வெள்ளி, ஜூன் 24, 2011

சலனப் பாசியின் பசலை..

*
மரண மீன்
செதிலசைத்து நீந்துகிறது
நாளங்களில்
 
மூச்சுக் குமிழ் வீங்கும் நொடியில்
உடைந்து வாலசைக்கிறது
இதயம் நோக்கி
 
மௌன நீர்மையில்
வேர்ப்  பிடித்து முளைக்கும் சலனப் பாசி
நெளிந்து நெளிந்து கலக்கும் பசலையைத்  
தின்று தீர்க்க
 
வாய் திறந்து திறந்து மூடுகிறது
உயிரின்
நித்திரைத் திரட்டுகள்..
 
***** 

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜூன் - 25 - 2011 )

ஒற்றை எழுத்து

*
நீ
அறுதியிட்டு உச்சரித்த
ஒற்றை எழுத்தில்
ரத்தம் கசிகிறது
குத்திக் கிழித்த காயத்தின்
வலியென
இந்த அவமானம்..

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜூன் - 19 - 2011 )

உறைந்திடும் துளி ரத்தம்..

*
உன்
துயரத்தின் சாயலை
நகலெடுத்துக் கொள்ளும்படி
உத்தரவிடுகிறாய்

பிடி நழுவும் குறுவாளின்
கூர் முனையில்
உறைந்திடும் துளி ரத்தம்..

ஊடுருவி மீண்ட
துரோகக் கணத்தின் சாட்சியென
துருப்பிடித்துக் காத்திருக்கிறது

உன் 
வரவுக்காக

*******

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜூன் - 5 - 2011 )

புதிர் நிறைந்த முற்றுப் புள்ளி..

எரிந்து மிச்சமாகும் சாம்பல் துகள்கள்
அறையெங்கும் படிகிறது
 
திறந்து கிடக்கும் புத்தகத்தின்
வாசிக்க மறந்த பக்கத்தில்
ஒத்துவராத வாக்கியங்களுக்கு நடுவே
சலனமற்று விழுந்து கிடக்கிறது 
புதிர் நிறைந்த முற்றுப் புள்ளியென
ஒரு சாம்பல் துளி
 
அர்த்தங்களுக்கான விளக்கங்கள்
இவ்விரவு நெடுக நிழலென
அசைந்துக் கொண்டே இருக்கிறது
ஜன்னலுக்குரிய மெல்லிய திரைச் சீலையில்
 
மனதிலிருந்து பதிவிறக்கம் செய்யப்படும்  
துரோகங்கள்  
மேலும்  எரிந்து சாம்பலாகிறது
எதையும் மிச்சம் வைக்காமல் 
 
*****  

நன்றி : ( உயிரோசை / உயிர்ம்மை.காம் ) [ ஜூன் - 27 - 2011 ] 

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4501

இரவெனும் ஒரு கார்பன் காகிதம்..

*
வெற்றுத் தாளில் நிரம்புகிறது
உன்
என்
உரையாடல்கள்..

குளிர்ந்த கண்ணாடி டம்ளரில்  மிதக்கும் திரவத்தின் தவம்..
அலுங்கி சிலிர்க்கிறது துளி உப்பைப் போல் கரையும்
ஓர் பகலின் அர்த்தத்தால்

தலைக்கு மேல் பறந்து போகும் பொய்கள்
உதிர்ந்து
அலைகின்றன
தரையிறங்கா பிடிவாதத்துடன் மனமற்ற இறகாக 

நிதானமிழக்கும் பாதங்களின் நடனம்
கவ்விக் கொள்ளப் பிரியப்படுகிறது
தவிப்போடு மீட்டிவிட்ட
அபஸ்வரத்தின் இசையை
உன்
என்
வெற்றுத்தாளில்
யாவும் நிரம்புகிறது
இரவை ஒரு கார்பன் காகிதம் போல்
இடைச் செருகி..

*****
 
நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜூன் - 25 - 2011 ] 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15311&Itemid=139

பிரிக்கப்படும் சிக்கலின் நுனி..

*
ஒரு மூர்க்கத்தையோ
ஒரு சொல்லின் இறுக்கத்தையோ
அதைத் தகர்க்கும் ஆயுதமென
ஒரு வாதத்தையோ
கட்டவிழும் அர்த்தங்களையோ
எதை வேண்டுமானாலும்
நீங்கள் கொண்டு வரலாம்

பிரிக்கப்படும்
சிக்கலின் நுனி
தொப்புள் கொடியின் நினப் பிசுபிசுப்போடு
சுற்றித் தரப்படும்
மீண்டும் தொலைந்து போகாத
நல்ல காரணங்களோடு

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜூன் - 20 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4454

நிறம் கிழிந்த வெயிலின் இதழ்..

*
நடைவழியில் நகரும் நிழல்களின் நுனி
இழுத்துக் கொண்டு போகிறது 
வெயிலின் மஞ்சள் கரையை  
படியை நோக்கி
 
பூச்சாடியிலிருந்து உதிர்ந்த
காகிதப் பூவின் இதழ்
வெளுத்துவிட்ட நிறத்தின்
கிழிசலோடு
சொற்ப காற்றுக்கு படபடக்கிறது
சுவரின் ஓரமாக ஒண்டியபடி..
 
அமைதி பூசிய மேற்கூரையின்
மௌன மூலையில்
நிதானமாக வலை பின்னிக் கொண்டிருக்கிறது
காலச் சிலந்தி..
 
*****
 
நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜூன் - 17 - 2011 ] 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15205&Itemid=139

கனவின் வரைப்படங்கள்..

*
தன் கனவின் வரைப்படங்களை
கத்தரித்துத் தரும்படி
கேட்கிறான் ஒரு வழிப்போக்கன்

என்னிடம் கத்தரிக்கோல் இல்லை
என்று மறுக்கிறேன்

உன் வார்த்தைகளின் கூர்மைப் பற்றி
பக்கத்து தெருக்களில் பேசிக் கொள்கிறார்கள்
என்றபடி மீண்டும் வற்புறுத்துகிறான்

எங்கும்
எப்போதும் பார்வையில் பட்டு
மேலும் மேலும் பெருகிவிட்ட
வரைப்படங்களை சுமந்தபடி
எதிரே நிற்கிறான்

பிறகு நான்
ஒரு
கூர்மையான வார்த்தையை
தேடத் தொடங்குகிறேன்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜூன் - 13 - 2011 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4432

அழைக்கப்படாத இரவு..

*
ஓர் எதிர்பாரா சந்திப்பு
யாவற்றையும் கொஞ்சம் கலைக்கிறது

விருப்பமில்லை என்றாலும்
குடிக்க நேரும் டீயின் அபத்தம்
ஒரு தொடக்கம்

பிடிக்க விரும்பும் சிகரெட் நிமிடங்கள்
கனன்றபடி புகைவது
மனதில்

நடிகனாகவும் பார்வையாளனாகவும்
பங்கு பெரும் இந்த சாதனை அரங்கில்
கைத்தட்டல் கிடையாது

ஒரு பிட் நோட்டீஸ் போல
வழங்கப்படும்
செல்போன் எண்கள் வெகுநாட்களாக
அழைக்கப்படாமல்
பின்னொரு இரவில்
பட்டியலிலிருந்து நீங்கும்
இடநெருக்கடி

ஓர்
எதிர்பாரா சந்திப்பு
கொஞ்சம் கலைத்து விடுகிறது தான்
யாவற்றையும்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜூன் - 6 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4396

இடம்

*
நிறுத்துக் கோட்டில் புள்ளிகள் துளிர்க்கின்றன
வர்ண விளக்குகளின் வட்டங்களுக்கிடையில்
காகத்தின் அற்பக் கூடு
கார்பன் கருப்பை அப்பிக் கொள்கிறது


இரவும் பகலுமாய் சப்தங்கள் நீண்டும்
சுருங்கியும்
முட்டைகளுக்குள் தேங்குகிறது

ஒரு
மழைக்குப் பின்
உள்வாய்ச் சிவந்த குஞ்சுகள் அலகு பிளந்து
இறைஞ்சுகிறது

ஹாரன்களற்ற
ஓர்
உலகை

****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜூன் - 15 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15158&Itemid=139