புதன், மார்ச் 31, 2010

ஆற்றுப் படுகை..

*

கோடை காய்ந்த
ஆற்றுப் படுகையை
நடந்து கடக்கையில்..

ஓரிடத்தில்
அகப்பட்டது..

கையகல நதி..!

***

புதையும் பகல்கள்..

*

மஞ்சள் உதிர்த்த வெயிலொன்றில்
அதிசய வடிவங்கள் நீட்டும்
நிழலை வரைகிறாள்
சுவரில்
ஒரு சிறுமி
மணல் கிளறி
குழிப்பறித்து
தன் பகல்களைப் புதைத்து
வாசல் படியில் காத்திருக்கிறாள்
வருவோர் போவோர் அசைவுகளை
சலிப்போடு
நோட்டில் கிறுக்குகிறாள்
அப்பாவும் அம்மாவும்
ஆபிசிலிருந்து வீடு திரும்பிய போது..
அவளுடன் சேர்ந்து
ஒரு பூனைக்குட்டி
ஒரு மரம்
ஒரு சைக்கிள்
ஒரு பூ
மற்றுமொரு கப்பல்
காத்திருந்தது..
****
நன்றி : ' கீற்று ' இணைய இதழ் - ( மார்ச் - 30 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5032:2010-03-30-06-05-10&catid=2:poems&Itemid=265

தலைவாசல்..

*

ஒரு கவிதையிலிருந்து
இன்னொரு
கவிதைக்குள் நுழைந்து கொள்ள..

கதவு திறந்துவிடுகிறது..
ஒரு தலைப்பு..!

***

ஊனப்பட்ட படிமங்களும்.. குறைப்பிரசவ உவமைகளும்..

*

குறிப்புகளின் மலைமுகட்டிலிருந்து..
ஒரு இரவு..
கால் இடறி..சரிந்தேன்..

பள்ளத்தாக்கு முழுதும்..
ஊனப்பட்ட படிமங்களும்..
குறைப் பிரசவ உவமைகளும்..
அழுகிய நினப் பெருக்கோடு..

புதை மணலென..
உள்ளிழுத்துக் கொண்டு..
என்
மேஜையில் மேலெழும்பி..

காகிகதத்தில்..
துப்பி
மறைந்தது.. என்னை..!

***

ரகசியத் தாழ்..நீக்கும் உள்ளறை..

*

உன் கனவை ஏன்
விலை பேசுகிறாய்..?

கிழித்தெறியவோ..
தீயிலிட்டுப் பொசுக்கவோ..
ஒப்பந்தக் கையெழுத்திட்டிருக்கிறோம்
காதலென்று..

தாழ் நீக்கும்
ரகசிய உள்ளறையின்
மனப் பரண் இருளில்..
கொஞ்சம் இடம் இருக்கும்..
தேடிப் பார்..!

***

இழை அறுபட்ட வாசனை..

*

அவளின் பிரத்யேக
வாசனை இழந்தபடி..
கொடியில் காயும்
மஞ்சள் வர்ண துண்டின் மீதமர்ந்த
குருவியொன்று..

இழை அறுபட்ட
நூல் பிசிரை..
கொத்தி இழுக்கிறது..
எதன் பொருட்டோ..!

****

என் நிழல்..!

*

இருட்டை அவிழ்த்து
முடிந்து கொள்கிறது இரவு..

முடிவற்று
முடிந்து போகிறது..
என்
நிழல்..!

***

மிட்டாய் பொம்மை..

*

உள்ளங்கை விரித்துக் காட்டினான்..
மிட்டாய்ப் பிசுபிசுப்பில்..

சற்று முன்
நான் வரைந்த..

மிக்கி மௌஸ்

இனிப்பில்
நனைந்திருந்தது..

***

சாம்பல் நிற வனம்..

*

தலையணை உறையில்..
சிரிக்கும் கரடிகளைக்
கட்டிப் பிடித்து தூங்குகிறாள்
சிறுமி..!

அவள் வனத்தில்
வர்ணங்களை கூட்ட முயலுகிறது..
சாம்பல் நிறக்
கனவொன்று..!

***

மழை..தொலைகிறது..

*

நீர் சுழித்து
பிரவகிக்கும் சாக்கடையில்
மழை தொலைகிறது..

காகிதக் கப்பல்களை சாக்கிட்டு
கணுக்கால்களைப் பழக்கும்
வித்தை
குழந்தைகளுக்கு மட்டும்
பிடிப்பட்டு விடுகிறது..
அத்தனை
அதட்டல்களையும் மீறி..!

***

வரலாற்றின் கர்ப்பத்தில் உறைகிறது..ரத்த நதி..

