வெள்ளி, டிசம்பர் 23, 2011

மேலும் கொஞ்சம் சிறகுகள் வளர..

*
ஒரு பேரமைதி சூழ் கொள்ளும்
பூக்களின் உலகில்
மகரந்தம் தோய்ந்த நுண்ணிய கால்களோடு
மேலும் கொஞ்சம் சிறகுகள் வளரக்
காத்திருக்கிறது
மௌன மனம்

கையகலக் கனவிலிருந்து
வனம் விரிகிறது பச்சை நிற வாசம் பிழிந்து
வைகறை வானின் மஞ்சள் குழைந்து

மூங்கில் துளையூடே ஊடும் மென்காற்றில்
இசைக் குறிப்புகள் தொட்டுத் தொட்டு எழுப்புகின்றது
மலரிதழின் மெல்லிய நரம்பை
அதிலூறும் தேனை

சமன் குலையும் முதல் தெறிப்பை
ஏந்திக் கொள்கிறது சின்னஞ்சிறு பனித்துளி

*****

மௌனத்துக்குரிய விளிம்புகள்..

*
ஒரு மௌனத்துக்கும்
இன்னொரு மௌனத்துக்குமான
இடைவெளியில்

இந்த மேஜையின் உன் விளிம்புக்கும்
என் விளிம்புக்குமாக
நொடிக்கொரு முறைத்
தாவிக் கொண்டிருக்கிறது
பார்வை

****   

கொஞ்சம் வெயில் மட்டும்..

*
காலில் பொடிப்படும் சருகுகள்
நேற்று மரத்தில் இருந்தன

மின் கம்பியில் சிக்கிக் குதிக்கும் காற்றாடி
பறப்பதற்குரிய நொடிகளை எண்ணுகிறது

சொட்டு சொட்டாய்த் திரளும் இரவு
தெருக் குழாயின் காலடியில்
சொற்பமாய்த் தேங்குகிறது
எதன் மீதும் புகார்கள் இல்லை
எதன் மீதும் நிராகரிப்பு இல்லை

அப்படியே ஏற்றுக் கொள்ளும்படி
திறந்து வைத்திருக்கும் வாசலில் நுழைய
வழங்கப்படும் அனுமதிச் சீட்டில்
முகவரி இல்லை
பெயர்கள் இல்லை

கொஞ்சம் வெயில் மட்டும் காய்ந்து கொண்டிருக்கிறது

*****
  

மிச்சங்கள்..

*
மொட்டை மாடிச்
சதுரக் கற்களில்
பூனையொன்றின் பாதச் சுவடுகள்

மற்றும்

கிளிப் பச்சை நிறத்தில்
கிளி இறகின்
மிச்சங்கள்

*****

வியாழன், டிசம்பர் 22, 2011

தலைகீழ் தொங்கும் வௌவால்களின் மெல்லிய இலைகள்..

*
மாற்றி விடும்படி நெருக்குகிறது இரவு
பரிச்சயமற்ற பனிப் பொழிவை
புறங்கையில் உணர நேர்ந்த
பால்கனி கைப்பிடியில்
புள்ளிகளைப் பூக்கின்றது ஈரம்

இழுத்து விட்ட சிகரெட் பெருமூச்சில்
வெளியேறுகிறது புகையிலைத் தோட்டம்

மங்கிய நட்சத்திர வெளிச்சம்
ஆசுவாசம் ஏற்படுத்தவில்லை
கரிய நிழலாகிப் போன மரத்தின் நிச்சலனம்
எதை உறுதி செய்கிறது

தலைகீழ் தொங்கும் வௌவால்களின்
சுருங்கிய இறக்கைக்குள்
அடங்க மறுக்கின்றன மெல்லிய இலைகள்

விட்டுக் கொடுத்தல் என்பது ஒரு துயரம்

அத்துயரத்தைச் சொல்லும் சொற்களை
மாற்றி விடும்படி நெருக்குகிறது இவ்விரவு

ஓர் எளிமையான நிராகரிப்பின் மூலமாக
அந்தச் சொற்களை எழுத்திலும் ஊன்றி
அழுத்தும்போதே முளைக்கிறது

இரவுக்குப் பிறகான
ஒரு 
வெம்மைப் பகல்


*****

வினோத ஒலிக்குறிப்புகளை ரத்து செய்யும் ஓர் உரையாடல்..

*
உரையாடலின் போது
ஊடாடிய வினோத ஒலிக்குறிப்புகள்
மணித்துளிக்குள் தேங்காமல்
பயணிக்கிறது பெருவெளியில்

உரையாடலுக்குப் பிறகு
உனது சொற்களின் சிறகிலிருந்து
பிரிகிறது சாம்பல் நிற இறகுகள்

வினோத ஒலிக்குறிப்புகளை ரத்து செய்யும்
ஓர் உரையாடலை அடுத்த முறை
நிகழ்த்திக் காட்டுவதாக
காற்றில் சிலிர்க்கிறது
உதிர்ந்த சாம்பல் 


*****

அழைப்பின் எல்லையற்ற எதிர்முனை

*
வெட்கம் குழைத்துப் பூசியிருக்கிறாள்
கன்னத்தில்

நேற்று கொடுத்த முத்தத்தின்
நிறம்
நிலவை இழைத்துப் பூசியிருந்தது

விரல்கள் காற்றில் எழுதிய
ரகசிய எண்களை இணைத்தபோது
அழைப்பின் எல்லையற்ற
எதிர்முனையில்
கனவின் வாசல் திறக்கிறது


*****

குளிர் திரளும் மஞ்சள் நிறம்..

*

வாசல் கதவின் நாதாங்கியில்
குளிரைத் திரட்டுகிறது
துளியென
பனி

தெரு விளக்கின்
மஞ்சள் நிறம்
அதில்
தொங்குகிறது இரவு நெடுக


*****

பூனையொன்று..

*
மௌனச் சாரல் பொழியும்
கூரையில்

பூனையொன்று அழைத்துக்
கொண்டேயிருக்கிறது

இவ்விரவை 

*****

வழி..

*
சார்த்தியக் கதவைத்
தட்டிக் கொண்டிருக்கும் காற்றை
ஜன்னல் வழியே
வரச் சொல்லுங்கள்

மேஜையில்
காகிதங்களை அடுக்கி
வைத்திருக்கிறேன்


*****


காற்றில் சிறகைத் தொட்டபோது..

*
மரணத்தைப் பரிசளித்த
உங்கள் இரவில்

வீட்டின் கிணற்றுப் பக்கம்
இருக்கும்
வாதாம் மரத்தின் கிளையில்
ஓர் ஆந்தையாக உட்கார்ந்திருந்தேன்

என் உடலை கட்டிப் பிடித்து
அழுது தீராதக் கண்ணீரின்
ஈரப் பரவல்
காற்றில் என்  சிறகைத் தொட்டபோதும்
சற்று நேரம் வெறித்தபடி
காத்திருந்தேன்

என்னைக் கவனித்த நொடியில்
நீங்கள் 
'சூ....' என்று விரட்டிய கணத்தை
அலகில் கொத்தித் தூக்கிப் பறந்தேன்

*****

நீட்சியில் எதிர்ப்படும் கதவு..

*
நடுநிசியின் ஒருவழிப் பாதை
என் கனவிலிருந்து
நீள்கிறது

விருப்பமில்லா நினைவுகள்
பெயரற்றுக் கடக்கின்றன
தேவையற்ற தொடர்புகளின் காரணிகள்
வேறொரு நிறம் பூசிக் குறுக்கிடுகின்றது

முகமற்ற தன்னில்
கிளைத்து விரிகின்றன
சொல்ல மனமற்ற காட்சிகள்

இந்தப் பயணத்தின் நீட்சியாக எதிர்ப்படும் கதவை
வெகுநேரமாகத் தட்டுகிறேன்
சட்டென்று திறந்துக் கொண்ட கதவின் மறு வெளியில்
நீள்கிறது மற்றுமொரு பாதை

நடந்து நடந்து நடந்து கடைசியாக
நான் எழுந்தது உனது
கட்டிலில்

நீல நிறத்தில் ஒளிரும் உன் அறையில்
சிறகு முளைத்து இடைவிடாமல்
பறந்து கொண்டிருக்கிறது தூக்கத்தில் நழுவும்
உனது சொற்கள்

*****       

பிரத்யேக நிறம் சூழ்ந்த நடைபாதை..

*
மரணத்தின் குறிப்பேட்டில்
கையெழுத்து வாங்கும் தாதி
அவசரமாகத்
தவிர்த்து விடுகிறாள்
கேள்விகளையும்
அதற்குரிய பார்வைகளையும்

திறந்து அவளை உள்வாங்கிக் கொள்ளும்
கண்ணாடிக் கதவுக்கு அப்பால்
நிதானமாய் நீள்கிறது
பிரத்யேக நிறம் சூழ்ந்த ஒரு நடைபாதை

நம் கைகளோடு தங்கிவிடுவது
ஒரு பேனா மட்டுமே

******

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் [ டிசம்பர் - 26 - 2011 ] 


http://www.navinavirutcham.blogspot.com/2011/12/blog-post_26.html

குற்றத்துக்கான புள்ளி..

*
திருந்தி விடுவது பற்றி விவாதித்துக் கொண்டிருந்த பகலில்
சூழ்ச்சிக்கான முதல் புள்ளியைக் கையில் வைத்திருந்தேன்

நாளது வரை நடந்த சம்பவக் குறிப்புகள்
எட்டு மடிப்புக் காகிதக் கோடுகளின்
அழுக்கேறி கிழிந்திருக்கிறது

ஒவ்வொரு எழுத்தின் வன்மத்தையும் அலசித்
தழுதழுத்த நாக்கின் நுனி சிவந்திருந்தது

சுலபம் என்கின்றன மனச் சுவர்கள்
பாதுகாப்பின் உச்சியில் நீரோடும் மின்சாரக் கம்பிகள்
தருணங்களின் கணத் துளிகளை ஆவியாக்குகின்றது

திருந்தி விடுவது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் பகல்
எங்கோ ஓர் இருட்டின் தனிமையில்
சத்தமில்லாமல் திறந்து விடுகிறது குற்றத்துக்கான
இறுதிப் புள்ளியை

******

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் [ டிசம்பர் - 25 - 2011 ] 


http://www.navinavirutcham.blogspot.com/2011/12/blog-post_25.html

முகமில்லா துயரின் உருவம்

*
பேனாவிலிருந்து கையில் கசிந்து விட்ட
மையைத் துடைத்துக் கொள்ள
காகிதம் தேடுகிறேன்

உனது மேஜையில் கையருகே
பாதி படித்த நிலையில் வைத்திருந்த
கவிதைத் தொகுப்பொன்றின்
பக்கத்தை சட்டென்று கிழித்து
கொடுத்து விட்டாய்

அவசரமாய் துடைத்த பின் உரைத்தது

உள்ளங்கை முழுக்க
கவிதையொன்று வார்த்தைகளாகி
உருக் குலைந்ததும்
முகமில்லா ஒரு துயரின் உருவம்
ஆள்காட்டி விரலில்
துருத்திக் கொண்டு உட்கார்ந்திருப்பதும்

******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ டிசம்பர் - 22 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17864&Itemid=139

கோட்டுச் சித்திரமாய் அசையும் மழைத் தும்பி..

*
வெளியேறும் பதட்டத்தோடு 
ஜன்னல் கண்ணாடியில் மோதிய வேகத்தில்
கிர்ரென்று சிறகுகள் துடிக்க
மயங்கிக் கிடக்கிறது மழைத் தும்பி

பால்கனிவழித் தெரியும் வானில்
வெளுத்த வெயிலில் 
கோட்டுச் சித்திரங்களாய் அசையும் தும்பிகள்
மழையைப் பாடுகின்றன

என் அறைக்குள் ஒற்றையாய் நுழைந்துவிட்ட தும்பி
மழைப்பாட்டை முதலில் எனது
ட்யூப் லைட்டின் நீளக் குழல் முழுதும்
எழுதிக் கொண்டிருந்தது

பிறகு நிலைக் கண்ணாடியில் 
வழியச் செய்தது மழையின் நிழலை

மழைப்பாட்டின் ரீங்காரம்
அறையிலிருந்து மெல்ல நழுவி
மொட்டைமாடியெங்கும்  இசைத்தது
அகப்படும் அனைத்தையும்
நனைத்துக் கொண்டு

ஜன்னல் கதவிடுக்கினூடே
மழைச்சாரல் பட்டுத் தெறிக்கக்
காத்திருக்கிறது
இன்னும் அரை மயக்கத்தில்
என் மழைத் தும்பி

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ டிசம்பர் - 14 - 2011 ] 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17788&Itemid=139

எங்கும் தேங்கி நிற்கும் உனது மணித்துளிகள்..

*
ஒரு அனுமதி என்னைக் கொஞ்சம்
அசௌகரியப்படுத்துகிறது
அது உன் அறைவாசலில் எப்போதுமே நிரந்தரமாய்
ஸ்டூல் ஒன்றைப் போட்டு வைத்திருக்கிறது

வருவதும் போவதுமான உத்தரவுகளை
அச்சிட்டுக் காகிதத்தில் வைத்திருக்கிறாய் 

உனக்கான மணித்துளிகள்
உனது இருப்பிடத்தில் தொடங்கி அலுவலகம் வரை
மழைக்குப் பின்னான நீர்த் துளிகளைப் போல்
எங்கும் தேங்கி நிற்கிறது
முறை செய்யப்பட்ட பாதுகாவலோடு

சின்னஞ்சிறிய உதவி ஒன்றைக் 
கோரவும்
ஒரு பால்ய நினைவைப் பகிரவும்
காத்திருக்க நேரும்
ஒரு அனுமதி என்னைக் கொஞ்சம் அசௌகரியப்படுத்துகிறது

******

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் [ டிசம்பர் - 13 - 2011 ] 


http://www.navinavirutcham.blogspot.com/2011/12/blog-post_13.html

ஞாயிறு, டிசம்பர் 11, 2011

இலையின் கணம்

*
சின்னஞ்சிறு கைக்குள்
அடங்கிவிடும் ரப்பர் பந்து
தரை டைல்ஸின் பச்சை இலை மீது
மெத்தென்று அழுந்துகிறது

ஒரு
கணம்
இலை நெகிழ்கிறது

அவளோடு மட்டுமே
நடக்கிறதா
அவ்விளையாட்டு

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ டிசம்பர் - 12 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5098

எழுதிப் பார்ப்பதற்கான அவகாசம்..

*
அசைவதைப் போல் இருக்கிறது இரவு
அசைவற்றதாக கனக்கிறது அதன் இருள்

எதையும் ஒரு முறை
எழுதிப் பார்ப்பதற்கான அவகாசத்தை
அனுமதி மறுக்கிறது நிமிடங்களை
நகர்த்தும் நொடிமுள்

தொண்டைக்குள் சிக்கும் வார்த்தைகள்
உறுத்தத் தொடங்குகிறது
அர்த்தங்களை

நீயோடு தைத்து வைத்திருக்கும்
தனிமையின் முனை மடங்காமல்
நானின் விரல் நெருடும் லகு
அசைவதைப் போல் இருக்கிறது நம் இரவு
அசைவற்றதாகக் கனக்கிறது இந்த இருள்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ டிசம்பர் - 12 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5098

காகிதங்கள் மீதமரும் உடைந்த சதுரங்கள்

*
வராண்டாவில்
திசைக்கொன்றாக
உடைந்து கிடக்கிறது வெயில்

அதன் சதுரங்களை சீராக அடுக்கி
மேஜையில்
காகிதங்கள் பறக்காமலிருக்க வைத்தபடி
கைகளைத் தட்டி நிதானமாய்
பிடறித் துள்ள நடந்து போகிறாள் தான்யா

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ டிசம்பர் - 12 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5098

முன்னெப்போதையும் விட..

*
வேண்டாம் என்று சொல்ல முடிவதில்லை
இறங்கிக் கொண்டிருக்கும் ட்ரிப்ஸில்
சொட்டுகளின் வேகம் மிதமாய் நரம்புக்குள்
சொருகி மீட்கிறது இருப்பை

பிம்பங்கள் ஒன்றின் மேல் ஒன்றாகி
கலங்கி நெளிகிறது வர்ணக் கசிவாக மட்டும்

உயிராகி வெளியேறி உள் நுழைந்தபடி சதா
போக்குக் காட்டுகிறது வாழ்வு

இடது புறங்கையின் நாள வீக்கத்தில்
புடைத்துக் கொண்டு நிற்கிறது
ஒரு ஏககால நினைவு

சுருக்கென்று குத்தும் அவ்வலியை
மென்மையாய்க் கட்டைவிரல் கொண்டு அழுத்தி
நீவுகிறாள் உதடுகள் துடிக்க

நினைவுக் கரைந்து 
முன்னெப்போதையும் விட இதமாக
இளமஞ்சள் ஒளிப் படரத் தளும்புகிறது
கண் விளிம்பில்..

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ டிசம்பர் - 12 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5098

மௌனங்களை இழை பிரித்துத் தொங்கும் நிறம்..

*
எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கு இருப்பதாக
சொல்லிக் கொண்டான்
மிகச் சிறிய துரோகத்திலும் கூட
அந்த நேர்த்தியை நுட்பமாய்
செய்து பழகினான்

மௌனங்களை இழை இழையாய்ப் பிரித்து
அறையெங்கும் தொங்க விட்டிருந்தான்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம்
அதன் நிறங்களின் நிழல்
சுவர்களில் எப்போதும் வழிந்து கொண்டேயிருக்கும்
அதன் நீள அகலங்கள் கணக்கிடப்பட்டிருந்தன

அவனுடைய தனிமையை
எப்போதும் பகிர்ந்து கொண்ட மின்விசிறியில்
முந்தின இரவு குளிருக்கென பயன்பட்ட
போர்வையை முடிச்சிட்டுத் தூக்கில் தொங்கிய
அவனது உடலுக்கும்
தரைக்குமான இடைவெளியை
கச்சிதமாக முடிவு செய்திருந்தான்

காவல்துறை எழுதிய மரணக் குறிப்பில்
அது பதிவாகவில்லை
துப்புத் துலக்கித் தேடப்பட்ட ஏதோ ஒன்று
அத்தனை ஒழுங்குகளையும் கலைத்துவிடும் காரணத்தையும்
அவன் விட்டுச் சென்றிருந்தான்

******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ டிசம்பர் - 11 - 2011 ]
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17749&Itemid=139 
நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் [ நவம்பர் - 26 - 2011 ]
http://www.navinavirutcham.blogspot.com/2011/11/blog-post_26.html

வியாழன், நவம்பர் 24, 2011

பொம்மையோடு முணுமுணுக்கும் ரகசியங்கள்..

*
பாப்பாவுக்கு நிலவைத் தொட்டு
ஊட்டும் சோற்றில்
விக்கல் உடைந்து
தெறிக்கிறது நட்சத்திரங்கள்

விரியும் முன்
அவள் பறிக்கும் மொட்டு
கைக் கூப்பி மணக்கிறது
குட்டி விரல் பிரித்து நிறம் நுகரும்
ஈரத்தில் 

தரையில் படரும் வெயிலை
நகம் சுரண்டிப் பிரிக்கிறாள்
நீளும் நிழல் துரத்தி
ஓடுகிறாள்

தன்  பொம்மையோடு மட்டும்
ரகசியங்களை முணுமுணுத்து
அதன் காதுகளைத் திருகி
தலைக் குனிந்து
உச்சரிக்கிறாள்

******

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் ( நவம்பர் - 19 - 2011 )
http://www.navinavirutcham.blogspot.com/2011/11/blog-post_19.html

முடிவற்று நீளும் பயணத்தின் வெற்றுக் கால்கள்


அந்தத் தெரு வழியே நடக்கும் நிழல்களில்
ஒன்று வயதானது
மற்றொன்று இளவயது

தொலைந்து போன தருணங்களின்
ரகசியங்களை
அளவில் அடங்காத மலர்தலை
சொல்ல விரும்பும் தயக்கத்தை
கதவடைத்துக் கொள்ளும் மௌனங்களை
கருணையின் மீது பிரயோகிக்கப்படும் சாபங்களை

யாவற்றையும் உருக்கி ஊற்றும் வெயில்
பிளாட்பாரம் ஏறி நிதானிக்கும் வெற்றுக் கால்களை
குறுகுறுக்கச் செய்து சூடேற்றுகிறது
மேலும் நடக்கத் தூண்டி
முடிவற்று நீளும் பயணத்தை நோக்கி

எல்லாத் தெரு வழியேயும் நடக்க நேரும் நிழல்கள்
இரண்டுக்கு மேற்பட்டவை
ஆனால்
ஒன்று வயதானது
மற்றொன்று இளவயது

******

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் ( நவம்பர் - 3 - 2011 )
http://www.navinavirutcham.blogspot.com/2011/11/blog-post.html

மூடிய விரல்களின் மிக்கி மௌஸ்

*
இறுக மூடி வைத்திருந்த விரல்களை சிரமப்பட்டு
ஒவ்வொன்றாய்ப் பிரித்தாள்

அத்தனை விரல்களும் விரிந்த பிறகு
உள்ளங்கையில் சிரித்தது
பேனாவில் வரைந்த
ஒரு மிக்கி மௌஸ் சித்திரம்

குதூகலித்து
உள்ளங்கை அள்ளி முத்தங்கள் இட்டாள்
தொடர் முத்தங்களின் முடிவில்
இறுதி முத்தத்திற்கு பிறகு

உள்ளங்கையில் இருந்த
மிக்கி மௌஸ்
அவள் உதடுகளில் உட்கார்ந்து கொண்டது

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ நவம்பர் - 28 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5036

காத்திருப்பின் சிறகு...

