திங்கள், மார்ச் 31, 2014

கரை மேவும் மரத்தின் தாழ்ந்த கிளை..

*
என் மதகொன்றின் நிழல் காவி இழுத்தபடியே
விரைகிறாய் எங்கிருந்தோ புறப்பட்ட நதியென

சொற்கள் சொற்களாய் சரம் தொடுத்து உதிரும்
அர்த்த இதழ்களில் மௌனத் தடம் ஊறும் முத்தம் ஈகிறாய்

கரை மேவும் மரத்தின் தாழ்ந்த கிளைப் பற்றும் கரம் உயர்த்தி
நிறம் உலரா செதில் நிரட விரல் நீட்டுகிறாய்

நீயாகி சலசலக்கும் நீர்க்குமிழில் உடைந்தபடி அழைக்கிறாய்
குரல் நீவி அசையும் சிறகென எனைநோக்கிப் படபடக்கிறாய்

சாயும் இளமஞ்சள் வெயிலோடு நினைவாகிறேன்
மடியேகும் காற்றழுத்தி அடர்மேக மழையாகிறேன்

சுருள் நீவிப் பிரியும் சருகின் இள நரம்பில் ஊர்ந்திட
பின்தொடர்ந்து வருவேன் நீ முட்டி நிற்கும் ஒற்றைப் புல் நோக்கி

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ பிப்ரவரி - 6 - 2013 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/22878-2013-02-06-20-10-57

பூனையின் வயிறு

*
மழைக் குமிழ்கள் துள்ளும்
தெருவோடும் நீரில் உடையும்
தொடர் வளையங்களை

பிளாட்பாரம் மீதேறி நிற்கும் தள்ளு வண்டிக்கடியில்
உட்கார்ந்தபடி
தன் குட்டிகளோடு
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது
வயிறு இளைத்த
பூனையொன்று

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜனவரி - 27 - 2013 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/22787-2013-01-28-16-49-42

தூக்கத்தின் தொலைதூரம்..


*
எனது தூக்கத்தின் தொலைதூரத்தில்
அதன் இருட்டுக்கு நடுவே

ஒற்றை
விளக்குக் கம்பம் போல
எரிந்துக் கொண்டிருக்கிறது
உன் இரவு

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜனவரி - 24 - 2013 ]

www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/22765-2013-01-25-15-59-20


உடையும் காற்று..

*
தான்யா
தன்
ஆட்காட்டி விரலையும்
கட்டை விரலையும் அழுத்தி
சொடக்கொன்று
போட முயல்கிறாள்

காற்று பொசுக்கென்று உடைகிறது

சிரிக்கிறாள்

நிற்காத சிரிப்பின் அலையெங்கும்
இறக்கை முளைத்த சொடக்குகள்
அறையை விட்டு வெளியேறுகின்றன

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜனவரி - 22 - 2013 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/22721-2013-01-23-08-30-12

22வது படி வளைவு

*
தெருவிலிருந்து
கட்டிட வாசலுக்குள் நுழைந்தால்
மேலேறும் படிக்கட்டுகள் மொத்தம் 22

22வது படி வளைவின் வலதில்
எனது போர்ஷன்

இது
மாதக் கடைசி
வருடக் கடைசியும் கூட

வீட்டு வாடகை
மளிகை பாக்கி
ஸ்கூல் பீஸ்
எல்.ஐ.சி டியூ
குட்டிமாவின் ஸ்கூல் ரிக்-ஷா கூலி
மார்ட்டினுக்கு திருப்பித் தர வேண்டிய கைமாத்து
தவணைத் தவறாமல் கட்ட வேண்டிய வங்கி வட்டிக் கணக்கு

நியூஸ் பேப்பருக்கான மாதாந்திர பணம்
பிலிம் சொசைட்டிக்கான வருட ரெனீவல்

பொங்கல் பண்டிகை
புதுத் துணிகள்

அப்-டேட் செய்யப்படவேண்டிய அறிவுக்கான புத்தகக் கண்காட்சி
இணையத்துக்கான மாத பில் ( அன்-லிமிட்டெட் வெர்ஷன் )

உஸ்ஸ்..... அப்பா..

இந்த நிமிடம் ஏன் 22வது படியின் வளைவு
இத்தனை தொலைவில் இருக்கிறது..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜனவரி - 21 - 2013 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/22702-22-

குலையும் பகலை உணரத் தூண்டும் கானல்..

*
நிறுத்தாமல் அழைக்கிறாய்
நறுவிசு குலையும் பகலை
காலடியில் உணரத் தூண்டுகிறது
உனது கானல்

செவிகளுக்கு அப்பால் கடக்கவிருக்கும் தொலைவை
நிழல் போர்த்தவில்லை

துல்லியமான வெளியைக் கையகப்படுத்தும்
சூட்சுமத்தின் ஈரத்தை
கண்ணாடிக் குடுவையில் ஏந்தி நடக்கிறேன்
நீ
நிறுத்தாமல் அழைக்கிறாய்

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜூலை - 27 - 2012 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/20613-2012-07-27-18-31-14

இருப்பின்மையின் மைய பீடம்

*
நிராசையின் நினைவுக் கூட்டில்
புழுங்கிச் சுருங்கும் வதையின் மீது
சுள்ளெனத் தொடுகிறது
சொற்களின் ஊடே கசியும் உனது வெயில்

அறைக்குள் அலையும் நிழல்கள்
எதுவும் பேசுவதில்லை
ஜன்னலில் மோதி உடைந்து
அங்கேயே விழுந்து சாகிறது அதன் மூச்சுக் காற்று

கைவிடப்பட்ட அர்த்தங்களின் செதில்கள்
அசைந்து சோர்ந்த அக்கணத்தை
இருப்பின்மையின் மைய பீடத்தில் பலியிட
ஓங்குகிறேன் இன்னொரு சொல்லை

அலறும் மௌனத்தோடு தலை தொங்கி
குழம்பும் சிந்தனையின் மீது
பெயர் தெரியா பறவையின் நீல நிற இறகொன்று
காற்றில் சுழன்று மெல்ல இறங்குகிறது

அறை முழுவதும் பரவுகிறது
நிராசையின் நீல நிறம்

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜூலை - 17 - 2012 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/20509-2012-07-18-13-05-58

நிழல் சிறகின் தனிமை..

