புதன், டிசம்பர் 30, 2009

கல் யானை..!

*

நூற்றாண்டுகள் கடந்த
பல்லவனின்
பெருமையை..

முனை மழுங்கிய
தந்தத்தால்...கூர் தீட்ட
வழியற்று..

ஓர் அடி
எடுத்து வைக்கும்..பொருட்டு..

நின்று கொண்டே இருக்கிறது..
கல் யானை..!

****

மழைப் பொழியும் சப்தங்களை சிதறடித்துச் சிரிப்பவன்

*

செய்வதறியாது
தலைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறது துயரம்..

நகர மறுத்து..
கடிகாரங்களின் நொடிமுள்
ஒரே இடத்தில் துடித்துத் திகைக்கிறது.

சிக்குப்பிடித்து கலைந்த அழுக்குக் கேசமும்
திட்டுத் திட்டாய் கறுப்பேரிய மெலிந்த உடலும்
வலது புருவமோரம் வெட்டுத் தழும்பும்..
சாம்பல் பூத்துவிட்ட கந்தல்..கால்சராயுமென..

முன்னிரண்டும் உடைந்து போய் மீந்த
மொச்சைப் பற்களின் மஞ்சள் நிறமுமாய்..

சிரிக்கிறான்..
சிரிக்கிறான்..
இடி இடித்து மழைப் பொழியும் சப்தங்களை
தனதாக்கி சிதறடித்துச் சிரிக்கிறான்...

செய்வதறியாது...
நகர மறுத்து..
அவனருகே..
தன் தலைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறது துயரம்..

நிமிட முட்கள் வெடித்து நொறுங்கி...
நொடிமுள்..
ஒரே இடத்தில் துடித்துத் திகைக்கிறது...
யுகங்களை விழுங்கி..!

****

நெருப்புச் சிறகுகள்..

*

இன்றிரவு..

மின்மினிப் பூச்சிகளின்..
பொட்டு நெருப்பு சிறகுகளில்..
மேலும் வெளிச்சம்
தீப்பிடித்துக் கொள்கிறது..


விண்ணிலிருந்து சாட்டிலைட்கள்
கொளுத்திப் போடுகின்றன..
கோடிக்கணக்கான
குறுஞ் செய்திகளை..!

****

காபிக் கோப்பையிலிருந்து.. ஒரு வெண்புகை..

*

தாளமிட்டு அசைகிறது
மழைத்துளி..

அழுத்தமான
மௌனத்தோடு..

நெளிந்து சுருள்கிறது..
காபிக் கோப்பையிலிருந்து..
ஒரு வெண்புகை..

நீ
சொல்லாமல் விடுபடும்..
வார்த்தைகளின்
திரள்களை..

இந்த
உணவு விடுதியின்..
கண்ணாடி ஜன்னல்கள்..
துளிர்த்திருக்கின்றன..

மழையைத் தொட்டு தொட்டு..
புள்ளிப் புள்ளியாய்..

வெளிக்கூரையிலிருந்து...
இப்போதும்..
தாளமிட்டு அசைகிறது..
மழைத்துளி..

****

மாதிரிகள் அற்ற வரைப்படங்கள்..

*

முன்னெப்போதும்
சொல்லிவிடத் தயக்கங்கள்
சுமந்த பருவம் தொட்டே..
ஈடேறி விடுகிறது
வயதுக்குரிய ரகசியம்..

ஊமைச் செதில்களில்..
அடர்ந்தும் குறுகியும்
சேகரமாகின்றன

கால நுனி
பதம் பார்க்கும்..
முன் சுவடுகள்..

மாதிரிகள் அற்ற
வரைப்படங்களோடு..
இருள் அடர்ந்த
மனதின் வனத்துக்குள்..

பயணிக்கும்படி
நிர்பந்திக்கிறது

முடிச்சிட்டுக் கொள்ளும்
புதிர் பாதை..!

****

நன்றி : ' விகடன்.காம் ' ( டிசம்பர் 30-2009 )

http://youthful.vikatan.com/youth/NYouth/elangopoem30122009.asp

துயரங்களின் சுண்டுவிரல் (அல்லது ) என் தெருவை..

*

என்
தெருவை ஒரு துயரம்
நடந்து கடக்கிறது..
அதன் சுண்டு விரல் பற்றி..
பின் தொடர்கிறது மரணம்..

ஒரு சிறுமி..
சடைப் பின்னலை சரிசெய்தபடி..
தன் அம்மாவின்
முந்தானையைத் தவறவிடுகிறாள்..

நாய்க்குட்டி யொன்று
தன் சுருண்ட வாலின் முனையை
கவ்வி விட முயன்று கொண்டே இருக்கிறது..

தள்ளாடி நகரும்..
வயோதிகன் ஒருவனின்..
குனிந்த தலை..மறைத்துவிடுகிறது
அவன் இதுவரை அசைப்போட்டு..
துப்பிவிட்ட காலத்தின் தாடையை...

என் தெருவை..
எப்போதுமே...ஏதாவது ஒரு துயரம்
கடக்க நேரும் நிமிடங்களில்..
அதன் சுண்டு விரலைப் பற்றிக் கொள்ளத்
தவறுவதில்லை..
ஒரு மரணமோ..அல்லது..
மரணத்துக்கான ஒரு அவசியமோ..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) டிசம்பர் - 30 - 2009

http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2356

மீள் - நுழைவாயில்..

*

இதுவரை
வந்தறியா ஊருக்குள்..
நுழையுமுன்..

மனதுக்குள்..
மீள் - நுழைந்தது
அப்பா சொல்லியிருந்த..
வழித்தடத்துக்குரிய
அடையாளங்கள்..

மழைச் சகதியோடு..கிளைப் பரப்பி..
எங்கெங்கோ..
நெளிந்தலையும்..
இவ்வழியாவும்..

என்
பாட்டனின்..
உள்ளங்கை..ரேகைகளாய்..
வேர் விட்டிருக்கிறது..

****

உடைவு..

*

பேனாக்களின்..
மூக்கு முனையில்...
மூச்சுவிடுகின்றது..
மனித நேயத்தின்
மார்புக் கூடு..

அதை அழுத்தி
உடைக்கிறது..

அகாலமாய்
ஒரு
மரணத் தீர்ப்பு..!

****

பாதிக் கடித்த மிளகாய்ப் பழங்கள்..

*

அணில்களின் தயக்கங்களை
நொடிதோறும்..
விடாமல்..

துடித்துக் கொண்டே இருக்கும்
அதன் வால்கள்..

அவை
பாதிக் கடித்த
மிளகாய்ப் பழங்களின்
விதைகளில்..

மெல்லிய நாவுகளின்
ஈரம் மினுமினுப்பதை..

கிளிகள் கவனிப்பதில்லை..!

****

மெட்ரோ கவிதைகள் - 40

*
நீர் நிலைகளை
சிமென்ட் பாலூற்றி..
வெப்பம்
சேகரிக்கிறது நகரம்..

மொட்டை மாடிகளில்..
குவளை நீர்
கிடைக்காதா..
என ஏங்கிப் பறக்கும் காகங்கள்..

இறந்தவர்களுக்கு
வைக்கும்..
சோற்றுருண்டைகளைக்
கடந்து பறக்கின்றன
தாகத்தோடு..!

****

மெட்ரோ கவிதைகள் - 39 ( இலை நிழல்கள் )

*
கண்களுக்கு அகப்படாத
அதிகாலைச் சூரியன்..

கட்டடங்களுக்கு இடையே
மூச்சுத் திணறுவதை..

என் வீட்டுச் சுவரில்..
பதறிப் பதறி எழுதுகின்றன
இலை நிழல்கள்..!

****

இறுதி நிலுவை..

*

கவிதைக்குரிய
கட்டமைப்புக்கான
நிலுவைகளை..

தண்டம் அகற்ற
நின்ற வரிசையில்..

இறுதியாக வந்து
ஒட்டிக்கொண்டது..

இதுவரை அறிமுகமில்லாத
ஓர் படிமம்..!

****

ஆரஞ்சு நிறக் குவளை..

*
ஜன்னல் திண்டில்
கவிழ்ந்துக் கிடக்கும்
ஆரஞ்சு நிறக் குவளை மீதேறி
கசிந்து வழியும்..

இளஞ்சிவப்பு வெயில்..

அடுப்பில் கொதிக்கும்..
பாலில் கலந்து..
துள்ளுகிறது..

****

காகிதங்கள் கிழிபடும் ஓசை...

*

இது
மழைக்காலம் அல்ல
என்றபடி..
சலசலத்துக் கொண்டிருக்கிறது..
சாக்கடை..

கப்பல்களுக்கான காகிதங்கள்
கிழிபடும் ஓசைகளை..

பத்திரப்படுத்துகின்றன..
நோட்டுப் புத்தகங்கள்..!

****

பட்டாம்பூச்சிகளும் பூக்களுக்கான சிறகுக் குறிப்புகளும்..

*

முட்கள் மட்டுமே
தரித்திருந்த
தொட்டிச் செடியில்..

ஒரு நாள் மாலை..
பட்டாம்பூச்சிகள் பூத்திருந்தன..

பூக்களுக்கெல்லாம்
சிறகு முளைத்து
பறந்து விட்டதாக...

குறிப்புகளை..
முடிச்சிட்டு வைத்திருக்கும்
ரகசியத்தை..

என்
கனவில் வந்து பகிர்ந்து கொண்டது..
ஒரு வேர் நுனி..!

****

சில்லுகள்..

*

மதில் சுவர்களின்
உச்சியில்..

பதித்து வைக்கப்பட்ட
கண்ணாடி சில்லுகளை..

மேலும்..
உடைத்து
விளையாடுகிறது..

வெயில்..!

***

உறைப் பனித்துளி..!

*

இரவுக் கீற்றை
குளிர் காற்று
இழை இழையாய்
கிழித்த சப்தத்தில்..

புல் முனையில்..உட்கார்ந்திருந்த
பனித்துளி..

பயத்தில்..உறைந்தது..!

****

நெளிவு..

*

கருத்தின்
தொண்டைக் குழியில்..

ரேகையொன்று
நெளிந்த விதத்தில்..

பொய்..
புரையோடியது..!

****

இலைக் கோடுகள்...

*

இன்னும்
உடைந்து விடாமல்
புடைத்திருக்கும்..

இலைச் சருகின்..
நரம்புக் கோடுகளில்..

எதைக் கண்டோ..
திகைத்து
நிற்கிறது..
ஒரு
கட்டெறும்பு..!

****

பால் நதியென நெளியும் மெழுகு...!

*

வெம்மை மிகுந்த
கோடை இரவொன்றின்
குளிரை..

தன் பார்வையில்..
அப்பிக் கொண்டு..
என்
அறையின் தனிமையில்..
உட்கார்ந்திருக்கிறாள்...

புத்தக அலமாரியில்..
முதுகுத் திருப்பி
நின்றுக் கொண்டிருக்கும்..
புத்தகங்களை...

மௌனமொன்று
நெருடிக் கொண்டிருப்பதை..

ஜன்னலின்
திரைச் சீலை அசைந்து அசைந்து
ஒத்துக் கொள்கிறது...

மெல்ல மயங்கும்..மின் விசிறியின்..
நீண்ட இழைகள்...

இல்லாத காற்றை...

துண்டு துண்டுகளாக நறுக்கி..
அறையின் இருள் மூலைகளில்..
தூக்கி எறிந்து..

அவளைக் குறிப்பெடுத்தபடி
சுழல்கின்றன..

ஈரம் சொட்டும் கூந்தல் நுனியை...
ரகசியமாய்
முத்தமிட்டு சுகிக்கிறது..
ரத்த நிற பட்டுக் கம்பளம்..

மேஜையில்...எரிந்து உருகி...
பால் நதியென நெளியும்..
மெழுகு...
விளிம்பைக் கடந்து..

அந்தரத்தில் உறைகிறது..
அவளைப் பார்த்த நொடியில்...

பஞ்சுப் பொதிகைத் துவாலை யொன்றை
உள்ளறையிலிருந்து...
எடுத்து வந்து நீட்டிய கணத்தை..

எழுந்து நின்று..

குழல் வாசித்து உதிர்த்தாள்..
'நன்றி' - என மென் இதழ் அசைத்து..

அலமாரிப் புத்தகங்கள்
மொத்தமும்..
அவளின்..
அடர் கரிய நிழலில்
பதுங்கிவிட்டது..

அறை முழுதும்..

இல்லாத காற்றை
இன்னும்..
துண்டு துண்டாய் நறுக்கிக் கொண்டிருக்கிறது...

விட்டுவிடும் மனமில்லா
மின்விசிறி இழைகள்...!

****

மெட்ரோ கவிதைகள் - 38

*
பிளாஸ்டிக் பைக்குள்
தவறுதலாய்
காலை நுழைத்து விட்ட
காற்று..

கடக்கும் திசை புரியாமல்..

விரையும் வாகனங்களுக்கிடையே..
முன்னும் பின்னும்..
அலை மோதுகிறது..

துணைக்கு ஆளின்றி..!

****

மழை சொட்டு..!

*

பெய்து முடித்த பின்பு..
சொட்டு சொட்டாய்..
மழையைப்
பிழிந்து கொண்டிருக்கிறது
மரம்..!

****

ஒற்றைக் காம்பு...!

*

முதலில் வீசியத் தென்றலை..
மறுதலித்து..

தனக்கான
தென்றலுக்கென..

ஒற்றைக் காம்பில்
தொங்கிக் கொண்டிருக்கிறது..

ஒரு
பழுத்த இலை..!

****

மெட்ரோ கவிதைகள் - 37

*
நெடுஞ்சாலைப் பிளந்து
நடப்பட்ட..

பூக்களற்ற
செடிகளின் இலைகளில்..

கனரக வாகனங்கள்
துப்பிச் செல்கின்றன

கார்பன் தூசுகளை...

நின்று கடக்கும்...
ஜன்னலோர பஸ்கள் மட்டும்
எப்போதாவது..

பான்பராக் எச்சிலை...!


****

இருளடர்ந்த பட்டறைக் கொல்லனின் அடர்மஞ்சள் சிரிப்பு..!

*

இரவில் வாங்கி வந்த
கேடயங்களை..
அடுக்கி வைத்திருக்கிறேன்..

என்
பாசறையில்..

வாட்களை
வார்த்து வார்த்து..
விற்றும் விட்டேன்..

எனக்கு விருப்பமற்று
நிற்க நேர்ந்த களங்களில்...

இருளடர்ந்த பட்டறை நெருப்பில்..
அடர்மஞ்சள் நிறத்தில்..
ஒளிரும்
கொல்லனின் சிரிப்பு..

உக்கிர சூரியனாய்...
உச்சியில்...நிற்கும்..

****

நாய்களின் வால்..

*

அதிகார
காம்பவுன்ட்டுக்குள்
உலவும்
நாய்களின் வால்
நிமிர்ந்தே நிற்கின்றன..!

பளபளக்கும் பூட்சுகளின்
லேஸ் முனை
சொடுக்கலில்..

ஒவ்வொரு முறையும்
அதிர்கிறது..
மொசைக் மின்னும்
காரிடார்..

தேக்கு மரத்தில்...இழைத்த
பிரவுன் நிற
கதவுகளின்
வழவழ பிரதிபலிப்பில்..

எப்போதும்...
பதிவாகிறது..
ஒரு
பரிதாப முகம்..!

ஆனால்..

அதிகார
காம்பவுன்ட்டுக்குள்
உலவும்
நாய்களின் வால்
நிமிர்ந்தே நிற்கின்றன..!

***

துணைக்கால்

*

தன்
செருப்பை உருவி..
கன்னத்தில் அறைந்தது
என் மொழி..

செய்யும்
சிறு சிறு தவறுகளுக்கு
இத்தனைத் தண்டனை

தகும் தான்...
என்பதாக..

நட்ட நடு
வாக்கியக் கோட்டில்
தலை குனிந்து
நிற்க நேரும் கணத்தில்..

காண முடிகிறது..

துணையற்ற
வெறும் கால்களை..

****

நிலவின் வெளிச்சம் உறிஞ்சும் வேட்கை..

*

உனது
ஆவேசச் சிரிப்புத் தருணங்களில்
முளைத்து விடுகின்றன
டிராகுலா பற்கள்..

ரத்தம் உறிஞ்சும்
உன் வேட்கைக்கு...ஏதுவாக..

என்
நிலவுகளின்
வெளிச்சங்களையும்
விழுங்கிவிடுகின்றன இமைகள்..

****

மௌனப் படையல்..

*

எனக்கென
பரிமாறிய உன் படையலில்

மௌனத்தைத் தொட்டுக்கொள்ள
மறந்ததை..

உன்னிடமிருந்து
விடைப்பெற்று வந்த
வெகு நேரத்துக்குப் பிறகு தான்

உணர நேர்ந்தது..

****

சனி, டிசம்பர் 26, 2009

கைப்பிடித்து அழைத்து வரும் உள்ளிருள்..

*

காமம் என்பது
கடைசிக் கதவு அல்ல

இன்னொரு வாசல்..

உள்ளிருளில்
மௌனம் சுருண்ட
குழந்தைகளின்..

வீறிடலை..

கைப் பிடித்து அழைத்து வரவும்..
அவற்றின் தலையில்
பெயர் பொருத்தி தெருவில் விடவும்..

காமம் என்பது
இன்னொரு வாசல்..!

****

நேர்க்கோட்டிலிருந்து வரிசைத் தப்பிய மூன்றாம் நட்சத்திரம்

*

இரவு நெடுக..
கண் சிமிட்டிக் கொண்டேயிருந்தது
ஒரு
சிறிய நகர்தலுக்கு..!

****

எழுதிச் சலித்த காரணங்களின் சாதுரியம்..

*

இரவு ஒரு ' நுனி ' தான்
என்று
வாதிடத் தொடங்கியது
என் பேனா முனை..

மறுத்துவிட வேண்டும்
என்கிற தீர்மானத்தோடு...
காகித ஓரங்களை..
விரல்களுக்கிடையே..
சுருட்டியபடி..
கூர் தீட்டினேன் இருளை..

அதன்
கெக்கலிப்பு சத்தம் நீண்டு ஒலித்த
அந்தக் கணங்களை
என் நகங்களுக்குள்
செருகிவிட பிரயத்தனப்பட்டேன்..

எழுதிச் சலித்த..
காரணங்களை...
தன் மூக்கு முனையிலும்
நாக்கின் அடியிலும்..
செதில் செதிலாய் அறுத்து வைத்திருக்கிறது
மிகவும் சாதுரியமாக..

அடித்துச் சொல்லுகிறது...
இரவு ஒரு 'நுனி' தான் - என்று..

இறுதியில்..
ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று..

நுனித் திருகி..
எழுதும் எத்தனிப்பில்..
எப்போதும்
இரவு...
என் மேஜை முழுதும் ஒழுகிப் பரவுவதை..
முன் வைத்து...

****

புரிதலற்ற எதிர்முனைகள்..

*

எடை கூடும்
மௌனத்தின் மையத்தை..
ஒரு எறும்பு
ஊர்ந்து கடந்து விடுகிறது..

மனவெளியில்
குழிப் பறித்து நகரும்
பாதங்கள்..
பாதைகளுக்கான
முன் குறிப்புகளை.. விட்டகல்கின்றன எப்போதும்..

இரு நபர்களுக்குரிய
புரிதலற்ற
எதிர் முனைகளை..
அளந்துவிடும்.. ஆவலோடு..
கூர்மையாகின்றன
சொற் ஆயுதங்கள்..

எடை கூடும்
மௌனக் கேடயங்களின்
மையத்தை..
ஒரு எறும்பு
ஊர்ந்து கடந்துவிடுகிறது...மீண்டும்..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) டிசம்பர் - 2009

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2289

தயங்கி விழுங்கும் எச்சிலின் வெப்பம்..

*
மதில்களைத் தாண்டுதல்
பற்றிய பாதச் சுவடுகளை
எழுதிக் கொண்டிருந்தான்..

கொய்யா மரத்தின்
கிளையொன்று
கை நீட்டியபடியே
சிநேகம் கொள்ளத் தயங்கவில்லை
அவள் தோட்டத்து நெல்லி மரத்தோடு..

தயங்கி விழுங்கும் எச்சிலின்
வெப்பத்தை
தொண்டைக்குழிக்குள்
கவனமாய் சேகரிக்கின்றது
ரகசியமாய் உச்சரிக்கப் பழகிவிட்ட
அவளின் பெயர்..

பரிமாறிக் கொண்ட
புத்தகங்களின் பொருட்டு
கை விரல்களுக்கான
தருணங்களை
அடிக்கோடிடத் தொடங்கிய மனதை

இயல்பாகக் கை குலுக்கி
விடை கொடுத்த புன்னகையில்

நொறுக்கிவிட்டு
நகர்ந்து விட்டாள்
மற்றொரு வாசிப்பு நோக்கி...

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( 18.12.2009 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1695:2009-12-18-01-36-39&catid=2:poems&Itemid=88

காரணங்கள் இல்லாத பகல் பொழுதுகள்..

*
அன்றொரு ஒத்தையடிப் பாதை இருந்தது
அதில்
கீறலாகி விட்ட சுவடுகளை
கவனமற்று
கடந்து விடுகின்றன
இன்றையப் பாதங்கள்..

நிறைவேறாத வேட்கையும்
துயரம் அமிழ
அலைந்துருகிய தனிமையும்

மெல்லியப் புல்லிதழ்களாக
பசுமைப் பூசிய நாட்களை இழந்து
பழுத்து விட்டன..

சிறு பூக்களைக் கொய்ய
காரணங்கள் இல்லாத
பகல் பொழுதுகளை

மௌனமொன்று
நிதானமாக அசைப்போடுகிறது
மனதை மேய்ந்த அவகாசத்தோடு...

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( 18.12.2009 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1686:2009-12-17-23-36-08&catid=2:poems&Itemid=88

ஒரு மேடையும்...அதன் ஒப்பனை அறையும்..

*
மரணத்துக்கானப் படுதாவை
பலங்கொண்டு
கீழே இறக்கிவிட..

காத்திருக்கிறார்கள்
மேடையைக் கடந்து
சில பார்வையாளர்கள்..

கதாப்பாத்திரங்கள்
அயர்ந்து தூங்குகின்றன
ஒப்பனை அறைகளில்..

பின்புலம் அறியா
எவனோ ஒருவன்
தெருவோரங்களில் நின்றபடி..

தொடர்ந்து
விநியோகம் செய்து கொண்டே இருக்கிறான்..
நாடகத்துக்குரிய அறிவிப்பை
சின்னக் காகிதங்களில்..

****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் ( 14.12.2009 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1637:2009-12-14-02-23-20&catid=2:poems&Itemid

இருவேறு தருணங்கள்..

*

உன்
வாழ்வின்
ஒற்றையடிப் பாதை நெடுக
இரு கரைகளிலும்
சின்ன சின்னப் பூக்களாய் பூத்திருக்கிறேன்

என்னைப் பறிக்க மறுதலித்து
நடந்து கொண்டே இருக்கிறாய்

விரல்களில்
பதற்ற நூலொன்றைத் திருகியபடி !

*

வேறொரு தருணத்தில்...
மேகத்திலிருந்து புறப்பட்டு
மழையென உன் மீது பொழிந்துவிட
முயன்றேன்

நீயோ
குடையோடு எதிர்கொண்டு
ஊடுருவி நடக்கத் தொடங்குகிறாய்

கொஞ்சமும்
பதற்றமின்றி !

****

நன்றி : ' விகடன். காம் ' ( டிசம்பர் 2009 )

http://youthful.vikatan.com/youth/NYouth/elangopoem14122009.asp

வியாழன், டிசம்பர் 17, 2009

முட்புதர் மண்டிய நெருஞ்சிக் காடு..

*

காட்சிகளை உருவாக்குபவன்
என்
பக்கத்து இருக்கையில்
உட்கார்ந்திருக்கிறான்.

பனி அடர்ந்த
ஒரு மலைச் சரிவில்..
கைகளை இறகுகள் போல விரித்து
நான் ஓடும்
ஒரு காட்சியை எடுத்து
என் மடியில் வைத்தான்..

மிகவும் குளிர்வதென்பது
என்னுடைய ஆஸ்துமா தொல்லையைத்
தூண்டும் செயலென்று சொல்லி
அதை நிராகரித்தேன்..

பசுமையை ஓவியமென..
சுற்றிலும் தூரிகையிட்டிருந்த
ஒற்றையடிப் பாதையின்
இறுதி நுனியில்..
நான்
தனியனாக உட்கார்ந்திருக்கும்
காட்சியை எடுத்து நீட்டினான்..

வெகுநேரம் ஒரே இடத்தில்
தங்கும் பொருட்டு
என் கால்கள்..
ரத்தம் சுண்டி
சொரனையிழந்துவிடுவேனென்று
மறுத்துவிட்டேன்..

முட்புதர் மண்டிய
நெருஞ்சிக் காட்டுக்குள்
உடலெங்கும் கிழித்துக்கொண்டு
சிதைந்தழுகிய ரணத்தோடு
நான் அலறும்
காட்சியொன்றை இம்முறை
என் கையில் திணித்தான்.

' ஐயோ...!
எப்படி தாங்குவேன் இவ்வலியை..?
விடுவி..
எனனை முதலில்..' - என்றேன்
பதறியபடி..

'ஆனால்...
இது தான் உனக்கானக் காட்சி
இதிலிருந்து நீயாகவே..
பிதுங்கி வெளியேறு..
உன் நிறுத்தம் வந்துவிட்டது..' -
என்றபடி..நிதானமாக
மறைந்து போனான்..

பேருந்து
தன் நிறுத்தத்தினின்று
அம்பது அடி
தள்ளி நின்றது..
கசகசவென...வியர்வை நாற்றத்தோடு..!

*****

திங்கள், டிசம்பர் 14, 2009

பொழியவிருக்கும் பெருமழையின் முதல் துளி..

*
மௌனத்தை உழுதபடி
முன்னகர்கின்றன கவலைகள்
நுகத்தடியில்
புரள்கிறது ஒரு பேரமைதி..

கருத்துத் திரளும்
நம்பிக்கை மேகங்கள்
பொழியவிருக்கும்
பெரு மழையின்
முதல் துளி போல

உன் வருகை அமைந்துவிடாதா
எனக் காத்துக் கிடக்கின்றன
கட்டுக் கட்டாய்
என்
எதிர்பார்ப்புகள் .

வெடிப்பு விட்டு
நீண்டுக் கிடக்கும் நம் வரப்புகளை
அளந்தபடியே முணுமுணுக்கிறது
இந்த அகால இரவு..

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( 11.12.2009 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1588:2009-12-11-01-59-31&catid=2:poems&Itemid=88

ஆழ்நித்திரைப் பிரேதங்கள்..

*
பலியிடுவதற்கான பீடங்களை
கட்டுமானம் செய்கிறது
குளிர் கூடிய இவ்விரவு..

ஒன்றோடொன்று
ஆலிங்கனம் செய்தபடியே
நழுவுகின்றன
ஒரு கனவும் இன்னொரு கனவும்..

விடியலுக்கானக் கீற்றை
மையிருட்டில்
வனைந்து கொண்டிருக்கிறது
ஒரு ஆழ் நித்திரை..

முகங்கள் உருகி
முகங்கள் மீள்-உருவாகின்றன
ஒவ்வொரு பொழுதும்.

பீடங்களினின்றும் எழும்
பிரேதங்கள்
வாகனங்களை நோக்கி
நகர்கின்றன

வாயகன்றுக் காத்திருக்கும்
அலுவல்களின் இரையென..

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( 6.12.2009 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1525:2009-12-06-06-01-20&catid=2:poems&Itemid=88

செவ்வாய், டிசம்பர் 01, 2009

குயில்களின் மௌனங்கள்..

*

தீண்ட முடியாத துயரத்தின்
பாடல் ஒன்றை
பாடிச் செல்லும்
தவிட்டுக் குருவிகளின் குரலை
பத்திரமாய் சேமிக்கிறது
கரையோர நாணலின் தளிர்..

கருமுகில் பஞ்சுகளினின்றும்
நூல் திரித்து..
கழுத்தில் வளையமாய்
அணிந்தபடி பறக்கின்றன
மைனாக்கள்..

குயில்களின்
மௌனங்களைப் பின்னலிட்டு..
வளர்கின்றன
ஏகாந்தத்தின் பெருவெளிகளும்..
கானகத்தின் அடர் இருளும்..

****

உதிர்தலின் பொருட்டு..

*

ஏதோ
ஒரு வகையிலானதாக
அமைந்துவிடுகிறது
உன் புன்முறுவல்..

நித்தம் இழைத்தபடியே
நழுவுதல்
சாத்தியமாகிறது...

நிர்ப்பந்தமில்லா..
பார்வைகளை..
எப்போதும் வைத்திருக்கிறாய்
உன் வசம்..

உதிர்தலின் பொருட்டே...
பூக்கப் பழகிவிட்டன
என்
எதிர்பார்ப்புகள்..

****

விரல்கள்..

*

சமையலறைக் கதவின்..
விளிம்பை
வளைத்துப் பிடித்திருக்கும்
உன்
விரல்களை மட்டும்
தான் பார்க்க முடிந்தது..

' யம்மாடி... யாரு வந்திருக்கா பாரு..!' -
என்ற
உன் அம்மாவின் குரலுக்கு..

****

மெட்ரோ கவிதைகள் - 36

*
சடென்று..குறுக்கே...
தாழப் பறந்து
சாலைக் கடக்கும்
காகத்தின் கண்கள்..

என்
வாகனத்தின்
'ஹெட் லைட் ' - வெளிச்சத்தை..

தீண்டி விலகுகிறது...
மிரட்சியோடு..!

****

குறுக்கு வெட்டு..

*

ரமணி டீச்சரின்..
கையிலிருக்கும்..
மர ஸ்கேலில்..
புதைந்து கிடக்கும்..
எண்களை...
வாசிக்கப் பழகும் கணத்தில்..
புறங்கையில்...விழுந்துவிடும்..
பட்டென்று ஒரு அடி..

அறிவியல் வகுப்பு வரை
வலிக்கும் அதன் காரணத்தை...
அறிவியல் துணை கொண்டு
விளக்கும்படி..
ராமச்சந்திரன் மாஸ்டரைக்.. கேட்டதால்..
காது நுனி திருகப்பட்டு
சிவந்ததை..

கடைசி வகுப்பான
தமிழில்...
நெருடியபடி
புத்தகத்தில் ஆழ்ந்ததைக் கவனித்த..
மலர்க்கொடி டீச்சர்..

புத்தகப் பக்கத்தை கவனித்து..
புருவம் உயர்த்தி..ஆச்சரியமாய் கேட்டார்..
' கவிதை பிடிக்குமா உனக்கு..?'
பயத்தில்...
'ஆமா..' என்பதாக தலையசைத்த நொடியில்..
தலை கோதி... நகன்றதும்..

பிரித்திருந்த புத்தகத்தில்...
பாரதியின் வரிகள்..
என்னைக் குறுக்கில் வெட்டின..

*****

நீ..

*

குழந்தையின்
கன்னக் குழிக்குள்...
திரள்கின்ற புன்னகையை..

மொத்தமாய்
உறிஞ்சு விடுகிறாய்.. நீ

முத்தமென்ற பெயரில்..!


****

போவதாகச் சொல்லிப் போவான்..

*

வருவதாகச் சொல்லியிருந்தான்..
வந்தப் பின்
போவதாகச் சொல்லிப் போவான்..

இடைப் பட்ட..
காலத்தை..
நிரப்பியபடியே இருப்போம்...

எப்போதும் உரையாடலால்..

எப்போதாவது..
மௌனத்தால்..!

****

மெட்ரோ கவிதைகள் - 35

*
நகரம் முழுவதும்..
சலித்தாயிற்று..

தென்படவேயில்லை..

ஒரு
ஒற்றையடிப்பாதைக் கூட..!


****

அசைந்துக் கொண்டே இருக்கும் நாணல் நுனி..

*

பசலைக் காட்டில் பூக்கின்றன
தலைவியின்
மௌனங்கள்..

அதைக் கொய்ய நீளும்
விரல்களில் படர்கிறது காமம்..

ஒற்றைக் காம்புத் தாங்கிய பூவிதழ்களில்..
உருள்கின்ற...முத்தங்கள்...
வேர் வரை இனிப்பதாக
குறிப்பெழுதி...தவிக்கின்றன...

நோக்கும் திசைதோறும்...
வண்டை இசைக்கும் தென்றலை
தூதுப் போக நிர்பந்திக்கின்றன..
தேன்துளிகள்...

தாழும் கண் மலரை..
நதிக் கரையில்..
அமர்ந்து...

நெளியும் அலைநிழலில்...
மிதவையிடுகிறாள்...

அந்தி வானில்...
முகிழும் இரவைத் தீண்டி
அசைந்துக் கொண்டே இருக்கிறது...

அவளுக்காக
ஒரு நாணல் நுனி...

*****

சப்தங்கள் அடைகாக்கப்படும் கூடு..

*

இரவுக் கிண்ணம் வழிகிறது
வெயிலின் குருதியோடு..

நிலவின் நதியை
பருகிவிடும் தாகத்தோடு
முன்னகர்கிறது
கருத்த மேகமொன்று..

பறவைகளின் சிறகுகளைக்
கோதுகின்றன அலகுகள்..

சப்தங்கள்
அடைகாக்கப்படும் கூட்டை
அசைத்துக்கொண்டே
இருக்கிறது..

மரக்கிளை..!

*****

செவ்வாய், நவம்பர் 24, 2009

விரல் நுனியில் சுருளும் வேலிப்படல்...

*

எதையோ கேட்க நினைத்த
தவிப்பை..
முக பாவனையில் எழுதியபடியே
உடன் வருகிறாள்..

மௌனத்தைக் குழைத்து..
சாலையாக வழித்துப் போயிருக்கிறார்கள்
முன்னே சென்று விட்டவர்கள்..

இருளை சுழித்துக் கொண்டு
கீழிறங்குகின்றன
மஞ்சள் விளக்கொளிகள்..

விரல் நுனியில்
சுருளும் முந்தானை முனை..
வரிகளைப் பிரசவிக்கிறது..
விடியலில்..
'தண்ணீர்' எழுதவிருக்கும் கவிதைக்காக..

'ம்..?' -
என்ற.. அர்த்தமில்லா கேள்விக்குள்..
ஓராயிரம் பதில்கள்..
முண்டுகின்றன..
எப்படியாவது வெளிப்பட்டுவிட..

பாதங்களுக்கு கீழ்..
சிக்கிக் கொண்ட
சிறு சரளைக் கற்களை
உதறியபோது..

அவள் வீடு வந்துவிட்டது..

நேற்றைப் போலவே..
இன்றும்..
கையசைத்து..
வேலிப்படல் கடந்து..
உள் நுழைகிறாள்..
அமைதியாக..

****

வியாழன், நவம்பர் 19, 2009

நெளியும் மீனும்.. பூனைக்குட்டியும்..

*

குடை விரிப்புக்கான
பொத்தானை அழுத்திய வேகத்தில்..
வானம் விரிந்தது..

மழை நீரே உறைந்து..
சில்லிட்ட குடைக் கம்பியானது..

கணுக்கால் நீரளவில்..
தெருவே..
மீனாகி நெளிந்தது..

நான்கு பிரிவு சாலை முக்கில்..
மல்லாந்து
வாய் பிளந்துக் கிடக்கும்..
குப்பைத் தொட்டிக்குள்..

பதுங்கியபடி கவிதை வாசிக்கிறது
பூனைக்குட்டி..

ஓயாத மழையோடு..
போட்டியிட்டு நீள்கிறது..
கவிதை மழை..

' மியாவ்..மியாவ்..! '

****

வெங்காயச் சருகுகள் மண்டும் வேறொரு மரத்தடி..

*

சிவப்பேறிக் குமிழ் கொப்புளிக்கும்..
இரவின் கீழ் முனையில்..

நரை கீறி..
புரையோடிய..நிலவின்
இடுப்பையொடிக்க..

மூங்கில் சீவுகிறோம்..
நானும்..
தாடிக் கிழவனும்..

' வெட்டி வேலை ' - என்பதாக
திண்ணையில் துண்டுத் தட்டி
எழுந்து போகிறார்..
வேறொரு மரத்தடித் தேடி..

' வெங்காயம்..'

****

முக்காடிட்டு உட்காரும் ஒரு நீண்டப் பெருமூச்சு..

*

ஒரு சமவெளிப் பாலையில்..
பாதம் புதைய..
வெகு நேரம் நடந்ததின் முடிவில்..
மேலும் மேலும்..
மணலும் காற்றும்..
எழுதி வைத்திருக்கும் வரிகள்..

நா வறண்டு காய்ந்த வெப்பத்தில்..
எழுத்துக்கள்..
மொழியைத் தொலைத்தத் தவிப்போடு..
தொண்டைக்குள் இறங்க மறுக்கின்றன..

மூச்சுக் காற்றின் உஷ்ணத்துள்..
முக்காடிட்டு..
ஓசையின்றி உட்காருகிறது
ஒரு நீண்டப் பெருமூச்சு..

என்ன செய்ய..?

புருவங்களுக்கு மேல்..
உள்ளங்கை குடைப் பிடித்து..
தொலைவில் நெளியும் கானல் நீரில்..
யாரைத் தேடுகிறது..
இந்தப் பார்வை..?

உரையாடலுக்கு வழியற்று..
மௌனமாய் நிற்கிறோம்..
நானும்.. என் மொழியும்..

யாராவது..
என் தலைக்கு மேல் விரிந்த
வானத்தில்..
வட்டமிடும்..
ஒற்றைப் பருந்தின்..
உதிரும் இறகொன்றைப்
பிடித்தபடி..
என்னருகில் இறங்குங்களேன்..

நீண்ட ஒரு உரையாடலுக்காக...
மௌனமாகக் காத்து.. நிற்கிறோம்..
நானும்..
என் மொழியும்..!

****

பிடிவாதம்..

*

அட..!
என்பதாக அதட்டிச் செல்லும் வினாக்களின்..
ஒவ்வொரு இடுப்பிலும்..

பிடிவாதமாய்
உட்கார்ந்துக் கொண்டு..
கீழிறங்க மறுக்கிறது..

மழலையான பதில்..

****

தளிர்..!

*

நிலத்தை மோதி
பிளக்கும்
விதையின் இதழ்களை..
முத்தமிட்டு..
உடைகிறது..

ஒற்றை மழைத் துளி..!

****

பனிப் போர்த்திய ஜன்னல் கண்ணாடிகள்..

*

பொய் சொல்லுவதற்கான
ஒப்புதலை..
ரகசியமாய்
உள்ளங்கையில்.. கிள்ளி
உறுதி செய்து கொண்டாள்..

வாசல் கடந்து..
வீட்டுக்குள் நுழைந்த நொடியில்..
அவள் அம்மாவின் கண்களை
சந்தித்தக் கணத்தில்..
ரகசியக் கண்ணாடியை
உடைத்தன..
என் உதடுகள்..

' நான் உங்கள் மகளை
காதலிக்கிறேன்..' - என்றேன்..

' சோ ' வெனக் கைத்தட்டி
வரவேற்றது..
எதிர்பாராத ஒரு ஆலங்கட்டி மழை..

பூக்களும்..
ஒருமித்த மனதோடு..
தலையசைத்துக் கொண்டன..

ஏனோ..
கனத்த மௌனத்தோடு..
வெகுநேரம்..
என்னையும்.. அவளையும்..
அவள் அம்மாவையும்..
பனிப் போர்த்தி வேடிக்கைப் பார்த்துக்கொண்டே
இருந்தன..
ஜன்னல்.. கண்ணாடிகள்..

****

தலைமுறைப் பதிவுக்கான குறிப்புகள்..

*

கர்வமிகு
விரலசைவின் நுனியில்..
மௌன ரேகையொன்று
சுழித்துக் கொள்கிறது..
புதிய அடையாளமென..

வாழ்விற்கான காகிதங்களை..
கச்சாப் பொருட்களின்றி..
உற்பத்தி செய்து வழங்குகிறது காலம்..

பதிவுக் குறிப்புகளை..
தலைமுறைகள்
எழுதி..எழுதி..
ஓய்ந்த பின்..

கடைசி ஒருவன்..
கையொப்பமென
உருட்டுகிறான்..

கர்வமிகு..
விரலசைவின் நுனியை...

****

இரவின் நிழல் மழை..

*

சிம்னிக் குடுவைக்குள்..
காற்றின் தூரிகை..
எழுதும்..
சுடர் நிறத்தில்..

உருகி வழிகிறது..
ஒரு
கரு நிழல்..

அது..
சுவர் முழுதும்
படர்ந்து படர்ந்து..
மெல்ல
வெளியேறுகிறது..
என்னை இழுத்துக்கொண்டு..

மழையில் நனையும்படி..

****

இலக்கின்றிப் பறக்கும்..கோழியிறகு..

*

' அலைபாய்தல் ' என்கிற வார்த்தைக்கான
உரையாடலுடன்..
தொடங்கியது..
அந்தப் பேருந்து பயணம்..

ஜன்னல் கண்ணாடியை
இறக்கி விட்டுக் கொண்டதில்..
மழைச் சாரல்..
வெளிப்புறமாய் கண்ணீர்க் கோடுகளை..
மௌனமாய் இறக்கியதில்..
காட்சிகள்.. புகைப் போர்த்தின..

உன் வலக்கையும்
என் இடக்கையும்..
விரல் பின்னிக் கோர்த்துக் கொண்டதில்..
ரேகைகளுக்கிடையே..
ஓடிப் பிடித்து விளையாடுகின்றன..
இன்றிரவு
எழுதப் போகும்..கவிதைகள்..அத்தனையும்..

அலைபாய்தல்..என்பது..
கண்களை..
அதனின்று..உருவாகும் பார்வை..
சோழியுருட்டுவது.. - என்றேன்..

' ஆம்..
பேருந்து நிலையத்தில்..
நீ வந்து சேரும் வரை..
எனக்கு அது தான் நேர்ந்தது..' - என்றாய்..

அலைபாய்தல் ஒரு
கோழியிறகு..
மனதின் திசைவெளி யெங்கும்..
இலக்கின்றி...
பறந்துக் கொண்டே இருக்கும்.. - என்றேன்..

' ஆம்..
வீட்டிலிருந்து கிளம்பும்போது..
அப்படித் தான் இருந்தது..' - என்றாய்..

கண்ணாடி ஜன்னலின்.. நீர்த்திவலைகள்..
ஆர்வமுடன்..
உன் முகத்தை நோக்கித் திரும்பி வழிந்தன..
முன்பை விட வேகமாய்..

அலைபாய்தல்..
ஒரு மௌனச் சுழி..
அதில் சிக்கிக் கொள்ளும் தருணத்தை..
எளிதில்.. மீட்டெடுக்க இயலாது.. - என்றேன்..

' ஆம்..
எனக்கு.. இப்போது..
அது தான் நடந்துக் கொண்டிருக்கிறது..' - என்றாய்..

மழை ஓய்ந்து..
ஜன்னல் கண்ணாடிகள் திறக்கப்பட்ட வேகத்தில்..
அலை அலையாய் பாய்ந்து..
உட்புகுந்தது..
மற்றுமொரு உரையாடல்..

' தென்றல் ' - என்றாய்..
வெட்கமாய் தலை சாய்த்து..
சிரித்தபடி..

****




நீச்சல் விளிம்புகள்

*

கவலை நீர்
தேங்கிய..

முகக் குட்டையில்..

குழப்பமாய்
நீந்துகின்றன..

கண்களிரண்டும்..

****

குமிழ்களில் அடைபடும் மினுமினுப்பு..

*
என் அறையிலிருக்கும்
உயிரற்றவைகள்..
கோபத்தின்
இலக்காகி உயிர் விடுகின்றன..
முரட்டுக் கரங்களில்..

விளைவுகளின்
உணர்வுக் கதுப்பில்..
குமிழ் விடுவதில்..
அடைபடுகிறது
நியாயங்களின் மினுமினுப்பு..

உடைந்த சிலப் பொருட்களில்
அடையாளம் விட்டு நகர்கிறேன்..
என் கோபத்தின் முனைகளை..

இப்போதும்..!

****

வெள்ளி, நவம்பர் 06, 2009

துளைகள்..

*

ஆயிரம் ஜன்னல்களைத் திறந்து..
கிளைகளினூடே..
பூமியை

ஒவ்வொருத் துளையிலும்
எட்டிப் பார்க்கிறது
வெயில்..!

****

நழுவும் இசையின் குறிப்புகள்..

*

மீட்டத் துடிக்கும்
வர்க்க விரல்களின்
நுனியிலிருந்து நழுவி..

காற்றில் அரங்கேறுகிறது..
இசையின் குறிப்புகள்..

****

ஒரு பகல் பொழுது..

*

சலனமற்று
நீ ஒருக்களித்துப் படுத்துக்கிடந்த
ஒரு பகல் பொழுதை..

மின்விசிறியின்
மென்காற்றில் அலையாடிய
உன் நெற்றி முடி..

தரையில்
எழுதிக் கொண்டேயிருந்தது..
அமைதியாக..!

****

இரண்டு காட்சிகளும் ஒரு முரணும்..

*

குறைந்தபட்சம்
ஒரு சிகரெட்டாவது
எரிய நேர்கிறது..

நீ என்னை
அலட்சியப் பார்வையுடன்
கடக்கும்
நிமிடங்களில்..!

****

வில் வடிவ
உதட்டிலிருந்து
விடுப்பட்டுத் தைக்கும்
புன்னகை அம்பின்
அதிர்வு..

நாணின் துடிப்பில்..
'யுக'
நீட்சியாகிறது..!

*****

மெட்ரோ கவிதைகள் - 34

*
மழையில்
உடல் முழுக்க
நனைந்த பிறகும்..

பறக்கத் தோன்றாமல்
மயிர் சிலுப்பி..

மொட்டைமாடியின்
ஒற்றைக் கொம்பில்
பிடிவாதமாக
அமர்ந்திருக்கிறது..

எப்போதும் போல்
இன்றும்
ஒரு காகம்..!

****

மெட்ரோ கவிதைகள் - 33

*
சாலையை
அகலப்படுத்தும் அளவுகளுக்காக
'டேப்பின்' மறுமுனையை
எதிர்த்திசையில் பிடிக்க உதவ..

'அவனை' -
அழைக்கிறார் என்ஜினியர்..

வெட்டிக் கொண்டிருந்த
மரத்தின் அடித்தண்டில்
கோடரியை
ஓங்கி அறைந்து செருகிவிட்டு
'தலைமுண்டாசு' டவலை உருவி
முகம் துடைத்தபடி..
ஓடி வருகிறான்..

அவசரமாய் 'அவனும்'.

****

மழைக் கம்பிகள்...

*

பெருமழைக்குப் பின்னான
மழைத் துளிகளைத்
தாங்கிப் பிடித்திருக்கும்
கொடிக் கம்பிகளை..

கவ்வி நிற்கின்றன..

அம்மா
மறதியாக விட்டுப்போன..
இரண்டு ' கிளிப்புகள் '

****

குடில் குருவியின் மணித்துளி..

*

அழகிய
குடில் வடிவக் கடிகாரத்துக்குள்ளிருந்து..
ஒவ்வொரு மணி நேரத்துக்கும்
கதவுப் பிளந்து
வெளிப்பட்டுக் கூவும் குருவி..

என்ன நினைத்ததோ..

இன்று அதிகாலை..
குடில் விட்டு வெளியேறி..

ஜன்னல் திட்டில் பறந்தமர்ந்து..
இளவெயிலில்
சிறகு கோதியது..!

****

அடிவாரப் பூக்கள்..

*

மௌனத்தின்
அடிவாரத்தில்..
மேலும் மேலும்
பூக்கின்றன சில பூக்கள்..

பறிப்பதற்கான
விரல்களை
இறுக மூடிக் கொள்கிறது
வாழ்க்கை..!

****

பின்னலிடத் தொடங்கும் முனை..

*

எரியும் சடலங்களின்
நின ஒழுகலை
தீயின் கண்ணீரென
காணத் தவறிய வெட்டியான்..

தடித்த மூங்கில் கழிக் கொண்டு
மேலும் தூண்டி..
மரணத்தைக் குளிர்காய்கிறான்..

மிச்சமிருக்கும் வெளிச்சம்
அந்தி நோக்கிக் கசியும் கணத்தில்..

'இரவு' -

மயானத்தின் அடர்ந்த பந்தல் நுனியை..
பின்னலிடத் தொடங்குகிறது
கனத்த அஞ்சலியோடு..

****

நகமென வளருமேயென...

*

அழும்படி
உன்னைப் பணிக்கும்
கடவுளை
உனக்காக நேர்ந்துக் கொள்ளும்படி
நீ பணிக்கலாம்...

இரவுகளை
கைக்குட்டையாக்கி
அடிக்கடி ஈரப்படுத்தாமல்
வெளிச்சம் மங்கும் பகல்களை
ஒரு தொட்டி நீரில்
ஊற வைக்க முயற்சிக்கலாம்..

உன்
பதற்றங்களை
பல்லிடுக்கில் செருகி..
உடனே கடித்துத் துப்பிவிடுவதால்..
மீண்டும்
நகமென வளருமேயென
யோசனைத் தேவையில்லை..

வாழ்வதற்கான பக்குவத்தை..
திருமணப் பத்திரிகையில்
யாரும் அச்சடிப்பதில்லை..

அவ்வப்போது
உலரும் உதடுகளை
புன்னகையால் நனைத்துக்கொள்..

வரவேற்பறையில்..
விருந்தினர்கள்
காத்திருக்கக் கூடும்..!

*****

நன்றி : ( உயிரோசை /உயிர்மை.காம் ) நவம்பர் - 2009

www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2210

ஈர்ப்பற்ற படிமமாகும் காலம்..

*

நரை மீசையின் நுனி
நண்பனோடு பேசும்போதெல்லாம்
நாவில் இளமையின் சுவையைக் கூட்டுகிறது..

கன்னத்து சதை மடிப்பை
பேரனோ பேத்தியோ
தளிர் விரலால் பிதுக்கும்போது
புரையோடுகிறது முதுமை..

பழுப்பேறிவிட்ட கண்களின்
வெண் பரப்பில்...
பிம்பங்களின் பதிவேற்றத்தில்

ஈர்ப்பற்ற படிமமாகிறது
காலத்தின் காட்சி யாவும்..

முனையாமலே நழுவுகிறது
இரவும் பகலும்
அனுதினம்..!

*****

புள்ளிகளின் அமைதி..

*

மௌனப் பனித்துளிகளை
சேகரிக்கத் தொடங்கும்
சிறுமியின்
இறுகிய உதடுகளுக்கு
மேற்புறத்தில்..

புள்ளிப் புள்ளியாகவே
வியர்க்கிறது
அமைதியாக
ஒரு கோபம்..!

****

திசை முட்கள்..

*

கனவின் நான்கு திசைகளிலும்
இரண்டிரண்டு வாசல்கள்..

ஒவ்வொரு வாசலிலும்
ஒரு நண்பன்..

ஒவ்வொரு நண்பனும்
அழைத்துப்போக காத்திருக்கிறான்
அவனவன் திசைநோக்கி..

இமை கூசி
கண் திறந்த பார்வையில்..
அகப்பட்ட கடிகாரத்தில்

முட்களிரண்டும்
உதிர்ந்து கிடந்தன..

****

திங்கள், ஆகஸ்ட் 31, 2009

மெட்ரோ கவிதைகள் - 32

*
குயில்களை
ரத்து செய்கின்றன
பட்ட மரங்கள்..

காகங்கள் மட்டுமே
கூடு சமைக்கின்றன..

மழையற்ற
நகரத்தை நம்பி..!

****

மெட்ரோ கவிதைகள் - 31

*
நெருக்கடி..
சூழல்...மிதக்கும்..
நிமிடங்களை..
காகிதக் காற்றாடியின்..
சுழற்ச்சியோடு...
பினைத்துவிடத் துடிக்கிறான்...

குழந்தைகளுக்கான்...
பொம்மைக் காற்றாடிகள்..
விற்கும்..சிறுவன்..

மனித
கசகசப்புகளுக்கு...நடுவே...

ரங்கநாதன் தெரு..
பிழிந்து போடும்...
பசியின்...அகவல்களை..

அவனின்..விரல் நுனிகள்...
முன்னைக் காட்டிலும்..
வேகமாக...
சேகரிக்கின்றன...

****

என் இரவின் அகாலம்..!

*

நேர்முகக் கணக்குகள்..
ஏதும்.. அற்ற..
பிரியங்களை..

சின்ன சின்ன
அறைகளாக செதுக்கி...
கவிதை மாளிகைக்குள்
பொருத்திவிடத் துடிக்கும்..

என் இரவின்..
அகாலத்தை..

பஞ்சு மேகங்கள் அனுப்பி..
மழைப் பொழிய முனைகிறாள்..

இழுத்துப் போர்த்திக் கொள்ளும்..
பாவனையில்..
ஜன்னல் திரைச்சீலைகள்...
காற்றை வடிக்கட்டி..

மேஜையின்..
தெற்கு மூலையில்...
குவித்து வைத்துவிட்டு..
அமைதியாக காத்திருக்கிறது..

நான் எழுந்து...
அகலும்...தருணத்துக்காக..!

*****

கடிதக் காலங்கள்..

*

கடித த்வனியில்..
வெளிர் மஞ்சள் நிற..
மழையின் சாரலை..
விரல்கள்..
சில்லிட்டு உணர்ந்துக் கொண்டன..

வைக்கோல்...போரின்..
வெப்பச் செதில்களை..

வரப்பின்..நுண்ணிய ஈர நுனிகளை...

கம்மாய்க் கரையை..
மென்மையாய் மோதித் திரும்பும்..
அலையின்..சிரிப்பை..

எளிய..
வார்த்தைக் கொண்டு...
நட்பை வனைந்திருந்தான்..
பால்ய நண்பன்..

என்
அறைக்குள்...
கதவு திறந்து...
மேஜை மீது வைக்கப்பட்ட..

'பிசாவின்'
ஆவி பறக்கும்...
வெம்மையை...
ஏசியின்...ரீங்காரம்...
மெல்ல விழுங்கத் தொடங்குகிறது..

*****

மெட்ரோ கவிதைகள் - 30

*
கல்லறைக்குள்...
புல் மேயும்...
பசுக்களின்..
பாலைக் கறந்து..

பிரக்ஞையற்று...
காபியோ..
டீயோ.. கலந்து
குடிக்கிறார்கள்..

இறுதியாக..
மரணங்களுக்கு
போய் வந்தவர்கள்..

****

காதலுக்கான முதல் சரிகை..

*

முன்னெப்போதும்
அறிந்திராத
புன்னகையொன்றை..
ரகசியமாய்
தோட்டத்து கிணற்றுக்கு பின்புறம்
வளர்த்து வருகிறாள்..

பார்வை வண்டுகளின்
இமை ரீங்கரிப்பில்..
அவளின்
வாசலைக் கடக்கும்
தருணங்களிலெல்லாம்..

நுகர முடிகிறது
ஒரு மகரந்தத்தை..

உகுக்கும்
தேன் துளிகளை..
பெருக்கிடும்
ஊற்றுச் சுழியை..
பத்திரமாய்
கன்னத்தில் வைத்திருக்கிறாள்..

வில் வடிவ உதடுகளில்..
பொன்மாலை வெயிலொன்று..
பூசி நகர்கிறது..
காதலுக்கான
முதல் சரிகையை..

என்
சைக்கிள் மணியின்..
ஒலியை.. சேகரித்து..
தலையசைக்கிறது..
எப்போதும்..
அந்த தங்க ஜிமிக்கி...

****

குரு தட்சனை..

*

உயிரற்று விழுந்தது...
நறுக்கப்பட்ட
கட்டைவிரல் மட்டுமல்ல..

ஏகலைவனின்..
மௌனமும் தான்..!

****

நீர்க் குமிழில்..

*

வண்ணங்கள் பூசிக்கொண்டு
பறந்த
சோப்பு நீர்க்குமிழில்..

ஆசையோடு..
சிறிது தூரம் பயணித்தது..

சிறுமியின் மூச்சுக்காற்று..!

****

பார்வை நுனி..

*

பாவனை வண்டுகளை..
பார்வை நுனியிலிருந்து
பறக்க விடுகிறேன்..

தேன் மலர்களை..
தேடும்..
நடிப்போடு..
உன் கூந்தலுக்குள்..
சென்று
ஒளிந்துக் கொள்கின்றன..

****

மெட்ரோ கவிதைகள் - 29

*
மழை பொழியாமல்..
கடந்து போகும் மேகங்களை..
கவலையற்று..
வேடிக்கைப் பார்க்கின்றன..

என்
சின்னஞ்சிறிய பால்கனியிலிருந்து..

நிறமிழந்துவிட்ட
பிளாஸ்டிக் பூக்கள்..

****

நொடி முள்ளின் நகர்தல்..

*

நெடு நாட்களுக்கு பின்பான
பயணத்துக்குரிய
ஏற்பாட்டில்..

நண்பனின் குரலை..
'சாட்டிலைட்' கருவிகள்..
பிரபஞ்சத்தின்
ஆழ் இருளில் மிதக்க விடுகின்றன..

நொடி முள்ளின் நகர்தலில்..
எண்களுக்கு இடையே..
கும்மாளம்..

எப்போதும்
சுற்றிக் கொண்டிருக்கும்
நிமிடங்களுக்கு..
சட்டென்று
அவசரங்களைத் தீர்மானித்தபடி..

உருவாகும் பயணங்கள்..

வாழ்வின்
பிரிவுப் பள்ளங்களை..
இட்டு நிரப்புகின்றன..

அடிவாரங்கள் என..

****

காதல் நிமிடங்கள்..

*

ஹாலில் ..
என்னை.. நீ பார்த்த
நிமிடத்தில்..

உன் கன்னம்
சிவந்து விட்டதாக
நான் சொன்ன பொய்யை..

மேஜையில்..
உன் அம்மா
வைத்துவிட்டுப் போன
ஆப்பிள்கள் நம்பவில்லை..