*
மிகுந்த தயக்கத்தோடு உட்கார்ந்திருக்கிறாய்
புத்தகங்கள் நிறைந்த தனித்த அறையில்

அலமாரியின் எல்லா அடுக்குகளின்
பின்வரிசை நிழலிலிருந்து
முணுமுணுப்புகள் கேட்கத் தொடங்குகிறது

கேட்கப் பயப்படும்
கேட்கத் தயங்கும் தெளிவற்ற குரல்கள் எல்லாமே
காலத்தில் அறுத்து வைத்திருக்கிறது
வரலாற்றின் தொன்மத் தலைகளை

இசை நிரம்பிய தருணத்தை வழிய விடுகிறாய்
அறையெங்கும் உனது பேரமைதியால்
நீ
எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறாய்
எனது ஓசையற்ற ஒரு பிரவேசிப்புக்கு

இறகுகள் ஒவ்வொன்றாய் உதிர்கிறது
காத்திருப்பின் சிறகசைவில்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ நவம்பர் - 28 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5036

சப்தமெழுப்பி அசையும் இலை...

*
மொடமொடவென
சப்தமெழுப்பி அசையும் சருகின் மீது
பொழியும் மழை
அதன் நிறத்தைக் கரைத்து
பழுத்த இலையாக்குகிறது

நெகிழ
புல்தரையில் மல்லாந்து கிடக்கிறது
தன்னை விடுவித்து கறுத்த கிளையின்
பிளவைப் பார்த்தபடி

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ நவம்பர் - 28 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5036

அழைப்பின் சதுரம்

*
இரவைச் சதுரமாக வெட்டி வைத்திருக்கும்
தனிமையொன்று
தன் வாசலை அடைத்து விட்டு
ஒரு அழைப்பு மணியைப் பொருத்தியபடி
காத்திருக்கிறது
எனது வருகைக்காக
எனது திரும்புதலுக்காக

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ நவம்பர் - 21 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5012

தோள்களின் வழியே நழுவும் வெயில்..

*
ஒரு சொல் மிச்சமில்லை
எழுதித் தந்த ஒப்பந்தத்தின் கீழ் இடப்பட்ட
கையெழுத்துத் தான் மிச்சமாகிப் போன
கடைசி மொழிப் பரிமாற்றம்

நம் உரையாடல் நின்று போன இன்றைய
தினங்களின் நிறம்
உனது உதடுகளில் நிரந்தரமாய் பூசப்பட்டிருக்கிறது
மௌனமென்று

ஒரு மென்மையான முத்தத்தின்
அனுமதியோடு அதை
ஒற்றியெடுத்துக் கொள்ள முடியலாம்

தலையசைத்து ஆமோதிக்கிறது
இம்மரத்தின் பழுத்த இலை 
அதன் வர்ணமிழப்பில் குழைகிறது
உயிரின் அகாலம்
படபடப்பின் நிச்சலனம்

இலைகளை ஊடுருவி
தோள்களின் வழியே நழுவும் வெயில்
நீ வந்த பிறகு
உன் மீதும் வரைய தன்னோடு வைத்திருக்கிறது
பூக்களின் நிழல்கள் இரண்டை

ஒப்பந்தத்தின் கீழ் இடப்பட்ட சொல்லாகிப் போகிறது
நீ - நான் என்றப் பெயர்களும்
தொடர்ந்து வாசிக்கப்பட்ட காரணங்களும்

*******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ நவம்பர் - 21 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5012

இரவுகளின் மிச்சத் துளி..

*
எதன் சாயலையோ ஒத்திருக்கிறது
இந்தப் பகல்
அதன் நீட்சி மிகு இரவு நினைவுகளை
அள்ளிப் பருகியபடி நெளிகிறது கானல்

குமிழ் விட்டு மூச்சென விம்மி வெடிக்கும்
யாசிப்பை
தெருவில் இறக்கி விடுகிறேன்
அது தன் வாலை ஆட்டிக் கொண்டே
முகர்ந்தபடி வாசல்படியருகே வந்து படுத்து விட்டது

எதன் சாயலையோ ஒத்திருக்கும்
இப்பகலில் ஓசையின்றி நீ வந்து நிற்கிறாய் வாசலில்
ஒரு சிநேகப் புன்னகை உதடுகளை விட்டு
இறங்க மறுக்கிறது

இழுத்து கைப்பற்றி விரல்களுக்கு முத்தமிட்டு
அவைகளை இரவல் கேட்கிறாய்

எழுதிப் பார்ப்பதற்கு இந்த ஓர் இரவு மட்டுமே
மிச்சமிருப்பதாக அரற்றுகிறாய்

கொண்டு சென்ற என் விரல்களை
இன்று திரும்பத் தந்த போது
அதன் நுனிகளில் ஒட்டிக் கொண்டிருந்தது
உன் இரவுகளின் மிச்சத் துளி

இன்னும் எழுதித் தீராத
எதன் சாயலையோ ஒத்திருக்கிறது
இந்தப் பகல்

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ நவம்பர் - 17 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17438&Itemid=139

பதில்களுக்குரிய உனது சம்பிரதாயங்கள்

*
பரந்த மனவெளியின் சமனற்ற
தனிமை மணலில் வேகம் குறையும்
நினைவோட்டம்
இரு மருங்கிலும் முளைத்திருக்கும்
பெருங் காடுகளென தலையசைக்கும்
கேள்விகளில் இடறி விழுகிறது

அதன் தேடலுக்குரிய பதிலை
உனது உதடுகள் இறுகப் பூட்டி வைத்திருப்பதிலிருந்து 
சிறிய தும்மல் வழியாகவேணும்
அதை நீ துப்பி விட முடியும்

ஆனால்
பதில்களுக்குரிய உனது சம்பிரதாயங்கள்
எப்போதும்
ஒரு மதச் சடங்குக்குரிய உத்திகளையே கையாளுகிறது

எளிமையான ஒற்றைப் பதிலை
விழுங்கிச் செரித்துக் கொள்வதற்கான
மௌன மாத்திரைகளை
சேகரித்து வைத்திருக்கிறாய்

மேலும் நீ தூவ முயலும் விதைகள்
இன்னுமொரு காடாகிப் பெருகும்
பெருமழையோடு
காத்திருக்கச் சொல்கிறாய்

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ நவம்பர் - 15 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17410&Itemid=139

விழ நேரும் தருணங்களின் விதிமுறைகள்..


உனக்கான சதுரத்தில் 
நீ பொருந்தி நிற்க விரும்புகிறாய்
விதிகளை மீறுவதற்குரிய
அறிவிப்புகளை
சேகரித்து வைத்திருக்கிறாய்

உன் எதிர்பார்ப்பு
ஒன்றே ஒன்று தான்

என்னை நெருங்கி வந்து
எனக்குரிய விளையாட்டை நீ
தொடங்கி வைப்பதோடு
எனது தோல்வியை நீயுன் 
சுவரொட்டியில் அடிக்கோடிட வேண்டும்

ஒவ்வொரு சூழ்ச்சியும்
நிதானமாகப் பெய்யத் தொடங்கும்
ஒரு மழையை ஒத்திருக்கிறது

அந்தியின் நிழலை தன் அலகில்
சுமந்து அலறும் ஆந்தையின் இரவு
என் தனிமைச் சுவரில்
விஷமேறிப் படர்கிறது

காயங்களோடு 
விழ நேரும் தருணங்கள் 
எல்லா விதிமுறைகளையும்
ஒரு முறை ரகசியமாய் 
உச்சரித்துப் பார்த்துக் கொள்கிறது

பொருந்தாத சதுரங்களின் மீதான
கனவுகள்
அடர்ந்த காட்டுக்குள் எங்கோ சுமந்து நிற்கிறது
பிரியமற்று முடிந்து போன
சிறு நெருப்பின் மிச்சத்தை

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ நவம்பர் - 14 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4998

ஞாயிறு, நவம்பர் 06, 2011

பெரும்பாலும் கோடையாகவே தகிக்கும் திசைகள்

*
திட்டிய வசவுகளின் மீது
நிறங்கள் வழிகின்றன
ஒரு மழைத் தூறல் சாத்தியமாக்க முடியாத
ஈரத்தை அவை உற்பத்தி செய்கின்றன

மறுபேச்சு தீர்ந்து போகும் நொடிகளை
காலம் எவ்வேப்போதும் தந்து உதவுவதில்லை

வசவுகள் புறப்படும் திசைகளின்
பருவநிலை பெரும்பாலும் கோடையாகவே தகிக்கிறது
அது
அபூர்வமாக கொண்டுவரும் பனிக்காலம்
தன்னிச்சையாக அமைய நேர்வது
நள்ளிரவின் ஆழ்ந்த இருளாகிறது

ஒவ்வொரு எழுத்தின்  குளிர்ந்தத் தன்மையும்
அப்போதும் கொண்டிருக்கிறது
பாலைக் கோடையின் நிழலுக்குள்
ஒளிந்திருக்கும் ஒரு பகலின் வெப்பத்தை

திட்டும் வசவுகளின் மீது
வழியும் நிறங்கள்
நான் அறிந்திராத ஒரு மௌனக் கணத்தில்
அமைதியாக வெளியேறி விடுகிறது
சரியாக சாத்தாத ஜன்னலின் வழியே

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ நவம்பர் - 14 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17396&Itemid=139

எழுதி நிரம்பிய உரையாடல்களிலிருந்து..

*
ஒரு சொல்லைக் கூட உதிர்க்காமல்
வெளிச்சம் இல்லாத இந்த அறையில்
எதை நீ கொளுத்திக் கொண்டிருக்கிறாய்

எழுதி நிரம்பிய உரையாடல்களை
மேஜையில் அப்படியே வைத்திருக்கிறாய்
நுனி மடங்கிய
அதன் ஒவ்வொரு பக்கங்களும் துடிக்கக்
காத்திருக்கிறது

நீ
செய்ய வேண்டியது எல்லாம்
ஒன்றே ஒன்று தான்

இதுவரை பிரயோகிக்காத
ஒரு புதிய சொல்லை
இந்த அறையின் அமைதியின்மை மீது
உச்சரிக்க வேண்டும்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ நவம்பர் - 7 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4967

திங்கள், அக்டோபர் 17, 2011

யாராவது..

*
ஒளிந்து கொள்வதற்கான இடமொன்றை
சிபாரிசு செய்யுங்கள்

வெளிச்சம் இல்லாத
கருணை இல்லாத
நம்பிக்கையுடன் நீட்டப்படுவதாக சொல்லப்படும்
ஒரு நேசக்கரம் இல்லாத
வெறுமை மட்டுமே பரந்து விரிந்த
சாவித் துவாரம் இல்லாத
ஒரு அறையை

யாராவது சிபாரிசு செய்யுங்கள்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 31 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4933

ஆயுதத்தின் தத்துவச் சிக்கல்

*
அவர்களுக்கெதிரான
ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற
கால் வலிக்க நெடுநேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது

என் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டது
எனது முகவரி ஒப்பிடப்பட்டது
என்னை நான் தான் என்று ஒரு முடிவுக்கு வந்தவர்கள்
அனுமதிக்கும் முன் பரிசோதனையிட்டார்கள்
ஆயுதம் ஏதும் வைத்திருக்கிறேனா என்று

எனது ஆயுதத்தின் அளவோ
அதன் நுட்பமான தத்துவச் சிக்கலோ அறிந்திராத
அவர்களின் விளையாட்டை முடித்து வைப்பதின் மூலமாக
தொடங்கி வைத்தேன் அவர்களுக்கெதிரான
எனது தீர்மானத்தை

அது மிக சுலபம்
ஒரு பொத்தானை அழுத்த வேண்டும்
அவ்வளவு தான்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 31 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4933

மரணத்தின் தனிமை நோக்கி வீழும் உடல்

*
மதுவை விட போதையூட்டக் கூடியதாக இருக்கிறது வன்மம்
காலியாகாத அதன் கோப்பை
அந்தரங்க மேஜையில் தளும்புகிறது எப்போதும்

ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு
கழற்றியெறியப்படும் கையுறையை ஒத்திருக்கிறது
நீ விரித்து வைத்த சந்தர்ப்பம்

கால் நழுவி உச்சியிலிருந்து சரிய நேரும் கணத்தை
பதற்றமின்றி புகைப்படமெடுக்கிறது உன் புன்னகை

மரணத்தின் தனிமை நோக்கி வீழும் உடல்
மனதின் ரகசிய அறைகளிலிருந்து வெளியேறும்
அத்தனை அபத்தங்களையும் தரிசித்து மீள்கிறது 
யாருமற்ற அறையின்
வெளிச்சம் மிகுந்த ஒரு மூலையில்

வீணாய் எரிந்தபடி ஒரு பல்புக்குள் தேங்கித் தொங்கும்
மின்சாரத்தின் நுண்ணிய ஆரஞ்சு நரம்புகள்
என் கடைசி நிழலின் மீது படர்கிறது
வலியின் ஒவ்வொரு தசை அவஸ்தையையும் நக்கியபடி

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 31 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4933

முடிவின் சிறகுகள்


நானொரு முடிவை உங்கள் முன் வாசித்துக் காட்டும் முன்
எனது ஷூ லேஸை சரியாக
முடிச்சிட்டுக் கொள்ள விரும்புகிறேன்

இந்த முழுக்கைச் சட்டையின் மணிக்கட்டுப் பட்டன்களை
பரிசோதித்துத் திருப்தியடைகிறேன்
உதடுகளின் ஈரத்தன்மையை நாவால் நீவி உறுதிப்படுத்திக் கொள்கிறேன்

நானென் முடிவை
உங்கள் முன் வாசிக்கும்போது
உங்களிலிருந்து அன்னியப்பட்டுத் தோற்றமளிப்பதற்குரிய
அத்தனை நுணுக்கங்களையும் கையாள முடிவெடுக்கிறேன்

அவைகளை உங்களின் முன்பே நிகழ்த்திக் காட்டுவதன் மூலம்
வாசிக்கப்படாத முடிவின் முக்கியப் பகுதியை
ரகசியங்களேதுமற்று அரங்கேற்றுகிறேன்

உங்களின் அசௌகரிய கணத்தின் ஒவ்வோர் அசைவிலும்
என் முடிவு தனது அஸ்திரங்களைத் திறம்பட எய்துகிறது

பின் வெற்றிக் களிப்போடு காற்றிலேறும்
முடிவின் சிறகுகள்
உங்கள் உதடுகளைக் கொத்திக் கவ்வியபடி வெளியேறுகிறது
இந்த முணுமுணுக்கும் மாளிகையை விட்டு

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 31 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4933

வழித்துணை

*
தனித்தக் காகிதத்தின்
வெறுமை வெளி
எழுத்தின் கதவைத் திறந்து அழைக்கிறது

துயரமோ பரவசமோ
ஏதாவது ஒரு துணையை 
அதன் முற்றுப்புள்ளி வரைக் குறுகும் ஒரு வழியை

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 24 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4916

எழுதி முடிக்கும் குறிப்புகளின் காலி உறைகள்

*
உங்கள் அருவருப்பின் மயக்கத்தை
மொழிபெயர்த்து அடுக்குகிறேன்
என் பழைய மேஜையில்

ஒரு பிரத்யேக அகராதியை
கூரியரில் அனுப்பி வைக்கிறீர்கள்
சொற்களின் கூச்சல் தாங்காமல்
பைத்தியமாகிச் சிதறிக் கிடக்கின்றன அர்த்தங்கள்

பின்னிணைப்பில் உங்களுக்கென்று
எழுதி முடிக்கும் குறிப்பில்
உங்கள் அகராதியையும் அடையாளப் பட்டியலில்
சிவப்பு மைக் கொண்டு சுழியிடுகிறேன்

ஓர் உரத்தக் குரலையும் பதிவேற்றம் செய்யுங்கள்

உங்களுக்கான காலி உறைக்குள் ஒட்டி வைத்திருக்கிறேன்
எனது பழைய மேஜையின் இழுப்பறை
அதற்குரிய ஒற்றைச் சாவி
இரண்டையும்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 24 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4916

தனிமையில் காயும் வெயில்..

*
எதை வேண்டுகோள் என்று இருமாந்தமோ
அதன் எல்லையை நிர்மாணிக்கும் வேலியை
நட்டு வைத்திருக்கிறது ஒரு சமரசம்

எங்கே கழுத்து நரம்புப் புடைக்க கூக்குரலிட்டமோ
அந்த இடம் ஒரு தடை உத்தரவுக்கான
கதவைத் திறந்து வைக்கிறது

யாரிடம் யாசிக்கச் சொல்லி
சிபாரிசு செய்யப்பட்டமோ
அந்த அதிகாரத்தின் விலை ஏலத்துக்கு வருகிறது

மௌனச் சங்கிலியைக் கோர்த்துக் கொண்டு
வலம் வரும் நெடுஞ்சாலையில்
வெயில் மட்டுமே தனிமையில் காய்ந்துக் கொண்டிருக்கிறது
எதையும் பொருட்படுத்தாமல்
எந்தவொரு நிழலையும் அனுமதியாமல்

*******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 24 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4916

செய்திகளெனச் சேகரமாகும் அகாலத்தின் ரகசிய எண்..

*
சில்வண்டுக் கூச்சலில்
புதர் மண்டிச் சிக்கிக் கொள்கிறது இவ்விரவு

விளக்கொளியற்ற செம்மண் சாலை
துருப்பிடித்த மின்கம்பத்தின் சுண்ணாம்புத் தீற்றல்
விருப்பமின்றி பயணிக்க நேரும் நிலவின் ஒரு பக்கத் தேய்வு
செய்திகளெனச் சேகரமாகும் அகாலத்தின் ரகசிய எண்
மற்றும்
பரிமாறுவதற்கு உகந்ததல்ல என்றபடி மந்திரமாய்
உதடுகளுக்குள் முணுமுணுக்கப்படும் ஒரு கடவுச் சொல்

புதிர் மண்டிச் சிக்கி ஒரு பனித்துளிக்குள்
மெல்ல நுழைகிறது
இவ்விரவு

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 24 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4916

திருகும் தண்ணீர்த் துளிகள்..

*
மேஜையின் எதிர் விளிம்பில் முடிந்து விட்டது
வசீகரத்துக்கென விரித்திருந்த மஞ்சள் பூக்கள்

விரல் நகங் கொண்டு நீ திருகும்
தண்ணீர்த் துளிகளில் கரைந்துக் கொண்டிருக்கிறது
பேச முடியாமல் தவிக்கும் உனது வார்த்தைகள்

நெற்றிப் பரப்பில் மிச்சமிருக்கும்
எனது வெயிலை ஒற்றியெடுக்க
பயன்படும் நாப்கின்னில்
காத்திருந்த வரை நீ வரைந்து வைத்த
கோட்டுச் சித்திரமொன்று
கையேந்திச் சிரிக்கிறது
நம் மௌனத்தை

கூரையிலிருந்து வழியும்
ஆரஞ்சு நிற விளக்கொளியில்
உன் முகத்தில் படர்ந்துக் கொண்டிருக்கிறது
மஞ்சள் பூக்களின் இதழ்கள்

*******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ அக்டோபர் - 24 - 2011 ] 
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17110&Itemid=139


நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ்  [ அக்டோபர் - 24 - 2011 ] 
http://www.navinavirutcham.blogspot.com/2011/10/blog-post_24.html

மின்னும் பொன் சிறகுகள்..

*
தெரு விளக்கொளியில்
மொய்க்கும் ஈசலின்
சிறகுகளில் மின்னுகிறது பொன்னிறம்

பொன் உதிர
மண்ணில் ஊர்கிறது
உயிரின் நிழல்

*******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 17 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4894

குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கும் மனிதன்

*
உதிர்ந்து விழுவது பற்றி
அறிந்து வைத்திருக்கிறது பழுத்த இலை

அது சருகாகி
தரையில் உருள்வதற்குரிய ஒலியை
சேமித்து வைத்திருக்கிறது காற்று

கான்க்ரீட் பிளாட்பார்முக்கு கீழே
புதியதாய் கிளைவிட்டிருக்கும்
மஞ்சள் வேர் நுனியை ஈரப்படுத்துகிறது
மணல் அப்பிக் குடிநீர் சுமந்து போகும்
கார்ப்பரேஷன் குழாயின் துரு

மரத்தின் உச்சியில் இதழ் விரிக்கிறது பச்சை
வானம் சிரிக்கிறது கடலாய்

குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கும் மனிதன்
பான்பராக் மெல்லுகிறான்
செக்கச் செவேலென்று
வெயில் மீது துப்ப

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 17 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4894

புதன், அக்டோபர் 12, 2011

நீட்டத் தயங்கும் நேசக் கரம்..

*
மதயானை உருவமாகி
காதுப் புடைத்து ஓரிடத்தில் நிற்கிறது
என் மௌனம்

நீயுன் நிலத்தின் சதுப்பில்
பயிரிட்டுப் பச்சையமாக்கிய துரோகங்கள்
காற்றில் நுனிப் பறக்கத்
தலையசைக்கும் திசையில் பரவுகிறது
தூவிச் சலித்த வார்த்தைகளிலிருந்து
புறப்படும் நஞ்சு விதை வாசம்

திரளும் கால்களின் தினவில்
அழுந்தும் பாதம் எடுக்கும் அடியில்
சர்வம் நாசம்

புன்னகைக் கொடிப் படர்த்தும் 
நரம்பின் பற்றுதலுக்கு நீட்டத் தயங்கும்
நேசக் கரத்தில் தெறித்து விழும்
வெப்பம் மிகுந்து
ஒரு
ரத்தத் துளி

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 17 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4894

நெளியும் புன்னகையில் துளிர்க்கும் விஷ வன்மம்

*
அப்படியொரு சாயலை
இதற்குமுன் எழுதியதில்லை
நெளியும் புன்னகையில் துளிர்க்கிறது விஷ வன்மம்

எதிர்ப்பட்டு கடக்கும் நொடியை
நூறுத் துண்டுகளாய் நறுக்கத் தோன்றுகிறது
வாய்ப்பதில்லை ஒரு நிமிடம்

நொறுங்கும் அகாலத்தின் வெறுமையை
நின்று கவனிக்கும் பொறுமை இழக்கப் பழகுகிறேன்
எழுது விரல் ரேகைகளை நெருடி நீவி

உருகி வழியும் வெயில் நீரைப் பருக நீளும் நாக்கில்
கரைகிறது அவசரமாய் உனது பகல்

பொசுங்கும் நின வாடை மௌனமொன்று
நாசிக்குள் நுழைந்து வெளியேறுகிறது
தகிக்கும் கானலில் மிதந்தபடி

அப்படியொரு சாயலை எப்போதும் எழுதியதில்லை
வேறொன்றாய் அமிழ்கிறது
சதுப்பென குழையும் நினைவில் ஒவ்வொன்றாய்

*******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ அக்டோபர் - 17 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17017&Itemid=139

கோப்பையிலிருந்து நழுவும் காபியின் வெண்புகை..

*
எதையும் தள்ளி வை என்கிறது மழை
சிரித்தபடி விரிகிறது குடை

அதிகாலை சாம்பல் நிறத்தை
விடாமல் ஈரப்படுத்தும் காற்றில்
புலம்பெயர்கிறது கோப்பையிலிருந்து நழுவும்
காபியின் வெண்புகை

ஊடகத் தகவல் வழியே நீந்தி மிதக்கிறது
பள்ளிக்கூடங்களுக்கான விடுப்புச் சூழல்
பின்
கலர் ரிப்பன்களும் வர்ணக் கால்சட்டைகளும்
நனைய நனைய
கிழிந்த நோட்டுகளிலிருந்து புறப்படுகிறது
தெருவெங்கும் கப்பல்கள்

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ அக்டோபர் - 12 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=16951&Itemid=139

சனி, அக்டோபர் 08, 2011

அடுத்த சந்திப்பில்..

*
எதுவும் பேசுவதற்கு இல்லையென்றபடி
மௌனித்திருந்தான்

திசையறியா பறவையொன்றின் சிறகில்
தன்னைச் செருகிக் கொண்ட
ரகசியத்தை
துண்டுச் சீட்டில் குறிப்பாக எழுதித் தந்தான்

அடுத்த சந்திப்பில்
தானொரு வனத்தின் மரத்தில்
அகன்ற இலையில் பழுத்த நரம்பாக
மாறிவிடும் திட்டத்தை விளக்குவதாக
ஒரு
வாக்குறுதியையும்
பின்குறிப்பிட்டிருந்தான்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 10 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4881

மையில் கசியக் காத்திருக்கும் அனர்த்தங்களின் நிறம்..

*
விரலிடுக்கில் உருளும் பேனாவில்
பதறுகிறது வார்த்தை

துணை வர மறுக்கும் எழுத்துக்கள்
ஒவ்வொன்றாய் ஊறி உலர்கின்றன
வெட்டுப்பட்ட நாக்கில்

மையில் கசியக் காத்திருக்கும்
அனர்த்தங்களின் நிறம்
கொஞ்சங்கொஞ்சமாய் உறைகிறது
திரள்வதற்கென குவியும் முனையில்

அழுந்தும் முள்ளின்
தயக்கம்
ஒரு சிறிய நெளிக்கோட்டை
இரண்டுமுறை வெறுமைத் தாளில் பரீட்சித்து
மௌனமாகிறது அனைத்தையும் விழுங்கி

*******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 10 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4881

மீட்பதாக சொல்லிச் செல்லும் நிமிடம்

*
மீட்டுத் தருவதாக சொல்லி நின்ற
நிமிடம்
உன்னுடையதாக இல்லை

ஒரு
தலைக்குனிவின் மூலம்
வேர் விடுகிறது அவமானம்

பூர்த்தி செய்யப்பட்ட வார்த்தைகள்
அளிக்கும் நம்பிக்கைகளை
நொறுங்கச் செய்கிறது
நம்பத் தகுந்த ஒரு
புறக்கணிப்பு

பெருந் துயரத்திலிருந்து
மீட்பதாக சொல்லிச் செல்லும் நிமிடம்
தூவிச் செல்கிறது மேலும்
யாருடையதென்று உறுதி செய்யமுடியாத
வார்த்தைகளை

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ அக்டோபர் - 3 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=16866&Itemid=139

கல் மரம்


பறவைகளின் கூட்டை
முட்டைகளை
திருட்டுத் தனமாய்
உடைத்துக் குடிக்க ஊர்ந்த பாம்பை
கை கால் முளைத்த ஆதாமின் விலா எழும்பொன்று 
பறித்துத் தின்னப் பரிந்துரைத்த
ஆப்பிளை
தன்
நிழல் பரத்திக் கலைத்த நிலத்தை

அனைத்தின் சாட்சியாக
இருந்திருக்க நேர்ந்த நூற்றாண்டுகளின்
செதில்கள் கல்லாகி

மியூசியத்தின் கம்பி வலைக்குள்
காட்சியாக வெய்யிலில் காய்கிறது
செந்நிற மரம்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 3 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4862

இரவின் கரையிலிருந்து அழைக்கப்படும் பெருமழை..


இருளை மெழுகி வைத்திருக்கும்
அகன்ற நெடுஞ்சாலைப் பரப்பை
கடக்க யத்தனிக்கிறது
சின்னஞ் சிறிய தவளைக் குஞ்சு

சிதறும் வெளிச்சத் திரவம் பட்டு
கண் கூசி திகைக்கிறது சில நொடி

அதன் ஸ்தம்பித்த கணத்தை
நசுக்கி விடாத டயர்களைத் தொற்றியபடி
சாலையில் கசிந்து உருளுகிறது விளக்கின் சிகப்பு

இரவின் இக்கரையிலிருந்து
அக்கரைக்கு நகர்ந்து விட்ட தவளைக் குஞ்சு
மற்றுமொரு பெருமழையை அழைக்கிறது
பசுந்தளிரென விரிந்த இலையின் மீதமர்ந்து..
தன் இருபக்க தாடைகள் உப்ப..

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 3 - 2011 ]
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4862


நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் [ அக்டோபர் - 2 - 2011 ]
http://www.navinavirutcham.blogspot.com/2011/10/blog-post.html

செவ்வாய், செப்டம்பர் 27, 2011

எட்டாவது நிறம்


ஏழு வர்ணப் பென்சில் கொண்டு
வரைந்து காட்டிய வானவில்லோடு
எட்டாவது நிறமாக
ஒட்டிக் கொள்கிறது
பாப்பாவின்
வளைந்த குட்டிப் புன்னகையொன்று

******

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் ( செப்டம்பர் - 23 - 2011 )
http://www.navinavirutcham.blogspot.com/2011/09/blog-post_23.html

வெயில் மங்கும் எழுத்துக்கள்..

*
கண் மூடித் திறந்த ஒரு நொடியில்
இருள் வந்துவிட்டது
அடுத்த நொடியில் மீண்டது
பகலின் நிழலென பரவும் இரவின்
நிழலென பரவும் பகல்

வாசிக்க முடியாமல் மங்கும்
எழுத்துக்கள் மொத்தமும்
புத்தகத்திலிருந்து கொட்டுகிறது
நிழலை இரவை இழுத்துக் கொண்டு

பால்கனியில் வெயில் பட வைத்திருக்கும் தொட்டியில்
ஊற்றி வைத்திருக்கிறேன் இரவை
செடியின் காம்பில் ஊர்கிறது
எழுத்துக்களை சுமந்தபடி
எறும்புகள்

வெயில் பட்டுப் பட்டு
ஒரு வசந்தத்தில் பூக்கத் தொடங்குகிறது
ஒவ்வொரு எழுத்தாய் எல்லா பகலும்
வாசிக்கத் தோதாய் எல்லா இரவும்

*****

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் ( செப்டம்பர் - 21 - 2011 ) 
http://www.navinavirutcham.blogspot.com/2011/09/blog-post_2752.html

சற்று முன்..

உரையாடல் முடிந்தது
நீ சென்ற பிறகும்
சொட்டிக் கொண்டிருக்கிறோம்
நானும்
சற்று முன்
ஓய்ந்த
மழையின் துளியும்
 
*****
 
நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் ( செப்டம்பர் - 18 - 2011 ) 
http://www.navinavirutcham.blogspot.com/2011/09/blog-post_8748.html

பிளாஸ்டிக் நதி


எந்தவொரு நதியின் மீதும்
புகார் சொல்வது
முடியாது என்றபடி அதன்
கழுத்தைத் திருகுகிறேன்
பிளாஸ்டிக் பாட்டிலில் தளும்புகிறது
என்
தாகம்

*****

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் ( செப்டம்பர் - 16 - 2011 )
http://www.navinavirutcham.blogspot.com/2011/09/blog-post_5461.html

துண்டு நிழல்

*
ஜன்னல் வழிக் காற்றில்
சுழலும் மின் விசிறியின் நிழல்
துண்டு துண்டாய் அறுத்துக் கொண்டிருக்கிறது
இந்த அறையை
என்
தனிமையை

****

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் ( செப்டம்பர் - 16 - 2011 )
http://www.navinavirutcham.blogspot.com/2011/09/blog-post_16.html

சிறகைக் கோதும் சாம்பல் நிற மாலை..


மழையைக் கொண்டு வந்து சேர்கிறது
உன் சொற்கள்
அதன் ஈரத் திவலைகள் சிதறி
முளைக்கிறது என் மௌனம்

காரைப் பெயர்ந்த நம் சுவரின்
சுண்ணாம்புச் செதிலில்
விரல் வரைந்த கோடுகளாகி
பாசிப் படர்கிறது
கரும் பச்சை நிறமாகும் பெயர்கள்

விட்டுக் கொடுத்தல்களோடு
முடிந்து போகும் உரையாடல்களை
காலக் காகிதத்தின் கசங்கியப் பக்கங்களில்
சேமித்து வைத்திருக்கிறேன்

அதிலிருந்து புறப்படும் இசைக் குறிப்புகள்
ஜன்னல் கடந்து விரையும் காற்றோடு
போய் சேர்கிறது
கிளையிலமர்ந்திருக்கும்
பறவையிடம்

சிறகைக் கோதும் சாம்பல் நிற மாலையில்
குறுஞ் செய்தியொன்றை தாவிப் பிடிக்கிறது
கண்கள்
மழையைக் கொண்டு வந்து
சேர்பிக்கிறது உன் சொற்கள்..

******

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் ( செப்டம்பர் - 14 - 2011 )
http://www.navinavirutcham.blogspot.com/2011/09/blog-post_1125.html

தீண்டும் விரல்..

*
தீப்பிடித்து எரிகிறது
உன் தூரிகை

வர்ணங்கள் நெளியும் கேன்வாஸில்
தீட்டிக் கொண்டிருக்கிறாய்
இரவு பகல் மறந்து
நம் உரையாடலை

நிழல் வெளிச்சம் மாறி மாறிப்
படரும் மௌனச் சாயல் குழைகிறது என் முகத்தில்

தீண்டும் விரலின் நடுக்கத்தில்
எழுதுகிறாய் உதடுகளின் மீது
ஒரு
முத்தத்தை..

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ செப்டம்பர் - 30 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=16834&Itemid=139

வெள்ளி, செப்டம்பர் 23, 2011

அடைப்பட்ட ஒற்றைக் கதவு..


சுலபமாக உன்னைக் கடந்து
போகும் வகையில்
நீயொரு பாதையாக இருப்பதில்லை

பயணத்தின் தீர்மானமற்ற
முதல் புள்ளியை வரைபடமாய்
காகிதத்தில் மடித்துத் தந்தாய்

இளைப்பாறுதலுக்கான
உனது எளிய விதிமுறைகளை
கையாளுவதில் உருவாகும் தயக்கம்
பழுத்த ஓர் இலையைப் போல உதிர்கிறது
என் நிழலில்

திசைகாட்டியின் முள்
துருவங்களை இழந்ததோடு
அறிவிப்புப் பலகையொன்றை தயார் செய்கிறது
உன் குரலென
தன் அடையாளங்களைத் திரட்டி

மீளாத் துயரின் அடர்த்தியுள்
மூச்சுத் திணற நடந்த பின்னும்
ஒரு வெளிச்சமோ
அடைப்பட்ட ஒற்றைக் கதவோ
கனத்த பூட்டோ
உனது சாவியோ
எதுவும் தென்படவில்லை

நீயொரு பாதையென
சுலபமாக உன்னைக் கடந்து
போகும் வகையில் நீ இருப்பதேயில்லை

******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ செப்டம்பர் - 29 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=16790&Itemid=139

எரிந்து விழும் துயர்

*
நதியின் கண் திறந்துக் கொள்கிறது
நீலம் தோய்ந்த அலையில்

எரிந்து விழும் விண்கற்கள்
முணுமுணுக்கின்றது
என் துயரை

அதில் கவியும்
இந்தத்
தனிமையை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 26 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4822

எதிர்ப்பின் கதவினூடே நுழையும் உன் மௌனம்

*
உன்னை ஏற்றுக் கொள்ள முடியாத
அசௌகரியங்களைக்
கணக்கிட்டுக் கொண்டிருக்கிறது
இந்த இரவு

கடக்க முடியாத எல்லைக்கோடல்ல 
உன் வாதம்
நான் விரும்பாத வரைப்படம் அது

எதிர்பார்ப்பின் கதவினூடே நுழையும் உன் மௌனம்
சுலபமாய் மறந்து விடுவது
மூடியிருக்கும் என் ஜன்னல்களை

வரையறைகளை நிரப்பித் தரச் சொல்லி
நீட்டப்படும் படிவத்தில் எதை நிரப்ப
எதை விட்டுவைக்க

கையெழுத்தை மட்டும் கிறுக்கி வைக்கிறேன்
புலம்பு உன் விமர்சனத்தை

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 26 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4822

குரலின் சாயல்..


தொடர்ந்து கேட்கும் குரலின் சாயலை
வரைந்து காட்டுகிறேன்
அடையாளம் தெரியவில்லை உங்களுக்கு

அது
அகாலத்தின் இருளை பூசிக்கொண்டு
ஒரு பறவையின் தொண்டைக்குள்
இறங்கியிருக்கும் என்கிறான் ஒருவன்

பின்ஜாமத்தில்
அழைக்கும் தொழிற்சாலை சங்கொலி தான்
குரலாகிப் போய்விட்டது
என்கிறார்  ஒருவர்

இரவை மையமிட்டு எரியும்
விளக்கின் சுடர் அலைவு தான்
அந்தக் குரல் என்கிறாள்
உடல் சக்கையாகும்  தோழி ஒருத்தி

வீரிட்டழும் ஒரு குழந்தையின் குரலை
கூரையில் பதுங்கி பதுங்கி நகரும்
பூனையொன்று திருடிப் போகிறது

நெஞ்சு விம்மி வெடித்து எழும்
ஓர் ஒப்பாரியில்
பொங்கி வழிகிறது இரவும்
அதன் இருளும்

தொடர்ந்து கேட்கும் குரல்களின் சாயலை
சுண்ணாம்பு உதிர்ந்த
காம்ப்பவுண்ட் சுவரில்
வர்ணங்கள் மங்கிய ஒரு போஸ்டராக
ஒட்டி வைத்திருக்கிறேன்
உங்கள் வாசலில்

அடையாளம் தெரிவதில்லை
உங்களுக்கு

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 26 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4822

கோட்பாடுகளின் எளியச் சித்திரங்கள்

*
மற்றுமோர் இரவு தழல் மூண்டு
சரிகிறது நினைவில்
தருவிக்கப்பட்ட காகிதங்கள்
மேஜைப் பரப்பில் இறைந்து கிடக்கிறது

ஒவ்வொரு சொற்களும் எழுந்து நிற்கின்றன
மல்லுக்கட்டும் அர்த்தங்களோடு

கோட்பாடுகளின் எளிய சித்திரங்கள்
கை கால் முளைத்து வெளியேறுகின்றன
முரண்களைக் கையகப்படுத்தி

பேசாத இடைவெளிகளை
நிரப்பும் பிரயத்தனத்தில் எழுத முனையும்
உரையாடலை
முடித்து வைக்கிறது ஒற்றைக் கடிதம்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 19 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4797

டுவிங்க்...

*
சின்னஞ்சிறிய பரிதவிப்போடு
பறக்கிறது குருவி

வேகமாய் ஓடத் தெரியாத
கரப்பான் பூச்சியை கொத்திச் சிதிலமாக்கும்
ஒவ்வொரு நொடிப் பொழுதும்
'டுவிங்க்.. டுவிங்க்..'
என்று துடிக்கும் அதன் வாலின்
சங்கேத மொழியை
ஆபீஸ் கீ போர்டில்
டைப் அடித்துக் கொண்டிருக்கிறேன் 

கிர்ரக் கிர்ரக்... என்ற
கரப்பான் பூச்சியின் மரண ஒலியை
சன்னமாய் பிரிண்ட் அவுட் செய்கிறது
காகிதத்தை தொடர்ச்சியாய்
தின்றுப் பழகிய மெஷின்

வங்கிக் கணக்கில்
மாதா மாதம் சேகரமாகும் பணத்தை
மீட்டுத் தரும் பிளாஸ்டிக் அட்டை
பராமரிக்கிறது
என்
கூட்டை

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 19 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4797

உதடுகளில் மிதக்கும் சொற்களின் இளமஞ்சள் வெளிச்சம்

*
நிதானத்தை இழந்து விடாதே
என்றொரு அறிவிப்பை உள்ளடக்கிய சூழலை
உன் அழைப்பின் வழியே
உருவாக்குகிறாய்

வரவேற்பு கைக் குலுக்களுக்குப் பின்
மீட்டுக் கொண்ட உள்ளங்கையில் ஒளிர்கிறது
கூரை விளக்கின்
இளமஞ்சள் வெளிச்சம்

அதைப் பருகத் திணறுகிறது
என் நிழல்

மூச்சு முட்டும் சொற்களை
உதடுகளோடு கட்டுப்படுத்த
கைக்குட்டையை உபயோகிக்கிறேன் நாசூக்காய்

இறக்கை முளைத்து புறப்படும் உன் புன்னகை
எல்லா திசையிலும் சிறகடிக்கிறது
உன் உதடுகளின்
வர்ணத்தை சொற்பமாய் உதிர்த்தப்படி

நீட்டப்பட்ட
கண்ணாடிக் கோப்பையின் தளும்பும் மதுவில்
ஓசையின்றி மிதக்கவிடுகிறேன்
பத்திரப்படுத்திக் கொண்டு வந்த
என்
மௌனத்தை

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 19 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4797

படர்ந்து கிளைக்கும் மெல்லிய நரம்பின் சினம்..

*
ஒரு
கடுமையான மழை இரவில்
மறுதலிக்கப்பட்ட சஞ்சலங்கள்
முளை விடுகிறது
நஞ்சு நிலத்தில்

அதன் தளிர் இலைகளில்
நுனி சிகப்பில்
படர்ந்து கிளைக்கும்
மெல்லிய நரம்பின் சினம்
அண்ணாந்து நோக்கும்
வானின் வெறுமையில்
சூல் கொள்கிறது மேகமென

கனத்து கருக்கும்
சாம்பல் பொதியாக மிதந்து நகர
வீசும் காற்றில் உடைந்து
கீழிறங்குகிறது முதல் துளியென
மறுதலிக்கப்பட்ட சஞ்சலம்

நிலமெங்கும் அடர்ப் பச்சை

ஒரு கடுமையான
மழை இரவென்று மட்டுமே
முடிவு செய்யமுடியாத
இருள் சிடுக்காக பெருகுகிறது நஞ்சு

******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ செப்டம்பர் - 17 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=16614&Itemid=139

அங்கொன்றும் இங்கொன்றுமாய்..

