சனி, அக்டோபர் 30, 2010

பிணைப்பில்லாக் கயிறு..

*
விடைபெறும்போது
ஒரேயொரு சத்தியத்தை
நீ என்
உள்ளங்கையில் அழுத்தியிருக்கலாம்

அது
இந்த விடுதி தனி அறை ஜன்னல்
ஊடே
மர நிழல் போல் சுவரெங்கும்
கிளைத்து
என்
கால் கட்டைவிரலைக் கவ்வியிருக்கும்

பிறகு
என் கனவின் மணல்வெளியில்
பிணைப்பில்லாக் கயிற்றில்
தலைகீழாய்த் தொங்கியிருப்பேன்

வயிறு புடைத்து இன்புறும்
ஒரு
வௌவாலென..

****

கனத்த திரைச்சீலை

*
பார்வையாளர் மத்தியில்
மௌனம் காக்கும்
உண்மையைத் தேடுவதற்குள்

பொய்யின் நாடகம் முடிந்து

அவசரமாய்
மூடிக்கொள்கிறது
கனத்த
திரைச்சீலை

கலைந்து போகும்
கூட்டத்தில்
தன்
சொற்ப தடயங்களோடு
வெளியேறுகிறது
அது

****

நதிக் குமிழ்..

*
தனிமை நதியில்
மூழ்கும் முன்
குமிழ்கள் உப்பியபடி
சேகரமாகின்றன
இருத்தலின் வெப்பம் உள்ளடங்கி

மீளவியலா நினைவுச் சுழியில்
சிக்கிப் பதறவோ
இழுபட்டு
மௌன உச்சியிலிருந்து சரியவோ
நிர்ப்பந்திக்கிறது

நதியின் குளுமை..

****

சொற்ப வாசகர்களுக்கு பிறகு..

*
அமைதி காக்கும்படி
வலியுறுத்துகின்றன
நூலகங்கள்

லட்சம் புத்தகங்கள்
கோடி கதாப்பாத்திரங்கள்
சொற்ப வாசகர்கள்

நூலக நேரம் முடிந்து
கதவுகள்
அடைப்பட்ட பின்

உள்ளிருந்து
ஒரு
படுகளம் போல்

மயானமாகின்றன வராண்டாக்கள்..

****

பகல் வெப்பம்

*
நா வறட்சியில்
அனல் நெளியும் வரிகளோடு
கனக்கும் மௌனம் சுமந்து
கடக்க முடிவதில்லை
கவிதைச் சாலை
****

கையில் குடை வைத்திருக்கிறாள்..

*
ஆயிரம் முறை கெஞ்சியாகிவிட்டது
இன்னும் விடவில்லை
இந்த மழை

கையில் குடை வைத்திருக்கிறாள்
ஆனாலும்
விரிக்காமல் ஏன் காத்திருக்கிறாள்

திரும்பிப் பார்த்துச் சிரிக்கிறாள்

அதிகமாய் குளிர்கிறது
இந்த மாலை நேரம்..

****

இடறல்..

*
பிரியத்தைச்
சொல்லும்போது
பற்றிக்கொண்ட விரல்கள்

உணர்ந்து கொண்டன

உள்ளங்கையில் தட்டுப்பட்ட
துர்க்கனவின்
ரேகைகளை

****

உன் கடிதத்தின் இறுதிப் புள்ளி..

*
வேறெப்போதோ கண் சிமிட்டிய
நட்சத்திரத்தை
உன்
கடிதத்தின் இறுதிப் புள்ளியிலும்

அதன்
அடர்ந்த இருளை
உன்
புன்னகையிலும்
அடையாளம் காட்டுகிறது

என்
மேஜையில்
அமைதியாக எரியும்
இந்த மெழுகுவர்த்தி

****

ஒரு மழையும் இரண்டு காபி கோப்பைகளும்..

*
சற்று முன்
கவிதைக்குள்
பெய்த
என்
மழையொன்று

காகிதத்திலிருந்து
வழிந்திறங்கி மேஜையில் தேங்குகிறது

காபி கோப்பைகளோடு
அருகில் வந்தமர்ந்து
மனைவி கேட்கிறாள்

அழுதீங்களா என்ன..!

****

ஒற்றை ஒப்பந்தம்..

*
இனி
இழப்பதற்கு
எதுவுமில்லை என்னும்போது

ஒற்றை
ஒப்பந்தத்தில்
முடிவாக மறுத்து விடுகிறது
மரணம்

****

உதிரும் பாதைகள்

*
நெடுஞ்சாலை
ஓரிடத்தில் முடியும்போது

ஒற்றையடிப் பாதைகளின்
வரைபடம்
ஒன்றை
பரிசளிக்கிறாய்

இதுவரை
பறிக்கப்படாத மலர்கள்
ஒவ்வொன்றாய்
உதிர்கிறது
ரகசிய கிளையிலிருந்து

****

இரும்புக் கதவுகள்

*
ஓர்
அமைதி வேண்டி
எழுதப்பட்ட குரல்

இறுக மூடிய
இரும்புக் கதவில்
மோதி
உடைகிறது

சிறிய
செங்கல் துணுக்கைப் போல்

****

கனத்த கோப்புகளின் உள்ளறை

*
முகமற்றவனின்
விண்ணப்பம் ஒன்று
தெருக்களில் படியும் நிழல்களை
ஆர்வத்துடன் பற்றிக் கொள்கிறது

அது
விளக்குகளை விமர்சிக்கிறது

வெறிச்சோடிய சாலைகளைப்
பழிக்கிறது

தனிமை நடையின் தயக்கங்களை
பிளாட்பார்மிலிருந்து
சாக்கடைக்குத் தள்ளி விடுகிறது

இறுதியில்

முகமற்றவனின் விண்ணப்பங்கள்
அனைத்தும்
கனத்த கோப்புகளின்
உள்ளறைக்குள்

தூசி மண்டும் அடுக்கில்

மெல்ல
பழுப்பு நிறமேறத்
தொடங்குகிறது

****

பாய்மரங்களின் திசை

*
உனது
ஆழ்கடல் பொங்கிவிடும்போது

ஒற்றைத் துடுப்பை

எனது கை
இறுகப்பற்றிக் கொள்கிறது

****

தளும்பி உடையும் நொடிகள்

*
தண்ணீர் நிரம்பிய
கண்ணாடிக் குவளை விளிம்பில்
ஓர் ஈ
உட்கார்வதும் எழுவதுமாய்
விளையாடுகிறது
ஓயாத நொடிகளை
உடைத்தபடி

காத்திருக்கும் துளிகள்
ஒவ்வொன்றும்
மேஜையின் மீது
தளும்புகிறது
உன் வரவை எதிர்கொள்ள

****

இடம் பொருள்..

*
சுழல் நாற்காலியின்
உருளைச் சக்கரங்கள்
ஓர் இடத்திலிருந்து
இன்னொரு இடத்திற்கு
நகர மறுக்கிறது

நூல் கோர்த்துக் கொள்ளும்
வேலைப்பளு இழைப் பிரிந்து
சிக்குகிறது
எந்தவொரு
நகர்தலை முன்னிட்டும்

****

யாரையும் யாவற்றையும் கடந்து போகுதல்..

*
ஒரு
திட்டமிட்ட சந்திப்புக்காக
புறப்படும் போது

நுண்ணிய துக்கத்தோடு தான்
கிளம்ப நேர்கிறது

சந்திப்புக்குப் பின்
கை குலுக்கி பிரியும்போதும்
ஒரு துக்கத்தோடு தான்
விலக முடிகிறது

யாரையும்
யாவற்றையும் கடந்து போகுதல்
படியப் போர்த்தும் துக்க நிழலாகிறது

துக்கத்திலிருந்து கடந்து போவது என்பது
நிகழவே வாய்ப்பில்லாத
ஒரு சந்திப்பைப் போல்
தருணங்களைப் பிணைத்துக் கொண்டு
அந்தரத்தில் தொங்குகிறது

யாருக்கும்
இடையூரில்லாமல்

****

பசித்த வாடை..

*
எனது
விருப்பங்களின்
தசைநாரைப் பிளந்து

மௌனக் கொக்கியில்
தொங்கவிட்ட பின்

எழுந்து
பறக்கின்றன
பசித்த வாடையோடு

ஆயிரம் நினைவுகள்..!

****

பூக்க விரும்பும் பூக்களுக்காக..