ஆனால்
நான் வாங்கி வந்த..
செர்ரிப் பழங்கள்
ஒத்துக் கொண்டன..!

****

மென் கதவுகள்..

*

உன்
கன்னத்தில் முத்தமிட
மெல்ல
குனிந்தபோது..

அதுவரை
கைத்தட்டிக் கொண்டிருந்த
இமைகள்..
மென்மையாக
கதவை மூடிக்கொண்டன..!

*****

சொல்ல மறந்தவை..

*

கைப் பிசைந்து..
தவித்திருக்கும்
வராண்டாவில்..

பூப் போல
கையிலேந்திய
குழந்தையோடு..

நடந்து வரும்
' நர்ஸை..'

ஏனோ நாம்..

'தேவதையென்று..'
அழைக்க மறந்துவிடுகிறோம்..

****

வலை பின்னல்...

*

நினைவின்
இடுக்குகளில்..
வலை பின்னும்
சிலந்தி..
எட்டு காலில்
நகர்கிறது..
சுடுகாட்டை நோக்கி.. !

****

மெட்ரோ கவிதைகள் - 28

*
வளர்ந்து விட்ட
மகள்களின்..அதட்டலை..

மறுப்பேதும் சொல்லத் தோன்றாமல்..
காதில் வாங்கியபடியே..

வயதான
அம்மாக்கள்..
பின் தொடர்ந்து நகர்வதுண்டு..

மௌனம்
போர்த்திய
கணங்களாய்..

****

மெட்ரோ கவிதைகள் - 27

*
பின்னிரவில்..
மங்கிய சோடியம் வேப்பர்
விளக்கொளி பூசிய
சாலையில்..

தொய்வான நடையில்
வீடு திரும்பும்
தருணங்களில்..

எப்போதாவது..
கேட்டு விட நேர்கிறது..

ஒதுக்குப் புறமாய்
நிற்கும்.. காருக்கடியிலிருந்தோ..

இருள்படிந்த
குப்பைத் தொட்டிகளின்
மறைவிலிருந்தோ..

இடைவிடாத...
அழைப்போடு ஏங்கும்..
பூனைக்குட்டியின் குரலை..!

*****

தவளையின்..இரவு பாடல்..

*

மின்மினிப் பூச்சிகளை
கண் சிமிட்டி
அழைக்கின்றன..
இரவு நெடுக
விண்மீன்கள்..

கறுத்து மிதக்கும் குளத்தின்
தாமரை இலை மீதமர்ந்து..

அடித்தொண்டை புடைக்க..
' கொர்ரக்.. கொர்ரக்..' - என்று..
புகார் சொல்லிக்கொண்டே..
இருக்கிறது..

ஒரு தவளை..!

****

மெட்ரோ கவிதைகள் - 26

*
பஸ் ஸ்டாப்புகளில்..
ரயிலடிகளில்..
தியேட்டர் வாசல்களில்..
ஸ்வீட் ஸ்டால் ஓரங்களில்..

கையேந்தும் குழந்தைகளின்
கண்களில்..

சாம்பல் பூத்துத் தோன்றும்
வானத்தை..
அழுக்காய் கடக்கும்
மேகங்கள்..

கண்ணீர்த்துளிகளை
முட்டி நகர்ந்துவிடுகிறது..

எப்போதும் போல்
இப்போதும்..!

****

நெம்புக் கோல்...

*

ஆலாய்
பறந்து விடுவதற்கான
முனைப்புகளோடு..
சிறகுகள் முளைக்கப் பணித்தேன்..
சொற்களுக்கு..

ரீங்கரிப்பு உதறலோடு
காதருகே.. அடம்பிடித்தன
வட்டமிட்டபடியே..

துரத்துவதற்கான
வாக்கியத்தைத்
தேடத் தொடங்கியபோது..

எங்கள்
வாதத்தைப் புரட்டிப் போட..
கையிலொரு
நெம்புக் கோலோடு..
வந்து சேர்ந்தான்..
மற்றுமோர் நண்பன்..

****

வண்ண பலூன்கள்..

*

' என்கவுன்ட்டர் ' -
என்றபடி..
சுடுபடும்.. புரட்சியாளன்
முறையற்ற அறிவிப்போடு..
புதைபடுகிறான்..

அவன் மீது
முளைக்கும் புல்வெளியில்..

வண்ண பலூன்களை..
துரத்திப் பிடித்தபடி..
குழந்தைகள்
விளையாடக்கூடும்..

****

நுகரப்படாத வாசனைகள்..

*

புதிய பாடப்புத்தகத்தின்
வாசனையை..
சுமந்து நிற்கிறது
40 -ம் பக்கத்தில்
தாஜ்மஹால்..

மறுபக்கத்தில்..
சிறையில் அடைப்பட்ட..
ஷாஜகானின்..
மரண வாசனையும்..

****

மிதப்பதாகக் கற்பித்துக் கொள்ளும் சொற்கள்..

*

புன்னகைக் குழைவுகளில்..
ஊறியபடி
உள் வழிகிறது..
சொற்களின் சகதி..

மிதப்பதாகக் கற்பித்துக்கொண்டு
பொய்யாகிப் போகின்றன
சொல்லப்படாத
அர்த்தங்கள்..

****

பொடித்து உதிரும் காலம்..!

*

குரல் தொலைந்துவிட்டதாக
புகார் ஒன்று எழுதி
ஒட்டி வைத்திருக்கிறாள்
அன்பின் கதவு மீது..

மரணத்தின் எண்ணிக்கையை
அறிவிப்பதாகவே இருக்கிறது..
இலக்கத்தின்
வட்டச் சுழற்சிக்குள்..
சிக்கி நிற்கும் எண்கள்..

கிரீச்சிடும்
தாழ்ப்பாளின் எச்சரிக்கையை..
பொருட்படுத்துவதில்லை விரல்கள்..

யாராவது..
எப்பவும் - வருவதும் போவதுமாக
துருப்பிடித்துத் திரும்புவார்கள்..

புலன்கள் அறியா வகையில்..
மேற்கூரையிலிருந்து..
பொடித்து உதிரக்கூடும்..
வாழ்வதாக
நம்பும் காலம்..!

****

நிழல் தவிப்பு..

*

உச்சி வெயில் அலையும்..
அகன்ற மைதானத்தில்..

கொடியற்றக் கம்பத்தின்
அடி நிழலை..

தவிப்போடு
சுற்றிக் கொண்டிருக்கிறது
ஒரு
சிறு எறும்பு..!

****

சூட்சமத் துளிகள்..

*

மௌனச் சிலாம்பு ஏறிய..
மனசின்..
ரேகைக் கிளைகளில்..
ஊர்ந்து பரவுகிறது..
சூட்சமத்தின்..
குருதித் துளி..

****

சரிகைப் பின்னல்..

*

என்
அறையில் அடர்ந்த
இரவின் மீது
சரிகைப் பின்னலிடுகிறது..
மெலிந்த கதவின்
இடுக்கினூடே..
இழையும்
தெருவிளக்கின் ஒளி...

****

பருகும் வக்கற்ற.. காலக் குருடன்..!

*

'சல்லிகள் '
பெயர்ந்த புன்னகையின்
குழிகளில்..
தேங்கி விடுகிறது
நிறையவே மௌனம்..!

அதை
அள்ளிப் பருகும்..வக்கற்ற
காலக் குருடனின்..
பாதங்களில் மட்டுமே..

கொஞ்சம் ஈரம்..!

****

வாழ்வின் வேட்டை..

*

முகங் கொள்ளாத் தயக்கங்களோடு..
உன்..
வாசலில் நின்ற தருணத்தை..
' பட் ' டென்று..
ஒரு கதவைப் போல்
அறைந்து சார்த்தினாய்..

முடிவில்லா
என்
பகலை மடித்து..

உன் அயர்ச்சியைத் துடைக்கவே..
பிரியமாய் பயணிக்க நேர்ந்தது..

காலங்களை..
' கவன் ' களில் பொருத்தி
குறி பார்க்கும்
வாழ்வின் வேட்டையில்..

பலியாகிப் போகிறது
ஒவ்வொரு முறையும்
மனசு..!

****

நன்றி : ( உயிரோசை /உயிர்மை.காம் ) நவம்பர் - 2009

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2244

மெட்ரோ கவிதைகள் - 25

*
' அனக்கோண்டாக்கள்.. '
' தேள்கள்.. '
' தேவதைகள்.. '
' டிராகன்கள்.. '
மற்றும் சில -
' ஏலியன்கள்..'

டாட்டூக்களாக..
நெளிகின்றன..

' வீக்-என்ட் ' -
தியேட்டர்களில்..
வெண்ணிறத் தோல்களில்..

தொப்புள்..
காது..
மூக்கு..
கீழ் உதடு..
புருவ முனைகளில்..
தொங்கும் வளையங்களில்..

தாவிப் பிடித்து வித்தைக் காட்ட..
திணறுகிறான்..

நாகரீகக் கோமாளி..!

****

மெட்ரோ கவிதைகள் - 24

*
அலைவரிசை
ஒத்துப் போவதாகவும்...

' டியூன் ' - பண்ணுவதற்கான
' சேனல் ' -
எதுவென்பதாகவும்..

நட்பைத் திருகியபடியே..
நகரத்து வீதிகளில்..
திரிகிறார்கள்..

'நண்பர்கள்' - என..!

****

வட்ட வெயில்..

*

சமையலறை
ஜன்னல் வழியே
ஒழுகும் வெயில்..

வட்டமாய்
காய்ந்துக் கொண்டிருக்கிறது
' நான் - ஸ்டிக்கில் ' -

திருப்பிப் போடுவதற்கான
கரண்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்..
நான்..

****

ஈரம் சொட்டும் வாதங்கள்..

*

நைலான் கொடியில்..
அங்கொன்றும்
இங்கொன்றுமாக..

வெவ்வேறு வண்ணங்களில்..
செருகி நிற்கும்..
' கிளிப்புகள் ' -

அமைதியாக
வேடிக்கைப் பார்க்கின்றன..

ஈரம் சொட்ட
நாங்கள் பிழிந்துக் கொண்டிருக்கும்
எங்கள்..
வாதங்களை..!

****

கிழிபடாத நாட்கள்..!

*

என்னை
உதாசீனப்படுத்தும்
ஜன்னல் காற்று..

தினமும் புரட்டுகிறது..

காலண்டரில்..
கிழிபடாத..
என்
நாட்களை..

****

ஒடை மரத்தின் முட்களுக்கு அப்பால்..

*

சவுன்டியின்
குரலதிர்வில்..

இடுகாட்டு காகங்கள்..
பலகாரங்களை..
கால்களில் கவ்வி..

கரைந்தபடி மறைகின்றன..
ஓடை மரத்தின்
முட்களுக்கு அப்பால்..

****

துளைகளில் வழியும் பந்தம்..

*

மூன்றாம் துளையில்..
பந்தம்..
வழிந்து..
ஊறுகிறது..

பழைய பிணத்தின்..
மிச்ச சாம்பலில்..

****

நூல் சுற்றி..

*
மரணத்தை..
பிணத்தின்..
கால் கட்டை விரல்களில்..
நூல் சுற்றி
கட்டி வைக்கிறார்கள்..

****

உணவுக் கிடங்கு...

*

சிதறிய
வாய்க்கரிசிகளை..
ஓசையின்றி..
இழுத்துச் செல்கின்றன
எறும்புகள்..
தன் உணவுக் கிடங்கு
நோக்கி..!

****

தொகுப்பும் - தீர்மானங்களும்..

*

மனசின்..
நெடிய பயணங்களை..
ஒதுக்கிவிடும்படியான
தீர்மானங்களை..

புத்தகமாய்
தொகுத்து வைத்திருக்கிறேன்..

கள்ளத்தனமாய்
வாசிக்க சிரமப்பட்டு..

உரிமைக்கான மனுவோடு..
கால் வலிக்க..
காத்திருக்கிறது..

வயோதிகம்..!

****

நேற்றிரவின் கவிதை..

*

என்
ஜன்னல் திரையின்.. நுனியை..
மேஜையிலிருந்தபடி..

எட்டிப் பிடிக்க
பிரியப்படுகிறது..

நேற்றிரவு..
எழுதி வைத்த..
கவிதை..!

****

துருவேறிய நினைவின் உலோகம்..

*

கனவின்
குறுக்குவெட்டு
ஓரங்களில்..

பிசிர் முனைகளைக்
கூர் தீட்டுகிறது..

நாட்படத்
துருவேறிய..
நினைவின் உலோகமொன்று..!

****

நடை..

*

யுக மதில்களில்..
சத்தமின்றி..
நடைப் பழகிவிட்டன
சிந்தனைப் பூனைகள்..

****

குரல்களுக்கான திண்ணை..

*

சில குரல்களிலாவது
இருந்து விட்டுப் போகட்டும்..
எப்போதும் போல்
ஒரு சலிப்பு..

நீயும் நானுமாக
சுமந்து திரியும்
' எரிச்சலை ' -
இறக்கி வைப்பதற்கு..

ஒரு
திண்ணையாவது
கிடைக்காமலா போய்விடும்..?

சில குரல்களிலாவது
இருந்து விட்டுப் போகட்டும்...

*****

யாசித்த இரவு...

*

காலாவதியாகி விட்ட
கனவொன்றை
புதிப்பித்துத் தரும்படி
என்
இரவை யாசிக்கிறேன்..

' மிகவும் அயர்ச்சியாக இருக்கிறது ' -
என்றபடி..

திரும்பிப் படுத்துக்கொண்டது
அது..!

****

காகிதக் கப்பல்..

*

சாக்கடையாகி ஓடும்
மழை நீரில்..
காகிதக் கப்பல்
கல் இடறி கவிழ்ந்தபோது..
அதில் -
மடிந்து கிடந்த
கவிதையொன்று..

கண்ணீராகி கரைகிறது..

***

வெள்ளி, ஜூலை 31, 2009

பகைமைக்கான முகாந்திரம்..

*

இருவருக்குமான
இடைப்பட்ட
நிமிடங்களின் இடைவெளியில்..

மௌனமொன்று..
உறுமுகிறது..

பின்னிரவின்
தெருவிளக்கு உமிழும்
மங்கிய
மஞ்சள் நிற ஒளியின்..
நிழலுக்குள்..

கவனிப்பற்று
சேகரமாகிறது..
சலிப்பு மிகு பகமைக்கான
முகாந்திரம்..

முஷ்டியின்
பலம் முறுகும்..
தசை நார்களில்..

எப்போதும்
தொடுக்க முடிந்ததில்லை..

சமாதானத்துக்கான பூக்களை..!

*****

புதன், ஜூலை 29, 2009

தொலைந்த இரவும்.. அடுத்தப் பக்கத்துக்கான திசையும்..

