செவ்வாய், பிப்ரவரி 22, 2011

வாதத்தின் இறுதிச் சொல்..


ஒரு முடிவுக்கு வருபவை
என்று
எதுவமில்லை

ஒவ்வொன்றும் ஒரு வெற்றிடத்தை
உருவாக்கவோ
சீர்குலையும் ஒரு சமனை
கூடாரமென உயர்த்தவோ
புதைந்தபடியே அதன்
ஆழங்களை அளக்கவோ

ஒரு
வாதத்தின்
இறுதிச் சொல்லைப் போல
மற்றுமொரு வாதத்துக்குள்
நுழைந்து விடும்
சாமர்த்தியமென

முடிவுக்கு வருபவை
என்று எதுவுமில்லை..

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( பிப்ரவரி - 28 - 2011 )

சிக்னல் நிறங்கள்..

*
நகரத்தின்
இரவு நெடுஞ்சாலை
சிக்னல் விளக்கிலிருந்து
நிறங்கள்
வழிந்து
அவசரமாய் சாலை கடக்கிறது

இன்னும் சற்று நேரத்தில்
ஒலிக்க போகும் ஹாரன்களுக்கு
பயந்து

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( பிப்ரவரி - 21 - 2011 )

பயணம்..

*
நீ
உடைந்து போ
என்று குவிந்த நதியின் நீர்க்குமிழ்
கொஞ்சம்
சுமந்து போகிறது
கரையோர வனத்தின் காற்றை..

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( பிப்ரவரி - 14 - 2011 )

சல்லடைச் செதில்கள்

*
இன்னொரு முறை வாய்ப்பதில்லை
இந்தப் பாடல்

எழுதும்படி சொல்லிப் போயிற்று காற்று

கறையான்களின் இரவுகள் அரித்துவிட்ட
நினைவின்  குறிப்புகள்
சல்லடைச் செதில்களில்
வழிந்தோடுகிறது
மௌனக் குருதியை இழுத்துக் கொண்டு

ரீங்கார முனைப்புகளில்
பிடிப்பட மறுத்து
துகள்களென சிதறும் பாடல்

இன்னொருமுறை வாய்ப்பதில்லை
எழுதுவதற்கு தோதாக..

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( பிப்ரவரி - 14 - 2011 )

நட்சத்திரங்களோடு பேசாதீர்கள்...

*
விசும்புங்கள்
விசும்புங்கள்

உங்கள் விசும்பல் ஒலிப் பரப்ப
கோரிக்கையோடு
ஆண்ட்டெனாவாக
முளைக்க நேரும்
உங்கள் இரவில்
நட்சத்திரங்களோடு பேசாதீர்கள்

சிகப்பாய் மின்னுமது
உங்களுக்கானதல்ல
தாழப் பறக்க நேரிடும்
ஒரு
விமானத்துக்கான
சமிக்ஞை

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( பிப்ரவரி - 7 - 2011 )வார்த்தையிலிருந்து பெயர்த்தெடுக்கும் ஒற்றையடிப் பாதை..

*
ஏதோ ஒரு பகல் பொழுதாக
நீ
எனக்கு புலர்கிறாய்

என்றோ ஓர் இரவின்
ரகசியங்களென திரள்கிறாய்

சப்தங்கள் எழ விரும்பாத
படிக்கட்டு வார்த்தைகளிலிருந்து
பெயர்த்தெடுக்கும்
ஒற்றையடிப் பாதையை
நீண்ட புன்னகையின்
புற வாசலிலிருந்து தொடங்குகிறாய்

மெல்ல கவிந்து திரும்பும்
உன் அந்தியின் நிழல்
கையிலேந்தி நிற்கிறது
என் அகாலத்தின் இசையை

கொஞ்சங் கொஞ்சமாய் கசியும்
இந்தத் தனிமை
கணுக்காலளவு வரை தொட்டு ஓடுகிறது
மௌன நதியிலிருந்து பிரிந்து

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 21 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4015

இரவின் அகாலத்தில்..

*
மரணத்தின் விளிம்பு வரை சென்று
தலை கிறுகிறுத்த ஈ
நினைவில் அழுத்திக் குழம்புகிறது
தன்னைச் சுண்டிவிட்ட
விரலின் வேகத்தை

தன்
இரவின் அகாலத்தில்
வீடு திரும்பும் வழித் தவறி
இந்த
அறையில் திக்குமுக்காடும்
ஈயின்
வெளிச்சத்தை
அணைத்து விடாமல்

எரிய விடுகிறேன்
இரவு நெடுக
ஒற்றை டியூப்லைட்டை..

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 14 - 2011 ]


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3992

தொண்டைக்குழிக்குள் இறங்கும் மதுத் துளிகள்..

*
நீங்கள் தகர்ந்து கொண்டிருக்கிறீர்கள்
உங்கள் பிடிமானங்களை இழக்கச் செய்கிறது
இதுவரை உடன் வந்த
அபிப்பிராயங்கள் யாவும்

கொஞ்சம் கொஞ்சமாக
தொண்டைக்குழிக்குள்
இறங்கும்
மதுத் துளிகளை
ஒத்திருக்கிறது
உங்களின் தவிப்பு

போதையேறி
தலைக்கவிழ
விழும்
உரையாடலொன்றை
இறுகப் பற்றிக் கொள்கிறீர்கள்

தன்
பள்ளத்தாக்கை ஆழமாக
குடைந்து வைத்திருக்கிறது
உங்களைக் கடந்து சென்ற
துரோகத்
தருணங்கள்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 7 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3946

ஈர நிலத்தை ஒத்திருக்கிறது மௌனச் சமவெளி..

*
என்னில்
என்னை எதிர்கொள்வதற்கு
இன்னும் திறவாத கதவொன்றின்
வாசலில்
மெழுகப்படுகிறது

எளிதில் கடக்க முடியாத காலத்தின்
சொற்ப நிழல்

விழும் புகார்களின் வெளிச்சங்களை
திரைக் கட்டி மட்டுப்படுத்தும்
விசித்திரத்தை
மனச் சாளரத்தின்
சதுரக் கண்ணாடிக்கு மறுபுறமிருந்து
கிளைத்து விரிக்கிறது

இரவெங்கும்
தனிமையில் கெக்கலிக்கும்
நுண் அதிர் ஒலியலை செல்கள்

பச்சைமையோடு நீர்த்துப் புழுங்கும்
ஈர நிலத்தை ஒத்திருக்கிறது
மௌனச் சமவெளி

வேர் பரவுதலின் முடிச்சுகள் தோறும்
அவிழ மறுக்கின்றன
முன் முடிவுகள்

இன்னும்
திறவாத கதவுக்கு பின்னால் விரியும்
பெருங்காடு
சாவித் துளைகளின் வழியே
தெரிவதில்லை

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ பிப்ரவரி - 25 - 2011 ] 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=13215&Itemid=139

அதற்குள்..

*
ஒரு முறை தான்
கைத் தட்டியது
காற்று

அதற்குள்..

முடிந்து போயிற்று
இலைகளின்
நடனம்

****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ பிப்ரவரி - 24 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=13198&Itemid=139

அகாலத்தின் இலை நரம்பு..

*
நினைவின் படுதா கிழிந்து 
இரவு பெருகி வழிகிறது

பிடிக்குள் சிக்க மறுக்கும் வார்த்தைகளோடு
நிகழும் போரின் கூர்மையில்
சிந்துகிறது ரத்தப் புள்ளிகள்

உங்கள் ஏடுகளின் அடுக்குகளில்
படிந்து விட்ட தூசுகளை
ஆழ உறிஞ்சுங்கள்
வரலாற்றுக் கதாப்பாத்திரங்களின்
அபத்தங்கள் யாவும்
உங்கள் இதயத்தில்
ஒரு
கேன்ஸர் போல பரவட்டும்

நிராசையின் கண்ணாடிக் குடுவைக்குள்
கொட்டித் தீர்க்க சேமித்து வைத்த
உங்கள்
உரையாடல்களின் துயரம்

இந்த அகாலத்தின் இலை நரம்பில்
ஊர்ந்து கொண்டிருக்கிறது
ஒரு துளி தூக்கமென

பெருகி வழிகிறது
மேலும்
ஓர் இரவு

****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ பிப்ரவரி - 23 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=13161&Itemid=139

இரவின் மஞ்சள் நிறம்..

*
குளிர்ந்த கான்க்ரீட்
நகரின்
நெடுஞ்சாலை பின்னிரவு
சிக்னல் விளக்கிலிருந்து
மஞ்சள் நிறம் வழிந்து
நிதானமாய் பரவுகிறது
சாலை முழுதும்

மசூதியின் உச்சிக் கோபுரத்தில்
பாங்கு ஒலிக்காத
ஒலிப்பெருக்கியில்
இழந்த வரிகளை கொத்திக் கொண்டிருக்கிறது
சாம்பல் நிற புறா ஒன்று

பிளாட்பார சதுரக் கற்கள்
சுமக்கின்றன அழுக்கு மனிதர்களின்
கந்தல் போர்வைக்குள்
காதலையும் காமத்தையும்

ரெண்டாம் ஆட்டம் முடிந்து
களைப்போடு வெளியேறுகிறார்கள் ரசிகர்கள்

சிக்னல் விளக்கிலிருந்து வழியும்
மஞ்சள் நிறம்
பெருகுகிறது நகரம் முழுதும்..

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ பிப்ரவரி - 21 - 2011 ]


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=13116&Itemid=139