*
நீ நினைப்பது போல்
முடிந்துவிடுவதில்லை
என் கோரிக்கை

அது ஒரு
பிரார்த்தனைக்கான ஏற்பாடு

உன்னை நோக்கி
மெல்லிய கோடு என
பென்சில் கொண்டு
கிழிக்க வேண்டிய பாதையில்

பூக்க விரும்பும் பூக்களுக்காக

மழையை நோக்கி
எழுப்பப்படும்
ஓர்
அறைக்கூவல்

****

ஒரு நிழல்..

*
நிழல் பரவுகிறது

உன்
துரோகத்தை ஊடுருவி
உன்
மௌனத்தை சிவப்பேற்றி
உன்
வார்த்தைகளைத் தோலுரித்து
உன்
உரையாடலை சீர்குலைத்து
உன்
கோரிக்கைகளைப் போட்டுடைத்து

ஒரு
நிழல் பரவுகிறது
உன்
வெயிலை அழுந்த மிதித்து..

****

வரும் மழைக்காலத்தில் அவை துருப்பிடிக்கும்..

*
மனதுக்குள்ளிருந்தே
தொடங்கி விடுகிறது
உன்னுடனான
தனிமைப் பயணம்

பேருந்து நிலையத்தின்
டிக்கட் கவுண்ட்டர் வரை
திணறலடித்த பரபரப்பை
அங்கிருந்த கம்பிக் கிராதிகள்
குறிப்பெடுத்துக் கொண்டன

வரும் மழைக்காலத்தில்
அவை
துருப்பிடிக்கவும் தொடங்கும்

நீ
என் கைகளைப் பிரியப்பட்டுக்
கோர்த்துக் கொண்டபோது
உன்
ஜன்னல்வழி புகுந்து
வெயிலில் பளபளத்த
நகப்பூச்சின் சிவப்பில்
உணர முடிந்தது என் வெட்கத்தை

இடது கை பெருவிரல் நகம் கொண்டு
முன் சீட்டின் பின்புற பெயிண்ட்டை
கிழித்து எழுதிய நம் பெயரை
சுமந்து

நகரெங்கும் திரிந்து கொண்டிருக்கிறது

நீயும் நானுமில்லாத
அந்தப் பேருந்து..!

****

வெள்ளி, அக்டோபர் 29, 2010

இடைப்பட்ட தொலைவுகள்..

*
தனிமை அறைக்குள் நிகழ்ந்த
என் திடீர் பிரவேசத்தில்
பதறியோடி
அகன்ற மொசைக் தரையில்
பாதங்கள் வழுக்கி பக்கச் சுவரில் மோதி
கிறங்கிய நிலையில்
அப்படியே நின்றது
ஒரு
அணில் குட்டி

நானும் அசைவற்று நிற்கிறேன்

எனக்கும் அணில் குட்டிக்கும்
இடைப்பட்ட தொலைவை
அளந்தபடி
மெல்ல நகர்கிறது

ஐந்து பேர் கொண்ட
ஒரு
எறும்பு ஊர்வலம்..!

****

மௌனத்தைப் பருகியபடி..

*
காகித நீர்க் கோப்பைகளில்
ஊற்றிக் கொள்ள நேர்ந்த
மௌனத்தைப்
பருகியபடி

உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு
தொடர்கிறோம்

ஒரு
அபத்த உரையாடலை

****

சுக்கான்

*
என்
சொற்களைச் செலுத்திக்
கொண்டிருக்கிறான் மாலுமி

சுக்கானை
அழுத்திப்பிடி என்கிறேன்

திருதிருவென்று முழிக்கிறது
கவிதை..

****

இரவுப் பூனை..

*
ஓட்டுக் கூரையின் மீது
பூனைகள் இரண்டு
இரவைக் கிழித்துக் கொண்டிருந்தது

ஒன்று
குழந்தையை போல் அழுகிறது

மற்றொன்று
பூனையை போல்

****

மௌன நுனி..

*
சொட்டு சொட்டாய்
துயரம் வழிந்திறங்குகிறது
மழைத் தாழ்வாரத் தனிமையில்

சாளரத் தென்றல்
அசைத்துப் போகும்
மௌன நுனியைப் பற்றிக் கொள்ளும்
விரல் ரேகைகளில்
எதையோ
எழுத எத்தனிக்கிறது

இழப்பின் வலி

****

கிட்டத்தட்ட பழைய உதடுகள்..

