ஞாயிறு, ஜனவரி 31, 2010

மனிதப் புறக்கணிப்பைப் பற்றி..ஒரு அவச் சொல்..

*

ஒரு முறை
சொன்னதைத் தான்
மறுமுறை..முன்மொழிந்து சென்றான்...அவன்..

எப்போதும்..
அவனுக்கென்று ஒரு கோட்பாடு இருந்தது..
அதை உடைந்து விடாமல்
பார்த்துக் கொண்டான்..

மனிதப் புறக்கணிப்பைப் பற்றி..
அவச் சொல் வைத்திருந்தான்.

வசை வார்த்தைகளும்..
புனைந்தபடி இருந்தான்..

அவனுடைய நீண்ட இரவுகள்..
களம் அமைப்பதை..
தினமும் தாக்கல் செய்தான்..

முடிவுகளை யாரோ..
தன்னிடமிருந்து பறித்துவிட்டதாக
குறைப்பட்டுக் கொண்டான் - ஒரு நாள்.

பாதைகள் முற்றிலும்
அடைப்படப் போவதாகவும்..
பத்திரமாய்
தங்குவதற்கு...
என் இதயத்தில் ஒரு இடம் வேண்டும்
எனவும்..கேட்டுக் கொண்டான்..
மிகுந்த தயக்கங்களுக்கு பிறகு..

ஒரு முறை
சொன்னதைத் தான்
மறுமுறை..
முன்மொழிந்து
செல்கிறான்...அவன்..!

****

மரணத்தொடுகையின்..நீள் விரல்..

*

மரணத்தொடுகையின்
நீள் விரலில்..

நகமென
வளைந்துத் தொங்குகிறது..

வாழ்வதாக
நாம்
சொல்லித் திரியும் வாழ்க்கை..!

****

கதையாடிய பனங்காடு..

*

மை இடுதல் குறித்து..
கதையாடினோம்
பனங்காட்டில்..

சலசலத்துச் சிரித்தன..
செம்பழுப்புப் பனையோலைகள்..

காய்ந்த புற்களின்..
இளமஞ்சள் படுகையில்..
வெயிலும் நிழலும்..
கட்டிப்பிடித்து உருளுகின்றன..

குமித்த சிறு மணல் மேட்டில்..
வாகாய் உட்கார்ந்தபடி..
வாய் பிளந்து கதைக் கேட்டுக் கொண்டிருந்த..

அமுதவல்லிக்கு..
மை இடுதல் குறித்த..
கண் பாவனை...
அகன்று கொண்டே போயிற்று..

மறுநாள்..
கண்ணுக்கு மையிட்டு பள்ளிக்கூடம் போவதாக
கையில்...சத்தியம் அடித்தாள்..

மீண்டுமொருமுறை
கதை சொல்லச் சொல்லி...
வாய் பிளந்து கேட்டாள்..

சலசலத்துச் சிரித்தன..
செம்பழுப்பு பனையோலைகள்..!

****

தண்ணீரின் ஈரம்..

*

பரந்துபட்ட மனக்குகை..
கரடுத் தட்டிய நீள் பாதை..
சுனையொன்று உடைந்து விட்டது..

அள்ளிப் பருக குனிந்து நீட்டிய
உள்ளங்கையில்..
மீன்கள் கூட்டம்..

மென் சிறகு அசைத்து..
ஓயாத வாயளந்து..
எப்போதும் சொல்லிக் குடிக்கும்..

தண்ணீரின்..ஈரத்தை..

பத்திரமாய் ஆவணப்படுத்தும்..
இரவுக்காகக் காத்திருக்கிறேன்..

****

ஆட்ட விதிகளை மீறும் வித்தை..

*

கருப்பும் வெள்ளையுமென..
சதுரங்கப் படிமங்களில்..
தருணங்கள் நகரும்..

ஆட்ட விதிகளை..
மீறும் வித்தையை..

வீழ்த்தப் படும்போது...
கற்றுக் கொள் - என்கிறது வாழ்க்கை..!

****

தொலைவில் நிறுத்தும் உடல் மொழிகள்..

*

அங்கெல்லாம்..இருந்தது...
உனதல்ல..
முடிச்சுகளிட்டுக் கொள்ளும்..
ஏளனப் புன்னகைகளும்..

அசட்டுப் பார்வையில்..
தொலைவில் நிறுத்தும்..
உடல் மொழிகளும்..

மாய உலகின்
மர்மக் குகையொன்றில்..
குறுக்கிடும்...மிருகத்தின்..
பயங்கரக் கனவென்றும்..

ஒதுக்கிவிட முடியாத..
சம்பவக் கோர்வைகள்..
அங்கெல்லாம் இருந்தது..

ஆனால்..

அவை...உனதல்ல..!

****

மயிரிழைகள்..

*

'மயிரிழை ' - பற்றி
ஒரு
மாலை நேர விவாதத்தில்..

ஐந்தாறு 'டீ' கிளாஸ்கள்
காலியாயின..

ஏழெட்டு சிகரட்டுத்
தலை நசுங்கின..

'ஹாவ்..!' - என்பதாக
கொட்டாவியொன்றை
விநியோகித்த..
நண்பன் மீது
கோபம் கொண்டு..

ஒரு 'டீ' கிளாஸ் வீசப்பட்டது..

அவனோ..
கண்ணிமைக்கும் நேரத்தில்..
தப்பினான்..

மயிரிழை..!

*****

அம்பாரிகளை முடையும் விரல்கள்..!

*

இலக்குகளைத்
துளையிட்டுப் பாய்கின்றன
தீர்மானங்கள்..

கூர் தீட்டுதல் குறித்து
கவனமிழக்கிறது காலம்..

அம்பாரிகளை முடையும்
விரல்களில்..
நேயங்களைக் கிழிக்கின்றன நகங்கள்..

போர்க்களங்கள்..
புழுதிகளோடு காத்திருக்கின்றன..
எல்லா யுகங்களிலும்..!

****

நெற்றி வரிகளில்..வாசிக்கப் பழகு..

*

முறுக்கிவிடப்பட்ட மீசைக்கு
பின்னிருந்து
எட்டிப் பார்க்கும் முகஸ்துதி..

முடுக்கி விடும் புன்னகையை
இயக்குவது..
பெரும்பாலும்..
'கீழ்ப் பார்வை ' தான்.

விடைக்கும் மூக்கின் ரகசியங்களை
நெற்றி வரிகளில்..
வாசிக்கப் பழகு..

ஒரு வஞ்சமோ
துரோகமோ
சட்டென வருவதில்லை.

எதிரிலோ..
அருகிலோ..
எப்போதும் நம்முடன்
நடந்தபடியே..

****

****

அடிக்கடி..!

*

சிறுமையின்
உலோகப் பாத்திரம்
வெப்பம் கூட்டுகிறது..

அடிக்கடி
மனம் குமைவதால்..!

***

நீர்த்துளியின் குரல்வளை..!

*

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்
குழாயின்
குரல்வளை இறுக்கித்
திருகப்படுவதில்..
உடன்பாடில்லை..

கொஞ்சம்
நீர்த்துளிகள்
நழுவி விழுந்தால் தான் என்ன..?

****

படர்கிறது..

*

மரணத்தின்
மரத் தொட்டியில்
ஊறுவதும்
உலர்வதுமாய்
படர்கிறது..
வாழ்வு..!

***

முற்றத்துப் புழுதிக் கிளப்பும்..குடை ராட்டினமொன்று..!

*

அடர் பச்சையில்
தங்க நிறச் சரிகை நெய்த
சிறு குடை ராட்டினமொன்று
அழகாய் சுழன்றபடி..

முற்றத்துப் புழுதியைக் கிளப்பியது..

கால்களிரண்டு ஓய்ந்த நொடியில்..
புழுதி அடங்கும் முன்..
துள்ளிக் குதித்து...
வாசலேறி வீட்டுக்குள் ஓடி மறைந்தது..

'அம்மாவின் ' - அதட்டல் குரலுக்கு..!

****

தொட்டு விலகும் அர்த்தம்..

