகிவைத்திருந்த
பிளாஸ்டிக் பூக்களின் இதழ்கள்
நிறமிழந்து மௌனிக்கின்றன
ஒவ்வொரு முறையும்
என் கோபத்தின் உயரம் கண்டு..

நீ
சுலபமாக சொல்லிவிடுகிறாய்
நம்மிருவருக்கும்
இனி
ஒத்து வராதென்று..

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஜூன் - 17 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=9629&Itemid=139

வழித்துணைக்கு கொஞ்சம் மின்மினிகள்..

*
மௌனத்தின்
முணுமுணுப்பில்
நட்சத்திரங்கள் மின்னுவதை
கதைப் புனைகிறாள் சிறுமி..

குளிர்ந்த துரோகம் ஒன்று
வட்டமிட்டு ஒளிரும்
சிறிய வெப்பம் தான்
நிலவு
என்கிறேன்..

திக்கற்று இருண்டிருக்கும் பாதையில்
பயணிக்க..

வழித்துணைக்கு
கொஞ்சம்
மின்மினிகள் பிடித்துத் தருகிறாள்..

இப்போது
மௌனத்தின் முணுமுணுப்பில்
நட்சத்திரங்கள்
மின்னுகின்றன..!

****

மெட்ரோ கவிதைகள் - 72

*
பள்ளிக்கூட
நுழைவாயிலில் நின்றபடி
கண்ணீர் மல்க..

சொல்லுவதற்கோ
வேண்டுகோள் வைக்கவோ
வார்த்தைகள் இருந்தும்..

உதடு மடித்து
அழுகையைக் கட்டுப்படுத்தி..

கையசைத்து
' டாட்டா ' சொல்லி..

மெதுவாய் திரும்பி நடக்கிறான்
மகன்..

எனக்கும்
அவனுக்குமான விடுமுறையை
விழுங்கி ஏப்பம் விட்டு..

வாய்ப் பிளந்து காத்திருக்கிறது
கல்வி என்னும்
துருப்பிடித்த கதவு..!

****

மெட்ரோ கவிதைகள் - 71

*
பிளாட்பாரத்தில்
யாருமற்றுக் காத்திருக்கும்
குடி நீர் கேனின்
கழுத்து வளைவை..

சுற்றி சுற்றி வருகிறது
ஒரு கட்டெறும்பு..

நீரின் மீது நடக்க முடிந்த
அதிசயத்தையும்
அதைப் பருகி தாகம் தீர்ப்பதற்கான
வாசலைத் தேடும்
ஆயாசத்தையும்..

ஏகக் கணத்தில் எதிர்க் கொள்கிறது

வெயில் காயும்
இந்த நகரத்தின்

நடுப் பகல்..!

****

சில்லிட்ட நீரின் வெண்ணிற ஆவிகள்..

*
பாறைகள் அடர்ந்த
வனப் பாதையில்
ஓடும்
நதியைப் போல்
கொப்பளிக்கிறது உணர்வு

இறுதியிலோ
இடையிலோ
தேங்கும்
குளிர்ந்த ஏரியின் மீது

அலைந்தபடி பரவும்
சில்லிட்ட நீரின்
வெண்ணிற ஆவிகளை ஒத்திருந்தது

உன் மீதான
எடுக்கப்படாத ஒரு தீர்மானம்..!

****

நாட்களின் தெருவில் கிழிப்படும் காலங்கள்..

*
அவன்
காற்றை விரட்டிக் கொண்டு
ஓடுகிறான்

ஓரிடத்தில்
அதிர்ச்சியோடு நின்ற வேகத்தில்
திரும்பி ஓடி வருகிறான்..

ஓடுவதும் திரும்புவதுமான
நாட்களின் தெருவில்
காலங்கள் கிழிகின்றன
நிமிடங்கள் பறக்கின்றன..

ஆனாலும்..

அவன்
காற்றை விரட்டிக் கொண்டு
ஓடுகிறான்..!

****

சதுரமென்று ஒரு வட்டம்..!

*
மூலைக்கு ஒன்று என
அறைந்து வைக்கிறாய்
ஒவ்வொரு வார்த்தைகளையும்

ஒரு சட்டகத்துக்குள்
குறுகவேண்டிய
நம் இரவின் ஈர உரையாடல்

விடியும் தருணத்தில்
சுழலத் தொடங்குகிறது
மையமிட்டு குத்தி நிற்கும்
பார்வையின் ஆழத்தில்

****

குரல்வளையிலிருந்து கிளம்பும் ஒற்றைக் கேவல் ஒலி..

*
அடர்ந்த இருளின் தனிமையில்
மிகக் கொஞ்சமான வெளிச்சத்தை
விரல்கள் தேடுகின்றன

எத்திசையிலிருந்தாவது
கதவுகள் திறக்க வேண்டும்

துர் கனவின் கூரையிலிருந்து
காரைப்பெயர்ந்து உதிர்கின்றன
விருப்பமற்ற காட்சிகள்

நிதானமின்றி நிறைவேற்றப்படும்
மரணக் கட்டளைகளை..
குரல்வளையிலிருந்து
வெடித்துக் கிளம்பும்

ஒற்றைக் கேவல் ஒலி..

நிராகரித்தபடி திறந்துவைக்கிறது..
புதிய கதவுகளை..

****

தனித்திருப்பதாக புலம்புகின்றன ஒற்றெழுத்துக்கள்..

