செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010

சதுரத்துக்குள் நெருக்கியடுக்கப்பட்ட வட்டங்கள்..

*
வேறொரு
சதுரத்துக்குள்
நெருக்கியடுக்கப்பட்ட வட்டங்களெனத் தான்
வரைந்து வைத்திருக்கிறேன்

நமக்குள்
நிகழ்ந்த கடைசி உரையாடலுக்குப் பின்..

அந்த இரவில்
உடைந்த
முக்கோணங்களை..

****

தயக்கங்கள்..

*
ஒப்பந்தங்கள்
கையெழுத்தாகிவிட்டன
பிறகென்ன..

ஒரு
குளிர்பானத்தோடு
கை குலுக்கிப் பிரிவதில்..

தயக்கங்கள் இருப்பதாக
மீண்டும்
ஏன்
தொடங்குகிறாய்

ஒரு
அபத்தத்தை..

****

எங்கிருந்து தொடங்குவது என்பதை..

*
சரி
ஒரு முடிவுக்கு வந்துவிடலாம்

ஆனால்..

மீண்டும்
எங்கிருந்து தொடங்குவது
என்பதை
மீண்டுமொருமுறை கேட்காதே

நொறுங்கி கிடக்கிறது
நம் உரையாடல்..

****

அரிதாரம்..

*
உன்
அமைதியின் அரிதாரம்
கலைத்துவிட மறுக்கிறது

நடந்து முடிந்த
நாடகத்தின்
அபத்த காட்சியொன்றை..!

****

கடக்க முடியா சுவர்..

*
கடக்க முடியா சுவரென
பெருங் கனவொன்று
குறுக்கே நின்றது..

அதை
இடித்துத் தகர்க்க
உன்னிடம்
ஒரு கடப்பாரைக் கேட்டேன்

நீ
இதுவரை
பார்த்து பார்த்து
வார்த்து வைத்திருந்த
உன் சேமிப்புக் கிடங்கிலிருந்து..

ஒரு
வசவு வார்த்தையை
உருவித் தந்தாய்...

எல்லாம் உடைந்தது..!

****

உனக்கான வரைப்படம்..

*
இந்த உலகின்
இந்த நகரின்
இந்த வாழ்வின்

யாதொரு பயங்கரங்களோ
கட்டவிழும் துயரங்களோ

எல்லாவற்றையும்
கொஞ்சம் ஏற்றுக் கொள்கிறாய்
கொஞ்சம் நிராகரித்துவிடுகிறாய்

உன் மெல்லிய
தொடர் மூச்சு சப்தத்தில்
இசைவோடு சுழல்வது
இந்த
அறையின்
மின்விசிறி மட்டுமே..!

தூங்கு..

தூங்கும்போது தானே..
உனக்கான
வரைப்படத்தை நீ வரைவதாக
இந்த
விஞ்ஞானம் சொல்லுகிறது..

எனவே தூங்கு..

கை நிறைய கவிதைகளோடு
நான் காத்திருக்கிறேன்..!

****

காத்திருக்கின்றன பொம்மைகள்..

*
தூக்கத்தில்
நீ
உதிர்க்கும் புன்னகைக்குள்
நுழைந்து கொள்ள

காத்திருக்கின்றன பொம்மைகள்..

சீக்கிரம்
வளர்ந்து விடு மகளே..

****

மெட்ரோ கவிதைகள் - 80

*
ஜன்னலோரம்
காற்றைக் கிழித்து எதிரில் கடக்கும்
மெட்ரோ ரயிலின்
ஹாரன் சப்தத்தில்..

நீ
அனுப்பிய
காதல் மெஸேஜ்
உடைந்து கிடக்கிறது

இந்த
கம்பார்ட்மென்ட்டில்..!

****

துயர் இரவின் புறவழிக் கதவு..

*
எங்கிருந்தெல்லாமோ
வந்து கொண்டிருக்கிறார்கள் தூதுவர்கள்..
என்
வறண்ட பகல்களின்
கதவுகளைத் திறந்தபடி..

இறுக்கிக் குலுக்கும் கரங்கள் வழியே
அழுந்தச் செய்கிறார்கள் துயரங்களை..

பின்
ஆறுதல்களைப் பரிசளித்துவிட்டு

வர்ணக் காகிதங்களென
வயதை வெட்டித் தருகிறார்கள்..

இனி
புதுப்பொலிவோடு இருக்கும்படி
பரிந்துரைக்கும் தூதுவர்கள்

என்
இரவின் புறவழிக் கதவைத் துளைத்து
வெளியேறுகிறார்கள்..

பிறகு
நட்சத்திரங்கள்
ஒவ்வொன்றாக அணைகின்றன..

****

அப்படியொன்று நடந்துவிட்டதற்கான..

*
துயரச் சாலைகளைக்
கடக்கும்போதெல்லாம்

இடறுகிறது..

அப்படியொன்று
நடந்துவிட்டதற்கான

சந்தர்ப்ப
கல்..!

****

இனி..

*
கூர்மை வார்த்தைகளின்
காது துளை வழியே
கோர்த்துவிடுகிறாய்
காதல் பார்வையை..

இனி..

இதயம்
கிழிவது பற்றி
கவலையில்லை..

****

குழந்தைகளின் கலர் க்ரேயான்கள்..

*
வீடுகளுக்கு இடையே
எழும்பிவிட்ட
மதில்களின் இருபுறமும்..

குழந்தைகளின்
கலர் க்ரேயான்கள்
வரைகின்றன..

பசுமைக்குரிய இலைகளும்
நெருப்புக்குரிய சூரியனும்
வெண்மைக்குரிய சமாதானமும்..!

****

நகர மறுக்கும் துயரங்களின் பாரம்..

*
சிதிலமுற்ற தேரென
நகர மறுக்கும்
துயரங்களின் பாரம்..

நினைவுச் சக்கரங்களின்
கனங்கொண்டு
மனதில் அழுந்த புதைந்து

உருண்டு வந்த
காலங்களின் சந்தர்ப்பங்களோடு
வெட்பத் தீ வீசும் செதில்களில் மட்குகிறது..

****

சொல்லாத சந்தர்ப்பங்கள் ததும்பும்..ரகசியப் பேழை..

*
மனங்கொத்தும்
பறவையொன்றின் அலகில் வியர்க்கிறது..

ரகசியப் பேழைகளில்
ததும்பும்
சொல்லாத சந்தர்ப்பங்களுக்குரிய

சொற்களின்
நறுமணம்..!

****

ஒப்புதல்..

*
மிக
அழகென புன்னகைக்க
ஒப்புதல் கோருகிறாள்

தினமும்
அங்கீகரிக்கிறது
ரசம் போன
செவ்வகக் கண்ணாடி..

****

திங்கள், ஆகஸ்ட் 30, 2010

அத்தனை எளிதாக இருப்பதில்லை..

*
அத்தனை எளிதாக இருந்துவிடவில்லை
கைக்குழந்தையின்
உள்ளங்கை ரேகை வரிகளை
கவிதைக்கென சுவீகரிப்பது

அத்தனை எளிதாக இருந்துவிடவில்லை

ஒரு
புன்னகையின் அளவுகோளை
விஸ்தரித்து எல்லைக் கிழிப்பது

அத்தனை எளிதாக இருந்துவிடவில்லை

எதிர்பார்க்கும் துரோகத்தின்
தீர்மானங்களை அனுமானித்து வெளியிடுவது

அத்தனை எளிதாக இருந்துவிடவில்லை

இருமுனை ஒப்பந்த மீறலில்
சந்தர்ப்பங்கள் நீர்த்துப் போவது

அத்தனை எளிதாக இருந்துவிடவில்லை

ரகசியங்கள் உச்சரிக்கப்பட்ட
உதடுகளின் மந்திரத்தில்
மௌனங்கள் எரிவது

அத்தனை எளிதாக இருப்பதில்லை

என்னிலிருந்து நானைக் கடத்தி
உன்னிடம் ஒப்படைப்பது..

****

அங்கெல்லாம் காத்திருப்பதாக..

*
எங்கெல்லாம்
மரண வாடை சுமந்து
மௌன நதி ஓடுகிறதோ..

அங்கெல்லாம்
கால் நனைக்கிறது..

காத்திருப்பதாக
பாசாங்கு செய்யும்
வார்த்தைக் கொக்கு..!

****

மெட்ரோ கவிதைகள் - 79

*
ஒவ்வொரு மதியமும்
லஞ்ச் டேபிளில்
திறக்கப்படும்
டிபன் பாக்ஸ்களில்..

நகரத்தின்
காலை நேர அவசரங்களை
பெரும்பாலும்
சலிப்போடு
அடைத்துத் தருகிறார்கள்..

மனைவி
அம்மா
தங்கை
மகள்
மருமகள்
பாட்டி

அல்லது

ஒரு
தாதி..

****

தவறுதலாய்க் கைப்பட்டு நொறுங்கும் உண்மைகள்..

*
அதி இறுக்கமான
ஓர் உரையாடலை என் கையில்
திணித்துச் செல்கிறாய்..

அதிலிருந்து
உன் மௌனங்களைப் பிழிந்தெடுப்பது
சுலபமாய் இருக்கவில்லை..

தவறுதலாய்க் கைப்பட்டு நொறுங்கும்
உண்மைகளின் சில்லுகளில்
மினுக்குகிறது
சொல்ல மறந்த பொய்கள் மொத்தமும்

நீ
இங்கு வரவேண்டும்..

மீண்டுமொரு நட்சத்திர இரவில்
மற்றுமொரு பாசாங்கை
இருவரும்
ஒத்திகைப் பார்த்துவிடலாம்..

****

மொழியின் வனத்தில்..

*
மொழியின் வனத்தில்
மட்கிய
விதையென

ஒரு
பெருமழைக்கு
காத்திருக்கிறது

இன்னும்
சரியாக உச்சரிக்கப்படாத
தமிழ்..!

****

காதல் வெளிகளின் புதைந்த தண்டவாளங்கள்..

*
உத்தரவாதங்களோடு
கடக்க நேரும்
காதல் வெளிகளின்

புதைந்த
தண்டவாளங்களில்
தடதடத்து ஓடுகிறது

பரிச்சயமில்லா தருணங்கள்..!

****

வேட்டைக் களைப்பில்..

*
ஓட்டுக் கூரையின்
இடுக்கில்
முளைத்துவிட்ட
கொத்துச் செடி நிழலில்..

தூங்குகிறது..

வேட்டைக் களைப்பில்
ஒரு
பூனை..!

****

லயப் பிசகு..

*
பெயர் அறிமுகங்களில்
இழைய முயலுகிறது
ஒரு
இசை நுட்பம்..

தொடரும்
லயப் பிசகில்..

எட்ட முடியாமல் போய்விடுகிறது
அதன்
உச்ச ஸ்தாயி..!

****

நீ - நம் மற்றும் நாம்..

*
நீ
என்னருகில்
நின்று கொண்டு திட்டமிடுகிறாய்..

எனக்கெதிரான
தீர்மானங்களை..

அது -

கச்சிதமாகவே இருக்கிறது..

****

மெட்ரோ கவிதைகள் - 78

*
பரஸ்பரம் கை குலுக்கி
புன்னகை வியர்க்கும் சங்கடங்களை

நுழைவாயில் மிதியடியில்
அழுந்தத் தேய்த்து
விடைபெறும்
சாமர்த்தியத்தை

சில
அவமானங்களுக்கு பிறகு
கற்றுத் தந்து விடுகிறது
நகரத்து
யதார்த்தங்கள்..!

****

சொற்களுக்கு அப்பால் நிகழும் அன்றாடங்கள்..

*
அன்றாட
யந்திரத்தன்மைகள்
துருவேறுவதில்
தொடங்குகிறது..

விருப்பமற்ற மௌனங்களின் சப்தங்களும்
சிக்கலுற்று பழுதாகும்
தருணங்களும்..!

****

ஓசைகளடங்கா வழி நடை..

*
அரசு மருத்துவமனையின்
ஓசைகளடங்கா
வழி நடையில்..

எப்போதும் விம்முகின்றன

மரணத்தை
எதிர்கொள்ளும்
காலடிச் சுவடுகள்..