*

அகாலத்தில்
கதவு தட்டுகின்றன..

பாதி படித்து
கவிழ்த்து வைத்த
புத்தகத்தின்
கதாபாத்திரங்கள்..

'தூக்கம் தொலைத்த
இரவும்..
தொலைந்து விட்டதாக..'
சண்டைக்கு வருகின்றன..

அடுத்தப் பக்கத்துக்கான..
திசையை..
நச்சரிப்புடன் விசாரிக்கின்றன..

'என்னங்க..?' - என்றாள்
தூக்கக் கலக்கத்தில்..மனைவி..

'படு..! காலைல எழுப்பறேன்..' -
என்றபடி..
படுக்கையறை கடந்து..

படிக்கும் மேஜையில்..
கவிழ்ந்து கிடந்த புத்தகத்தை..
கையிலெடுத்து..

விட்ட இடத்திலிருந்து...
வாசிக்கத் தொடங்கினேன்..

தொலைந்த இரவும்..
அடுத்தப் பக்கத்துக்கான
திசையும்..

அறை ஜன்னலின்
இடுக்கினூடே..
மெல்ல நுழைகிறது..

*****

பூக்கும் நுண்ணியங்கள்..!

*

இள ரோஸ் நிற
'ஜெல்லாக'
தளும்பும் உதடுகளின்..

ரேகை வகிடுகளுள்..

பூக்கும் நுண்ணிய
ஈரத் துளிகளில்..

பிரமிக்கும்..
குட்டி பிம்பங்களாய்..
மிதக்கக் கூடும்..

என் முத்தங்கள்..

****

வெட்கத்தின் வளைவுகளை..முத்தமிடும் பென்சில் முனை..

*

வரைக்கோட்டுச் சித்திரத்தின்..
நெளி கோடுகளில்..

வெட்கத்தின் வளைவுகளை..
விரல் நுனிகள்
பிரசவிக்க..பிரசவிக்க..

பென்சிலின்
கார்பன் முனை..
முத்தமிட்டபடியே..
பயணிக்கிறது...

கையெழுத்திட்டு..
புள்ளி வைக்கும் வரை..

****

மல்லுக்கடுதலுக்கான இரவுகள்..

*

என்
அறை முழுக்க..
இறைந்து கிடக்கின்றன
புத்தகங்கள்..

புத்தகங்கள் முழுக்க..
இறைந்து கிடக்கின்றன
வாக்கியங்கள்..

வாக்கியங்கள் முழுக்க..
இறைந்து கிடக்கின்றன
சொற்கள்..

சொற்களுக்குள்..
முண்டியடித்து -
ஒளிந்து கொள்கின்றன
எழுத்துக்கள்..

அர்த்தங்களோடு
மல்லுக்கட்டும்...
இரவை.. உருக்க..

'ஸ்டீல்' பாத்திரத்தில்..
நிரப்பி அடுப்பிலேற்றுகிறேன்..

பாத்திரத்தின்..
அடிவயிற்றை..
ஆசையோடு நக்குகிறது..
'கேஸ்' நெருப்பு...

****

புணரும் வேர் நுனிகள்..

*

நறுவிசாய்
மௌனம் பூசிக்கொள்ளும்
தனிமையின்
வேர் நுனியில்..

முடிச்சிட்டுக் கிடக்கிறது
சிறு சப்தம்..

உறைந்துவிட்ட
நினைவுகளை உருக்கிட..

அனல் வீசிக் கடக்கும்
ஒருத்தியின் புன்னகையால்..

பொங்கும்
கண்ணீர்த் துளிகளை..
புணரும்
வேர் நுனிகள்..

இளக்குகின்றன..
முடிச்சுகளை..

*****

நுரைக் குமிழென..

*

முகில் சுழியில்..
சிக்கி முறுகும்..
மழைத் துளியில்..

மின்னல்
பட்டுத் தெறிக்கும்
சிரிப்பலையின்..

நுரைக் குமிழென..
ஊதிப் பெருகும்..

நின் காதல்..!

****

மழைச் சித்திரங்கள்..

*

செருப்பின்
ஓரத் தையல்களில்..
நைந்து..

பிசிராய் கிளம்பிய
நூல் நுனிகள்..

நேற்றிரவு..
வீடு திரும்புகையில்..
மழையில்..
தெருவில்..
நனைந்த சுகத்தில்..

வாசலோரச் சுவரில்..
வரைந்து வைத்திருக்கின்றன..
தான்..
ப்ரியப்பட்ட
கோட்டுச் சித்திரங்களை..!

*****

மெட்ரோ கவிதைகள் - 23

*
வட்டமாய்
நகம் கொண்டு
கீறி வைத்திருக்கிறேன்..

ஏதோ ஒரு
'ஷேர்' - ஆட்டோவின்
இடப்பக்கத் தகட்டில்..

உன்னோடு
செல் போனில்..
பேசிய..

நேற்றைய பயணத்தை..

****

செந்நிற சதுரங்களும்..எல்லையற்ற வடிவங்களும்..

*

ஒற்றை
மழைத் துளி..

தூரிகையாக
உருகிய..
கன வேகத்தில்..

செந்நிற சதுரக் கல்லில்
மோதிய நொடியில்..

'மாடர்ன் ஆர்ட்டாக..'
ஊறுகிறது..
எல்லையற்ற வடிவோடு..

****

மெட்ரோ கவிதைகள் - 22

*
'டைட்டானிக்' - படத்தின்
தலைப்புப் பாடலில்..
தாலாட்டுவதாய்..

யாதொரு பிரக்ஞையுமற்று
உறங்கிய பல்லி..

'கப்பல்' - இரண்டாய் முறிந்து..
புகைக் குழாய்..
பெரும் சப்தத்தோடு
சரிந்த கணத்தில்..

அலறியடித்து..

சுவரில் பொருத்தியிருந்த..
'சரவுண்டு ஸ்பீக்கரின்..'

மறைவிலிருந்து..
வெளிப்பட்ட வேகத்தில்..

'அட்லாண்டிக்' கடலிலிருந்து..
உயிர் தப்பியது..

*****

நான் அறையில்...இல்லாத சமயத்தில்..

*

கண்ணாடி அலமாரிக்குள்
கால வரிசைப் பிறழ்ந்து
முதுகு காட்டி..
நிற்கும்
டைரிகளுககுள்..

எழுதாத பக்கங்களுக்கும்..
எழுதிய பக்கங்களுக்குமான
நீண்ட உரையாடல்களை..

பக்கத்து குடுவையில்
செருகிக் கிடக்கும்..
என்
பேனாக்கள்..
குறிப்பெடுத்துக் கொண்டிருக்கின்றன..

*****

மீண்டும் உன் வருகை..

*

அழகாக இருப்பதாக..
சொல்லியபடியே..
ஓடிவிட்டாய்..
உன்
அம்மாவின் குரல் கேட்டு..

மீண்டும்
உன் வருகைக்காக..
காத்திருக்கிறோம்..

நானும்..

ஈரமாய் காய்ந்துகொண்டிருக்கும்..
என் ஓவியமும்..

*****

துளி நிழல்..

*

க்ரில் கதவின்
இரும்பு வடிவங்களை..

முரட்டுத்தன
சிமென்ட் தரையில்..

நீட்டிக் கிடத்துகிறது
அதிகாலை வெயில்..

கொடியில் உலரும்..
ஈரத்துனியிலிருந்து...
சொட்டு
சொட்டாய்..
நழுவிக்கொண்டிருக்கிறது..
நிழல்..

*****

நீ..!

*

சற்றேறக்குறைய
நிதானமிழக்க நேர்ந்தது..

நீ..

'களுக்' கென்று..
சிரித்த பொழுது..!

****

காத்துக் கிடந்த..வாசல்..

*

நீ கோரிக்கை வைத்த
அழைப்பை..
எவரோ திருடி சென்றனர்..
அதை..
'Commitment' -
என்று சொல்லும்படியாயிற்று..
மன்னித்துவிடு..

நீ
காத்துக் கிடந்த
வாசலை..
அவசரமாய் அடைத்துவிட்ட
காற்றை..
தண்டிக்க..மறந்து விடு..

மீண்டும்
சந்திப்பதற்கான கெடுவை..
காலம்..
தட்டச்சு செய்யும் சத்தம்..

தொடர்ந்து இரவு நெடுக..
மேற்கு வானத்தின்
இருளுக்குள் கேட்டுக்கொண்டே இருந்தது..

வைகறையில்..
முதல் வெள்ளியொன்று முளைக்கும் வரை...

******

வியாழன், ஜூலை 09, 2009

மெட்ரோ கவிதைகள் - 21

*
உறுமலோடு..
நகரும் மஞ்சள் நிற பிசாசுகள்..
தெரு முழுதும் அடைத்தபடி..

ஆட்களை அள்ளிப் போட்டு..

போன மழையில் பெயர்ந்த..
சிறு குழியெங்கும்..
நிரப்பிக் கொண்டு ஓடுகின்றன..

காலை நேர அவசரங்களை..

*****
( குறிப்பு - மஞ்சள் நிற பிசாசு - ஷேர் ஆட்டோ..)

நூல் கோர்க்கும் குளிர் ஊசிகள்..

*
கனவின் பக்கங்களை
ஓசையின்றிக் கிழிக்கின்றன
இரவுகள்..

தென்றலை நூல் கோர்த்து..
குளிர் ஊசிகளை
இறக்குகின்றன..
காட்சிகளின் மீது..

சூரியன்
தன் நூலகத்தின்
கதவுகளைத் திறந்து வைக்கும்போது..

வெளிச்சம் படராத..
அதன்
உள்ளறை அலமாரிகளில்..

வரிசைக் குலைந்து
அடுக்கப்பட்டிருக்கின்றன..

இதுவரை..
பூமியில் -
பிறந்து மரித்தவரின்..
கனவு புத்தகங்கள்..


****

புதன், ஜூலை 08, 2009

மௌனத்தை உடுத்திக்கொண்டு..

*

ஒரு
நண்பகலில்..
மௌனத்தை..உடுத்திக்கொண்டு..
தெரு இறங்கினேன்..

எதிர்ப்பட்டவர்கள்..
சொன்னார்கள்..

அழகாக இருப்பதாக..
நல்ல உடுப்பென்றும்..

மன நெரிசலுக்கு அடர்த்தியாக..
சொகுசாக இருக்கும் போலும்..

எனும்படி..

அபிப்பிராயங்களை...
என் பாக்கட்டில்..செருகி சென்றார்கள்..

மிடுக்கில்..நெஞ்சு
நிமிர்ந்த..நொடியில்..

பின்னிருந்து..
என்னைக் கடந்து சென்ற ஒருவன்..
என் தோளைத் தட்டி சொல்லிச் சென்றான்..

என் மௌனம்...
முதுகு பக்கம் கிழிந்திருப்பதாக...

****

நன்றி : ( உயிரோசை/உயிர்மை.காம் ) ஜூலை - 2009
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1740

சொற்கள்...உடைகின்றன..

*

சூடாக ஒரு கோப்பைத் தேனீரோடு..
டீ - கடையில் நிற்கும்போது..
சொற்கள் மழையாக பொழிகின்றன..

எரியும் சிகரெட்டை..
உதட்டில் பொருத்தி. .
கடற்கரையில்..நின்றபடி..

ஆழமாக இழுத்தால்..

சொற்கள் புகையாக..
நுரையீரல் முழுதும் நிரம்புகிறது..

கால் நனைக்கும் அலையொன்று..
தொட்டு மீளும்போது..

சொற்கள்..நுரையாக உடைகின்றன..

துள்ளத் துடிக்க..
தொடுவானின் விளிம்பை..
முத்தமிடும்..
ஒரு மீனின்..
இதழ்களில்..

சொற்கள் பூசிக்கிடக்கின்றன..
நிலவின் மினுமினுப்பை..

சாலையேறி..
கடப்பதற்கு.. காத்திருக்கும் நிமிடத்தில்..

சொற்களை..
அரைத்தபடி எங்கோ விரைகின்றன..
கணக்கில்லா வாகனங்கள்..!

****

நன்றி : ( உயிரோசை /உயிர்மை.காம் ) ஆகஸ்ட் - 2009
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1807

நடுநிசி வீடுகளின் பக்கச் சுவர்கள்..

*

கண்கள் சொக்கிய
நடு ஜாமத்தில்..
கவிதை தன் கதவுகளை மூடிக்கொண்டது..

நிலவின் எச்சிலாக ஒழுகிய இரவை..
நடுநிசி நாய்கள்..
நக்கியபடி ஊளையிடுகின்றன..

தெருமுனை
அரசமரத்தின் இலைகளெல்லாம்..
ஒரு சேர..
காற்றில் அசைந்து..

தெருவிளக்கொளிப்பட்ட
நிழல்கள்..

ஆட்சேபம் எழுதின..
வீடுகளின் பக்கச் சுவர்களில்..

*****

சனி, ஜூலை 04, 2009

அந்தி..

*

விரல்களிடையே..
உருளும்..

ஜெபமாலையில்..

பிரார்த்தனைகளை..
கோர்க்கிறது..
வயோதிகம்..

****

குளிர் இரவு..

*

தனிமை இரவில்..
தீப் பிடித்து எரிகிறது..
முன்பு..
நாம் கண்ட கனவொன்று..

குளிர் காய..
என்
கவிதைத் தாள்களை..
கொண்டு வா...
நெருப்பு அணையும் முன்..

விரல்கள் நடுங்குகின்றன..!

*****

இன்னொரு கதவு..

*

எழுதிக் கொண்டிருந்த
கவிதையிலிருந்து..
ரத்தம் சொட்ட..வெளியேறினான்..
பகைவன்..

விசாரணைக்காக..
போலிஸ்
என்னைத் தேடி வந்தபோது..

இன்னொரு கவிதைக்குள்ளிருந்து..
கதவு திறந்து விட்டாள்..காதலி..
ஒளிந்து கொள்ளும்படி..!

*****

உணர்வுக் குமிழ்...!

*

யதார்த்தங்கள் கசிந்து வழிய..
உடைந்து..வழி வகுக்கும்..
உணர்வுக் குமிழ்களை..

யாரோ..

ஊதி வைக்கிறார்கள்..
ஏகாந்தத்தில்..!

****

காலச் சிலந்தி..

*

பரண்களில் ஒளிந்து கிடக்கின்றன..
தலைமுறைகளுக்கான
காதல் ஏடுகள்..

நியாயத் தர்க்கங்களை..
ஓட்டடைகளாகப் பின்னி வைத்திருக்கிறது..
காலச் சிலந்தி..

முகமூடி அணிந்தபடி..
இன்றும்..
சுத்தம் செய்வதில்லை..
தும்மல் வந்துவிடுமே... என..

