திங்கள், மார்ச் 31, 2014

ரகசியப் பொழுதின் மொத்த வெயில்

*
அறிமுகக் கைக் குலுக்கலில் உரசிக்கொள்ளும்
தத்தம் ரேகைகளின் பாதையில் வரிசையாய் காத்து நிற்பார்கள்
ஒவ்வொரு புதிய வருகைக்குமாக

ஏந்தும் புன்னகையில் சட்டெனப் பொழியும்
பெய்தே பழகிய நட்பின் மழை
ரகசியப் பொழுதின் மொத்த வெயிலும்
நண்பர்களின் குடைக்குள் வைகறை நிழலாகிறது

உரிமைத் துளிர்க்கும் கோப மொட்டுக்குள்
மெல்ல மெல்லத்தான் உகுக்க பழகி வைத்திருக்கும்
ஏற்புடைத் தேன் துளிகளை

அத்துனை மௌனத்தையும் புதைத்துக் கொள்ள
அனுமதிக்கும் தோள்களை வரமெனப் பெற்றவர்கள்

தலை வருடும் விரல்களில் தாய்மையின் வாசனையும்
கண்ணுக்குள் உற்று நோக்கும் பார்வையில் தூயக் காதலின் கசிவையும்
ஒருங்கே அருளும் நட்புத் தோட்டத்தில்
கனவுச் சிறகுகளை அசைத்துப் பறக்கும் பட்டாம்பூச்சியாகி

எண்ணற்ற வர்ணப் புள்ளிகளை
நெகிழும் இவ்வாழ்வின் அனைத்து வளைவிலும்
பூசிக்கொள்ளும் தூரிகையவர்கள்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ செப்டம்பர் - 12 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6377

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக