திங்கள், மே 31, 2010

சொன்னதையே சொல்லிக் கொண்டிரு..

*
சொன்னதையே சொல்லிக் கொண்டிரு
என்கிறாய்
எல்லா சந்திப்பிலும்

இதுவரை சொன்னதை
நான் சொல்லிக் கொண்டே இருந்ததை
நீ கேட்டதில்லை என்பதை
ஒப்புக் கொள்ள மறுக்கிறாய்

முன்னமே தெரியும்
என்பதான வாதத்தை முன் வைக்கிறாய்
அந்த வாதம்
ஏற்கனவே விவாதிக்கப்பட்டவை

இல்லை என்கிறாய்

புதிய கோணத்தில் புதிர் முடிச்சுகள்
உட்சிக்கலோடு புதிப்பிக்கப்பட்டிருப்பதாக
நம்பச் சொல்லுகிறாய்

எழுதியத் தீர்ப்புகளை கிழித்துவிட்டு
வந்து நிற்கிறாய்
ஆதாரக் கோப்புகளின் மட்கிய ஏடுகளை
நினைவின் நூல் கொண்டு கோர்த்து நீட்டுகிறாய்

கை நீட்டிப் பெற்றுக் கொள்வதற்குள்
பின்னிழுத்துக் கொள்கிறாய்

திரும்பி நடக்கிறாய்

மறுநாள் வந்து நின்று
சொன்னதையே சொல்லிக் கொண்டிரு
என்று மீண்டும் தொடங்குகிறாய்
நேற்றைப் போலவே..!

****

நிராயுதபாணி..!

*
என்
ஒவ்வொரு ஆயுதங்களையும்
நீ பரிசாக யாசித்துப்
பெற்றுக் கொண்டாய்

பின்னொரு காலை
ஒரு போர்க்களத்தை
அறிவிப்பு செய்தாய்

துரோகக் கடிவாளம் பூட்டிய
மனக் குதிரையில்
விரைந்து வருகிறாய்

நின்று கொண்டிருக்கிறேன்
உன்னை எதிர்பார்த்துத்
தனியனாய்..

கையில்
ஒற்றைக் கேடயத்துடன்..!

****

தீர்ந்துவிடப் போகும் உலகத்தின் மீது..

*
அவள்
தன் கனவுகளை மொழிப்பெயர்க்கிறாள்
ஒவ்வொரு நாள் காலையும்
புதிய வர்ணங்களில்..

அவைகளை
தன் வார்த்தைகள் மீது பூசுகிறாள்

நதியின் சலசலப்பு ஓசையை
அவளால் சேர்க்க முடிகிறது

தேனடைகளின் இனிப்பை

மலைச்சரிவில் உருளும்
சரளைக் கற்களின் சப்தங்களை

உடையும் சருகுகளின் இசையை

நறுமணம் கமழும் மலர்களின்
இதழ் முனை வளைவுகளை

பனித்துளி வழிந்திறங்கும்
அகன்ற இலை நரம்புகளின் பச்சை நிறத்தை

எல்லாவற்றையும்..

காற்றில் விரல் பிடிக்கும் அபிநயங்களுடன்
கண்கள் அகற்றி..

தீர்ந்துவிடப் போகும்
இந்த உலகத்தின் மீது
அவசரமாய் மொழிப்பெயர்க்கிறாள்
ஒவ்வொரு நாள் காலையும்

தன் கனவுப் பை நிரம்பி வழியும்
இரவின் நிழல் தொட்டு..

****

தேவதைகள் விட்டுச் செல்லும் சிறகுகள்..

*
தேவதைக் கதைகளில் வரும்
தேவதைகள்
கதை முடியும் முன்
விட்டுச் செல்கின்றன
தம்
சிறகுகளை..

அதன் வர்ணச் சாயல் பூசிப்
பூக்கும் சொற்கள்
மகரந்தங்களைச் சூழ் கொண்டு

துயரங்கள் நீங்கக் கமழ்கின்றன
நறுமணங்களாய்..!

****

நிரந்தரமாய் தங்கிவிட்ட இருள்..

*
எப்படியும் சொல்லிவிட வேண்டும்
என்னும் தீர்மானம்
பலமுறை வந்து போவது உண்டு
ஆனாலும் நீ பறித்துவிடும் பூக்களில்
ரத்தம் துளிர்க்கிறது எப்போதும்

ஆறுதல் என்று எதை சொல்ல சொல்லுகிறாய் !
என்னோடு நிரந்தரமாய் தங்கி விட்ட இருளையா?

உடன்படுதல் உனக்கு சம்மதமில்லை
ஏற்றுக்கொள்ளுதல் எனக்கு ஒத்துப்போவதில்லை

நம்
இருமுனைகளின் கூர்மையிலும்
ரத்தமும் சதையுமாய் ஒரு துரோகம் வளர்கிறது

அதன் மாம்ச வேட்டைக்குரிய
மிருகங்களென மீசைத் துடிக்கக்
காத்திருக்கிறோம் நீயும் நானும்..!

எப்படியும் சொல்லிவிடவேண்டும்
என்னும் தீர்மானம்
மனதுக்குள் வந்து போவதுண்டு

ஆனாலும்
நீ பறித்துவிடும் பூக்களில்
ரத்தம் துளிர்க்கிறது எப்போதும்..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மே - 31 - 2010 ]

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2978

விஷம் மிளிர்தல்..

*
சர்ப்பப் பகலொன்றின்
பிளவுப்பட்ட நாக்கில்..

விஷம் மிளிரும்
பார்வைத் தீட்டி
நைச்சியமாய் உளறுகிறாய்..

நான்
நம்பும்படியான
ஒரு பொய்யை..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மே - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2954

கை நிறைய சொற்கள்..

*
தவளையின்
கீழ்த் தாடை உப்பலில்
வரிகளிட்டு வழிகிறது
ஒரு
கவிதைக்கான
பிசுபிசுத்த படிமம்

விரல் சுட்டித் தொட யத்தனித்த
கணத்தில்..
அது தன் நாவை நீட்டித் துப்பியது
ஒரு உவமையை

கை நிறைய சொற்களைக் கொண்டு
உன் உதட்டில் பூசிவிட
வாய்ப்புகள் துளிர்க்காத
பசலை வனத்தில்
சலசலத்து நகரும் நதிக் குமிழுக்குள்
அடைத்து அனுப்புகிறேன்..
அள்ளிப் பருகிக் கொள்..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மே - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2954

வேட்டையின் ஊற்றுக்கண்

*
அறையெங்கும் பெருகும்
வெப்ப மூச்சின் ஊற்றுக்கண்ணிலிருந்து
வழிகிறது காத்திருப்பின் பசி

சிறகு கோதி காத்திருக்கும்
மனப்பறவையின் விழிகள்
நினைவின் அடுக்குகளை ஊடுருவித் தவிக்கின்றன

மாம்சம் புசிக்கும் பறவையின்
அலகில்
மிருகத்தின் சுவாசம் வியர்க்கிறது

வேட்டைக்கு நாணிழுக்கும் விரல்கள்
துடிப்போடு குறி வைக்கிறது
கவனத்துக்குள் அகப்பட மறுக்கும்
பொழுதுகளை

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மே - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2892

தற்கொலையின் கோட்டுச் சித்திரம்..

*
தற்கொலையின் வடிவங்கள் விசித்திரமானவை
அவை ஒரு நம்பிக்கையை
கோட்டுச் சித்திரமாய்
வரைந்து பார்க்கின்றன முதலில்

முழுமை பெறாத சித்திரங்களின்
நிராகரிப்பில் உருவாகிறது முதல் எதிர்ப்பு

மௌனக் கணங்களை அமைதியிழக்கச் செய்யும்
இரைச்சலை ஜன்னல் திறந்து
அனுமதிக்கின்றன

பிறகு அவற்றை ஒரு கதவைப் போல
அறைந்து சார்த்திவிடும் இறுக்கத்தை
மேற்கொள்கின்றன

கண்ணாடிக் குடுவையின் அடிப்பாகத்தில்
தேங்கிவிடும் சிறிதளவு தண்ணீரைப் போல
தற்கொலையின் வடிவங்கள்
மிகவும் விசித்திரமானவை

அவை தன் மீது
எந்தவொரு வர்ணங்களையும் பூசிக்கொள்ள
யாதொரு நிமிடத்தையும் அனுமதிப்பதில்லை

புரிதலின் விளிம்பு பிசிர்களை முடிச்சிட்டுப் பழக
அவை வெறுப்பின் விரல்கள் கொண்டு
யாவற்றையும் பின்னிவிடுகின்றன..

எங்கெங்கோ சிக்கலாகி நீர்த்துப்போன
நினைவுகளின் உள்முகங்களை மூர்க்கமாய்
மறுதலிக்கின்றன..

தற்கொலையின் வடிவங்கள் விசித்திரமானவை
அவை
நடந்தேறிய பிறகு தான் தம்மைக் கொஞ்சமாக
வெளிப்படுத்திக் கொள்கின்றன..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மே - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2865

பிரிதலின் பசலையை நெய்யும் மௌனக் கொடி..

*
உதடுகளைப் பூசிப் போகின்றன..
கனவில் பொழிந்த பனித்துளிகள்..
கை நிறைய மலர்க்கொத்துத் தருகிறாய்..
இரவின் வாசலில்...இசையின் பின்னணியில்

பார்வையின் பரவசத்தில்..
இதயத்தில் தூறுகிறது மழைச்சாரல்..
இலைக் குடை அகப்படா வனத்தில்..
தனித்து அலைகிறோம்..
நதிக்கரையோரம்

தென்றல் கசியும் மஞ்சள் வெயில் பொழுதை..
பென்சில் கொண்டு கிறுக்கிப் பார்க்கிறேன்..
அதில்..
கருப்பு வெள்ளையாய் விரிகிறது
உன் புன்னகை..

பிரிதலின் பசலையை
நெய்துக் கொண்டே இருக்கிறது..
மௌனக்கொடிச் சுற்றி மனது..!

****

நன்றி : ' வார்ப்பு ' இணைய இதழ் ( மே - 2 - 2010 )

http://www.vaarppu.com/view/2165/

இரவுகளின் சாவித்துவாரம்

*
வாசல்கள் திறந்திருக்கின்றன
பூட்டிச் செல்லும் தருணங்கள்
நம்மை வழிமறிப்பதில்லை..

இரவுகளின் சாவித்துவாரங்களில்
பகல்கள் எப்போதும்
ஒரு
கள்ளச் சாவியைப் போல் திணறுகின்றன

உறவுகளுக்கான ஒப்பந்தங்களை
பாதுகாக்கும் பொறுப்பை
கதவுகள் ஏற்றுக் கொள்கின்றன

ரகசியமென முடிவாகும்
நினைவுகளின் ஆவணக் குறிப்புகளை
கவனங்கள் கொண்டு கோர்க்கும்
கோப்புகளாக்குகிறோம்

மனமென்னும்
பிரமாண்ட கட்டிடத்தின் வாசலில்
வேலையற்ற வாட்ச்மேனைப் போல
நெடுங்காலமாய்
உட்கார்ந்திருக்கிறோம்..!

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் [ மே - 2 - 2010 ]

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31005024&format=html

பறிக்கப்பட்ட மலர்களின் கடவுளர்கள்

*
வாசித்துக் கொண்டிருந்த
புத்தகத்திலிருந்து
ஒரு
உரையாடல்..துண்டிக்கிறது என்னை..

கடவுளர் படங்களுக்கு
பூக்கள் வைக்கச் சொல்லி வேண்டுகிறாள்..
அது ஒரு உத்தரவு

சலிப்போடு
மக்ஸிம் கார்க்கியைக் கவிழ்த்து..

பறிக்கப்பட்ட மலர்களுக்காகவும்
பூக்களுக்காகவும்..
அஞ்சலி செலுத்த எழுந்து போகிறேன்..

அவளின்
பிரத்தியேகக் கண்ணாடி அலமாரிக்குள்
அடைப்பட்டு
காத்திருக்கும்
கடவுளர்களை நோக்கி..

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( மே - 25 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=8939&Itemid=139

பிரியத்தின் பாத நிழல்

*
பேச்சற்று வெளியேற நேர்ந்தது
இறுகிய உதடுகளின் இருண்மையை
தந்து நின்ற போது..

பசித்தலையும் சிந்தனைகளை அதட்டி
தாகம் தீர்க்க கொடுப்பதற்கு
கைவசம் வார்த்தைகள் இல்லை..

காரணங்களின் வேர்களைத் தேடுதல்
சாத்தியமற்ற நிழலின் ஆழம் போல
வெயில் வேறெங்கோ உயரத்தில் எரிகிறது..

தனிமை அறைக்கு திரும்புதல்
அர்த்தமிழந்த ஒளியை பொழியச் செய்கிறது
சிறுமையின் இருள் மூலைகளில்..

மென்மையாகத் தட்டப்படும் கதவுக்கு அப்பால்
ஒரு பிசாசையோ பூதத்தையோ
எதிர்பார்க்கிறது செவி..