*****

நீ வரும் வரை..

*

சொல்வதாக சொன்னவை எல்லாம்..
சொல்லாதவைகளாகவும் படர்கின்றன..
நீர் பசலையாக..

மனப் படித்துறையில்..
அருகில்..
குவிந்து கிடக்கின்றன..
சிறு சிறு ஞாபகங்கள்..

அலை வளையங்கள்..
கரை நோக்கி விரியும் பொருட்டு..
ஒவ்வொன்றாய் வீசிக் கொண்டிருக்கிறேன்..
நீ வரும் வரை..

வெகு நேரம்..
யாரோடோ..
பேசிக் கொண்டே இருக்கிறது..
தன்
கீழ்த்தாடையின் உப்பலில்..
செய்தி சேகரித்து வைத்திருக்கும்..
ஒரு தவளை..

****

பெருந்துயரப் பாடல் ஒன்று..

*

மந்திரக் கிழவன் ஒருவனின்..
மாயக் கரங்களில்..ஒரு கூடு இருந்தது..

பெயர் தெரியா..
பறவையொன்று இட்டு வைத்த..
முட்டைக்குள்.. வளருகிறது..
பெருந்துயரப் பாடல் ஒன்று..

யுகங்கள் கடந்த பருவ நிலைகளில்..
வெப்பம் உறையும்.. குளிர் இரவுகளாய்...
கிழவன் உறங்குகிறான்..

அவன் மூச்சுக் காற்றில்..
பனி பொழிகிறது.. எப்போதும்..

கூட்டைத் தேடி..
கோடைப் பாலைவெளியெங்கும்.. பறக்கிறது..
எனக்கும்....பாடலுக்குமான..
சிறகுகள்...

****

வார்த்தைகளுக்குள் இருக்கும் முனகல்..

*

மரணம் பற்றி..
சிறு குறிப்பொன்று..
எழுதிக் கொண்டிருந்த இரவில்..

வழித் தப்பிய தும்பியொன்று..

என் அறையின்..
மின் குழல் விளக்கை..
சுற்றத் தொடங்கியது..

இறகின் ரீங்கரிப்பில்..
எழுதிக் கொண்டிருந்த ..
மரணக் குறிப்புகள்..நடுங்கின..

வார்த்தைகளுக்குள்ளிருந்து..
சிறு முனகலொன்றும்..மெல்ல கசிந்தது..

விளக்கின் மறைவிலிருந்து..
நழுவி வெளிப்பட்ட..
பல்லியொன்று..

வேகமாய் முன்னகர்ந்து..
சட்டென்று..நின்றது..

அசைவற்ற கணங்கள்...
முறையே மூன்று..

1. என் பேனாவின்.. நின்றுவிட்ட இயக்கம்..
2. தும்பியின்.. ரீங்கரிப்பற்ற பேரமைதி..
3. சாம்பல் நிறக் கண்கள்..குத்திட்ட..பல்லியின் பார்வை..

நீண்டிழுத்துக்கொண்ட
நாவின் நுனியில்..
தும்பியின் துடிப்பாக..
வால் மட்டுமே.. எஞ்சிற்று..

மரணக் குறிப்பில்..
மாமிச வாசனை..
கொஞ்சங்கொஞ்சமாய்.. வீசத் தொடங்கிய..
இரவில்..

பல்லிகள் உறங்கவில்லை..

*****


மேகமென கடந்து போகும்..தேநீர் ஆவிகள்

*

மழை பொழியத் தொடங்கிய போதே..
தெரிந்து கொண்டேன்..
நீ சீக்கிரம் வந்துவிடுவாய்..

சாலையோர சிறு பூக்களிலிருந்து..
புறப்பட்டுக் கொண்டிருந்தது..
மிக அமைதியான..
கேவல் ஒன்று..

அதை..
ஒரு இசைக்குறிப்பென...
சொட்டிக் கொண்டிருந்தது மழை..

நீ..கையோடு கொண்டு வந்த..
வார்த்தைகளை..
உணவக..சிப்பந்தி..தந்து சென்ற..
தேநீர் கோப்பையில்..
கலக்கத் தொடங்கினாய்..

கோப்பை விளிம்பின்..
இளஞ் சூட்டை முத்தமிட்டபடி..
பருகும் உதடுகளை..

தேநீர் ஆவிகள்..மேகமென கடந்து போனதில்..

உதடுகளுக்கு மேலாகவும்..
மூக்கு நுனுயிலும்..
மைக்ரோ புள்ளிகளாய்..
வியர்க்கத் தொடங்கியது
மற்றுமொரு மழை..

ஒலிப்பெருக்கியிலிருந்து..
இழைந்துருகிய.. வயலின்..இசை..
உன் கூந்தலில்..காய்ந்துவிட்ட
மல்லிகைச் சரத்தின்..
உதிரி மிச்சங்களை..

கேவலோடு...அழைத்தபடி..
ஜன்னல்..கடந்து..
தெருவில்..இறங்கி.. நனைகிறது..

****

ஆதியில் ஒரு மரமிருந்தது..!

*

திசை காட்டியை..
தொலைத்து விட்டதாக..
கானகத்திடம் முறையிட்டேன்..

ஆதி மரமொன்று..
கிளைகள் அசைத்து..
மெல்ல சிரித்தது..

அதன்
விழுதுகளை..
இறுகப் பற்றியிருந்த நிலத்தில்..

எறும்புகள்..
எனக்கு முன்னே...
ஊர்ந்து கொண்டிருந்தன..

அதை..
பின்தொடர்ந்து..
நகரத்தை கண்டு பிடித்தேன்..

****

ஆதாமின் விலா..

*

ஆதாமின்
விலாவிலிருந்து..
எலும்பொன்றை..உருவி..
நதிக்குள் வீச..

அதிலிருந்து..
வெட்கப்பட்டபடியே..
கரையேறுகிறாள்.. ஏவாள்..

அவளின்
இடது கையில்..

பாதி கடித்த
ஆப்பிள் ஒன்றின்..காம்பை..

சிறு பாம்பொன்று...
சுற்றிக் கிடக்கிறது..
கிறங்கியபடி..

****

மனமின்றி..

*

வாசித்துக் கொண்டிருக்கும்..
உன் புன்னகையை..

பாதியில்..
விட்டுச் செல்ல மனமின்றி..

அடையாளமாய்..
செருகிச் செல்கிறேன்..

ஒரு பார்வையை..!

****

கரையென புதைந்த சொற்கள்...

*

புனைவின் வெளி..
கரைகளற்று விரிந்து கிடக்கிறது..

கழுகுகள்..
வட்டமிட்டபடியே இருக்கின்றன..
நான்.. கடக்கவிருக்கும் பொழுதுக்காக..

தீர்மான கிரணங்கள் பட்டு..
கண் கூசினாலும்..
சில அடிகள் நகர்ந்தேன்..

ஊன்றும் எழுதுகோல்.. முனை புதைகிறது..

அதன்.. கூர்மை மழுங்கலிலிருந்து..
சொட்டுகளாய் திரளும் வார்த்தைகள்..
கோர்த்துக்கொண்டு ஒழுகுகின்றன..
வாக்கியங்களாக..

வானிலிருந்து..
கழுகின் ஒற்றை இறகு..
உதிர்ந்த வேகத்தில்..அசைந்து..அசைந்து..
என் வெளியைத் தொட்டபோது..

நான்..
புனைவின் கரையென..
உறைந்துவிட்டேன்..

வேர்விட்டுப் படர்ந்தபடியிருக்கிறது...
மிக நீண்ட..
கவிதையொன்று..!

*****

நிழல் போல் மலர்கிறாய்..

*

சதுரமெனவும்..
நீள் வட்டமெனவும்..
நேர்க்கோடு - நெளிக்கோடு எனவும்..

கனவின் கன்னத்தில்
நிழல் போல் மலர்கிறாய்..

உன் ரகசிய பாதைகளில்..
நிலவொன்று விழுந்து
பாதரசமாய் சிதறி உருளுகிறது..

வெளிச்சங்களை அள்ளி..
தாவணி முந்தானையில் மறைத்து..
என்னிடம் காட்டுகிறாய்..

அவை..
குட்டி குட்டி சிறகுகள் முளைத்து..
இறகென மிதந்து..
காட்டுக்குள் பறக்கின்றன..

ஆனால்..

சதுரமெனவும்..
நீள் வட்டமெனவும்..
நேர்க்கோடு - நெளிக்கோடு எனவும்
வரைபடமாகிறாய்..
தினமும்..

*****

புதன், ஜூலை 01, 2009

நவீனக் காடும்..'சர்ரியலிஸ' குதிரையும்..

*

நவீனக் காட்டுக்குள்..
ஒளிந்து கிடக்கும்..
பின் - நவீனத்தை
வேட்டையாட..

'சர்ரியலிஸ'
குதிரையேறி..
விரைந்து வருகிறான்..

'எக்ஸிஸ்டென்ஷியலிஸ'
வீரனொருவன்..

'பரோக்' சமவெளியெங்கும்..
பூத்திருக்கும்..மஞ்சள் நிற
'ரொமாண்டிஸிஸ' பூக்கள் கொய்து..

கிரீடம் வனைந்து..
காத்திருக்கும்..

'கிளாஸிஸ' இளவரசியின்..
கனவில் விரிகிறது..

இலக்கிய சுவர்களும்..
கிளைவிட்டு பரவும்..
மரபின் வேர்களும்..

*****

தீண்டல்..

*

நிலையற்றதின்
வால் முனையை..
நகத்தால் தீண்டிய..
கணத்தில்..

எங்கிருந்தோ முளைத்த
தலை..

பட்டென்று கொத்தி..
விஷமாக்கியது..
சூழலை..!

****

கண் மலர்..

*

என்
உடல் மீது நகரும்..
காமச் சருகை..
நொறுங்கி விழச் செய்யவே..

காதலின் இதழ்கள்
உன்
கண்களில் மலர்கின்றன..

****

காலக் கலயம்..

*

நீ
உச்சரிக்கும்..
சொற்களின்..
அர்த்த வடிவங்களை..
உன் உதடுகள் வனைகின்றன..

காலக் கலயத்துக்குள்..
உரையாடல் ஒன்று..
குழைந்து கிடக்கிறது..

****

நிசி அடர்த்தி..

*

மௌன இலைகள்..
என்
உடற் செடியின்
காம்பு நுனிகளில்..
உயிர்ப் பற்றி..
அசைகின்றன..

மன நிசி
கசியும் அடர் இருளின்..
கூச்சலில்..

அவை..நடுங்குகின்றன..
உதிர நேரும்..
கணத்தை நினைத்து..

*****

மெட்ரோ கவிதைகள் - 20

*
என்
கட்டிடத்திலிருந்து..
எதிர் கட்டிடத்திற்கான..
இடைவெளியை..

கேபிள் வயருக்குள்
ஊரும்..
பன்னாட்டு செய்திகளை..

மெல்ல நுகர்ந்தபடி..

அந்தரத்தில்..
கடக்கிறது..

ஒரு அணில்..!

****

உறைந்த வெளிகள்..

*

நட்பென
குளிர்ந்து உறைந்த
வெளியில்..

சூரியனொன்று..
தலைக்குப்புற விழுந்து
நொறுங்கியது..

****

மற்றுமொரு உரையாடல்..

*
மது போத்தல்களின்
குறுகிய வாய்களில்..
மிதக்கின்றன..
உதடுகள்..

குழைந்து நெளிந்த
அதன் கழுத்து வளைவில்..
பதியும்..விரல் ரேகைகளில்..

வியர்த்துப் பூக்கின்றன..
போதையின்..
புள்ளிக் குமிழ்கள்..

உருகும்
பனித் துண்டங்களினின்றும்..
ஆவியாய் பிரிகின்றன..

சில்லிட்ட உரையாடல்கள் சில..

எதிர்ப்பட்டு..
பிளந்து கூடும் பிம்பங்களை..
ஊடறுத்து...

சிணுங்கி மோதும்
கண்ணாடி கோப்பைக்குள்..

அசைந்தபடி கொப்பளிக்கிறது..
பொன்னிறத்தில்..
மற்றுமொரு உரையாடல்..

*****

நன்றி : ( உயிரோசை /உயிர்மை.காம் ) ஜூலை - 2009
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1712

இருளின் அடர்த்தியில் உதிரும் சிறகு..

*
அறையில்
இறுகி கெட்டித்திருக்கும்
இருளின் அடர்த்தியில்..

சிறு வீக்கமாய்
புடைத்திருக்கும்
சுவர் குண்டு விளக்கில்..

வழியும்
ஒளிக் குருதியை
பருகும் தாகத்தோடு..

சுழலும் ஈசலின்..
பார்வை..

பதிவு செய்கிறது..
உதிரும் தன் சிறகை..

பின்..
யாதொன்றும் செய்யவியலா..
கையறு நிலையென..

தரையில் ஊர்ந்து..
மௌனமாய்..
அறையை விட்டகலும்..

என்னிடம்...
சொல்லிக்கொள்ள மறந்தபடி..!

****

நன்றி : ( உயிரோசை /உயிர்மை.காம் ) ஜூலை - 2009
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1712

மெட்ரோ கவிதைகள் - 19

*
சிறுவன்
பேட்டைச் சுழற்றி அடித்த பந்து..

சிக்ஸரென..
ஒத்துக்கொள்ளப்பட்டது..

கட்டிடங்களுக்கிடையே..
உயர்ந்தெழுந்து..
அது...
தரையிறங்கிய இடம்..

பிளாட்பாரத்தில்..
பதியனிட்டு..பூத்திருந்த
கனகாம்பரச் செடியில்..

கிரிக்கெட்டில்
கலந்து கொள்ள முடியாத
தங்கை..

கைத் தட்டி..
சிரிப்போடு பார்த்தபடி
நின்றாள்..
வாயில் பிரஷ்ஷோடு..

'சனியனே..வந்து தொலைங்க..'

உள்ளிருந்து..
வேகமாய் வந்து விழுந்த
அதட்டல் குரல்..
விளையாட்டை..முடித்து வைத்தது..

அடுத்த கால் மணியில்..

பட்டாம்பூச்சிகளிரண்டும் ..
முதுகில் சுமையோடு..

சீருடைச் சிறைக்குள் அகப்பட்டு..
நடக்கின்றன..
சிறைக்கூடம் நோக்கி..

****

உந்துதல்..

*
கீழ்மையின் கனம்
தாங்கவொண்ணா..
பதற்ற நீட்சியை..

செதில்கலென
நினைவிற் செருகி..

நிரந்தர
பகிர்வுக்கான இழைகளை
அறுபட..
நிர்பந்திக்கும் பொருட்டு..