*
நடமாட்டமற்ற
ஒரு சாலை
வெயில் சுமந்துக் காத்திருக்கிறது
யாரேனும் வந்து போவதற்கு

மரங்களே இல்லாத
விளக்குக் கம்பங்கள் மட்டுமே
நிற்கும்
அத்தனிமையை

சிறகு விரித்துத் துரத்தும்
தன் நிழலைக் கண்ணுற்றபடி வட்டமிடுகிறது
அதே காத்திருத்தலோடு
மேலே ஒரு வல்லூறு

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜூலை - 6 - 2012 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/20389-2012-07-07-04-04-53

அசைந்து நகரும் நதியின் மௌனம்

*
நீரலைத் ததும்பும்
நிறப் பிரிகையில் பட்டுத் துள்ளுகிறது
குமிழ் குவியும் என் தருணம்

தளும்ப அசைந்து அசைந்து
நகரும் நதியின் மௌனத்தில்
நீந்திக் கடக்க

அனுப்ப மறுக்கிறாய்
இசைவாக ஒரு நினைவை

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜூலை - 3 - 2012 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/20348-2012-07-04-05-27-48

தலைகீழாய்த் தொங்கும் தனித்த இரவு..

*
அப்படியொரு சொல்லுக்குப் பிறகு
தீர்மானமான நிராகரிப்புக்கு பிறகு
விடிய மறுத்த இரவின்
தனிமைக்குப் பிறகு

உன் அழைப்பை ஏற்கும் மனதில்லை

ஆனால்
பதிந்து வைத்திருக்கும்
உனது கெஞ்சல் குரலின்
தொடர் கெஞ்சலில்

தலைகீழாய்த் தொங்குகிறது
தனித்த
இரவின்
அந்தச் சொல்

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜூன் - 22 - 2012 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/20186-2012-06-23-11-50-05

நினைவின் மௌனத்தை அடைகாக்கப் பணிக்கும் ஒரு கண்ணீர்த் துளி..

*
காதலில்
நூற்றாண்டைக் கடக்க உதவுகிறது
ஒரு முத்தம்

பேச்சறுந்த வெயில் தினத்தை புறந்தள்ள உதவுகிறது
ஓர் அணைப்பு

அன்பின் மழையைத் தாண்டிப் போக விடுவதில்லை
ஒரு சிறிய கையசைப்பு

நினைவின் மௌனத்தை அடைகாக்கப் பணிக்கிறது
ஒரு கண்ணீர்த் துளி

பிரிவின் உருக்கத்தை உச்சரிக்க முடியாமல்
தவிக்கப் பண்ணுகிறது ஒற்றை உதடு துடிப்பு

இன்மையின் உயரத்திலிருந்து வீழவும்
இருப்பின் பள்ளத்திலிருந்து மீளவும்

திரும்பப் பெற்றுக் கொள்ள இயலாத
ஒரு துயரத்தைப் பெயர்க்கவும்

கரியச் சுவர் நிழலில் யாருமறியா வண்ணம்
படரும் கரும்பாசியென நழுவும்
ஒரு தருணத்தைத் தொட்டுணரவும்

உதவுகிறது

கைகுலுக்கல் இல்லாமல்
புன்னகை இல்லாமல்
சின்னஞ்சிறிய கடிதப் பரிமாறல் கூட இல்லாமல்
உருக்கொள்ளும்
ஒரு நிராகரிப்பு

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜூன் - 20 - 2012 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/20140-2012-06-19-03-48-16

மணல் துகளில் உருளும் முத்தச் சில்லுகள்..

*
இரவாகிப் படர்கிறேன்
கைப்பேசியில் நீ பந்தல் கட்டும்
உன் வார்த்தைகளின் நிழலுக்கடியில்
உட்கார்ந்திருக்கிறேன்

யாருமற்ற இந்தக் கிணற்றடிக் கல்லில்
என் மனதைத் துவைத்துக் கொண்டிருக்கிறது
உன் இடையறாப் பேச்சு

ஒவ்வொரு விண்மீன்களாய்
ஒளிக்கோடு கிழித்து வெளிச்சம் பதறும் இருளில்
மொட்டவிழும் மல்லிகை மணம் சொல்லுகிறது

பசலை
பசலை

கால் பெருவிரல் நகப் பூச்சு நிறம் மங்கி சிவக்கிறது
வெட்கத்தின் ரகசியத்தை

பின்னங்கழுத்து
காதுமடல்
நெற்றிப்பிறையென
துளித் துளியாய் வியர்வைக் கோர்க்கிறாய்

வேறெங்கிருந்தோ உனது இரவை வார்த்தைத் திரட்டி
அர்த்தம் துளைத்து ஊதி ஊதி மயக்கம் ஊட்டுகிறாய்

இடது கை ஆட்காட்டி விரல் சுரண்டும்
மணல் துகள் அத்தனையிலும் வட்டமாக உருள்கிறது
சத்தமின்றி நீயனுப்புன் முத்தச் சில்லுகள்

பனித்துளி குவியும் ஒரு புல்நுனியில்
சலனமின்றி திரள்கிறது என் உலகம்

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜூன் - 20 - 2012 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/20154-2012-06-21-07-35-38

மௌனப் பரண்

*
மனம் திறக்காத தாழுக்குப்
பின்னாலிருக்கிறது
மௌனப் பரண்

பிரிக்கப்படாத பரிசுப் பொருளைப் போல்
வர்ணமிழந்த காயங்களோடு
இன்னும் பத்திரமாயிருக்கிறது
நீ
தந்த வலி

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜூன் - 15 - 2012 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/20120-2012-06-16-02-16-06

தனிமையின் பழஞ்சுவர்

*
அழுத்தமாய் இருந்துப் பழகு என்கிறான்
ஒரு வாக்குறுதிக்குள் படர்ந்து விரவும்
இருள் பற்றி யோசிக்காமல் இருந்ததில்லை

நம்பிக்கையின் வேர்களில் கசியும் ஈரம்
தண்ணீரல்ல ரத்தம் என்பதை
பூக்கத் துடிக்கும் மெளனத்திடம் சொல் என்கிறான்

தனித்துவிடப்பட்ட துயரத்தின் பழஞ்சுவரில்
பெய்து முடித்த மழை நீர் மிச்சம் கூரையிலிருந்து
இழுத்தபடி ஒழுகும் கசடென உணர்வதை
நிறுத்த முடிவதில்லை

ஓய்ந்தடங்கா மனக் கூச்சல்களோடு
வெறிக்க நேரும் வெற்றிடத்தில்
இதுவரை யாரும் புலப்பட்டதில்லை

பெயரற்ற முகங்களின் நினைவடுக்குகள் தோறும்
இடம்பெயரத் தடுக்கும் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றும்
மீட்சியின் பாதையென விட்டு வைத்திருப்பது

இத்தனிமைப் பழஞ்சுவரை மட்டுமே

*****


நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜூன் - 15 - 2012 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/20104-2012-06-15-11-55-41

கடந்துவிட்டதாகச் சொல்லும் இரவு..



*
சொற் பைத்தியங்கள் திணறுகின்றன
முன் வைக்கப்பட்ட வாதங்கள்
காகித அடுக்கில் நசுங்கிக் கிடக்கிறது

கடந்து விட்டதாகச் சொல்லும் காலத்தின் இரவுகளையோ
அது தன்னகத்தே எழுதி வைத்திருக்கும் ரகசியங்களையோ
குறிப்புணர்த்தும்படி பரிந்துரைக்காத
பிரதிவாதிகளின் சாட்சியங்கள்
ரத்தம் உறைந்த மணல் துகளென நிறம் இழக்க மறுத்து
உறுத்துகிறது சூழலை

ஓர் உத்தரவுக்குப்  பணிய பழக்கப்பட்டிருக்கும் தலைகள்
தையலிட்டு இறுகிக் கிடக்கும் உதடுகள்
அர்த்தங்களை நெம்புவதற்கு திராணியற்ற பேனாவைப்
பற்றியிருக்கும் விரல்கள்

யாவற்றுக்கும் ஒத்திசைந்து திணறும்
சொற்பைத்தியங்களின் சபை
ஒரு கட்டளையின் அச்சில் சுழல்கிறது

காலத்தை உருட்டியபடி

*****


நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜூன் - 12 - 2012 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/20085-2012-06-13-08-02-17

அகாலத்தின் முள்


*
கான்க்ரீட் பெட்டிக்குள்ளிருந்து
வெளியேறும் கால்கள்
லெதர் ஷூக்குள் நடந்து
உலோக யந்திரத்தை இயக்குகிறது

ஓசோன் படலத்தைப் பொத்தலிட்டு விரைந்தபடி
காலத்தின் முள்ளை ஒடித்து
ஊற்றும் வெயிலில் நனைந்து
லட்சங்களையும் கோடிகளையும்
கணக்கில் ஏற்றி இறக்கி சுழியிடும்
விரல்களை
ஓய்வு நேரத்தில் கீபோர்டில் தட்டித் தட்டி
அயல் மொழியைத் தமிழாக்கி
செய்து விடுகிறது

ஒரு கவிதையாவது

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ மே - 29 - 2012 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/19952-2012-05-29-18-38-32

நுகத்தடி..

*
மறுப்பின்
நுகத்தடியில்
புரள்கிறது
கெட்டித்த அவமானம்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ செப்டம்பர் - 12 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6377

உனக்கான அத்தனை வார்த்தையிலிருந்தும்..


அப்படியொரு தேவையை இதற்கு முன்
நீ கோரியதில்லை

உடைபடும் மரண ரேகையின் மீதொரு பயணம்
மிதக்கும் பெயரற்ற பறவையொன்றின் இறகில் என் பெயர்

திவலையின் சாரல் கரையில்
வர்ணம் தொலைந்து உடைதல்

உருமாற்ற கட்டுமானங்களில் அடுக்கடுக்காக
சரிவதற்குரிய சொல்லின் தயவு

தனிமையில் நொறுங்கும் மொழியின் மனதை
நெகிழ்த்தும் ஒரு பாவம்

கனத்த மௌனத்தின் நிழலுக்குள்
நடந்து கடக்க கொஞ்சம் வெளிச்சம்

என்பதாக

தேவையின் அடர் நீலத்தில் கருகிப் பிரியும்
ஒரு புகையின் வாசனையாகி வெளியேறுகிறாய்
உனக்கான அத்தனை வார்த்தையிலிருந்தும்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ செப்டம்பர் - 12 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6377


ரகசியப் பொழுதின் மொத்த வெயில்

*
அறிமுகக் கைக் குலுக்கலில் உரசிக்கொள்ளும்
தத்தம் ரேகைகளின் பாதையில் வரிசையாய் காத்து நிற்பார்கள்
ஒவ்வொரு புதிய வருகைக்குமாக

ஏந்தும் புன்னகையில் சட்டெனப் பொழியும்
பெய்தே பழகிய நட்பின் மழை
ரகசியப் பொழுதின் மொத்த வெயிலும்
நண்பர்களின் குடைக்குள் வைகறை நிழலாகிறது

உரிமைத் துளிர்க்கும் கோப மொட்டுக்குள்
மெல்ல மெல்லத்தான் உகுக்க பழகி வைத்திருக்கும்
ஏற்புடைத் தேன் துளிகளை

அத்துனை மௌனத்தையும் புதைத்துக் கொள்ள
அனுமதிக்கும் தோள்களை வரமெனப் பெற்றவர்கள்

தலை வருடும் விரல்களில் தாய்மையின் வாசனையும்
கண்ணுக்குள் உற்று நோக்கும் பார்வையில் தூயக் காதலின் கசிவையும்
ஒருங்கே அருளும் நட்புத் தோட்டத்தில்
கனவுச் சிறகுகளை அசைத்துப் பறக்கும் பட்டாம்பூச்சியாகி

எண்ணற்ற வர்ணப் புள்ளிகளை
நெகிழும் இவ்வாழ்வின் அனைத்து வளைவிலும்
பூசிக்கொள்ளும் தூரிகையவர்கள்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ செப்டம்பர் - 12 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6377

நினைவுச் சாரலின் கணக்கில்லா முகங்கள்..

*
இந்த அந்தியின் தாழ்வாரத் தனிமையை
கைத்தட்டி அழைக்கிறது ஒரு திடீர் மழை

திண்ணைப் பூச்செடிகளின் முகமெங்கும்
புள்ளிப் புள்ளியாய் ஈரத்துளிகள்

வீசும் காற்று மழையைக் கரம் பற்றி
முற்றத்து நிலமெங்கும்
ஆடிக்களிக்கிறது ஓர் ஊழிக் கூத்தை

கிணற்றடி உலோக வாளி நிரம்பி
நடந்தேறுகிறது ஜலதரங்கம்

கூரையிலிருந்து நூல் நூலாகக் கீழிறங்கும்
மழை நீர்க்கொடியில் வேர்ப் பற்றி அரும்புகிறது
தன்னிச்சையாய் ஒரு புன்னகைப் பூ

மழை பெய்யும் தருணமெல்லாம்
மனத்துக்குள் நினைவுச் சாரலில்
நனைந்தபடியே இருக்கின்றன கணக்கில்லா முகங்கள்

என் தன்னந்தனிமையை ஈரப்படுத்த
பாசத்தோடு விரல் நீட்டி பிடித்துக்கொள் என்கிறாள்
எப்போதும் இந்த மழைத் தோழி

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ செப்டம்பர் - 12 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6377

கால்களைக் கவ்வும் நடை..

*
சிறு முகம் பிடித்து
அழுந்த இழுத்து தலை வாருகிறாள்
' உம் ' என்று பிதுங்கும்
உதடுகளில் புன்னகைக் குழைய

திருஷ்டிப் பொட்டோடு
கன்னம் விடுபடுகிறது

இன்று பச்சை நிற கிளிப் கிடையாது
பூப்போட்ட ஆரஞ்சுநிற காட்டன் தொப்பி
பட்டை விளிம்பு நெளிய நெளிய பூப் போலவே இருக்கிறது

குட்டைப் பாவாடையோடு
முடிந்து போகும் வெள்ளை டாப்ஸும்
மஞ்சள் லெக்கிங்ஸூம்
கச்சிதமாய் சிறைப்பிடிக்கிறது பாப்பாவை

கடைசியாக
கருநீலநிறக் கால்செருப்போடு
வார்ப்பட்டியில் கால்களைக் கவ்வுகிறது நடை

குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு
ஒரு பொம்மையைத்தான் அழைத்துப் போகிறாள்
அனைவருக்கும் காட்ட

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ செப்டம்பர் - 12 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6377

மற்றும்..

*
ஒரு
முடிவெடுத்தலின் மர்மத்தில்
புதையுண்டுக் கிடக்கிறது

எண்ணற்ற இரவுகள்
எண்ணற்ற தனிமை
எண்ணற்ற விசும்பல்

மற்றும்

எண்ணித் தீராத
நட்சத்திரங்கள்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ செப்டம்பர் - 9 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6347

கீழிறக்க முடியாத பாய்மரங்களின் திசை

*
ஒரு சிறிய அவநம்பிக்கையின் துடுப்புகளை
ஏன் செலுத்த வேண்டும்
அத்தனை வலுவாக

கரைமோதித் தவிக்கும் மனதின்
நீர்த்திவலைகள் கிழிய
உன் திசையை விரல் நீட்டிக் காட்டுகிறாய்

திரண்டிருக்கும் சதுப்பின் ஆழம் வரை
குழைய சிக்கிக் கிடக்கும்
விஷக் கொடியின் வேர்களாகிச் சுற்றுகிறது
ஈரப் பதத்தில் என் துருவங்கள்

நட்சத்திர வெளிச்சம் பட்டு
காற்றில் துடிக்கும் பாய்மரத்தின் அசைவை
மடித்துக் கீழிறக்க முடிவதில்லை

ஏன் செலுத்த வேண்டும் அத்தனை வலுவாக
ஓர் அவநம்பிக்கையின் சிறிய துடுப்பை

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ செப்டம்பர் - 9 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6347

ரகசியங்களின் கூர் வாள்

*
கொஞ்சமும் எதிர்பார்க்காத
ஒரு சாயலைக் கொண்டிருந்தது
விடாமல் சொல்லியபடி இருந்த உனது பிரார்த்தனை

பலிபீடத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த
மௌனத்தின் தலை
இடவலமாய் அசைந்தபடியே ஏற்றுக் கொள்கிறது
கூர்மை பளபளக்க
அதன் மீதிறங்கும் சொல்லை

இரத்தம் தெறிக்க உச்சரிக்கப்படும்
பிரார்த்தனையின் நிறத்தை காவு கேட்கிறது
பகிர விரும்பாத
ஒரு
ரகசியத்தின் கூர் வாள்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ செப்டம்பர் - 9 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6347

இரவின் மைல் கல்

*
எல்லா வழிகளையும்
அடைத்து விடுதல் நல்லது

யாரோ போல் முகம் திருப்பிக்கொள்ளுதல்
அவசியம்

ஒரு திடீர் சந்திப்பை
முட்டாள்த் தனமான வாக்குவாதம் கொண்டு
ரத்து செய்தல் தேவை

ரகசியங்களற்று வெளியேற வாய்ப்புள்ள
பிரார்த்தனையின் மூலம்
எளிய கோரிக்கையை விட்டுக்கொடுத்தல்
சமரசமுள்ள யுக்தி

என்னை நோக்கி நான் வரைந்துக் கொண்டிருக்கும்
எல்லாச் சாலைகளின் கணித சமன்பாடுகளும்

வேறொரு சாயலில்
இன்னொரு தேசத்தில் நானற்ற ஒருவன்
தன்னை நோக்கி எழுதுவதன் வழியே
என்னை அயர்த்தும் இரவின் மைல் கல்

எனவே

எல்லா வழிகளையும் அடைத்து விடுதல் அவசியம்
மற்றும்
யாரோ போல் முகம் திருப்பிக்கொள்ளுதல் நல்லது

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ செப்டம்பர் - 9 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6347

கன்னம் அழுந்தத் தொலையும் வனத்தின் கதவுகள்..

*
மெழுகுவர்த்தியை ஊதி அனைத்துவிட்டாய்
மெல்லிய வெண்புகை நூலாய் வளைந்து பிரிகிறது

தீயின் மிச்ச வாசத்தில் கிறங்கிச் செருகும் பார்வையோடு
அழைக்கும் கண்கள் தாழ்வதை
சுவரிலிருந்து குத்துகிறது கடிகார முள்

வெற்றுடல் மீது பரவும் மூச்சுக்காற்றில்
ஊதி அணைத்த வெப்பமொன்று மிதப்பதைப் பற்றி
முணகுகிறாய்

சயன நொடியின் நிறம் பிறழ்வதை தீண்டும் விரல் லயிக்கிறது
இடும் முத்தச் சதுப்பில் புதைகிறது நாணலின் கால்கள்

பொங்கித் தாழும் மார்பில் அமிழ்கிறாய்
கன்னம் அழுந்தத் தொலையும் வனத்தின் கதவுகள்
வாசத்தோடு திறந்துக் கொள்கிறது

நுழையும்போது எதிர்க்கொள்ளும் இருட்டில்
தடவி நகரும் சுவற்றில் தட்டுப்படுகிறது வெண்புகை நூலின் நுனி

ஓசையின்றி சார்த்திக்கொள்ளும் கதவின் ஒலியோடு
தொடங்குகிறது துளிகளின் சாரல்

பெருகும் வெண்ணூல் நதியின் பிரவாகத்தில்
எடைக் குறைந்து தவழ்கிறது
உலர்ந்து தக்கையாகிவிட்ட ஒரு முத்தச் சருகு

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ செப்டம்பர் - 9 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6347

துடுப்பில்லா படகு..

*
அயர்ச்சியில்
கை நழுவி விழுந்த புத்தகத்தின்
42 வது பக்கத்தில்
துடுப்பில்லா படகொன்று
தூரதேச நதியின் திசையறியாமல்
நகர்ந்து கொண்டிருக்கிறது

நானிந்த படகிலிருந்தபோது தான்
அந்தப் புத்தகமும்
நழுவி விழுந்திருக்க வேண்டும்

என் புத்தகங்களுக்கு
நீச்சல் தெரியாது

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஜூலை - 30 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6243

தீரா இரவுகளின் ஆடையில்

*
நீங்கள் அப்படிச் சொல்லவேண்டும்
என்று  நான் எதிர்பார்க்கவில்லை

சொன்னால்
உங்கள் சொற்களில் ஒன்றை எடுத்து
இந்தத் தீரா இரவுப் புத்தகத்தின்
குழப்பமான பக்கமொன்றில்

அடையாளமாகச்
செருகி வைத்துக்கொள்வேன்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஜூலை - 30 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6243

கண்ணாடிச் சில்லுகள் சூழ..

*
ஒரு மறுமொழியின் சுற்றுப்புறத்தில்
கொஞ்சம் மதில்கள் எழுகின்றன

அதன் ஒவ்வொரு அடுக்கின் இறுதிச் சுற்றிலும்
முளைக்கிறது ஒரு ரகசிய பாதை

அதன் அழைப்பின் வழியை
நெருக்குகிறது தவறான ஒரு வரைப்படம்

கணித சூத்திரங்களின் துணைக்கொண்டு
அளக்கப்பட்ட அர்த்தங்களின் பாதச் சுவடு
மதில்களின் உச்சியில் வெயில் துளைக்க காய்கிறது
கண்ணாடிச் சில்லுகள் சூழ

ஒரு மறுமொழியின் சுற்றுப்புறத்தில் எழும்
மதில்கள் உயரம் குறைந்தே கிடக்கின்றன
எவர் கண்ணுக்கும் எளிதில் சிக்காத சூட்சுமத்தோடு

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஜூலை - 30 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6243

கரையோரம் ஒதுங்கும் கூழாங்கற்களின் சங்கீதம்..

*
நெஞ்சுருகப் பாடுவதற்கான
பாடல் வரிகளை
நான் தொலைத்துவிட்டேன்

ஒற்றைக் கூவலோடு
தன் ரகசியத்தை
முடித்து கொண்டு விட்டது
வனாந்திரக் கிளையில்
முகம் காட்ட மறுத்து அமர்ந்திருக்கும் குயில்

யாரும் தீண்டா நதியில்
விழுந்து இதழ் நனைய இசை சுமந்து
பயணிக்கின்றன
காட்டு மலர்கள்

கரையோரம் ஒதுங்கும்
கூழாங்கற்களின் சங்கீதத்தை
ஈரப்படுத்திக்கொண்டே இருக்கிறது
நதியின் கைகள்

தலைக் குனிந்து
நதியை நுகரும்
நாணல்களின் மூக்கில் சொட்டு சொட்டாய்
தொங்குகிறது நீரின் குரல்

கனம் தாளாத குரல் துளிகளைத்
தட்டிவிட்டு
தென்றலொன்று அபகரித்துக் கொள்கிறது
மொத்தப் பாடலையும்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஜூலை - 30 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6243

பழியின் ஆடையுள் குளிரும் பகல்கள்..

*
கடவுளின் கால் பூட்சுக்குள்
ஒளிந்துக் கொண்டிருக்கிறது எனது துர் இரவுகள்

காதலிகளின் மாம்சம் கவ்வும் உதடுகளைக் கத்தரித்து
பால்கனி உத்தரத்தில் தொங்கும் கம்பியில்
குத்தி வைக்கிறேன்

கரிய காகத்தின் அலகுகள்
அம்முத்தங்களைக் கொத்துகின்றன

பழியின் ஆடைக்குள் புகுந்து கொள்வதால்
பகல்கள் குளிர்கின்றன

வெப்பம் அனைத்தும் இரவுக்கட்டிலுக்கு அடியில்
மயிர்க்குப்பைப் போல் சுழல்கிறது

அறைக்குள் கழற்றிவைக்கும் செருப்பில்
மிச்சமாகி ஒட்டிக்கொண்டிருக்கும் அன்றாடப் பாதை

என் பழியை
என் பகலை
என் மாம்சத்தை
கடவுளின் கால் பூட்சை

முறைத்துக் கொண்டிருக்கிறது

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஜூலை - 8 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6232

எதுவுமில்லை என்பதையொத்த ஓர் உடல்மொழி


பேச்சு சுருங்கிப் புள்ளியாகிவிடும்
தருணத்தில்
நீ வெளியேறிவிட்டாய்

இதற்குப் பின் எதுவுமில்லை என்பதையொத்த
ஓர் உடல்மொழி

விரிவடையத் தொடங்கும் அப்புள்ளியின்
நுணுக்க கணத்தினுள்
சுழல்கிறது
இதுவரைக் கண்டிராத உலகமொன்று

அதனூடே கடந்து செல்லும் பாதச்சுவடுகள்
வேறு யாருடையதோ

நீயுமற்றும் நானுமற்று
பின்
நாமுமற்று

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஜூலை - 8 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6232

சிறகின் வர்ணங்கள்..

*
வெடித்துக் கிளம்பிப்
போன பிறகும்

தன் சிறகின் வர்ணங்களை
எண்ணியபடி
பிய்ந்து தொங்கிக் கொண்டிருக்கிறது
வெயில் குடிக்கும்
லார்வா
ஒன்று

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஜூன் - 6 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6220

குளிர்ந்த சொற்கள்

*
ஆசுவாசம் அடைதலைப் பற்றி
நம்மிடையே
ஒரு கவனமிருக்கிறது எப்போதும்

பொறுப்பற்ற விவாதங்களுக்கு
பிறகான வெப்பத்தை
ஆவியாக்கிட தேவைப்படும்
குளிர்ந்த சொற்களின்
துளி திரட்சியை

மைய ஊற்றாய்
மாற்றும்போது

நம்மிடையே ஒரு கவனிமிருக்கிறது
ஆசுவாசம் அடைதலைப் பற்றி

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஜூன் - 6 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6220

சனி, மார்ச் 29, 2014

உத்திகளை வசப்படுத்தும் தந்திர எல்லைகள்..