*

அடித்து விலகும்
நீர் விளிம்புகளின் வளைவுகளைத்
தொட்டு விலகுகிறது..
ஒரு எறும்பு..

வாழ்தலுக்கான அர்த்தத்தை
வீடு திரும்புதல் மட்டுமே
ஊர்ஜிதப்படுத்துகிறது
எப்போதும்..!

****

வழிப்போக்கனும்..மற்றுமொருவனும்..

*

காரைப் பெயர்ந்த
உள்ளறைச் சுவர் போல
குடலில் தங்கிவிடுகிறது..பட்டினி..

நியாயத் தர்க்க கரைசல்களை
விழுங்குவதால்..
அதொன்றும் ஜீரனமாகிவிடுவதில்லை..

தத்துவங்களை
யதார்த்த நுனியில் செருகி
தூண்டிலிடும்படி
ஒரு யோசனைச் சொல்லிப் போகிறான்
வழிப்போக்கன்..

நகர வீதியெங்கும்
தேங்கிக் கிடக்கும்
அரசியல் குட்டைகளுக்கு
பலத்த காவல் இடப்பட்டிருக்கிறது..

தேடியலைகிறேன்
ஒரு ஓடையை..

நெடுஞ்சாலையில்
நீர் நிலையொன்றைப் பார்த்ததாக
கையசைத்து விலகினான்
மற்றுமொருவன்..

சிவப்பு விளக்கொழுக
வெண்மை வெளிறி..
வேகமாய் உருளும்..
மகாராஜாக்களின் தேர் சக்கரங்களுக்குக் கீழே
சிதறிக் கொண்டிருக்கிறது..
கானல்..

காரைப் பெயர்ந்த உள்ளறைச் சுவர் போல
குடலில் நிரந்தரமாய்த் தங்கி விடுகிறது..
பட்டினி..!

****

சோன் பப்டி விற்பவனின் மணிச் சத்தம்..

*

தெருவில்...
தள்ளுவண்டியில்..
சோன் பப்டி விற்பவனின்

மணிச் சத்தம்..

வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருக்கும்
குழந்தைகளின்..
கணக்குகளைக் குழப்புகின்றன..

மொழிவேண்டா ஓசையில்..
நாக்கில் இனிப்புக் குழறுகிறது

தயக்கங்கள்..
புள்ளிகளென..
கால் பெருவிரல் நகங்களில்
உருப்பெறுகின்றன பென்சில் முனை
நிமிண்டலில்..
மணிச்சத்தம்..மெல்ல..மெல்ல..
சன்னமாய்த் தேய்வதன்
பதற்றத்தில்..
அண்ணாந்து நோக்கும் பார்வையில்..
தென்படும் 'அம்மாக்களின்'..
காதுகள்..
தொலைந்து போயிருந்தன..!

****

மோட்டார் பொருத்தப்படாத கால்கள்..

*

நகரத்து மரணங்களை
சுடுகாட்டை நோக்கி சுமந்து போகின்றன
பெரும்பாலும் எட்டுக் கால்கள்..

அவை -

நான்கு மனிதர்களின் கால்களாகவோ..
இரண்டு மாடுகளின் கால்களாகவோ..
எப்போதாவது..
மோட்டார் பொருத்தத்தப்பட்ட
நான்கு டயர்களாகவோ..

இருப்பதை..
மீற முடிவதில்லை
செயலாற்ற இரண்டு கால்களால்..!

****

எச்சில் கண்கள்..

*

இரண்டாம் பந்திக்கான
அவசரங்களோடு
வெளியேறுகின்றன எச்சில் இலைகள்..

மிச்ச மீதிகளின் ருசிக்காக
நாவில் எச்சில் ஊரக் காத்திருக்கின்றன..
உறுத்தும் கண்களோடு..
நாய்கள்..!

****

மழைத்துளி வைத்திருக்கிறேன்..

*

யாராவது
ஒரு மேகத்தை
அனுப்புங்கள்..

கை நிறைய
மழைத்துளி வைத்திருக்கிறேன்..!

***

குரல்வளை நெருக்கும் சங்கிலி..

*

எனக்குரிய
பக்குவங்களை
சிபாரிசு கடிதமென
எடுத்து நீட்ட நேர்ந்த
பைத்தியக்கார விடுதி என்னும் உலகத்தில்..
அது..
நிராகரிக்கப்பட்டதல்லாமல்
நல்லொழுக்கம் எனும் சங்கிலியை
என்
குரல்வளையை இறுக்கிப் பினைக்கும்படி
உத்தரவிடப்படுகிறது..

****

ஒற்றை இலை..

*

மௌனத்தின் ஆணி வேரில்
சிக்கிக் கொள்கிறது..
மரணத்தின்
ஒற்றை இலை..!

***

கல் தெப்பம்..

*

கல் தெப்பம் - என்றான்
ஆம்
என்பதாக
மூழ்கத் தொடங்கியது..
காதல்..!

***

நகக் கண்ணில்..முதல் கவிதை..!

*

குழந்தையொன்றின்
குட்டி
நகக் கண்ணில்..
வெண்ணிறக் கோடிழுத்து
முதல் கவிதையைத்
தொடங்கி வைக்கும்..
ஆகாயம் பறந்து கடக்கும்
கொக்கு..!

****

தப்புத் தாளங்கள்..!

*

மரணத்தைக் கொண்டாடத்
தெரிந்த
ரோஜா இதழ்கள்..

தப்பு மேளத்தின்..
தாளத்திற்கேற்ப
துள்ளுகின்றன..

சுமக்கப்படும்
பிணத்தின் பாதங்களுக்கு அடியில்..!

***

நழுவும் வாக்கியங்களின் முற்றுப்புள்ளிகள்..

*

முனை மழுங்கிய
பேனா ஒன்று
முற்றுப்புள்ளியில்..

முனகிக் கொண்டே
நழுவுகிறது..
அடுத்த வாக்கியம் நோக்கி..!

***

சூரிய நுனித் துளி..!

*

நீர்த்துளி
பெற்றுக்கொண்ட
இலை நுனிகள்..

சூரியனை
ஏந்துகின்றன..
கொஞ்ச நேரமேனும்..!

****

பயணச் சுவடுகள்..!

*

தினமும்
வாசலில்..
என்
கால்களுக்காக
காத்திருக்கிறது..
ஜோடி செருப்பு..!

****

நெருக்கித் தொடுத்தல்..

*

கெட்டி மேளச் சத்தத்தில்..
பரபரப்பாய் இட்ட
இரண்டு முடிச்சுகளோடு..

விரல்களின் நடுக்கத்தை..

உன்
பின்னங்கழுத்து ஜடை நிழல்..
மாலையில் நெருக்கித் தொடுத்திருந்த
ரோஜா மலர்களின்
வாசத்துக்குள்..
கவ்வி இழுத்து சிலிர்த்துக் கொண்டது...

****

காலடியில் கொட்டிய இரவு..

*

மௌனமொன்று
அகால மரணமடைந்து விட்டதாக..
என் வீட்டுக்கு
எதிர் சுவற்றில்..

எவனோ
ஒரு கருப்பு போஸ்டர்
ஓட்டிச் சென்றான்..

முன்பின்
முகம் தெரியாத
அந்த மௌனத்தின் அடையாளத்தை
என் தனிமைப் பால்கனியில்..

சிகரட் கரைய..
அவஸ்தைப்பட்ட சாம்பல் நிமிடங்கள்
உதிர்ந்தபடி சுமந்து வந்து..

இரவை என் காலடியில் கொட்டியது..

அது இறக்கும்போது
முகம் வெளிறியிருந்ததாக..
கனவில் குறிப்புச் சொல்லிப் போனான்..

அந்தப் போஸ்டர் ஒட்டிய
கருப்பு மனிதன்..!

****

வெள்ளி, ஜனவரி 29, 2010

நிலவின் துணைக் கொண்டு..!

*

ஏதோ எரிச்சலில்
வேண்டா வெறுப்பாய்
தண்ணீர் ஊற்றியதில்..

தோட்டத்து ஜாதி மல்லிச் செடி
நள்ளிரவு வரை பூக்கவேயில்லை..

நிலவின் துணைக்கொண்டு..
'சாரி ' - என்றேன் கண் கசிந்து..

விடியலில்..
வெண் இதழ் விரியாமல் கை கூப்பி..
சின்ன சின்னதாய் முளைத்திருந்தன
நிறைய சமாதானங்கள்..!

****

இரவு நீளுதலின் மிரட்சி..

*

பூட்டப்பட்ட வீடுகளின்
தாழ்களில்..
தொங்கிக் கொண்டிருக்கும்
பூட்டுக்கள்..

ஒவ்வொரு பகல் பொழுதின்
கடைசி வெளிச்சத்தை..
நம்பிக்கையோடும்..

ஒவ்வொரு இரவு நீளுதலை
மிரட்சியோடும் எதிர்கொள்கின்றன..

வீட்டுக்குள்
எப்போது தஞ்சமடைவோம்
என்னும் குழந்தையின் தவிப்பைப் போல..

பூட்டப்பட்டிருக்கும் வீடுகளின்
தாழ்களில்..
தொங்குகின்றன
பூட்டுக்கள்..!

****

கண்ணீர்த் துளியின்..உப்புக் கரிப்பில்..

*

அழுவதற்கான
ஒரு
தொடக்கத்தைச் சுழித்துக் கொண்ட
உதடுகள்..

மிதந்து உருளும்
கண்ணீர்த் துளியின்
உப்புக் கரிப்பில்..

ஒரு
புன்னகைத் துருப்பிடிப்பதை
ஒத்துக் கொள்கின்றன..!

****

பால்யக் கால..கிராமத்துத் தெருப்புழுதி..

*

ஒவ்வொரு முறையும்..
என்னைக் கடக்கும்போதெல்லாம்
சட்டென
ஓடி விடுகிறான்
அந்த சிறுவன்..

இந்தப் புதிர் விளையாட்டு..
அவனே கண்டுபிடித்தது - என்பதாக

தெரு முனையில் நின்று சிரிப்பான்..
பின்..
ஓடி ஒளிந்து மறைந்து போவான்..!

என்
பால்யக் கால
கிராமத்துத் தெருப்புழுதியைக்
குதிக்கால் வெடிப்புகளில் தேட..

அனுமதி மறுக்கின்றன..

வேலை நிமித்தம்..
கருப்பு நிறத்தில்..
எப்போதும் பளபளக்கும்..
'லெதர் ஷூக்கள்..'

****

வியாழன், ஜனவரி 28, 2010

நேற்றிரவு பெய்த மழைத்துளி..

*

நேற்றிரவு பெய்த மழைத்துளிகளில்
முகம் கழுவிக் கொள்கிறது..
விடியலில் விழிக்கும்
ஒரு
முதல் பகல்..!

****

தனித்த அகாலமும்..வேறுபட்ட சமன்பாடும்

*

மழை ஓய்ந்த
இரவு நேரச் சாலையொன்றின்
ஊர் ஒதுக்கிய
பஸ் நிறுத்தத்தில் வந்து நின்றது..

கருப்பு நிற போர்டில்..
எண்கள் குளிர..
ஒரு கடைசிப் பேருந்து..

நீட்டிய ஐநூறு ரூபாய்க்கு
சில்லறையில்லை யென்ற
ஒற்றை விசில் சத்தம்..

என்னைத் துப்பிச் சென்ற
தனித்த அகாலத்தில்..

விளங்கிக் கொள்ள முடியாததாய் இருந்தது..

மனிதன் = பணம்
அல்லது
பணம் = மனிதன்

என்ற சமன்பாடு..!

****

ஏதேதோ உரையாடுகிறாய்..

*

பார்வையால் -
என் 'இருப்பை' உறுதிப்படுத்திக்கொண்ட பின்..

ஏதேதோ உரையாடுகிறாய் சத்தமாய்..
எல்லாரிடமும்..

உன் 'இருப்பை' -
நான்
மௌனமாகவே பதிவு செய்ய நேருகிறது
ஒவ்வொரு முறையும்..

அது-
எந்த இடமாக இருந்தாலும்..
எவரோடு என்றாலும்..!

****

அஞ்சலி..

*

நாம்
நடந்து கடந்துவிட்ட
பாதையின் சுவடுகளை..

அவசரமாய்
குழிப் பறித்து..
மூடுகிறது காலத் தூசி..

அஞ்சலியென..
கவனமாய்த் தலை கவிழ்கின்றன..

பாதையோரப் புற்கள்..!

****

வானில் முகம் புதைத்த பரிசு..

*

கடுங் குளிரை
உதாசீனப்படுத்தி..

மாடியில்..பந்தலிட்டிருக்கும்
நிலவு அற்ற வானில்..
முகம் புதைத்து
தூங்கியதற்கு பரிசாய்..

விடியலொன்று..

பிளாஸ்டிக் குவளையில்
தளும்பிக் கொண்டிருக்கிறது..
சூரியனைச் சிந்தி விடாமல்..!

****

இளவெயில் பூசும் மஞ்சள்..

*

கோடைக்கால மாலையொன்றின்
நுனிக் காம்பில்..
ஊசலாடும்
அரசிலை மீது..

இளவெயில்
மெழுகி பூசும் மஞ்சளை..

செய்வதறியாது
வேடிக்கைப் பார்க்கிறது..
நரம்பில் ஊரும் எறும்பொன்று..!

****

கனன்று பருக்கும் அவசியங்கள்..

*

நிதானமாக அலசுவதற்கான
அவசியங்களைத்
திருட்டுக் கொடுத்து விடுகிறோம்..

கனன்று பருக்கும்..
மூர்க்கத்தின்..
கூர் முனையில்..!

****

காலம்..!

*

என்
மௌனத்தைத் துளையிட்டு
அதன்
சூன்யத்தை
உறிஞ்சுகிறது -
காலம்..!

****

உடைபடும் கிளிஞ்சல்களும்.. ஒரு மணல் மேடும்..

*

ஒவ்வொரு முறையும்
வீசித் தெறிக்கும் கடல் அலையின்
துளிகளை
முத்தமிட்டு வெட்கப்படுத்துகிறது
அந்தி சூரியன்..

காத்திருந்து
குவித்து வைத்த மணல் மேட்டில்
உடைந்த கிளிஞ்சல்களின்
உள்ளடுக்கில்
வரி வரியாய் விரிந்து கிடக்கிறது
வெளிர் வானம்..

' இன்னும் பத்து நிமிடத்தில் ' - வந்து விடுவதாக
பத்து நிமிடத்துக்கொருமுறை
வந்து கொண்டிருக்கும்
எஸ்.எம்.எஸ்ஸில் -

அந்தி சூரியனும்
வெளிர் வானும் தூர்ந்து போகின்றன..

கூடவே துணைக்கு
உடைப்பட்ட கிளிஞ்சல்களும்..

****

நன்றி : ' விகடன்.காம் ' ( ஜனவரி 28 - 2010 )

http://youthful.vikatan.com/youth/NYouth/elangopoem270110.asp

கிளையகற்றி.. கை விரித்து..

*

யுத்தம் முடிவுற்ற அறிவிப்பை..
யாரும் சொல்லாமலே..

கரும்புகை விலகிய வானில்..
சிறகசைத்துக் கடக்கிறது பறவையொன்று..

கானகத்தின் விளிம்பை நெருங்கும்
கந்தக நொடியில்..
மூர்ச்சை அயர்ந்து..சிறகு ஓய்வதை..

கிளையகற்றி..
கை விரித்து ஏந்துகின்றன..
பெயர் தெரியா மரங்கள்..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) ஜனவரி 25 - 2010

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2442

நிக்கோடின் வாசமும்..பச்சை ரிப்பனும்

*
டீ கடை வெப்பப் பாய்லர்
அருகே

ஒரு நெளிந்த 'தம்' மின்
உச்சித் தலை எரிய
நீ
வட்டமிட்டு அனுப்பிய வளையங்களில்

நிக்கோடின் வாசமோ
பிரவுன் நிறக் காரமோ

பயணமாகிறது..