மீண்டும் சில அவச் சொற்கள்
பூங்கொத்தாக நீட்டப்படலாம்
பரிசென வாங்கிக் கொள்ளும்படியான
உத்தரவாக..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( மே - 21 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=8829&Itemid=139

மௌனக் கணம்

*
உதடு பிதுங்க
விழி அகன்று..
நீர் கோர்த்துக் கொண்ட மௌனத்தில்..

கழுத்து 'டை' சுருட்டி..
வாய் பொத்திக் கொள்கிறாள்..

வீட்டுப் பாடம் எழுதாமல்
சற்று முன்
அடி வாங்கி நிற்கும் சிறுமி..

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( மே - 3 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=7854&Itemid=139

கை நழுவும் தருணங்களின் இழப்பு..

*
கை நழுவி விலகும் தருணங்களின்
வெப்பம்
தாங்க முடியாத துக்கத்தை
முதுகில் ஏற்றி
நடக்க விடாமல் இருத்துகிறது

பாதையின்
மழை ஈரச் சகதிப் போல

இழப்புகள்
நினைவுகளின் பாதங்களில்
படிந்து விடுகிறது செம்பழுப்பு நிறத்தில்

விசும்பல் ஒலியின் அலை நுணுக்கத்தில்
பதிவாகி சாகிறது
கை நழுவி விலகும்
தருணங்கள்..

****

கனவுகளின் உதிரிப் பாகங்கள்..!

*
திரும்பிய திசையெல்லாம்
கனவுகளின்
உதிரிப் பாகங்கள்

குனிந்து சேகரிக்கும்
குழந்தை மனம்
கண்டு கொள்கிறது
வர்ணங்களற்ற காட்சிகளை

உறைந்து பின் உடனே நெகிழும்
புன்னகைகளை

இசையொன்றின் துணுக்கும்
வாய்ப் பிளந்து கிடந்தது

சாம்பல் நிற நாணல்கள்
முனை உடைந்து கூர்மையாய்
மணலில் செருகிக் கிடந்தன

திரும்பிய திசையெல்லாம்
கனவுகளின்
உதிரிப் பாகங்கள்
சுமந்து கிடந்தன
சொல்லிவிட முடியாத
துயரத்தின் வர்ணத்தை..!

****

தனிமையில்..

*
எல்லா ஊர்களிலும்..
எல்லா ஊர்களை நோக்கியும்..

ரயிலை எதிர்பார்த்துத்
தனித்துக் கிடக்கின்றன

ரெட்டைத்
தண்டவாளங்கள்..!

****

வாழ்வெனும் குறைந்தபட்ச உத்தரவாதம்

*
மனிதர்கள் கூடுவதும்..
விலகுவதும்..

எதையோ விற்க.. எதையோ வாங்க..
எதையோ பேச.. எதையோ கேட்க..

எதையோ கைப்பற்ற.. எதனையோ இழக்க..
எதையோ வாதிக்க.. எதையோ மறுதலிக்க..

எதையோ மறக்க.. எதையோ நினைவுகூற
எதையோ தொலைக்க.. எதையோ தேட..

எதையோ வெற்றிக்கொள்ள.. எதையோ தோற்றுப்போக..
எதையோ கொண்டாட.. எதற்கோ துக்கப்பட..

எதையோ அனுமதிக்க.. எதையோ நிராகரிக்க..
எதற்கோ ஏங்க.. எதற்கோ மனமுடைய..

எங்கோ ஆர்ப்பரிக்க.. எங்கோ மெளனமாக..

மனிதர்கள் கூடுவதும்...விலகுவதும்..

வாழ்வெனும் குறைந்தபட்ச
உத்தரவாதத்தோடு
மிதவையிடும் சூட்சமத்தைக் கைப் பற்ற..

*****

காத்திருப்பின் மிச்சங்கள்..!

*
கால்களின் தாளம் நின்று விட்டது

இசையோடு வந்த ஒருவன்
போகும்போது
இசையைக் கொண்டு சென்றான்

காத்திருப்பின் மிச்சங்களென
கடித்துத் துப்பிய நகங்கள்
டேபிள் மீது
மின்விசிறிக் காற்றில்
ஆடிக் கொண்டிருக்கிறது..

தரப்பட்ட
குளிர்ந்த நீரில்
கண்ணாடி டம்ளர்
அழுது ஓய்கிறது..

இனி
நீ
வரமாட்டாய்..!

****

சுவர்க் குறிப்புகள்

*
மதிற்சுவர் கற்களில்
மழை விட்ட ஈரம்

அடுத்த மழைக்கும் முன்
அவசரமாய்..