*

ஒற்றைப் புன்னகையின்
வளைவில்
கள்ளத்தனமாய்
எட்டிப் பார்க்கும்
பல்லில்
பதுக்கி வைத்திருக்கிறாய்
இந்தப் பகலை

பின்னிரவின்
அடர் நீலம் தோறும்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
முளைக்கிறது
உன்
பிரியம்

****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ செப்டம்பர் - 15 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=16580&Itemid=139

மந்திரச் சொல்லோடு வந்த வழிப்போக்கன்

*
ஒரு மந்திரச் சொல்லோடு
வந்து சேர்ந்தான்
உன்னைக் கடந்து வந்த
உன் வழிப்போக்கன்

அது கதவுகளற்ற அறையின்
சுவர்களிலிருந்து புறப்பட்ட
குரலின் ரகசியமென்றான்

நூற்றாண்டு ஒட்டடைகள் படிந்த
பரணிலிருந்து
மனிதக் கவுச்சியோடு நழுவி விழுந்த
வரலாற்றுக் குறிப்பு என்றான்

கடவுளும் சாத்தானும்
கைக் குலுக்க நேர்ந்த கணத்தில்
இணைந்த ரேகைகளின் ஒப்பந்தம் என்றான்

தெருவோர இருளில் பதுங்கும்
பசித்த வயிற்றின் சுருக்கங்களிலிருந்து
இறங்கி வந்த உச்சரிப்பு என்றான்

ஒரு மந்திரச் சொல்லோடு
வந்து சேர்ந்தவனின் உதடுகள்
இறுதியாகப்
பூட்டப்பட்டிருந்தது

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 12 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4778

இறுதியாக அது நிகழ்கிறது..


இறுதியாக அது நிகழ்கிறது

நம்பிக்கையோடு
தொடங்கிய பயணத்துள்
கட்டுடைந்து போன உறவின்
நெருக்கடி விரிசல்

தன்னிச்சையாக முளைவிடும்
வார்த்தைகளின்
அர்த்தப் பிழை

பறப்பதற்கென வளர்ந்த சிறகின்
இறகுகள்
ஏகாந்தத்தில் உதிரும் தருணம்

உதடுகளில் இறுகிய
ஒரு மௌனத்தின் வழியே
கசிந்து பெருகும் அமைதியின்மை

காதல் கணத்தின்
சுவை ஊற்றெடுக்கும் போதே
அதனுள் குமிழ் விட்ட
கசப்பின் ஒரு சொட்டு

இறுதியாகத் தான் நிகழ்கிறது
அது

புறந்திரும்புதல்
விட்டு விலகுதல்
அல்லது
ஒரு
தற்கொலை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 5 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4738

ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011

மரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள்..

*
சலுகையோடு நீட்டப்படும்
கரங்கள் 
பெற்றுக் கொள்கின்றன 
ஒரு கருணையை 

மரணத்தை ஏந்திச் செல்லும் 
கால்கள் 
அடையத் துடிக்கின்றன 
இறுதி தரிசனத்தை 

இருப்புக்கும் இன்மைக்குமான 
பெருவழியில் 
சுவடுகளாகிறது
திரும்புதலின் பாதையும் 
காத்திருந்து எரியும் தெருவிளக்கும் 

***** 

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஆகஸ்ட் - 28 - 2011 )

புதன், ஆகஸ்ட் 24, 2011

சின்னஞ்சிறிய இலைகள்..

*
பிளவுண்ட கரிய அலகில்
இரைப் பற்றுதல்
துள்ளத் துடிக்க இறுக்குகிறது
உயிரை

உயிர் வடிவம்
கனமெனவோ கனமற்றோ
அசைகிறது
பசியின் வயிற்றில்

மரக்கிளையில் துடிக்கும்
சின்னஞ்சிறிய இலைகள்
மெல்ல மெல்ல இழக்கின்றன
தம் நிறத்தை..

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஆகஸ்ட் - 21 - 2001 )

வாக்குறுதியின் நகல்..

*
ஒரு
வாக்குறுதியின் நகல்
தன்னகத்தே எழுதிப் போகும்
சொற்களின்
இடைவெளிகளில் உழுகிறது பார்வைகளை

அவைச் சொல்லத் தப்பிய தருணங்களை
நீட்டும் உள்ளங்கைககள்
ஏந்திப் பெற விரும்புவது

ஒரு சின்னஞ்சிறிய
அறிமுகத்தை
மட்டுமே

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஆகஸ்ட் - 14 - 2011 )

அதிர்ஷ்ட மீன்


*
ஆறடி நீளம்
இரண்டடி அகல கடலுக்குள்
கட்டைவிரல் அளவில் நீந்தத் தொடங்கிய
மீனுக்கு
தனக்கெனத் தூவப்படும் பிரத்யேக
உணவு உருண்டைகளின் மீது பூசிக்
கிடக்கும் அதிர்ஷ்டங்கள் புரிவதில்லை

நீள் பாதை நோக்கி மட்டுமே
சப்பையாய் வளர முடிந்ததில்
ஏற்பட்ட மன அழுத்தத்தைப் போக்க

மாதம் இரண்டு முறை வந்து போகும்
மன அழுத்த டாக்டர்
நிவாரணி ஊற்றிச் செல்கிறார்

அம்மீனுக்குத் தெரியவில்லை

தன்னால் ஒரு டாக்டர் உருவாகியிருப்பதும்
தன் மன அழுத்தத்தால்
அந்த டாக்டரின் மன அழுத்தம் கொஞ்சம்
நீங்கும் என்றும்

அடுத்த முறை வரும் டாக்டரிடம்
நிச்சயம் கேட்க வேண்டும்
' இந்தக் கடலை மீறி வளர
நான் என்ன செய்ய வேண்டும்..?'

****** 

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஆகஸ்ட் - 7 - 2011 )

செதில்களின் பெருமூச்சு..


பிடித்து உலுக்கும் கனவின் திரையில்
அசைகிறது உன் நிழல்

நீயுன் தூண்டில் வீசிக் காத்திருக்கிறாய்
என் உரையாடலின் உள்ளர்த்தம்
சிக்குவதற்கு

மரப்பலகைகள் வேய்ந்த பாதையில்
ஈரம் மின்னும் அந்தியின் இளமஞ்சள் நிறம்
இந்த அறையெங்கும் பரவிய
ரகசியத்தின் சங்கேதக் குறிப்புகளை
தேடிச் சலிக்கிறேன்

மூழ்குகிறது அகாலம்..

சின்னஞ்சிறிய நோக்கும் கூர்மையில்
கசியும் கானல் குட்டையில்
நீந்துகிறது நமது கண்கள்

யாவுமே செதில்களின் பெருமூச்சென
எழுதித் தருகிறாய்
இந்த மௌன இரவில்..

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஆகஸ்ட் - 1 - 2011 )

நிழல் திசை

*
வெயிலின் அழைப்பு வந்ததும்
விரைகிறது நிழல்
எல்லா திசையிலிருந்தும்
எல்லா திசைகளுக்கும்
ஒரு
பட்ட மரம்
நிற்கிறது
சாட்சியாக

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் - 29 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4719

அமைதியாக அடங்கிப் போகும் வெளிச்ச விளிம்பு..

*
குறைவான அவகாசம் தான்
கொடுத்திருக்கிறாய்
ஒரு முடிவை எடுப்பதற்கு 

இதுநாள் வரை
வாழ்ந்த நிமிடங்களின் மீது
இறுதியாக
ஒரு தீர்மானத்துக்கு வர முடிவதில்லை

தூக்கமில்லாமல்
விம்மித் தவித்த இரவுகளின் நிழல்கள்
படுக்கையறை சுவரெங்கும்
திட்டுத் திட்டாய்ப் படிந்திருக்கிறது 

நெடுநாளாய் எழுதி வந்த
பேனாவின் மெல்லிய கூர்மைக் கொண்டு
அவைகளை
சுரண்டியெடுப்பதில் நம்பிக்கையில்லை

புரிந்துக் கொள்ள முடிந்ததாக
நினைத்திருந்த
நவீன ஓவியமொன்றின் வர்ணத் தீற்றல்கள்
வேறொன்றாகக் கரைகிறது
இந்த அகாலத்தில்

குறைந்த ஒளியை உமிழும்
குமிழ் விளக்கின் கீழ்
அமைதியாக அடங்கிப் போகும் 
வெளிச்ச விளிம்பில் மெல்ல
நகர்ந்து கொண்டிருக்கிறது
என் பார்வை

ஆயினும்
உன் எளிய கடிதத்தின் மூலம்
குறைவான அவகாசம் தான் கொடுத்திருக்கிறாய்
ஒரு முடிவை எடுப்பதற்கு

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் - 29 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4719

துருப்பிடித்த ஒலிகள்..

*
அடர் மௌனத்தின்
தாழ்கள் நீங்கிக் கொண்டு
துருப்பிடித்த கீல்களின் ஒலியென
வெளியேறுகிறது
மரணத்தின்
பெருமூச்சு

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் - 22 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4694

உடையும் சொற்களின் ஈமச் சடங்கு

*
அவன் வரத் தவறிய பாதையின் பூக்கள்
இதழ்ப் பறத்துகின்றன
நிழல் தோறும்

தங்கிப் போதல் சாத்தியம் தானென
பிதற்றுகிறான் கையில் கிடைத்த
தாளின் நுனி மடக்கி

உடையும் சொற்களின் ஈமச் சடங்கை மட்டும்
கண்ணீர்ப் படித்துறையில் கணுக்கால் நனைய
மீன்களுக்கு இட்டப் பொரியென
உப்பச் செய்கிறான்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் - 22 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4694

வடிவங்களை அறுத்து அடுக்கும் கோட்பாட்டுப் படிகள்..

*
நமக்கிடையே
இறக்கை முளைத்தும்
பறக்க இயலாத
உரையாடல் குஞ்சுகளை

தன்
பசிக்கிரையாக
கொத்திச் செல்ல
புராதனக் கட்டிடத்தின் கூரைப் பொந்தில்
தருணம் பார்த்துக் காத்திருக்கிறது
பருந்து ஒன்று

வட்டம் சதுரம்
நீள்சதுரம்  நீள்வட்டமென
வடிவங்களை அறுத்து அடுக்கிய
கோட்பாட்டுப் படிகளில் ஏறியோ இறங்கியோ
கடக்க நேரிட்ட மனிதர்கள்

வர்ணம் பூசிக் கொள்ளும்படி
சிபாரிசு செய்கிறார்கள்
நம்
இறக்கைகளுக்கு

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் - 22 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4694

வரலாற்றின் உலோகக் கிண்ணங்கள்..

*
கைகளில் ஏந்தி நிற்கும்
வரலாற்றின் உலோகக் கிண்ணங்களில்
ஊற்றிப் போகிறார்கள்
என்
மூதாதையரின் ரத்தத்தை

நினைவுகூற மறந்துவிட்ட காயங்களை
துக்கம் தொலைந்த இரவுகளின் வெம்மையை
அதன் இருண்ட நிறத்தை
தனிமைப் புலம்பலை
ஊற்றிப் போகிறார்கள்
கிண்ணங்களில்

பருகியபோது சிதறும் துளிகள் யாவும்
மீண்டும் மீண்டும் துளிர்த்தபடி
ஓயாது பிரசவிக்கிறது
போர்களை

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஆகஸ்ட் - 10 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=16047&Itemid=139

நிலுவையில் இருக்கும் மௌனங்கள்..