சாலைக் கடக்கக் காத்து நிற்கும்
பள்ளிச் சிறுமியின்
பச்சை ரிப்பனிலும்
நாசித் துளையிலும்

****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் ( ஜனவரி 22 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=2418:2010-01-22-04-56-14&catid=2:poems&Itemid=88

வியாழன், ஜனவரி 21, 2010

மகரந்தங்களை உள்ளடக்கிய பூக்கள்..

*
வேறெங்கும்

சொல்லிவிட முடியாத துக்கமொன்றை
நட்சத்திரங்கள் கவர்ந்து கொண்டன
என் நள்ளிரவில்


குவளையில் தளும்பும் நீரின் அலையில்
நிழலென மிதவையிடுகிறது
கேவலின் கண்ணீர்த் துளியொன்று

ஈரத் துணிகளற்ற கொடிகளில்
என் மௌனங்கள் காய்கின்றன
நிலவின் கிரணத்தில் மூழ்கி

வெறுமைப் பாலை விரியும்
தரை விரிப்பில்
அவள் இல்லாத இடங்களில்
பூக்கள் பூத்திருக்கின்றன
மகரந்தங்களை உள்ளடக்கி

யாருமற்ற என் தனிமைக் கணங்கள்
வேகமாய் எதிர்த்திசையில்
ஓடி மறைகிறது
ஒற்றை எரிக்கல்லாய் வானைக் கிழித்து

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஜனவரி - 19 - 2010 )


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=2157&Itemid=139அதிரும் நாணின் அலைகள்..

*

முற்றிலும் ஒரு புறக்கணிப்பு
வேண்டியதாக இருந்தது -
இன்றைய பகல் வெப்பம் பரவியபோது..

அவன்
தன் பார்வையின் மேற்பரப்பில்..
கானல் திரவத்தை மிதக்க விட்டிருந்தான்..
அதைப் பருகிவிடும் நிர்ப்பந்தம்..
சாத்தியப்பட்டிருக்கிறது
எதனாலோ உருவாகிவிட்டிருந்த சூழலுக்கு..

இந்தக் கண்கள்
மனசுக்குள் அனுப்பும் செய்திகள் எதுவும்..
வேண்டாம்..
எனவே...கண்களும் வேண்டாம்..

வழித்தடங்களை..
பாதங்களுக்குப் பழக்கிய கருணைத் தருணங்களை..
இப்போது நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது..

வில்லிலிருந்து புறப்பட்டுவிட்ட
அம்புக்கு பின்பு..
அதிரும் நாணின் அலைகளை..
உணரத் தூண்டும்.. புறக்கணிப்பு ஒன்று..

முற்றிலும் வேண்டியதாக இருக்கிறது.. இப்போது..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) ஜனவரி - 18 - 2010

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2422

நினைவுகளின் பெருங்கசப்பு..!

*

என் பதற்ற நிமிடங்களின் இந்த இரவை
எனக்குப் பரிசளித்தன
முன் மாலையில் நீ உதிர்த்த சொற்கள்..

ஒரு கை கூப்புதல்..
ஒரு கை தழுவுதல்..
நமுட்டு புன்னகையொன்று..
இப்படியான சாயல் கொண்ட ஒரு செயல்
என்னிடமும் உண்டு..

மழை நீர் தேங்கிய சிறு குட்டையில்
மிதக்கின்றன..
உன் பகல்களும்..என் கேவல்களும்..

அதை ஊடுருவிக் கடக்கிறது
பேரிரைச்சலோடு ஒரு சந்தர்ப்பம்..

மீண்டும் பொழியும் சொற் மழையில்..
நனைகின்றன என் கேவல்களும்..உன் பகல்களும்..

உடன்பட்டுவிட முடியாத...பொழுதுகளை..
லாவகமாக சமைக்க முடிகிறது எப்போதும் உன்னால்..
அவசரப்பட்டு ருசித்து விடும் நாவில்..
ஊறி வழிகிறது...நினைவுகளின் பெருங்கசப்பு..

ஒரு கையசைப்பில்
போதுமென்று..
விலகிவிட முடியாத..செயலை..
இறுகப் பற்றிக் கொள்கிறது..
முன் மாலையில் நீ உதிர்த்த சொற்கள்..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) ஜனவரி - 2010

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2398

வியாழன், ஜனவரி 14, 2010

கணம் இடறிக் கவிழும் குவளைக் கண்ணீர்..

*

எவரோடும் சிநேகம் கொண்டுவிடும்
வேட்கையில்..
சிறகு அசைக்கும் மனத்தின் வானில்..
புதிர்களோடு
எரிந்து கடக்கின்றன..
வால் நட்சத்திரமென கற்களும்
கரும்பள்ளமென சம்பவங்களும்..

மினுக்குதலுக்கான ஒளிப்புள்ளியென
சிலாகித்த இரவுகளும் உண்டு..
நட்சத்திரங்களைப் பற்றிய படிமங்களாய்..

கணம் இடறிக் கவிழும்
குவளைக் கண்ணீரில்..
சிறகுகளின் நனைதலை
குறிப்பெடுக்கும் கிரகங்கள் எதுவும்
இருப்பதை..
சிறகு விரும்புவதில்லை..

ஒற்றை இறகின் பிசிர் நுனியில்..

இருள் தன் நுண்மையை
ரகசியப் பெட்டகமொன்றின்
உள்ளறையில் ஒளித்து..

நிதானமாய் சூரியனைப் பூசி
சாவியை உருக்கி விலகுகிறது..
ஆழமெனக் கற்பிதம் செய்யப்பட்ட
பிரபஞ்சத்தின் எல்லைக் கடந்து...

சொல்லிவிடமுடியாதக் கேவல்களும்..
உதடுகள் இறுகப் பற்றிக்கொண்ட சொற்களும்..
மனச் சிறகில்..
அடுக்கடுக்காய்..சேகரமாகி..
வலுக்கூட்டுகிறது..

மேலும் பறப்பதற்குரிய திசைகளை..
முன்னகர்த்தி... இருள் விரித்து...

*****

( உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் 'உரையாடல் கவிதைப் போட்டிக்காக' எழுதியது. )

சனி, ஜனவரி 02, 2010

வறண்ட ஆறு..!

*

குளம் வெட்டி
வளர்த்த மீனின்
செதில்களில்..

வறண்ட ஆற்றின்
சுடு மணல் துகள்கள்
செருகிக் கிடக்கின்றன..

பாசிப் படர்தலின் ஏக்கத்தோடு..!

****

வெள்ளி, ஜனவரி 01, 2010

இறுதிப் பிரகடனத்தின் கணை..

*

கனவுகளைக் கூடையில் அள்ளித் திணிக்க
முயலுகிறீர்கள்..

கற்பனைகளைக் கொடிக் கம்பிகளில் காயப் போட்டு
மறந்து விடுகிறீர்கள்..

மௌனங்களை சில்லறை மாற்றி
சட்டைப் பைக்குள் வைக்கிறீர்கள்..

மரணங்களை விரல் விட்டு எண்ணியபடி சுலபமாய்
கடந்து போகிறீர்கள்..

கடவுளுடனான ஒப்பந்தங்களை மறு ஆக்கம் செய்து
கையெழுத்து வாங்குகிறீர்கள்..

மாதாந்திர பட்ஜெட் எழுதிய நள்ளிரவை காகிதமென மடித்து
அலமாரியில் பத்திரப்படுத்துகிறீர்கள்..

சக மனிதனுக்குரிய துரோகத்தை முன் பகலிலேயே திட்டமிட்டு
மனைவியிடம் ஒப்பித்துவிடுகிறீர்கள்..

சிரிப்பதாக அகலமாகும் உங்கள் உதடுகளை பொய்கள் கற்பித்து
அதட்டி வைக்கிறீர்கள்..

இவையெல்லாம் இந்த வருடத்தோடு முடிந்துவிட்டதாக
ஒரு பிரகடனத்தை..
வருடத்தின் கடைசி தினத்தில் பதிவு செய்கிறீர்கள்..


****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) ஜனவரி 2010

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2384