கிடைத்த உணவோடு
விரைகிறது
ஒரு
எறும்பு..!

****

அடர் மௌனங்களிலிருந்து கிளம்பும் தாக்குதல்கள்..

*
மறுப்பேதும் சொல்வதற்கில்லை
வாதத்தின் இறுதி நுனியில்
குரல் கம்ம
சொற்கள் தேய்ந்தன..

முதுகைத் துளைத்து நின்ற
கருத்தின் கூர்மை
இதயத்தின் பின்கதவு வரை
தொட்டு நின்றது

எய்தவனின்
தோள் வலிமையை
ஒப்புக் கொள்ள நேர்ந்த நொடி..

அபாயங்களை புறக்கணித்து
எதிர்வாதக் கவசங்களை
நழுவி விழச் செய்து..
உள்ளங்கை விரித்து
திரும்பியத் தருணம்..

அவன் பார்வையின்
மழுங்கலை

அருவருப்புப் புழு நெளிதலோடு
ஒப்பிடத் தோன்றியது

சந்தர்ப்பக் களங்கள்
வெட்டவெளியாய்
இருக்கும்பட்சத்தில்..

தாக்குதல்கள்
அடர் மௌனங்களிலிருந்து தான்
கிளம்புகின்றன

மறுப்பேதும் சொல்வதற்கில்லை..
வாதத்தின் இறுதி நுனியில்
குரல் கம்ம..
சொற்கள் தேய்கின்றன..

இருந்தாலும்
மார்பு இருக்க..

முதுகை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்
வீழ்த்தொழிக்க..?!

****

மரணத்தின் ஆட்காட்டி விரலில்..

*
என் மரணத்தின்
ஆட்காட்டி விரலில்

திடீரென முளைத்துவிட்ட
மச்சம் தான்..

உன் புன்னகை..!

****

எனக்குள் நீ எரியக் காத்திருக்கிறாய்..

*
மெழுகுக் குழலுக்குள்
ஊடுருவிக் கிடக்கும்
திரியைப் போல்
எனக்குள்
நீ..
எரியக் காத்திருக்கிறாய்..

உருகுதல்
என்
இதயத்தின் வேலை..!

****

!

*
ஒரு
முற்றுப்புள்ளியின்
சிறிய வட்டத்துக்கு மேல்

ஒற்றைக் கால் தவத்தில்
நின்று கொண்டேயிருக்கிறது

நீ
சொல்லாமல் விட்டுச் சென்ற
எனக்கான வார்த்தை ..!

****

தூர்ந்து விடுவதில்..

*
தூர்ந்து விடுவதில்
குமிழென உடைகிறது

என்
காதல் புனல்..!

***

நிறப் பிரிகை..

*
நூற்றாண்டுக் காலம்
நகராமல்
துருவேறி
உப்புப் பூத்து..

நிறம் இறுகி விட்டது

உன் மௌனம்..!

****

மலர்தல்

*
மலர்தல் குறித்த
மகரந்த நினைவில்
நறுமணம் கமழ..

நள்ளிரவு நிலவின் கிரணத்தில்..

கிணற்றடியில்
காதல் துவைக்கிறாய்..!

****

எப்போதும்..

*
ஒத்துப்போவதில்லை
எப்போதும்
உன் வாதம்

நம்புதலின் விளிம்பில்..
கவனப்பிசகில்
உருவாகும் இடறல்

நீ..!

****

முட்களின் தரிசனத்தில் பூக்களின் இதழ்கள்..

*
இசையொன்று இழைகின்ற
உன் மௌனத்தில்

வலி கொண்டு முட்கள் முளைக்கும்
தரிசனத்தில்
பூக்களின் இதழ்களில்
நிற மாற்றம்..

நீயுன்
விரல் நகர்த்தி
இன்னும் கோர்த்துக் கொண்டிருக்கிறாய்
சொற்களை..!

****

புன்னகை விளிம்பில்..

*
இடை வளைத்து
அருகிழுத்த
கணத்தில்..

மூச்சின்
அனல் பட்டு
புன்னகை விளிம்பில்
வெப்பமேறியது

முத்தம்..!

****

நந்தவனத்து ஊற்று..

*
என்
நந்தவனத்தின்
ரகசிய ஊற்று நீ..

எப்போதும்
காதருகே
சலசலத்துக் கொண்டிருக்கிறாய்..!

****

முணுமுணுக்கிறாய் ஒரு முத்தத்தை..

*
திரும்பிக் கொண்டு
முணுமுணுக்கிறாய் ஒரு முத்தத்தை

காற்றைப் புணர்ந்து
நழுவுகிறது
உன்
புன்னகை..!

****

வளையல் ஒலி

*
வளையல் ஒலியில்
காமம் சிரித்து
சிணுங்குகிறது

அதை

புன்னகையோடு
ஒப்பிட்டு
புரியாத பகல்
எரிகிறது..!

****

கானல் நீரின்..

*
கானல் நீரின்
துடிப்பலையில்

மடிந்து புரள்கிறது

ஏகாந்த வெயிலின்
தனிமை நிழல்..!

****

ங்ங்ங்கா...!

*
' ங்ங்ங்கா...! ' - என்று
தன்
முதல் கவிதையை
வாசித்தது குழந்தை

பேனாவை
மூடி வைத்துவிட்டான்
கவிஞன்..!

****

வந்து சேர்பவை..

*
வந்து விடுவதாக
வந்து சேர்ந்த கடிதத்தை
எத்தனை முறை வாசித்தாலும்

' முத்தங்களுடன்..'

என்று முடியும் கடைசி வரியில்
அழுது விடுகிறேன்..!

****

ஒரு மரணத்தின் மதியவேளை...

*
ஒரு மரணத்தின் மதியவேளை
மிகவும் வெப்பம் மிகுந்ததாக பாசாங்கு செய்கிறது

வீசும் சிறு குளிர் காற்றையும்
உஷ்ணப்படுத்தி ஏமாற்றுகிறது

உணவு செரிமானத்தை அனுமதிக்க மறுக்கிறது
உணவையே புறந்தள்ளுகிறது

எதிர் கொள்ளும் முகங்களில்
துயரத்தின் நிழலை வழிய விடுகிறது

ஒரு
மரணத்தின் மதியவேளை

தொலைதூரங்களுக்கு தகவலுனுப்ப
துயரத்தை சுலபமாக்குகிறது
தன் மரணச் செய்தியைத் தானே துரிதப்படுத்துகிறது

இளைப்பாறுதலை மறுதலிக்கிறது
நிழல் தராமல் ஒளிந்து கொள்கிறது

பலவகை மலர்களின் நறுமணங்களுக்காக
மௌனமாய்க் காத்திருக்கும் பொருட்டு

மரணத்தின் மதிய வேளை..

ஆழ்ந்த துயரம் கூர்ந்த
தனிமையை
எப்போதும் நாடுகிறது..!

****

ஒற்றையடிப் பாதையில் பூத்திருக்கும் குரல்கள்..!

*
ஒற்றையடிப் பாதையின்
இருமருங்கிலும்
குரல்கள் பூத்திருக்கின்றன

பல
தன் உற்சாகங்களை சிறகுப் பொருத்தி
ரசிக்கின்றன
தன் துயரங்களை சலனமற்ற குளத்தின்
விளிம்பாகுகின்றன

சில
தன் அவலங்களைப்
பட்டுப் போன மரத்தின் பொந்தில்
இருள் பூசி மௌனிக்கின்றன

தன் தயக்கங்களை
அதன் முனகல்களை
கவனிப்பற்ற நாணலில் வழிந்திறங்கும்
பனித்துளியென
மென்மையாக ஊதுகின்றன

ஒற்றையடிப் பாதையின்
இருமருங்கிலும் பூத்திருக்கும்
குரல்களில்

சில..

தன் வெட்கத்தை மொத்தமாய்
உன்னிடம்
தந்துவிட்டதாய்
புகார் சொல்கின்றன

அட..!

உன் உதடுகளின்
இரு மருங்கிலும்

கொத்துக் கொத்தாய்
வெட்கமே பூத்திருக்கின்றன..!

****

என் அடையாளங்கள்..

*
என்
அடையாளங்களை அழித்து விடுவது
உனக்கு சுலபமாயில்லை

வாழ்த்து அட்டை
கீ-செயின்
டைப் செய்யப்பட்ட காதல் கடிதம்
'வித்-லவ்' என்றெழுதிப் பரிசளித்த
கவிதைப் புத்தகம்

முதல் சினிமா
முதல் தொடுகை
முதல் முத்தம்

நீளும் பட்டியல் தோறும்
அடைத்துக் கொண்டு துருத்தும்
என்
அடையாளங்களை அழித்துவிடுவது
அத்தனை சுலபமில்லை
உனக்கு..!

****

கோர்த்துத் தொங்கும் மணிச் சத்தம்..!