*
ஏறக்குறைய
எல்லாக் கவிதைகளும் எழுதப்பட்டுவிட்டது
என்கிறது புதியதாய் வாங்கிய பேனா

கிட்டத்தட்ட
எழுதப்பட்ட கவிதைகளெல்லாம்
வாசித்தாகிவிட்டது
என்கிறது பழைய உதடுகள்

ஒரு
சமரச உடன்படிக்கையில்
கையெழுத்திட சம்மதிக்கிறது
ஆரவாரமில்லாத
ஒற்றை மௌனம்..!

****

எரிந்து கீழிறங்கும் நட்சத்திரங்கள்..

*
திசைகளோடு வளைகிறது மனம்
பயணத்தின் கூர்மைப் பட்டு
துளையும் இரவில்

சிறு பிளவோடு கசிகிறது
நிலவு

எரிந்து கீழிறங்கும்
நட்சத்திரங்கள்
பூசிச் செல்கின்றன

உரையாடலின் காயத்தில்
புரியாத வார்த்தைகளை..

****

எந்த வரியில் எழுதினாலும்..

*
பரிமாறிக்கொண்ட பிரியத்தை
கையெழுத்திட்டு தரச் சொல்லி
உள்ளங்கை நீட்டினாள்
ரேகை வரிகள் முழுதும்
வியர்த்திருந்தது

எந்த வரியில் எழுதினாலும்
அன்பு ஊறிவிடும்

காத்திருந்தேன்

****

திசையெங்கும் ஓடும் மௌனப் பரிவர்த்தனை..

*
நீங்கள் ரகசியமாகப்
பதியனிடும் தாவரங்களின் இலைகளில்
மர்மங்களெனத் திரண்டு
உருள்கின்றன

உரசியபடி நுகரும்
மௌனப் பரிவர்த்தனைகள்

பச்சை நரம்புகளோடு பின்னுதல்
ஒரு கோட்பாடெனவும்

அதிலொரு பிரார்த்தனை நதி
ஊடுருவி திசையெங்கும் ஓடுதல்
ஒரு கட்டளை எனவும்

உரையாடல்களைக் கட்டமைக்கிறது
காலத்தின் பலி பீடம்

****

யாரும் சொல்லிக் கேட்டிராத கதை..

*
இதுவரை யாரும் சொல்லிக் கேட்டறியாத
கதையொன்றை சொல்லும்படி
கெஞ்சினாள் சிறுமி

சொல்லப்படாத கதையைத் தேடி
மனக்காட்டுக்குள்
கிளை பிரியும் இருண்ட புதிர்பாதைகள் தோறும்
அலைந்து சலித்து உட்கார்ந்தேன்
ஒரு கதையின் மீது..

நினைவிலிச் சாளரங்கள்
தூறல் வீசும் எண்ணற்ற காட்சிகளை
பொத்தலிட்டு மடியில் கிடத்தியது

பட்டென்று காற்றில் திறந்த கதவின் ஊடே
பாய்ந்த வெளிச்சத்தில்
என் அறையிலிருந்தேன்

சுவர் முழுக்கப் பரவியிருந்த
வெயிலோடு உடைந்து கிடந்த
என் நிழல்
இதுவரை யாரும் சொல்லிக் கேட்டிராத
என்னைக் காட்டியது

காத்திருந்தேன் சிறுமிக்காக
அதன் பிறகு அவள் வரவேயில்லை

வந்தாலும்..

இதுவரை
யாரும் சொல்லிக் கேட்டிராத
அந்தக் கதையை சொல்லும்படி
கேட்கவுமில்லை..

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( அக்டோபர் - 24 - 2010 )

http://www.thinnai.com/?module=displaystory&story_id=310102417&format=html

பேசுவதற்கு ஏதுமற்ற நீண்ட வழி..

*
பேசுவதற்கு ஏதுமற்ற
நீண்ட வழி

இத்தனைப் பேர்
உடன் வந்தும்
ஏதுமற்ற வழியாகிப் போனது
உன்னைச்
சுமந்து செல்லும்
இந்த இறுதிப் பயணம்

பூக்கள் நசுங்கி வழிகின்றது
பின்தொடரும்
வாகன டயர்களில்

மௌனம் தேங்கும் முகங்கள் தோறும்
பொடிப்பொடியாய் வியர்க்கிறது
உன் மரணம்

****

மெட்ரோ கவிதைகள் - 88

*
நாளொன்றுக்கு
பதினெட்டு சிக்னல்கள்

கிடைக்கும்
மிகு சொற்ப நொடிகளில்
ஹெல்மட்டின் கருநீல நிற வைஸரில் மோதும்
டிஜிட்டல் கோடுகளுக்கிடையில்