*
அப்படி என்ன நடந்துவிட்டது

பிரியத்தின் குறுவாள் முனையில் பொய் சொட்டுகிறது
தவறென ஒத்துக்கொண்ட மன்னிப்பு பாதங்களில் தாரை வார்க்கப்படுகிறது

கை குலுக்கும் துயரங்களின் ரேகை நதியில் படகாகி மிதக்கிறது
துடுப்புகளற்ற மௌனம்

காரணங்களோடு வீசும் துருவப் புயல்களாகி வார்த்தைகள் குளிர்ந்து
அர்த்தங்கள் உறைகிறது

உத்திகளை வசப்படுத்தும் தந்திர எல்லைகளில்
நட்டு வைத்த சமாதானக் கொடியொன்று அரைக்கம்பத்தில் பறக்கிறது

துரோகம் சுமக்கும் அமில ஊற்றை மிடறு மிச்சமின்றி குடிக்கும்படி
உத்தரவொன்று கதவில் ஒட்டப்படுகிறது.

மிரள மிரள இந்த உலகின் குரூரத்தை வெறித்துக் கொண்டிருக்கும்
இருளின் அகாலத்தில்
கைப்பேசியில் வரும் உனதழைப்பை  எப்படி ஏற்பேன்

அப்படி என்ன நடந்துவிட்டது
என்றொரு குறுஞ்செய்தி ஒளிர்கிறது உனது பெயர் ஏந்தி

அப்படி என்ன நடந்துவிட்டது

பிரியத்தின் குறுவாள் முனையில் குத்துப்பட்டு
பொய் சொட்டுகிறது

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மார்ச் - 25 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6205

சுழல் பாதையின் வரைப்படக் கோடு

*
முற்றிலும் வெளியே வந்து விடுங்கள் என்கிறது தத்துவம்
நினைவுப் பை முழுக்க நிரப்பி வைத்திருக்கும்
ஆறுதல்களை அவிழ்த்துக் கொட்டுமிடத்தில்
கொஞ்சமேனும் அவதூறு தேவையாகிறது

இதைப் புரிந்துக் கொள்வதற்குரிய சுழல் பாதையை
வரைப்படக் கோடுகளாக இழுத்து வருகிறேன்
நம் தனிமைக்குள்

யந்திர இடுக்குகளின் உலோக இயக்கத்தின்
சிக்கலான தருணங்களோடு ஓர் ஒப்பீட்டை
இந்த மேஜையின் மீது கிடத்துகிறாய்

அறை ஜன்னலின் சொற்ப வெளிச்சம்
தன் அவகாசத்தின் நிழலை என் மீது நீட்டுகிறது

யுகமொன்றின் குறுகலான சந்தில்
ஒருவர் கையை மற்றவர் பற்றிக் கொண்டு நிற்கிறோம்

முத்த ஸ்பரிசத்தை நினைவுப் பை முழுக்க
நிரப்பி வைத்திருக்கும் ஆறுதல் கொட்டுமிடத்திலிருந்து
முற்றிலும் வெளியே வந்துவிடுங்கள்
என்கிறது தத்துவம்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மார்ச் - 25 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6205

இறுதி சொல்லின் கடைசி எழுத்து..

*
மின்விசிறியில்
தூக்கிட்டு தொங்குபவளின்
கால் ஊசலாட்டம்

இறுதி சொல்லின்
கடைசி எழுத்தை எழுதிவிட
மூச்சுக்காற்றைக் கெஞ்சுகிறது

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மார்ச் - 25 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6205

எரிந்து தீரும் வாழ்வு

*
நீங்க யாசிக்கிறீர்கள்

ஒரு கருணையை
ஒரு சந்தர்ப்பத்தை
ஓர் இணக்கத்தை
ஒரு பரிதவிப்பை
ஒரு தனிமையை

நீங்கள் எதிர்கொள்கிறீர்கள்

ஒரு தலைகுனிவை
ஓர் அசௌகரியத்தை
ஒரு புறக்கணிப்பை
ஒரு கைவிடுதலை
ஒரு வெறுமையை

நீங்கள் ஏற்கிறீர்கள்

ஒரு பரிச்சயத்தை
ஒரு சூட்சுமத்தை
ஒரு தத்தளிப்பை
ஓர் இரக்கமின்மையை
ஒரு பேரிருளை

எரிந்து தீரும் வாழ்வில்

ஏற்றுக் கொண்டவைகள்
யாவும்
எதிர்கொள்கின்றன ஒரு யாசிப்பை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மார்ச் - 25 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6205

எண்களற்ற கடிகாரச் சதுரம்..


உத்தரவாதங்களை மறுத்தபடி நகர்கிறது பொழுது
சொற்களின் ஓரப் பிசிறுகள் தொடுவதற்கு ஏற்றதாக இல்லை

ஜன்னல் சூரியனைத் தடுத்தபடி காற்றோடு பேசிக் கொண்டிருக்கிறது
பூக்கள் நிறைந்த கொடிகளற்ற திரைச்சீலை

எண்களற்ற கடிகாரச் சதுரத்துக்குள் எண்களின் நினைவுகளை
அசைப் போட்டபடி துடிக்கிறது நொடி முள்

எழுதி வைத்துவிட்ட அர்த்தங்கள் திருப்தியற்று பெயர்களை
யாசித்தபடி அடம்பிடிக்கின்றன தாமே மாறிவிடுவதாக
அச்சுறுத்தும் தொனியில்

நுணுக்கங்களை அணுகுவதற்கு அதனினும் நுண்ணிய
காரணிகள் அவசியமாகிறது

அக்காரணக் கருவிகளை செய்துப் பழக ஒத்துழைக்க மறுக்கும்
எழுத்துக்கள்
ஆய்த வட்டங்களுக்குள் ஒளிந்துக் கொண்டு பயன்படுத்தத் திணறும்
சூத்திரங்களை பிரகடனப்படுத்துகிறது

உத்தரவாதங்களை மறுத்தபடி நகரும் சொற்களின் பொழுதுகள்
தொடுவதற்கு ஏற்றதாக இல்லை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மார்ச் - 11 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6195

மரம் உதிர்க்கும் காய்ந்த இலைகள்..