*
வண்டி மாட்டின்
கொம்பு நுனியில்

கோர்த்துத் தொங்கும்
மணிச் சத்தம்..

நெஞ்சை அதிரச் செய்கிறது

நீ
ஊருக்குப்
புறப்பட்டு விட்டாய்..!

****

கனவுப் பூச்சு..!

*
உன்
ஏக்கப் பெருமூச்சால்

நீ
கனவுப் பூசிய
ஜன்னல் கம்பிகள்
துருப்பிடித்துக்
கறுத்து விட்டன

****

காகத்தின் குரல்..

*
அலகு உடைந்த
ஒரு
காகத்தின் குரல்

பசியை மீறி

தன்
பிரியத்தைச் சொல்வதாய்
இருக்கிறது..!

****

அஞ்சுப் புள்ளிப் பாதச் சுவடு..!

*
விடிந்த போது
என்
மேஜையில் விரிந்து கிடந்த
டைரியின்
ஒரு பக்கத்தில்

பூனையொன்றின்
அஞ்சுப் புள்ளிப் பாதச்சுவடு

பழுப்பு நிறத்தில்
பதிந்திருந்தது

அப்பக்கத்திற்கு
' பூனை ' - என்று
தலைப்பிட்டாள்
என்
மகள்..!

****

விரலில் ஏந்தி..பற்களால் நெருடி..

*
செயினில் கோர்த்திருக்கும்
கடுகு வடிவ
தங்க உருளைகளை

விரலில் ஏந்தி
பற்களால் நெருடியபடி

எங்கோ ஜன்னலுக்கு வெளியே
பார்த்துக் கொண்டே
நீ
சிந்தும் புன்னகையால்

ஆயிரம் மைல்களுக்கு அப்பால்
இந்தப் பஸ்சிலிருந்து
என்னைத் தூக்கியடிக்கிறாய்..!

****

பெயர் மறந்து விடல்..

*
புதிதாய் சந்திக்கும்
பாவனைக் கொண்டே
எதிர்கொள்கிறாய்

ஒவ்வொரு முறையும்
பெயர் மறந்து விடல்
நம்மை
பரஸ்பரம்
இம்சிப்பதாகவே

நம்
உதடுகள் பிரிய மறுக்கின்றன

அவை
புன்னகைப்பதாக நம்புகின்றன..!

****

மரணத்தின் பாதம்..!

*
மௌனச் சகதிப் பூசி
மரணத்தின் பாதம்

மனக் காட்டுக்குள்
நுழைகிறது

சுவடுகளற்று
மூர்க்கமாய்..!

****

காதல்..!

*
அவள்
கன்னங்களில்
புது ரத்தம் பாய்கிறது

வெட்கத்தைப் பால் காய்ச்சி
வாசல் திறந்து வைக்கிறது

காதல்..!

****

செம்பழுப்புப் புழுதிக் காற்று..!

*
நீ
பறப்பதற்கு
சிறகு விரிக்கும்போதேல்லாம்

உன்
வானத்தின்
வெளிர் மஞ்சள் நிறத்தில்

செம்பழுப்புப் புழுதிக்
காற்றொன்று
வீசிச் செல்கிறது
வெப்பப் பெருமூச்சை..!

****

இன்னும் பிரயோகிக்காத மந்திரம்..

*
மீறுதல் குறித்த
உன் சந்தேகங்களுக்கு
முகாந்திரமாய்
ஒரு ரகசிய முத்தத்தைக்
கொடுக்க வேண்டியதாயிற்று

மறுப்போ
சூசகமானப் புறக்கனிப்போ நிகழவில்லை
உன்னிடம்

யாசித்த உதடுகளின் வளைவில்
இன்னும் பிரயோகிக்காத
மந்திரம் போல்
அது
உறைந்துவிட்டது

தயக்கத் தாழ்கள் நெகிழ்வதை
விலகித் துடித்த விரல்கள் தெரிவித்தன

மின்னலை மினுக்கும்
இமைச் சிமிழில்
குங்குமச் சிவப்பொன்று
பொங்கி வழிந்தது

பொடித்துப் பூத்த வியர்வைத் துளிகளில்
மெழுகி நழுவுகிறது
கவனிக்கத் தவறும் வாய்ப்புள்ள
ஒரு
நுட்பமான வெட்கம்..!

