சனி, செப்டம்பர் 25, 2010

கொஞ்சமாக..

*
நீண்டு
வெறிச்சோடிய
ஆஸ்பத்திரி மொசைக் வராண்டாவில்

பாலிதீன் உறையொன்று
வேகமாய் விரட்டி
இறுதி மூலையில்
தன்னுள் அடைத்துக் கொள்கிறது

கொஞ்சமாக
கொஞ்சம் காற்றை..!

****

விசித்திரத் தோட்டத்தின் புல்வெளி..

*
விசித்திரத் தோட்டத்தின்
புல்வெளியில்
என்
சிரிப்பொலிக்கு
ஒரு சிறகு முளைக்கிறது

அது
தன் கீச்சிடும் சப்தத்தோடு
கிளைக்குக் கிளைத் தாவி
இலை நரம்புகளின்
நதியோட்டத்தில்
சுழியிடுகிறது தனிமையின் இசையை

விசித்திரத் தோட்டத்தின்
எண்ணற்ற மலர்களில் கண்ணீர்த் ததும்புகிறது
அதை
உறிஞ்சு மயக்கங் கொள்ள

என்
சிரிப்பொலியின் சிறகு
ஒவ்வொன்றாய் உதிர்கிறது
மௌனம் போர்த்திய
புல்வெளியில்

****

சொல்லிக் கொண்டிருக்கும்போதே..

*
நமக்கிடையில்
வலுவிழந்து நழுவுகிறது
ஒவ்வொரு எழுத்தும்

சொல்லிக் கொண்டிருக்கும்போதே
வெளியேறுகிறது
உன்
உரையாடல்

சுவர் முழுக்க
கிளைப் பரப்பித் திரித்தேறுகிறது
நீ
என் தனிமையோடு விட்டுச் செல்லும்
உன்
அர்த்தங்கள் மொத்தமும்...

****

ஆட்டம் முடிவதேயில்லை..

*
செலுத்தப்படாத திசையிலிருந்து
திரும்புகிறது
மௌனப் பந்து

ஆட்டம்
முடிவதேயில்லை

விதிகளின் மாற்றம் கோரி
மல்லுக்கட்டுவதற்காக
நீளும் பட்டியல்

செலுத்தப்படாத திசையிலிருந்து
திரும்புகிறது
மீண்டும்

****

முற்றத்து மணலில் உடையும் நிலவு..

*
முதல் முறையாக
நிலவு உடைகிறது
முற்றத்து மணலில்..

அதை
குதிங்கால் அழுந்த
தெருவுக்குத் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தாள்
அம்மா

வேலையிலிருந்து
களைப்போடு வீடு திரும்பும் அய்யா
சாப்பிட்டு முடித்து
பாய் போட்டு அங்கு கொஞ்சம்
கண் அயர்வார்
என்கிறாள்

அதனால் என்ன..!

மீண்டுமொரு மழை வந்தால்
உடைந்த நிலவு
ஒட்டிக்கொள்ளும்
அதே மணலில்..

****

வாசிப்பு

*
வாசித்து முடித்த பிறகும்
வாசித்துக்
காட்டுகிறது
பக்கங்களைப் புரட்டியபடி
ஜன்னல் காற்று..!

****

மெட்ரோ கவிதைகள் - 86

*
' ஏன்யா சாவுற காலத்துல
எங்க உயிரை வந்து வாங்குறீங்க..
எனக்கு என்ன எட்டு கையா இருக்கு?
லைன்ல வாய்யா பெருசு.. ' -

ஒவ்வொரு மாதமும்
ஒரு
அரசு வங்கியில்
பென்ஷனுக்காக முண்டும்
முதியவர்கள்
போர்க்கால பதட்டத்தோடு
எதிர்கொள்கிறார்கள்
தங்கள் சொற்ப தொகையை..

Customer is our first person - என்றபடி
வரிசையின் கடைசியில்
தொங்கிக் கொண்டிருக்கிறார்
நிரந்தரமாய்
ஒருவர்

****

மெட்ரோ கவிதைகள் - 85

*
முதலில்
டிபன் கடை என்றார்கள்
பிறகு
ஹோட்டல் என்றார்கள்
பிறகு
ரெஸ்டாரன்ட் என்றார்கள்
பிறகு
Cuisine என்றார்கள்
பிறகு
கேட்டரிங் என்றார்கள்
பிறகு
பஃபே என்றார்கள்
இப்போது
பாஸ்ட் புட் என்கிறார்கள்
மீண்டும்
டிபன் கடை என்பார்கள்

முதலில் இருந்து
நடுவிலும்
பிறகு மீண்டும்

இனியும் கூட...

எல்லா இடத்திலும்..

பசிக்காக
கையேந்தும் மனிதன்
நிற்கிறான்

****

மெட்ரோ கவிதைகள் - 84

*
பால் பாக்கெட் வாங்க
நடை தளர்ந்து
கடை நோக்கி நகரும்
வயதான
ஒரு மனிதன்

தொலைதூர அலுவலுக்காக
அதிகாலை பஸ் பிடிக்க
வேகமாக விரையும்
ஒரு இளம்பெண்

பெயர் மறந்து
முகவரி மறந்து
அனைத்தும் மறந்து
பிளாட்பார்மில் தூங்கிக் கொண்டிருக்கும்
ஒரு குடும்பம்

முன்னறிவிப்பின்றி
திடீரென்று பெய்து விடும்
ஒரு பெருமழையில்

நகரத்தின் அனைத்தும்
இயல்பு தப்புகிறது
அவசரமாய்

****

மெட்ரோ கவிதைகள் - 83

*
உச்சி வெயில் உருகும்
தார்ச்சாலையில்
புதைந்து கிடக்கிறது
ஒரு
சிறுமியின்
சிகப்பு நிற ஹேர்-கிளிப்

வெட்டுப்பட்ட
நெடுஞ்சாலை மரமொன்றின்
கிளையில் சிக்கி
படபடத்தபடி காத்திருக்கிறது
காற்றாடி
யாரோ ஒரு சிறுவனுக்காக

புத்தக மூட்டையோடு
அவசரமாய் சிக்னல் கடக்கும்
சிறுவர்களை
அச்சமூட்டுகிறது
மூன்று வட்ட வர்ணங்களும்
வித விதமான ஹாரன்களும்..

****

மெட்ரோ கவிதைகள் - 82

*
நகரத்தின் கொடும்பகலும்
கீழ்மை நிழலும் கவிய
வாசல் வரை
செருப்போடு வருகிறது
எல்லாமும்

****

மெட்ரோ கவிதைகள் - 81

*
மெட்ரோ ரயிலின் தள்ளாட்டத்தில்
பதற்றமுற்று வழியும்
அந்தப் பார்வையில்
வறுமை யாசிக்கிறது
பசிக்குரிய
மூலப்பொருளை

மாதக் கடைசியை
எதிர்கொள்ளும் திராணியற்ற
நடுத்தரங்கள்
முகத்தைத் திருப்பிக் கொள்கிறது
அவசரமாய்..!

****

சூட்சம விதிகள்

*
திரும்ப பெற்றுக் கொள்வதில்
ஒரு
சாமர்த்தியம் இருப்பதாக

சூட்சம விதிகளை
எழுதிச் செல்கிறது

துயரத்தை
மறுபரிசீலனை செய்து பார்க்கிற
சூழ்ச்சி நயமொன்று..!

****

ஒரு குழந்தையின்..

*
தண்டவாளத்து அருகே
பிருஷ்டம் நைந்து
குப்புற கிடக்கிறது
ஒரு
குழந்தையின்
துணி பொம்மை..!

****

ஸீஸரின் மார்பு...ஆண்டனியின் வாள்..

*
இரவு கண் செருக..
படித்துக் கொண்டிருந்த
புத்தகப் பக்கத்தை பாதியில்
மடித்து வைத்ததில்

52-ம் பக்கத்திலிருந்த
ஆண்டனியின் வாள்
51-ம் பக்கத்தில் இருக்கும்
ஸீஸரின்
மார்பைத் துளைக்கிறது

கிளியோபாட்ராவின் இதயம்
அதன் பின்னும்
சிதையவில்லை..!

****

உள்ளங்கை நிலா..

*
நதி நீரள்ளி
உள்ளங்கையில் நிலவை
ஏந்தியது போல்

மிகவும்
கள்ளத்தனமாய்
முத்தமிட்டுவிட்டான்

பனைமர நிழலுக்கடியில்
அவசரமாய்
மழைக்கென ஒதுங்கியபோது..

****

பால்யத்துக்குரிய வண்ணங்கள்..

*
முற்றத்தில் ஒழுகி
நீர்மையாகிறது
சிறுமியின்
பால்யத்துக்குரிய
வண்ணங்கள் மொத்தமும்

புதிதாக ரிப்பனும்
மணிக் கொலுசும்
வாங்கி வைத்திருக்கிறாள் பாட்டி..

ரெட்டை ஜடை..
ஒற்றையாய் நீண்டு வளர
தயாராகிவிட்டது
இந்த மார்கழியில்..

****

இறந்த காலம்..

*
துடித்தடங்கும் வேட்டையின்
ரத்த ஈரத்தில்
கூர் பற்கள் கிழிக்கின்றன
இறந்தவனின்
காலத்தை

பிடரி சில்லிப்பில்
தருணங்கள் உதிர்கின்றது
மனவெளியின் முட்புதர் நெடுக..

****

துரித நடையில்..

*
இரவு அவிழ்ந்து கொண்டிருக்கிறது
கொஞ்சங்கொஞ்சமாக

துரித நடையில்
உடன் வர தடுமாறுகிறது
அடிமை நிழல்..

இருபதடிக்கு ஒன்று என்ற கணக்கில்
கண்ணடித்து அணைகிறது
மஞ்சள் ஒளி உமிழும்
தெரு விளக்கு..

துரித நடையில்
உடன் வர தடுமாறுகிறது
நிழல் அடிமை..

****

கரு நிழலென மிஞ்சியது..

*
பட்-பட்டென்று
அறுந்து தெரித்தன்
சட்டைப் பட்டன்கள்..

மனைவியின் கன்னத்தில்
சிவப்பாய் கன்றிய
ஐந்து விரல்கள்..

கரு நிழலென
வாசலில் மிஞ்சியது
பைக் புகையும்
பெட்ரோல் வாசனையும்..

****

குவளை நீர்..!

*
ஒரு செந்நிறம்
ஒரு பச்சை
ஒரு வெண்மை

நிறம் நிறமாய் தரப்படும்
மாத்திரைகள்

உயிர் காக்கும் என
கையெழுத்திட்டு தருகிறார்
டாக்டர்

அவைகளைப் போட்டுக் கொள்ள
கையில்
குவளை நீரை
எடுத்துக் கொள்ளும்போது

எங்கோ
ஒரு நதி சிரிக்கிறது..!

****

அல்லது... பயணிக்கிறோம்...

*
கூரையில்லாத
கடம்பூர் ரயில்வே ஸ்டேஷன்

எதிர்புறம்
நின்று கிளம்பிய ரயிலின்
ஜன்னல் காட்டும்
ஸ்தம்பித்த முகங்கள்..

ரயில் நகர்ந்த பிறகான
யாருமற்ற பிளாட்பாரத்தில்..

மெல்ல நடந்தபடி
எதைத் தேடுகிறது
மஞ்சள் நிற அலகு கொண்ட மைனா?

ஸ்டேஷன் காம்பவுண்டுக்கு மறுபுறம் இருக்கும்
சிறு பொட்டல் வெளியில்..

இரண்டடிக்கு ஒரு முறை நின்று
குனிந்து குனிந்து
எதையோ
எடுக்கிறாள்
ஒரு பெண்..!

எதற்கோ
எதையோ
எப்பவும் தேடித் தேடி..

நடக்கிறோம்
குனிகிறோம்
நிமிர்கிறோம்

அல்லது பயணிக்கிறோம்..

எளிதில்
அகப்படாத தருணங்களின் மர்மங்களோடு..!

****

உடையும் இலைச் சருகு..

*
நிழல் ஒதுக்கி
வெயிலில்
உருண்டோடும்

இலைச் சருகைப் போல்

மொடமொடவென்று
எப்படியாவது உடைந்துவிடும் தானே

உனதிந்த
மௌனம்..?!

****

காத்திருப்பில்..

*
பழங்களிலிருந்து
வெளியேறும்
விதைகளின்
மௌனம்

உரமாகிறது

சிறு
மழைத் தூறலுக்கான
காத்திருப்பில்..!

****

இதழ் இதழாகப் பிரிவதில்..

*
பூக்கள் தவிர்த்து வேறு வழியில்லை
பதிலொன்றை
புன்னகை நீட்டும்போது..

இதழ்
இதழாகப் பிரிவதில்
நீர்த்துப் போதல்
சமன்படுகிறது

நிலுவையில் நின்றுவிடுவது
தீர்மானம் மட்டுமே..

****

துயரத்தின் ஆழ்கடல்..

*
துயரத்தின்
ஆழ்கடலில்
மௌனச் சிப்பிக்குள்
சொட்டுகளாய்த் திரள்கிறது

கண்ணாடிக் குடுவைக்குள்
நீந்தும்

தனித்த மீனின்
கண்ணீர்த் துளி..!

****

பிரியத்தின் மீது..

*
அவமானச்
சுருக்குகளை
சடைத் திரித்து நீவுகிறது

பிரியத்தின் மீது
அனுமதி மறுக்கும்..

வன்மம் !

****

எளிய ஓவியத்தைப் போல்..

*
" எங்கே காட்டு.. பார்ப்போம் " - என்கிறாய்
சிரித்துக் கொண்டே..

ஒரு
எளிய ஓவியத்தைப் போல்
வரைந்து காட்ட

அப்படியொன்றும் சுலபமில்லை
என்
மௌனம்..

****

காதல் தூறல் விழாத..

*
உள்ளங்கைக்
குடையின் கீழ்
காதல் தூறல் விழாத பார்வையின் நிழல்
படுத்துக் கிடக்கிறது..

புன்னகைக் கதவைத் தட்டும்படி
அழைக்கிறது
இதழோரம் உருவாகும்
சிறு
வளைவு..!

****

இரவின் வாசல்..

*
மதிய வெயிலைத்
தெருவில் பூட்டி வைத்து

திண்ணையில் காத்திருக்கிறது

இரவின்
வாசலைத் திறந்து விட

ஒரு
நிழல் சாவி..!

****

மௌனத் தாழ்வாரச் சாரல்..

*
என் மொழிச் சிறகில்
வழிகிற ஈரம்

நெடுநேரம் யாருமற்று
உட்கார்ந்திருந்த
மௌனத் தாழ்வாரச் சாரல்..

புரட்டித் தள்ளும் காட்சிப் படிமங்களைத்
தொட்டு விலகும்
ஒரு
பழைய நிழல்..

எங்கிருந்தோ புறப்படும்
மின்னலின் தயக்க வெளிச்சம்..

எந்தவொரு உரையாடலிலும்
தலை நீட்டி விடாத
ஒரு
அபத்தம்..

இவை
யாவும் பின்னுகிற வலைத்துளையில்
வடிகட்டப்படாமல்..

மிச்சமாகும் சக்கையென
என்
பிம்பம்..!

****

கூவி ஓய்ந்தவனின் குரல்கள்..

*
மிகவும் கலைத்திருப்பதாக
சொல்கிறான்

மௌனச் சபையில்
வார்த்தைகளற்று இறைஞ்சுகிறான்

வாழ்வின் பாலை வெளியெங்கும்
கூவி ஓய்ந்தவனின் குரல்களில்
மையங்கொண்டு
சுழல்கின்றன

இருப்பதாக நம்பும்
அர்த்தங்கள்..!

****

பசியின் வர்ண நிழல்..

*
என்னைப் போக்கு காட்டி
என் திசைகளை நீக்கி ஈர்க்கிறது
பசியின் வர்ணம்

சிறகிலிருந்து கழன்று கொண்ட
பெயர் தெரியா பறவையொன்றின்
இறகைப் போல
அசைந்து அசைந்து மிதந்து அமர்ந்த
உள்ளங்கையில்

பசியின் வர்ண நிழல்
ஒரு துயரமென
மிச்சமிருக்கிறது..

****

மில்லி மீட்டர் அளவில்...ஏதோ ஒரு நொடியில்..

*
எல்லாம் இருக்கிறது

கொஞ்சம் பரவசம்
கொஞ்சம் துயரம்
கொஞ்சம் மௌனம்
கொஞ்சம் உரையாடல்

மில்லி மீட்டர் அளவில் மரணம்..
பூக்களின் பரப்பளவில் புன்னகை
கை குலுக்கி ஒரு நம்பிக்கை

எல்லாம் இருக்கிறது
ஆனாலும்

ஏதுமற்றதாக
ஏதோ ஒரு நொடியில்
எல்லாம் தீர்ந்து

உதிர்கிறது உடல்..!

****

வியாழன், செப்டம்பர் 23, 2010

இரவெங்கும்..சிதறிய பருக்கைகள்..

*
இருள் வாய்க்குள்
அவசரமாய்
சூரியனை ஊட்டிய பிறகு

சிதறிய பருக்கைகள் என

இரவெங்கும்
மினுக்குகின்றன
மிச்ச சூரியன்கள்..!

****

இருள் மஞ்சனை..

*
மன்மதனிடம்
சொல்லி வைத்திருக்கிறேன்

மலர் அம்புகளை
கூர் தீட்டிக் கொள்..

யௌவன நிலவு
மார்புகள் புடைத்து

இருள் மஞ்சனையில்
சயனம் கலைந்து
மிதக்கிறது

****

வைகறையில் அவிழ்ந்தபோது..

*
உன்னை
நினைத்துக் கொண்டே
இரவை நுனித் திருகி
முடிச்சிட்டு வைத்த கர்சீப்

வைகறையில் அவிழ்ந்தபோது

அதிலிருந்து
இரண்டொரு நட்சத்திரங்கள்
உதிர்ந்தன..!

****

ரகசியமாய் வளையும் பரிசல்..

*
ஆற்றுச் சுழிவைக்
கடக்கத் திரும்பும்

ஒரு
லாவக பரிசலைப் போல்
ரகசியமாய் வளைகிறது

எனக்கென
உன்
புன்னகை..!

****

தனிமையின் குடைக்குள்..

*
என்
தனிமையின் குடைக்குள்

உன்
புன்னகை
கிளைத்து விரிந்து

என்
கை நோக்கி
இறங்குகிறது

ஸ்டீல் கம்பிகளென..!

****

இரண்டு நூல் பிசிறுகள்..

*
உன்
வரவேற்பறையில்

நீ
போட்டு வைத்திருக்கும்
சிகப்பு நிற சோபாவின்
கைப்பிடியில்

இரண்டு நூல் பிசிறுகள்

நான்
கிளம்பும்போது

என்னைக் கைப்பிடித்து
இழுக்கிறது..!

****

பயணக் களைப்புக்கு பிறகு துவளும் பாதங்கள்..

*
ஒரு
மரணத்தை ஒத்திருக்கிறது
அந்தப் புன்னகை..

நீண்ட
பயணக் களைப்புக்கு பிறகு
துவளும் பாதங்களை

இரவல் பெற்றுக் கொள்கிறது

சட்டென்று நேர்ந்து விடும்
மீளாத் துயரம்..

துயரத்தில் ஏற்படும் சந்திப்பில்
நேரும் புன்னகை
ஒரு
மரணத்தை ஒத்திருக்கிறது..

****

எப்படியிருந்த போதிலும்...

*
நிர்வாணத்திலிருந்து தான்
தொடங்க வேண்டும்
என்பதில்லை..

உடுத்திக் கொள்வதாக
உருவாகும்

பாசாங்கிலிருந்தும்..

****

நீர்மை..

*
கொதித்தடங்கிய
தண்ணீருக்குள்

பாத்திரம்
தன்
அடிப்பாகத்தில்
தாங்கிப் பிடித்திருக்கிறது

இரண்டொரு
வெப்பக் குமிழ்கள்..!

****

தயக்கங்களின் நிழல்..

*
பிரிவின்போது
மூடிக்கொள்ளும் கதவில்

தயக்கங்களின் நிழல்..

சாவி தொலைந்த ஒரு பூட்டைப் போல்
நிரந்தரமாய்
தொங்குகிறது..!

****

ஈரம் உலர்ந்த கன்னத்து முத்தம்..

*
ஒரு
பிரார்த்தனையை போல்
எழுந்ததிலிருந்து
படுக்கையில்
முணுமுணுத்துக் கொண்டிருக்கிறேன்

அவனில்லாத
இந்த அறையின் நீல நிறம்
உயிரை உருவி மின்விளக்கில் எரிகிறது

மேஜையில்
அடுக்கி வைத்திருக்கும் காகிதங்கள்
அத்தனையும்
வெண்ணிற முனைகளோடு
மௌனித்து அசைக்கின்றன சமாதானங்களை

இரண்டு இரவுகளுக்கு முன்
ஈரம் உலர்ந்த கன்னத்து முத்தம்
நழுவி நழுவி உதடுகளுக்கு வந்ததும்
ஸ்தம்பிக்கிறது
காதல் மந்திரத்தின் அர்த்தங்கள் புரியாமல்

இருந்தும்

ஜன்னல் வழி தோட்டத்து
நெல்லி மரத்திலமர்ந்து
அந்தக் குருவி
இத்தனை முறை தன் சிறகுகளைக்
கோதி கோதி
அடுக்கிக் கோர்ப்பது
என் முணுமுணுப்பைத் தானே..!

****

வார்த்தைகளின் கரையில்..

*
சொற்ப சஞ்சலங்களோடு
மௌன நதியைக் கடக்கும்போது

வார்த்தைகளின் கரையில்
குளித்துக் கொண்டிருக்கிறாய்

அலையெழும்பி மீளும் குமிழ் மீது
தத்தளிக்கிறது
இதுவரை
சொல்லாத அர்த்தங்கள் ஒவ்வொன்றும்

வீழ்வதும் அமிழ்வதுமான
வெளிச்சங்களை
நதியின் கரும்பள்ளத்துக்குள்
சுழற்றி அனுப்புகிறாய்

இருள் சூழும்
அந்த
உரையாடலின் வெளிகளை
உப்பியபடி நிரப்புகிறது

தீர்மானிக்க இயலுகிற
ஒற்றைக் குமிழ்..!

****

பைண்டிங்

*
கடந்து வந்த உறவுகளை
பைண்டிங் செய்யும் தீர்மானத்தோடு

உட்கார்ந்து அடுக்கி
துயரத் துளையிட்டு
சந்தர்ப்ப நூல் கோர்த்தபோது

நினைவின் ஊசி முனை மழுங்கி
தைக்க மறுத்தது..!

****

தேடல் என்ற பெயரில்..

