செவ்வாய், மார்ச் 30, 2010

குரல்களின் பகல்..

*
குரல்களின் மகத்துவங்களை
அடுக்கி முடித்து
கலைக்க முற்பட்டதொரு பகல்..

நிச்சலனமற்று
பரவும் கண்ணாடியகலத்துக்கான
வெயிலின் மஞ்சள் நிறத்தை
சிறைப்பிடித்து விட முயன்ற
என் மேஜையின்
கூர் முனையில்..
மௌனத் திரவமென
தளும்புகின்ற நிழலும் நானும்
மன்றாடத் தொடங்குகிறோம்

பேச்சு வார்த்தைகளில்
நம்பிக்கையிழந்த பகல்
வெய்யிலைத் துணைக்கழைக்கிறது..

குரல்களின் மகத்துவங்கள்
உணர்த்தியத் தருணங்கள்
முக்கியமானவையென்ற
வாதம்
ஓசையின்றி நொறுங்கி விழுகிறது..

குரல்கள் தண்டித்திருக்கின்றன
குரல்கள் உத்தரவிட்டிருக்கின்றன
குரல்கள் கெஞ்சியிருக்கின்றன
குரல்கள் முனகியிருக்கின்றன
குரல்கள் வசையாடியிருக்கின்றன..

பாடுவதற்கான கற்பிதங்களோடு
மௌனங்களை
குரல்கள் கற்பழித்திருக்கின்றன
குரல்கள் பிடிவாதம் பிடித்திருக்கின்றான்
குரல்கள் அழுதிருக்கின்றன
குரல்கள் அஞ்சியிருக்கின்றன
குரல்கள் புன்னகைத்துமிருக்கின்றன..

குரல்களுக்கான மகத்துவங்களை
அடுக்கி முடித்து
இறுதியில்
பகலொன்று கலைத்தே விட்டது..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( மார்ச் - 20 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=4915&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக