வியாழன், ஜூலை 28, 2011

பயணத்தின் மஞ்சள் நிறம்..

*
மதிய வெயில் கோடுகளாய்
குறுக்கே விழுந்திருந்த
ஒரு
நடைப்பாதைப் பொழுது

பயணத்தின் மஞ்சளை
கரு நிழல் துரத்துவதை
எண்ணியிராத 
ஓர் எறும்பு

மரணத்தின் வடிவத்தை
வாசித்துக் கொண்டிருந்த அரைக் கணத்தில்
பட்டென்று ஸ்தம்பித்தது
கால் கட்டை விரலுக்குக் கீழ்

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜூலை - 24 - 2011 )

மீளா நிழல்


கைப்பிசைந்து நிம்மதியிழக்க நேர்கிறது
இப்பெரு அமைதியில்

காலடி ஓசைகளின் அதிர்வில்
நடுங்குகிறது நிற்கும் நிழல்

ஒளி கசியும் ஜன்னல் திரையில்
மடிந்து மடிந்து தொங்குகிறது
மீளா துக்கம்

கையெழுத்து இடச் சொன்ன படிவத்தில்
உறுதி செய்து கேட்கிறார்கள்
அவன் மரணத்தை

வெண்துணி போர்த்திய உடலென
வருகிறான் பின் எப்போதும் பார்க்க விரும்பாத
விழிகள் நிலைக் குத்த..

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜூலை - 24 - 2011 )

முடிச்சிட்டுக் கொள்ளும் நாளங்கள்..

*
ஒரு கறுமைப் பொழுதை
ஊற்றிக் கொண்டிருக்கிறேன்
இரவின் குடுவையில்

வெளிச்சத் திரள் என
சிந்துகிறாய்
துயரத்தின் வாசலில்

கைப்பிடியளவு இதயத்தில்
அழுத்தும் நினைவு நாளங்களில்
முடிச்சிட்டுக் கொள்கிறது

எப்போதும்
முடிவற்று விரியும்
கோரிக்கை யாவும்

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜூலை - 10 - 2011 )

மரணித்தல் வரம்

*
கை நீளுதலை யாசகம் என்கிறாய்
யாசித்து பெறுவதாக இருப்பதில்லை
எனக்கு தேவையான பார்வை

பேசாதிருத்தல் அமைதி என்கிறாய்
பேசி அடைவதாக இருந்ததில்லை
நான் பெற்ற மௌனம்

மரணித்தல் வரம் என்பாய்
எதன் பொருட்டு தவம் இருந்தேனோ
அதிலில்லை
யாசகமோ
ஒரு மௌனமோ
குறைந்தபட்சம் ஒரு பார்வையோ

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜூலை - 3 - 2011 )

நிரம்பி வழியும் பிளாஸ்டிக் நாற்காலிகள்..


தோளை லேசாகத் தட்டி
கையைக் குலுக்கி ஆறுதல் சொல்லும் தருணம்
குறுக்கும் நெடுக்குமாக உடைகிறது
பெரும் சப்தத்துடன்

துக்கம் அடைத்துக் கொண்ட குரல்கள்
பால்கனி வழியே சிந்திக் கொண்டிருக்கிறது
இன்னும் பிடிவாதமாக சொட்டு சொட்டாய்

நிரம்பி வழியும் பிளாஸ்டிக் நாற்காலிகளின்
நிறங்கள் எப்போதும் ஒன்று போலவே இருக்கின்றன
சாமியா பந்தலின் நிழலுக்குள்

வேறு வழியற்று அத்தெருவில்
ஷட்டர் இறக்கப்பட்ட கடைகளின் வாசலில்
நின்று கொண்டிருக்கிறார்கள்
இறுதி ஊர்வலம் புறப்பட்டதும்
கடையைத் திறந்து கல்லாவைக் கொஞ்சமேனும் நிரப்ப..

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜூலை - 30 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15876&Itemid=139

சனி, ஜூலை 23, 2011

ஒற்றைச் சொல்

*
வெகு நேரமாக சுழன்றுக் கொண்டிருந்தது காதருகே
ரீங்கரிக்கும் ஒரு கொசுவைப் போல
சற்றுமுன் நிகழ்ந்த உரையாடல்

தொலைவில் கலங்கிய கரிய நிழலின் பிம்பமென
நெளிந்தபடி சிறுத்துப் போகும் உன் உருவை
கானல் நெய்து கொண்டிருக்கிறது

அர்த்தம் உணரும் வெளியில்
கால்கள் சிக்க அசைவற்று நிற்கும் சதுப்பாகிறது
இந்நிலம் கரும்பாசி நிறத்தில்

பிறகும் முளைத்துக் கொண்டேயிருக்கிறது
நீ தூவிச் சென்ற வார்த்தைகள்
சுற்றிக்கொள்ளப் பிரயத்தனப்படும்  கொடியென

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜூலை - 28 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15822&Itemid=139

தாழப் பறக்கும் நம்பிக்கை நிழல்..

*
அப்படியொரு நிர்க்கதியை
இதற்கு முன்பும் அடையச் செய்ததுண்டு

ஒவ்வொரு மீட்சியிலும்
தாழப் பறக்கும் நம்பிக்கை நிழல்
மழைப் பொழிவதில்லை

இறுகப் பற்றிக் கொள்ள நேரும் கரங்களில்
யாவற்றையும் வாசித்து விடுகிறது
அழுந்த நெளியும் ரேகைகள்

அப்படியொரு நிர்க்கதியை
இப்போதும் அடையும்படி ஆகிறது

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜூலை - 25 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4586

உள்ளங்கைக்குள் அடங்கும் நேற்றைய இருள்..


இப்படியொரு ஆச்சரியத்தை
யாசிப்பாய் என்று எதிர்பார்க்கவில்லை
பேசுவதற்கு ஏதுமற்று
உட்கார்ந்திருக்கிறாய்

உன்
பிடிவாதத் தருணங்களை
விரல் விட்டு எண்ணுகிறேன்

பார்வை ஊசிக் கொண்டு பழைய சம்பவங்களை
நிதானமாகத் தைக்கத் தொடங்குகிறாய்

நமக்கிடையே ஆவிப் பறக்க
வைக்கப்படும் கண்ணாடிக் கோப்பை நிறைய
வார்த்தைகள் மிதக்கின்றன

அவை நமக்குத் தேவைப்படவில்லை

உள்ளங்கைக்குள் அடங்கிவிட்ட நேற்றைய
இரவின் இருளை சுரண்டிப் பிரிக்கிறேன்
சிறு புள்ளியென அதில் ஒளிர்கிறது
நீ தந்த முத்தம்

ஆவலோடு உன் மௌனித்த உதடுகள் கொண்டு
அதை ஒற்றியெடுக்கிறாய்

அதுவரை மிதந்த வார்த்தைகள்
ஒவ்வொன்றாய் கனத்து கோப்பையின் அடியில்
தேங்குகிறது
ஓசைகளேதுமின்றி

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜூலை - 25 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4586

துயரத்தின் ஈரம்..

*
குரலுக்காக ஏங்கிக் காத்திருந்த
துயரத்தின் ஈரம்
உடைந்து உடைந்து கரைகிறது
அலைபேசும் நிமிடத்தில்..

வந்துவிடுவதாக நம்பும் பிடிமானத்தை
இன்னும் பத்திரமாய் இறுக்குகிறாய்
மறுமுனையிலிருந்து..

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜூலை - 24 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15739&Itemid=139

பார்வையின் முள்

*
எங்கிருந்து தொடங்குவது
என்றொரு கணம்
அடுக்கி வைத்திருக்கும்
புத்தக இடைவெளியில் நெளிகிறது

லாவகமான நிமிடங்களை
அபகரித்துக் கொள்ளும்
பார்வையின் முள் நிரடிச் சலிக்கிறது மௌனத்தை

எதிர் நாற்காலியின் வெறுமையை
அமைதியாக மெழுகிக் கொண்டிருக்கிறது
விளக்கொளி

வார்த்தைகளை
அரைத்துச் சுழலும் மின்விசிறி இழை
ஒவ்வொரு பக்கத்தின் எண்களையும்
சுழற்றி வீசுகிறது வாசல் நோக்கி..

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜூலை - 17 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15618&Itemid=139

ஞாயிறு, ஜூலை 17, 2011

ரகசியமாய் தைத்த இரவு..

*
குளிருக்காக இழுத்துப்
போர்த்திக் கொண்ட போர்வையில்
இரவை
ரகசியமாய்
என்னோடு தைத்து விட்டது

இழை இழையாய்
உன்
முத்தம்..

****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜூலை - 10 -2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15506&Itemid=139

சலனமற்று விழும் ஒரு சாம்பல் துளி..