*
எப்போதும் தனித்திருப்பதாக
புலம்புகின்றன
ஒற்றெழுத்துக்கள்

துணை சேர்க்கும் சொற்களோடு
இணைந்து
மறு சொல்லை
ஓர் உடன்படிக்கைக்கு
பணிய வைக்கும்
ஒப்பந்த மேஜையாகவும்

அதன் மீது
தாகம் தீர்க்க நிற்கும்
தண்ணீர் பாட்டில் போல
காத்திருக்கவும்
செய்கின்றன

ஒற்றை எழுத்துக்கள்..!

****

மஞ்சள் மெழுகும் வெயில்..

*
ஜன்னல் கண்ணாடியூடே
நுழையும்
மிதமான வெயில்

படுக்கை முழுதும்
மஞ்சள் மெழுகி

விரிப்பின்
மடிப்புகளுக்குக் கீழே
நெளியும் நிழல்களோடு
நிகழ்த்துகிறது

நேற்றிரவுப் பற்றிய
உரையாடலை..!

****

தயங்காத வாசல் மிதியடி..

*
வாசல் மிதியடியில்
எழுதப்பட்டிருக்கும்
'நல்வரவு' -

யாரையும் வரவேற்கத்
தயங்குவதில்லை..

மரணம் நிகழ்ந்துவிட்ட
இவ்வீட்டின்
அகால வேளையில்

யாரையும்..!

****

குறுவாளின் கைப்பிடிக்குள்..

*
குறுவாளின்
கைப்பிடிக்குள்
நுழைந்து வெளியேறும் விரல்கள்

துரோகக் கூர்மையில்
உயிர்த் துளைக்கும்
வேகத்தில்

உறைக்குள் மறைகின்றன..!

****

மௌனப் பந்தயம்..

*
மரணத்தின் பந்தலில்
மௌனத்தைப்
பந்தயம் வைக்கச் சொல்லி
ஒரு
சூதாட்டம் நடக்கிறது

பகடைகளாக உருட்டப்பட
காத்திருக்கின்றன..

சில வாக்குறுதிகளும்
சில நிராகரிப்புகளும்

****

பார்வையின் ஈரக் காட்சி..

*
பருவம் ததும்பும்
பார்வையின்
ஈரக்
காட்சி மீது..

குளிர்ந்து
வழிகிறது..

காதல் துளிகள்..!

****

தாகப் பறவையின் சிறகுகள்..

*
தவித்த வாயிலிருந்து
பறக்கும்
தாகத்தை..

விருந்தோம்பி பொழியும்
மழை..

ஈரமாக்கி
சிறகைக் கனக்கிறது..!

****

நாவின் கதவு..!

*
நாவின் கதவுகளை
அடைத்து விட்டு
சப்தமிட்டுக் கொண்டிருக்கிறது
மௌனம்..

வெளியே
யாருக்கும் கேட்பதில்லை..!

****

வாசித்தபடி நகரும் விரல் நுனி..!

*
கவிதைக்குள்
இழைந்தோடும்
இசையின் நரம்பை..

வாசித்தபடி நகரும்
விரல் நுனி..

மீட்டிப் பார்க்கிறது
ரகசியமாய்..!

****

வாழ்வின் சூது..!

*
என்
வாழ்வின் சூதில்..

எனக்கு
விழாமலே போன
தாயம்..

நீ..!

****

வலி வலியென..

*
அடிவயிற்றைப்
பிசைந்து

பின்
முட்டுகிறது

வலி வலியென
நிறைய
குருதி..!

****

உனக்கும் எனக்குமான இடைவெளியில்..

*
அசந்தர்ப்ப
நிழல் நடுங்கும் தனிமையில்

உனக்கும் எனக்குமான
இடைவெளியில்

கொஞ்சம் வெளிச்சத்தில்
எரிகிறது
ஓர் இரவு..!

****

புரையோடிய புண்..

*
புரையோடிய புண்ணின்
நின ஒழுகலை
நக்கும்
ஈயைப் போல

துரோகத்துக்குப் பின்

எதிர்படுகிறது
உன்
சிரிப்பு..

****

புன்னகையின் வளைவில்..

*
புன்னகையின்
வளைவில்
முந்தாதே..

கொஞ்சம் பொறு

ஒரு
சிக்னல் வரும்..!

****

இழி..!

*
மரணத்தின்
குறுக்குப் பாதையில்
குந்தியிருக்கிறது

கை கால் முளைக்காத
ஒரு
வாழ்க்கை..!

****

சிறு சலனத்தோடு..

*
'அபாயம்' - என்றொரு
அறிவிப்பை

நட்டு வைக்கும்
என்
கனவில்

சிறு சலனத்தோடு
நுழைந்துவிடுகிறாய்..!

****

மூச்சிரைக்கும் என் பாடல்கள்..

*

புதிய வடிவங்கொண்டு
மூச்சிரைக்கும்
என் பாடல்களை

பாடத் தூண்டிப் பரிந்துரைக்கிறது

உன் மௌனம்
உன் புன்னகை
உன் ஏளனம்

***

வார்த்தைகள் நிரப்பி..

*
வெறுப்புத்
துப்பாக்கியில்
வார்த்தைகள் நிரப்பி வெடித்தாய்

என்
எலும்புகள் துளைப்பட்டு
இதயம் பிய்ந்தது..!

****

நிறைவேறாத ஏக்கப் படிமங்கள்..

*

நினைவின் வெப்பத்தில்
கண் மயங்கும் பின்னிரவு நிழலில்
சுருள்கிறது
நிறைவேறாத ஏக்கப் படிமங்கள்

விடியலில்
காத்திருக்கிறது
கவிதையோ
அல்லது
அதைப் போல
வேறொன்றோ..!

****