****

துயரத்தின் ஈரம்..!

*
கண்ணீர் கொண்டு
எழுதப்படும்
ஒரு
துயரத்தின் ஈரம்

மௌனத்தால் உலர்கிறது
தடயமின்றி..

****

வந்து சேர்ந்த உத்தரவுகள்..

*
உன்னைச்
சகித்துக்கொள்ளும்படி
வந்து சேர்ந்த
உத்தரவுகள்..

அழுந்தப் பதிந்த முத்திரையுடன்
பூக்கள் பற்றிய
குறிப்புகளையும்

கையெழுத்திட்டிருக்கின்றன..

****

முத்தங்களின் இரண்டுத் துண்டுகள்..

*
சுழன்று திரும்பிய
படிக்கட் வளைவில்
என்னை மடக்கினான்..

அங்கே கொஞ்சம் இருள் இருந்தது

ரகசியமாய்
ஆனால்
அவசரமாய்
அவன் தந்து விலகிய
முத்தத்தின் நிழல்..

என்
அகால இரவில்
இரண்டுத் துண்டுகளாய்
அறைக் கூரைக்குள் மிதக்கின்றன

விடியும் வரை
நடந்த அல்லாடலுக்குப் பின்..

அவை..

ஜன்னல் வழியே நுழைந்த
குருவிகளின்
சிறகைத் தொற்றி வெளியேறுகின்றன..

கீச்..கீச்..! - என்று
கத்தியபடி..

****

சிறகடிப்பில் உதிர்தல்..

*
சின்ன குறிப்புகளாக
எழுதிக் கொள்ளும் முன்பே

அவசரமாய்
உதிர்ந்து விடுகின்றன..

மனப் பறவையின்
சிறகடிப்பில்
உன்
வார்த்தைகள்..

****

நழுவித் தப்பிய நதியொன்று..

*
விரையும் ரயிலின்
தடதடப்பில்..
வாசல் நோக்கி மெல்ல நகர்கிறது..

அரைக்கண் மூடிய
எதிர் இருக்கை குழந்தையின்
கடைவாயிலிருந்து நழுவித் தப்பிய

தாய்ப்பால் நதியொன்று..!

****

நுண்ணியமாய் துளையிட்டு..

*
ஒரு
நூல் அளவு புன்னகை..

நுண்ணியமாய் துளையிட்டு
கோர்த்துவிடுகிறது

என்
இரவு பகல்களை..!

****

அந்நொடியில்..

*
' சீ..! போ.. ' - என்ற
நொடியில்
செத்து விட்டது

தடம்புரண்ட
பதினைந்து வருட நட்பு..

****

கிளை பரப்பும் ரசவாதம்..

*
வந்ததும்
' முடியாது ' - என்று

நீ
சொல்லப் போகும் வார்த்தைக்குள்
வேர் விட்டு வளரும் வண்ணங்கள் யாவும்
என்
நரம்புக்குள் கிளை பரப்பப் போகும்
ரசவாதத்துக்கு

இந்த
தெருவிளக்கு ஒரு சாட்சி..!

****

வாசல் மரத்தின் சாம்பல் நிழல்..

*
தீர்மானிக்க இயலாத
மௌனங்களை அசைப்போட்டு..

நெடுநேரம் காத்திருந்த
உன்
அலுவலக வாசல் மரத்தின்
நிழல் சாம்பலை

கைப்பிடி அளவேனும்
அள்ளிக் கொள்கிறது
என்
தயக்கங்கள்..!

****

திரும்ப யத்தனித்த கணத்தில்..

*
கண்ணீர் தளும்ப
விடை சொல்லி
திரும்ப யத்தனித்த கணத்தில்..

எட்டிப் பிடித்த
உன் மணிக்கட்டில்
பட்டென்று உடைந்தது
உன்
வளையல் மட்டுமல்ல..!

****

துணை வரும் வானத்தின் நிழல்..

*
இப்படியாகத் தான் உதிர்கிறது
தினமும் இந்த மாலை

சாம்பல் நிறம் திரிக்கும்
வானத்தின் நிழல்
துணை வருகிறது
பேருந்து படிக்கட்டில்..

மஞ்சள் பூசிய
புன்னகை முகமொன்று வராத
அந்த
மூன்று நாட்கள் மட்டும்

சிவந்து பொங்குகிறது
மேற்கு வாசல்..

****

சற்று முன்வரை நீடித்த அறையின் வெம்மை..

*
என் மூர்க்கத்தின் விரிசலொன்று
தண்ணீர் நிரம்பிய
பிளாஸ்டிக் குவளையின் மூடியில்
கோடிழுத்துக் கிடக்கிறது..

கழுத்தின் வளைவுக்குப் பிறகு
நெளிந்திறங்கும்
நீர்த்துளி உருளைகளில்..
சற்று முன்வரை நீடித்த
இவ்வறையின் வெம்மை திரள்கிறது..

வெகு நிதானமாய் தரையில் பரவும்
என் நிழல்களின் பாசாங்கை
நூல் திரித்து சுண்டுகிறது
மனச் சாதுர்யம்..

நீ
மேஜை மீது
கைகள் மடித்து புதைத்துக் கொண்ட
முகத்தை மறைத்து
படரும் கூந்தலசைவை

மௌனமொன்று உடைக்கிறது
அகாலத்தின்
நொடி முள் கொண்டு..!

****

உதிரிப் பூக்களின் மாலை நேரங்கள்..

*
மனனம் செய்ய முயலும்போதே..
மறக்கவும் முடிகிறது
வேகமாய் முணுமுணுக்கும்
உன் கோபத்தை..

அவைகளை
நினைவில் வைத்துக் கொள்வதற்கான
அவசியங்களை
ஒருபோதும்
நீ எனக்கு தந்ததில்லை..

சூடான தேனீர் பருகியதும்
குளிர்ந்த நீரில் கழுவிக் கவிழ்த்தும்
பித்தளைக் குவளைப் போல் தான்
அதை
நீ கையாள்கிறாய்..

விரும்பி நீ சொல்லி
நிறைவேறாத
உன் ஆசைகளை..

பெரும்பாலும் மாலை நேரங்களில்..

உதிரி மல்லிகைப் பூக்களோடு
தரையிலமர்ந்து..
நாரில் கோர்த்து முடிக்கிறாய் வேகமாய்...

ஆனால்..
கனத்த மௌனத்தோடு..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் - 2010 ]


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3328

நிச்சலனங்களோடு வீடு திரும்புதல்..

*
இந்நகரத்தின் தனித்த சாலை இருளில்
சில தூர யோசனை அடிகளுக்கு பிறகு
கிடைக்கிறது
மங்கிய மஞ்சள் விளக்கொளி..

மௌனம் உமிழும் கனத்த அர்த்தங்களை
யாரோ தார் ஊற்றிப் பூசி வைத்திருக்கிறார்கள்
தினம் கடக்க நேரும் பள்ளங்களை..

பிடிபடுவதில்லை
எப்போதும் குறைத்தபடி..
நிறுத்திவைக்கப்பட்ட ஏதோ ஒரு டூ வீலரின்
நிழலில் பதுங்கும்
பழகிய நாயின் ஆட்சேபம்..

பிளாட்பார கான்க்ரீட் காரைகளில்
இடுங்கிப் புதைந்து நிற்கும்
மாநகராட்சி மரங்களின் பலவீனங்களை
பகிர்ந்து கொள்கின்றன..
வழக்கு நிலுவையில் நெடுங்காலம் காத்திருக்கும்
பழைய கட்டிட இடுக்கில்
நிதானமாய் முளைத்து விட்ட அரசச் செடிகள்..

வழக்கமாகிவிடும் அர்த்தப்பிழைகளின்
நிச்சலனங்களோடு வீடு திரும்புதலைப்
பழகி விடுகின்றன..
மரணம் வரை உடன்பயணிக்கும்
நகரம் புரிந்த பாதங்கள்..

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஆகஸ்ட் - 2010 )

சொல்லப்படாத சொற்களின் மௌனம்..!

*
வெளியிட முடியாத
ஒரு கோரிக்கையின் மௌனத்தில்
அசைந்தபடி இருக்கும் சொற்கள்
சந்தர்ப்ப நிழல்களின் இருளையும்
நிராகரிக்கின்றன..