அவசரமாகவேனும்
எழுதிவிட முடிவதில்

சம்பவங்களைத் தருணங்களை
ஒளிர்கிறது

சிவப்பும்
பச்சையுமான
விளக்குகள்

****

சில்லிடும் குற்ற நிமிடங்கள்

*
பொய்யர் உலகின்
குளிர்காற்றில்

சில்லிடும் குற்ற நிமிடங்கள்

பெருவாழ்வின்
எலும்பைக் குடைந்து

நடுக்குகின்றது
யாவற்றையும்

****

காலிக் கோப்பைகள்

*
வாளி நிரம்பி வழிகிறது

இரவை
ஊற்றித் தர இடமில்லாமல்

காலிக் கோப்பைகள்
கிணற்றுத் திண்டில்
கவிழ்ந்தபடி
புகார் சொல்லுகின்றன

வாளி நிரம்பி வழிவதாக

****

தொலைத் தூரங்கள்

*
ஒவ்வொரு
சந்திப்பின் முடிவிலும்
கைக் குலுக்கி விடைபெறுவாய்

அதிலடங்கும்
தொலைத் தூரங்களை

என்
மரணத்தின்
இறுதித் தருணத்தில்
நினைவுகூற விரும்புகிறேன்..

****

வியாழன், அக்டோபர் 28, 2010

கரை..

*
ஒரு
பிளஷ் அவுட்டில்
தன்
கழிவுகளை இழுத்துக் கொண்டு
கரைந்தோடக் கூடாதா

தவறாகக் கரை ஒதுங்கிவிட்ட

ஓர்
அபத்த
கவிதை..!

***

தவம் கலையும் ஒரு நாளின் வெம்மைப் பகலில்..

*
பிரம்மாண்டத் தொழிற்சாலையின்
அபாயச் சங்கின் மீது
கண்ணாடி இழைச் சிறகுகள் படபடக்க
சென்றமர்கிறது
ஒரு
மழைத் தும்பி

வெகு நாட்களாக
அந்தத் தும்பியும் பறக்கவில்லை
சங்கும் ஒலிக்கவில்லை

அதன்
தவம் கலையும் ஒரு நாளின்
வெம்மைப் பகலில்

இந்நகரத்தின் மீது
இரத்த மழைப் பொழியும்
என்றான்

என்
பிரியத்துக்குரிய
தோழன்..!

****

அப்படி நிகழ்ந்துவிடுதல் என்பதைத் தவிர..

*
அப்படி நிகழ்ந்துவிடுதல்
என்பதைத் தவிர
அதில் வேறு ஒரு அர்த்தம் இருப்பதில்லை

நண்பர்களுடனான
விவாதங்களில்
தர்க்கத்தின் கடைசி வரியிலிருந்து
முன்னேறும் கணத்தில்
காலிடறி
குப்புறக் கவிழ்க்கிறது
ஒரு தத்துவம்

தோழிகளின் கண்ணீர் துடைக்க
நீளும் விரல்
உதடுகளில் பட்டுவிடும்போது
வார்த்தைகளோடு புறப்பட்டுவிடுகிறது
ஒரு அபத்த முத்தம்

சிகப்பு ஆரஞ்சு பச்சை
என்று நிறங்களின் லயிப்பில்
சாலைக் கடக்கும்
கவனப் பிசகில்
ஒரு சேர ஒலிக்கின்றன
வித வித ஹாரன்களும்
வசவு வார்த்தைகளும்

துயரங்களும்
பிரியங்களும்
இருளில் அசையும் மரங்களின்
நிழல்களை போல்
கொண்டாடி புணர்கின்றன

அதில் வேறு ஒரு அர்த்தம் இருப்பதில்லை
அப்படி நிகழ்ந்துவிடுதல்
என்பதைத் தவிர

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3560

துண்டிக்கப்படும் உரையாடலின் உறைக்குள்..

*
சரி கிளம்புகிறேன் என்கிறாய்
பேசிக் கொண்டிருக்கும்போதே

நேற்றிரவின் அகாலத்தில்
உச்சம் தொட முடியாத கலவி
நிழல் போல் முகத்தைக் கடந்திருக்கலாம்

அல்லது

ஐந்து மார்க் வித்தியாசத்தில்
முதல் ரேங்க் தவறவிட்ட
எட்டு வயது மகனை
காலையில் கிளம்பும்போது
கன்னத்தில் அறைய நேர்ந்த கணத்தில்
அவன் கண்களில் உறைந்த
பயத்தின் பார்வை
நாக்கில் காரமேற்றி இருக்கலாம்

அல்லது

பால்யத்தில்
முதல் காதலி தந்த
கடைசி முத்தத்தின் ஈரம் உலராமல்
பாதுகாத்த டைரியை
முதல் நாள் மாலை
மனைவி படிக்க நேர்ந்திருக்கலாம்

அல்லது

சமரசங்கள் அற்ற
நிர்ப்பந்தங்கள் நிறைந்த
சூழ்ச்சிகள் மலிந்த
நகர வாழ்வின் அவலங்களை வழங்கும்
விசித்திரக் காட்சிகளின்
தணிக்கை செய்யவியலா விதிகளின் நிலுவைகள்
அலுப்பூட்டியிருக்கலாம்

அல்லது

துண்டிக்கப்படும் உரையாடலின் உறைக்குள்
ரத்தம் தோய்ந்த வார்த்தைகள்
கூர்மையுடன் காத்திருந்திருக்கலாம்

சரி கிளம்புகிறேன் என்கிறாய்
பேசிக் கொண்டிருக்கும்போதே..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3535

யாருமற்ற சபையின் மௌனங்கள்..

*
தோல்விகளின் வரலாற்றை
நாம் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்

சமரசங்களின் மீது
நம்பிக்கையிழந்த அடையாளங்கள்
அதன் மேஜையில்..
நகக் கீறலின் வடுவைப் போல்
தங்கி விடுகிறது..

யாருமற்ற சபையின்
வனையப்பட்ட மௌனங்கள்..
சொற்ப சொற்களுடன் போரிடுகின்றன

யாவற்றையும்
குறிப்பெடுத்துக் கொள்ளும்படி..!

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( அக்டோபர் - 29 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11181&Itemid=139

நாவின் நுனியில் உடைந்து தொங்கும் நிமிடங்கள்..

*
கைப்பிடி அளவே உள்ள
சாதுர்ய பதில்களில்
முரண்படும் நிமிடங்கள்
உடைந்து தொங்குகிறது
நாவின் நுனியில்..

சந்தேகக் குளம்புகள் அதிர
செந்நிறத்தில் கிளம்பும் ஓசைகள்
கண்களில் பரவி
மனக்காட்சிகள் யாவும்
உறைகிறது..

உறவுக்குரிய ஒப்பந்தச் சமுத்திரத்தின்
கரைகளில்..
உருளும் நுரைக் குமிழ் அள்ளிப்
பருகச் செய்கிறது..
உன் மீதான
நம்பிக்கையின் தீராத தாகம்..!

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( அக்டோபர் - 10 - 2010 )

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31010106&format=html

பழகும் நாட்களின் பரிவர்த்தனை..

*
அவன் பிரியத்தின் மடிப்பு
கலையவில்லை

அதைக் கச்சிதமாக உடுத்திக்கொள்ள
அவளுக்கொரு தனிமை தேவைப்படுகிறது..

பழகும் நாட்களின் பரிவர்த்தனையில்
சின்னஞ்சிறு இழப்புகளைப்
பெற்றுக் கொள்வதில் வருத்தமில்லை..

அதைத்
திருப்பித் தரும் பொருட்டு
உருவாகும் சந்தர்ப்பங்களை..
ஒன்றின் மேல் ஒன்றாக
அடுக்கி வைக்கிறது
ஒவ்வொரு சந்திப்பும்..!

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( அக்டோபர் - 24 - 2010 )

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31010245&format=html

தங்க மீனின் கடல் நிமிடம்..

*
உதடு குவித்து ஆக்சிஜன் விழுங்கும்
அழகில்..
நீரெங்கும் குமிழிட்டுப் பரவுகிறது
பொன் நிறம்..

வால் சுழற்றும் மென் அசைவில்
பாலே நடனமிடுகிறது
பிளாஸ்டிக் பாசிச் செடி..

