சனி, அக்டோபர் 30, 2010

வரும் மழைக்காலத்தில் அவை துருப்பிடிக்கும்..

*
மனதுக்குள்ளிருந்தே
தொடங்கி விடுகிறது
உன்னுடனான
தனிமைப் பயணம்

பேருந்து நிலையத்தின்
டிக்கட் கவுண்ட்டர் வரை
திணறலடித்த பரபரப்பை
அங்கிருந்த கம்பிக் கிராதிகள்
குறிப்பெடுத்துக் கொண்டன

வரும் மழைக்காலத்தில்
அவை
துருப்பிடிக்கவும் தொடங்கும்

நீ
என் கைகளைப் பிரியப்பட்டுக்
கோர்த்துக் கொண்டபோது
உன்
ஜன்னல்வழி புகுந்து
வெயிலில் பளபளத்த
நகப்பூச்சின் சிவப்பில்
உணர முடிந்தது என் வெட்கத்தை

இடது கை பெருவிரல் நகம் கொண்டு
முன் சீட்டின் பின்புற பெயிண்ட்டை
கிழித்து எழுதிய நம் பெயரை
சுமந்து

நகரெங்கும் திரிந்து கொண்டிருக்கிறது

நீயும் நானுமில்லாத
அந்தப் பேருந்து..!

****

6 கருத்துகள்:

  1. இளங்கோ, இரண்டுவித உணர்வுகளை, சூழலை ஏற்படுத்துகிறது இக்கவிதை. ஆனால் கவிதையின் தலைப்பு உங்கள் பிரியமானவ(ங்க)ளுடன் தனிமையாய் போகும் பயணத்தில் இருவருடைய சுயமும் இல்லாது போவதால் பெயருடன் மட்டும் சுற்றிக் கொண்டிருக்கும் பேருந்து என்ற அர்த்தத்தை விட அந்த உறவும் துருப் பிடிக்கும் கம்பிபோல சிதைந்து பிரிந்துவிட்டது இப்போது வெறும் நினைவை மட்டும் சுமந்து கொண்டு பெயருடன் அலைகிறது பேருந்து என்ற அர்த்தத்தை அழுத்திச் சொல்கிறது. அருமை, இறுதியில் இதுவும் இழந்து விட்ட உறவின் வலியையே தருகிறது,கூடவே பயணம் தொடரப் படவேண்டிய எதார்த்தத்தையும் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  2. கோநா,
    உங்களின் ஆழ்ந்த பார்வை...
    அந்த உணர்வை குளத்தில் அமிழ்ந்த கல்லுக்கு பிறகு நீரின் மேற்பரப்பில் குவிந்து குமிழிட்டு உடையும் காற்றைப் போல உடைத்துக் காட்டிவிட்டது...
    நெஞ்சார்ந்த நன்றி..!
    :)

    பதிலளிநீக்கு
  3. அண்ணா உங்க சிந்தனைக்கு தங்கம் செய்து போடணும் அண்ணா ..., அதே சமயம் சில பொறமை எண்ணம் எனக்குள் அண்ணா ..., வாழ்த்துகள் அண்ணா ...,

    பதிலளிநீக்கு
  4. @ சார்லஸ்..!
    உன் அன்புக்கு நன்றி...தம்பி..
    :)

    பதிலளிநீக்கு