ஒரு
எளிமையான மௌனம்
சிக்கலான சூழலில்..

படிப்பறிவில்லாத மனிதனொருவனின்
முக்கியமான விரல் ரேகை போல்
அழுத்தமாக பதிந்துவிடுகிறது..

பரஸ்பரம் பெற்றுக்கொள்ளும்
வாக்குறுதிகள் மீது
பூசப்படும் வெயில்..
மஞ்சள் நிற பளபளப்பெனவோ
திரவ பிசுபிசுப்பெனவோ
வழிந்தோடும் புதிர்ப் பாதையில்..

ஒரு
கூழாங்கல்லைப் போல
உடன் பயணிக்கிறது..
சொல்லப்படாத சொற்களின் மௌனமும்..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஆகஸ்ட் - 2010 )

ஒலிச் சிதறலெனப் புள்ளியிடும் சொற்கள்..

*
தவறுதலாய்ப் பிரித்துவிட்ட ஒரு டைரியின்
பக்கத்தை
அவசரமாய் வாசிக்க நேர்ந்த
முன்னுச்சி முடியின் நிழல்
எழுத முயல்கிறது மற்றுமோர் இன்மையை...

ஒரு ரகசிய குறிப்பினூடே
தங்கிவிடுதல் சாத்தியப்படுகிறது
யாருமறியாத் தோழியின் மரணமோ
பெயர் தெரியா நண்பனின் துக்கமோ

சொல்ல முடியாத கதறல்களை
ஒலிச் சிதறலெனப் புள்ளியிடும் சொற்களில்
புதைக்கிறது நெருக்கித் திருகும் மௌனம்..

ஒவ்வொரு பிரிதலும் சொல்லும் ஏதோக்களில்..
எல்லாமே சொல்லப்பட்டுவிடுகிறது..

கைவசம் சிக்கும் சமாதானங்கள்
நிம்மதி அமிழும் மூர்க்கங்கள்
புறக்கணிப்பின் இருண்மை..
சமரசத்தின் தோல்வி..

ஒவ்வொரு பிரிதலிலும் ஏதோ ஒன்று
நிச்சயம் சொல்லப்படுகிறது..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஆகஸ்ட் - 2010 )

விரல்களிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள்..!

*
நான் அதிசயப்பட்டு அசரும்
ஒரு ஆச்சரியத்தை
நீயெனக்கு பரிசளிக்க மறந்துவிட்டாய்

சாதாரண சந்தர்ப்பங்களன்றி
வேறெதையும் நினைவுகூறும்படி
அமையவில்லை
நம்
சந்திப்புகள்

பெரும்பாலும்
மௌனங்களைப் பின்னிக் கொண்டிருந்த
உன் விரல்களிலிருந்து
உதிர்ந்த
வார்த்தைகளை
சில எறும்புகள் சுமந்தபடி
தம் வளைக்குள் நுழைவதை
என்
அறை மூலையில் கண்டுகொண்டேன்

உண்மையில்
நான் கற்பனித்திருந்தது
வேறாக இருந்தது

நம் சந்திப்பு நிகழ்ந்த மரத்தடியில்
நீ
தவறவிட்டுச் சென்ற வார்த்தைகள்
அடுத்த மழைப் பருவத்தில்
குடைக் காளான்களாக முளைக்குமென்று..

ரகசியங்கள் இடம்பெயர்வதை
ஒப்புக் கொள்ளமுடியவில்லை..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3285

மீளாத் துயரங்களைக் கவர்ந்து போகும்...பிணந்தின்னிக் கழுகுகள்..

*
தனிமை மணலில்
என்னை செருகிச் செல்கிறாய்
கைவிடப்பட்ட ஒரு போர்வாளைப் போல்..

என் மீது
மிச்சமிருக்கும் ரத்தக்கறைக்கு
பொறுப்பேற்கும் மனிதனை எப்போது
என்னிடம் அனுப்புவாய்..?

இறந்தவர்களின் நிழல்...
என் கைப்பிடியைக் கடந்துபோகும் பொழுதுகள்..
சுட்டெரிக்கிறது..
இந்த மணல் வெளியை...