*
அத்தனை நிராசையுடன் தான்
உன்னை நான் நெருங்குகிறேன்

உனது சமரசங்களை ஒரு செய்தித்தாளைப் போல
மடித்து வைத்திருந்தாய்
தலைப்புக்கள் நிலம் நோக்கி
தொங்கிக் கொண்டிருந்தன

உன் - என் பார்வைத் தொட்டு நின்ற
இடைவெளியில்
மரம் உதிர்த்த காய்ந்த இலைகள்
மிதந்தன நம் காற்றில்

வா
ஒரு டீ சாப்பிடுவோம் முதலில்
அப்புறம் பேசிக் கொள்வோம் என்கிறேன்

நீயுன் தலைப்புகளை அள்ளி
உன் கைப்பைக்குள் திணித்துக் கொண்டு
அமைதியாகப் பின்தொடர்கிறாய்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மார்ச் - 11 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6195

பின்வாசல் பூட்டிய கதவுகள்

*
முன்பு
பூச்சாண்டிகளின் உலகுக்குள்
குழந்தைகள் நுழைவதில்லை

அந்த
ரகசிய உலகின் கதவுகள்
திறக்கப்படாமலேயே
அக்குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள்

இன்று
பூச்சாண்டிகள் தத்தம் உலகிலிருந்து
வெளி வருவதேயில்லை

சுட்டி டிவி பார்த்தபடியே இரவு உணவு
அனிமேஷன் வில்லன்களின் குகை
யாவும்
ரிமோட்டின் ஒற்றைப் பொத்தானில்
திறந்துக் கொள்கிறது

முன்னிரவு நேரத் தெருக்கள்
வெறிச்சோடிக் கிடக்கின்றன

வாசல்களற்று சத்தமின்றி கடந்துபோகும்
பின்னிரவுப் பூச்சாண்டிகளை
தெருநாய்கள் மட்டுமே
ஊளையிட்டு வழியனுப்புகின்றன வேறெங்கோ

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மார்ச் - 11 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6195

வெள்ளி, மார்ச் 28, 2014

கடக்கும் கோடுகள்..

*
வளையும் சொல்லில் புதைந்துக் கிடக்கிறது
ஒரு சிகப்பு சிக்னல்

கடக்கும் கோடுகள் நெடுநாளைய மழையில்
அழிந்து விட்டன

துள்ளும் நீர்ப்புள்ளிகள் கரைகிறது
நாவின் சாக்கடையில்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ டிசம்பர் - 24 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6157

சொச்ச முத்தங்கள்..

*
கணக்கிடப்பட்ட பட்டியலிலிருந்து
ஈரம் மின்ன
நழுவி
மடியில் விழுந்துத் துள்ளுகிறது
சொச்ச முத்தங்கள்

மிகக் குறைந்த ஒளியின் இருளில்
கை விரல்கள் கோர்த்துக் கொண்டு
நகம்
நகமாய்த் தேடிய சொற்ப வெளிச்சத்தில்
மேலும் இரண்டொரு பட்டியல்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ டிசம்பர் - 24 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6157

எல்லா திசையிலும்..

*
நீயுன்
வெற்றுக் கணத்தில் எதுவும்
சொல்வதில்லை

ஆறுதல் வார்த்தைகளை மென்று முழுங்குகிறாய்
கவனப் பிசகில் கால் முளைக்கும்
அர்த்தங்கள் ஒவ்வொன்றாய்
எல்லா திசையிலும் ஒரே நேரத்தில் பயணிக்கத்
தொடங்குகிறது

நீயுன்
வெற்றுக் கணத்தில் எதுவும்
சொல்வதில்லை

அவ்வெற்றுக் கணமும்
உன்னிடம் சொல்வதற்கு ஏதுமின்றி
ஆறுதல் வார்த்தைகளை மென்றுக் கொண்டே நிற்கிறது


*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ டிசம்பர் - 24 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6157

இரண்டாயிரத்து நூற்றிப் பன்னிரெண்டாவது குரு


ஆழமற்று அசையும் இலை மீது
பதியும் விரல்கள்
புடைத்த அதன் நரம்புகளை நீவும்போது
வெடிக்கிறது நாளம்

மத்தி புருவத்தில் நுழையும் வெயில்
இழைக்கிறது நாணை

சுண்டியிழுக்கும் கட்டைவிரல்
துண்டாகி விழும் நிலத்தில்
முளைக்கிறது யுத்தம்

வேட்டையிலிருந்து வேட்டையின் மீது
தாவும் கால்கள் ஓயாத
கானகத்தின் இருவழிப் பாதை
நீள்கிறது ஒரு மௌனக் கிளைக்கு

கால் தடம் அழைத்துப் போகும்
குருதி சலசலக்கும் நதிக்கரை வரை

உருளும் கனவுகளின் முனை மழுங்கிய
கூழாங்கற்கள் பெயரற்று நிறமழிந்து இசைக்கிறது
உயிர் நதியின் மீட்சியை யாசித்து

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ டிசம்பர் - 24 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6157

பொய்த்துவிட்ட சத்தியங்களின் மேகம்..

*
கருணையொன்றை யாசிக்கும் கண்கள்
கைவிடப்பட்ட தருணங்களை ஊடுருவி கூர்கிறது
பலி பீடத்தை

வெடித்த நிலத்தின் ரேகைக் கீறலில் இல்லை
ஈரம்
பொய்த்துவிட்ட சத்தியங்களின் மேகம் ஏதும்
சொல்லாமல் கடந்து போகிறது அந்தகாரத்தை

கோடைப் பாலையின் நீண்ட மணல்வெளியில்
இருக்கக் கூடும் நீர்ப்பரப்பென உன்
மற்றுமொரு காலத்திற்கான வெற்றிடம்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ அக்டோபர் - 8 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5996

காற்றில் சிக்கும் கூந்தல் இழை..

*
வளைந்துத் திரும்பி இட்ட முத்தத்தில்
நழுவுகிறது
பார்வையோடு புன்னகையொன்று

அலைபறத்தும் காற்றில் சிக்குகிறது கூந்தல்
இழைக் கோடுகளென
ஒதுக்கும் விரல்கள் நகம் நிமிண்ட
பள்ளம் பறிக்கிறது அழுந்த உதட்டில்

தீஞ்சுவைக் குமிழ் உடைந்து
மொக்கிளகி விரைகிறது நாவெங்கும் நதியாகி

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ அக்டோபர்  - 1 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5965

மிடறு இறங்கும் அர்த்தங்கள்..

*
துளைத்தபடி துள்ளும் சொல்லிலிருந்து திரும்புகிறாய்
புறப்பட்ட இடம் நோக்கி

அனுமானங்களின் தொல்லைத் தீர
மிடறு இறக்குகிறாய் அர்த்தங்களை

சுவை கூடுகிறது தீர்மான நதியில்
விழுந்தமிழும்
ஆதி விலா எழும்பொன்று

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ அக்டோபர்  - 1 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5965

பதிமூன்று இலைகள்..

*
நடைபாதைக் கான்க்ரீட் பெயர்வில்
பார்வைக்கு அகப்படாமல் மக்கிய விதையொன்றின்
வயிற்றைப் பிளந்து
உயர்ந்து மெலிந்த சின்னஞ்சிறு செடி
பாதி உடைந்த செங்கற்கள் மூன்றின் அரணோடு
தாங்கிப் பிடித்து நிற்கிறது
பதிமூன்று இலைகளை

காற்றொன்று
அதன் தலை சிலுப்பிப் போகிறது
சிகரெட் புகையைச் சுழற்றி தூர வீசி

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ செப்டம்பர் - 24 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5953

அறைச் சுவர் மீது பூசிய அந்தரங்கப் பக்கங்கள்..

*
உனது அயர்வின் மீது படரும் வெயில் எல்லையற்றது
உன் அறைச் சுவர் முழுதும் நீ
பூசி வைத்திருக்கும் இரவின் அந்தரங்கப்
பக்கங்களை ரகசியக் கண் கொண்டு தீண்டுகிறது அதன்
மஞ்சள் விரல்

நீயுன் போர்வையின் இருட்டுக்குள்
புதைந்துக் கிடக்கிறாய்
இன்னும் மிச்சமிருப்பதாக நம்பும்
ஓர் அபத்தக் கனவுடன்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ செப்டம்பர் - 24 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5953

உதிர் இரவின் துகள்..

*
தனிமையில் நிற்கும் என்னிடம்
திரும்பிவிடும்படி ஒரு வார்த்தை நீட்டுகிறீர்கள்
பற்றிக்கொள்ளும் விருப்பமற்று தன்
விரல்களை இறுக்கி மடித்து வைத்திருக்கிறது
எனது மௌனம்

உறைந்தத் தன்மை இளகி உருகுகிறது
உச்சரிக்க இயலாத உங்களின் அர்த்தங்கள்

வழியெங்கும்
தடமெங்கும்
நீண்டொழுகும் ஈரத் துளிகளின் விளிம்பில்
அதிர்கிறது சொற்ப ஆகாயம்

அதில் மேகங்கள் இல்லை
நட்சத்திரங்கள் இல்லை
நிலவின் மஞ்சளை மெழுகிய ரேகை வரிகள்
அந்தியின் சிவப்பில் ஊடுகிறது நிறமியாக
உனது உதிர் இரவின் துகளாக

துண்டாகிப் போன சொற்களின் அலையில்
வீசிக்கொண்டிருக்கிறது இடையறா கடலொன்று
திரும்பிவிடும்படி ஒரு வார்த்தை நீட்டுகிறீர்கள்
உப்பு பூத்து இறுகுகிறது இதயம்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ செப்டம்பர் - 24 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5953

பிரி இழையில் சுருளும் வதை..

*
மறுக்கின்றாய்
மறுப்பவைகளின் மீது நிகழ்கிறது
உன் சொல்லின் நடனம்

மறுப்பின் கோப்பை நிரம்பி வழிகிறது
இருவருக்குமிடையே நீண்டு நகரும்
மேஜையின் அகலத்தில்

மறுத்தலின் மொழியை பிழையுடன்
எழுதப் பழகுகிறாய் எந்நேரமும்
எந்த நொடியும்

உயிர் திருகும் மறுப்பில்
பிரி இழையில் சுருள்கிறது வதை

நிழல் படரும் வெயில் நதியில்
இழுத்து போகிறது என்னை
உனது மறுதலிப்பு

நீர் கீழிறங்கும் செங்குத்துப் பாறையென
செதுக்கி நிற்கிறது உனதந்த
மறுதலிப்பின் சிறகு

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ செப்டம்பர் - 17 - 2012 ]
 

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5941

வியாழன், மார்ச் 27, 2014

ரகசிய கரு நிழல்..

*
மௌனம் துள்ளும் சதுரக் கல்லில்
ஈரம் கசிய நீட்டுகிறாய்
ரகசிய கரு நிழலை
வெயில் துண்டொன்று உடைக்கிறது
வார்த்தைகளை

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ செப்டம்பர் - 10 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5926

குற்ற கால் தடம்

*
உமிழும் விஷம் நீர்க்க
பிளவோடு நீளும் நாக்கை தீண்டும் கொடி நஞ்சை
நெஞ்சில் வேர் பிடித்து வளர்த்து திரித்தாய்

சுற்றி அலை புரளும் கரை நெடுக
அழுக்கைக் குழி பறித்து நெடுகப் போகிறது
நின்
குற்ற கால் தடம்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 10 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5926


பருகுவதற்கு இவ்விரவில் எந்தத் தடையும் இல்லை..

*
நீங்கள்
நம் விவாதத்துக்கு பிறகு
இந்த மேஜையை பங்கிட்டுக் கொள்ளலாம்

உட்கார்வதற்குரிய நாற்காலியை நீங்களே
தேர்வும் செய்யலாம்

உங்கள் பரிசு பொட்டலத்தை
ரிப்பன் பிரிக்காமல்
பத்திரப்படுத்த
வாசலில் வைத்திருக்கும்
விலை உயர்ந்த அழகிய பூ வேலைப்பாடுகள் கொண்ட
குப்பைத் தொட்டியில் போட்டு விடலாம்

ஒரு கோப்பை மதுவை தளும்பத் தளும்ப
நீங்கள் பருகுவதற்கு
இவ்விரவில் எந்தத் தடையும் இல்லை

உங்கள் நாவின் நடனத்தில்
உச்சரிப்பின் கால்கள் நழுவுவதை குறிப்பெடுக்க
தற்சமயம் உங்களிடம் இல்லை
எந்தவொரு வார்த்தையும்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 3 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5912