திங்கள், ஆகஸ்ட் 30, 2010

ஒலிச் சிதறலெனப் புள்ளியிடும் சொற்கள்..

*
தவறுதலாய்ப் பிரித்துவிட்ட ஒரு டைரியின்
பக்கத்தை
அவசரமாய் வாசிக்க நேர்ந்த
முன்னுச்சி முடியின் நிழல்
எழுத முயல்கிறது மற்றுமோர் இன்மையை...

ஒரு ரகசிய குறிப்பினூடே
தங்கிவிடுதல் சாத்தியப்படுகிறது
யாருமறியாத் தோழியின் மரணமோ
பெயர் தெரியா நண்பனின் துக்கமோ

சொல்ல முடியாத கதறல்களை
ஒலிச் சிதறலெனப் புள்ளியிடும் சொற்களில்
புதைக்கிறது நெருக்கித் திருகும் மௌனம்..

ஒவ்வொரு பிரிதலும் சொல்லும் ஏதோக்களில்..
எல்லாமே சொல்லப்பட்டுவிடுகிறது..

கைவசம் சிக்கும் சமாதானங்கள்
நிம்மதி அமிழும் மூர்க்கங்கள்
புறக்கணிப்பின் இருண்மை..
சமரசத்தின் தோல்வி..

ஒவ்வொரு பிரிதலிலும் ஏதோ ஒன்று
நிச்சயம் சொல்லப்படுகிறது..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஆகஸ்ட் - 2010 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக