சனி, அக்டோபர் 30, 2010

கனத்த கோப்புகளின் உள்ளறை

*
முகமற்றவனின்
விண்ணப்பம் ஒன்று
தெருக்களில் படியும் நிழல்களை
ஆர்வத்துடன் பற்றிக் கொள்கிறது

அது
விளக்குகளை விமர்சிக்கிறது

வெறிச்சோடிய சாலைகளைப்
பழிக்கிறது

தனிமை நடையின் தயக்கங்களை
பிளாட்பார்மிலிருந்து
சாக்கடைக்குத் தள்ளி விடுகிறது

இறுதியில்

முகமற்றவனின் விண்ணப்பங்கள்
அனைத்தும்
கனத்த கோப்புகளின்
உள்ளறைக்குள்

தூசி மண்டும் அடுக்கில்

மெல்ல
பழுப்பு நிறமேறத்
தொடங்குகிறது

****

2 கருத்துகள்:

  1. இளங்கோ, முகமற்றவன் என்ற வார்த்தை இன்னும் சாதிக்காதவன் என்ற அர்த்தத்தையும் பின்வரும் வரிகள் முதல் வாசிப்பில் வாய்ப்புக்காக அலைதலையும், அவை பரிசீலிக்கப் படாமல் கோப்புகளில் சிதைவதையும் சொல்வது போலவும்,
    இரண்டாம், மூன்றாம் வாசிப்புகளில் சமரசமின்மை தந்த கோபத்தில் விண்ணப்பங்களை வாய்ப்புக்காக யாரிடமும் தராமல் தன்னிடமே வைத்துக்கொண்டு தானே சிதைந்து போகும் இன்னொரு மனநிலையையும் சுட்டுகிறது. உங்கள் profileஇல் உள்ள சுயஅறிமுகம் இரண்டாவதான கோபக்கார மனநிலையையே அதிகம் சுட்டுவது போல் தோன்றுகிறது.
    சுயபுலம்பலோ? கவிதை அருமை. சீக்கிரம் நீங்கள் உங்கள் முகத்தை பெற்றுவிடுவீர்கள். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. கோநா,
    பெரும்பாலும் சுயபுலம்பலை கவிதைக்குள் அடைப்பதில்லை..
    அதெல்லாம் வெகு ஆரம்பக்கால உத்திகளாக மேற்கொண்டவை. இப்போது அவசியப்படவே இல்லை.
    பெற்ற, கேட்ட,கண்ட, உணர்ந்த அனுபவங்களின் சாரல் தான் பொதுவாக அனைத்தும்..
    ஏறக்குறைய எல்லாருக்கும் வெவ்வேறு வடிவில் உள் மிதித்து நகர்ந்து போயிருக்கக் கூடும் ஒவ்வொன்றும் என்னும் அனுமானத்தில் வார்த்தைகளாகவும் வடிவ முயற்சியாகவும் எழுதிப் பார்க்கிறேன்.
    நீங்கள் சொன்னது போல அப்படி ஒரு கோபம் அநேகம் பேருக்கு இருக்கு.
    என்னுடைய Profile-ல் உள்ள சுய அறிமுகம் ஒரு பகிர்வே அன்றி..அது நிச்சயம் புலம்பல் அல்ல..( நீங்கள் கேட்டதால் சொல்லும்படி ஆயிற்று. மன்னிக்கவும் )
    முடிந்த வரை [ துன்பம் வரும்போது புன்னகையோடு கடந்து போக முயற்சிக்கிறேன் ] அவை என்னைக் கேலி செய்வதையோ பரிகசிப்பதையோ வேடிக்கைப் பார்க்கவும், அப்படி செய்ய அனுமதிப்பதையும் பழக்கிக்கொண்டாகி வருடங்கள் பல ஆயிற்று.
    ஆனால்...கவிதையில் இருக்கும் கோபம் Universal.
    அது வாசிப்பவருக்கு வேறு ஒரு சூழலில் வேறு ஒரு வடிவத்தில் வந்து போயிருக்கும்..அல்லது நெஞ்சில் வண்டல் போல் படிந்து கிடக்கும்..

    பதிலளிநீக்கு