உயிர்த் தாகம் தீர்ந்துபோகும்
ஒற்றை நீர்மைப் பூவை
பூத்துவிடும் எத்தனிப்பில் சூழ்வதில்லை உன் கருமேகங்கள்..

மரணத்தின் நரம்புத் தண்டில்
ஊர்ந்து வழியும் மீளாத் துயரங்களின் முனகல்களைக்
கவர்ந்து போகும் பிணந்தின்னிக் கழுகுகளின் நிழல் சிறகுகள்..
உன்னிடமிருந்து என் மீது இறங்குகின்றன...

இந்தக் கைவிடப்பட்ட போர்வாளைச் சுழற்றி வீசும்
சூழல் நுன்னியத்தின்
மற்றுமொரு களம்...கொண்டுவந்து சேர்க்கும் மனிதனை..
என்னை நோக்கி..
எப்போது அனுப்புவாய்..?

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3264

காற்றில் எழுந்தடங்கும் மரணத்தின் இசை..

*
'என்னைக் கொஞ்சம்
அமைதியாக இருக்க விடுங்கள் ' - என்பதில்
தொடங்குகிறது..
எனதிந்தத் தனிமை

அறை சுவற்றில் அசையும் ஜன்னல்வழி இலை நிழல்கள்
எப்போதும் முணுமுணுக்கும் பிரார்த்தனையைக்
கூர்ந்து கவனிக்க முடிகிறது

அந்நிழலைக் கடக்கும் பசித்த பல்லியொன்றின் வால் துடிப்பில்..
சுவற்றில் குறியிடும் சங்கேத மொழியை
வாசிக்க முடிகிறது

ஜன்னல் கம்பியில் வந்தமரும் நொடியில் நிகழும்
ஈயின் இறுதித் தருணத்தின் சிறகடிப்பில்..
காற்றில் எழுந்தடங்கும் மரணத்தின் இசையைக்
கேட்க முடிகிறது

இப்போது
இலை நிழல்கள் முணுமுணுக்கும் பிரார்த்தனைகளின்
அர்த்தங்கள் ஒவ்வொன்றாய் அவிழ்கிறது..

' என்னைக் கொஞ்சம் தனிமையில் இருக்க விடுங்கள்..'

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3243

விரல்நுனி வாசிப்புக்கான ரகசியம்..

*
இவளை
இவள் உடல் பாகத்தின்
எந்தப் பகுதியிலிருந்து தொடங்கினால்..
ருசித்துப் பார்க்க கசப்பாய் இருப்பாள்..

தவிர்க்க விரும்பும் உவர்ப்பையோ
ஏற்க முடியா கசப்பையோ
ரத்த வாசனையோடு..
உணர வேண்டிய விரல்நுனி வாசிப்புக்கான
ரகசியங்களை..

எப்போது எழுதியிருப்பாள்..
அல்லது..
எங்கே தேக்கி வைத்திருப்பாள்..

****

மூடிய கண் கீற்றைப் பிரித்து நீயென்னைப் பார்த்த கணம்..

*
உன் வருகைக்காகக் பகலில் காத்திருந்த
நொடிதோறும்
சிறு தூறலில் நனைந்திருந்தது இலைகள்..

மேகம் மூடிய வானின் செதில்களில்
பறவைகளின் சிறகுகள் சுமந்து சென்ற
செய்தியொன்றை
நட்சத்திரம் பெற்றுக் கொண்டதை..
இரவில் உணர நேர்ந்தது..

உன்னைத் துணிப் பொதியில்
தாதியொருத்திக் கொண்டு வந்த போது..

நானுன் பால் வாசனை முகர்ந்த நிமிடம்..
நீயுன் இறுக மூடிய கண் கீற்றைப் பிரித்து
என்னைப் பார்த்த கணம்..
என்ன யோசித்தாய்..?

உன்
குட்டிக் கை விரல்களுக்குள் சேமித்து வைத்திருக்கும்
நம் ரகசியத்தை
எப்போது என்னோடு பகிரப் போகிறாய்..?