*

சதைத் துளையிலிருந்து
வெளியேறும்
ரத்த நதி
உறைகிறது
வரலாற்றின் கர்ப்பத்தில்
கெட்டித்த உருளையென..

டி.என்.ஏ - கட்டுமானத்தில்
அடுக்கடுக்காய்
செருகப்பட்டிருக்கிறது
ஒரு
இனப்படுகொலையின்
புள்ளி விபரம்..

****

மெட்ரோ கவிதைகள் - 54

*
எலும்பு துருத்தி
நகரும் பசு மாடொன்று..
செய்வதறியாது
மௌனமாய் கடக்கிறது
தெருமுனைப் பூங்காவை..

அசை போட்டு
நுரைத்தள்ளி
போஸ்டரை நுகர்ந்தபடி..

****

நிழல்கள்..

*

நிழல்கள்..

வடிவங்களை
இரவின் பள்ளத்தில்
கொட்டியபடி

எங்கோ போகின்றன..
எங்கிருந்தோ வருகின்றன..!

****

காத்திருப்பின் ருசி..

*

நாவைச் சுழற்றி
தன் ருசியை
பாதத்தில் நக்கிப் பார்க்கும்
பூனை

வலைக்குள்
காது விடைக்க
காத்திருக்கிறது

ஒற்றை எலி..!

****

மெட்ரோ கவிதைகள் - 51

*
உயர்த்திப் பிடித்தக் கொடிகள்
அசையாமல் நகர்கின்றன
காற்றில்லை

வெயில் ஒழுகும் தார்சாலையில்
கொள்கைகள் தீப் பிடித்து கருகும் வாசம்..
சிக்னலில் நிற்கும்
ஹெல்மட்களில் வழிகிறது

பிடரிக் கழுத்தைக்
கசகசக்க வைக்கும் சூரியனின்
மஞ்சள் திராவகம்..
கறுத்த
நடு முதுகெங்கும் ஊறுகிறது
அருவருப்பான புழுவைப் போல

மீண்டும் மீண்டும் ஜனநாயகப் புழுதியை
வாரி இறைத்து விரைகின்றன
அரசின் சொகுசு வாகனங்கள்

சிக்னலில் வெகு நேரம்
எரிகிறது சிவப்பு

****

மெட்ரோ கவிதைகள் - 52

*
அரசு கட்டிடத்தின்
வெளிப்புறத்தில்..
குறுக்கும் நெடுக்குமாய்
ஓடும்
கேபிள் வயர்கள் மீதமர்ந்து

காகங்கள் கரைகின்றன..

களைத்து விட்ட
ஊழியர்கள்
சூடாக வடை சாப்பிட
கதைத்தபடி நகர்கிறார்கள்
கேண்ட்டீன் நோக்கி..!

****

மெட்ரோ கவிதைகள் - 53

*
பீக்-அவர் டிராபிக்கில்
கைமாறும் சில்லறைகள்..
பஸ்சுக்குள் சிதறித் தொலைகின்றது

அவசரமாய் சாலை கடக்கும்
மார்க்கெட்டிங் மனிதனின்
கிராஸ் பாக்கில்
தனக்குள் மோதி சிணுங்கி
சிரிக்கிறது
டிபன் பாக்சும் குட்டி ஸ்பூனும்..

தாவி ஏறும் படிக்கட்டுகளில்..
ஷூக்கள்
ஸ்லிப்பர்கள்
தோல் செருப்புகள்
மற்றும் வெறும் கால்கள்
முண்டியடிக்கிறது..
நக அளவு இடத்துக்கு..

பவுடர் தொலைந்த
கூந்தல் கலைந்த
உடை கசங்கிய
கசகசப்பில்..

கைமாறிப் பயணிப்பது
டிக்கட் மட்டுமல்ல..

கொஞ்சமாவது..
ஈரம் மங்கிய புன்னகைகளும்..
ஜன்னலோரம் தஞ்சமாகும்
தென்றல்களும்..

****

மெட்ரோ கவிதைகள் - 50

*
உழைப்பாளர் சிலைக்கு
பின்புற படிக்கட்டோரம்
நா வரளும் வெய்யிலில்

முக்காடிட்டு
உட்கார்ந்தபடி

மாங்கா பத்தைகளும்
வெள்ளரிப் பிஞ்சுகளும்
தண்ணீர் பாக்கட்டும்
விற்கிறாள் சிறுமி

அதட்டலோடு கடக்கும்
போலீஸ் மனிதன்
ஓசியில் தாகம் தீர்ந்து

பிளாஸ்டிக் கவரை
வீசிவிட்டு

' நாளைக்கு ஒன்ன இங்க பார்த்தேன்
தொலைச்சிடுவேன்..' -

என்றபடி
நகர்கிறான்
பத்தடி தள்ளி சர்பத் விற்கும்
மனிதனை நோக்கி..

****

மெட்ரோ கவிதைகள் - 49

*
சுரங்கப்பாதைகளின்
அகலச் சுவர்களில்..
சாய்ந்து நின்று
யாசிக்கிறது..
எப்போதும்
ஒரு வறுமை..

படியேறும் உச்சியில்..
காமத்தின் வாசம் கமழ
பேரமாகின்றன..
மலர்கள்..

இருள் பூசிய சாலைகளை
விளக்கொளி மெழுகி..
விரையும் வாகனங்கள் கடக்கும் நொடியில்..

மின்னி மறைகிறது..
சில புன்னகையும்..
சரிகை வட்டங்களும்..

****

காத்திருப்பு..

*

கால் கடுக்க நிற்கிறது
மின் கம்பம்..

துணைக்கு...
புதருக்கு பின் பக்கம்..
மின்மினிப் பூச்சிகள்..

நேரத்தை
பேசிக் கழிக்க..
சுவர்க் கோழி..

இரவின் வருகைக்காக
கால் கடுக்க நிற்கிறது
மின் கம்பம்..

****

புன்னகைப்பதற்குரிய உத்தரவு..!

*

புன்னகைப்பதற்குரிய உத்தரவை
நீ இன்னும் வழங்கவில்லை..

கருகி வரும்
வானத்தின் அடர் நீளத்தில்..
மேகம் வழியே...
இன்றைய கடைசி சூரியன்
எழுதும் கவிதையொன்று..

பறந்து கடக்கும் கொக்கின் சிறகைத்
தொற்றிக் கொள்கிறது..

புன்னகைப்பதற்குரிய உத்தரவை
நீ இன்னும் வழங்கவில்லை..

மொட்டை மாடிக் கொடியெங்கும்..
படபடத்துக் கொண்டிருந்த
துணியத்தனையும்..
உன் புறங்கையில்..தஞ்சம்..

இன்னும் படபடத்தபடியிருக்கும்
என் இதயத்தின் சிறகை
நறுக்கி எறியும் கூர்மை - உன் பார்வையில்..

புன்னகைப்பதற்குரிய உத்தரவு..
உன்னிடம் இல்லை..
இப்போதும்...
எப்போதும்..
எப்பெப்போதும்..

மொட்டைமாடிக் கொடிக்கம்பில்..
ஒற்றை காகம் ஒன்றமர்ந்து..
விடாமல் கரைகிறது..
நமக்காக..!

****

மெட்ரோ கவிதைகள் - 48

*
பார்வையற்று
பெற்ற நாணயங்களைத்
தடவி எண்ணும் விரல்களில்..

ரேகைகள்...நெளிந்து..
புதையும் நகரத்து அழுக்கில்..

வாழ்வின் அவலத்துக்கு..
துணையாக மட்டுமன்றி..
மௌன சாட்சியாகவும்..

மறு கையில்..தொங்குகிறது
எப்போதும் ஒரு
கைத்தடி..!

****

என்னைத் துடிக்க செய்து..

*

பேருந்தின்
முன்புறமேறிப் புறப்பட்ட..
அந்தித் தென்றல்..

ஜன்னலோரம் தூங்கும்
அவள் துப்பட்டாவைத் தட்டி

கண்டக்டரைக் கடந்து..

என் சட்டைக் காலரைத்
துடிக்கச் செய்து..

படியிறங்கி..
எங்கோ போகிறது..!

****

நதியென நுழையும் மண் சேறு..!

*

மதிர் சுவர்களின்
பாசிப் படர்வில்..
வழியும் மழை நீரின்
பச்சை வர்ணங்களை..

ஏந்திக் கொண்டு..

எறும்பின் புற்றுக்குள்..
நதியென நுழையும்..
மண் சேறு...

தேங்கி நிரம்புகிறது..
சிறு குளமாக..!

****

மெட்ரோ கவிதைகள் - 47

*
காரைப் பெயர்ந்த
தெருச் சில்லுகளில்..

கருப்பாய் ஊறிக் கிடக்கிறது..
கொஞ்சம் பொறுமையும்..
நிறைய கோபமும்..

அவற்றை
தண்ணீர் விட்டு
அலம்பிக் கடக்கிறது
உறுமலோடு..

மெட்ரோ லாரி...!

****

வெளியேற்றம்..

*

நிதானமாக படியிறங்கி
வெளியேறும்..
மாடிக் கழுவிய நீரில்..

மிதந்தபடி நகர்கிறது..

நேற்று
எழுதி..சரிவராமல்..
கசக்கி எறிந்த

பாதிக் கவிதை தாங்கிய
காகித சுருட்டல்..!

****

ரகசியமாய்..

*

இரண்டு புள்ளிகளுக்கு
நடுவே..
பயணிக்கும் சொற்களில்..

ஊர்ந்து
ரகசியமாய்
முதுகிலேறிக் கொள்கின்றன..

உருவங்களும்
படிமங்களும்..!

****

செவ்வக இலையொன்று..

*

மஞ்சள் நிறப் பின்னணியில்..
பச்சை செடியை
சிறைப் பிடித்து..

பாத்ரூமில் துளிர்த்திருந்த
செவ்வக டைல்ஸின்..
கீழ் முனைக் கூர்மையில்..

இலையொன்று
உடைந்திருந்தது..

****

சிலிர்ப்பு..

*

கனவெனும் கைவிரல்
நாணல் நுனியொத்த
மன அசைவில்..

கூசி சிலிர்க்கிறது..

காட்சிப் படிமங்களாய்..!

****

நிழல் பிதுங்கி வழிதல்..

*

நிழல்
பிதுங்கி வழிகிறது..

வீங்கும்
வெயிலொன்றின்
பகல்..

பால் குமிழாய்..!

***

மெட்ரோ கவிதைகள் - 46

*
நகரத்தின்
பகல் மீதலையும் வெயிலை

கண் கொட்டாமல்
பார்த்துக் கொண்டிருக்கிறது..

நடைபாதை யோரம்
தவறிப் போய் முளைத்துவிட்ட

சிறு செடியின் நிழல்..!

****

மழைக் கனவொன்று..தீப்பிடித்து கருகும் வாசனை..

*

கண்ணிலிருந்து
ஒரு
சொட்டு கண்ணீரைக் கூட
பிதுக்கிவிடலாம்..

கோடை வெடித்த
நிலத்தில்..
தண்ணீர் இல்லை..

கால்நடைகள் புலம் பெயர்ந்தது..

முலை வற்றிய மார்க்காம்பில்..
தாகம் தீர வக்கற்றுப்
போன வாழ்வு..

அவல விவசாயியின்
மழைக் கனவொன்று
தீப்பிடித்துக் கருகும் வாசனை..

பொல்லாத
இரவின் அகண்ட வெளியில்..
திக்கற்று அலைகிறது..

காற்றின் குரல்வளையை
நொறுக்கியபடி..!

****

திரள்..

*

உன்
உதடுகளின் ஈரம் பட்ட
சொற்கள்..

நெஞ்சுக்கூட்டுக்குள்
திரள்கிறது..
வாழ்வதாக சொல்லித்திரியும்
என் தாகத்தில்..!

***

மரணச் சுவர் எங்கும்.. படர்ந்தொழுகும் துளி திரவம்..

*

உயிர்த் திரி நுனி கருகும்
நின வாடை
நாசித் துளைப் புகுந்து
மனம் திருகும்..

மரணச் சுவர் எங்கும்..
படர்ந்தொழுகும்
நினைவழுக்குத் துளி திரவம்..

வெளிப் பிரகாச ஒளிப் புள்ளி
இருள் கதவில்
பொத்தலாகி..

கவர்ந்து போம்
உடல் உதறி..

'வைத்துக் கொள்...பிணம் ' - என்றே..!

****

மெட்ரோ கவிதைகள் - 45

*
கைவிடப்பட்ட மூதாட்டி..
கோல் ஊன்றி..
முதுகு வளைந்து
யாசிக்கிறாள்..

போவோர் வருவோரின் கருணையை..

நகரம்..
பாக்கெட்டிலோ
கைப்பேசியின் வாயிலோ..
தம்
கைகளை நுழைத்துக் கொள்ளும்
லாவகத்தோடு..
கடந்து போகிறது..!

****

கைப்பிடி மரணம்..

*

ஒரு
கைப்பிடி மரணத்தை..
நண்பனின்
வாயிலடச் சொல்கிறார்கள்..

அதை
அரிசி என்று -
எப்படி சொல்ல..?

****

மற்றுமொரு..

*

முத்தமிடுவதாக செய்திருந்த
சத்தியத்தை
நிராகரிப்பு செய்கிறாள்..

மற்றுமொரு
5 ஸ்டாருக்காக..

மௌனம் சாதித்தபடி..!

****

மோதிச் சிதறும் பொருட்டு..இடறும் தருணங்கள்..

*

மன நதியில்
கவிழ்ந்தபடி நகருகிறது மௌனம்..
பற்றிக் கொண்டு கரையேறி விட..
காரண நுனியேதும்
மிதப்பிதில்லை கூடவே..

மோதிச் சிதறும் பொருட்டு

இடறும் தருணங்களின்
சொரசொரப்பில்..

குமிழ் நுரைத்து ஒதுங்குகிறது..
தயக்கமெனவும்..
திணறலோடு..மரணமெனவும்..

சந்தர்ப்பங்கள்..!

****

நட்சத்திரங்களைப் பூசும் வெளிச்ச சரடுகள்..

*

என் நிர்வாணத்தின் மீது கவியும்
நாகரீக இழையின்
வெளிச்ச சரடுகள்..

நட்சத்திரங்களைப் பூசுகின்றன

என்
இரவின் சாளரத்திலும்
பகலின் உப்பரிகையிலும்..!

****

வெயில் - நிழல் மற்றும் ஒரு சலனம்..

*

மஞ்சள் நிறம் மெழுகும் வெயில் வழிந்து..
கருஞ்சாம்பல் நிழலொன்று..
குறுகிய நதியென
ஒழுகி..

சமையலறையின்..
அழுக்கு நீர் பொந்தில்..
சலனமற்று
வெளியேறுகிறது..
என் கவனங்களை இழுத்துக் கொண்டு...

****

காயும் நெல் கொத்தும்..குருவி..

*

துள்ளும்
வால் சிடுக்கோடு..

காயும் நெல் கொத்தும்..
குருவி..

சிமன்ட் தரை வெயிலைப்
பொத்தலிடுகிறது..
ஒவ்வொரு முறையும்
தன் சிறு அலகால்..!

***

மெட்ரோ கவிதைகள் - 44

*
மரணத்தின்
ஒரு பிடி நிழலை ..

நாசியின்
இரு துளை கீழ்
பூசி வைத்திருக்கிறது ..

நகரம்..!

****

செவ்வாய், மார்ச் 30, 2010

உன் விரலிடை நழுவும் நூலிழை..

*

உன்
விரலிடை நழுவும்
கோல மாவின் நூலிழையை..

வியந்து போய்..
வேடிக்கைப் பார்க்கிறது
ஏற்கனவே..

நீயிட்ட புள்ளிகள்..!

****

மரணத்தின் குரல்வளை..

*

மரணமொன்றின்
குரல்வளையை
உள்ளிருந்து இழுக்கிறது..
ஒரு
இறுதி மூச்சுக் காற்று..!

****

உள்ளடங்கி அமிழும் முதல் வளையம்..

*

மௌனப் பூக்களின்
மொக்கு
வெடிப்பொலியில்

நறுமணம் நாறும்
இருள் வெளியின்

முதல் வளையமென
விரிந்தகலும்..

கண்ணகப்படா ரகசியங்களும்
உள்ளடங்கி அமிழும்
காட்சிகளும்..!

****

நாள நெளிவுகள்..

*

சப்தங்களேறிப் புடைக்கிறது
இசைக் கொப்புளங்கள்..

நரம்புகளின்
நாள நெளிவுகளில்
ஜதியிடுகிறது..

குருதிக் குமிழ்..!

***

நுண்ணியப் புள்ளியென பசலை..

*

மதிலிடைப் பரவும்
பாசிக் கிளைகளில்

நுண்ணியப் புள்ளியென
பசலையாகிறது

உனையெண்ணி
ஒரு
உவமை..!

***

செதில்கள்..

*

மனச் சிடுக்குகளைச்
சீவி சீவி
செதில்களாய்
திருகி வைத்திருக்கிறது
மௌனம்..!

***

இன்னும் கரையாத சர்க்கரைச் சதுப்பு..

*

மேஜையின்
வெறுமையான சதுரத்தில்
நீர்த்துளிகளின்
வெவ்வேறு வடிவங்களில்..

ஒற்றைக் கூரை மின்விசிறியின்
பல இறக்கைகளோடு
சுழல்கிற
என் காத்திருப்பு..

உலர்ந்தபடி துண்டிக்கிறது
மௌனத்தையும்..
அதன் நீர்மையின்
வளைவுகளையும்..

உன் வருகைக்கான
நிமிடங்களை
அலைப்பேசி மூலம் முன்னதாக
அனுப்பிவிட்டாய்..

நிமிடங்கள் மட்டும் வந்துவிட்டன..

தேனீர் கோப்பையின் விளிம்பில்..
இன்னும் கரையாத
சர்க்கரைச் சதுப்பில்..
கால் சிக்கி இனிப்போடு நகர
மறுக்கிறது ஒரு சிறு எறும்பு..

தொலைவுகளைத் துளைக்கும்
என் பார்வையின்..
பனிப் படர்வில்..
கலங்கி நெளியும் பிம்ப நிழலென
யார் யாரோ..
கடக்கிறார்கள்..

சாம்பல் நிறக் கம்பளம் போல்
விரிந்திருக்கும் உன் நிமிடங்களை..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மார்ச் - 29 - 2010 ]

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2707

தெருவோரக் குறிப்புகள்..

*
மரணத்தை வரவேற்பதற்காக
காத்து நிற்கிறோம்..
நானும் நண்பனும்..
மவுன்ட் ரோடின்
சிக்னலை மீறும் அவசர பைக்கோ

செல்போனில் பேசியபடியே
அனாயாசமாய்
தண்டவாளம் கடக்கும் பெண்ணோ

ஒட்டிய வயிற்றோடு
ஒண்டுவதற்கு நிழல் கூட தர மறுக்கும்
நகரத்தில்
வெய்யிலில் காயும் தாடிக் கிழவனோ..

உயரமான கண்ணாடிக் கட்டிடத்தின்
வெளிப்புறத்தில்
கயிற்றில் தொங்கியபடி
கண்ணாடி ஜன்னல்களை சுத்தம் செய்யும்
அழுக்கு மனிதனோ..

ஜி.ஹெச். மருத்துவமனையின்
கான்சர் பிரிவில்
தலைப் புற்று நோயோடு
நாள் குறித்துக் கொள்வதற்கு
அம்மாவின் இடுப்பில் வரிசையில் காத்திருக்கும்
மூன்று வயது குழந்தையோ..

யாருடைய மரணத்தையோ
வரவேற்பதற்கு
காத்து நிற்கிறோம்..
ஆம்புலன்ஸ் கதவில் சாய்ந்துகொண்டு
டீ அருந்தியபடி
நானும் நண்பனும்..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் - ( மார்ச் - 25 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5004&Itemid=139
குரல்களின் பகல்..

*
குரல்களின் மகத்துவங்களை
அடுக்கி முடித்து
கலைக்க முற்பட்டதொரு பகல்..

நிச்சலனமற்று
பரவும் கண்ணாடியகலத்துக்கான
வெயிலின் மஞ்சள் நிறத்தை
சிறைப்பிடித்து விட முயன்ற
என் மேஜையின்
கூர் முனையில்..
மௌனத் திரவமென
தளும்புகின்ற நிழலும் நானும்
மன்றாடத் தொடங்குகிறோம்

பேச்சு வார்த்தைகளில்
நம்பிக்கையிழந்த பகல்
வெய்யிலைத் துணைக்கழைக்கிறது..

குரல்களின் மகத்துவங்கள்
உணர்த்தியத் தருணங்கள்
முக்கியமானவையென்ற
வாதம்
ஓசையின்றி நொறுங்கி விழுகிறது..

குரல்கள் தண்டித்திருக்கின்றன
குரல்கள் உத்தரவிட்டிருக்கின்றன
குரல்கள் கெஞ்சியிருக்கின்றன
குரல்கள் முனகியிருக்கின்றன
குரல்கள் வசையாடியிருக்கின்றன..

பாடுவதற்கான கற்பிதங்களோடு
மௌனங்களை
குரல்கள் கற்பழித்திருக்கின்றன
குரல்கள் பிடிவாதம் பிடித்திருக்கின்றான்
குரல்கள் அழுதிருக்கின்றன
குரல்கள் அஞ்சியிருக்கின்றன
குரல்கள் புன்னகைத்துமிருக்கின்றன..

குரல்களுக்கான மகத்துவங்களை
அடுக்கி முடித்து
இறுதியில்
பகலொன்று கலைத்தே விட்டது..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( மார்ச் - 20 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=4915&Itemid=139

நடைபாதைக் கல்லறைகளில்..உறையும் ரத்தத் துளிகள்..

*
நகரம் முழுக்க
மட்கிப் பெருகும் இந்தப் பாவிகளை
இரட்சிக்கும்படி கையேந்துகின்றோம்

ஏதேன் தோட்டத்தின்
சாபக் குழியிலிருந்து
மீண்டெழ கை கொடுங்கள்..

கரை படிந்த
வெண்ணிற அங்கிகளை
அடித்துத் துவைக்க
அவைகளை
கழுதைகளின் மீதேற்றி
கூவக் கரைக்கு அனுப்பிவிட்டோம்

எங்கள்
நடைபாதைக் கல்லறைகளில்
உறங்கும் அழுக்கு மனிதர்களின்
ரத்தத் துளிகளை
காணிக்கையாக்குகிறோம்

நாறி அழுகிவிடும்
பிண்டங்களை
உமக்காக
விட்டுவைத்திருக்கிறோம்

இதயத் துடிப்பு
இன்னும் நிற்கவில்லை..

எல்லாம் இருக்கட்டும் -
சீக்கிரமாய்
பாவங்களை மன்னிக்க
வலைக் கூண்டின்
மறுபக்கம் வந்தமருங்கள்..

எங்களுக்கு நேரமாகிறது..
மேற்கொண்டு
பாவங்கள் செய்ய
புறப்பட்டாக வேண்டும்..

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( மார்ச் - 17 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=4867&Itemid=139

நெடுக நின்று எரியத் தொடங்கும்..ஆரஞ்சு நிற மின்விளக்கு..

*
காத்திருக்கும்படி வந்த குறுஞ்செய்தி
கூட்டத்திலிருந்து தனிமைப் படுத்துகிறது

நேற்றைய சந்திப்பின்
இறுதி நிமிடங்களை
மனதுக்குள் வேகமாக
புரட்டிப் பார்க்க நிர்ப்பந்தித்து
பின்
அணைகிறது

எப்படியிருந்தாலென்ன?

இன்றுமொரு உரையாடலை
சாம்பல் கரைத்து
நிழலில் ஊற்ற
நெடுக நின்று இப்போதே எரியத் தொடங்குகிறது
ஆரஞ்சு நிற மின்விளக்கு

கூட்டத்திலிருந்து தனிமைப்படுத்தும்
குறுஞ்செய்திகள்
காத்திருக்கும்படியான உத்தரவுகளைத் தான்
எப்போதும் அனுப்பி வைக்கின்றன..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் - ( மார்ச் - 1 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=4419&Itemid=139

இளம்பச்சை பூக்களும்..மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகளும்..!

*
எதிர்வீட்டுச் சிறுமியின்
வெளிர்நீல பிராக்கில்

இளம்பச்சை பூக்களும்
மஞ்சள் நிற வண்ணத்துப் பூச்சிகளும்
ஈரம் சொட்ட காய்கின்றன
மாடிக் கொடியில்

ஸ்கூலிலிருந்து
வீடு திரும்பியதும்
டியூஷன் கிளம்பிவிடுவார்கள்

சிறுமியும்
இளம்பச்சை பூக்களும்
கூடவே
மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகளும்!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் - ( மார்ச் - 1 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=4418&Itemid=139

உரையாடலுக்குப் பிறகான மிச்சங்கள்..

*

என் அண்மையின் கதகதப்பை
நீ உன் கைப்பையில் வைத்திருக்கிறாய்

ஒரு நாப்கின்னைப் போல்
அதை நீ பயன்படுத்துவதை
என் சிநேகிதி ஒரு முறை சொன்னாள்

ஆனால்
உதடுகளை மட்டுமே ஒற்றி எடுப்பாயாம்

எந்தவொரு உரையாடலுக்குப் பிறகும்
அதன் மிச்சங்களைத்
துடைத்தெடுக்க
அது உனக்கு உதவி புரிகிறது

என் அண்மையின் கதகதப்பை
முனைகள் மடங்காமல் இருக்க
அதிக சிரமங்களை நீ மேற்கொள்ளவேண்டியதில்லை

அவை
எலாஸ்டிக் தன்மையாவன

கிழிபடும் இழைகளைக் கொண்டு
அவைகளை என் இதயம் பின்னுவதில்லை

விம்மி அடங்கும் மனக் கொந்தளிப்புகளை
குமிழ்களிட்டு உடைப்பதால்
வெப்ப இழைகளாய் நழுவுபவை அவை

நீ தூங்கிவிடும் இரவுகளில்
உன் கைப்பைக்குள்
உன் உரையாடலின் அத்தனை
மிச்சங்களையும்
மறுவாசிப்பு செய்தபடி தன் ஒவ்வொரு பகலின்
முதல் எழுத்தையும்
நினைவில் வைத்துக் கொள்ளும்
வல்லமை படைத்தது
என் அண்மையின் கதகதப்பு..

அதை ஒரு நாப்கின்னைப் போல்
பயன்படுத்தும் ரகசியத்தை
ஏன்
என் சிநேகிதியிடம் சொன்னாய்?

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை .காம் ) மார்ச் - 2010

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2686

கைவிடப்பட்ட கனவுகள்

*

கைவிடப்பட்ட கனவுகளை
வாகனங்கள் விரையும் சாலையில்

இறக்கிவிடுவது நல்லது


அவை

ஒரு பஸ்ஸிலோ

ஒரு வேனிலோ

ஒரு காரின் சக்கரங்களுக்குக் கீழேயோ

அரைபட்டு சாகட்டும்


படுக்கையிலிருந்து எழும்போதே

தோளைப்பற்றித் தொங்குகின்றன

இறங்க மறுத்து

அடம்பிடிக்கின்றன


எனது சேமிப்புக் கிடங்கின்

இரண்டு பீரோக்களும்

நிரம்பி வழிவதை

அவை ஒப்புக்கொள்வதில்லை


கைவிடப்படவேண்டிய கனவுகள் அவை - என்னும்

உண்மை சமாதானங்கள்

அவைகளுக்குப் போதுமானதாயில்லை


அன்றாட அலுவல்களின்

அனைத்துக் குறிப்புகளுக்குள்ளும்

அத்துமீறி எட்டிப்பார்க்கும்

அநாகரீகங்களை அவை கடைப்பிடிக்கின்றன


யாரிடம் பகிர்ந்து ஒப்படைக்க நினைத்தாலும்

மீண்டும் நம்மோடே கிளம்ப எத்தனிக்கின்றன


சொந்தம் கொண்டாடுவதும்

உரிமை மீறுவதும்

நிமிடந்தோறும் உறுத்துவதும்

அவை பின்பற்றும் கொள்கைகள்


கைவிடப்படும் கனவுகளை

வாகனங்கள் விரையும் சாலைகளில்

இறக்கிவிடுவது நல்லது


அவை

ஒரு பஸ்ஸிலோ

ஒரு வேனிலோ

ஒரு காரின் சக்கரங்களுக்குக் கீழேயோ

அரைபட்டு சாகட்டும்


மரணக் கனவுகளாய்

அவை வாகன ஓட்டிகளின் தூக்கத்துக்குள்

நுழைந்து விடும்

சாமர்த்தியம் கொண்டவை.

****


நன்றி : ( உயிரோசை / உயிர்மை .காம் ) மார்ச் - 2010

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2660


மனிதக் காட்சி சாலையின்..பிரம்மாண்ட கதவுகளைக் கொண்டுள்ள இரவுகள்..

*
மனிதக்காட்சி சாலையின்
பிரம்மாண்ட கதவுகளைத்
திறந்துவிடுகிறது சூரியன்..

சோம்பல் முறித்து விழிக்கின்றன - அவை..
அதிகாரப் பற்களை சுத்தம் செய்து
சொற்களைக் கூர் தீட்டுகின்றன..

அவை -
நாகரீகங்களை உடுத்தியபடி
கலாச்சாரங்களை ஜெபிக்கின்றன..
பண்பாட்டைப் பிரார்த்திக்கின்றன..

சொல்லப்பட வேண்டிய பொய்களைக்
கட்டளையிடுகின்றன..
உழைப்பைச் சுரண்டுவதற்கான
நகங்களைச் சரிபார்த்துக் கொள்கின்றன..

அவை -
பதப்படுத்தப்பட்ட
கூலிகளின் வியர்வைத் திரவங்களைத் தொட்டு
தம் காலணிகளைப் பளபளக்கச் செய்கின்றன..

லாபங்களை ஈட்டுவதற்கான
சிறிய முதலீடுகளை
பர்ஸ்களில் திணித்துக் கொள்கின்றன..

அவை -
வஞ்சம்..
சூழ்ச்சி..
தந்திரம் - துரோகம் - ராஜதந்திரம்..
என
பன்முக அனுபவ முதிர்ச்சிகளோடு..

தெருவில் -
பஸ்ஸில் -
ரயிலில் -
அரசு அலுவலகங்களில் -
கண்ணாடிக் கட்டிடங்களில் -
தியட்டர்களில் -
கடற்கரைகளில் -
புத்தகச் சந்தைகளில் -

இரண்டறக் கலந்து விடுகின்றன..
மீண்டும்
இரவின் பிரம்மாண்ட கதவுகள்
அடைபடும் வரை
ஆட்டம் போடுகின்றன..!

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை .காம் ) மார்ச் -2010

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2611

செந்நிற ஆப்பிள்..!

*

மரணத்தின் விலா எலும்பில்
உறங்கி விடுகிறாள் ஏவாள்..

ஆதாமின் தலை சிரைத்து
உறவுப் பானையில்
மூன்று பொத்தலிட்டு..

தலைமுழுகி..

வாயிலடச் சொல்லுகிறார்கள்
கொஞ்சம் அரிசியை..

வெந்து வெடிக்கிறது
பாம்பு பரிந்துரைத்த..
செந்நிற ஆப்பிள்..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை .காம் ) மார்ச் - 2010

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2582