****

வசப்பட மறுக்கும் சொற்கள்

*
எழுதிக் கொண்டிருக்கும்போதே
வெளியேற நேர்கிறது

துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை
ஒரு கவிதை
சபித்துவிட முடியாது

இருள் பிரதேசம் வாய்ப்பாகிவிடுகிறது
வசப்பட மறுத்த சொற்களுக்கு

அவை
கால்களைக் கடித்துவிட்டு
மேஜைக்கடியிலோ
கட்டிலுக்கு கீழோ
ஸ்டூலில் கழற்றிப் போட்டிருக்கும்
உள்ளாடைக்குள்ளோ ஒளிந்து கொள்கிறது

நம்பிக்கை அறுந்து
இழை இழையாய்த் தொங்கும்
இந்த இரவின் ஈரத்தில்
எழுதிக் கொண்டிருக்கும்போதே
வெளியேற நேர்வது

வேறொரு வாசலுக்குள்
நுழைவதற்கான இருண்மைப் புள்ளி..!

****

நன்றி : ' உன்னதம் ' மாத இதழ் - ( மே - 2010 )

திசையின் வர்ணம்

*
நிர்ப்பந்தங்களோ நிபந்தனைகளோ
தீர்மானிப்பதில்லை நம் உரையாடலை

திடீர் பிரேக்கில்
தார்சாலையில் பத்தடி பொசுங்கி நிற்கும்
லாரி டயரைப் போல..
நடுவில்
ஸ்தம்பித்து விடுகிறது எப்போதும்

துருப்பிடித்த இரும்புக் குழாயின்
உச்சியிலிருந்து
வழிந்திறங்கும் மழைத்துளியை
ஒத்திருக்கிறது
நம் உரையாடலின் வாசம்

சுழித்தோடும் நகரத்துச் சாக்கடையின்
வர்ணத்தை
நம் வார்த்தைகள் பூசிக்கொள்வதில்
உரையாடலின்
கணுக்காலளவு போதுமானதாய் இருக்கிறது

அது
திரும்பி நிற்கும் திசையின் மர்மம்
யாராலும் கண்டுபிடிக்க முடியாமலிருக்க..

****

நன்றி : ' உன்னதம் ' மாத இதழ் - ( மே - 2010 )

யாருமற்ற எதிர் நாற்காலி

*
மது அருந்தும் வேளையில்
மிகு படிமத் தந்திரங்களோடு
சந்தேகமாய்
என்னை அணுகும் கவிதையை
சுலபமாய்த் தவிர்த்துவிடுகிறேன்

யாருமற்ற
எதிர் நாற்காலியோடு
தொடரும் என் உரையாடலுக்கு
தொட்டுக் கொள்ள
ஊறுகாய் தேவையாயிருக்கிறது

எனக்கு அதை
இந்த
உயர்ரக பார் சிப்பந்தியும் தருவதில்லை
தந்திரக் கவிதைகளும் தருவதில்லை

****

நிஜ முகங்களின் தசைகள்

*
எப்போதும்
ஒரு பாவனை அவசியமாகிறது
உத்தரவுகளைப் பெற்றுக் கொள்ளும்போதோ
கட்டளைகளை இடும்போதோ

சிக்கலான
ஒரு வாக்குவாதத்துக்குரிய குறிப்புகளை
பின் கையில் மறைத்தபடி தான்
எதிரியை
எதிர்கொள்ள நேர்கிறது மௌனமாய்

நிஜ முகங்களின் தசைகளில்
நின ஒழுகலென
எப்போதும்
வழிந்தபடியே இருக்கிறது
பொய்..

****

அசைவற்று நிற்கும் அந்தி நிழல்..

*
மரணத்தின் ஓலத்தை
தன்னுள் புதைத்துக் கொண்டு அவற்றை
சிறு சிறு உருண்டைகளென
வருவோர் போவோரிடமெல்லாம்
விநியோகம் செய்கிறது

அகாலப் பொழுது மெழுகி கரையும்
அந்தி நிழலில் அசைவற்று நிற்கிறது

கடப்பவர் நோக்கி
யாசிக்கும் கைகள் நடுங்குகின்றன

மரணத்தின் சிறு உருண்டைகள்
திடீரென்று சிறகு முளைத்து
நகரமெங்கும் தாழப் பறக்கின்றன

அவை
இறுதி மூச்சிழுக்கும்
தொண்டைக் குழிக்குள் நுழைந்து

ஒப்பாரி பாடிகளின்
குரல்வளையிலிருந்து புறப்படுகின்றன
மயானத்தின் சாம்பல் நிற பாதைகளை
காத்திரமாய் நுகர்ந்தபடி..

****