*****
( 25.8.2010 இரவு பிறந்திருக்கும் என் மகளுக்காக.. )

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஆகஸ்ட் - 2010 )

சுவற்றிலிருந்து சலனமற்று நோக்கும்...ஓவியக் கண்கள்..!

*
சற்று முன் பேசிய வார்த்தைகள்
டைனிங் டேபிள் பரப்பெங்கும்
இறைந்து கிடக்கிறது..

அவை பசித்திருக்கவும் கூடும்..

குறை நீர்க் கண்ணாடி டம்ளரின்
விளிம்பில் வந்தமரும் ஈயொன்று
உதடுகளின் முணுமுணுப்புகளை..
அதன்
ரேகை வரிகளில் வாசித்து
எங்கோ பறந்து செல்கிறது
யாரிடமோ சொல்ல..

மேஜை விரிப்பின் ஒரு மூலையில் பின்னப்பட்ட
ஒற்றை ரோஜாப் பூ..
பச்சை இலைகளற்று..தொங்கியபடி காற்றிலசைவதை
குறிப்பெடுக்கிறது..
சுவற்றிலிருந்து சலனமற்று நோக்கும்
ஓவியக் கண்கள்..

உணவு அருந்தும் அறையெங்கும்..
உரையாடல்கள் உறைந்து
குளிர்கின்றன..
அதிகப்படியான ஏ.சியால்..

மனிதர்கள்.. புழுக்கம் சேகரிக்க
வாசல்வரை சென்றுவிட்டனர்..
யாரையோ வழியனுப்பும் பொருட்டு..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஆகஸ்ட் -11- 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=10365&Itemid=139

மழைத் தருணங்கள்..

*
மழை மீதான
மேல்முறையீட்டில்
வெயிலின் கருணை மனு நிராகரிக்கப்படுவதோடு...

இருளின் சத்தியங்களை
அலட்சியமாக மீறுகின்றன
ஆளரவமற்ற தெரு விளக்குகள்..

வாழ்வதாக சொல்லும் தருணங்களையெல்லாம்
சுழித்துக் கொண்டு ஓடுவதாகத் தோன்றுகிறது
நகரத்து மழையின் கசடுகள்..

மனச் சதுக்கத்தின்
மத்தியில்
கையகலக் குழிப் பறித்து..அடித்தளம் பூசும் வெயில் மீது..
கொஞ்சமாய்த் தங்கிவிடுகிறது
மழைத் தருணங்களின் வண்டல்கள்..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஆகஸ்ட் - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=10280&Itemid=139

இன்னுமொரு கோள்..

*
என்னை விட்டு வெளியேறிடும்
நிலவை
தொலைத்தூர இருளில்
கண்சிமிட்டி அழைத்துக் கொண்டது
ஒரு
நட்சத்திரம்..

பார்த்தவுடன்
பற்றி எரியும் நெருப்புக் குழம்பில்
விழுந்து..குளிர்ந்து..
இன்னுமொரு கோளாகி..
எனக்குள் நுழைந்துவிட..

காத்துக் கிடக்கிறது...
பல யுகங்களாய்..

கிடக்கட்டும்..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஆகஸ்ட் -19- 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=10481&Itemid=139

நீலவேணி - ஒன்பதாம் வகுப்பு 'பி' பிரிவு..

*
நீலவேணி
என் கவனங்களை
எப்போதும் தன்னோடு
எடுத்துப் போகிறவளாகவே இருந்திருக்கிறாள்..

ஒன்பதாம் வகுப்பு 'பி' பிரிவுக்கு பிறகு
என்னிலிருந்து காணாமல் போனாள்..

சென்ற மாதம்
மழை நாளொன்றில்..

ஜி.எச். மருத்துவமனை
கான்ஸர் பிரிவை
நான் கடந்த
ஒரு
மதிய வேளை..

என்னிடம் பேனா கேட்டு
எதையோ குறித்துக் கொண்டு
திருப்பித் தந்த போதும்

என்
அடர் மீசை தாடியின்
அடையாள இழப்பிலும்..

மீண்டும்
என் கவனங்களை
தன்னோடு எடுத்துப் போகிறவளாக இருக்கிறாள்
நீலவேணி..

****