இரை உருண்டைக்கு ஏங்கி
மேலெழுந்து வாய் பிளப்பதை
வளர்ப்பவன் பழகிக் கொள்கிறான்

இந்தக் நீளக் கண்ணாடித் தொட்டி
கடலென கற்பிக்கப்படுதல்
தங்க மீனின் உலகத்தை
நகலெடுக்கும் வித்தைப் புரிந்த சூட்சுமம்

ஒரு
கோபக் காலையில்..
வீசியெறியப்பட்ட செல்போன் விரிசலில்
கடல் தொட்டியின் நிமிடம் உடைந்தது..

உதடு குவித்து
ஆக்சிஜன் விழுங்கமுடியா
நீரெங்கும்
குமிழிட்டுப் பரவுகிறது
தங்க நிறத்தில் மீனின் மரணம்..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3464

மெட்ரோ கவிதைகள் - 87

*
அண்ணாந்து வாய் பார்க்கும்
குரங்குக் குட்டி
தாளமடிப்பவனின்
சேஷ்டைகளை
பசியோடு பட்டியலிடுகிறது

தலையில் தட்டை ஏந்தி
சலாம் வைத்து
கூட்டத்தை வலம் வந்து
சிதறும் காசுப் பொறுக்கி இளிக்கிறது..
நகரம் புரியாமல்

***

கனவுகள் வரைகின்றவனின் விரலொன்று..

*
ரகசியக் கனவுகள் வரைகின்றவனின்
விரலொன்று
அடர்ந்த இருளின் சதுப்புக்குள்
புதைந்து கிடக்கிறது

அதில் அசையும் பிம்பங்கள்
ஒளிர்கின்றன
வர்ணங்களற்ற தூக்கத்தில்

உதிரும் சிறகுகளின் இழைகளை
ஒரு சேரப் பிழிந்துத்
தொட்டுத் தர வழியற்று

புதைந்து கிடக்கிறது
விரலொன்று..

****

முற்றத்து மழை ஈர மணல்..

*
சின்னஞ்சிறு தாளச் சிதறலில்
முற்றத்து மழை
ஈர மணல்துகளை
வாரி இறைக்கிறது

எழுதிக் கொண்டிருக்கும்
கவிதை முழுதும்

அதிலொன்று
முற்றுப் புள்ளியாய் விழுந்து உப்புகிறது..!

***

கூர்மையான வார்த்தையின் இரவு..

*
மௌனத்தை விட வலிமையான
ஒரு திரையை
நீயேன்
நமக்கிடையில்
இழுத்துக் கட்டுகிறாய்

அதைக் கிழித்தெறிய
கூர்மையான
வார்த்தையொன்றை
இரவெல்லாம் சானைப் பிடிக்கிறேன்

கண்ணீர்ப் பட்டு
துருவேறுகிறது
அதன் அர்த்தம்

****

சாத்தானின் நாக்கு..

*
கடவுளின் சடை நுனியில்
சாத்தானின் முகம் வளர்கிறது

கூப்பும் கைகளுக்குள்
நடுங்கி உதிர்கிறது மந்திரம்

பிரார்த்திக்கும் உதடுகளுக்குள்
விஷம் சுழற்றுகிறது
சாத்தானின் நாக்கு

எளிய நம்பிக்கைகளின்
கர்ப்பகிரகத்துக்குள்
தீண்டப்படாத சர்ப்பம் போல்
சயனித்து கிடக்கிறது பொய்..

****

எலும்புகளால் முடையப்பட்ட உடல்..

*
மாத்திரைக்குள்ளிருந்து
உடைந்து
வெளியே விழுகிறது
நிறமிழந்த கிருமி

எலும்புகளால் முடையப்பட்ட
உடலுக்குள்
நீண்ட பயணமாகி நீந்துகிறது
உயிர்

ஒரு
வெண் தேவதை
தன் ஸ்டெதாஸ் கரங்கள் கொண்டு
சோதித்துச் சபிக்கிறாள்

சென்றடையும் தூரத்தை
விரல்
விட்டு எண்ணத் தொடங்கும்படி
கட்டளையிடுகிறாள்

மரணத்தின் வாசல் வெகு அருகில்
என்கிறாள்

அவள் எழுதித் தரும்
மாத்திரைக்குள்ளிருந்து
உடைந்து
உள்ளேயே விழுகிறது
நிறமிழந்த கிருமி

****

இலை நிழல்கள்..

*
படிகளில் உடைந்து உருளும்
சின்னச் சின்ன
இலை நிழல்களை
கையில் ஏந்திப்
பரவுகிறது வெயில்..!

****