நீயொரு சமரச உடன்படிக்கையோடு
துயரத்தின் வாசலில்
உட்கார்ந்திருக்கிறாய்

நிலுவையில் இருக்கும் மௌனங்களை
பட்டியலிடுவதில் தொடர்கிறது
இந்த மாலையும்
அதன் தனிமைக் கோப்பையில்
ஊற்றப்படும் மதுவும்

நுரைத் தளும்ப பொங்கும்
பிழையின் நீர்மையில்
மையமிட்டுக் குமிழ்ந்து மொக்குடைகிறது
அத்துயரத்தின் வாசலில்
நிர்க்கதியாய் உன்
புன்னகை

****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஆகஸ்ட் - 9 - 2011 ] 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=16005&Itemid=139

தனிமையைக் கைப்பற்றுதல்

*  
ஒரு
தனிமையைக் கைப்பற்றுதல்
என்பது
கானலாகிக் கரைகிறது

கான்க்ரீட் நகரின்
நிமிடங்கள் சதா துருப்பிடிக்கின்றன

அதன்
தூய்மைக் கணத்தை தரிசிப்பதற்குள்
எத்திசையிலிருந்தாவது
துப்பப்படுகிறது
அதன் மீது ஓர்
எச்சில்

தனக்கானத் தனிமையைக்
கைப்பற்றுதல்
என்பது
வளரும் சுவர்களுக்கு நடுவே
அசையாத பல்லியின் கீற்றுப்
பார்வையை ஒத்துப்
பெருகுகிறது
 
இந்நகரெங்கும் கைவிடப்பட்ட
குறுகலான
சந்துகளைப் போல்
 
*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஆகஸ்ட் - 6 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15979&Itemid=139

மஞ்சள் பட்டாம்பூச்சி..

*
மொட்டை மாடியில் காயும்
பாப்பாவின் பச்சை நிற பிராக்கில்
ஒரு
மஞ்சள் பட்டாம்பூச்சி
ஈரம் சொட்டக் காத்திருக்கிறது

தன்
சிறகுகள் உலர..

****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஆகஸ்ட் - 4 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15940&Itemid=139

நிரம்பித் தளும்பும் கானல்..

*
சுவரில் தொங்கும்
ஓவியப் பறவைகளின் சிறகுகள் நிழல்
பரத்திய நிலத்தில்
நடக்கும் வழிப்போக்கன்

தொலைவில் நெளியும் கானல்
இந்த அறையில்
வரவேற்பாளினி புன்னகையில் வழிந்து
நிரம்பித் தளும்புகிறது
கண்ணாடி டீபாயிலும்

ஆங்கில தினசரியின் தலைப்புச் செய்தியில்
இரண்டாய் உடைந்த ரயில் பெட்டியை
கொத்தித் தூக்குகிறது அப்பறவை
அசையும் மின்விசிறியின் சிறகுகள் கொண்டு

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் - 1 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4606

அலகுகள் முடையும் கூடு..

*
கிரெடிட் கார்டு பேங்க் லோன்
நகைக் கடன் கந்து வட்டி
இன்ஜினீயர்
மேஸ்திரி
இரவு பகல்
வெயில் மழை
பார்வைக் குத்தும் வாடகை வீட்டின்
மோட்டுவளை
சொந்த வீடு கட்டும் கனவின் மீது
சதா மணல் தூறல்

துடைப்பத்தின் ஈர்க் குச்சி
தளர்ந்த சனல் துண்டு
நெளிந்த கட்டுக் கம்பி
சல்லி வேர்
பிளாஸ்டிக் நூல்
பிளவுப்பட்ட மரக்கிளையில்
இரவு பகல்
வெயில் மழை
காற்று மற்றும் பலத்த காற்று
கனத்த முட்டை ஓட்டுக்குள்
தன் உயிர் மற்றும்
ஏமாந்த முட்டைக்குள் குயில் கரு
பூமி நோக்கி வெறித்தபடி
சதா இலைகளின் சலசலப்பு

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் - 1 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4606

வியாழன், ஜூலை 28, 2011

பயணத்தின் மஞ்சள் நிறம்..

*
மதிய வெயில் கோடுகளாய்
குறுக்கே விழுந்திருந்த
ஒரு
நடைப்பாதைப் பொழுது

பயணத்தின் மஞ்சளை
கரு நிழல் துரத்துவதை
எண்ணியிராத 
ஓர் எறும்பு

மரணத்தின் வடிவத்தை
வாசித்துக் கொண்டிருந்த அரைக் கணத்தில்
பட்டென்று ஸ்தம்பித்தது
கால் கட்டை விரலுக்குக் கீழ்

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜூலை - 24 - 2011 )

மீளா நிழல்


கைப்பிசைந்து நிம்மதியிழக்க நேர்கிறது
இப்பெரு அமைதியில்

காலடி ஓசைகளின் அதிர்வில்
நடுங்குகிறது நிற்கும் நிழல்

ஒளி கசியும் ஜன்னல் திரையில்
மடிந்து மடிந்து தொங்குகிறது
மீளா துக்கம்

கையெழுத்து இடச் சொன்ன படிவத்தில்
உறுதி செய்து கேட்கிறார்கள்
அவன் மரணத்தை

வெண்துணி போர்த்திய உடலென
வருகிறான் பின் எப்போதும் பார்க்க விரும்பாத
விழிகள் நிலைக் குத்த..

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜூலை - 24 - 2011 )

முடிச்சிட்டுக் கொள்ளும் நாளங்கள்..

*
ஒரு கறுமைப் பொழுதை
ஊற்றிக் கொண்டிருக்கிறேன்
இரவின் குடுவையில்

வெளிச்சத் திரள் என
சிந்துகிறாய்
துயரத்தின் வாசலில்

கைப்பிடியளவு இதயத்தில்
அழுத்தும் நினைவு நாளங்களில்
முடிச்சிட்டுக் கொள்கிறது

எப்போதும்
முடிவற்று விரியும்
கோரிக்கை யாவும்

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜூலை - 10 - 2011 )

மரணித்தல் வரம்

*
கை நீளுதலை யாசகம் என்கிறாய்
யாசித்து பெறுவதாக இருப்பதில்லை
எனக்கு தேவையான பார்வை

பேசாதிருத்தல் அமைதி என்கிறாய்
பேசி அடைவதாக இருந்ததில்லை
நான் பெற்ற மௌனம்

மரணித்தல் வரம் என்பாய்
எதன் பொருட்டு தவம் இருந்தேனோ
அதிலில்லை
யாசகமோ
ஒரு மௌனமோ
குறைந்தபட்சம் ஒரு பார்வையோ

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜூலை - 3 - 2011 )

நிரம்பி வழியும் பிளாஸ்டிக் நாற்காலிகள்..


தோளை லேசாகத் தட்டி
கையைக் குலுக்கி ஆறுதல் சொல்லும் தருணம்
குறுக்கும் நெடுக்குமாக உடைகிறது
பெரும் சப்தத்துடன்

துக்கம் அடைத்துக் கொண்ட குரல்கள்
பால்கனி வழியே சிந்திக் கொண்டிருக்கிறது
இன்னும் பிடிவாதமாக சொட்டு சொட்டாய்

நிரம்பி வழியும் பிளாஸ்டிக் நாற்காலிகளின்
நிறங்கள் எப்போதும் ஒன்று போலவே இருக்கின்றன
சாமியா பந்தலின் நிழலுக்குள்

வேறு வழியற்று அத்தெருவில்
ஷட்டர் இறக்கப்பட்ட கடைகளின் வாசலில்
நின்று கொண்டிருக்கிறார்கள்
இறுதி ஊர்வலம் புறப்பட்டதும்
கடையைத் திறந்து கல்லாவைக் கொஞ்சமேனும் நிரப்ப..

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜூலை - 30 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15876&Itemid=139

சனி, ஜூலை 23, 2011

ஒற்றைச் சொல்

*
வெகு நேரமாக சுழன்றுக் கொண்டிருந்தது காதருகே
ரீங்கரிக்கும் ஒரு கொசுவைப் போல
சற்றுமுன் நிகழ்ந்த உரையாடல்

தொலைவில் கலங்கிய கரிய நிழலின் பிம்பமென
நெளிந்தபடி சிறுத்துப் போகும் உன் உருவை
கானல் நெய்து கொண்டிருக்கிறது

அர்த்தம் உணரும் வெளியில்
கால்கள் சிக்க அசைவற்று நிற்கும் சதுப்பாகிறது
இந்நிலம் கரும்பாசி நிறத்தில்

பிறகும் முளைத்துக் கொண்டேயிருக்கிறது
நீ தூவிச் சென்ற வார்த்தைகள்
சுற்றிக்கொள்ளப் பிரயத்தனப்படும்  கொடியென

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜூலை - 28 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15822&Itemid=139

தாழப் பறக்கும் நம்பிக்கை நிழல்..

*
அப்படியொரு நிர்க்கதியை
இதற்கு முன்பும் அடையச் செய்ததுண்டு

ஒவ்வொரு மீட்சியிலும்
தாழப் பறக்கும் நம்பிக்கை நிழல்
மழைப் பொழிவதில்லை

இறுகப் பற்றிக் கொள்ள நேரும் கரங்களில்
யாவற்றையும் வாசித்து விடுகிறது
அழுந்த நெளியும் ரேகைகள்

அப்படியொரு நிர்க்கதியை
இப்போதும் அடையும்படி ஆகிறது

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜூலை - 25 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4586

உள்ளங்கைக்குள் அடங்கும் நேற்றைய இருள்..


இப்படியொரு ஆச்சரியத்தை
யாசிப்பாய் என்று எதிர்பார்க்கவில்லை
பேசுவதற்கு ஏதுமற்று
உட்கார்ந்திருக்கிறாய்

உன்
பிடிவாதத் தருணங்களை
விரல் விட்டு எண்ணுகிறேன்

பார்வை ஊசிக் கொண்டு பழைய சம்பவங்களை
நிதானமாகத் தைக்கத் தொடங்குகிறாய்

நமக்கிடையே ஆவிப் பறக்க
வைக்கப்படும் கண்ணாடிக் கோப்பை நிறைய
வார்த்தைகள் மிதக்கின்றன

அவை நமக்குத் தேவைப்படவில்லை

உள்ளங்கைக்குள் அடங்கிவிட்ட நேற்றைய
இரவின் இருளை சுரண்டிப் பிரிக்கிறேன்
சிறு புள்ளியென அதில் ஒளிர்கிறது
நீ தந்த முத்தம்

ஆவலோடு உன் மௌனித்த உதடுகள் கொண்டு
அதை ஒற்றியெடுக்கிறாய்

அதுவரை மிதந்த வார்த்தைகள்
ஒவ்வொன்றாய் கனத்து கோப்பையின் அடியில்
தேங்குகிறது
ஓசைகளேதுமின்றி

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜூலை - 25 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4586