மனசின்
புறவாசலில்..
மண்டும்
விஷக் கொடிப் புதர்களை..
வேரோடு பிடுங்கி..தீயிலிட்ட
சாம்பலின் மிச்சங்கள்..

வாயகற்றி கொட்டுகிறது..
தனிமையின் உந்துதலை..

புறக்கணிக்கும்..
வக்கற்ற
கற்பனாயுத வெளியொன்று..
இனத்தின் சுவடுகளை தூசுகளாய்..

காற்றில் கிளப்பி..

தாங்கவொண்ணா
பதற்ற நீட்சியின் கீழ்மையின் கனம்
யுக யுகமாய் அலைகிறது..

*****

காகத்துடனான பகல்..

*

கா..கா - வென்று மட்டுமல்லாமல்..
'காவ்..காவ்..'
'க்வ்வாவ்..க்வ்வாவ்..' -
என்பதான..

மூன்று ஒலிக்குறிப்புகளை..
கலைத்து கலைத்து
புனைகின்றன..

இனத்துக்கான செய்திகளாகவுமின்றி..
நமக்கான சங்கேதமாகவும்..

நிலவை
ஒளித்து வைப்பதான
இரவுக்குரிய
பகல் பொழுதுகளை..
காகங்கள் கொண்டாடுகின்றன..

குழந்தைகளுக்கான
நிலாச் சோறு
உருண்டைகளாக வெய்யிலில் காய்வதை..

கான்க்ரீட் மாடியிலோ..
ஓட்டுக் கூரையிலோ..

அலகு பிளந்து..
ஆச்சரியமாய்..
வேடிக்கைப் பார்க்கின்றன..

தனக்கினையென
மனிதர்கள்
கூவும் ஒலியலைகளை..
மொழிப்பெயர்க்கும் பொருட்டு..

விழிகளில்..
உருண்டபடி இருக்கிறது..
பிரபஞ்ச இருள்..!

*****



பாட்டன் விந்து..

*
அசுர னெனவும்
அரக்கனாவும்
வரைந்து கொடுத்தீர்..

என்
பாட்டனின் பாட்டன் விந்தை..

புத்தாடைகளும்..
பட்டாசுகளுமாக
வெடிக்கின்றன..

ஆண்டுதோறும்..
அவன் மாமிசம்..

வெட்கமின்றி - பிரக்ஞையற்று..
வாழ்த்துக்களும்
சொல்லித் திரிகிறேன்..
பாட்டன்களின்
சாவு குறித்த துக்கம்
அறியும் திறனற்று..

குழந்தைகளை மட்டுமே..
மன்னிக்கக் கூடும்..

வெடிப்புகையில்..
மூச்சுத் திணறும்..
அவன் ஆன்மா..!

*****

நீர்நிலைப் பாலைவனம்..

*
நேற்றிரவு குடித்த
மதுவை..
துப்பிவிட..

ஆட்காட்டி விரலைத்
தொண்டைக்குழிக்குள்.. இறக்கி..

ஒக்காலமிட்ட நொடியில்..

கையில்.. பிசுப்பிசுப்பாய்..
வந்து விழுந்தது
கவிதையொன்று..

உள்ளங்கையில்..ஏந்தியபடி..
நீர்நிலையைத்
தேடி அலைகிறேன்..

மனம்
முழுக்க..
பாலைவனத்தைக்
கொட்டி வைத்திருக்கும்..
உன்னைத் திட்டியபடி..

*****

செந்நிற நதி..

*
சொல்லிவிடத் துடிக்கும் நாவில்..
குதிரைகளாகி உட்புறம் ஓடுகின்றன சொற்கள்..

நாளங்கள் இழுத்துப் போகும்
செந்நிற நதியில்..
பழுத்த இலையென பயணிக்கும்..தவிப்பை..

பின்மூளையின்..
'செரிபல'.. கரையில்..
ஒதுக்கி..

தொடர்ந்தோடுகிறது..
உடலெங்கும் விரியும்.. கடலை நோக்கி..
கலந்துவிடும் முனைப்போடு..

முடிந்தவரை..
சொற்களின் குளம்போசைகள்..
இதயத்தில் தேங்குகின்றன..
வாழ்வதாக பொய் சொல்லி..!

*****

நுண்ணுனர் செல்களின் தட்டாமாலை...

*
பிறிதோர் முயங்குதலில்..
உடல் வேட்கையின் பரந்த வெளியில்..
முகர்ந்தலையும் மிருகத்தின்..
மென்வெப்ப மூச்சுக் காற்றில்..
பிசிரெனப் பறந்தது காமத் துகள்..

சொட்டுத் திரவத்தின் சொற்ப பொழிதலில்..
கெட்டித்து விட்ட அங்குல.. படுகையில்...
வெடித்துக் கிளை பரப்பும்..இச்சை வேர் முனையும்..

நுண்ணுனர் செல்களின்.. தட்டாமாலையில்..
இறுகப் பற்றுதலாய் புடைக்கும் நரம்புகளும்..

ஊர்ந்து கிறங்கும் உடலின் வாய்க்காலில்..
கால் நனைந்தலையும் உயிரின் இலக்குகளும்..

உச்சம் நோக்கி ஏகும் பாய்ச்சலின் பொருட்டு..
ஊர் - பெயர் - இடம் அகன்று..
செத்து பிறப்பதாக..

பகிர்தலற்று புரண்டு படுப்பதில்..
முடியலாம் இரவு..

*****

திங்கள், ஜூன் 22, 2009

பனி இரவின் வோட்காவும்..உன் பாதச் சுவடுகளும்..

*

உன்னை
வெறுத்துவிடும் தீர்மானத்தில்..
ஆப்பிள் சுவை மிகு..
வோட்காவை..

அதிகம் குடித்த..
நேற்றைய பனி இரவு..

என்
கனவின் படுதாவை..
நீள அகலமாய்க் கிழித்து..

என்னைச் சுருட்டி..

மின்னல்பட்டுக் கருகிய
ஆதி மரப்பொந்து
ஒன்றில்..

அடைத்து வைத்தது..

கண்கள்..உப்பி..
விடியலின் அகாலத்தில்..

வாசற்கதவின்..
கண்ணாடிச் சதுரத்தில்..
கண்ணீர் வடித்த
பனித்துளிகளை..

துடைக்கும்..நோக்கில்..

தள்ளாடி..
கதவைத் திறந்தேன்..

சிமென்ட் படியின்..
பனிப் பரப்பில்..

வெகுநேரம்..நீ நின்று திரும்பிய..
பாதச் சுவடுகள்..
சில்லிப்பாய்..
மிச்சமிருந்தது..

*****

எதிர் திசை...

*

வாசிப்பு வரிகளின்
பயணத்தின் பொருட்டு
மந்தமாய்..
உருள்கின்றன பாதைகள்..

தூக்கம்..
என் கண்களிலிருந்து
குதித்து..
எதிர் திசையில் ஓடுகிறது..

புத்தகத்தை..
நெருடும்..
என்
விரல்களைப்
பற்றிக் கொண்டு..

கதாப்பாத்திரங்கள்..
என்னிடம்..
வழி கேட்கின்றன..!

****

துணையற்ற படித்துறை..

*

பிரியத்தின்
கசடுகளை
வடிகட்டுகிறாய்..
தருணங்களை சலித்து..

நதியின் நீரோட்டத்தை..
மனக் குடுவையில்
ஊற்றுகிறேன்..

துணையற்ற
படித்துறையில்..
பகிர்தலுக்கான இடம்..
வெறுமையோடிக் கிடக்கிறது..

திசைகள்...
பொங்கி நுரைக்கின்றன..

இரவோ..
சிறு சிறு குமிழாய்..
உடைகிறது..

****

மெட்ரோ கவிதைகள் - 18

*
சடசடத்தூற்றிய..
பெருமழையில்..

ஒதுக்கி நிறுத்திய..

இரு சக்கர
வாகனங்களின்..

என்ஜினிலிருந்து..

ஆவியாக..கிளம்பின..

கடந்து வந்த..
தொலைவுகளின்..
வெப்பம்..!

*****

மெட்ரோ கவிதைகள் - 17

*
கடற்கரையிலிருந்து
விடைபெறும்
தருணத்தில்..

யாசித்த
மூதாட்டியின்
உள்ளங்கையில் விழுந்தது..
முதல் மழைத் துளி..

இட்ட..
ஒற்றை நாணயம்..
முழுமையாக நனைந்த
நிமிடத்தில்..

நான்
மேற்கு நோக்கியும்..

அவள்..
தெற்கு நோக்கியும்..

மெல்ல நகரத்
தொடங்கினோம்..

அதற்குள்..
கூட்டம்..
சாலைக் கரைக்கு..
ஓடி விட்டது..

****

மெட்ரோ கவிதைகள் - 16

*
காற்றின் திசையை
காட்டிக் கொடுக்கின்றன
வால் நீண்ட
காற்றாடிகள்..

வட்டமமைத்து
உட்கார்ந்து கொண்ட
வசதியான
மணல் வெளியில்..

பீங்கான் தட்டுகள்
சுமந்து வந்த
சுண்டல்களை பகிர்ந்தபடி

யாவற்றையும் மென்றோம்..
நண்பர்களோடு..

மையம் தகர்ந்த
விளிம்புகள் என்றிருந்த..
இறுமாப்பை..

தலைக் குப்புற
வட்டத்துக்குள் செருகியபடி
காலத்தைக் குத்தியது..
காற்றாடி..

சம்பந்தமில்லாதவன்
கையில்
நூல் இருந்ததாக..
எப்படி சொல்லுவது..?

*****

மெட்ரோ கவிதைகள் - 16

*
மாலைநேரக் கலந்துரையாடலில்
காந்தியின் நீண்டு மெலிந்த
நிழலொன்றும்..
என் மடியில்..

என்னவென்று
புரிய மறுக்கும் விதமாக..
எதையோ
தேடியலைந்தபடி..
ஊர்ந்தோடுகின்றன...எறும்புகள்..

தொங்கிக் கொண்டிருக்கும்..
எங்கள் கால்களின்
பிரமாண்டங்களை
அவை
பொருட்படுத்தவில்லை..

நண்பரொருவர்..
அனைவருக்கும் வழங்கிய..
திணை மாவின்
உருண்டையிலிருந்து
உதிர்ந்த துகள்களுக்காக..

அவைகளும்
பிற எறும்புகளுக்கு..
சொல்லியிருக்கக் கூடும்..

' காந்தி சிலைக்கு பின்னால..
வந்து சேரு..'

கலந்துரையாடலில்..
தொடர்ந்து..

கருத்துக்கள்..

வடிவத்தினின்றும்.. உதிர்கின்றன..!

*****

குருவிகளை.. இன்னும் காணவில்லை..

*

மழை ஈரம் உறிஞ்சி..
காயத் தொடங்கியிருக்கும்..
மொட்டை மாடியின்..
இளஞ் சிவப்பு
சதுரக் கற்களை..

தத்தி தத்திக்
கடந்தபடி..

நெல் தேடும்
குருவிகளை
இன்றும் காணவில்லை...

இட்ட முட்டைகளினின்று
குஞ்சுகள் பொரித்திருக்கலாம்..

சலித்து சேகரித்த..
வைக்கோல் பிசிறுகள் கொண்டு..
கூடுகள் வனைந்தபோதும்..

என்னை அழைக்கவில்லை..

ஒரு வேளை..
நாளை வரக்கூடும்..

குஞ்சுகளுக்கு
என்ன பெயர் சூட்ட..?
என்ற கேள்வியுடன்..!

****

மெட்ரோ கவிதைகள் - 15

*
கருத்த
பட்ட மரமொன்றின்
முறிந்து மீந்த
துண்டுக் கிளையில்..

வளையங்களாய்..
சுருண்டுத்
தொங்குகிறது..

டி.வி. சேனலுக்கான..
கேபிள் வயர்..

****

மெட்ரோ கவிதைகள் - 14

*
மடித்துக் கட்டிய வேட்டியும்..
தோல்வார் செருப்பும்..
இறுக்கிப் பிடித்திருக்கும்
கருங் குடையும்..
சுருட்டிவிட்ட சட்டை முன்டாவும்..
நரை முறுக்கு மீசையும்..
புகையும் பீடியும்..

சாம்பல் நிழல் படிந்த..
கண்களும்..

பட்ஜெட்டை யோசித்தபடியே..
வேடிக்கைப் பார்க்கின்றன..

கட்டிக் கொண்டிருக்கும்..
வீட்டுக்கான..

சிமென்ட் கலவையை..!

*****

மெட்ரோ கவிதைகள் - 13

*
அளவாய் பிளந்த..
மெல்லிய மூங்கில் கீற்றின்..
நேர் பத்தை..
வளைவு பத்தை..

நறுக்கிய
வண்ணக் காகிதம் சுற்றிய
சிறு சுங்கு..

சுண்டியிழுக்கும் அழகோடு..
காற்றைக் கிழித்து..
மேலேறும்..
கச்சிதமான காற்றாடி..

வெயில் காய்த்து
உருக்கும்..
பிடரி வியர்வையில்..
உப்புப் பூத்த..
சட்டை காலரைச் சுருட்டி..

நேரம் கழித்து..
அம்மாவிடம்..
வாங்கவிருக்கும்..
அடிதனை மறந்து..

ஓட்டைப் பல்வரிசையில்..
புன்னகை வழிய..

துள்ளிக் குதிக்கிறான்..
நகரத்து சிறுவனொருவன்..!

****

உதிர் காலம்..

*

அழுத்தி உருட்டிய
இடக்கை
பெருவிரலில்..

பறிபோனது..
பரம்பரை சொத்து மட்டுமல்ல..

பின்னிப் பின்னி
நெய்த கனவுகளும்..

உடன்
நிறைவேறாமல் போன..
காலங்களும்..!

*****

அம்மாவின் பழைய புடவைகள்..

*

உயர்ரக..
பட்டுப்புடவையின்
பொன்னிற..
சரிகை நெய்யலில்..

இலைகளும்..கனிகளும்..
சிரித்தபடி..
பெண்ணுடலில்..
ஏறி சுற்றிக்கொள்கின்றன..

தவில் - நாகஸ்வர..
ஒலிகளின் அதிர்வை..
கேட்டறியாமல்...

பீரோவில்..
அம்மாவின்..
பழைய புடவைகளுக்கு..
அடியில்..

பத்திரமாய்
மடித்து வைக்கப்பட்டிருக்கலாம்..
அடகு கடையின்..
நகை-வட்டி சீட்டொன்று..!

*****

ஈரக் கதுப்பு..!

*

என்
கனவுக் கரையான்கள்..

நினைவுச் சுவரின்
ஈரக் கதுப்பில்..

உன்னை
அரித்தபடி..
கூடொன்று சமைக்கின்றன..!

****