*
எரிந்து மிச்சமாகும் சாம்பல் துகள்கள்
அறையெங்கும் படிகிறது
 
திறந்து கிடக்கும் புத்தகத்தின்
வாசிக்க மறந்த பக்கத்தில்
ஒத்துவராத வாக்கியங்களுக்கு நடுவே
சலனமற்று விழுந்து கிடக்கிறது
புதிர் நிறைந்த முற்றுப் புள்ளியென
ஒரு சாம்பல் துளி
 
அர்த்தங்களுக்கான விளக்கங்கள்
இவ்விரவு நெடுக நிழலென
அசைந்துக் கொண்டே இருக்கிறது
ஜன்னலுக்குரிய மெல்லிய திரைச் சீலையில்
 
மனதிலிருந்து பதிவிறக்கம் செய்யப்படும்
துரோகங்கள்
மேலும்  எரிந்து சாம்பலாகிறது
எதையும் மிச்சம் வைக்காமல்
 
*****
 
நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜூலை - 9 - 2011 ] 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15495&Itemid=139

வியாழன், ஜூலை 14, 2011

படரும் பசலையாய் மருகி..

*
எதனூடும் பற்றிக் கொள்ளவியலாத
வேர்களைக் கொண்டிருக்கிறாய்
நித்தமும் ஒரு ரகசியக் குறிப்பென உன் இரவை
முகிழ்தலின் மகரந்தச் சேர்க்கையில்
ஈரம் உலர்தல் வாய்ப்பில்லையென்றே
நிழல் உருவிக் கொண்டாய் அந்தகாரத்தில்
தேன் உகுக்கும் மௌனச் செதில்கள்
நிரடும் இமைப் பீலியில்
கிறங்கிச் சிலிர்த்தலை கனவாக பகிர்ந்தாய்
சின்னஞ்சிறு பார்வைச் சாரல் பட்டு
கெட்டித்துப் படரும் பசலையாய் மருகி
வழிந்தோடுகிறாய் என் நிலமெங்கும்

காதல் மண்டபத்தின் தூண் சிற்பங்கள் தோறும்
உருவமென நிறைந்து கிடக்கிறாய்
யாதொரு முகாந்திரமும் அற்று

ஓர் அடர்ந்த யுகத்தின் மலர்தலில்
சிறு பனித்துளியாகி திரளும் யௌவனத்தை
ருசித்துவிடத் துடித்து  நடுங்கும் மையலாக
தாளமிட்டு உச்சரிக்கிறது உன் காமம்

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜூலை - 7 - 2011 ]


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15459&Itemid=139

குற்றம் சுமக்கும் நவீனப் படிமங்கள்..


வந்துப் போவதில் இருக்கும்
சிரமத்தை பொருட்படுத்தவில்லை
வார்த்தைகள்

காகிதங்களின் முனை மடங்குதலில்
அரூபமாகும் எல்லைகளை
மீறுவதாக குற்றம் சுமக்கின்றன
நவீனப் படிமங்கள்

ஒவ்வொரு புள்ளியோடு
முடிந்துவிட்டதாக வரும் அறிவிப்பு
ஒரு பைத்திய இரவின்
அர்த்த ஊளையிடுதலாகவோ
வால் விடைத்து இருளை நக்கும்
ருசியெனவோ
மாம்சத்தின் ரத்த கவுச்சியென்றோ
தீர்ந்துவிடுகிறது

உடன்படிக்கையோடு கை குலுக்குதல்
சிரமமென பொருட்படுத்துவதில்லை
வார்த்தைகள்

******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜூலை - 4 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15405&Itemid=139

ஜன்னல் கடக்கும் காலடிச் சத்தங்கள்..

*
இந்த அறையின் இருளுக்குள்
என் ஜன்னல் கடக்கும்
காலடிச் சத்தங்கள்
மூடிய அதன் கதவின் இடுக்கின் வழியே
மழை நீரைப் போல் வழிந்து
இறங்குகிறது

மெல்ல பரவி என் பாதங்களைத் தழுவி
காதுகளை எட்டும்போது

தெருவின் விசும்பல்
மனவெளியில்
நிம்மதியற்று அலைகிறது
அடித்து ஓய்ந்த பின்
காற்றில் மிச்சமிருக்கும்
ஆலய மணியின்
கடைசி ரீங்காரமாக

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜூலை - 2 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15390&Itemid=139