*
கவிதைப்
பொறுக்குபவன்

மனக் குப்பைகள்
கிளறி கிளறி

எடை கூட்டுகிறான்..

***

செதில்களில்..

*
மரணித்தலின் செதில்களில்
செருகிக் கிடக்கிறது
ஒவ்வொரு
துரோகமும்

வகை பிரித்தடுக்கும்
விரல்களில்
அனுபவ பிசுபிசுப்பு..

****

மௌனத்தின் பழுப்பு நிறம்..

*
நகரத்தின் புதிர் நிறைந்த
பகலை
வெயில் நிரப்புகிறது
நிழலை இழுத்து வந்து..

மரங்கள் உதிர்க்கின்றன
மௌனத்தின் பழுப்பு நிறத்தை
அதைக் கடப்பவரின் நிழல் மீது..

இரவுக்கு முன்
ஒளிர்ந்து விடும் தெருவிளக்கு
காத்திருக்கிறது
தன்னை மொய்ப்பதற்கு ஈசல் கூட்டத்தை
எதிர்நோக்கி..

முளைக்கும் இறக்கைகள் மீது பிரியம் கொண்டு
சில நிமிடப் பறத்தலுக்கு
விளக்கின் நிழலுக்கு சிறகுகளைக்
காணிக்கையாக்குகின்றன

நகரத்தின் புதிர் நிறைந்த பகல்களைப் பற்றி
கவலைப்படாத ஈசல் கூட்டம்..

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் [ செப்டம்பர் -26 - 2010 ]

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31009261&format=html

அசையும் கை நிழல்..

*
மறுப்பேதும் சொல்லிக் கொண்டிருப்பதில்லை
அசைக்கும் கை நிழலுக்கு ஏற்ப
புரியாமல் பார்க்கிறது
குழந்தை..

யாரோடும் கொள்ளும் சிநேகத்தில்
துளை விழுந்த துணியை ஊடுருவும்
லேசர் பார்வைகள் ஏதுமில்லை
ஆனால் அதையும் கடந்த ஏதோ ஒன்று..
கூர்மை..

சின்னஞ்சிறிய எதிர்பார்ப்புகளில்
நிரம்பி வழிகிறது புன்னகை குழையும்
இதழோர எச்சில்..

புரியா மொழி பேசி..
புதிர் உலகுக்குள் நம்மை இழுக்கும்
வித்தை அறிந்த பிஞ்சு விரல்கள்
சமயத்தில் இறுகப்பற்றிக் கொள்கின்றன..
நம் நம்பிக்கைகளையோ
அல்லது
பலவீனமான சந்தேகங்களையோ..

அவைகளை
நொறுக்கும் வித்தை
புரோகிராம் செய்யப்பட்டு
அனுப்பிவைக்கப்பட்ட பிஞ்சு விரல்கள்..!

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் [ செப்டம்பர் - 5 - 2010 ]

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31009052&format=html

பிரிவுக்குரிய விண்ணப்பங்கள்..

*
பெயர் தெரியா மரங்களிலிருந்து
உதிரும் இலைகள் பழுத்திருக்கின்றன..

ஒரு பிரிவுக்குரிய விண்ணப்பத்தோடு
எவ்வளவு நேரம் தான் காத்திருப்பது..?

இந்த சேலையில் பூத்திருக்கும்
மிட்டாய் ரோஸ் நிற பூக்கள்
அவனுக்கு கொஞ்சமும் பிடிக்காது

காதில் ஏன் இத்தனை பெரிய வளையம் மாட்டியிருக்கிறாய்
என்று ஒரு முறை பிடித்து இழுத்திருக்கிறான்
சிறு ரத்தப் புள்ளியோடு காது துளை
தன் வலியை நிறுத்திக்கொண்டது

ஹாஸ்டல் படுக்கையறைச்
சுவற்றிலிருந்த கடிகாரத்தை
கழற்றி வைத்துவிட்டேன்

அவன் மீசையை நினைவுப் படுத்தும்
நிமிட முட்களும்
உடல் முழுக்க நொடி முள்ளாய்
ஊர்ந்து கடக்கும் இரவும்
எனக்கு பிடிக்கவில்லை

இந்த சிகப்புக் கட்டிடங்கள் நிறைந்த
சட்ட நுணுக்கங்கள் நிறைந்த
சாதுரியங்கள் நிறைந்த
மரங்கள் நிறைந்த
நிழல் நிறைந்த பைக் பார்க்கிங்கில்
அவனுக்காக காத்திருக்கிறேன்

அவன் வந்ததும்
என் டென்ஷனைக் கட்டுப்படுத்த
நகம் கடிக்கத் தீர்மானித்திருக்கிறேன்
நகம் கடித்தல் அவனுக்கு அறவே பிடிக்காது

ஒரு பிரிவுக்குரிய விண்ணப்பத்தோடு
எவ்வளவு நேரம் தான் காத்திருப்பது..?

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3419

நவீன டிராக்டர்கள் உழும் பொருளாதார நிலம்..

*
ஒரு முறையாவது சொல்லியிருக்கலாம்
கை மறதியாக உன் மேஜை மீது வைத்துவிட்ட
கோரிக்கையின் நகலை
என்ன செய்ய உத்தேசித்திருந்தாய் என்பதை

மன்றாடியோ
மண்டியிட்டோ அல்ல
கைகட்டிப் பெற்றுக் கொண்ட கூலி
வெண்ணிற கவரில் அடைத்துத் தந்தாய்

மணம் கமழும்
புத்தம்புதிய பணக் காகிதங்களின்
வர்ணங்களில்
நவீன டிராக்டர்கள் உழுகின்றன
பொருளாதாரத்தின் நிலத்தை

ரிசர்வ் வங்கி கவர்னரின் வாக்குறுதியோடு
வீடு திரும்பும் வழியில்

செல்போன் சிணுக்கி
அதிர்வலையோடு மீண்டுமழைக்கிறாய்
உன்
பிரத்தியேகக் குளிரூட்டப்பட்ட கேபினுள்

போனஸாக நீயடுக்கிய
எக்ஸ்ட்ரா வேலைகளின் சுமையோடு
லிப்டிலிருந்து வெளிப்பட்ட கணத்தில்
உணர முடிந்தது

வாய் பிளந்து ஒரு மிருகம்
என்னை வெளியே துப்புவதையும்
உறுமும் டிராக்டர் என
உன்
கண்ணாடிக் கட்டிடமும்..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3380

சொல்லப் பிடிக்காத புதிரைப் பகிர்ந்துக் கொள்ளும் காலக் கண்ணாடி..

*
எங்கிருந்து தொடங்குவது
என்பதைப் பற்றி
யாருக்கும் சொல்லப் பிடிக்கவில்லை

அல்லது
சொல்லும்படியான எச்சரிக்கையுடன்
திடீரென்று அந்தக் காலை விடிவதுமில்லை

நம்பும்விதமாக
அதை அடைவதைப் பற்றியோ
அடைந்து விட்டதைப் பற்றியதொரு பிரக்ஞையோ
பிறரால் மட்டுமே அறிவிக்கப்படுகிறது

பின்னோக்கி நகர்வதைப் போலொரு பிரமை
கடந்து செல்லுபவர்களால் விநியோகமாகிறது

இந்தப் புதிரைப் பகிர்ந்து கொள்ளும்
காலக் கண்ணாடியில்..
முதல் சுறுக்கம் சிநேகக் கோடென இழுத்துச் சென்று
அறிமுகம் செய்து வைக்கிறது
கிருதாவில் கொத்தாக நிறம் மாறிவிடும்
வயோதிகத்தில்..

அந்தக் காலையை
எங்கிருந்து தொடங்குவது
என்பதைப் பற்றி
யாருக்கும் சொல்லப் பிடிக்கவில்லை

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3360